உள்ளடக்கத்துக்குச் செல்

திராவிட நாடு பிரிவினை மாநில மாநாட்டின் தலைமையுரை

விக்கிமூலம் இலிருந்து

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை  EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை  RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை  PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக




​

​

தலைமையுரை


14—9—47-ல் கடலூர் ஒ. டி. யில் நடைபெற்ற திராவிடநாடு பிரிவினை மாநில மாநாட்டில், மாநாட்டின் தலைவர் முன்னாள் அமைச்சர் திரு. எஸ். முத்தையா அவர்கள் ஆற்றிய தலைமையுரை வருமாறு:—

பெரியோர்களே! தாய் மார்களே !!

மூன்று மாதங்களுக்கு முன்னர் ஜூன் 15-ந்தேதியன்று திருச்சியில் நடந்த இதுபோன்ற மாநாட்டுக்குத் தலைமை யேற்கும் பேறுபெற்றிருந்தேன்; இந்தியப் பகுதியிலிருந்து திராவிடநாட்டைப் பிரித்துக்கொள்வதற்கான முயற்சியிலீடுபடுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட இம்மாநாட்டிலும் எனக்குத் தலைமைப் பதவி தந்தமைக்குப் பெருமைப்படுகிறேன்.

வாய்ப்பளித்தமைக்கு நன்றி

நம் மதிப்பிற்குரிய தலைவர் பெரியார் ஈ. வெ. ராமசாமியவர்கள் தலைமையேற்று உயிர்நாடியாயிருந்து வேலை செய்துவரும் திராவிடர் கழகத்துக்கு இக்கொள்கையினையே—திராவிடநாடு பிரிவினையையே — அதன் முக்கிய இலட்சியமாக அமைத்துவிட்டார். அதற்கு நாடெங்கணும் பெருத்த ஆதரவு கிடைத்துவிட்டதென்பதோடு, அதன் கொள்கையும் நன்கு பரவி, பொதுமக்களுடையவும் இதர அரசியல் ஸ்தாபனங்களைச் சேர்ந்தவர்களுடையவும் ஒருமித்த ஆமோதிப்பைப் பெற்றுவிட்டது மகிழ்ச்சிக்குரிய தொன்றாகும். மாநாடுகளும் கூட்டங்களும் நடத்துவது சொந்தக் கட்சிக்காரர்கள் கலந்து கொள்வதற்கு மட்டுமல்ல; கட்சியின் கொள்கைகளைப் பரப்பவும், புது அங்கத்தினர்களைக் கவரவும், என்னைப் போன்றாரை அழைக்கவுமே யென்பதை திராவிடர் கழகம் அனுசரித்தது ​கழக வளர்ச்சிர்குரிய அறிகுறியாகும். குறுகிய மனப்பான்மையோடு, கழக மாநாடு ஆக்கிவிடாமல் இதனை மொத்த திராவிடர் மாநாடு எனக் கூட்டிய மாநாட்டின் அமைப்பாளர்கள் செயல் போற்றத் தக்கதாகும். நாடு பிரிவினை இலட்சியத்தில் ஒத்துவருகிற எல்லோரும் ஒத்துழைக்க இதனால் வசதியேற்படுகிறது; வளர்ச்சிக்கும் பலத்துக்கும் அடிப்படையாக நிற்பது ஒத்துழைப்பன்றி வேறில்லை. சாதாரண சாரியங்களுக்கெல்லாம் நமக்குள் கருத்து வேறுபாடுகளேற்பட்டு விடுகின்றன; இது வருந்தத் தக்கதாகும். முக்கியமானவைகளையே கவனித்துச்செல்ல வேண்டுமென்பதைநாம்நினைவில் வைக்கவேண்டியதவசியம். எஞ்சியவிஷயங்களைப்பின்னர்தான் பொருட்படுத்த வேண்டும். இம்மாநாட்டில் தலைமை யேற்குமாறு என்னைக் கேட்டுக் கொண்ட வரவேற்புக் கமிட்டியினருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். திராவிடநாடுபிரிவினைபற்றிய இம்முக்கிய விஷயங்குறித்து, தென்னாட்டில் வதியும் லட்சக் கணக்கான மக்களின் நலத்துக்கும் முன்னேற்றத்துக்கும் சுயமரியாதைக்கும் இன்றிமையாத இவ்விஷயங் குறித்து எனது கருத்தைத் தெரிவித்துக் கொள்ள இன்னொரு வாய்ப்புத் தந்தமைக்கு எனது நன்றி.

ஜூன் 3-ந் தேதி அறிக்கை கூறுவதென்ன?

இதற்கு முன் கூறியிருப்பதை மறுபடியும் திருப்பிக்கூற நான் ஆசைப்படவில்லை; அவைகளை ஆங்காங்கு மட்டும் குறிப்பிட்டு விட்டு, மேலும் தொடர தீர்மானித்துள்ளேன். அரசியலமைப்பு சபை எப்படியொரு பிரதிநிதி ஸ்தாபனம் ஆகாது என்பது பற்றியும், அது ஒரு ஆலோசனை சபையே என்பதையும், பிரிட்டிஷ் பார்லிமென்ட் சபைக்கு திருத்த நகலொன்றைத்தான் அது சிபார்சுசெய்யக்கூடு மென்பதையும், பார்லிமென்ட் சபை அதனை ஏற்கவோ, அல்லது திருத்தி அமைத்துக் கொள்ளவோ முழு உரிமையும் உடையது என்பதையும், அதனை ஆதிபத்திய அதிகார சபையென காங்கிரசார் தவறாகப் பிரசாரம் செய்து வந்தார்களென்பதையும், ​சட்டசபையைச் சேர்ந்த முஸ்லிம் பிரதிநிதிகள் கலத்து கொள்ளாத பட்சத்தில் அச்சபை வகுத்த அரசியல் முறை யெதுவும் செல்லுபடி யாகாதென்பதையும், இந்திய மக்களுடைய அபிப்பிராயத்தையும் பிரதி பலிப்பதாகக் கொள்ள முடியாதென்பதையும், ஜனநாயக முறைக்கொத்தது இதுவல்லவென்பதையும் நான் முன்னரே எடுத்துக் காட்டியுள்ளேன். மந்திரி சபைத் தூது கோஷ்டியின் திட்டம் விரும்பாதாரிடையே திணிக்கக் கூடிய —கட்டாயமாக ஏற்றித் தீரவேண்டியதொரு திட்டமல்லவென்றும், பரஸ்பர நல்லெண்ணத்தையும் ஒத்துழைப்பையுமே பொறுத்ததாகும் அதன் நிறைவேற்றமென்றும் வைசிராயே கூறியிருக்கிறார். ஜூன் 3-ந் தேதியன்று இது அறிவிக்கப்பட்டதிலிருந்து, அரசியலமைப்பு சபை கலைவற்று வந்து, திருத்தியமைக்கப்பட்டிருக்கிறது. வங்காளமும் பஞ்சாபும் இரண்டிரண்டாகப் பிரிக்கப்பட்டு விட்டன. இப்பிரிவுகளுள் ஒவ்வொன்றம் புதிய பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு விட்டன. வடமேற்கு எல்லைப்புற மாகாணமும் சிந்து மாகாணமும் இச்சபையினின்றும் வெளியேறிவிட்டன. பார்லிமெண்ட் சபைக்கு அரசியல் முறை யொன்றை சிபார்சு செய்ய மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்ட மாகாண சமஸ்தானங்களின் சார்பான 200 பேர்கள் கொண்ட பிரதிநிதித்துவமற்ற இந்த அட்ஹாக் ஸ்தாபனத்தையே இந்திய அரசியல் முறைச் சட்டத்தை நிறுவி நிறைவேற்றிக் கொள்ளுமாறு இந்திய சுதந்தர ஆக்டில் பார்லிமென்ட் உத்தரவு பிறப்பித்து விட்டது.

