திருவிவிலியம்/இணைத் திருமுறை நூல்கள்/எஸ்தர் (கிரேக்கம்)/அதிகாரங்கள் 1 முதல் 2 வரை

விக்கிமூலம் இலிருந்து


"ஏழாம் நாளன்று அர்த்தக்சஸ்தா மன்னர் களிப்புற்றிருந்த பொழுது...அரசியைத் தம்மிடம் அழைத்து வருமாறு பணித்தார்; அவளை அரியணையில் அமர்த்தி, முடிசூட்டி, அவளது எழிலை மாநில ஆளுநர்களும் பிற நாட்டினரும் காணவேண்டும் என்று விரும்பினார்; ஏனெனில் அவள் மிகுந்த அழகுள்ளவள். ஆனால் ஆஸ்தின் அரசி மன்னருக்குக் கீழ்ப்படியவும் அண்ணகர்களுடன் வரவும் மறுத்துவிட்டாள். இதனால் மன்னர் வருத்தமுற்றுச் சினங்கொண்டார்...'ஆஸ்தின் இனி மன்னர்முன் வாராதிருக்கட்டும்; அரசிப் பட்டத்தை அவளிடமிருந்து பறித்து, அவளைவிடச் சிறந்ததொரு பெண்மணிக்கு மன்னர் வழங்கட்டும்...'"- எஸ்தர் (கி) 1:10-12,19.

எஸ்தர் (கிரேக்கம்) (The Book of Esther [Greek]) [1][தொகு]

முன்னுரை

பாரசீகர்களின் ஆட்சியில் (கி.மு. 538-333) யூதர்கள் ஓரளவு உரிமையுடன் வாழ்ந்து, சில சலுகைகள் பெற்றிருந்தார்கள். இதைப் பின்னணியாகக் கொண்டு இயற்றப்பட்டதே "எஸ்தர்" என்னும் இந்நூல்.

இது எபிரேய மொழியில் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் எழுதப்பட்டிருக்கலாம். சிறு சிறு நீக்கங்கள், சுருக்கங்களைத் தவிர, இதன் கிரேக்க பாடம் ஆறு பெரும் இணைப்புகளைக் கொண்டுள்ளது:
1) மொர்தெக்காயின் கனவும் மன்னருக்கு எதிரான சூழ்ச்சி வெளிப்படுதலும் (1:1a - 1r);
2) யூதர்களைக் கொன்றொழிப்பதற்கான அரசாணை (3:13a - 13g);
3) மொர்தெக்காய், எஸ்தர் ஆகியோரின் மன்றாட்டு (4:17a - 17z);
4) எஸ்தர் மன்னரிடம் வேண்டுகோள் விடுத்தல் (5:1 - 2b);
5) யூதர்களுக்குச் சலுகைகள் வழங்கும் அரசாணை (8:12a - 12x);
6) மொர்தெக்காயின் கனவு நனவாதல் (10:3a - 3b).

இவை கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் எபிரேயப் பாடத்துடன் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். இந்தப் பதிப்பில் சிறப்புப் பெயர்களும் வசன எண் வரிசையும் கிரேக்க பாடத்தையொட்டி அமைந்துள்ளன.

எபிரேய பாடம் விளக்கும் நிகழ்ச்சிகளின் போக்கில் எவ்வகை மாற்றத்தையும் கிரேக்க இணைப்புகள் தோற்றுவிக்கவில்லை; எனினும் கடவுளைப் பற்றிய வெளிப்படையான குறிப்புகளை நூல் முழுவதும் புகுத்துவதன்மூலம், கடவுளின் பாதுகாப்பு எப்போதும் அவருடைய மக்களான இஸ்ரயேலருக்கு உண்டு என்னும் உண்மையைக் கோடிட்டு காட்டுகின்றன.

பாரசீகர்களிடமிருந்து யூதர் விடுதலை பெற்றதன் நினைவாகக் கொண்டாடப்பட்ட "பூரிம்" திருவிழாவின் போது இந்நூல் பொதுவில் படிக்கப்பட்டது.

