திருக்குறள் பரிமேலழகர் உரை (40.கல்வி)
தோற்றம்
முப்பால்: பொருட்பால்: அதிகாரம் 40.கல்வி
[தொகு]- பரிமேலழகரின் அதிகார முன்னுரை:
- (அரசியல்: நாற்பதாவது அதிகாரம்- கல்வி):
- அஃதாவது, அவ்வரசன் தான் கற்றற்குரிய நூல்களைக் கற்றல். அவையாவன: அறநூலும், நீதிநூலும், யானை குதிரை தேர் படைக்கலம் என்ற இவற்றின் நூல்களும் முதலாயின. அரசன் அறிவுடையன் ஆயக்கால் தன்னுயிர்க்கேயன்றி மன்னுயிர்க்கும் பயன்படுதல் நோக்கி, இஃது அரசியலுள் வைக்கப்பட்டதாயினும், யாவர்க்கும் உறுதி பயத்தற் சிறப்புடைமையின் பொதுப்படக் கூறுகின்றார். மேல் 'தூங்காமை கல்வி' (குறள்:383) எனத் தோற்றுவாய் செய்த மாட்சியை விரித்துக் கூறுகின்றமையின், இஃது இறைமாட்சியின் பின் வைக்கப்பட்டது.
திருக்குறள்: 391 (கற்க)
[தொகு]- "கற்க கசடறக் கற்பவை கற்றபின் // // கற்க கசடு அற கற்பவை கற்றபின்
- நிற்க வதற்குத் தக". (01) // // நிற்க அதற்கு தக.
- பரிமேலழகர் உரை:
- கற்பவை கசடு அறக் கற்க = ஒருவன் கற்கப்படு நூல்களைப் பழுதறக் கற்க;
- கற்றபின் அதற்குத் தக நிற்க = அங்ஙனம் கற்றால் அக்கல்விக்குத் தக அவை சொல்லுகின்ற நெறிக்கண்ணே நிற்க என்றவாறு.
- பரிமேலழகர் உரை விளக்கம்:
- கற்பவை என்றதனான், அறம் பொருள் இன்பம் வீடு என்னும் உறுதிப்பொருள் உணர்த்துவன அன்றிப் பிற பொருள் உணர்த்துவன சின்னாட் பல்பிணிச் சிற்றறிவினோர்க்கு ஆகா என்பது பெற்றாம்.
- கசடறக் கற்றலாவது, விபரீத ஐயங்களை நீக்கி மெய்ப்பொருளை நல்லோர் பலருடனும் பலகாலும் பயிறல்.
- நிற்றலாவது, இல்வாழ்வுழிக் "கருமமும் உள்படாப் போகமும் துவ்வாத் / தருமமும் தக்கார்க்கே செய்" தலினும்,(நாலடியார்:250) துறந்துழித் தவத்தான் மெய்யுணர்ந்து அவா அறுத்தலினும் வழுவாமை.
- சிறப்புடை மகற்காயின் 'கற்றல் வேண்டும்' என்பதூஉம், அவனால் 'கற்கப்படு நூல்'களும், அவற்றைக் 'கற்குமாறும்', 'கற்றதனாற் பயனும்' இதனால் கூறப்பட்டன.
திருக்குறள்: 392 (எண்ணென்ப)
[தொகு]- "எண்ணென்ப வேனை யெழுத்தென்ப விவ்விரண்டும்?// எண் என்ப ஏனை எழுத்து என்ப இவ்விரண்டும்
- கண்ணென்ப வாழு முயிர்க்கு". (02) // // கண் என்ப வாழும் உயிர்க்கு.
- பரிமேலழகர் உரை:
- எண் என்ப ஏனை எழுத்து என்ப இவ்விரண்டும் = அறியாதார் எண் என்று சொல்லுவனவும், மற்றை எழுத்து என்று சொல்லுவனவுமாகிய கலைகள் இரண்டினையும்;
- வாழும் உயிர்க்குக் கண் என்ப = அறிந்தார் சிறப்புடையுயிர்கட்குக் கண் என்று சொல்லுவர் என்றவாறு.
- பரிமேலழகர் உரை விளக்கம்:
- 'எண்' என்பது கணிதம். அது 'கருவி'யும், 'செய்கை'யும் என இருவகைப்படும்; அவை 'ஏரம்பம்' முதலிய நூல்களுட் காண்க.
- எழுத்தெனவே, அதனோடு ஒற்றுமையுடைய சொல்லும் அடங்கிற்று.
- இவ்விருதிறமும், அறமுதற்பொருள்களைக் காண்டற்குக் கருவியாகலின், 'கண்' எனப்பட்டன.
- அவை கருவியாதல்,
- "ஆதி முதலொழிய அல்ல தனஎண்ணின்
- நீதி வழுவா நிலைமையவான்- மாதே!
- அறமார் பொருளின்பம் வீடென் றிவற்றின்
- திறமாமோ எண்ணிறந்தாற் செப்பு."
- "எழுத்தறியத் தீரும் இழிதகைமை தீர்ந்தான்
- மொழித்திறத்தின் முட்டறுப் பானாகும்- மொழித்திறத்தின்
- முட்டறுத்த நல்லோன் முதனூல் பொருளுணர்ந்து
- கட்டறுத்து வீடு பெறும்."
- இவற்றான் அறிக.
- 'என்ப', என்பவற்றுள் முன்னைய இரண்டும் அஃறிணைப் பன்மைப்பெயர்;
- பின்னது, உயர்திணைப் பன்மைவினை.
- அறியாதார், அறிந்தார் என்பன வருவிக்கப்பட்டன.
- சிறப்புடையுயிர் என்றது, மக்களுயிருள்ளும் உணர்வு மிகுதி உடையதனை.
- இதனால், கற்கப்படு நூல்கட்குக் கருவியாவனவும், அவற்றது இன்றியமையாமையும் கூறப்பட்டன.