அரசியலமைப்பு மாறுதல்கள்

1919-ம் ஆண்டில் மான்ட் போர்டு சீர்திருத்தச் சட்டம் நிறைவேற்றி வைக்கப்படுவதற்கு முன்னர், அப்பொழுதைய இந்தியா மந்திரி இந்தியாவுக்கு வந்து, அந்தந்த மாகாணங்கலிலுள்ள பிரமுகர்களோடு கலந்து பேசினர். இந்தியாவின் பல பகுதிகளினின்றும் பிரதிநிதிகள் பலர் இங்கிலாந்துக்குச் ​சென்று, தங்களது அபிப்பிராயங்களையும் தேலைகளையும் எடுத்துக் கூறினர்; அந்த அபிப்ராயங்களை யொட்டி சட்டம் செய்யப்பட்டது. மறுபடியும், பேச்சு வார்த்தைகளில் அபிவிருத்திகாண, சைமன் கமிஷன் இரு முறை இந்தியா வந்தது; இங்கிலாந்தில் மூன்று வட்ட மேஜை மாநாடுகள் நடைபெற்றன; அமமாநாடுகளுக்கு இந்தியப் பொது வாழ்வில் ஈடுபட்டிருந்த பிரபல தலைவர்கள் அழைக்கப்பட்டனர். மாநாட்டுப் பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு 1935-ம் ஆண்டு ஆக்ட் பிறப்பிக்கப்பட்டது; இவ்வளவு பெருத்த விசாரணை, பேச்சு வார்த்தை, பரிசீலனைகளுக்குப் பிறகு பிறப்பிக்கப்பட்ட 1935-ம் ஆண்டு ஆக்ட் பெரிதும் கண்டிக்கப்பட்டது; திருப்திகர அம்சங்களோ, மக்கள் நன்மைக்கான வழிகளோ, அதில் இல்லையெனக் குறை கூறப்பட்டது. மத்திய சட்ட சபையிலும் சரி, மாகாண சட்ட சபையிலும் சரி, ஒரு மசோதா கொண்டு வரப்படுகிறதென்றால்—அது எவ்வளவு சாதாரண விஷயத்தைப் பொறுத்ததாயிருந்தாலும் சரி— அது சம்பந்தமாகப் பொது மக்கள் அபிப்பிராயத்தைக் கண்டறிய முதலிலேயே வெளியிடப்படுவது வழக்கம், முறை, சட்ட முறைகளைத் தயாரிப்பதற்காகவே சட்டப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட சட்ட சபையில் நாள் தோறும் நடந்து வருவது இது. ஆனால், இந்தியா முழுமைக்கும்—30 கோடி மக்களுக்கும்—அரசியல் வகுக்கும் விஷயத்திலோ, இவ்வரசியலமைப்பு சபை நான் மேலே குறிப்பிட்டபடி, தகுதியற்ற ஜனநாயகத்துக்கு மாறான முறையில் நிறுவப்பட்டுள்ளது; போதுமான ஆலோசனை செய்து பார்க்காமல்கூட, சட்டத்தின் அடிப்படைக் கொள்கைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக் கொண்டுள்ளது. இந்த சபை நிறுவிய யூனியன் கமிட்டி, மாகாண அரசியல் முறை கமிட்டி, மைனாரிட்டிகள் கமிட்டி, இன்னும் இதர உட் கமிட்டிகள் நகல்கள் சிலவற்றைத் தயாரித்தன; அவை செய்த சிபார்சுகள் சட்ட சபையில் வெகு வேகமாக நிறைவேற்றிச் செல்லப்படுகின்றன ; பெரும்பாலான நிபந்தனைகள் எத்தகைய விவாதங்கள்கூட இல்லாமல் ​நிறைவேறி வருகின்றன. யாராவதொரு சமஸ்தானப் பிரதிநிதியோ, முஸ்லிமோ, காங்கிரஸ் தானே பார்த்து நியமித்தவொரு பிரதிரிதியோ திருத்தமொன்றைத் துணிந்து கொண்டு வந்தாரானாலும், அது நிராகரிக்கப்பட்டு விடுகிறது; கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகாது இருந்தவரை லாபமென்று கருதும் வகையில், நிலைமை மாறி விடுகிறது. சபைத்தலைவர் குறிப்பிட்ட நேரமொன்றை வரையறுத்து வைத்துள்ளார்; குறிப்பிட்ட விஷயம் குறிப்பிட்ட நேரத்துக்குள் முடிவடைந்து விடவேண்டுமென்றும் தெரிவித்துள்ளார். இப்பரந்த நாட்டை நிர்வகிக்கப் போகும் அரசியல் முறையை சட்டமாக்க இதுதானா வழி?

மைனாரிட்டிகளுக்கு நீதி வழங்கப்படவில்லை

அரசியலமைப்பு சபையில் முஸ்லிம் லீக் உறுப்பினர்கள் முதன் முதலில் புகுந்த ஜூலை 14-ந் தேதிக்கு முன்னரேயே மாகாண அரசியல் முறைக் கமிட்டி தனது திட்டங்களையும் அறிக்கையையும் தயாரித்து விட்டது. மாகாண அரசியல் முறை சம்பந்தமாகத் தங்களது அபிப்பிராயங்கள் ஆலோசிக்கப் பெற வேண்டுமென முஸ்லிம் லீகர்கள் கோரியது இயல்பே. எனவே, ௸ கமிட்டியைக் கலைத்துவிட்டு, புதிய கமிட்டி யொன்று நிறுவவேண்டுமெனத் தோழர் தாஜ்முல் ஹூஸெய்ன் தீர்மானம் கொண்டு வந்தார். இது நியாயமான கோரிக்கையே யாகும். இந்த நிலைமையில், முஸ்லிம்

லீகர்கள் அரசியலமைப்பு சபையில் வந்து கலந்துகொள்ளாதிருந்தனர். சபையின் ஆலோசனைக்கு விடாமலே, தலைவர் ௸ தீர்மானத்தை நிராகரித்து விட்டார் அரசியல் முறையிலும் எதிர் கால சர்க்காரிலும் மாகாணங்களுக்கும் மைனாரிட்டிகளுக்கும் எத்தகைய நீதி வழங்கப்படுமென்பதற்கு இது ஒரு எடுத்துக் காட்டாகும்!

​தூது கோஷ்டி திட்டம் கிராகரிக்கப்பட்டது

அரசியலமைப்பு சபை நிறுவப்பெற அடிப்படையாயிருந்த மந்திரி சபை தூது கோஷ்டியின் திட்டப்படி, மத்திய யூனியனின் நிர்வாகத்தின்கீழ் மூன்று விஷயங்களே — போக்குவரத்து; பாதுகாப்பு, அயல்நாட்டு விவகாரம் (இவற்றுடன், இது காரியங்களுக்கான நிதி திரட்டிக்கொள்ள அதிகாரம்) ஒப்படைக்கப்பட்டன. இதர விஷயங்களும், மிச்ச அதிகாரங்களும் மாசகாணங்களுக்கென ஒதுக்கப்பட்டன. அரசியல் முறையின் பல அம்சங்களையும் விவாதித்து முடிவு செய்ய அரசியலமைப்பு சபை பலதிறப்பட்ட கமிட்டிகளை நிறுவியது. இவையனைத்தும் மன்னர் சர்க்காரின் ஜூன் 3-ந் தேதிய அறிக்கைக்கு முன்னர். யூனியனின் அதிகாரங்களை விளக்க முளைத்த யூனியன் அதிகாரங்கள் கமிட்டி, அக்கமிட்டிகளில் ஒன்றாகும். அரசியலமைப்பு சபை 1947 ஏப்ரல் 28-ல் கூடி நடைபெறும்போது, மேற்படி கமிட்டியின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது; மேற்கூறப்பட்ட மூன்று விஷயங்கள் சம்பந்தமாகவும் அடங்கி நிற்கும் துணையதிகாரங்களும், அவைகளுக்காக மத்திய யூனியனுக்கு ஒதுக்கப்பெறவேண்டிய வரியினங்களும் வெகுவாக விளக்கப்பட்டிருந்தன. இவ்வறிக்கையை அடுத்தக் கூட்டத்தில் ஆலோசிப்பதென ஒத்திவைக்கப்பட்டது. மே, 2-ந் தேதியன்று சபைக்கூட்டம் முடிவெய்துவதற்கு முன்னர் மேலும் இரண்டு கமிட்டிகள், ஒன்று, யூனியன் அரசியல் முறைக் கொள்கைகளை வகுக்கவும், மற்றொன்றுமாதிரி அரசியல் முறையொன்றைத் தயாரிக்கவும் நியமிக்கப்பட்டன. அதன்பிறகு, மந்திரிசபைத் தூதுகோஷ்டியின் திட்டப்படி நடப்பதாகும்; அதாவது, யூனியன் அதிகாரங்களை விளக்குவதும், மே. 16-ந்தேதிய திட்டப்படி மாகாணங்கள் எ, பி, சி தொகுதிகளாகப் பிரிந்துசெல்வதும், ஒவ்வொரு தொகுதியும் தனது சொந்த அரசியல் முறையை நிறுவிக்கொள்வதும், இறுதியாக யூனியன் அரசியல்முறையை வகுத்துக்கொள்​வதுமாகும். புதிய அரசியல்முறை அமுலுக்கு வந்ததும், மாகாணங்களில் சட்டசபைகள் அமைந்ததும், தொகுதிகள் எதையும் சேர்ந்த பகுதி (யூனிட்; மாகாணம்) எதுவும், அத்தொகுதி அரசியல்முறை யாட்சியை விரும்பாவிடில், தனது சட்டசபையினரின் பெருவாரி விருப்பப்படி தனியாகப் பிரிந்து வெளியேற, அதற்கு முழு உரிமையும் உண்டு.

காங்கிரஸ் காரியக் கமிட்டி

மேலே எடுத்துக் காட்டிய மாதிரியில் யூனியனுக்கும் மாகாணங்களுக்கும் திட்டங்களை வகுத்துத்தர ௸ கமிட்டிகள் நிறுவப்பட்டன. ஆனால் இந்தியாவை இருடொமினியன்களாக்கிய ஜூன் 3-ந் தேதிய அறிக்கையின் பேரில், கமிட்டிகள் முற்றிலும் புதிய முறையை மேற்கொள்ளும்பொறுப்பையேற்றன. அறிக்கை வெளியான உடனடியாக நடை டைபெற்ற யூனியன், மாகாண அரசியல் முறை உட் கமிட்டிகளின் கூட்டமொன்றில், மே 16-ந் தேதிய திட்டத்தில் கண்ட வரையறைகளை அனுசரிக்க வேண்டியதில்லை யென்றும், இந்திய அரசியல் பிரமுகர்களனை ரும் பலமிக்க பெடால் சர்க்காரை —மிக்க அதிகாரங்களோடு விரும்புகின்றன ரென்றும், 1935-ம் ஆண்டு இந்திய சர்க்கார் ஆக்டில் உள்ளது போல், மூன்று ஜாபிதாக்கள் (அதிகாரங்கள் நிர்ணயிக்கப்பட்டு) இருக்குமென்றும் முடிவு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. 1946-ம் ஆண்டில் கிரிப்ஸ் தூதுகோஷ்டி இந்தியாவில் தங்கியிருக்கையில், காங்கிரஸ் காரியக் கமிட்டி, இந்தியாவுக்கு பெடால் அரசியல் முறை வேண்டுமென்றும், மாகாணங்களுக்கு மிச்ச அதிகாரங்களோடு, முழு சுயேச்சையும் அளிச்சுப்பெற வேண்டுமென்றும் சிபார்சு செய்து, தீர்மானமொன்று நிறைவேறியது.

அதுவும் நிராகரிக்கப்பட்டதே !

