திருக்குறள் கட்டுரைகள்/மறைமொழி

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
மறைமொழி

‘மறைமொழி’ என்பது மறைக்கப்பெற்ற மொழி எனப் பொருள் பெறும். இதை ‘மந்திரம்’ என்றும் ‘வேத பாஷை’ என்றும் வடமொழியாளர் கூறுவர். திருக்குறள் தமிழ் மறை ஆதலின், அது கூறும் மொழிகள் யாவும் நமக்கு மறை மொழிகளேயாம். என்றாலும், நான் இங்கு கூறவந்தது அப்பொருளில் அல்ல. ‘மறைமொழி’ (பரி பாஷை) என்ற பொருளில் ஆகும்.

நகை வியாபாரிகள், மாட்டு வியாபாரிகள், நகை, செய்பவர்கள், தரகுத் தொழில் செய்பவர்கள், தோல் வியாபாரிகள், மார்வாடிகள் ஆகிய பலரிடமும், கேட்போர் அறிய முடியாத மறைமொழிகளை அவர்கள் தங்களுக்குள்ளாகவே வழங்கி வருவதை இன்றும் காணலாம்.

அதுபோலவே, தமிழ் அறிஞர்களுக்குள்ளே-தமிழ் கற்றமக்களுக்குள்ளே ஒரு மறைமொழி வழங்கவேண்டும் என்பது எனது ஆசை. இது மொழிப் பற்றுக்கும், கல்விப் பெருக்குக்கும், அறிவு வளர்ச்சிக்கும், நாட்டு நலனுக்கும் ஏற்ற துணை செய்யும் என்பது எனது எண்ணம். இந்த மறைமொழியைப் பாருங்கள்

அ: நன்பரே வரவேண்டும்! வரவேண்டும்! அந்தப் பையன் 13-ல் எப்படி? .

ஆ : அதைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. நிரம்ப உடையவன்.

இ : நேற்று நாம் போய்க் கேட்டுக் கொண்டிருந்தோமே; அவருக்கு 73 எவ்வளவு இருக்கிறது, பார்த்தீர்களா?

ஈ.: ஆம் 73 இருந்து என்ன செய்ய? 65 சிறிதும் இல்லையே.

உ : பையனுடைய 40 எப்படி?

ஊ : 40 நிறைய உண்டு. என்றாலும் 42 இல்லாமல் 41 மாதிரி இருக்கிறான், .

எ : தாங்கள் ஏன் இப்போது இராமனிடம் 79 வைப்பதில்லை,

ஏ : அவன் இருந்தாப் போலிருந்து 92, 93, 94துக்குப் போய்விட்டான். நான் 82 என எண்ணிச் சும்மா இருந்து விட்டேன். இல்லாவிட்டால் நம்முடைய 97 போய் விடாதா?

எப்படி இந்த மறைமொழி? இது உங்களுக்கு விளங்குகிறதா? நீங்கள் திருக்குறள் படித்திருந்தால் இது உங்களுக்கு விளங்கியிருக்கும். இல்லையானால் அதைப் படியுங்கள். அதிலுள்ள அதிகாரங்கள்தாம் இவை.

திருக்குறள் அதிகாரம்

13. அடக்கம்.
73. அவை அஞ்சாமை.
65. சொல் வன்மை.
40. கல்வி.
41. கல்லாமை.
42. கேள்வி.
79. நட்பு.
92. பொருட்பெண்டிர்.
93. கள்.
94. சூது.
82. தீ நட்பு.
97. மானம்

‘திருக்குறள்’ தமிழனுடைய தனிச் சொத்து. அது தமிழ்நாட்டுக் கருவூலமும் ஆகும். திருக்குறளில் கூறப்படாதது எதுவும் இல்லை. அதை ஒவ்வொரு தமிழ் மகனும் தமிழ்மகளும் படித்துத் தீரவேண்டும். அதன் 1330 குறளையும் படிப்பதற்குக் குறுக்குவழி ஒன்று உண்டு. அது 133 அதிகாரத்தையும் முதலில் மனப்பாடம் பண்ணுவதுதான். அதிகாரங்களை முதலில் மனப்பாடம் பண்ணுகிறவர்கள், திருக்குறளை எளிதாகப் படிப்பதிலும், மறைமொழியை விரைவாகப் பேசுவதிலும் வெற்றி பெறுவார்கள்.

