தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு/இரண்டாம் உலகப் பயணத்தில்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
6. இரண்டாம் உலகப் பயணத்தில்
எட்டாம் எட்வர்டு, நேரு சந்திப்பு!

திரு. ஜி.டி. நாயுடுவின் முதல் உலகச் சுற்றுப் பயணம் அவர் எதிர்பார்த்தபடி வெற்றி பெற்றதால், மறுபடியும் உலகத்தைச் சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் அவரிடம் மேலோங்கியது.

முதல் முறை அவர் உலகத்தை வலம் வந்தபோது, அந்தந்த நாடுகள் எப்படியெல்லாம் முன்னேற்றம் கண்டு, வளர்ச்சி பெற்றிருக்கின்றன என்பதை மட்டுமே பார்த்தார். அந்த உலகப் பயணத்தில் அவருக்குள் உருவான அறிவியல் அறிவு, தொழிலியல் உணர்வுகள், பல நாடுகளில் வாழும் மக்களின் பண்பாடுகள், நாகரிகங்கள், அந்தந்த நாட்டு மக்கள் அன்றாடம் அனுபவிக்கும் வாழ்க்கை வசதிகள் ஆகியவற்றை திரு. நாயுடுவுக்கு உணரும் வாய்ப்புக் கிடைத்தது.

இரண்டாவது :
உலகப் பயணம்!

மறுபடியும் உலகச் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டால், முதல் முறையில் தாம் கண்டுணர்ந்த அறிவு வளர்ச்சிகளை, மேலும் சற்று ஆழமாக, கவனமாக, ஆய்வுக் கண்ணோட்டத்தோடு காண முடியுமே என்ற ஆர்வம் அவருக்கு அதிகமானதால், இரண்டாம் முறையாக அவர் உலகத்தைச் சுற்றி வரத் திட்டமிட்டார்.

ஒரு மனிதன் அறிவியல், தொழிலியல், வாழ்வியல், பொருளியல் கண்ணோட்டத்தோடு உலகைச் சுற்றி வர நினைத்தால், அதற்கான அந்தந்த நாடுகளைப் பற்றிய முழு உண்மைகளைக் கற்றறிந்திருக்க வேண்டும் அல்லது கேட்டுணர்ந்திருக்க வேண்டும்.

அந்த வரலாற்று அறிவும், நாடுகளது வளர்ச்சி அறிவும் தெரிந்திருந்தால்தான், எங்கெங்கே போக வேண்டும், என்னென்ன தெரிந்து கொள்ள வேண்டும். யார் யாரிடம் அவை பற்றி விசாரித்து உணர வேண்டும் என்ற பட்டியலை, திட்டத்தைப் போட்டுக் கொள்ளும் முன் அறிவும் பெற்றிருந்தால்தான் - அந்த உலகச் சுற்றுப் பயணம் வெற்றிகரமாக அமையும்.

அந்தந்த நாடுகளின் மொழி அறிவு இல்லாமல் போனால் கூடப் பரவாயில்லை. உலக மொழியாக விளங்கும் இங்லிஷ் மொழி அறிவு அவசியம் இருந்தாக வேண்டும். திரு. நாயுடு மேற்கண்ட அனைத்திலும் போதிய புலமை பெற்றவர் ஆவார். அதனால், அவர் இரண்டாம் உலகச் சுற்றுப் பயணத்துக்கான முன்னேற்பாடுகளையும், திட்டங்களையும் வகுத்துக் கொண்டார்.

ஏற்கனவே, அவர் முதல் முறையாக உலகச் சுற்றுப் பயணம் செய்த அனுபவம் உள்ளவர். அதனால் அவருக்கு வழிகாட்டிகள் எவரும் தேவையில்லை. அதற்குமேலும் அவர் நிருவாகத் திறமையில் புகழ் பெற்றவர் எந்தச் செயலைச் செய்தாலும், செய்வதற்கு முன்பே ஒரு முறைக்கு இருமுறை சிந்தித்துச் செயல்படும் திறமையாளர் எதையும் ஆழமாக யோசிப்பவர்; நுனிப் புல் மேயும் மேட புத்தியற்றவர். பார்த்தவுடன் எதையும் நினைவில் நிறுத்திக் கொள்ளும் பழக்கம் உடையவர்: இந்த அனுபவங்களை எல்லாம் அவர் இயற்கையாகவே பெற்றவர். அதனால்தான், தனது சொந்தத் தொழிலில் அவரால் நிலையாக, வெற்றிகரமாக முன்னேற முடிந்தது அல்லவா?

