திருவிவிலியம்/புதிய ஏற்பாடு/யோவான் (அருளப்பர்) நற்செய்தி/அதிகாரங்கள் 3 முதல் 4 வரை

விக்கிமூலம் இலிருந்து


"இயேசு அவரைப் பார்த்து, 'இந்தத் தண்ணீரைக் குடிக்கும் ஒவ்வொருவருக்கும் மீண்டும் தாகம் எடுக்கும். நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கும் எவருக்கும் என்றுமே தாகம் எடுக்காது; நான் கொடுக்கும் தண்ணீர் அதைக் குடிப்பவருக்குள் பொங்கி எழும் ஊற்றாக மாறி நிலைவாழ்வு அளிக்கும்" என்றார். அப்பெண் அவரை நோக்கி, 'ஐயா, அத்தண்ணீரை எனக்குக் கொடும்; அப்போது எனக்குத் தாகமும் எடுக்காது; தண்ணீர் மொள்ள நான் இங்கு வரத் தேவையும் இருக்காது' என்றார்." - யோவான் 4:13-15


யோவான் நற்செய்தி (John)[தொகு]

அதிகாரங்கள் 3 முதல் 4 வரை

அதிகாரம் 3[தொகு]

இயேசுவும் நிக்கதேமும்[தொகு]


1 பரிசேயர் ஒருவர் இருந்தார்; அவர் பெயர் நிக்கதேம்.
அவர் யூதத் தலைவர்களுள் ஒருவர். [1]
2 அவர் ஓர் இரவில் இயேசுவிடம் வந்து,
"ரபி, நீர் கடவுளிடமிருந்து வந்த போதகர் என்பதை நாங்கள் அறிவோம்.
கடவுள் தம்மோடு இருந்தாலன்றி,
நீர் செய்யும் இவ்வரும் அடையாளங்களை யாரும் செய்ய இயலாது" என்றார்.
3 இயேசு அவரைப் பார்த்து,
"மறுபடியும் [2] பிறந்தாலன்றி எவரும் இறையாட்சியைக் காண இயலாது என
மிக உறுதியாக உமக்குச் சொல்லுகிறேன்" என்றார். [3]


4 நிக்கதேம் அவரை நோக்கி,
"வயதானபின் ஒருவர் எப்படிப் பிறக்க முடியும்?
அவர் மீண்டும் தாயின் வயிற்றில் புகுந்து பிறக்க முடியுமா?" என்று கேட்டார்.
5 இயேசு அவரைப் பார்த்து,
"ஒருவர் தண்ணீராலும் தூய ஆவியாலும் பிறந்தாலன்றி
இறையாட்சிக்கு உட்பட இயலாது என்று மிக உறுதியாக உமக்குச் சொல்கிறேன். [4]
6 மனிதரால் பிறப்பவர் மனித இயல்பை உடையவர்.
தூய ஆவியால் பிறப்பவர் தூய ஆவியின் இயல்பை உடையவர்.
7 நீங்கள் மறுபடியும் பிறக்கவேண்டும் என்று நான் உமக்குக் கூறியது பற்றி
நீர் வியப்படைய வேண்டாம்.
8 காற்று விரும்பிய திசையில் வீசுகிறது.
அதன் ஓசை உமக்குக் கேட்கிறது.
ஆனால் அது எங்கிருந்து வருகிறது என்றும் எங்கு செல்கிறது என்றும் உமக்குத் தெரியாது.
தூய ஆவியால் பிறந்த அனைவருக்கும் இது பொருந்தும்" என்றார். [5]


