தேன் சிட்டு/தேன் சிட்டு

விக்கிமூலம் இலிருந்து


தேன் சிட்டு


அதிகாலையிலே எத்தனை பறவைகள் இந்தச் சிறிய தோட்டத்திற்கு வருகின்றன! நான் படுக்கையிலிருக்கும் போதே கரிச்சான் என்னும் இரட்டை வால் கரிக்குருவி என்னை எழுந்திருக்குமாறு கூவியழைக்கிறது. காகம் கரைவதற்கு முன்னாள், சேவல் தன் குரலெடுத்துக் கதிரவன் வருகையை உலகத்திற்கு அறிவிப்பதற்கும் முன்னாலேயே கரிச்சான் கூவத் தொடங்கி விடுகிறது. "கரிக்குருவி கூவுகிறது. விடியும் நேரமாகிவிட்டது. வேலைக்குப் புறப்படலாம்” என்று எங்கள் ஊரிலே உழவர் பேசிக்கொள்வதை நான் பலமுறை கேட்டிருக்கிறேன்.

இந்தக் கரிச்சானுக்குத் தரையிலே அமர்வது அவ்வளவு பிடிக்காது. வசதியான உயர்ந்த இடத்தில் அமர்ந்துகொண்டு பறந்து வரும் பூச்சிகளை அது வேட்டையாடும். புனங்களிலே மேயும் செம்மறி ஆட்டின் முதுகிலே அமர்ந்து பூச்சி வேட்டையாடுவதில் இதற்கு அலாதியான விருப்பம் உண்டு. செம் மறியாடு மேய்ந்துகொண்டே செல்லும்; அதன் காலருகிலே புல்லில் பதுங்கியிருக்கும் விட்டில் முதலிய பூச்சிகள் அஞ்சித் தாவி வேறிடத்திற்குப் பறந்து செல்ல முயலும். கரிச்சான் ஒரே பாய்ச்சலிலே பாய்ந்து அவற்றை ஒவ்வொன்றாக தன் வாயிலே போட்டுக்கொள்ளும். இந்தக் குருவியை  எனக்கு அவ்வளவு பிடிக்காது. அதன் காரணத்தைப் பின்னால் கூறுவேன்.

கரிச்சானுக்குப் பிறகு எங்கள் தோட்டத்திற்கு வருவது தேன் சிட்டு. அது அழகான சிறிய குருவி. அதன் கரிய மூக்கு நீண்டு முனையில் சற்று வளைந் திருக்கும். குருவியின் முதுகு கறுப்பாக இருக்கும்; வயிற்றின் பகுதி இலேசான மஞ்சள் கலந்த வெளுப்பாக இருக்கும். பெண் சிட்டின் முதுகிலே கருமைநிறம் குறைவு. பளபளப்பாக நாவற்பழம் போல் முழுதும் ஒரே கறுப்பாகவுள்ள தேன் சிட்டு வகையும் இருக்கிறது. அதுவும் சில நாட்களிலே வருவதுண்டு.

தேன் சிட்டின் சுறுசுறுப்பைப்போல நான் வேறெங்கும் கண்டதில்லை. இறக்கைகளை நொடிக்கு நொடி விரித்து விரித்து மூடி மூடி ஒடி ஒடி ஒவ்வொரு சிறிய கிளையிலும் அமர்ந்து அங்குள்ள மலர்களிலே அது தேனருந்துவதைப் பார்ப்பது எனக்கு எல்லையில்லாத மகிழ்ச்சியளிக்கிறது. அதன் நீண்ட மூக்கை மெதுவாக மலருக்குள்ளே வைத்து மலரின் அடிப் பகுதிலேயுள்ள தேனே அருந்துகிறது. ஒவ்வொரு மலரையும் அது முத்தமிட்டுத் தேன் பருகுகிறது என்று நான் எண்ணுகிறேன். அந்தக் குருவியிடத்திலே எனக்கு மிகுந்த விருப்பம் உண்டு.

