திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/நீதித் தலைவர்கள் (நீதிபதிகள் ஆகமம்)/அதிகாரங்கள் 7 முதல் 8 வரை

விக்கிமூலம் இலிருந்து
நீதித் தலைவர் கிதியோன். புனித ஊர்சு பேராலயத்தின் முன் அமைந்த நீரூற்று. காப்பிடம்:சோலத்தூர்ண், சுவிட்சர்லாந்து.

நீதித் தலைவர்கள்[தொகு]

அதிகாரங்கள் 7 முதல் 8 வரை

அதிகாரம் 7[தொகு]

கிதியோன் மிதியானியரைத் தோற்கடித்தல்[தொகு]


1 எருபாகால் என்ற கிதியோனும் அவருடன் இருந்த மக்கள் அனைவரும் அதிகாலையில் எழுந்து அரோது நீரூற்றருகே பாளையம் இறங்கினர். மிதியானியர் பாளையம் இவரது பாளையத்திற்கு வடக்கே மோரே மலை அருகே பள்ளத்தாக்கில் இறங்கி இருந்தது.
2 ஆண்டவர் கிதியோனை நோக்கி, "உன்னுடன் இருக்கும் மக்கள் ஏராளமாக இருப்பதால், மிதியானியரை அவர்கள் கையில் ஒப்படைக்கமாட்டேன். இல்லையெனில், 'எம் கையே எம்மைக் காத்தது' என்று கூறி, இஸ்ரயேல் மக்கள் எனக்கெதிராகத் தற்பெருமை கொள்வர்.
3 இப்பொழுது மக்கள் கேட்குமாறு நீ கூறவேண்டியது: போருக்கு அஞ்சி நடுங்குகின்றவன் போய்விடட்டும். கிலயாது மலையை விட்டகலட்டும்" என்றார். மக்களுடன் இருபத்திரண்டாயிரம் பேர் திரும்பிச் சென்றனர். பத்தாயிரம் பேர் எஞ்சி இருந்தனர். [1]
4 ஆண்டவர் கிதியோனிடம், "மக்கள் இன்னும் ஏராளமாக உள்ளனர். அவர்களை நீர்நிலைக்கு அழைத்துவா. அங்கே உனக்காக அவர்களைத் தேர்ந்தெடுப்பேன். 'இவன் உன்னுடன் செல்வான்' என்று யாரைக் குறித்து உன்னிடம் குறிப்பிடுகிறேனோ அவன் உன்னுடன் செல்வான்; 'இவன் உன்னுடன் செல்லமாட்டான்' என்று யாரைக் குறித்துக் குறிப்பிடுகிறேனோ, அவன் உன்னுடன் செல்லமாட்டான்" என்றார்.
5 அவர் மக்களை நீர்நிலைக்கு அழைத்துச் சென்றார். ஆண்டவர் கிதியோனிடம், "நாய் போன்று நாக்கினால் நீரை நக்கிக் குடிப்பவர்களை எல்லாம் தனியாக நிறுத்து; முழங்காலில் மண்டியிட்டு நீரைக் குடிப்பவர்களை எல்லாம் தனியாக நிறுத்து" என்றார்.
6 நாக்கினால் [2] நக்கிக் குடித்தவர்களின் எண்ணிக்கை முந்நூறு. மற்ற மக்கள் அனைவரும் நீர் அருந்த முழங்காலில் மண்டியிட்டனர்.
7 ஆண்டவர் கிதியோனிடம், "நக்கிக் குடித்த முந்நூறு பேர் மூலம் நான் உங்களை விடுவிப்பேன். நான் மிதியானியரை உன் கையில் ஒப்படைப்பேன். மற்ற எல்லா மக்களும் தமக்குரிய வீடுகளுக்குச் செல்லட்டும்" என்றார்.
8 அந்த முந்நூறு பேர் தங்கள் கைகளில் உணவுப் பொருள்களையும் தங்கள் எக்காளங்களையும் எடுத்துக் கொண்டனர். அவர் மற்ற எல்லா இஸ்ரயேலரையும் அவர்கள் கூடாரத்திற்கு அனுப்பிவிட்டு அந்த முந்நூறு பேரைத் தம்முடன் நிறுத்திக்கொண்டார். மிதியானியரின் பாளையம் அவர் இருந்த இடத்திற்குக் கீழே பள்ளத்தாக்கில் இருந்தது.