முஸ்லிம் லீகின் பீதியைத் தணிக்கவே இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்ட தென்பதை யனுசரித்து, இதனை யொரு​வரும் பொருப்படுத்த வில்லை; இப்பொழுது பாகிஸ்தான் வழங்கப்பெற்று விட்டதால், இத்தீர்மானத்தின்படி நடக்க வேண்டிய அவசியமில்லை யென்றும் கருதப்பட்டது. உட்கமிட்டிகளின் இப்போக்கை அறிவோ, அரசியலோ, ஜன நாயகமோ நியாயமெனக் கூறாது. காங்கிரஸ் மேல்ரகத் தலைவர்களும், அவர்களது சகாவினருமே பெரும்பாலும் அடங்கி நிற்கும் கமிட்டிகள் இவ்விதம் காங்கிரஸ் காரியக் கமிட்டியின் தீர்மானத்துக்கு நேர்மாறாக நடந்து கொள்ளலாமா? ௸ தீர்மானத்திலிருந்து முரணிச் செல்லச் காரணமெதுவும் இருப்பின், அதற்கான தகுந்த முறை காங்கிரஸ் காரியக் கமிட்டியின் கூட்டமொன்றைக் கூட்டி, அதன் சம்மதத்தைப் பெறுவதேயாகும். அத்தீர்மானத்தை நிராகரிக்க வேண்டிவந்த காரணத்தை ஆராய்வோம். முஸ்லம் லீகின் பீதியைத் தணிக்கவே, ௸ தீர்மானம் நிறைவேற்றப்பட்டதென்ப உண்மையென்றே வைத்துக் கொள்வோம். பாகிஸ்தான் பகுதியில் மட்டுந்தானா வுள்ளது முஸ்லிம் லீக்? பாகிஸ்தானல்லாத பகுதிகளில் முஸ்லிம வீக் ஸ்தாபனங்களும் பெருவாரி முஸ்லிம் மக்களும் இருக்கவில்லையா ? அவர்கள் பீதியுறுவரே, அதற்கென்ன செய்வது ? அவர்கள் அலட்சியப் படுத்தப்பட வேண்டியவர்கள் தானனா? அவர்களது எண்ணங்களை ஆலோசிக்க வேண்டாமா?

மாகாண சுயாட்சி கோரிக்கை

இந்திய அரசியல்வாதிக ளனைவரும் விரும்புமொரு கொள்கையினையே — மிச்ச அதிகாரங்களோடு கூடிய பெடரல் சர்க்கார் அமைப்பதென்ற கொள்கையினையே கூட்டுக் சுமிட்டி மேற்சொண்டு விட்டதாசத் தெரிகிறது. இதுதான் சிறந்தது என்று கூறப்படுகிறது. இது இந்தியாவுக்கு மட்டும் சிறந்ததா அன்றி எல்லா நாடுகளுக்குமா? பல நாடுகளில் இது சிறந்ததாக ஏற்றுக்கொள்ளப்படவே இல்லை. இந்தியாவுக்கு சிறந்ததாக அது என்றேனும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிற தா? மான்ட் போர்டு சீர்திருத்தங்கள் அமுலுக்கு ​வந்த 1920 முதல், மாகாண சுயாட்சிக் கோரிக்கை வலியுறுத்தப் பெற்று வலுப்பெற்று வந்திருக்கிறது. சைமன் கமிஷன், குறிப்பிட்ட காலத்துக்கு இரண்டாண்டுகட்கு முன்னதாகவே நியமிக்கப்பட்டது, 1928, 29-ம் ஆண்டுகளில் இக்கமிஷன் இருமுறை இந்தியாவுக்கு வந்து, மொத்தத்தில் இங்கு எட்டு மாத காலம் தங்கி மாகாணத் தலை நகர்கள் மட்டுமன்றி சிற்சில சாதாரண நகரங்களுக்கும் சென்று பெருவாரியான அரசியல்வாதிகளை சாட்சிகளாக விசாரணை செய்து, ஏராளமான தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தினார்கள். அவர்கள்செய்த விசாரணையின் விளைவாக, அவர்களது அறிக்கையில் பெடசேஷன் என்ற எண்ணம் முதலாவதாக, தெளிவான உருப்பெற்று நின்றது. அவர்கள் கூறியதாவது: "நாங்கள் கண்டு பேசிய சாட்சிகள் பெரிதும் மாகாண சுயாட்சி கோரிக்கையினையே வலியுறுத்தினர். எதிர்கால அரசியல் முறைச்கான எங்கள் திட்டங்கள் இக்கோரிக்கையை அங்கீகாரம் செய்கின்றன." அவர்கள் மேலும் கூறியதாவது: "ஏகாதிபத்திய இந்திய சமஸ்தானங்களோடு ஜனநாயக இந்திய மாகாணங்கள் யூனியனாவதால் பெடரல் பகுதிகளுக்கு கூடிய வரை (உள்நாட்டு) சுயேச்சை வந்தே தீரும்" அவர்கள் தொடர்ந்து கூறியதாவது: "சமஸ்தானக்களைத் தனியே விட்டுவிட்டாலுங்கூட, முழு பெடரல் அரசியல் முறைக்கு, "மாகாணங்கள் முதலில் அரசியல் தனிப் பகுதி ஆகவேண்டும்." "எல்லோருடைய சார்பிலும் சில வேலைகளை நிறைவேற்றும் காரியத்துக்காக முக்கியமாக நிறுவப்பெற்றப் பகுதிகளின் (யூனிட்கள்) கூட்டமைப்பாகிய மத்திய சர்க்காரொன்றுக்கு அவர்கள் வழிவகுத்துள்ளனர். அவ்வறிக்கையைப்பற்றி மேலும் குறிப்பிடாமலும், பெடரல் சர்க்கார் குறித்துப் பேசும் நால்களையும் எடுத்துக்காட்டாமலும், 1930-ல் இந்தியப் பொதுவாழ்வில் ஈடுபட்டோருடையவும் பிரிட்டிஷ் அரசியல்வாதிகளுடையவும் ஒன்றுபட்ட அபிப்பிராயம், ௸ பகுதிகளுக்கு (யூனிட்கள்) அதிகப்படி 15 ​சுதந்தரம் வழங்கவேண்டுமென்பதற்கு சாதகமாகவே இருந்ததென்று நான் கூறமுடியும். இவ்வபிப்பிராயத்துக்கு இந்திய சர்க்கார் ஆக்டில் எவ்வளவுதூரம் செல்வாக்கு இருந்ததென்பது வேறு விஷயம். திருப்திகரமானதாக அது ஏற்றுக் கொள்ளப்பெறவில்லை யென்பது தெரிந்த விஷயம். 1934-ல் வெளியான பார்லிமெண்டரி கமிட்டி கூட்டறிக்கையின் 218-வது பாரா கூறுவதாவது: கடந்த 12 ஆண்டு காலத்தில் மாகாணங்களில் நடந்துவருவதான ஓரளவு இந்திய சுயாட்சி, மத்திய ஆட்சி ஆதிக்கத்தினின்றும் விடுதலை பெறும் வேட்கையை வளர்த்து வந்திருக்கிறது. தெளிவாகக் கூறவேண்டுமானால், மான்ட்போர்டு சீர்திருத்தக் காலங்களில் நாட்டு நிர்வாகத்தில் எவ்வகையாலோ பங்குகொண்டிருந்த இந்திய அரசியல் வாதிகளின் அனுபவத்தை யொட்டி யெழுந்த வேட்கை மாகாணங்களுக்குக் கூடியவரையில் அதிகபட்ச சுதந்தரம்வேண்டுமென்பதேயாகுமென்று அவ்வறிக்கை கூறுகிறது. இத்தகைய உண்மை பொதிந்த அறிக்கை எங்கும் சென்றுவிடவில்லை; முரண்பட்ட அபிப்பிராயம் உடையோராகக் கூறப்படுகின்றனரே, அவ்வரசியல் வாதிகள் யார்? யாரும் இருக்கமாட்டார்களென்று நான் கூறவில்லை. ஆனால் நிர்வாக அனுபவமே யில்லாத நபர்களின் அத்தகைய அபிப்பிராயத்துக்கு எத்தகைய மதிப்பு அளிப்பது?

எல்லா அதிகாரமும் மத்திய சர்க்காருக்கே

பலமிக்க மத்திய ஆட்சி யொன்று, மிச்ச அதிகாரங்களை பெடரேஷன் பெற்றிருப்பதாய் அமைய வேண்டுமென யூனியன் அதிகாரங்கள் கமிட்டி கூறுகிறது. அதிகாரங்கள் மூன்று ஜாபிதாக்களாக—பெடரல் நிர்வாகத்துக்கு சம்பந்தமானவை, மாகாணங்களுக்கு சம்பந்தமானவை, 1935-ம் ஆண்டின் இந்திய சர்க்கார் ஆக்டை யொத்து இரண்டுக்கும் பொதுவானவை—பிரிக்கப்பட்டன. 1935-ம் ஆண்டு ஆக்டில் பெடரல் நிர்வாகம் சம்பந்தமான ஜாபிதாவில் 59 விஷயங்களும், மாகாணங்கள் சம்பந்தமான ஜாபிதாவில் 56 விஷ​யங்களும், இரண்டுக்கும் பொதுவான ஜாபிதாவில் 36 விஷயங்களும் அடங்கியுள்ளன. ஆனால் இப்பொழுது வகுக்கப்படும் அரசியல் முறையிலோ பெடரல் நிர்வாக சம்பந்தமான ஜாபிதாவில் 87 விஷயங்கள் அடக்கப் பெற்றுள்ளன; அதாவது, இப்பொழுதைக் காட்டிலும் 28 அதிகப்படி விஷயங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இன்னும் தெளிவாகக் கூற வேண்டுமானால் தனது பகுதி (யூனிட்) களில் ௸ 87 விஷயங்களையும் நிர்வகித்து, அவைகளுக்குரிய வரித்தொகைகளை வசூலித்துக் கொள்ள மத்திய நிர்வாகத்துக்கு அதிகாரமுண்டு. பாதுகாப்பு, அயல் நாட்டு விவகாரம், போக்குவரத்து, கரன்ஸி, அயல் நாட்டு நாணய மாற்று, நாணய முறை, பொருளாதார நெருக்கடி காலங்களை சமாளிப்பதற்கான அதிகாரம், இன்சூரன்ஸ், பாங்கி முறை, கார்ப்பொரேஷன், வருமான வரி, சுங்கம், நீர்ப்பாசனம், கப்பல் போக்கு வாத்து, நீர்—மின்சார சக்தி முதலியவை அந்த 87 விஷயங்களுள் முக்கியமானவைகளாகும். மேற்படி ஜாபிதாவை ஒரு முறை சாதாரணமாகப் பார்வையிடுபவர் நன்குணர்வர்.