எஸ்தர் (கிரேக்கம்)[தொகு]

நூலின் பிரிவுகள்

பொருளடக்கம் அதிகாரம் - வசனம் பிரிவு 1995 திருவிவிலியப் பதிப்பில் பக்க வரிசை
1. முகவுரை 1:1a - 1r 50 - 51
2. எஸ்தரின் உயர்வு 1:1s - 2:18 51 - 53
3. யூதர்களுக்கு எதிரான சூழ்ச்சி 2:19 - 5:14 53 - 60
4. யூதர்களின் வெற்றி 6:1 - 9:32 60 - 66
5. முடிவுரை 10:1 - 3l 66 - 67

எஸ்தர் (கிரேக்கம்) (The Book of Esther [Greek])[தொகு]

அதிகாரங்கள் 1 முதல் 2 வரை

அதிகாரம் 1[தொகு]

முகவுரை[தொகு]

மொர்தெக்காயின் கனவு[தொகு]


1a அர்த்தக்சஸ்தா [1] மாமன்னருடைய ஆட்சியின் இரண்டாம் ஆண்டில்,
நீசான் மாதம் முதல் நாள் மொர்தெக்காய் ஒரு கனவு கண்டார்.
அவர் பென்யமின் குலத்தைச் சேர்ந்த கீசு என்பவரின் பேரனும்
யாயீரின் மகனும் ஆவார்;
1b சூசா நகரில் வாழ்ந்து வந்த அவர் ஒரு யூதர்,
அரசவையில் பணிபுரிந்தவர்களுள் தலைசிறந்தவர்.
1c பாபிலோனிய மன்னராகிய நெபுகத்னேசர்
யூதேயா நாட்டு அரசராகிய எக்கோனியாவுடன்
எருசலேமிலிருந்து சிறைப்படுத்திச் சென்ற கைதிகளுள் அவரும் ஒருவர். [2]


1d அவர் கண்ட கனவு இதுதான்:
பேரொலியும் இரைச்சலும் இடி முழக்கமும் நிலநடுக்கமும்
குழப்பமும் மண்ணுலகின்மீது உண்டாயின.
1e இரண்டு பெரிய அரக்கப் பாம்புகள் எழுந்துவந்தன;
ஒன்றோடு ஒன்று போரிட முனைந்து பேரொலி எழுப்பின.
1f அதைக் கேட்டதும் நீதி வழுவா இறைமக்களுக்கு எதிராகப் போரிடுமாறு
எல்லா நாடுகளும் முன்னேற்பாடாயின.
1g மண்ணுலகின்மீது இருட்டும் காரிருளும் துன்பமும் கொடுந்துயரமும்,
பேரிடரும் பெருங்குழப்பமும் நிலவிய நாள் அது.
1h நீதி வழுவா இறைமக்கள் அனைவரும்
தங்களுக்கு வரவிருந்த தீமைகளைப் பற்றி அஞ்சிக் கலங்கினார்கள்;
சாவுக்குத் தங்களையே ஆயத்தமாக்கிக் கொண்டு
கடவுளை நோக்கிக் கதறி அழுதார்கள்.
1i அதன் விளைவாக, ஒரு சிறிய ஊற்றிலிருந்து ஒரு பெரிய ஆறு தோன்ற,
அதில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
1k [3] கதிரவன் எழ, ஒளி உண்டாயிற்று.
தாழ்ந்தோர் உயர்த்தப்பட்டு மேலோரை விழுங்கினர். [4]


1l கடவுள் செய்யத் திட்டமிட்டிருந்ததைக்
கனவில் கண்ட மொர்தெக்காய் விழித்தெழுந்தார்;
அன்று பகல் முழுவதும் அதைப்பற்றியே சிந்தித்து,
அதன் பொருளை நுணுக்கமாகக் காண முயன்றார்.