9 நிக்கதேம் அவரைப் பார்த்தது,
"இது எப்படி நிகழ முடியும்?" என்று கேட்டார்.
10 அதற்கு இயேசு கூறியது:
"நீர் இஸ்ரயேல் மக்களிடையே போதகராய் இருந்தும் உமக்கு இது தெரியவில்லையே!
11 எங்களுக்குத் தெரிந்ததைப் பற்றியே பேசுகிறோம்;
நாங்கள் கண்டதைப் பற்றியே சான்று பகர்கிறோம்.
எனினும் எங்கள் சான்றை நீங்கள் ஏற்றுக்கொள்வதில்லை என உறுதியாக உமக்குச் சொல்கிறேன். [6]
12 மண்ணுலகு சார்ந்தவை பற்றி நான் உங்களுக்குச் சொன்னதை நீங்கள் நம்பவில்லை என்றால்
விண்ணுலகு சார்ந்தவை பற்றிச் சொல்லும் போது எப்படி நம்பப்போகிறீர்கள்? [7]


13 "விண்ணகத்திலிருந்து இறங்கி வந்துள்ள மானிட மகனைத் தவிர
வேறு எவரும் விண்ணகத்திற்கு ஏறிச் சென்றதில்லை.
14 பாலைநிலத்தில் மோசேயால் பாம்பு உயர்த்தப்பட்டது போல
மானிடமகனும் உயர்த்தப்பட வேண்டும். [8]
15 அப்போது அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெறுவர்.
16 தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும்
அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு
அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார். [9]
17 உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பளிக்க அல்ல,
தம் மகன் வழியாக அதை மீட்கவே கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார். [10]
18 அவர்மீது நம்பிக்கை கொள்வோர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவதில்லை;
ஆனால் நம்பிக்கை கொள்ளாதோர் ஏற்கெனவே தீர்ப்புப் பெற்றுவிட்டனர்.
ஏனெனில் அவர்கள் கடவுளின் ஒரே மகனிடம் நம்பிக்கை கொள்ளவில்லை.
19 ஒளி உலகிற்கு வந்திருந்தும் தம் செயல்கள் தீயனவாய் இருந்ததால்
மனிதர் ஒளியைவிட இருளையே விரும்பினர்.
இதில்தான் அவர்களுக்கு எதிரான தண்டனைத் தீர்ப்பு அடங்கியுள்ளது. [11]
20 தீங்கு செய்யும் அனைவரும் ஒளியை வெறுக்கின்றனர்.
தங்கள் தீச்செயல்கள் வெளியாகிவிடும் என அஞ்சி அவர்கள் ஒளியிடம் வருவதில்லை. [12]
21 உண்மைக்கேற்ப வாழ்பவர்கள் ஒளியிடம் வருகிறார்கள்.
இதனால் அவர்கள் செய்யும் அனைத்தையும்
கடவுளோடு இணைந்தே செய்கிறார்கள் என்பது வெளியாகும். [13]

இயேசுவும் யோவானும்[தொகு]


22 இவற்றுக்குப் பின்பு இயேசுவும் அவர்தம் சீடரும் யூதேயப் பகுதிக்குச் சென்றனர்.
அங்கே அவர் அவர்களோடு தங்கித் திருமுழுக்குக் கொடுத்து வந்தார்.
23 யோவானும் சலீம் என்னும் இடத்துக்கு அருகில் உள்ள
அயினோனில் திருமுழுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தார்.
ஏனெனில் அங்குத் தண்ணீர் நிறைய இருந்தது.
மக்கள் அங்கு சென்று திருமுழுக்குப் பெற்றுவந்தார்கள்.
24 யோவான் சிறையில் அடைக்கப்படுமுன் இவ்வாறு நிகழ்ந்தது.