எனவே, தனது இரண்டாவது உலகச் சுற்றுப் பயணத்தின் முடிவில், ஏதாவது சில சாதனைகளைச் சாதித்தாக வேண்டும் என்ற விட முயற்சியால், இரண்டாவது பயணத்திற்கேற்றத் திட்டங்களை வகுத்துக் கொண்டு, 1935-ஆம் ஆண்டில் நாயுடு புறப்பட்டார்.

முதன் முதலாக ஜி.டி. நாயுடு அவர்கள் இங்கிலாந்து நாட்டுக்குச் சென்றார். அவர் புகைப்படம் பிடிப்பதில் வல்லவர் ஆனதால், இரண்டு புகைப்படக் கருவிகளையும் உடன் எடுத்துச் சென்றார்.

எங்கெங்கே, என்னென்ன அதிசயக் காட்சிகளைக் காண்கின்றாரோ, அவற்றை அப்படியப்படியே படம் எடுக்கும் வல்லவர் அவர். அதற்கேற்ப இங்கிலாந்து நாட்டின் எழில் மிக்கக் காட்சிகளைப் படம் எடுத்தார்.

இங்கிலாந்து நாட்டில், எந்தெந்த நகரங்களில் புகழ்பெற்ற தொழிற்சாலைகள் உண்டோ, அங்கங்கே சென்று, அனுமதிப் பெற்று, படங்களை எடுப்பதோடு நின்றவரல்லர் நாயுடு. அந்தந்த தொழிற்சாலைகளில் நடைபெறும் தொழில் விவரங்களையும் கேட்டறிந்து, பயிற்சியும் பெற்றார்.

தொழிற்சாலைகளை
இயந்திரங்களோடு படம் எடுத்தார்

தொழிற் சாலைகளில் உள்ள மிக முக்கியமான இயந்திரங்களைப் பல வகையானத் தோற்றங்களோடு படம் எடுத்தார். இப்படி நாயுடு படம் எடுக்கும் திறமைகளை இங்கிலாந்து நாட்டுத் தொழில் உரிமையாளர்கள் அனுமதித்தார்களே தவிர, எவரும் தடுக்கவும் இல்லை; மாறாக, அதற்கான எல்லா உதவிகளையும் அவர்கள் செய்தே உதவினார்கள்.

ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின்
மரண ஊர்வலத்தைப் படமாக்கினார்!

இலண்டன் நகரம் வந்தார். அங்கே உள்ள வரலாற்றுப் புகழ் மிக்கச் சின்னங்களைப் படமெடுத்தார். இந்த நேரத்தில், இங்கிலாந்து நாட்டின் மன்னராக இருந்த ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் காலம் ஆனார். அவருடைய மரண ஊர்வலம் லண்டனில் நடைபெற்றது.

மன்னர் மரண ஊர்வலம் என்றால், அதுவும் மா மன்னர் மரண ஊர்வலம் என்றால், அதுவும் சூரியன் மறையாத ஒரு பேரரசின் மாமன்னர் பெரும் பயணம் என்றால் எப்படி இருந்திருக்கும் அந்த ஊர்வலம்? சொல்லவும் வேண்டுமா? மக்கட் கடல் அங்கே பொங்கித் திரண்டதை?

தமிழ் நாட்டில் அதையும் புறமுதுகிடச் செய்யும் ஒரு மரண ஊர்வலம் நடந்தது - 1969-ஆம் ஆண்டில்! அதன் ஈடில்லா மரணக் காட்சிகள் எப்படி இருந்தது தெரியுமா?