முதல் பயிற்சியாக, 10 அதிகாரங்களுக்குள் பழகராம்

அ: குப்புசாமிக்கு 1 நிறைய இருக்கும்போல் இருக்கே!
ஆ: இருந்து என்ன செய்வது? 14 இல்லையே அப்பா!
அ: உங்கள் ஊரில் 2 எப்படி?
ஆ: சிறிதும் இல்லை. அதனால் 104-ம் நடைபெறவில்லை.
அ: நமது நாயுடு 3-ல் இருப்பதுபோல 4-ஐப்பேசிக் கொண்டிருந்தாரே! இன்னும் அப்படித்தானா?
ஆ: இல்லை! இல்லை! அவர் 5-ல் புகுந்துவிட்டார்.
அ: உங்கள் பையனுக்கு 6 ஆயிற்றோ!
ஆ. ஆயிற்று.
அ: 7 எத்தனை?
ஆ: ஒன்றுமில்லை.
அ: உங்கள் மனைவி 8-ல் எப்படி?
ஆ. அவளுக்கு அது இருந்தால், எனக்கு ஏன் 31 வருகிறது.
அ: உங்களுக்கு இன்றைக்கு 9 சரிதானா?
ஆ: ஐயோ முடியாது. மன்னிக்கவும், நான் 95 அருந்துகிறேன்.
அ: அவர் ஏன் அப்படிப் பேசுகிறார்?
ஆ: அவரா? அவருக்கு 10 தெரியாது.

திருக்குறள் அதிகாரம்

1. கடவுள் வாழ்த்து
14. ஒழுக்கம்.
2. மழை.
104. உழவு.
3. துறவு.
4. அறம்.
5. இல்வாழ்க்கை.
6. வாழ்க்கைத் துணைநலம்.
7. புதல்வரைப் பெறுதல்.
8. அன்புடைமை.
31. சினம்.
9 விருந்து.
95. மருந்து.
10. இன்சொல்.

நாள் ஒன்றுக்கு இவ்வாறு பத்துப் பத்து அதிகாரங்களாகப் பயில்வது நல்லது. பதின்மூன்றே நாட்களில் உங்கள் உள்ளத்தில் திருக்குறளின் அதிகாரத் தலைப்புகள் முழுவதும் பதிந்து விடும். பிறகு உங்களுக்கு ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் திருவள்ளுவர் எந்தத் தலைப்பில் எது எதைச் சொல்லியிருக்கிறார் என்று ஒவ்வொரு குறளாக அந்தந்த அதிகாரத்தின் கீழ்ப் படித்து அறிவை வளர்த்துக் கொள்ளலாம். இது குறளைப் படிக்கும் குறுக்கு வழியாகும்.

தம்பி! உனக்குக் கூறுவது இது ஒன்றுதான். எல்லா உறுப்புக்களும் நன்கு அமைந்ததுதான் உடல். அதுபோல எல்லாத் துறைகளிலும் ஒளிவீசுவதுதான் அறிவு. முன்னதற்கு முழு உடல் என்றும், பின்னதற்கு முழு அறிவு என்றும் பெயர். முழு உடலைப் பெற்றதனாலேயே ஒருவன் முழு மனிதனாகிவிட முடியாது. அவன் முழு அறிவையும் பெற்றிருக்க வேண்டும். அப்போதுதான் அவன் முழு மனிதனாகிறான்.நீயும் ஒரு முழு மனிதனாகத் தோன்ற விரும்புகிறாயா? அப்படியானால், திருக்குறளைப் படி உடனே எடுத்துப் படி! ஏனெனில், அது உலகத்தின் அறிவுக் களஞ்சியங்களில் ஒன்று.

(முற்றுப் பெற்றது)
முத்தமிழ்க் காவலர்
கி. ஆ. பெ. விசுவநாதம் நூல்கள்


தமிழ்ச் செல்வம்
தமிழின் சிறப்பு
அறிவுக் கதைகள்
எனது நண்பர்கள்
வள்ளுவரும் குறளும்
வள்ளுவர் உள்ளம்
திருக்குறள் கட்டுரைகள்
திருக்குறளில் செயல்திறன்
திருக்குறள் புதைபொருள்
மும்மணிகள்
நான்மணிகள்
ஐந்து செல்வங்கள்
ஆறு செல்வங்கள்
அறிவுக்கு உணவு
தமிழ் மருந்துகள்
மணமக்களுக்கு
இளங்கோவும் சிலம்பும்
நல்வாழ்வுக்கு வழி
எண்ணக்குவியல்
வள்ளலாரும் அருட்பாவும்
எது வியாபாரம்? எவர் வியாபாரி?
மாணவர்களுக்கு திருச்சி விசுவநாதம் வரலாறு (மா. சு. சம்பந்தம்)
முத்தமிழ்க் காவலர் பற்றி 100
அறிஞர்கள்பாரி நிலையம்
184, பிராட்வே, சென்னை-600 108.