25 ஒரு நாள் யோவானின் சீடர் சிலருக்கும் யூதர் ஒருவருக்கும் இடையே
தூய்மைச் சடங்குபற்றி விவாதம் எழுந்தது.
26 அவர்கள் யோவானிடம் போய்,
"ரபி, யோர்தான் ஆற்றின் அக்கரைப் பகுதியில் உம்மோடு ஒருவர் இருந்தாரே!
நீரும் அவரைக் குறித்துச் சான்று பகர்ந்தீரே!
இப்போது அவரும் திருமுழுக்குக் கொடுக்கிறார்.
எல்லாரும் அவரிடம் செல்கின்றனர்" என்றார்கள்.
27 யோவான் அவர்களைப் பார்த்து,
"விண்ணிலிருந்து அருளப்படாவிட்டால் எவரும் எதையும் பெற்றுக் கொள்ள முடியாது.
28 'நான் மெசியா அல்ல; மாறாக அவருக்கு முன்னோடியாக அனுப்பபப்பட்டவன்' என்று
நான் கூறியதற்கு நீங்களே சாட்சிகள். [14]
29 மணமகள் மணமகனுக்கே உரியவர்.
மணமகனின் தோழரோ அருகில் நின்று அவர் சொல்வதைக் கேட்கிறார்;
அதில் அவர் பெருமகிழ்ச்சி அடைகிறார். என் மகிழ்ச்சியும் இது போன்றது.
இம்மகிழ்ச்சி என்னுள் நிறைந்துள்ளது.
30 அவரது செல்வாக்குப் பெருக வேண்டும்; எனது செல்வாக்குக் குறைய வேண்டும்" என்றார்.

விண்ணகத்திலிருந்து வருபவர்[தொகு]


31 மேலிருந்து வருபவர், அனைவரையும்விட மேலானவர்.
மண்ணுலகிலிருந்து உண்டானவர் மண்ணுலகைச் சேர்ந்தவர்.
மண்ணுலகு சார்ந்தவை பற்றியே அவர் பேசுகிறார்.
விண்ணுலகிலிருந்து வருபவர், அனைவருக்கும் மேலானவர்.
32 தாம் கண்டதையும் கேட்டதையும்பற்றியே அவர் சான்று பகர்கிறார்.
எனினும் அவர் தரும் சான்றை எவரும் ஏற்றுக்கொள்வதில்லை.
33 அவர் தரும் சான்றை ஏற்றுக் கொள்பவர்
கடவுள் உண்மையானவர் என்பதை உறுதிப்படுத்துகிறார்.
34 கடவுளால் அனுப்பப் பெற்றவர் கடவுளின் வார்த்தைகளைப் பேசுகிறார்.
கடவுள் அவருக்குத் தம் ஆவிக்குரிய கொடைகளை அளவின்றிக் கொடுக்கிறார்.
35 தந்தை மகன் மேல் அன்பு கூர்ந்து அனைத்தையும் அவர் கையில் ஒப்படைத்துள்ளார். [15]
36 மகனிடம் நம்பிக்கை கொள்வோர் நிலைவாழ்வைப் பெறுவர்.
நம்பிக்கை கொள்ளாதோர் வாழ்வைக் காணமாட்டார்.
மாறாகக் கடவுளின் சினம் அவர்கள்மேல் வந்து சேரும்.


குறிப்புகள்

[1] 3:1 = யோவா 7:50-52; 19:39.
[2] 3:3 - "மறுபடியும்"என்னும் சொல்லை "மேலிருந்து" எனவும் மொழிபெயர்க்கலாம்.
[3] 3:3 = 1 பேது 1:23.
[4] 3:5 = எசே 36:25; உரோ 8:9; தீத் 3:5.
[5] 3:8 = திப 2:2.
[6] 3:11 = எசா 50:4,10; மத் 11:27.
[7] 3:12 = நீமொ30:4.
[8] 3:14 = எண் 21:9.
[9] 3:16 = மத் 21:37; உரோ 8:32; 1 யோவா 4:9.
[10] 3:17 = யோவா 4:42; 12:47; 2 கொரி 5:19.
[11] 3:19 = திபா 52:3.
[12] 3:20 = யோபு 24:13-17; எபே 5:13.
[13] 3:21 = 1 யோவா 1:6.
[14] 3:28 = யோவா 1:20.
[15] 3:35 = மத் 11:27; லூக் 10:22.