மன்னருக்கு எதிரான சூழ்ச்சி வெளிப்படுதல்[தொகு]


1m மன்னரின் அலுவலர்களும் அரண்மனைக் காவலர்களுமான
கபத்தா, தாரா ஆகிய இருவருடன் மொர்தெக்காய்
அரண்மனை முற்றத்தில் இளைப்பாறிக் கொண்டிருந்தார்.
1n அப்போது அவர் அவர்களின் உரையாடலைக் கேட்க நேர்ந்தது.
அவர் அவர்களின் சூழ்ச்சிகளை ஆராய்ந்து,
அவர்கள் அர்த்தக்சஸ்தா மன்னரைக் கொல்ல
ஏற்பாடு செய்துகொண்டிருந்ததை அறிந்தார்;
எனவே மன்னரிடம் அவர்களைப்பற்றி எடுத்துரைத்தார்.
1o மன்னர் அந்த இரண்டு அலுவலர்களையும் விசாரித்தபோது
அவர்கள் தங்கள் குற்றத்ததை ஒப்புக்கொண்டதால்
கொல்லப்பட்டார்கள்.
1p மன்னர் இவற்றையெல்லாம் தம் குறிப்பேட்டில் எழுதிவைத்தார்.
மொர்தெக்காயும் இவற்றைக் குறித்து வைத்துக் கொண்டார்.
1q மொர்தெக்காய் அரசவையில் பணியாற்றவேண்டும்
என்று மன்னர் ஆணை பிறப்பித்து,
அவரது தொண்டுக்காகப் பரிசுகள் வழங்கினார். [5]
1r ஆனால் பூகையனாகிய அம்மதாத்தாவி மகனும்
மன்னரிடம் உயர் மதிப்புப் பெற்றுத் திகழ்ந்தவனுமான ஆமான்,
அந்த அலுவலர்கள் இருவரையும் முன்னிட்டு
மொர்தெக்காயுக்கும் அவருடைய இனத்தாருக்கும்
தீங்கு விளைவிக்க முயன்று வந்தான். [6]

எஸ்தரின் உயர்வு[தொகு]

மன்னர் அளித்த விருந்து[தொகு]


1s இதன்பின் அர்த்தக்சஸ்தாவின் ஆட்சிக்காலத்தில்
பின்வரும் நிகழ்ச்சிகள் நடந்தன.
இந்தஅர்த்தச்சஸ்தாதான் இந்தியா முதல் எத்தியோப்பியா வரை இருந்த
இருபத்தேழு மாநிலங்கள் மீதும் ஆட்சி செலுத்திவந்தார்.
2 அக்காலத்தில் அவர் சூசா நகரில் அரியணையில் வீற்றிருந்தார்.
3 தம் ஆட்சியின் மூன்றாம் ஆண்டில்
மன்னர் தம் நண்பர்களுக்கும் பிற நாட்டினருக்கும்
பாரசீக, மேதிய நாட்டு உயர்குடி மக்களுக்கும்
மாநில ஆளுநர்களுக்கும் விருந்து அளித்தார்;
4 நூற்று எண்பது நாள்களாகத் தம் பேரரசின் செல்வங்களையும்
தம் விருந்தின் மேன்மையையும் அவர்கள் அறியச் செய்தார்.
5 விருந்து நாள்கள் முடிவுற்றபோது,
சூசா நகரில் வாழ்ந்துவந்த பிற நாட்டினருக்குத்
தம் அரண்மனை முற்றத்தில் ஆறு நாள் விருந்து அளித்தார்.
6 ஆரண்மனை முற்றத்தை விலையுயர்ந்த மென்துகிலாலும்
பருத்தித் துணியாலுமான திரைகள் அணி செய்தன;
அத்திரைகள் பளிங்குக் கற்களாலும்
பிற கற்களாலும் எழுப்பப்பட்ட தூண்கள் மீது
பொன், வெள்ளிக்கட்டிகளோடு பிணைக்கப்பட்ட
கருஞ்சிவப்புக் கயிறுகளில் தொங்கவிடப்பட்டிருந்தன;
மரகதம், பளிங்கு, முத்துச்சிப்பி ஆகியவை பதிக்கப்பட்ட
தளத்தின்மீது பொன், வெள்ளியால் இழைக்கப்பட்ட
மஞ்சங்கள் அமைக்கப்பட்டிருந்தன;
வலைப் பின்னலாலான பல வண்ணப் பூத்தையல் வேலைப்பாடுகளும்
அவற்றைச் சுற்றிலும் ரோசாப் பூக்களும் பின்னப்பட்ட
விரிப்புகள் அங்கே இருந்தன.
7 பொன், வெள்ளிக்கிண்ணங்களின் நடுவே
ஏறத்தாழ ஆயிரத்து இருநூறு டன் [7] வெள்ளி மதிப்புள்ள
மாணிக்கக் கல்லாலான ஒரு சிறு கிண்ணமும் வைக்கப்பட்டிருந்தது.
மன்னருக்குரிய இனிய திராட்சை மது தாராளமாகப் பரிமாறப்பட்டது.
8 குடி அளவு மீறிப்போயிற்று;
ஏனெனில் தம் விருப்பப்படியும் விருந்தினரின் விருப்பப்படியும்
திராட்சை மதுவைப் பரிமாறும்படி
பணியாளர்களுக்கு மன்னர் ஆணையிட்டிருந்தார்.
9 அதே நேரத்தில் அர்த்தக்சஸ்தா மன்னரின் அரண்மனையில்
ஆஸ்தின் [8] அரசி பெண்களுக்கு விருந்து அளித்தாள்.

