திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/திருப்பாடல்கள் (சங்கீதங்கள்)/திருப்பாடல்கள் 115 முதல் 116 வரை

விக்கிமூலம் இலிருந்து
"'கடவுள் இல்லை' என அறிவிலிகள் தம் உள்ளத்தில் சொல்லிக் கொள்கின்றனர்" (திருப்பாடல்கள் 14:1).
மூலம்: இங்கெபோர்க் திருப்பாடல்கள் கையெழுத்துத் தொகுப்பு, 12ஆம் நூற்றாண்டு.

திருப்பாடல்கள்[தொகு]

ஐந்தாம் பகுதி (107-150)
திருப்பாடல்கள் 115 முதல் 116 வரை

திருப்பாடல் 115[தொகு]

ஆண்டவரே உண்மையான கடவுள்[தொகு]


1 எங்களுக்கன்று, ஆண்டவரே! எங்களுக்கன்று;
மாட்சியை உம் பெயருக்கே உரித்தாக்கும்;
உம் பேரன்பையும் உண்மையையும் முன்னிட்டு
அதை உமக்கே உரியதாக்கும்.


2 'அவர்களுடைய கடவுள் எங்கே' எனப்
பிற இனத்தார் வினவுவது ஏன்?


3 நம் கடவுளோ விண்ணுலகில் உள்ளார்;
தம் திருவுளப்படி அனைத்தையும் செய்கின்றார்.


4 அவர்களுடைய தெய்வச்சிலைகள்
வெறும் வெள்ளியும் பொன்னுமே,
வெறும் மனிதக் கைவேலையே!


5 அவற்றுக்கு வாய்கள் உண்டு; ஆனால் அவை பேசுவதில்லை;
கண்கள் உண்டு; ஆனால் அவை பார்ப்பதில்லை;


6 செவிகள் உண்டு; ஆனால் அவை கேட்பதில்லை;
மூக்குகள் உண்டு; ஆனால் அவை முகர்வதில்லை.


7 கைகள் உண்டு; ஆனால் அவை தொட்டுணர்வதில்லை;
கால்கள் உண்டு; ஆனால் அவை நடப்பதில்லை;
தொண்டைகள் உண்டு; ஆனால் அவை குரல் எழுப்புவதில்லை.


8 அவற்றைச் செய்கின்றோரும்
அவற்றில் நம்பிக்கை கொள்ளும் அனைவரும்
அவற்றைப்போல் ஆவர். [1]


9 இஸ்ரயேலரே! ஆண்டவர்மீது நம்பிக்கை கொள்ளுங்கள்;
அவரே உங்களுக்குத் துணையும் கேடயமும் ஆவார்.


10 ஆரோனின் குலத்தாரே! ஆண்டவர்மீது நம்பிக்கை கொள்ளுங்கள்;
அவரே உங்களுக்குத் துணையும் கேடயமும் ஆவார்.


11 ஆண்டவருக்கு அஞ்சி நடப்போரே! அவர்மீது நம்பிக்கை கொள்ளுங்கள்;
அவரே உங்களுக்குத் துணையும் கேடயமும் ஆவார்.


12 ஆண்டவர் நம்மை நினைவு கூர்ந்துள்ளார்;
நமக்குத் தம் ஆசியை அளிப்பார்.
இஸ்ரயேல் குடும்பத்தாருக்கு ஆசி வழங்குவார்;
ஆரோனின் குடும்பத்தாருக்கு ஆசி வழங்குவார்;


13 தமக்கு அஞ்சிநடப்போர்க்கு ஆண்டவர் ஆசி வழங்குவார்;
சிறியோர்க்கும் பெரியோர்க்கும் ஆசி வழங்குவார். [2]


14 ஆண்டவர் உங்கள் இனத்தைப் பெருகச் செய்வார்;
உங்களையும் உங்கள் பிள்ளைகளையும் வளரச் செய்வார்.


15 நீங்கள் ஆண்டவரிடமிருந்து ஆசி பெறுவீர்களாக!
விண்ணையும் மண்ணையும் உருவாக்கியவர் அவரே.


16 விண்ணகமோ ஆண்டவருக்கு உரியது;
மண்ணகத்தையோ அவர் மானிடர்க்கு வழங்கியுள்ளார்.