கைத்தொழில் யாவும் மத்ய சர்க்காரிடமே

முக்கியமானவை யனைத்தும், நாட்டமைப்பு இலாக்காக்களும், கைத்தொழில்கள் அபிவிருத்தியும், உலோகப் பெருவளங்களும், ரெவினியு வருமானமும் மத்திய ஆட்சியால் கவரப்பட்டு விடுகின்றனரென்பதை எடுத்துக் காட்டாக, தென்னாற்காடு மாவட்டத்தில் இரும்புக்கள் கனி பெருவாரியாக இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. நிலக்கரியும் இம்மாவட்டத்தில் ஏராளமாகக் கிடைப்பதாக அண்மையில் நடந்த ஆராய்ச்சிகள் மூலம் தெரியவந்தது. இவ்விதமாக, இரும்பு எஃகு கைத்தொழில் வளருவதற்கான நிறைந்த அறிகுறிகள் காணப்படுகின்றன; இதன் விளைவாக தென்னாற்காடு மாவட்டமும், சுற்றுப்புற மாவட்டங்களும் வளம்பெற்றுவரும். இந்தக் கைத்தொழிலை மத்திய ஆட்சி ​நிர்வகிக்க வேண்டுமென்று கூறிவிட பெடரல் சட்டத்தின் கீழ் மத்திய சர்க்காருக்கு முழு உரிமையும் உள்ளது; இத்தொழிலிலிருந்து கிடைக்கும் வருமானங்களும் மத்திய சர்க்காரையே சென்றடையும். சுரங்கப் பகுதிகளனைத்தையும் வட இந்திய முதலாளிகள் சிலர் ஆதிக்கப்படுத்திக்கொண்டு, லாடங்களனைத்தையும் சுரண்டிக்கொள்ள வழியிருக்கிறது. இப்பொழுதுகூட, டால்மியா நகரில் நடைபெறும் சிமென்ட் உற்பத்தி தொழிலும், கொடுக்க பட்ட ஜில்லாக்களில் நடைபெறும் வனஸ்பதி உற்பத்தித் தொழிலும் வட இந்தியர்க்கு உரிமையானவைகளேயாகும் - இவைகளில் விசேஷமென்னவென்றால், இவையிரண்டும் மாகாண சர்க்காராலேயே அனுமதிக்கப் பெற வேண்டியவைகளாகும். எனினும், இம் மாகாண மந்திரிகள் வடநாட்டு முதலாளிகளுடையவும் காங்கிரஸ் தலைவர்களுடையவும் தொந்தரவை சமாளிக்க முடியாதவர்களாய், அவர்களுக்கு வளைந்து கொடுக்க வேண்டியவர்களாயினர். மாகாண சர்ச்காரின் உதவி, சம்மதமின்றியே டெல்லியிலுள்ள பெடரல் சர்ச்சார் தானே இதனைச் செய்ய முன்வர வகையிருந்தால், என்ன நடக்குமென்று எண்ணிப் பாருங்கள்; இதனால் மத்திய நிர்வாகம் பெரும் வருவாய் பெறலாமென்ற எண்ணத்தில் இதனைத் தானே ஏற்று நடத்துவதற்கான வேட்கை மூண்டெழும். இதன் விளைவென்ன? சென்னைக்கு வறுமை வந்தெய்தும்.

பாப்பர் மாகாணங்கள்

மிகக் கேவலமான குறைந்த வருவாயோடு மாகாணங்கள் திருப்தியடைந்தாகவேண்டும். கலால் வரியும், நிலவரியும் இதுவரை இம்மாகாணத்தின் முக்கிய இருமானர்களாக இருந்து வந்தன. கட்டாய மதுவிலக்குத் திட்டம்— அதன் நன்மை தீமை ஒருபுறமிருக்க — உயர்ந்த செலவினத்திட்டமாகும். கலால் வரியாக ரூ. 17 கோடி கிடைத்து வந்தது; வரையறுத்துள்ளபடி மதுவிலக்குத் திட்டம் இவ்வண்டிலும் ​அடுத்தவாண்டிலுமாக நிறைவேறி விட்டால், இந்த 17 கோடியும் மறைந்து விடுகிறது. இதுவன்றியும், மதுவிலக்கு சிப்பந்திகளுக்கும், மதுவிலக்கு சிறைக் கைதிகளுக்கும் வேறு பணம் செலவிடவேண்டி யிருக்கிறது. எனவே, மொத்தத்தில் 20 கோடி ரூபாய் நஷ்டம் வந்தெய்தும். சுமார் 8 கோடி ரூபாய் அளித்து வரும் நில ரெவினியுவும் கேவலமாகி வருகிறது. இம்மாகாணத்திய நில ரெவினியு, இந்தியாவிலேயே, ஏன் உலகத்திலேயேகூட, மிகமிகப் பளுவானதென்பது தெரிந்த விஷயம். நில ரெவினியுவைப் பெரிதும் குறைக்கவேண்டுமென அடுத்தடுத்து கோரிக்கைகள் விடப்பட்டு வருகின்றன. 5 அல்லது 10 ஏக்கர் நிலத்துக்குக் குறைவான சொத்துள்ளோரிடமிருந்து எத்தகைய ரெவினியுவும் வசூலிக்கக் கூடாதென்று வேறு வலியுறுத்தப்பட்டு வருகிறது. குடியானவர்களை நிலத்துக்கு உரியவராக்க வேண்டுமென்று வேறு பிரசாரம் நடைபெற்று வருகிறது. இவை நல்லதோ, கெட்டதோவென்பது ஒருபுறமிருக்க, நில ரெவினியு இனி உயர முடியாது, சிறுகச் சிறுக குறைந்தே வரவேண்டுமென்று தாராளமாகக் கூறி விடலாம். பட்டாதாரர்களில் 100-க்கு 90 பேர் ஆண்டொன்றுக்கு ரூ. 10 குறைவாக செலுத்துகிறார்கள் என்பதை ஆலோசிக்கும்போது, பாதிக்குக் குறைவாகவே வந்து விடுமென உறுதியாகக் கூறலாம். அடுத்த வருமானம் விற்பனை வரியாகும். இதனால் ஆண்டொன்றுக்கு 7 அல்லது 8 கோடி ரூபாய் கிடைக்கிறது. இதற்குப் பெரிதும் காரணம், இப்பொழுது சாமான்கள் விற்கும் அபரிமித விலையேயாகும். சாமான்களின் விலை குறைந்துவிட்டால் — குறைந்தே தீரும் — இவ்வரி பெரிதும் சுருங்கிவிடும். அன்றியும், இது மிக மிக வெறுப்புக்குள்ளான வரியாகும்; இது பயனற்றதாகப் போய்விடு மென்றே கருதுகிறேன். ஸ்டாம்புகள், காடுகள், ரெஜிஸ்ட்ரேஷன் போன்ற மீதி வருவாய்கள் குறைவானவையே யாகும்; எனவே அவைகளைக் குறிப்பிடக் கூடத் தேவையில்லை. இன்னுஞ் சில வருவாய்கள் ஸ்தல ஸ்தாபனங்களுக்கும் முனிசிபாலிடிகளுக்கு​மாகும்; மாகாணங்களுக்கல்ல. மாகாணணத்துக்கு ஒதுக்கப்பெற்ற விஷயங்களிலொன்று விவசாய வருமான வரியாகும். ஜமீன்தாரிகளையும் பெரும் சொத்துக்களையும் ஒழித்துவிடுவதால், விவசாய வருமானவரியாக ஒரு ரூபாய்கூட வசூலிக்க வகை யில்லாமற்போய்விடுமே. ஆகலே, இலவசக் கட்டாய ஆரம்பக்கல்வி, மருத்துவ உதவி, பொது சுகாதாரம் ஆகிய நாட்டு முன்னேற்றத்துக்கான திட்டங்களின் பொறுப்பேற்றுநிற்கும் மாகாணம், சட்டம் சமாதானத்தை நிலைநாட்டும் பணியிலீடுபடவேண்டிய மாகாணம் மிகமிக சுருங்கிய கஜனாவையே பெற்று நிற்கவேண்டியிருக்கும்.

பரஸ்பர அன்பும் நேசமும் வேண்டும்

மத்திய சர்க்காரின் பலம், அது நிர்வகிக்கும் விஷயங்களின் எண்ணிக்கையையோ, அது வசூலிக்கும் தொகையினையோ, மாகாணத்தை அது எவ்வளவு தூரம் வறியதாக்குகிறதென்பதையோபொறுத்ததல்ல. ஒவ்வொரு பகுதியும் (யூனிட்), மிகச் சிறியதுங்கூட, வளமிக்கதாயிராவிடில், வளமிக்க அமைப்பொன்று இருக்க முடியாது. அரசியலமைப்பு சபையைச் சேர்ந்த ஒரு உறுப்பினர் குறிப்பிட்டதுபோல, வறண்ட வயிறோடும், ஊதிய காலோடும் கூடிய வொருவர் பலமிக்க இருதயம் பெற்றுத் திகழ இயலாது, பெடரேஷனொன்று பலமிக்கதாக விளங்கவேண்டுமானால், ஒவ்வொரு பகுதியும் (யூனிட்) வளம்பொருந்தியும், தன் காலில் நிற்கக் கூடியதாகவும், தானே நிர்வகித்துக்கொள்ளக்கூடிய எல்லா விவகாரங்களுடையவும் பொறுப்பை யேற்றும், அன்னிய உதவியை எதிர்பாராமலும், ஒழுங்கான முறையிலும் மக்கள் விருப்பத்துக்கும் தேவைக்கும் ஒத்த முறையிலும் நிர்வகித்துச்செல்லும்படிக்கான சாதனங்களோடும், மத்திய சர்க்கார் இவ்விஷயத்தைத் தன்கீழ் வைத்துக்கொள்ளாதிருக்குமேல் நன்றாயிருக்குமே, அந்த ரெவினியு வருவாயைத் தனக்கென வைத்துக்கொள்ளாதிருந்திருக்குமேல் நன்றாயிருக்குமே என்று எண்ணுவதற்கு சந்தர்ப்பம் வையாமலும் இருக்க ​வேண்டும். பகுதி (யூனிட்)களின் அன்பையும் நேசத்தையுமே பொறுத்ததாகும் மத்திய சர்க்காரின் பலம்; அன்றி அது செலுத்தும் சர்வாதிகார ஆட்சியினையோ, அது குவித்து வைத்திருக்கும் பெரும் நிதியையோ பொறுத்ததல்ல. பிரிட்டிஷ் காமன்வெல்த் நாடுகள் இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாகத் திகழ்கின்றன. கடந்த மாபெரும் உலகப்போரில் பிரிட்டன் ஈடுபட்டிருக்கையில், பிரிட்டனோடு எத்தகைய நிதி விவகாரத் தொடர்பும் பெற்றிராத டொமினியன்கள், பெருவாரி ஆட்களோடும் பணத்தோடும் தாங்களாகவே முன்வந்து, மாபெரும் விபத்து நேரிட்டுவிடாதவாறு, தலைகொடுத்து காத்தனர் பிரிட்டனை. இப்பகுதி (யூனிட்)கள் வலிமையும் பண பலமும் பொருந்தி நின்றால், பிரிட்டிஷ் காமன்வெல்த்தை யொத்தே இன்றும் நேரியமுறையில் கூட இவை மத்திய ஆட்சியை வெளியார் ஆதிச்சத்திலிருந்து பாதுகாத்து வருமென்பது உறுதி. மகிழ்ச்சியும் மனநிறைவும் இப்பகுதிகளுக்கு எற்பட்டுவிட்டால், உள்தகராறு எதுவும் இருக்கப்போவதில்லை.