அதிகாரம் 4[தொகு]

சமாரியப் பெண் ஒருவரும் இயேசுவும்[தொகு]


1 யோவானைவிட இயேசு மிகுதியான சீடர்களைச் சேர்த்துக் கொண்டு
திருமுழுக்குக் கொடுத்துவருகிறார் என்று பரிசேயர் கேள்வியுற்றனர்.
இதை அறிந்த இயேசு
2 யூதேயாவை விட்டகன்று மீண்டும் கலிலேயாவுக்குச் சென்றார்.
3 ஆனால் உண்மையில் திருமுழுக்குக் கொடுத்தவர் இயேசு அல்ல; அவருடைய சீடர்களே.
4 கலிலேயாவுக்கு அவர் சமாரியா வழியாகச் செல்லவேண்டியிருந்தது.
5 அவர் சமாரியாவில் உள்ள சிக்கார் என்னும் ஊருக்கு வந்து சேர்ந்தார்.
யாக்கோபு தம் மகன் யோசேப்புக்குக் கொடுத்த நிலத்துக்கு அருகே அந்த ஊர் இருந்தது. [1]
6 அவ்வூரில் யாக்கோபின் கிணறும் இருந்தது.
பயணத்தால் களைப்புற்றிருந்த இயேசு கிணற்று ஓரமாய் அமர்ந்தார்.
அப்போது ஏறக்குறைய நண்பகல்.
7 அவருடைய சீடர் உணவு வாங்குவதற்காக நகருக்குள் சென்றிருந்தனர்.
சமாரியப் பெண் ஒருவர் தண்ணீர் மொள்ள வந்தார்.
8 இயேசு அவரிடம், "குடிக்க எனக்குத் தண்ணீர் கொடும்" என்று கேட்டார்.
9 அச் சமாரியப் பெண் அவரிடம், "நீர் யூதர்; நானோ சமாரியப் பெண்.
நீர் என்னிடம் குடிக்கத் தண்ணீர் கேட்பது எப்படி?" என்று கேட்டார்.
ஏனெனில் யூதர்கள் சமாரியரோடு பழகுவதில்லை. [2]


10 இயேசு அவரைப் பார்த்து,
"கடவுளுடைய கொடை எது என்பதையும்
'குடிக்கத் தண்ணீர் கொடும்' எனக் கேட்பவர் யார் என்பதையும் நீர் அறிந்திருந்தால்
நீரே அவரிடம் கேட்டிருப்பீர்;
அவரும் உமக்கு வாழ்வு தரும் தண்ணீரைக் கொடுத்திருப்பார்" என்றார்.
11 அவர் இயேசுவிடம்,
"ஐயா, தண்ணீர் மொள்ள உம்மிடம் ஒன்றுமில்லை; கிணறும் ஆழமானது.
அப்படியிருக்க வாழ்வு தரும் தண்ணீர் உமக்கு எங்கிருந்து கிடைக்கும்?
12 எம் தந்தை யாக்கோபை விட நீர் பெரியவரோ?
அவரே எங்களுக்கு இக்கிணற்றை வெட்டித் தந்தார்.
அவரும் அவருடைய மக்களும் கால்நடைகளும்
இதிலிருந்துதான் தண்ணீர் குடிப்பது வழக்கம்" என்றார்.
13 இயேசு அவரைப் பார்த்து,
"இந்தத் தண்ணீரைக் குடிக்கும் ஒவ்வொருவருக்கும் மீண்டும் தாகம் எடுக்கும்.
14 நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கும் எவருக்கும் என்றுமே தாகம் எடுக்காது;
நான் கொடுக்கும் தண்ணீர் அதைக் குடிப்பவருக்குள்
பொங்கி எழும் ஊற்றாக மாறி நிலைவாழ்வு அளிக்கும்" என்றார். [3]
15 அப்பெண் அவரை நோக்கி,
"ஐயா, அத்தண்ணீரை எனக்குக் கொடும்;
அப்போது எனக்குத் தாகமும் எடுக்காது;
தண்ணீர் மொள்ள நான் இங்கு வரத் தேவையும் இருக்காது" என்றார்.