1967-ஆம் ஆண்டில், 20 ஆண்டு காலமாக நடந்த தேசீய காங்கிரஸ் ஆட்சி வீழ்ச்சி அடைந்தது. அறிஞர் அண்ணா அவர்களது ஆட்சி அரியணை ஏறியது. ஏறக்குறைய ஓரிரு ஆண்டுக் காலம்தான் தமிழ்நாட்டின் முதல் அமைச்சராக அண்ணா ஆட்சி செய்தார். 1989-ஆம் ஆண்டு பிப்ரவரி 3-ஆம் நாள் அவர் புற்றுநோய் புழுக்களுக்கு இரையானார்!

அந்த மரணத்தை நேரில் கானத் தமிழ்நாட்டின் மக்களில் ஏறக்குறைய ஐம்பது இலட்சம் மக்கள் திரண்டு வந்து சென்னை நகரில் கூடி விட்டார்கள்.

அறிஞர் அண்ணா
மரண ஊர்வலம்!

கன்னியாகுமரி முதல் சென்னை நகர் வரை, வட வேங்கடம் முதல் தூத்துக்குடி கடல் முனை வரை - இருந்த தமிழர்கள் வீடுகளில், வீதிகளில், சந்துமுனை சந்திப்புகளில், மூடப்பட்ட கடைகளின் வாயிற்படிகளில், ஒவ்வொரு வீடுகளில், அறிஞர் அண்ணா திருவுருவப் படங்களை வைத்து, மலர் மாலைகள் சூட்டி, தேங்காய் உடைத்து, கற்பூர ஜோதியைக் காட்டி, அவர் திரு உருவம் முன்பு கும்பல் கும்பலாக மக்கள் கூடிக் கண்ணீர் சிந்தி, இரவும் - பகலும் உண்ணாமல், உறங்காமல் விழித்திருந்து, வீதிகள் தோறும் அண்ணா மரணத்தைச் சுண்ணாம்பு கட்டிகளால் எழுதி எழுதிக் கண்ணி சிந்தியபடியே இருந்தார்கள் மக்கள்.

ஒவ்வொரு பேருந்துகளும், லாரிகளும், கார்களும், இரயில் வண்டிகளும் அண்ணா மரணத்தைக் காண வந்த மக்கள் கூட்டங்களை ஏற்றிக் கொண்டு நிரம்பி வழிந்தபடியே சென்னை வந்து சேர்ந்தனர். நேரம் ஆக ஆக லட்சம் லட்சமாக மக்கள் திரண்டனர்.

சென்னை நகர் கடைகள் அடைக்கப்பட்டதால், பல லட்சக் கணக்காகக் கூடிய மக்கள் தண்ணி அருந்தக் கூட கடைகள் இல்லை. தாகத்தால் தவித்த பெண்கள், குழந்தைகள் இலட்சக் கணக்கானோர் அங்கே பசியால் பரிதவித்தார்கள். இந்த மக்கட் கடல், பொங்கிய ஊழி போல, தெருத் தெருவாகப் பெருக்கெடுத்த வெள்ளம்போல நகர்வதைக் கண்ட தமிழ்நாடு அரசு, வானொலியிலே தேநீர் கடைக்காரர்களே, உணவு விடுதி வைத்திருப்போர்களே கடைகளைத் திறந்து, வந்துள்ள மக்களுக்கு வேண்டிய உணவு வகைகளை வழங்குங்கள் என்று பத்து நிமிடத்துக்கு ஒரு முறையாக நாவலர் நெடுஞ்செழியன் என்ற அமைச்சர் கேட்டுக் கொண்டும் கூட, யாரும் கடை திறப்புகளைச் செய்யவில்லை. காரணம், அவர்களும் மனிதநேயர்கள்தானே! எப்படிச் செய்வார்கள் வியாபாரம்? செய்யத் தான் முடியுமா மக்கட் கடலுக்குள்?

அண்ணா சவ உடல் இராஜாஜி மண்டபத்தில் வைக்கப் பட்டது. இரவெல்லாம் மக்கள் வரிசை வரிசையாக, சாரி சாரியாக நின்று அவரது மரணக் கோலத்தைக் கண்டு, கண்ணிராபிஷேகம் செய்து கொண்டே நகர்ந்தார்கள் - ஆமைகள் கூட்டம் போல!