மத்ய சர்க்கார் மாபெரும் அரக்கனே

இப்பொழுது வகுக்கப்பட்டுவரும் அரசியல் முறையைக் காணும்போது, 15 ஆண்டுகளுக்கு முன்னர் நான் படித்த இரண்டாந்தர கதைப் புத்தகமொன்று நினைவுக்கு வருகிறது. அக்கதையில், சந்திர மண்டலத்துக்கு சிலர் பிரயாணஞ் செல்கின்றனர். அங்கிருந்த அரச சபைக்குச் செல்கின்றனர். அந்நாட்டின் தலைவர் தேர்ந்தெடுப்பு மூலம் வருபவராவார். மிகப் பெரிய தலை யாருக்கு உள்ளதோ அவரே அந்நாட்டு மன்னர். அதற்கு அடுத்த பெருந்தலையுடையவர் பிரதம மந்திரி; அதற்கும் அடுத்த பெருந்தலையுடையவர் இரண்டாவது மந்திரி; கீழ்த்தர அதிகாரிகள்வரை இம்முறையிலேயே தேர்ந்தெடுக்கப்படுவர். "மூனி" எனப்படும் மன்னர் முதலில் வந்தார். கால் பந்து தான் தரையால் உருளுவதாக ௸ பிரயாணிகள் கருதினர். இதரர்​களும் பின் தொடர்ந்தனர்; சிறு சிறு கால் பந்துகள் போலுமெனப் பிரயாணிகள் கருதினர். இறுதியாக, ௸ கால்பந்துகள் பேசவும் அரசியல் பிரச்னைகளை விவாதிக்கவும் தொடங்கியதும் அவர்கள் யாவரும். மனிதர்கள்தானென்று ௸ பிரயாணிகள் உணரலாயினர். தலை எவ்வளவுக்கெவ்வளவு பெரிதாக இருக்கிறதோ, அவ்வளவுக்கவ்வளவு மூளை பலம் அதிக மிருப்பதாகக் கருதப்பட்டது. நீங்கள் ஆக்க நினைக்கும் மத்திய ஆட்சியும் ஏறக்குறைய இது போலவேதான். அவ்வக்கனை சித்தரிக்க என்னால் இயலாது; சிந்தனையாளரின் பொறுப்பில் அதனை விட்டு விடுகிறேன். அது மாபெரும் அரக்க தேவதையாக, தன் பலம் கொண்டு நம்மை யெல்லாம் நசுக்கி வரும் வகையில்தானிருக்கும். ஒரிஸ்ஸாவின் முன்னாள் காங்கிரஸ் பிரதமர் தோழர் விஸ்வநாத் தாஸைக்காட்டிலும், நானொன்றும் அதிகமாக வர்ணித்து விடமுடியாது. அரசியலமைப்பு சபையில் அதிகார வர்க்க வாடை வீசுகிறதே தவிர, ஜனநாயக வாடையல்லவென்றும், சபை விரும்புவது வெள்ளை அதிகார வர்க்சுத்துக்குப் பதிலாக பழுப்பு நிற அதிகார வர்க்கமல்லவென்றும் அவர் கூறி யிருக்கிறார். "மாகாணங்களின் நியாயமான உரிமைகளைக் கைப்பற்றிக் கொள்ள சாமர்த்தியமாகத் திட்டமிடப் பட்டுள்ளதென்றும், மாகாண சுயாட்சிக்கு ஒரு படி அதிகமாகவே மாகாணங்கள் கோரி நிற்கின்றன வென்றும், சமதர்மக் குடியரசுகளாகத் திகழ மாகாணங்கள் விழைகின்றன வென்றும், மிக மிகக் குறைவான அதிகாரத்தை தான் மாகாணங்களுக்கு வழங்கியுள்ளனரென்றும் ஹாசைத் மோஹினி தெரிவித்துள்ளார்.

நமது மந்திரிகளும் அறிவரே !

நமது காங்கிரஸ் மந்திரிகள் சிலர் கூட இதனை உணரத் தொடங்கி விட்டனர். உணவு கொள் முதல் சம்பந்தமாகப் பிரதமர் தனது அறிக்கையில், மத்திய நிர்வாகத்திலிருந்து உதவி எதிர் பார்ப்பது எவ்வளவு தூரம் பயனற்றது என்​யது குறித்து முனு முனுத்துள்ளார். மாகாண நிதிகளிலிருந்துகூட, தானியங்களுக்காக உயர்ந்த விலைகள் வழங்குவதற்கான அனுமதிதர மறுத்த மத்திய நிர்வாகத்தின் பிடிவாதம் எவ்வளவு தூரம் உணவு தானியக் கொள்முதலைக் தடைப்படுத்தி வருகிற தென்றம் காட்டியுள்ளார். உற்பத்தியாளருக்கு நியாயமான தொகையும் அதற்கு மேலும் வழங்க வேண்டுமென்பதைப் பிரதமர் உணர்ந்திருக்கிறார். மது விலக்கு, அதிகப்படி சம்பள விகிதம் இன்னும் இதர காரணங்களால் மாகாண நிதி சுருக்கி வருவதாகவும், வருமான வரியிலிருந்து நிறைந்த உதவி பெற மத்திய சர்ச்சாரை நெருக்கவேண்டுமென்றும் நிதி மந்திரி அண்மையில் தெரிவித்திருக்கிறார். ஏது மறியாக் குழந்தைகள் போல சிலர் உள்ளனர். திராவிடஸ்தான் என்றாலென்ன? மத்திய ஆட்சியிலிருந்து நாமேன் பிரிந்து கொள்ளவேண்டும்? தாங்களே பதவிக்கு வர ஒரு சில தலைவர்கள் கூறி வரும் புரிந்துகொள்ள முடியாத விவகாரம் இது வென்று அவர்கள் கூறி வருகிறார்கள். அத்தகையோருக்கு நான் கூறுவதென்ன வென்றால், நான் கோறும் விடுதலையில் வெளிவரும் பெரியார் ஈ. வெ. ராமசாமியின் பேச்சுகளை அவர்கள் படித்துப் பார்க்கட்டும். அவர்கள் அவரை நேசிக்க மாட்டாமலிருக்கலாம்; ஆனால், அவர் கூறுவது தவறு என்றோ உண்மைக்கு மாறானதென்றோ அவர்கள் கூறமுடியாது.

விவாதமின்றியே முடிவுகள்

யூனியன் ஜாபிதாவில் இடம்பெறப் போகும் வரியினங்கள் அரசியலமைப்பு சபையிலே காங்கிரஸ் கட்சிக் கூட்டங்களிலோ விவாதத்துக்கு வரப்போவதில்லை யென்றும், அரசியல் முறை மசோதா ஆலோசனைக்கு வரும்போதே அவை திறந்த சபையில் விவாதத்துக்கு வருமென்றும் டெல்லியிலிருந்து இம்மாதம் திரும்பிய நிதி மந்திரி பத்திரிகை நிருபர்கட்குத் தெரிவித்துள்ளார். அத்தகைய விவாதங்களுடையவும், திருத்தங்களுடையவும் நிலை எவ்வாறாகுமென்பது ​உங்களுக்குத் தெரியும். காங்கிரஸ் மேலிடத்தார் விருப்புக்கு மாறாக அவை இருக்குமேல், அவையனைத்தும் நசுக்கி யொழிக்கப்பட்டு விடும். வருமான வரியில் அதிக பங்கும், கலால் வரியிலும், ஏற்றுமதி வரியிலும் அதிக பங்கும் மத்திய சர்க்காரிடமிருந்து கோர அவர் திட்டமிட்டுள்ளார். எனவே மத்திய சர்க்காரின் கதவைத் தட்டி, அவர்கள் எது போடுவரோ என்று எதிர் பார்த்து நிற்கும் பிச்சைக்கார மாகாணமாக சென்னை இருந்து வரவேண்டும்; மத்திய நிர்வாகம் வளமிகுந்து வாழ வேண்டுமென்றும் பிரார்த்திக்க வேண்டும்! சுயமரியாதைக்கும், மதிப்பு மரியாதைக்கும் பெயர் போன திராவிடர்களாகிய நீங்கள், பிச்சை யேற்பதைக்காட்டிலும் அழிந்துபடுவதே மேலென்ற கொள்கை படைத்த நீங்கள், பிறர் அளக்கும் படியை யேற்றுக்கொள்ள சம்மதிப்பீர்களாயின், திருப்தியடையுங்கள். இல்லையெனில், வீறிட்டெழுந்து சென்னை மாகாணம் சுயேச்சைபெற்றே தீரவேண்டுமென வலியுறுத்துங்கள். நீங்கள் என்ன செய்வீர்களென்பது எனக்குத் தெரியும். சுதந்தர திராவிடஸ்தான் இலட்சியம் எய்தப்பெறுவது உங்கள் கையில்தானுள்ளதென உறுதியாக நம்புகிறேன்.