9 அவ்விரவில் ஆண்டவர் அவரிடம், "எழுந்து பாளையத்திற்குள் இறங்கிச் செல். நான் அதை உன்கையில் ஒப்படைத்துவிட்டேன்.
10 ஆயினும், நீ போக அஞ்சினால், முதலில் பூரா என்ற உன் வேலையாளுடன் பாளையத்திற்குச் செல்.
11 அவர்கள் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்பதை நீ உற்றுக்கேள். அதன்பின், உன் கைகள் வலுப்பெற, நீ பாளையத்திற்கு எதிராகச் செல்வாய்" என்றார். அவர் பூரா என்ற தம் வேலையாளுடன் பாளையத்தில் இருந்த போர்வீரர்களின் எல்லைக் காவலுக்குச் சென்றார்.
12 மிதியானியரும் அமலேக்கியரும் கிழக்கில் வாழ்ந்த மக்கள் அனைவரும் வெட்டுக்கிளி போன்று ஏராளமாகப் பள்ளத்தாக்கில் தங்கியிருந்தனர். கடற்கரையில் உள்ள ஏராளமான மணலைப் போன்று அவர்கள் ஒட்டகங்களுக்கு எண்ணிக்கை இல்லை.
13 கிதியோன் வந்து சேர்ந்தபொழுது, ஒருவன் தன் தோழனிடம் தன் கனவுபற்றிக் கூறிக் கொண்டிருந்தான். அவன் கூறியது; "நான் கனவு ஒன்று கண்டேன். வட்டமான ஒரு வாற்கோதுமை அப்பம் மிதியானியரின் பாளையத்திற்குச் சுழன்று வந்தது. அது கூடாரத்திற்கு வந்து அதன்மேல் மோதிக் கீழே விழுந்தது. அது கூடாரத்தைத் தலை கீழாகப் புரட்டியது. கூடாரம் கீழே விழுந்தது" என்றான்.
14 அவன் தோழன் மறுமொழியாக, "இஸ்ரயேலனும் யோவாசின் மகனுமாகிய கிதியோனின் வாளைத் தவிர இது வேறொன்றுமில்லை. கடவுள் மிதியானியரையும் பாளையம் முழுவதையும் அவர் கையில் ஒப்படைத்துவிட்டார்" என்று கூறினான்.


15 கனவையும் அதன் பொருளையும் அவன் கூறக் கேட்டதும் கிதியோன் தலை வணங்கினார். பின்னர் இஸ்ரயேலின் பாளையத்திற்குத் திரும்பினார். "எழுங்கள், ஏனெனில் மிதியானியரின் பாளையத்தை ஆண்டவர் உங்கள் கையில் ஒப்படைத்துள்ளார்" என்றார்.
16 அவர் முந்நூறு பேரையும் மூன்று பிரிவாகப் பிரித்தார். அவர்கள் அனைவரின் கையிலும் எக்காளங்களையும், காலிப் பானைகளையும், அந்தப் பானைகளுக்குள் வைக்க நெருப்புப் பந்தங்களையும் கொடுத்தார்.
17 அவர்களிடம் அவர், என்னைப் பார்த்து நான் செய்வது போலச் செய்யுங்கள். நான் பாளையத்தின் எல்லைக்காவல் வரை செல்வேன். நான் செய்வதுபோல நீங்களும் செய்யுங்கள்.
18 நான் எக்காளம் ஊதுவேன். நானும் என்னோடு உள்ளவர்களும் ஊதும்பொழுது நீங்கள் அனைவரும் பாளையத்தைச் சுற்றிலும் ஊதிக்கொண்டு, "ஆண்டவருக்காக! கிதியோனுக்காக!" என்று கூறுங்கள்" என்றார்.
19 நள்ளிரவுக் காவல் தொடங்கும் நேரத்தில் காவலர் மாற்றி நிறுத்தப்பட்டனர். அப்போது கிதியோனும் அவருடன் இருந்த நூறுபேரும் எல்லைக் காவலை அடைந்தனர். கிதியோனும் அவருடன் இருந்தவர்களும் எக்காளம் ஊதினர். தங்கள் கையிலிருந்த பானைகளை உடைத்தனர்.
20 மூன்று பிரிவினரும் எக்காளம் ஊதினர். பானைகளை உடைத்தனர்; தங்கள் இடக்கையில் நெருப்புப் பந்தங்களையும், வலக்கையில் ஊதுவதற்கு எக்காளங்களையும் ஏந்தியிருந்தனர். அவர்கள், "ஆண்டவருக்காக! கிதியோனுக்காக! ஒரு வாள்!" என்று முழங்கினர்.
21 பாளையத்தைச் சுற்றி ஒவ்வொருவனும் தன் இடத்தில் நின்றான். பாளையத்தில் இருந்த அனைவரும் ஓட்டமெடுத்தனர்; ஓலமிட்டுக் கொண்டு தப்பி ஓடினர்.
22 அப்பொழுது முந்நூறு பேரும் எக்காளம் ஊதினர். ஆண்டவர் பாளையம் முழுவதிலும் ஒவ்வொருவனும் மற்றவன்மீது வாள்வீசச் செய்தார். பாளையத்தினர் செரேராவை நோக்கி பெத்சிற்றாவரையிலும் தபாத்தாவில் உள்ள ஆபல்மெகோலா எல்லைவரையிலும் தப்பி ஓடினர்.
23 நப்தலியிலிருந்தும் ஆசேரிலிருந்தும் மனாசே முழுவதிலிருந்தும் இஸ்ரயேல் வீரர் ஒன்று திரட்டப்பட்டனர். அவர்கள் மிதியானியரைத் துரத்திச் சென்றனர்.
24 கிதியோன் எப்ராயிம் மலையில் உள்ள அனைவருக்கும் தூதரை அனுப்பி, "மிதியானியரை எதிர்க்கக் கீழே இறங்கி வாருங்கள். பெத்பராவரை உள்ள நீரூற்றுகளையும் யோர்தானையும் கைப்பற்றுங்கள்" என்றார்.
25 எப்ராயிம் மக்கள் அனைவரும் ஒன்று திரண்டனர். அவர்கள் பெத்பராவரை உள்ள நீரூற்றுகளையும் யோர்தானையும் கைப்பற்றினர். அவர்கள் ஓரேபு, செயேபு என்ற இரு மிதியானியத் தலைவர்களைச் சிறைப்பிடித்தனர். ஓரேபை ஓரெபாவில் உள்ள பாறை மேல் கொன்றனர். செயேபைச் செயேபில் உள்ள திராட்சை ஆலையில் கொன்றனர். அவர்கள் மிதியானியரை மிதியான்வரை துரத்திச்சென்றனர். ஓரெபின் தலையையும் செயேபின் தலையையும் யோர்தானுக்கு அப்பாலிருந்து கிதியோனிடம் கொண்டு வந்தனர்.