நேரம் ஆக ஆக மக்கட் கூட்டம் பெருகியது! இவ்வளவு மக்களும் உண்ண, உறங்க, தண்ணி குடிக்க வழியின்றித் தவித்துச் சாலைகள் நடுவே எல்லாம் குப்பைக் கூலங்கள் போல படுத்துக் கிடந்தார்கள்!

அண்ணா முகத்தையாவது பார்க்கலாமே என்ற பாமர மக்களது பாசம், சென்னை வரும் இரயில் வண்டியின் கூரை மேலே ஏறி அமர்ந்தார்கள். இரயில் கூரை மேலே அமர்ந்து வந்து கொண்டிருந்த மக்கள் தஞ்சை - விழுப்புரம் இடையே அருகே இருந்த கெடிலம் ஆறு இரும்புப் பாலக் கூரையால் தாக்கப்பட்டு, ஏறக்குறைய நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ரத்தம் சொட்டச் சொட்ட, துடிதோடு துடித்துச் செத்தக் காட்சி மக்கள் நெஞ்சங்களை இரத்தச் சாறுகளாகப் பிழிந்தன.

அண்ணா சவ ஊர்வலத்துக்கு மத்திய அரசு சார்பாக உள்துறை அமைச்சராக அப்போது இருந்த ஒய்.பி. சவாண் வந்தார். மரண ஊர்வலத்தில் திரண்டிருந்த மக்கள் கூட்டத்தின் நெருக்கடி களைக் கண்ட சவாண், பிரமித்துப் போய், "What a huge Crowed than the Mahatma Gandhi" 'மகாத்மா காந்தியடிகளின் மரண ஊர்வலத்தை விட - என்ன இவ்வளவு பெரிய மக்கட் கூட்டமாக இருக்கிறதே என்று வியந்து போனார்!

அறிஞர் அண்ணா மரண ஊர்வலக் காட்சிகளை எல்லாப் பத்திரிக்கைகளும் பக்கம் பக்கமாகப் படங்களாகப் பிடித்து வெளியிட்டிருந்தன. அண்டை மாநில அரசுகள் எல்லாம் அண்ணா மரணத்துக்கு அனுதாபம் தெரிவித்து விடுமுறைகள் விடுத்தன. இத்தனைக்கும் அண்ணா ஒர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்து ஆளும் கட்சியாகி, முதல்வரானவர். அவருக்குத் தமிழ்நாடே திணறித் தவித்துத் தேம்பி நின்ற மக்கள் கூட்டம் - ஊழிப் பெருக்காக மாறிக் கடலாகக் காட்சி அளித்தது என்றால், இங்கிலாந்து நாட்டில் The never sun set in British Empire என்று கூறுமளவுக்கு, மாமன்னராக இருந்த, சூரியன் மறையாத பிரிட்டிஷ் சாம்ராச்சிய சக்கரவர்த்தியின் மரண ஊர்வலத்துக்கு - எவ்வளவு பெரிய மக்கட் திரள் கூடியிருக்கும் என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டிய ஒரு வரலாற்றுச் சம்பவம் அல்லவா?

ஐந்தாம் ஜார்ஜ் சக்ரவர்த்தியின் அந்த மரண இறுதி ஊர்வலத்தில், இலட்சக் கணக்காகத் திரண்டிருந்த மக்கள் நெருக்கடியைக் கண்டு மருளாத ஜி.டி. நாயுடு அவர்கள், கூட்ட நெருக்கடிகளைச் சமாளித்துக் கொண்டு, அந்த ஊர்வலக் காட்சிகளைத் தொடர்ச்சியாக ஒரு திரைப்படம் போல வீதி வீதியாகச் சென்று படமெடுத்தார் என்றால் - இந்த பணி என்ன சாமான்யமான பணியா?

ஒலிம்பிக் போட்டிகளையும்
10 நாளாகப் படம் எடுத்தார்!