தனித்தொகுதி முறையை யொழித்து விட்டனர்

அரசியலமைப்பு சபையார் செய்ய முயலும் சில முக்கிய மாறுதல்களை உங்கள் கவனத்துக்குக் கொண்டுவர ஆசைப்படுகிறேன். முதலாவது தனித்தொகுதி முறையை ரத்து செய்து, மைனாரிட்டிகள், தாழ்த்தப்பட்டோர், முஸ்லிம்கள், கிருஸ்துவர்கள், ஆங்கிலோ இந்தியர், ஐரோப்பியர் ஆகியோர்மீது கூட்டுத் தொகுதி முறையை வலியப் புகுத்துவதாம். கூட்டுத் தொகுதி தனித்தொகுதி பற்றிய தகராறு நீண்ட காலமாகவே நடைபெற்று வருகிறது. கடைசியாக, காங்கிரசும் முஸ்லிம் லீகும் லக்னோ ஒப்பந்தமொன்று செய்துகொண்டன. இவ்வொப்பந்த மூலம் ​முஸ்லிம்களுக்குத் தனித் தொகுதி வழங்கப்பட்டது. பெருத்த அளவு தகராறுக்குப் பின்னர், தனித் தொகுதி முறை மான்ட் போர்டு சீர்திருத்தத்திலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இவ்விஷயத்தை சைமன் கமிஷன் மீண்டும் பரிசீலனை செய்தது; இது அந்தந்த வகுப்பாரே முடிவு செய்துகொள்ள வேண்டிய வொரு விஷயமென்றும், அத்தகைய சமரசமொன்று ஏற்படும் வரையில் வகுப்பு வாரித் தொகுதிகள் நிலைபெற்றுதானிருக்க வேண்டுமென்றும், சைமன் கமிஷன் தனது அறிக்கையில் குறிப்பிட்டது. இவ்விஷயம் முழுவதும் மீண்டும் 1932-ல் இந்தியா வந்த (வாக்காளர் கமிட்டி) லோதியன் கமிட்டியால் பரிசீலனை செய்யப்பட்டது. இக்கமிட்டியில் டாக்டர்பி.ஆர். அம்பேத்காரும் உறுப்பினராக இருந்தார். மாகாண வாக்காளர் கமிட்டித் தலைவன் என்ற முறையில், நான் இப் பிரச்னை முழுவதையும் தீர ஆலோசித்து, இந்நாட்டிலும், மக்கள் வகுப்பினரிடையேயும் சமாதானமும் அமைதியும் நிலவ வேண்டுமானால், தனித் தொகுதி முறை இருக்க வேண்டியது அவசியமென்ற முடிவுக்கு வந்தேன். தாழ்த்தப்பட்ட வகுப்பினர் உள்ளிட்ட எல்லா மைனாரிட்டிகளுக்கும் தனித் தொகுதி முறையை மாகாணக் கமிட்டியும் சர்க்காரும் சிபார்சு செய்தன. மகாத்மாவின் பிரசித்தி பெற்ற உண்ணாவிரதம் பின்னர் ஆரம்பமாயிற்று. இவ்வுண்ணா விரதத்தின் விளைவே பூனா ஒப்பந்தமாகும். இவ் வொப்பந்தத்துக்கு ஒப்புக் கொண்ட டாக்டர் பி.ஆர். அம்பேத்கார், திவான் பகதூர் எம்.பி. ராஜா ஆகியோரே பின்னர் தங்கள் செயலுக்கு மிக மிக வருந்தினர். தனித் தொகுதி முறைக்கான அவசியம் டாக்டர் அம்பேத்காரின் "காங்கிரஸும் காந்தியாரும் தீண்டாதோருக்கு சாதித்த தென்ன ?" என்ற புத்தகத்தில் நன்கு விளக்கிக் காட்டப்படுகிறது. புள்ளி விவரங்களோடு கூடிய அவரது விளக்கத்தைப் படிக்கும் எவரும் தனித்தொகுதி முறையை ஆதரிக்காது இருக்க முடியாது அரசியலமைப்பு சபை மைனாரிட்டி உட் கமிட்டியின் உறுப்​பினரான டாக்டர் அம்பேத்கார் தனித்தொகுகி முறையை வலியுறுத்தி யிருக்கக் கூடும். அக்கமிட்டியின் அறிக்கை கூறுவதாவது: "பெருவாரி வோட்டுகளால் புதிய அரசியல் முறையில் தனித் தொகுதி முறை ஒழிக்கப்பட வேண்டுமென்ற முடிவக்கு வந்தோம்." டாக்டர் அம்பேத்காருக்கு தனது கோரிக்கையை எடுத்துக்கூற தகுந்த மேஜாரிட்டி இலாமற்போயிருப்பது இயல்பேயாகும். அவர் இப்பொழுது இந்திய மந்திரிகளுள் ஒருவராவார். தன் மக்கள் இழந்த உரிமையை மீண்டும் பெறும் வகையில் இறுதியாகவாவது அரசியல் முறையை மாற்றி யமைக்க அவர் தனது நிலையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். தாழ்த்தப்பட்டோர் வகுப்பு சம்மேளனப் பொதுச் செயலாளர் தோழர் ராஜபோஜ் தனித் தொகுதி முறைக்குக் கிளர்ச்சி செய்துவருவதாகக் கூறப்படுகிறது.

முஸ்லிம் மெம்பர்களையும் மதிக்கவில்லை

முஸ்லிம்களைப் பொறுத்தவரையில், சென்னையினின்றும் சென்றிருக்கும் முஸ்லிம் உறுப்பினர்களுள் ஒருவரான தோழர் பேக்கர், முஸ்லிம்களுக்குத் தனித்தொகுதி கோரி திருத்தப் பிரேரேபணையொன்று கொண்டுவந்தார். சென்னைவாசியாகிய இவருக்கு சென்னை வாசியே பதில்தர எழுந்தார், "இந்துக்களையும் முஸ்லிம்களையும் பிரித்துவைக்க பிரிட்டிஷார் தோற்றுவித்ததே தனித் தொகுதி முறை" என்று தோழர் அனந்தசயனம் ஐயங்கார் எடுத்துரைத்தார். சரி. ஆனால் வாக்காளர் தேர்தல் தொகுதிகளைத் தோற்றுவித்தது யாரோ? அவைகளையும் பிரிட்டிஷார்தானே தோற்றுவித்தனர்? பின் ஏன் மறைக்கிறீர்கள்? தேர்தல்களும் வேண்டாம், தொகுதிகளும் வேண்டாம்; ஆதிகால கொடுங்கோலர்கள்போல, பலாத்கார முறையில் நாட்டை ஆண்டுகொள்கிறோமென்றாவது கூறுங்கள்! இது ஒருபுறமிருக்கட்டும், தனித்தொகுதிமுறை கோரிக்கையை முதலில் எற்றுக்கொண்டது யார் ? 1916-ல் லக்னோ ஒப்பந்தத்தில் ​காங்கிரஸ்தானே ஏற்றுக்கொண்டது ? அதைத்தானே பிரிட்டிஷார் 1920-ல் நிறைவேற்றினர். பின்னர் பிரிட்டிஷாரைக் குறை கூறுவதேன்? நடந்ததற்கு இரங்குதல் முறைமைதான்; ஆனால் எல்லா சந்தர்ப்பங்களிலுமல்ல.

தோழர் சௌத்ரி காலிகுஸ்மான் நல்ல ஆதாரப்பூர்வமான முறையிலேயே தோழர் போக்கரின் திருத்தப் பிரேரேணையை ஆதரித்தார். ஆனால் எல்லாவற்றுக்கும், மைனாரிட்டிகள் சமிட்டித் தலைவர் சர்தார் பட்டேல் எழுந்து, சர்வாதிகார தோரணையில் நையாண்டி பதில்கூறி அமர்ந்துவிட்டார். அவருக்கு வந்த கோபத்தில், தர்க்க முறைவாதப் பிரதிவாதத்தை யெல்லாம் மறந்துவிட்டார். தனித் தொகுதிமுறை வழங்கிவிடுவதால் நாட்டைப் பிரிவினை செய்தாகவேண்டி நேரிடுமே யென்று அவர் கூறுகிறார். எப்படி யென்று நமக்குத் தெரியக் கூறுவாரா? "பாகிஸ்தான் வழக்கப்பட்டபோது, மீதி இந்தியாவில் மட்டுமாவது ஒரே இனம் இருக்குமென்று கருதப்பட்டது " என அவர் மேலுங் கூறுகிறார். பாகிஸ்தான் வழங்குவதற்கு முன்னர் முஸ்லிம்களும் இந்துக்களும் வெவ்வேறு இனங்களென்றால், அதன் பிறகு அவர்கள் எவ்வாறு ஒரு இனமாக முடியும் ? பிளவுபட்ட இந்தியாவில் முஸ்லிம்கள் இல்லையா? இந்தியாவிலிருந்த முஸ்லிம்கள் தங்கள் மதத்தைக் கைவிட்டு, இந்துக்களாக மாறிவிட்டார்களா? அல்லது இந்துக்களெல்லோரும். முஸ்லிம்களாக மாறிவிட்டார்களா? பாகிஸ்தானல்லாத இந்தியப் பகுதியில் மூஸ்லிம்கள் இன்னும் குறிப்பிடத்தகுந்த மைனாரிட்டிகளாகவே உள்ளனர். முன்போலவே, அவர்கள் இன்னும் முஸ்லிம்களாகவேத்தான் இருக்கின்றனர்; தனித்தொகுதிமுறை பாதுகாப்பேதான் அவர்களுக்கு இன்னும் தேவைப்படுகிறது. கூட்டுத்தொகுதி முறைதான் இருக்க வேண்டுமென சட்டமியற்றியாகவேண்டுமானால், இரட்டிப்பு மெஜாரிட்டி முறையாவது அனுசரிக்கப்படலாம். எனினும், இம்முறையும் வகுப்பு வேற்றுமையை நிலைநாட்டத்தான் செய்யும்; எனவே இதுவும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது! ​சென்னை சட்டசபை எதிர்கட்சித் தலைவர் தோழர் இஸ்மெயில் அரசிரசியலமைப்பு சபையின் முடிவை எதிர்த்து, தனது கண்டனத்தைக் காட்டியுள்ளார்; முஸ்லிம்கள் தாங்களாகவே போராடிச்கொள்ளலாம். ஆனால் சுதந்தர சென்னை மாகாணத்தில், அவர்களுக்கு நிறைந்த சலுகை காட்டப்படும்.

