திருக்குறள் செய்திகள்/80

விக்கிமூலம் இலிருந்து

80. நட்பு ஆராய்தல்

நட்பு ஓர் ஒட்டு நோய்; பழகிவிட்டால் விடமுடியாது; உன்னை ஒட்டிக்கொள்வதற்கு முன் அதனால் உனக்கு உண்டாகும் நன்மை தீமைகளை எண்ணிப் பார்த்து உறவு கொள்க.

ஆராய்ந்து தேர்ந்து எடுத்துக்கொள்ளாத நட்புச் சாகும் வரை தொடர்ந்து துயரம் தரும்.

குணம், குடிமை, குறைகள், அவர்தம் சுற்றத்தினர் இவர்களை ஆராய்ந்து நட்பை அமைத்துக்கொள்க.

நற்குடியில் பிறந்து உன் நன்மைகளைக் கருதி உனக்கு உண்டாகும் பழிகளை எதிர்த்துப் போக்குபவனை எந்த விலை கொடுத்தும் நட்பாக ஏற்றுக்கொள்க.

கேட்பவர் வருந்துவதாயினும் அதனைப் பொருட்படுத்தாது அழச்சொல்லி இடித்துக்கூறி உலக இயல்பு இஃது என்று அறிவுறுத்த வல்லவர்தம் நட்பினை ஆராய்ந்துகொள்க.

9

கேடுகள் வரும்போதுதான் நம் உண்மையான நண்பர் யார் என்பதை உணர முடியும். எனவே நமக்குக் கேடுகள் வருவதும் ஒருவகையில் நல்லதே.

அறிவற்ற சிறுமைத்தனம் உடையவர்தம் நட்பை நீக்கி விடுவது ஒருவனுக்கு ஊதியம் என்று கொள்க.

ஊக்கம் குறையக் காரணமான செயல்களை நினைத்தும் பார்க்காதே; அதேபோலக் கஷ்ட காலத்தில் கைவிடும் அற்பர்களின் நட்பைக் கொள்ளாதே.

கெடுதி வரும்போது விடுதல் செய்யும் கீழ்மகனின் செயலை மறக்கவே முடியாது. சாகும்போதும் அஃது ஒரு வனை உறுத்திக்கொண்டே இருக்கும்.

மாசு அற்றவர் உறவினைப் பொருந்துக. காசு ஏதாவது தந்தும் ஒத்துவாராதவர் நட்பை விட்டுவிடுக.

"https://ta.wikisource.org/w/index.php?title=திருக்குறள்_செய்திகள்/80&oldid=1106473" இலிருந்து மீள்விக்கப்பட்டது