ஐந்தாம் ஜார்ஜ் மன்னருடைய மரண ஊர்வலங்களைத் தொடர்ப் படங்களாக்கியதோடு நில்லாமல், 1935-ஆம் ஆண்டில் இலண்டன் மாநகரிலே நடைபெற்ற பத்து நாட்களின் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளையும் ஜி.டி. நாயுடு படமாக எடுத்தார்.

இத்துடன் நின்றாரா நாயுடு? இங்கிலாந்து நாட்டு மன்னராக அப்போது இருந்த எட்டாம் எட்வர்டு, ஒரு புகழ் பெற்ற பொருட்காட்சி சாலையைக் காண வந்திருந்தார். அப்போது ஜி.டி. நாயுடு பொருட்காட்சி சாலைக்குள் மன்னர் நுழையும் வாயிலில் புகைப் படக் கருவியோடு காத்துக் கொண்டிருந்தார்.

எட்வர்டு மன்னர் ஏறி வந்த கார்; அந்தப் பொருட்காட்சி சாலை வாயில் முன்பு வந்து நின்றது. காரின் கதவுகள் திறக்கப்பட்டன. மன்னர் காரைவிட்டு வெளியே காலடி எடுத்து வைத்த நேரத்தில், ஜி.டி. நாயுடு சாலையின் குறுக்கே ஒடிச் சென்று எட்டாம் எட்வர்டு மன்னரை நேருக்கு நேராக நின்றுப் படமெடுத்துக் கொண்டிருந்தார்.

அப்போது இலண்டன் காவல் துறையின் பெரிய அதிகாரி ஒருவர் ஓடி வந்து, நாயுடு படமெடுக்கும் போது அவரை எடுக்க விடாமல் தடுத்து ஒதுக்கித் தள்ளி விட்டான்.

உடனே எட்டாம் எட்வர்டு மன்னர் அந்தக் காவல் துறை அதிகாரியை நோக்கி; "புகைப்படம் ஒன்றும் செய்யாதே. அவர் விருப்பம்போல் படம் எடுத்துக் கொள்ளட்டும்" என்று கூறியதும், காவல்துறை அதிகாரி மன்னரை ஜி.டி. நாயுடு படம் எடுக்கும் வரை ஒதுங்கி நின்றார். மன்னரே, தான் எடுக்கும் புகைப்படம் சம்பவத்துக்கு அனுமதியளித்த விட்டபோது, நாயுடுவின் மகிழ்ச்சி பல மடங்காகப் பெருகியது.

எட்டாம் எட்வர்டு மன்னரை
நேர் நின்று படம் எடுத்தார்!

மன்னரின் அந்த அனுமதியைப் பயன்படுத்திக் கொண்ட ஜி.டி. நாயுடு, மன்னர் பின்னாலேயே காட்சிச் சாலைக்குள் புகுந்தார். ஏறக்குறைய ஒரு மணி நேரம் வேடிக்கை பார்த்த மக்களையும், மன்னரது நிகழ்ச்சிகளையும் தொடர்ந்து 400 அடிகள் கொண்ட நீளமான படங்களாக எடுத்துக் கொண்டார்.

படம் எடுத்து முடிந்த பின்பு அவரைத் தடுத்த காவல் துறை அதிகாரி அங்கே நின்று திரு. ஜி.டி. நாயுடுவை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பதை கண்ட நாயுடு, அந்த அதிகாரிக்கு வணக்கம் கூறும் பாவனையில் சலியூட் அடித்துவிட்டுத் தனது இருப்பிடத்திற்கு வந்து சேர்ந்தார். அங்கே திரண்டு நின்றிருந்த மக்கள் நாயுடுவை வேடிக்கைப் பார்த்துக் கொண்டே நின்றார்கள்.