தன் பசியைப் போக்கிக் கொள்வதற்காகத்தான் தேன் சிட்டு மலரிலுள்ள தேனைக் குடிக்கிறது; இருந்தாலும் அதே வேளையில் அது மலருக்கும் உதவுகிறது. மலருக்குள்ளே முழுகி முழுகி வெளியே தோன்றும் அதன் கரிய அலகை நான் ஊன்றிப் பார்த்திருக்கிறேன். அதிலே பொன் மயமான மகரந்தத் தூள் ஒட்டியிருக்கும். தேன் சிட்டுத் தன் அலகால் ஒரு மலரிலுள்ள மகரந்தத் தூள் மற்றொரு மலருக்குச் சேர்ந்து அம்மலர் பயன் பெறுமாறு செய்கின்றது. இவ்வகையில் மரம், செடி, கொடிகளின் இனம் பெருகி ஒங்குவதற்கு இந்தத் தேன் சிட்டு உதவுகிறது. உண்ட வீட்டுக்கு உவந்து தொண்டு புரியும் இச்சிட்டின் தன்மை என் உள்ளத்தைக் கவர்ந்திருக்கிறது.

தேன் சிட்டிற்குப் பின்னால் எங்கள் தோட்டத்திற்கு வருவது மைனா. இதை அழகுநாக்குருவி என்பார்கள். அழகாகப் பேசக்கூடிய திறமைவாய்ந்த சிறு பறவையாதலால் இதற்கு அப்பெயர் வந்திருக்கிறது.

மைனாவைப் பெரும்பாலும் இணையாகவே காணலாம். ஆணும் பெண்ணும் ஒன்றை விட்டு ஒன்று பெரிதும் பிரியாமலிருந்து இரை தேடும். மைனா நிலத்தில் அமர்ந்தே பூச்சி பிடிக்கின்றது.

தேன் சிட்டைப்போலவே கரிக் குருவியும் மைனாவும் வேறொரு வகையில் பயிர் பச்சைகளுக்கு உதவுகின்றன. பயிர்களையும், செடிகளையும் அழிக்கும் புழுக்களையும், விட்டில் முதலிய பூச்சிகளையும் வேட்டையாடி அவை ஒழிக்கின்றன. தாவரங்களில் இனவிருத்திக்குத் தேன் சிட்டு உதவுகின்றதென்றால், அவற்றிற்குத் தீங்குசெய்யும் பகைவர்களை ஒழிப்பதில் மற்ற இரண்டு குருவிகளும் உதவுகின்றன. இருந்தாலும் என் உள்ளம் தேன் சிட்டின் இன்பப் பணியையே பெரிதாக மதிக்கிறது. கொன்று செய்கின்ற தொண்டைவிடத் துன்பங்கலவாத இன்பத் தொண்டைச் செய்வது மேல்.

இரண்டும் தேவைதான் என்று பலர் வாதிக்கலாம். அவ்வாறு வாதிக்க அவர்களுக்கு நல்ல ஆதாரங்களும் இருக்கலாம். "கீதையிலே கண்ணன் நமக்கு எடுத்துக்காட்டும் உண்மையை மறுக்க முடியாது” என்றும் சிலர் தலை நிமிர்ந்து பேசலாம்.

நான் அவர்களோடு வாதாட வரவில்லை. எனக்கு எது பிடித்திருக்கிறது என்று கூறவே இங்கு விரும்புகிறேன்.