17 இறந்தோர் ஆண்டவரைப் புகழ்வதில்லை;
மௌன உலகிற்குள் இறங்குவோர் எவருமே அவரைப் புகழ்வதில்லை;


18 நாமோ ஆண்டவரை வாழ்த்துகின்றோம்;
இப்பொழுதும் எப்பொழுதும் வாழ்த்துகின்றோம்.


குறிப்புகள்

[1] 115:4-8 = திபா 135:15-18; திவெ 9:20.
[2] 115:13 = திவெ 11:18; 19:5.

திருப்பாடல் 116[தொகு]

சாவினின்று தப்பியவர் பாடியது[தொகு]


1 அல்லேலூயா!
ஆண்டவர்மீது அன்புகூர்கின்றேன்;
ஏனெனில், எனக்கு இரங்குமாறு நான் எழுப்பிய குரலை
அவர் கேட்டருளினார்.


2 அவரை நான் மன்றாடிய நாளில்,
எனக்கு அவர் செவிசாய்த்தார்.


3 சாவின் கயிறுகள் என்னைப் பிணித்துக் கொண்டன;
பாதாளத்தின் துன்பங்கள் என்னைப் பற்றிக் கொண்டன;
துன்பமும் துயரமும் என்னை ஆட்கொண்டன.


4 நான் ஆண்டவரது பெயரைத் தொழுதேன்;
'ஆண்டவரே! என் உயிரைக் காத்தருளும்'
என்று கெஞ்சினேன்.


5 ஆண்டவர் அருளும் நீதியும் கொண்டவர்;
நம் கடவுள் இரக்கம் உள்ளவர்.


6 எளிய மனத்தோரை ஆண்டவர் பாதுகாக்கின்றார்;
நான் தாழ்த்தப்பட்டபோது எனக்கு மீட்பளித்தார்.


7 'என் நெஞ்சே! நீ மீண்டும் அமைதிகொள்;
ஏனெனில், ஆண்டவர் உனக்கு நன்மை செய்தார்'.


8 என் உயிரைச் சாவினின்று விடுவித்தார்;
என் கண் கலங்காதபடியும்
என் கால் இடறாதபடியும் செய்தார்.


9 உயிர் வாழ்வோர் நாட்டில்,
நான் ஆண்டவர் திருமுன் வாழ்ந்திடுவேன்.


10 'மிகவும் துன்புறுகிறேன்!' என்று சொன்னபோதும்
நான் நம்பிக்கையோடு இருந்தேன்.


11 'எந்த மனிதரையும் நம்பலாகாது' என்று
என் மனக்கலக்கத்தில் நான் சொன்னேன்.


12 ஆண்டவர் எனக்குச் செய்த எல்லா நன்மைகளுக்காகவும்
நான் அவருக்கு என்ன கைம்மாறு செய்வேன்?


13 மீட்பின் கிண்ணத்தைக் கையில் எடுத்து,
ஆண்டவரது பெயரைத் தொழுவேன்.


14 இதோ! ஆண்டவருடைய மக்கள் அனைவரின் முன்னிலையில்
அவருக்கு என் பொருத்தனைகளை நிறைவேற்றுவேன்.


15 ஆண்டவர்தம் அன்பர்களின் சாவு
அவரது பார்வையில் மிக மதிப்புக்குரியது.


16 ஆண்டவரே!
நான் உண்மையாகவே உம் ஊழியன்; நான் உம் பணியாள்;
உம் அடியாளின் மகன்; என் கட்டுகளை நீர் அவிழ்த்துவிட்டீர்.


17 நான் உமக்கு நன்றிப் பலி செலுத்துவேன்;
ஆண்டவராகிய உம் பெயரைத் தொழுவேன்;


18 இப்பொழுதே உம் மக்கள் அனைவரின் முன்னிலையில் ஆண்டவரே!
உமக்கு என் பொருத்தனைகளை நிறைவேற்றுவேன்;


19 உமது இல்லத்தில் முற்றங்களில்,
எருசலேமின் நடுவில்,
ஆண்டவரே! உமக்கு என் பொருத்தனைகளை நிறைவேற்றுவேன்.
அல்லேலூயா!


(தொடர்ச்சி): திருப்பாடல்கள்:திருப்பாடல்கள் 117 முதல் 118 வரை