ஏன், இதை இங்கே குறிப்பிடுகிறோம் என்றால், ஒரு காரியத்தைச் செய்திட ஜி.டி. நாயுடு முனைந்து விட்டார் என்றால், அதை முழுவதுமாக முடிக்காமல் நின்று விட மாட்டார் என்ற சுபாவம் கொண்டவர் ஆவார். என்பதற்காகவே குறிப்பிட்டோம். அந்த மனோதிடம் அவருக்குப் பிறவிக் குணமாக அமைந்திட்ட ஒன்று. இல்லா விட்டால், புதிய ஒரு நாட்டுக்குச் சென்று, முன்பின் முக அனுபவம் இல்லாத ஒருவரால், ஐந்தாம் ஜார்ஜ் மன்னரது மரண ஊர்வலத்தையும், பத்து நாட்கள் இலண்டனில் நடந்த ஒலிம்பிக் விளையாட்டுப் பந்தயப் போட்டிகளையும், எட்டாம் எட்வர்டு மன்னரின் சம்பவங்களையும் சாதாரண மனம் கொண்ட ஒருவரால் நீண்ட தொடர் புகைப் படங்களாக எடுக்க முடியுமா? எண்ணிப் பாருங்கள்!

இலண்டனில் நாயுடு, தங்கியிருந்தபோது, இலண்டன் அஞ்சல் துறை எவ்வாறு இயங்குகிறது என்பதை அறிய எண்ணங் கொண்டார். அதற்கு அவர் செய்த தந்திரம் என்ன தெரியுமா?

இலண்டன் அஞ்சல்துறை :
நிர்வாகச் சோதனை!

ஜி.டி. நாயுடு தனக்குத் தானே ஓர் அஞ்சலை எழுதிக் கொண்டார். தனது இருப்பிடத்தின் முழு முகவரியை எழுதாமல், "ஜி.டி. நாயுடு, இலண்டன், W.C.I" என்று மட்டுமே அஞ்சல் உரையின் மேல் எழுதி, இலண்டனில் உள்ள பர்மிங்ஹாம் அஞ்சல் நிலையத்தில் அதைப் போட்டு விட்டார். இதுதான் அவர் செய்த தந்திரம்.

அஞ்சல் உரையின் மேல், வீட்டு எண், வீதி பெயர், எந்த அஞ்சல் வட்டத்தைச் சேர்ந்தது அந்த இடம்; என்ற விவரங்களைத் திரு. ஜி.டி. நாயுடு தெளிவாக எழுதாமலேயே அஞ்சலகத்தில் போட்டு விட்டார்.

அவ்வாறு ஏன் செய்தார்? அவையெல்லாம் இல்லாமல் அந்த அஞ்சலைப் போட்டால், அது தனது முகவரிக்கு வந்து சேருகின்றதா? இல்லையா? என்பதைச் சோதித்துப் பார்க்கவே ஜி.டி. நாயுடு அவ்வாறு செய்தார்.

அவர் போட்ட அந்தக் கடிதம், அடுத்த நாளே அவருடை முகவரிக்கு வந்து சேர்ந்து விட்டது. இலண்டன் நகர அஞ்சல் துறையின் திறமையையும், அதன் வேலைப் பொறுப்புணர்ச்சியையும் கண்டு ஜி.டி. நாயுடு மிக மகிழ்ந்தார்.

காணாமல் போன:
கேமிரா வந்தது எப்படி?

ஒரு முறை ஜி.டி. நாயுடு அவர்கள் தனது புகைப் படக் கருவியை எங்கோ ஓரிடத்தில் கை தவறி விட்டு விட்டார். அந்தக் கருவி மீது ஜி.டி. நாயுடு என்ற தனது பெயரை மட்டும்தான் எழுதியிருந்தார். இதில் என்ன அதிசயம் என்றால், அந்தப் புகைப் படக் கருவியும் மறுநாளே அவரிடம் வந்து சேர்ந்து விட்டது. எப்படி அது வந்து சேர்ந்தது?

திரு. நாயுடுவினுடைய புகைப் படக் கருவி யாரோ ஒரு வெள்ளையர் கையில் கிடைத்தது. அதை அந்த ஆங்கிலேயர் கபளிகரம் செய்து கொள்ளாமல், அப்படியே எடுத்துச் சென்று, இழந்த பொருள்கள் அலுவலகத்தில், Lost Property office, அதிகாரியிடம் சேர்த்து விட்டார். அந்த அதிகாரி அக் கருவியை நாயுடுவின் முகவரிக்கு அனுப்பி வைத்தார்.