ஆஸ்தின் அரசியின் வீழ்ச்சி[தொகு]


10 ஏழாம் நாளன்று அர்த்தக்சஸ்தா மன்னர் களிப்புற்றிருந்த பொழுது
தம் அலுவலர்களாகிய ஆமான், பாசான், தாரா,
போராசா, சதோல்தா, அபத்தாசா, தராபா என்னும் ஏழு அண்ணகர்களிடமும்,
11 அரசியைத் தம்மிடம் அழைத்து வருமாறு பணித்தார்;
அவளை அரியணையில் அமர்த்தி, முடிசூட்டி,
அவளது எழிலை மாநில ஆளுநர்களும் பிற நாட்டினரும்
காணவேண்டும் என்று விரும்பினார்;
ஏனெனில் அவள் மிகுந்த அழகுள்ளவள்.
12 ஆனால் ஆஸ்தின் அரசி மன்னருக்குக் கீழ்ப்படியவும்
அண்ணகர்களுடன் வரவும் மறுத்துவிட்டாள்.
இதனால் மன்னர் வருத்தமுற்றுச் சினங்கொண்டார்.
13 மன்னர் தம் நண்பர்களிடம்,
"ஆஸ்தின் இவ்வாறு சொல்லிவிட்டாள்.
எனவே இதற்குச் சட்டப்படி தீர்ப்பு வழங்குங்கள்" என்று கூறினார்.
14 பாரசீக, மேதிய நாட்டு ஆளுநர்களான ஆர்க்கெசாய்,
சர்தாத்தாய், மலேசயார் ஆகியோர் மன்னருக்கு நெருக்கமாயும்
அரசில் முதன்மை நிலையிலும் இருந்தார்கள்.
அவர்கள் மன்னரை அணுகி,
15 அண்ணகர்கள் வழியாக அறிவிக்கப்பட்ட
அரச கட்டளையை நிறைவேற்றத் தவறிய ஆஸ்தின் அரசிக்குச்
சட்டப்படி செய்ய வேண்டியது என்ன என்பதை அறிவித்தார்கள்.
16 மன்னரிடமும் ஆளுநர்களிடமும்
மூக்காய் என்பவர் பின்வருமாறு கூறினார்:
"ஆஸ்தின் அரசி மன்னருக்கு எதிராக மட்டுமின்றி,
மன்னரின் எல்லா ஆளுநர்களுக்கும் அலுவலர்களுக்கும்
எதிராகவும் தவறிழைத்திருக்கிறாள்.
17 ஏனெனில் அரசி சொல்லியிருந்ததை அவர் திரும்பச் சொல்லி,
அவள் எவ்வாறு மன்னரை அவமதித்தாள் என்பதை
அவர்களுக்கு விளக்கினார்.
அர்த்தக்சஸ்தா மன்னரை அவள் அவமதித்தது போலவே,
18 பாரசீக, மேதிய நாட்டு ஆளுநர்களின் மனைவியரான
உயர்குடிப் பெண்டிரும்,
அரசி மன்னருக்குக் கூறியதுபற்றிக் கேள்விப்பட்டு,
தங்கள் கணவர்களை அவமதிக்கத் துணிவர்.
19 எனவே மன்னருக்கு விருப்பமானால்,
அவர் ஓர் ஆணை பிறப்பிக்கட்டும்;
அது பாரசீக, மேதிய நாட்டுச் சட்டங்களுள் பொறிக்கப்படட்டும்;
ஆஸ்தின் இனி மன்னர்முன் வாராதிருக்கட்டும்;
அரசிப் பட்டத்தை அவளிடமிருந்து பறித்து,
அவளைவிடச் சிறந்ததொரு பெண்மணிக்கு மன்னர் வழங்கட்டும்.
இதைத்தவிர வேறு வழியே இல்லை.
20 மன்னர் இயற்றும் சட்டம் எதுவாயினும்,
அதைத் தமது பேரரசு முழுவதும் அவர் அறிவிக்கட்டும்.
இதனால் வறியோர், செல்வர் ஆகிய அனைவருடைய மனைவியரும்
தம் தம் கணவரை மதித்து ஒழுகுவார்கள்."
21 மூக்காயின் கருத்து மன்னருக்கும் ஆளுநர்களுக்கும் ஏற்றதாயிருந்தது.
அவர் சொன்னவாறே மன்னர் செய்தார்;
22 கணவர்கள் எல்லாரும் அவரவர் வீட்டில் மதிக்கப்படவேண்டும்
என்ற ஆணையைத்
தம் பேரரசின் எல்லா மாநிலங்களுக்கும்
அந்தந்த மாநில மொழியில் அனுப்பிவைத்தார்.


