திருக்குறள் செய்திகள்/64

விக்கிமூலம் இலிருந்து

64. அமைச்சு
(அமைச்சரது இயல்பு)

கருவி, காலம், செயல், செய்யும் வகை இவற்றை ஆராய்ந்து செய்பவனே சிறந்த அமைச்சனாக இருக்க முடியும்; இவற்றோடு மன உறுதி, நற்குடிப் பிறப்பு, குடிமக்களைக் காக்கும் பொறுப்பு, நூல்களைக் கற்று அறிவது, ஆள்வினை இவை ஐந்தும் அமையவேண்டும்.

பகைவரின் துணைவரை அவரிடமிருந்து பிரித்தலும், தம் அரசர்மாட்டு உள்ளவரைப் பிரிந்து போகாமல் போற்றிக் காத்தலும், தம்மிடமிருந்து பிரிந்துவிட்டவரைச் சேர்த்துக் கொள்வதும் அவன் திறமையாகும்.

எதனைச் செய்ய வேண்டுமோ அதனைத் தேர்ந்து எடுத்துத் திறம்படச் செய்வதும், எதனையும் ஆராய்ந்து ஒரு தக்க முடிவு எடுத்து அறிவித்தலும் அவன் தொழில்களாகும்.

அரசியல் அறம் அறிந்தவனாகவும், கல்வி நிறைந்தவனாகவும், செயல்திறமை உடையவன் ஆகவும், காலம் அறிந்து தக்க கருத்துகளைக் கூறுபவனாகவும் இருப்பவனே சூழ்ச்சி மிக்கவன் ஆவான். சூழ்ந்து ஆராய்வதே சூழ்ச்சி எனப்படும்.

நூல் அறிவோடு இயற்கை அறிவும் பெற்றுக் கூர்மை யாளனாகத் திகழ வேண்டும்.

நூலறிவு கற்றவரிடம் உண்டு; அதனைத் தக்கபடி பயன்படுத்துவதோடு சுயமாகச் சிந்தித்துக் கூறுபவனாகவும் இருக்க வேண்டும்.

அரசனுக்கு அறிவு துணை செய்யாமல் தவறான முடிவுகளைக் கொண்டால் அப்படியே விட்டுவிடக் கூடாது. எது சரி என்பதனைத் தக்க நியாயங்களும், காரணங்களும் காட்டி அவனை மாற்ற வேண்டும். எது நல்லது என்பதை அமைச்சர் முடிவு செய்து அறிவிக்க வேண்டும்.

தீமை கருதும் அமைச்சன் ஒருவன் இருந்தால் போதும் அரசனைக் கெடுக்க; பகைவர் பலர் இருந்தாலும் சமாளித்துக் கொள்ளலாம். உடன் இருந்து குழிபறிக்கும் குள்ளநரி பொல்லாதது; அவனை அரசன் நீக்கிவிட வேண்டும்.

சிலர் திறம்படத் திட்டம் வகுப்பர்; “சென்று தேய்ந்து இறுதல்” என்ற கொள்கைப்படி போகப் போகத் தொய்ந்து விடுவர்; செயலை முடிக்கமாட்டார்கள். அத்தகையவர் நல்ல அமைச்சராக இருக்க முடியாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=திருக்குறள்_செய்திகள்/64&oldid=1106419" இலிருந்து மீள்விக்கப்பட்டது