இழந்த பொருட்கள் அலுவலகம் அதிகாரி இலண்டன் அஞ்சல் துறையுடன் தொடர்பு கொண்டு, முகவரியைக் கண்டுபிடித்து, புகைப் படக் கருவியைக் கொண்டு வந்து நாயுடுவிடம் கொடுத் திருக்கிறார் அந்த அதிகாரி. எவ்வளவு பொறுப்புணர்ச்சி அந்தத் துறைக்கு இருந் திருக்கிறது என்பதைக் கண்டு திரு. நாயுடுவே வியந்து போனார்!

இன்னொரு நாள், திரு. ஜி.டி. நாயுடு அவர்கள், இலண்டனிலிருந்து இந்தியாவிலுள்ள அவருடைய நண்பரோடு தொலைபேசி மூலம் மூன்று நிமிடங்கள் பேசினார். ஆனால், தொலைபேசி அலுவலகம் அவர் பேசிய நேரம் ஐந்து நிமிடங்கள் என்று கணக் கிட்டுப் பணத்தை வசூலித்தது. இந்தத் தவறுதலை திரு. ஜி.டி. நாயுடு அந்தத் தொலைபேசித் துறை அதிகாரிக்குத் தெரிவித்தார்!

அதிகம் பெற்ற டெலிபோன்
பணத்தைத் திரும்பப் பெற்றார்!

அந்தத் தொலை பேசி அதிகாரி, தனது அலுவலகத்தின் தவறை உணர்ந்து, உடனே அந்த இரண்டு நிமிடத்திற்குரிய கட்டணமான இரண்டு பவுனையும் அங்கிருந்து நாயுடு முகவரிக்கு திருப்பி அனுப்பி வைத்தார்.

ஆங்கிலேயர்களது நாணய நடத்தையைக் கண்டு மகிழ்ந்த ஜி.டி. நாயுடு, அந்த இரண்டு பவுனையும், தொலைபேசி தொழிலாளர் நிவாரண நிதிக்கே அன்பளிப்பாக வழங்கி, அந்த அதிகாரிக்கே அதைத் திருப்பி அனுப்பி விட்டார்.

இரஷ்சிய நாட்டில் :
ஜி.டி. நாயுடு!

இலண்டனில் இருந்து நாயுடு சோவியத் ருஷ்ய நாட்டுக்குச் சென்றார். இங்கிலாந்து நாட்டைப் போல இரஷ்யா ஒரு பரபரப்பான - சுறு சுறுப்பான நாடாக இருக்கவில்லை. ஏதோ ஓர் அமைதி அங்கு நிலவியதால், ஜி.டி. நாயுடுவைப் போன்ற ஒரு சுறு சுறுப்பான மனிதருக்கு அந்த நாடு பிடிக்கவில்லை.

பிரிட்டீஷ்காரர்களைப் போல, இரஷ்யர்கள் மனித நேயத்தோடு பழகும் சுபாவம் உடையவர்கள் அல்லர் என்பதை அவர் உணர்ந்தார். மாஸ்கோ நகரில் ஜி.டி. நாயுடு நான்கு நாட்கள் தங்கியிருந்தார். இரஷ்யாவிலிருக்கும் வரலாற்றுப் புகழ்பெற்ற இடங்களைப் பார்த்தார். அங்கிருந்து ஜெர்மன் நாட்டிலுள்ள பெர்லின் நகர் வந்தடைந்தார்.

இட்லரோடு பேட்டி கண்டு
படம் எடுத்துக் கொண்டார்!

பெர்லின் நகருக்கு வந்த ஜி.டி. நாயுடு ஜெர்மன் சர்வாதிகாரியான இட்லரைச் சந்திக்க விரும்பினார். அதற்கான முயற்சிகளிலே ஈடுபட்டும் சரியான சூழ்நிலை அமையவில்லை. பிறகு வேறு சிலர் மூலமாக நாயுடு முயற்சித்தபோது, ஹிட்லர் தனக்கு நேரமில்லை என்று கூறி விட்டார். ஆனாலும், ஹிட்லரைப் பார்க்காமல் பெர்லினை விட்டுப் போகக் கூடாது என்ற வைராக்கியத்தோடு, 'டாம்' என்ற புகழ் பெற்ற, உணவு மாளிகையில் திரு. நாயுடு தங்கியிருந்தார். அந்த இடத்திற்கு அரசியல்வாதிகள் அடிக்கடி வந்து தங்குவது உண்டு.