குறிப்புகள்

[1] 7:3 = இச 20:8.
[2] 7:6 'தங்கள் கையிலிருந்து வாய்க்கு' என்பது எபிரேய மூலம்.

அதிகாரம் 8[தொகு]

மிதியானியர் முற்றும் அழிவுறுதல்[தொகு]


1 எப்ராயிம் மக்கள் கிதியோனிடம், "என்ன, எங்களுக்கு இப்படிச் செய்து விட்டீரே? நீர் மிதியானியருக்கு எதிராகப் போரிடச் சென்றபொழுது எங்களைக் கூப்பிடவில்லையே!" என்று சொல்லி அவர்கள் அவரோடு தீவிரமாக வாக்குவாதம் செய்தனர்.
2 அவர் அவர்களிடம், "நான் இப்பொழுது உங்களைவிட என்ன சாதித்து விட்டேன்? எப்ராயிமின் இரண்டாம் திராட்சைப்பழப் பறிப்பு அபியேசரின் முதல் பறிப்பைவிடச் சிறந்ததல்லவா?
3 ஆண்டவர் மிதியானியரின் சிற்றரசர்கள் ஒரேபையும் செயேபையும் உங்கள் கையில் ஒப்படைத்தார். நான் உங்களைவிட என்ன சாதித்துவிட முடிந்தது?" என்று சொன்னதும், அவர்மீது அவர்கள் கொண்ட சினம் தணிந்தது.


4 கிதியோன் யோர்தானுக்கு வந்து அதைக் கடந்தார். அவரும் அவரோடு இருந்த முந்நூறு பேரும் களைப்புற்றிருந்தாலும் துரத்திச் சென்றனர்.
5 அவர் சுக்கோத்து மக்களிடம், "என் பின்னே வரும் இவர்களுக்கு உணவு கொடுங்கள். ஏனெனில் இவர்கள் களைத்திருக்கின்றனர். நான் மிதியானிய அரசர்களான செபாகு. சல்முன்னா என்பவர்களைத் தொடர்ந்து துரத்திக்கொண்டு செல்கிறேன்" என்றார். [*]
6 "செபாகையும் சல்முன்னாவையம் நீ பிடித்துவிட்டாயா? உமது படைக்கு நாங்கள் ஏன் உணவு கொடுக்கவேண்டும்?" என்று சுக்கோத்தின் மக்கள் கேட்டனர்.
7 கிதியோன், "அவ்வாறே ஆண்டவர் செபாகையும் சல்முன்னாவையும் என்கையில் ஒப்படைக்கும்பொழுது நான் உங்கள் உடலைப் பாலைநில முட்களாலும் நெருஞ்சிகளாலும் கிழிப்பேன்" என்றார்.
8 அங்கிருந்து பெனுவேலுக்குச் சென்று இதேபோல அவர்களிடமும் கேட்டார். சுக்கோத்து மக்கள் பதிலளித்தது போலவே, பெனுவேல் மக்களும் அவருக்குப் பதிலளித்தனர்.
9 பெனுவேல் மக்களிடம், "நான் வெற்றியுடன் திரும்பி வரும்பொழுது இந்தக் கோபுரத்தை இடித்துத் தள்ளுவேன்" என்றார்.


