திருக்குறள் செய்திகள்/73

விக்கிமூலம் இலிருந்து

73. அவை அஞ்சாமை
(சபைக்கு அங்சாமை)

கொச்சைத் தமிழில் பேசித் தன் இச்சைப்படி கருத்துகளைக் கூறினால் யாரும் அவனை நச்சமாட்டார்கள். தூய மொழியில் செய்திகளை வகைப்படுத்திக் கொண்டு முறையறிந்து பேச வேண்டும்.

நூல்கள் பல கற்றும் அவையின்கண் எடுத்துப் பேச ஆற்றல் இல்லை என்றால் அவர்கள் கற்ற கல்வி ஒளி விடாது; கற்றது விரித்துரைக்கும் ஆற்றலும் தேவையாகும்.

அவைக்கண் பேசுவதற்கு மனத் திண்மையும், தன்னம்பிக்கையும், அஞ்சாமையும், கருத்துத் தெளிவும் வேண்டும். போர்க்களத்தில் சென்று மடியப் பலர் துணிந்து வருவர்; அவைக்களத்தில் நின்று பேசுவது எளியது அன்று. மேடை ஏறி விடலாம்; ஆனால் அதில் மேன்மை பெற வேண்டும்.

கல்லாதவரிடையே சொல்லாடுக; அவர்களுக்கு நீ அறிந்தவற்றைத் தெளிவுபட அறிவிக்க; அவர்கள் கூறும் கருத்துகளை அறிவதில் ஆர்வம் காட்டுக; அறிவைப் பெருக்கிக் கொள்க.

வேற்று அரசர்தம் அவையின்கண் பேச வாய்ப்பு நேரும்; அவர்களுக்குத் தக்க மாற்றம் தருதற் பொருட்டுத் தேவையான நூல்களைக் கற்றுச் செல்க. வழிப் பயணத்துக்குச் சோறு கட்டிக்கொண்டு செல்ல வேண்டும்; அவைப் பேச்சுக்கு உன்னைத் தயார்படுத்திக் கொள்ளச் செய்திகளைச் சேகரித்துக் கொள்க.

கல்வி கற்ற அறிஞரிடையே பேச இயலாதவர் நூல்களைக் கற்றவர் என்று சொல்லிக்கொள்வதில் பொருளே இல்லை. வாள் வைத்துக்கொண்டு எடுக்க அஞ்சும் பேடி போர்க்களம் செல்வது வீண், வெட்கக் கேடு, அதே நிலை தான் நூல் பல கற்றும் அவை அஞ்சும் மதியாளர் நிலையும். அவைக்கு அஞ்சுவது ஒரு குறைபாடு ஆகும்.

நூல் பல கற்றும் அவைக்கு அஞ்சுபர் அங்குச் சென்று பங்குகொள்ளத் தயங்குவர். அவர்கள் யாருக்கும் பயன்பட மாட்டார்கள். அவர்களிடம் எதிர்பார்த்து மற்றவர்கள் ஏமாற்றம் அடைகிறார்கள். கல்லாதவரே இவர்களைவிட மேலானவர் என்று கருதப்படுவர். ஏன்? அவர்கள் சொல்லாடுவது இல்லை; சோர்வு கொள்வதும் இல்லை. கல்வி கற்றுச் சிரமப்படுவதும் இல்லை.

இன்னும் சொல்லப்போனால் ஒருசிலர் நன்றாகப் படித்துவிட்டு எதுவும் செய்யாமல் மூலையில் ஒடுங்கிக் கிடக்கிறார்கள்; அவையின்கண் சென்று பேச அஞ்சுகிறார்கள்; இவர்களை யாருமே சிந்திப்பது இல்லை; உயிரோடு வாழ்வார் எனினும் அவர்களை யாரும் நினைவில் நிறுத்தி மதிப்பது இல்லை. அவர்கள் வாழ்ந்தும் வாழாதவர் ஆகின்றனர். செல் அரித்துவிட்ட ஏடுகள் இவர்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=திருக்குறள்_செய்திகள்/73&oldid=1106448" இலிருந்து மீள்விக்கப்பட்டது