ஒரு நாள் டாம் என்ற அந்த உணவு மாளிகைக்கு, எதிர்பாராவிதமாக, நாசிக் கட்சித் தலைவரான அடால்ப் ஹிட்லரும், கோயரிங், லே.ஹெஸ். கோயபல்ஸ் ஆகியோரும் வந்தார்கள்.

அதைக் கேள்விப்பட்ட திரு. நாயுடு, தனது அறையை விட்டு அவசரமாகப் புறப்பட்டு வரவேற்பு அறைக்குச் சென்று, இட்லர் தங்கியிருக்கும் அறை எண் எது என்று விசாரித்து அறிந்து, அங்கே சென்று, தன்னைப் பற்றிய விவரங்களை நேரிடையாகவே விளக்கிக் கூறி, பேட்டி ஒன்று கொடுக்கும்படி ஹிட்லரிடம் கேட்டார்.

ஹிட்லர், நாயுடு அவர்களின் உள்ளத்தைப் புரிந்துகொண்டு அன்போடு உரையாடி - பேட்டியும் கொடுத்தார். திரு. நாயுடு பேசுவதை 'லே' என்பவர் ஹிட்லருக்கு மொழி பெயர்த்துக் கூறினார். இறுதியாக ஹிட்லரோடும், அவருடைய எல்லா நண்பர்களோடும் ஜி.டி. நாயுடு புகைப் படம் எடுத்துக் கொண்டு, ஹிட்லருடைய தனி உருவப் படத்தில் நாயுடு அவருடைய கையெழுத்தையும் பெற்றார்!

'டசல் டார்ஃப்' என்ற இடத்தில் நாயுடு அவர்கள் தங்கியிருந்தார். அப்போது செர்மன் படைப் பிரிவு ஒன்று அவ் வழியே சென்று கொண்டிருந்தது. திரு. நாயுடு அந்த நாசிப் படைகளைப் புகைப்படம் எடுத்தார். பெர்லின் நகரில் தங்கியிருந்தபோது செர்மன் அரசியலையும் தெரிந்து கொண்டார்.

டால் டாப் என்ற இடத்திலே இருந்த ஜி.டி. நாயுடு அவர்கள் மீண்டும் பெர்லின் நகரம் வந்தார். அங்கிருந்து, இயற்கை அழகு தவழும் சுவிட்சர்லாந்து நாட்டுக்குச் சென்றார்.

கவிஸ் நாட்டில் :
நேரு - கமலா சந்திப்பு!

சுவிட்சர்லாந்து கடிகாரத் தொழிலுக்குப் புகழ் பெற்ற நகரம். அங்கே தங்கியிருந்தபோது, கடிகாரம் செய்வதற்கான துணுக்கங் களையும் நாயுடு தெளிவாகத் தெரிந்து கொண்டார். அங்கிருந்து கோடை கால சொகுசு உறைவிடமான பேடன்வீலர் என்ற நகருக்கு வந்து தங்கினார்.

பண்டித ஜவகர்லால் நேரு அவர்கள், தனது மனைவி கமலாவின் உடல் நலம் கவலைக்கிடமாக இருந்ததால், சிகிச்சை பெற்றிட, அப்போது பேடன் வீலர் நகருக்கு வந்திருந்தார்.

இதை அறிந்த ஜி.டி. நாயுடு அவர்கள், நேரு இருப்பிடத்தை அறிந்து கொண்டு அவரைச் சந்தித்தார். கமலா நேரு விடமும் நாயுடு உடல் நலம் விசாரித்தார். இருவரும் சிறிது நேரம் உரையாடி மகிழ்ந்தார்கள்.