10 செபாகும் சல்முன்னாவும் கற்கோரில் இருந்தனர். பதினைந்தாயிரம் பேர் கொண்ட படையும் அவர்களோடு இருந்தது. அவர்கள் அனைவரும் கிழக்கில் வாழும் மக்களின் படை அனைத்திலிருந்தும் எஞ்சி இருந்தவர்கள். ஏற்கெனவே ஓர் இலட்சத்து இருபதாயிரம் போர் வீரர் மடிந்திருந்தனர்.
11 கிதியோன் கூடாரங்களில் வாழ்வோரின் பாதைவழியாக நோபாவுக்கும் யோக்பகாவுக்கும் கிழக்காகச் சென்று, எதிர்பாராத நேரத்தில் படையைத் தாக்கினார்.
12 செபாகும் சல்முன்னாவும் தப்பி ஓடினர். அவர் அவர்கள் பின்னே துரத்திச் சென்று மிதியானின் இரண்டு அரசர்களான செபாகையும் சல்முன்னாவையும் பிடித்தார். படைமுழுவதையும் சிதறடித்தார்.


13 யோவாசின் மகன் கிதியோன் போரிலிருந்து எரேசு மேட்டின் வழியாகத் திரும்பிக்கொண்டிருந்தார்.
14 அவர் சுக்கோத்தைச் சார்ந்த ஓர் இளைஞனைப் பிடித்து அவனை விசாரித்தார். அவன் அவருக்குச் சுக்கோத்தின் தலைவர்களும் பெரியோர்களுமாக எழுபத்தேழுபேரின் பெயர்களை எழுதிக்கொடுத்தான்.
15 அவர் சுக்கோத்து மக்களிடம் வந்து, "இப்பொழுதே செபாகையும் சல்முன்னாவையும் பிடித்துவிட்டாயா? களைப்புற்ற உன் வீரர்களுக்கு நாங்கள் ஏன் உணவு கொடுக்க வேண்டும் என்று கூறி என்னைப் பழித்தீர்களே! அந்தச் செபாகையும் சல்முன்னாவையும் இதோ பாருங்கள்" என்று கூறினார்.
16 பாலைநில முட்களையும் நெருஞ்சிகளையும் கொண்டு நகரின் பெரியோர்களை வதைத்துச் சுக்கோத்து மக்களுக்குப் பாடம் புகட்டினார்.
17 பெனுவேலின் கோபுரத்தை இடித்து நகரின் மக்களைக் கொன்றார்.


18 செபாகிடமும் சல்முன்னாவிடமும், "நீங்கள் போரில் கொன்ற மனிதர்கள் எத்தகையோர்?" என்று கேட்டார். அவர்கள், "உம்மைப் போல் அவர்கள் ஒவ்வொருவரும் அரச மைந்தரைப் போல் தோற்றமளித்தனர்" என்றனர்.
19 அவர், "அவர்கள் என் சகோதரர்கள், என் தாயின் மக்கள்; நீங்கள் அவர்களை உயிரோடு விட்டிருந்தால் நான் உங்களைக் கொல்லமாட்டேன். இது வாழும் ஆண்டவர் மீது ஆணை!" என்றார்.
20 அவர் தம் தலைமகன் எத்தேரிடம், "எழு! அவர்களைக் கொல்" என்றார். இளைஞன் தன் வாளை உருவவில்லை. ஏனெனில் அவன் இன்னும் சிறுவனாக இருந்ததால் அஞ்சினான்.
21 செபாகும் சல்முன்னாவும், "நீயே எழுந்து எங்களைத் தாக்கு. ஆளைப்போன்றே அவனது ஆற்றல்" என்றனர். கிதியோன் எழுந்து செபாகையும் சல்முன்னாவையும் கொன்றார். அவர்களது ஒட்டகங்களின் கழுத்தில் இருந்த இளம்பிறை அணிகளை எடுத்துக் கொண்டார்.