16 இயேசு அவரிடம், "நீர் போய், உம் கணவரை இங்கே கூட்டிக் கொண்டு வாரும்" என்று கூறினார்.
17 அப்பெண் அவரைப் பார்த்து,
"எனக்குக் கணவர் இல்லையே" என்றார்.
இயேசு அவரிடம், "எனக்குக் கணவர் இல்லை" என நீர் சொல்வது சரியே.
18 உமக்கு ஐந்து கணவர்கள் இருந்தார்கள் என்றாலும்
இப்போது உம்முடன் இருப்பவர் உம் கணவர் அல்ல.
எனவே நீர் கூறியது உண்மையே" என்றார்.
19 அப்பெண் அவரிடம்,
"ஐயா, நீர் ஓர் இறைவாக்கினர் எனக் கண்டுகொண்டேன். [4]
20 எங்கள் முன்னோர் இம்மலையில் வழிபட்டுவந்தனர்.
ஆனால் நீங்கள் எருசலேமில்தான் வழிபட வேண்டும் என்கிறீர்களே" என்றார். [5]
21 இயேசு அவரிடம், "அம்மா, என்னை நம்பும்.
காலம் வருகிறது. அப்போது நீங்கள் தந்தையை இம்மலையிலோ
எருசலேமிலோ வழிபடமாட்டீர்கள்.
22 யாரை வழிபடுகிறீர்கள் எனத் தெரியாமல் நீங்கள் வழிபடுகிறீர்கள்.
ஆனால் நாங்கள் தெரிந்து வழிபடுகிறோம்.
யூதரிடமிருந்தே மீட்பு வருகிறது. [6]
23 காலம் வருகிறது; ஏன், வந்தேவிட்டது!
அப்போது உண்மையாய் வழிபடுவோர்
தந்தையை அவரது உண்மை இயல்புக்கேற்ப உள்ளத்தில் வழிபடுவர். [7]
24 கடவுள் உருவமற்றவர்.
அவரை வழிபடுவோர் அவரது உண்மை இயல்புக்கு ஏற்ப
உள்ளத்தில்தான் வழிபட வேண்டும்" என்றார்.
25 அப்பெண் அவரிடம்,
"கிறிஸ்து எனப்படும் மெசியா வருவார் என எனக்குத் தெரியும்.
அவர் வரும்போது அனைத்தையும் எங்களுக்கு அறிவிப்பார்" என்றார். [8]
26 இயேசு அவரிடம், "உம்மோடு பேசும் நானே அவர்" என்றார்.


27 அந்நேரத்தில் இயேசுவின் சீடர் திரும்பி வந்தனர்.
பெண் ஒருவரிடம் அவர் பேசிக்கொண்டிருப்பதைக் கண்டு அவர்கள் வியப்புற்றனர்.
எனினும் "என்ன செய்ய வேண்டும்?" என்றோ,
"அவரோடு என்ன பேசுகிறீர்?" என்றோ எவரும் கேட்கவில்லை.
28 அப்பெண் தம் குடத்தை விட்டுவிட்டு ஊருக்குள் சென்று மக்களிடம்,
29 "நான் செய்த எல்லாவற்றையும் என்னிடம் சொன்ன மனிதரை வந்து வாருங்கள்.
அவர் மெசியாவாக இருப்பாரோ!" என்றார்.
30 அவர்கள் ஊரிலிருந்து புறப்பட்டு இயேசுவிடம் வந்தார்கள்.