கொடுக்கில்தான் விஷம்

தனித் தொகுதியோடு விஷயம் நின்றுவிட வில்லை. மந்திரி சபைகளிலும் சரி, பொது சர்விஸ்களிலும் சரி, பல்வகைப்பட்ட வகுப்பினருக்கும் ஸ்தானங்கள் ஒதுக்கி வைப்பதோ, அரசியல் முறைப்படி உத்தரவாதங்கள் அளிப்பதோ இனி கிடையாது. ஆனால் நியமனங்களுக்கான மைனாரிட்டிகளின் கோரிக்கைகளை, "நிர்வாகத்தில் திறமையும் இருக்கவேண்டுமென்பதையும் அனுசரித்து" கவனித்து வரவேண்டுமென மாகாண மத்திய சர்க்கார்களுக்கு உத்தரவு வழங்கப்படும். கொடுக்கில் (வாலில்) தான் விஷம் இருக்கிறது. திறமையற்றநபர்களுக்கு உத்தியோகம் வழங்கவேண்டுமென்று யாரும் இப்பொழுது கேட்கவுமில்லை; இதுவரையில் கேடிருக்கவுமில்லை. ஆனால் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ள ௸ குணாம்சம், வேண்டுமானால் சில வகுப்பினரை அலட்சியப்படுத்திவிட அதிகாரத்திலிருப்போருக்கு 'சாக்கு' கூற உதவியாக அமைந்து விடுகிறது. நியாயமானவருக்கு, அத்தகைய உத்தரவு அவசியமற்றதாகும்; ஆனால் மாறுபட்டவர் விஷயத்திலோ, இது ஆபத்தைத்தான் விளைவிக்கும்.

ஸ்தானங்கள் ஒதுக்குவது ஆபத்தாம் !

சட்டபூர்வ பாகஸ்தானங்கள் ஒதுக்கும் பிரச்னைகுறித்து சர்தார் பேசுகையில், அப்படி ஸ்தானங்களை ஒதுக்குவது ஆபத்தான மாறுதலைச் செய்வதாகுமெனக் கூறுகிறார். ஆபத்தோ, இல்லையோ, அது அவர்களுடைய அபிப்பிரா​யத்தை யொட்டியதாகும்; அதுமாறுதலே அல்லவென உறுதியாகக் கூறலாம். அப்படி ஸ்தானங்கள் ஒதுக்குவதை சட்டபூர்வமாக அங்கீகரிக்கும் இந்திய சர்க்கார் ஆக்டின் 255 (2) 266 (4) பிரிவுகளை எடுத்துக் காட்டினால் இதற்குப் போதுமானது.

கொள்கை யடிப்படையிலேயே ஸ்தானங்கள் ஒதுக்குவது தீதாயின், தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு மட்டும் ஒதுக்குவானேன்? டாக்டர் அம்பேத்காருக்கு அளித்த தனிப்பட்ட சலுகை — போலும் இது! ஆங்கிலோ— இந்தியர் விஷயத்தில் மட்டும் இது எப்படி நியாயமாகும்? மேல் வட்டாரங்களின் பொறுக்க முடியாத தொந்தரையில் இது அவசியமாயிற்று போலும்! அப்படி ஸ்தானங்கள் ஒதுக்கியமைக்கு மகிழ்ச்சி; ஆனால், ஏனையோர் விஷயத்திலும் இது அனுசரிக்கப்பட்டாக வேண்டுமென்றுதானே கூறுகிறேன்.

முஸ்லிம்களுக்கும் இந்துகளுக்கு மிடையே அனுசரிக்கப்பட வேண்டிய விகிதாச்சாரம் சம்பந்தமாக, இந்திய சர்க்கார் விதிகள் வகுத்துள்ளனர்; சென்னை சர்க்காரும் கவர்னர்களும், பல திறப்பட்ட சர்விஸ்களுக்காகவும் பலவகை வகுபாருடையவும் விகிதாச்சாரம், சுற்றுமுறைவைப்பு ஆகியவை சம்பந்தமாக சட்ட பூர்வமான விதிகளை வகுத்துள்ளனர். புதிதாகப் பெற்ற சுதந்திரத்தின் முதல் பயன் இலையனைத்தும் ரத்தாவதேயாகும். அதிகாரத்திலுள்ளோரைத் தங்கள் இஷ்டப்படி நடந்து கொள்ள உரிமை வழங்கி விட்ட சுதந்தரம் வாழட்டும்!

இன்னும் என்ன வேண்டும்?

சென்னை மாகாணத்தை பிரிட்டிஷ்காரர் மட்டுமன்றி, வட இந்தியரும், ஆதிக்கப்படுத்தி சுரண்டித்தான் வத்தனரென்று திருச்சினாப்பள்ளி மாநாட்டு உரையிலே நான் ​தெளிவு படுத்தியுள்ளேன். வட இந்திய முதலாளி ஒருவராகிய தோழர் கைத்தானின் முக்கியமான கூற்று ஒன்றை மட்டும் எடுத்துக் காட்ட ஆசைப்படுகிறேன். "வட இந்திய மாகாணங்கள் இப்பொழுது பஞ்சத்தால் பீடிக்கப்படும் நிலையிலுள்ளன; இந்தியாவின் இதர பகுதிகளைக் காட்டிலும் அவற்றின் தேவைகளே இப்பொழுது. அதிகப்படியாக இருக்கும். ஒவ்வொரு மாகாணத்தினுடைய தேவைகளை அவ்வப்போது நிர்ணயிக்க மத்தியநிர்வாகத்துக்கு சில அதிகப்படி அதிகாரம். வழங்காவிடில், அதனால் வட இந்தியாவை எப்படிக் காப்பாற்ற இயலும் ?" என்று அவர் அரசியலமைப்பு சபைக் கூட்டத்தில் குறிப்பிட்டாராம். இதை விட இன்னும் என்ன வேண்டும்?

வடநாட்டுப் படையெடுப்பு

இங்கிருக்கும் மக்கள் தொகையை இன்னும் பெருக்கவும், நம்மை இன்னும் பட்டினி போடவும், சென்னை நகருக்குள் அகதிகள் — ஆடவரும் பெண்டிரும் குழந்தைகளுடனும் மூட்டை முடிச்சுகளுடனும்—வெள்ளம்போல் திரண்டுவருகின்றனர் நாள்தோறும் ரயில்தோறும். காங்கிரஸ் கட்சிக் கூட்டமொன்றில், இந்தியப் பிரதமர் விடுத்த வேண்டுகோளை யனுசரித்து, சென்னைப் பிரதமர், பத்தாயிரம் அகதிகளையேற்று அவர்களுக்கு சென்னையில் இடவசதி இதர வசதிகள் அமைத்துக்கொடுக்க சம்மதித்திருக்கிறாரெனத் தெரியவருகிறது. சென்னை நகர மச்கள் தொகை இப்பொழுதே ஏறக்குறைய இரட்டிப்பாகியுள்ளது ; வீடு கிடைப்பது எந்தவகையிலும் அசாத்தியமாக இருக்கிறது. வெளியூர்களிலும் சரி, கிராமங்களிலும் சரி, நிலைமை இதுவேதான். இப்பொழுதுவரும் அகதிகள் எங்கு தங்குவது? மூச்சுவிடக்கூட இடமில்லை இப்போது; தண்ணீர் சப்ளையும் சுகாதார முறையுமோ மிகமிக மோசம். உணவு நிலைமையை சொல்ல வேண்டியதில்லை! விரைவில் நிலைமையில் அபிவிருத்தி ​கிட்டாவிடில், அரைப்பட்டினி முழுபட்டினியாகி விடுமோவென்று வேறு அஞ்சவேண்டி யிருக்கிறது. இந்த நிலையில், வரும் அகதிகளுக்கு உணவு எங்கு சம்பாதிப்பது? சென்னைக்கு வரும் அகதிகளுள் ஒரு பகுதியினர் பிரபல வர்த்தக முதலாளிகளென்றும், தங்களது வியாபாரத்தை இங்கு துவக்கிக் கொண்டு நடத்தவே இடம் பார்த்து வருகின்றனசென்று தெரிகிறதென 'மெயில்’ பத்திரிகை செப். 2-ந் தேதியன்று கூறுகிறது. சரி. இது தென்னாட்டின் மீது வடநாட்டுப் படையெடுப்பல்லவா? இதை நான் 3 மாதங்களுக்கு முன்னரேயே திருச்சினாப்பள்ளி மாநாட்டில் எடுத்து மொழிந்தேனே!

பிரதமரின் எதேச்சாதிகாரம்

சென்னைப் பிரதமர் இப்பொறுப்பை யேற்றுக் கொண்டிருக்கக் கூடாது ; குறிப்பாக இந்த சந்தர்ப்பத்தில் சென்னை தனது உதார குணத்தைக் காட்டிக் கொள்வதென்பது இயலாது. பிரதமர் வாக்களிக்கும் சந்தர்ப்பத்தில் டெல்லியில் சென்னை மந்திரிகள் 6 அல்லது 7 பேர்கள் வரை இருந்தனர். பிரதமர் அவர்களைக் கலந்துபேசி, அவர்களது ஆய்வுரையையும் சம்மதத்தையும் ஏற்றுக்கொண்டிருக்கவேண்டும். இல்லாவிட்டாலும், அம்மந்திரிகளாவது பிரதமரைத் தடுத்திருக்கவேண்டும்.

மேலிடத்தார் தயவுக்கு சென்னை பலியா?

