திருக்குறள் செய்திகள்/55

விக்கிமூலம் இலிருந்து

55. செங்கோன்மை

அரசனது நீதித்துறைபற்றிப் பேசுவது செங்கோன்மை யாகும்.

நீதித்துறையையும் அரசனே மேற்கொண்டிருந்தான். அவன் வைத்ததுதான் சட்டம்; சொன்னதுதான் தீர்ப்பு. அதனால் அவன் பொறுப்போடு நடந்துகொள்ள வேண்டும்.

குற்றம் என்று தெரிந்தால், அவன் தான் பெற்ற மகனாயினும் தேர்க்காலில் இட்டுத் தண்டித்தது அந்தக் காலம். குற்றம் செய்தவன் யாராயினும் அவனைத் தண்டிப்பதுதான் நீதி, தானே தவறு செய்தாலும் கையைக் குறைத்துக்கொண்ட பாண்டியனும் இருந்திருக்கிறான். இரக்கம் காட்டினால் நீதி உறக்கம் கொள்ளும்.

உயிர்வாழ்வுக்கு மழை தேவை; மக்கள் நல்வாழ்வுக்கு அரசநீதி செம்மையாக இருக்க வேண்டும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

அறம் வளர்க்கும் அறச்சாலைகளும், கல்வியைப் பெருக்கும் கல்விநிலையங்களும், வழிபாடுகள் மிக்க கோயில் தலங்களும் சீர்பெற்றுச் சிறப்புற அரசனது நல்லாட்சி தேவையாகும். ஆட்சி குலைந்தால் அறங்கள் வீழ்ச்சியுறும்.

மக்கள் நல்லொழுக்கத்தால்தான் மழை பெய்கிறது என்ற நம்பிக்கை உள்ளது. மழை நன்கு பெய்தால்தான் ஒழுக்கம் சிறப்புறும். இதுதான் உண்மை. இதனை மாற்றிச் சொல்கிற பழக்கம் ஏற்பட்டுவிட்டது. அரசன் காவான் எனின் மழையும் அரசனுக்கு மாறாகப் பெய்யாமல் தவிர்க்கும் என்ற நம்பிக்கை உள்ளது. மழை பெய்யா விட்டால் அரசன் அநீதிதான் காரணம் என்று சொல்வார்கள். அதனால் நீதி தவறக்கூடாது.

வீரர்கள் வெற்றி பெறுவதற்கு உழவர் உழைக்க வேண்டும்; நாட்டில் வளம் கொழிக்க வேண்டும்; நல்லாட்சி நிலவவேண்டும். அதனால்தான் வேல் அன்று வெற்றி தருவது; அரசனது செங்கோல் என்று கூறப்படுகிறது.

அரசனின் ஆட்சிமுறை மக்களுக்கும் பாதுகாப்பு: மக்களும் அவனுக்காகத் தம் உயிரையும் விடுவர். அஃது அரசனது நல் ஆட்சியைப் பொறுத்தது.

நீதி கேட்க நிதி செலவழிக்க வேண்டி இருக்கிறது. அந்த விதி மாறவேண்டும். எளிதாக அரசனைப் பார்த்து முறையிட வாய்ப்பு அளிக்க வேண்டும்.

கடும் குற்றம் செய்பவரை நடுங்க வைத்து அவர்களைத் தண்டிப்பது அரசனது கடமையாகும். அரசனும் ஓர் உழவன்தான். பயிர் செழித்து வளர உழவன் களை பிடுங்கி எறிகிறான். குற்றவாளிகளைக் களைவது அரசனது பொறுப்பு ஆகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=திருக்குறள்_செய்திகள்/55&oldid=1106387" இலிருந்து மீள்விக்கப்பட்டது