31 அதற்கிடையில் சீடர், "ரபி, உண்ணும்" என்று வேண்டினர்.
32 இயேசு அவர்களிடம், "நான் உண்பதற்குரிய உணவு ஒன்று உண்டு.
அது உங்களுக்குத் தெரியாது" என்றார்.
33 "யாராவது அவருக்கு உணவு கொடுத்திருப்பார்களோ" என்று
சீடர்கள் தங்களிடையே பேசிக்கொண்டார்கள்.
34 இயேசு அவர்களிடம்,
"என்னை அனுப்பியவரின் திருவுளத்தை நிறைவேற்றுவதும்
அவர் கொடுத்த வேலையைச் செய்து முடிப்பதுமே என் உணவு. [9]
35 'நான்கு மாதங்களுக்குப் பின்தான் அறுவடை' என்னும் கூற்று
உங்களிடையே உண்டே!
நிமிர்ந்து வயல்வெளிகளைப் பாருங்கள்.
பயிர் முற்றி அறுவடைக்குத் தயாராய் உள்ளது. [10]
36 அறுப்பவர் கூலி பெறுகிறார்;
நிலைவாழ்வு பெறுவதற்காக மக்களைக் [11] கூட்டிச் சேர்க்கிறார்.
இவ்வாறு விதைப்பவரும் அறுப்பவரும் ஒருமிக்க மகிழ்ச்சியடைகின்றனர்.
37-38 நீங்கள் உழைத்துப் பயிரிடாததை அறுவடை செய்ய
நான் உங்களை அனுப்பினேன்.
மற்றவர்கள் உழைத்தார்கள்; ஆனால் நீங்கள் அந்த உழைப்பின் பயனை அடைந்தீர்கள்.
இவ்வாறு 'விதைப்பவர் ஒருவர்; அறுவடை செய்பவர் வேறு ஒருவர்'
என்னும் கூற்று உண்மையாயிற்று" என்றார். [12]


39 'நான் செய்தவை அனைத்தையும் என்னிடம் சொன்னார்' என்று
சான்று பகர்ந்த பெண்ணின் வார்த்தையை முன்னிட்டு
அவ்வூரிலுள்ள சமாரியர் பலர் இயேசுவிடம் நம்பிக்கை கொண்டனர்.
40 சமாரியர் அவரிடம் வந்தபோது அவரைத் தங்களோடு தங்குமாறு கேட்டுக்கொண்டனர்.
அவரும் அங்கு இரண்டு நாள் தங்கினார்.
41 அவரது வார்த்தையை முன்னிட்டு இன்னும் பலர் அவரை நம்பினர்.
42 அவர்கள் அப்பெண்ணிடம்,
"இப்போது உன் பேச்சைக் கேட்டு நாங்கள் நம்பவில்லை;
நாங்களே அவர் பேச்சைக் கேட்டோம்.
அவர் உண்மையிலே உலகின் மீட்பர் என அறிந்து கொண்டோம்" என்றார்கள்.

அரச அலுவலர் மகன் குணமாதல்[தொகு]


43 அந்த இரண்டு நாளுக்குப் பிறகு இயேசு அங்கிருந்து கலிலேயாவுக்குச் சென்றார்.
44 தம் சொந்த ஊரில் இறைவாக்கினருக்கு மதிப்பு இராது என்று அவரே கூறியிருந்தார். [13]
45 அவர் கலிலேயா வந்தபோது கலிலேயர் அவரை வரவேற்றனர்.
ஏனெனில் அவர்கள் திருவிழாவுக்குச் சென்றிருந்தபோது
எருசலேமில் அவர் செய்தவை அனைத்தையும் கண்டிருந்தனர். [14]