இன்றுவரை— செப்டெம்பர் 3-ந் தேதிவரை — மந்திரி எவரும் தனது ஆட்சேபத்தைத் தெரிவித்தாரில்லை. எப்படியிருந்தாலும், இவ்வேற்பாடு அவர்களது சம்மதத்தைப்பெற்று விட்டதென்பதுதான் அர்த்தம். இதன் நல்லது கெட்டது அனைத்தையும் அவர்கள்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும். உதார குணத்தால் மேற்கொண்டதல்ல இவ்வேற்பாடு என்று​தான் கூறவேண்டும். மேலிட தேவதைகளைத் திருப்திபடுத்தி காரியஞ் சாதித்துக் கொள்ள இது சரியான வழியென மந்திரிகள் நினைத்திருக்கலாம். வருமான வரியிலிருந்து மேலும் அரை அல்லது ஒரு சதவிகிதம் உதவி பெற முயன்று வருவதாக நிதி மந்திரியும் கூறி வருகிறார். அப்படியானால், இது பிச்சைக்காரனுக்கு இருக்கும் உதார குணமேயாகும். எதிர் காலத்தில் வந்து நுழைவோரையும் தடுக்க முடியாதாகையால், வருவாய்க்கு மேல் செலவே ஏற்படப் போகிறது. இச்சென்னை மாகாணம் இன்றும் சரி, என்றும் சரி அந்நியப் படையெடுப்பை யெதிர்த்து நிற்க சக்தியற்றதாகி, மேலும் மேலும் வறியதாகி, நிரந்தர பாப்பராகி விடுமென்பது உறுதி. இத்தொடர்புகளிலிருந்தெல்லாம் விடுபடுவதைத் தான் நமது பாதுகாப்பு பொறுத்திருக்கிறது. நடுகடலில் மிதக்க நேரிட்டாலும் பாதகமில்லை.

முதலாளிக் கும்பலுக்குப் பலியாவதா?

டெல்லி ரோட்டரி கிளபில் இந்திய சர்க்கார் மந்திரி டாக்டர் மத்தாய் அண்மையில் சிறந்த சொற்பொழிவொன்று செய்துள்ளார். சுயநல முதலாளிக் கும்பலின் ஆதரவின் பேரிலேயே தேசிய இயக்கங்கள் அனைத்தும் வளர்ந்திருக்கின்றனவென்றும், இந்தியா விஷயத்திலும் இது உண்மையேயென்றும், அவர்களது ஆதரவின் விளைவாக சுதந்திரம் பெற்று விட்டதால், அத்தகைய கும்பலின் பிடியில்தான் நாமுள்ளோமென்றும், இப்பிடியைத் தளர்த்திக் கொள்ள போராட்டமொன்றை மேற்கொண்டாலொழிய விளைவு அபாயகரமானதாகவே இருக்குமென்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். அத்தகையபோராட்டத்துக்கான அறிகுறிகளையே காணோம். ஆனால் அதற்கு மாறான அறிகுறிகள் மட்டும் தென்படுகின்றன. போர்க் காலத்தில் செய்த சம்பாதனைகள் பற்றி விசாரணை நடத்த வேண்டுமென்ற தோழர் லியாகத் ​அலிகானின் ஆக்ட் தற்காலிக தடை செய்து வைக்கப்பட்டுள்ளது. பல மாதங்களுக்கு முன்னரேயே நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்க வேண்டும். இதனால் பிடிப்பு மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டுதானிருக்கிறது; இந்த ஆபத்தான பிடிப்பிலிருந்து நாம் விடுபட்டாக வேண்டும்.

கிடைத்தது டொமினியன் அந்தஸ்தே

சுதந்தரத்தீர்மானம் 1928-ல் நிறைவேற்றப்பட்டது; சுதந்தரத்துக்குக் குறைவான எதுவும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாதென தீவிரமாகக் கூறப்பட்டுவந்திருக்கிறது. அன்று முதல் சுதந்தரத்தின் அம்சம் டொமினியன் அந்தஸ்திலுமுள்ளது என காங்கிரஸ் சார்பற்ற அரசியல்வாதிகள் கூறிவந்திருக்கின்றனர். அவர்களை நாட்டுப் பற்றற்றவர்களென காங்கிரசார் வசைமொழிந்து வந்திருக்கின்றனர். ஆனால், இப்பொழுது இந்தியாவுக்கு டொமினியன் அத்தஸ்து வழங்கப்பட்டிருக்கும் நிலையில், காங்கிரசார் ௸ நாட்டுப்பற்றற்றவர்களைக் காட்டிலும் ஒருபடி அதிகமாகப்போய் இதனையே சுதந்தரம் என்று சொல்லிக்கொள்ளும் அளவுக்கு வந்துவிட்டனர்! மகாத்மா, சரத்போஸ், இன்னும் பிறர் என்ன சொன்னாலும் அவர்களுக்குக் சுவலை யில்லை. தான் கொண்டாடப்போவதில்லை யென காந்தி தெரிவித்துவிட்டார். சரத் போஸ், சமதர்மிகள், இந்துமகாசபையினர் ஆகியோரும் இதனையே கூறிவிட்டனர். வடமேற்கு எல்லைப்புற மாகாண சகோதரர்கள் கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளப்போவதில்லையென மறுத்துவிட்டனர்; பட்டாணிஸ்தான் வழங்கப்பெறவில்லையெனக் கூறி ஆட்சேபம் தெரிவித்துக்கொண்டார்கள். இந்த காரணங்களுக்காக, பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுபடுவது திராவிடர்க்கு உண்மை விடுதலையாகாதென்று, திராவிட நாடு பிரிவினை மூலம் அவ்விடுதலையை எய்தப்பெறும்வரையில், மகிழ்ச்சியுறக் காரணமேயில்லை; கொண்டாட்டங்களில் கலந்துகொள்ளவேண்டா​மெனத் திராவிடர்களைக் கேட்டுக்கொண்டு, ஈ. வெ. ராமசாமிப் பெரியாரவர்கள் அறிக்கையொன்று வெளியிட்டார். இதற்கு ஓரளவு கட்சிக்குள்ளேயே குழப்பமிருந்தது. எனினும் அது திராவிடர் கழகத்துக்குள் அபிப்பிராயபேதமேயாகும்; அது குறித்து நான் அதிகம்கூற ஆசைப்படவில்லை. தலைவரின் போக்கும் அறிக்கையும் நியாயமானவையே என்பது எனது சொந்த கருத்து.

திராவிடஸ்தான் என்றால் என்ன?

பிளவு பட்ட மிச்ச இந்தியாவிலிருந்து சென்னை மாகாணத்தைப் பிரித்துக்கொள்வதுதான் திராவிடஸ்தான் என்பதின் சுருக்கமான அர்த்தமாகும் அது ஒன்றுபட்ட நாடாகவும் இருக்கலாம்; அல்லது நமது ஆந்திர, கேரள, கன்னடிய சகோதரர்கள் தனித்தனி மாகாணம் வைத்துக் கொள்ள விழைவோராயின், நான்கு மாகாணங்களாசவும் பிரித்து, அப்படிப் பிரிந்த மாகாணங்களை ஒரு பெடரேஷனாகவும் நிறுவிக்கொள்ளலாம். இதன் முக்கிய நோக்கமென்ன வென்றால் வடநாட்டு ஆதிக்கத்தினின்று விடுதலை பெறுவதாகும். தனக்கு இது புரியவில்லையென்று யாருங்கூற முன் வருவரேயாகில், அதனைப் புரிந்து கொள்ள அவர் விரும்பவில்லை யென்றே நான் சொல்லுவேன்.

பிரிவினை ஏன் வேண்டுமென்பது குறித்துளன் எனது ஜூன் 15ந்தேதிய சொற்பொழிவில் குறிப்பிட்டுள்ளேன். மீண்டும் மீண்டும் பிரிவினை செய்வதென்பது நல்லதல்லவென்று கூறப்படலாம். ஆனால் இந்த சந்தர்ப்பத்தில், அகண்ட இந்துஸ்தானின் தீவிர ஆதரிப்பாளர் தோழர் சே. எம். முன்ஷி அவர்கள் இந்தியப் பிரிவினை குறித்து ஜூலை 4-ல் அச்சியலமைப்பு சபையில் எடுத்துக் கூறியதைக் குறிப்பிட ஆசைப்படுகிறேன். அவர் கூறியதாவது:" நாட்டு ஒற்றுமையை எவ்விதத்திலாவது நிலை நாட்டவே மே 16-ந் தேதி ​திட்டம் விரும்பியது. அத்தகைய ஒற்றுமை வெறும் போலியாகப் போய் விட்டதைப் பின்னர் உணர்ந்தோம்.

ஒன்றுபடுங்கள், வெற்றி உறுதி

மேலும் பேசிக்கொண்டே செல்ல விரும்பவில்லை. நான் இறுதியாக சொல்ல விழைவது இதுதான்: எல்லா திராவிடரும்—சென்னை மாகாண வாசிகளனைவரும்— அவர்கள் எங்கு வாழ்ந்தாலும் சரி, சுதந்தர தென்னிந்தியா இலட்சியத்தை எய்தப் பெற ஒன்றுபட வேண்டும். இதைத்தவிர வேறு எதுவும் நமக்கு அரசியல் பொருளாதார, சமூக விடுதலை யளிக்காது. இதில் என்னோடு மாறுபடுபவர் ஒருவரும் இருக்கமாட்டார்களென்றே நம்புகிறேன். இவ்விஷயங்களில் ஈடுபடுவதால் சிலருக்கு தொல்லைகளிருக்கலாம். அத்தகையோர் எங்களுக்குத் தடையாகவாவது இருக்கக்கூடாதெனக் கேட்டுக்கொள்கிறேன்; எங்களை வாழ்த்துமாறும் வேண்டிக்கொள்கிறேன்.

ஒன்று படுங்கள்; இலட்சியம் எய்தப்பெறும் வரையில் சளையாது உழையுங்கள்; நமது ஒன்று பட்ட முயற்சி வெற்றியே யளிக்குமென உறுதியாக நம்புகிறேன்.


திராவிடநாடு திராவிடருக்கே!