சுவை என்பது விநோதமானது. நாக்கின் சுவையும் அப்படித்தான். ஒருவனுக்குப் பிடிப்பது மற்றொருவனுக்கு அதே அளவில் பிடிக்குமென்பதில்லை. மாம்பழத்தின் சுவையையே நாடுவோர் உண்டு. சிலருக்கு மாம்பழம் அலுத்துப் போகும்; ஆனால் மிளகாய்ப்பழத்தின் சுவை என்றும் அலுக்காது. அது போலத் தேன் சுவையைவிடப் புழுவின் ஊன் சுவை மைனாவுக்குப் பெரிதும் உகந்ததாக இருக்கலாம். நான் அதைப்பற்றி ஆராய முயலவில்லை. ஆனால் செடி கொடிகளுக்கு அது செய்யும் சேவை துன்பங் கலந்ததாயிருப்பதால் அது தேன் சிட்டின் சேவையைப்போல அவ்வளவு என் உள்ளத்தைக் கவரவில்லை என்பதைக் கூறிக்கொள்ளவே விரும்புகிறேன். நேற்றுக் காலையிலே தேன் சிட்டும் மைனாவும் எங்கள் சிறிய தோட்டத்திலே சுறுசுறுப்போடு தங்கள் பணியிலே ஈடுபட்டிருந்தன. தேன் சிட்டுப் பறந்து பறந்து செடியின் கிளைகளில் அமர்ந்து மலர்களில் தேன் குடித்துக் கொண்டிருந்தது. மஞ்சள் நிறமான வாயையுடைய மைனா நிலத்திலே நடந்து சென்று பூச்சி பிடித்துக்கொண்டிருந்தது. நான் அவற்றைக் கவனித்துக்கொண்டு அசையாது நின்றிருந்தேன்.

வயிற்றுக்கு உணவு தேடுவதிலே நாட்டங் கொண்டிருக்கும் அந்தக் குருவிகளின் செயல்கள் என் சிந்தனையைக் கிளறின. மைனாவைப் போலல்லாமல் தேன் சிட்டைப்போல மனிதன் வாழ முடியாதா என்ற கேள்வி என் உள்ளத்திலே எப்படியோ எழுந்தது. மனிதனுக்குச் சோறு வேண்டும். அவனை ஆட்டி வைக்கிற வலிமை வாய்ந்த சக்திகளென்று கருதப்படுபவைகளில் பசியும் ஒன்று. அந்தப் பசியின் சின்னமாக இருப்பது வயிறு. வாழ்க்கையில் இந்த வயிற்றுப்பாடே பெரும்பாடாக முடிந்திருக்கிறது. பொதுப்படையாகப் பார்க்கும்போது வயிற்றைத் திருப்தி செய்யும் முயற்சி மனிதனுக்கும் இந்தக் குருவிகளுக்கும் ஒன்றுதான். மனிதன் அந்த முயற்சியிலே தேன்சிட்டைப் பின்பற்றக்கூடாதா என்பது தான் எனது கேள்வி. கரிச்சானையும் மைனாவையும் விட்டுத் தேன் சிட்டையே பின்பற்ற வேண்டும் என்பது என்னுடைய ஆசை.

உணவு தேடும் முயற்சியிலே மைனா தனது சொந்த இனத்திற்கு யாதொரு கொடுமையும் இழைப்பதில்லை; பூச்சி, புழுக்களின் இனங்களுக்கே அது கொடுமை செய்கிறது. மனிதன் தனது உணவுத் தேட்ட முயற்சியிலே மற்ற இனங்களுக்குக் கொடுமை செய்வதோடு தன் இனத்திற்கும் கொடுமை சூழ்கின்றன. அந்த வகையில் அவன் மைனாவுக்கும் ஒருபடி தாழ்ந்து விடுகின்றன என்று சொல்லத் தோன்றுகிறது.

மனிதன் தனக்குள்ள அறிவாற்றலின் உதவியால் கொடுமை தவிர்த்து வாழ முடியும். தேன் சிட்டின் வாழ்க்கையைக் கடைப்பிடிப்பது அவனுக்கு அரிதல்ல. அவனுடைய அறிவு அதற்கு வேண்டிய வழிகளை நிச்சயமாக வகுக்கும். அன்பிலே தோய்ந்த பரந்த மனப்பான்மையும், தேன் சிட்டையே பின்பற்ற வேண்டும் என்ற உறுதியுமே தேவை.

எங்கள் சிறிய தோட்டத்திலே தேன் சிட்டைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு இந்த எண்ணம் தோன்றுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=தேன்_சிட்டு/தேன்_சிட்டு&oldid=1395340" இலிருந்து மீள்விக்கப்பட்டது