46 கலிலேயாவில் உள்ள கானாவுக்கு இயேசு மீண்டும் சென்றார்.
அங்கேதான் அவர் தண்ணீரைத் திராட்சை இரசம் ஆக்கியிருந்தார்.
கப்பர்நாகுமில் அரச அலுவலரின் மகன் ஒருவன் நோயுற்றிருந்தான். [15]
47 இயேசு யூதேயாவிலிருந்து கலிலேயாவுக்கு வந்திருப்பதாகக்
கேள்விப்பட்ட அரச அலுவலர் அவரிடம் சென்று,
சாகும் தறுவாயிலிருந்த தம் மகனை நலமாக்க வருமாறு வேண்டினார்.
48 இயேசு அவரை நோக்கி,
"அடையாளங்களையும் அருஞ்செயல்களையும் கண்டாலன்றி
நீங்கள் நம்பவே மாட்டீர்கள்." என்றார்.
49 அரச அலுவலர் இயேசுவிடம்,
"ஐயா, என் மகன் இறக்குமுன் வாரும்" என்றார்.
50 இயேசு அவரிடம்,
"நீர் புறப்பட்டுப்போம். உம் மகன் பிழைத்துக் கொள்வான்" என்றார்.
அவரும் இயேசு தம்மிடம் சொன்ன வார்த்தையை நம்பிப் புறப்பட்டுப் போனார்.
51 அவர் போய்க் கொண்டிருக்கும் போதே
அவருடைய பணியாளர்கள் அவருக்கு எதிர்கொண்டுவந்து
மகன் பிழைத்துக்கொண்டான் என்று கூறினார்கள்.
52 "எத்தனை மணிக்கு நோய் நீங்கியது?" என்று அவர் அவர்களிடம் வினவ,
அவர்கள், "நேற்றுப் பிற்பகல் ஒருமணிக்கு காய்ச்சல் நீங்கியது" என்றார்கள்.
53 'உம் மகன் பிழைத்துக் கொள்வான்' என்று இயேசு
அந்நேரத்தில்தான் கூறினார் என்பதை அவன் தந்தை நினைவுகூர்ந்தார்.
அவரும் அவர் வீட்டார் அனைவரும் இயேசுவை நம்பினர்.
54 இயேசு யூதேயாவிலிருந்து கலிலேயாவுக்கு வந்தபிறகு செய்த
இரண்டாவது அரும் அடையாளம் இதுவே.


குறிப்புகள்

[1] 4:5 = தொநூ 33:19; யோசு 24:32.
[3] 4:9 - "யூதர்கள் சமாரியரோடு பழகுவதில்லை" என்னும் சொற்றொடரை,
"சமாரியர் பயன்படுத்தும் பாத்திரங்களை யூதர்கள் பயன்படுத்துவதில்லை" எனவும் மொழிபெயர்க்கலாம்.
[3] 4:14 = திபா 36:9; எசா 58:11.
[4] 4:19 = மத் 16:14-15.
[5] 4:20 = இச 12:5,6.
[6] 4:22 = 2 அர 17:27-43; எசா 2:3; உரோ 9:4,5.
[7] 4:23 - "அவரது உண்மை இயல்புக்கு ஏற்ப உள்ளத்தில்" என்னும் சொற்றொடரை
"அவரது உண்மை இயல்புக்கேற்ப ஆவியாரோடு இணைந்து" எனவோ
"உண்மையான உளப்பாங்குடன்" எனவோ மொழிபெயர்க்கலாம்.
[8] 4:25 = இச 18:18-22; யோவா 9:37.
[9] 4:34 = மத் 26:39; யோவா 19:20.
[10] 4:35 = மத் 9:37-39; லூக் 10:2; திவெ 14:15.
[11] 4:36 - "மக்கள்" என்பதற்கான மூலமொழிச் சொல்லின்
நேரடி மொழிபெயர்ப்பு "விளைச்சல்" என்பதாகும்.
[12] 4:38 = யோவா 17:18; 20:21; திப 8:14-17.
[13] 4:44 = மத் 13:57; மாற் 6:4; லூக் 4:24.
[14] 4:45 = யோவா 2:23.
[15] 4:46 = யோவா 2:1-11.


(தொடர்ச்சி): யோவான் (அருளப்பர்) நற்செய்தி: அதிகாரங்கள் 5 முதல் 6 வரை