குறிப்புகள்

[1] 1:1a - எபிரேய பாடத்தில் இப்பெயர் அகஸ்வேர் என உள்ளது.
[2] 1:1c = எஸ் (கி) 2:6; அர 24:15.
[3] 1:1k - ஜே, வீ, ஆகிய எழுத்துகள் "செப்துவாசிந்தா"வில் இல்லை.
எனவே அவை இந்நூலின் எண் வரிசையில் இடம் பெறா.
[4] 1:d-k = எஸ் (கி) 10:3அ-எஃப்.
[5] 1:1m-q = எஸ் (கி) 2:21-23; 6:1-2.
[6] 1:1r = எஸ் (கி) 3:1-15.
[7] 1:7 - "முப்பதாயிரம் தாலந்து" என்பது கிரேக்க பாடம்.
[8] 1:9 - எபிரேய பாடத்தில் இப்பெயர் "வஸ்தி" என உள்ளது.

அதிகாரம் 2[தொகு]

எஸ்தர் அரசியாதல்[தொகு]


1 அதன்பின் மன்னரின் சீற்றம் தணிந்ததால்
அவர் ஆஸ்தினைப் பற்றிக் கவலைப்படவில்லை;
அவள் சொன்னதையும் தாம் அவளைத் தண்டித்தையும்
நினைத்துப்பார்க்கவில்லை.
2 ஆகவே மன்னரின் அலுவலர்கள் அவரிடம்,
"கற்பும் அழகும் உள்ள இளம் பெண்களை
மன்னர் தமக்காகத் தேடட்டும்;
3 தம் பேரரசின் எல்லா மாநிலங்களிலும் ஆணையர்களை ஏற்படுத்தட்டும்.
அவர்கள் இளமையும் அழகும் வாய்ந்த கன்னிப் பெண்களைத் தேர்ந்து,
சூசா நகரில் உள்ள அந்தப்புரத்துக்கு அழைத்து வந்து,
பெண்களுக்குப் பொறுப்பேற்றிருக்கும் அரச அண்ணகரிடம்
அவர்களை ஒப்படைக்கட்டும்.
அவர் ஒப்பனைப் பொருள்களையும்
அவர்களுக்குத் தேவையான அனைத்தையும்
அவர்களுக்கு வழங்கட்டும்.
4 அவர்களுள் மன்னர் தமக்கு மிகவும் விருப்பமான பெண்ணை
ஆஸ்தினுக்குப் பதிலாக அரசி ஆக்கட்டும்" என்று கூறினார்கள்.
இக்கருத்து மன்னருக்கு உகந்ததாயிருந்தது. அவரும் அவ்வாறே செய்தார்.