22 இஸ்ரயேலர் கிதியோனிடம், "எங்களை ஆள்வீர்! நீரூம் உம் மகனும், உம் மகனின் மகனும் ஆள்வீர்களாக! ஏனெனில் நீர் மிதியானியரின் கையிலிருந்து எங்களை விடுவித்தீர்!" என்றனர்.
23 கிதியோன் அவர்களிடம், "நான் உங்களை ஆளமாட்டேன். என் மகனும் உங்களை ஆளமாட்டான். ஆண்டவரே உங்களை ஆள்வார்" என்றார்.
24 அவர் அவர்களிடம், "நான் உங்களிடம் ஒரு வேண்டுகோள் விடுக்கின்றேன். நீங்கள் ஒவ்வொருவரும் கொள்ளையடித்தவற்றிலிருந்து காதணியை எனக்குக் கொடுங்கள்" என்றார். ஏனெனில் இஸ்மயேலரான மிதியானியர் தங்கக் காதணிகள் அணிவது வழக்கம்.
25 இஸ்ரயேலர், "நாங்கள் உறுதியாகச் செய்வோம்" என்றனர். அவர்கள் ஒரு துணியை விரித்தனர். அதன்மீது ஒவ்வொருவனும் தான் கொள்ளையடித்தவற்றிலிருந்து காதணியைப் போட்டான்.
26 அவர் கேட்ட தங்கக் காதணிகளின் எடை ஆயிரத்து எழுநூறு செக்கேல் ஆகும். அத்தோடு இளம்பிறை அணிகள், தொங்கணிகள், மிதியான் அரசர்களின் பட்டாடைகள், அவர்களுடைய ஒட்டகங்களின் கழுத்தின்மீது இருந்த அணிகலன்கள் ஆகியவற்றையும் கொடுத்தனர்.
27 கிதியோன் அவற்றைக் கொண்டு ஓர் ஏப்போதைச் செய்து தம் நகராகிய ஒபிராவில் அதை நிறுவினார். இஸ்ரயேலர் அனைவரும் அங்கே வேசித்தனம் செய்தனர். கிதியோனுக்கும் அவர் குடும்பத்தாருக்கும் அது ஒரு கண்ணியாக இருந்தது.
28 மிதியானியர் இஸ்ரயேல் மக்கள் முன்னிலையில் தாழ்த்தப்பட்டனர். அவர்களால் தலைதூக்க முடியவில்லை. கிதியோனின் காலத்தில் நாற்பது ஆண்டுகள் நாட்டில் அமைதி நிலவியது.

கிதியோனின் இறப்பு[தொகு]


29 யோவாசின் மகன் எருபாகால் திரும்பிச்சென்று தம் வீட்டில் வாழ்ந்தார்.
30 கிதியோனுக்கு அவருடைய சொந்த மக்கள் எழுபது பேர். ஏனெனில் அவருக்குப் பல மனைவியர் இருந்தனர்.
31 செக்கேமிலிருந்த அவருடைய வைப்பாட்டி அவருக்கு ஓர் ஆண்மகனைப் பெற்றெடுத்தாள். அவர் அவனுக்கு அபிமெலக்கு என்று பெயரிட்டார்.
32 யோவாசின் மகன் கிதியோன் மிகுந்த வயதாகி இறந்தார். அவரை அபியேசருக்குரிய ஒபிராவில் அவர் தந்தை யோவாசின் கல்லறையில் அடக்கம் செய்தனர்.
33 கிதியோன் இறந்த பின் இஸ்ரயேல் மக்கள் மீண்டும் பாகாலிடம் திரும்பி வேசித்தனம் செய்தனர். பாகால் பெரித்தைத் தங்கள் தெய்வமாக வைத்துக்கொண்டனர்.
34 தங்களைச் சூழ்ந்து வாழ்ந்த எதிரிகளின் கையிலிருந்து விடுவித்த தங்கள் கடவுளாகிய ஆண்டவரை இஸ்ரயேல் மக்கள் நினைவிற் கொள்ளவில்லை.
35 கிதியோன் என்ற எருபாகால் இஸ்ரயேலுக்குச் செய்த அனைத்து நன்மைகளுக்கும் தக்க நன்றியை அவர்கள் அவரது வீட்டுக்குக் காட்டவில்லை.

குறிப்புகள்

[*] 8:3-5 = திபா 83:11.

(தொடர்ச்சி): நீதித் தலைவர்கள்:அதிகாரங்கள் 9 முதல் 10 வரை