5 சூசா நகரில் யூதர் ஒருவர் இருந்தார்.
அவர் பெயர் மொர்தெக்காய்;
அவர் பென்யமின் குலத்தைச் சேர்ந்த கீசின் கொள்ளுப்பேரனும்
சிமேயியின் பேரனும் யாயிரின் மகனும் ஆவார்.
6 ஆவர் பாபிலோனிய மன்னராகிய நெபுகத்னேசர்
எருசலேமிலிருந்து சிறைப்படுத்திச் சென்ற கைதிகளுள் ஒருவர். [*]
7 தம் தந்தையின் சகோதரராகிய அம்மினதாபின் மகளை
அவர் தம் வளர்ப்பு மகளாகக் கொண்டிருந்தார்.
எஸ்தர் என்னும் அப்பெண்ணின் பெற்றோர் இறந்தபின்
மொர்தெக்காய் அவளைத் தம் மனைவியாக்கிக் கொள்ளும்
நோக்கத்துடன் வளர்த்து வந்தார்.
அவள் அழகில் சிறந்த பெண்மணி.


8 ஆரசாணை பிறப்பிக்கப்பட்ட பின்
இளம்பெண்கள் பலர் சூசா நகருக்குக் கொண்டுவரப்பட்டார்கள்;
பெண்களுக்குப் பொறுப்பாளராகிய காயுவிடம் ஒப்படைக்கப்பட்டார்கள்.
அவர்களுள் எஸ்தரும் ஒருத்தி.
9 காயுவுக்கு அவளைப் பிடித்திருந்ததால்,
அவரது பரிவு அவளுக்குக் கிட்டியது.
எனவே அவர் அவளுக்கு வேண்டிய ஒப்பனைப்பொருள்களையும்
உணவு வகைகளையும் உடனே கொடுத்தார்;
அவளுக்குப் பணிசெய்ய அரண்மனையிலிருந்து
ஏழு இளம்பெண்களை ஏற்படுத்தினார்;
அவளையும் அவளுடைய பணிப்பெண்களையும்
அந்தப்புரத்தில் நன்றாகக் கவனித்துக் கொண்டார்.


10 எஸ்தர் தம் இனத்தையும் நாட்டையும்பற்றி
யாருக்கும் தெரியப்படுத்தவில்லை;
ஏனெனில் அவற்றை வெளிப்படுத்த வேண்டாம் என்று
மொர்தெக்காய் அவருக்குக் கட்டளையிட்டிருந்தார்.
11 எஸ்தருக்கு நிகழ்வதைக் கவனிப்பதற்காக
மொர்தெக்காய் அந்தப்புர முற்றத்தின் அருகில்
ஒவ்வொரு நாளும் நடந்து கொண்டிருப்பார்.


12 பன்னிரண்டு மாத காலத் தயாரிப்புக்குப் பின்னரே
இளம் பெண்கள் மன்னரிடம் போகவேண்டியிருந்தது.
வெள்ளைப்போளம் பூசிக் கொண்டு ஆறுமாதமும்,
பெண்டிருக்கான நறுமணப்பொருள்களையும்
ஒப்பனைப்பொருள்களையும் பயன்படுத்திக்கொண்டு
ஆறு மாதமுமாக இந்தக் காலத்தில்
அவர்கள் தங்களுக்கு அழகூட்டிக்கொள்வார்கள்;
13 அதன் பின் ஒவ்வோர் இளம்பெண்ணும் மன்னரிடம் செல்வாள்;
மன்னரால் நியமிக்கப்பட்டிருக்கும் அலுவலரிடம் ஒப்படைக்கப்படுவாள்.
அந்த அலுவலர் அவளை அந்தப்புரத்திலிருந்து
மன்னரின் அரண்மனைக்கு அழைத்துச் செல்வார்.
14 அப்பெண் மாலையில் அங்குச் சென்று,
மறுநாள் காலையில் மற்றோர் அந்தப்புரத்திற்குச் செல்வாள்.
அங்கு மன்னரின் அண்ணகரான காயு
பெண்களுக்குப் பொறுப்பாளராக இருந்தார்.
பெயர் சொல்லி அழைக்கப்பட்டலொழிய
மன்னரிடம் அப்பெண் மீண்டும் செல்லமாட்டாள்.


15 மோர்தெக்காயுடைய தந்தையின் சகோதரராகிய
அம்மினதாபின் மகள் எஸ்தர்
மன்னரிடம் செல்வதற்குரிய முறை வந்தபோது,
பெண்களுக்குப் பொறுப்பாளரான அண்ணகர்
கட்டளையிட்டிருந்தவற்றுள்
எதையும் அவர் புறக்கணிக்கவில்லை.
எஸ்தரைப் பார்த்த அனைவரும் அவரது அழகைப் பாராட்டினர்.
16 ஆர்த்தக் சஸ்தா மன்னருடைய ஆட்சியின் ஏழாம் ஆண்டில்,
பன்னிரண்டாம் மாதமாகிய அதார் மாதம்
எஸ்தர் மன்னரிடம் சென்றார்.
17 மன்னர் அவர் மீது காதல்கொண்டார்;
மற்ற இளம் பெண்கள் எல்லாரையும் விட
எஸ்தரை மிகவும் விரும்பினார்;
ஆகவே அவரையே அரசியாக்கி முடிசூட்டினார்;
18 தம் நண்பர்கள், அலுவலர்கள் ஆகிய அனைவருக்கும்
மன்னர் ஏழு நாள் விருந்து அளித்து
எஸ்தரின் திருமணத்தைச் சிறப்பாகக் கொண்டாடினார்;
தம் ஆட்சிக்கு உட்பட்டோர்க்கு வரிவிலக்கு வழங்கினார்.

யூதர்களுக்கு எதிரான சூழ்ச்சி[தொகு]

மொர்தெக்காய், ஆமோன் மோதல்[தொகு]


19 மோர்தெக்காய் அரசவையில் பணிபுரிந்து வந்தார்.
20 ஆவர் கட்டளையிட்டபடி
எஸ்தர் தமது நாட்டைப்பற்றி யாருக்கும் தெரியப்படுத்தவில்லை;
மொர்தெக்காயோடு இருந்தபோது நடந்துகொண்டது போலவே
கடவுளுக்கு அஞ்சி அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடித்து வந்தார்.
தமது வாழ்க்கை முறையையும் மாற்றிக்கொள்ளவில்லை.


21 மோர்தெக்காய் அடைந்த முன்னேற்றத்தால்
மெய்க்காவலர் தலைவர்களாகிய அரச அலுவலர்கள் இருவர்
மனவருத்தம் கொண்டார்கள்;
அர்த்தக்சஸ்தா மன்னரைக் கொல்லச் சூழ்ச்சி செய்தார்கள்.
22 அதை அறிந்த மொர்தெக்காய் அதைப்பற்றி எஸ்தரிடம் தெரிவிக்கவே,
அவர் இந்தச் சூழ்ச்சி பற்றி மன்னரிடம் எடுத்துரைத்தார்.
23 அலுவலர்கள் இருவரையும் மன்னர் விசாரித்து
அவர்களைத் தூக்கிலிட்டார்;
மொர்தெக்காயின் தொண்டு நினைவுகூரப்படும் வகையில்
குறிப்பேட்டில் அதை எழுதிவைக்குமாறு ஆணையிட்டார்.


குறிப்பு

[*] 2:6 = எஸ் (கி) 1:1சி.


(எஸ்தர் (கிரேக்கம்) நூல்)


(தொடர்ச்சி): எஸ்தர் (கிரேக்கம்): அதிகாரங்கள் 3 முதல் 4 வரை