தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு/நம்பிக்கை நாணயம் நேர்மை;

விக்கிமூலம் இல் இருந்து
தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக
'3. நம்பிக்கை, நாணயம், நேர்மை;
‘நா’, நலம்; அறம் பிறழா-நெஞ்சர்!

ஏறக்குறைய, தொன்னூறு ஆண்டுகட்கு முன்பு, மோட்டார் போல டபடபா, பட்பட் என்ற ஒசைகளோடு ஓடும் மோட்டார் சைக்கிளை நகரங்களில் பார்க்கின்ற மக்களுக்கே வியப்பாக விளங்குவது உண்டு என்றால், கிராமத்து மக்களுக்கு எப்படி இருந்திருக்கும் என்று எண்ணிப் பார்ப்பவர்களுக்குத்தான், அந்த மோட்டார் சைக்கிளின் அருமையையும், அதைக் கண்டு பிடித்தவரின் பெருமையையும் நாம் உணர முடியும்.

இந்த மோட்டார் சைக்கிளின் ஒலியை ஒருநாள் துரைசாமி தனது ஊர் சாலையில் கேட்டு விட்டுப் பிரமித்து நின்று விட்டார். அந்த மோட்டார் சைக்கிளில் வந்தவர் ஓர் இங்கிலாந்துக்காரர்: பெயர் லங்காஷயர்!

அந்த இங்லிஷ்காரர். அப்போதைய ஆங்கிலேயர் ஆட்சியிலே பணியாற்றியவர். நிலங்களை அளந்து வகைப்படுத்தும் துறையில் பணிபுரிந்த அதிகாரி அவர். கோவை மாவட்டத்தில், கலங்கல் கிராமத்தைச் சுற்றியுள்ள சில ஊர்களில் உள்ள இடங்களை அந்த மோட்டார் சைக்கிள் மூலமாகச் சென்று சுற்றிப் பார்த்து விட்டு வரும் வழியில் கலங்கல் கிராமம் மார்க்கமாக வந்தார்.

அந்தச் சமயத்தில்தான் துரைசாமி அந்த மோட்டார் சைக்கிள் எழுப்பும் ஓசையையும் பட படப்பையும் முதன் முதலாக, நேரில் கண்டார்.

முதன் முதல் பார்த்த :
மோட்டார் சைக்கிள்!

துரைசாமி நடந்து வந்த பாதையில், அந்த மோட்டார் சைக்கிள் பழுதடைந்து விட்டது. லங்காஷயர் கீழே இறங்கி இஞ்சினில் என்ன பழுது என்று அவர் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த வெள்ளையருக்குக் கொஞ்சம் மண் எண்ணெயும், கந்தைத் துணியும் தேவைப்பட்டது. மோட்டார் சைக்கிள் பழுதடைந்த இடம் கலங்கல் ஊராக இருந்தால், வேறு எவரும் அவற்றைக் கொடுக்க முன் வருவார்கள். ஆனால், இந்த இடம், ஊரைத் தாண்டியுள்ள தோட்டப் பகுதிகள்! எனவே, துரைசாமியிடம் அவற்றைக் கேட்டார் லங்காஷயர்!

துரைசாமி தனது தோட்ட வீட்டுக்குச் சென்று, மண் எண்ணெயையும், கந்தைத் துணியையும் எடுத்துக் கொண்டு வந்து அந்த வெள்ளையரிடம் கொடுத்தார்: சைக்கிள் இஞ்சினில் அந்த வெள்ளைக்காரர் என்ன பழுது பார்க்கிறார், எப்படிப் பார்க்கிறார் என்பதை உற்று நோக்கியவாறே, கூர்ந்து கவனித்தார். சிறிது நேரத்தில் லங்காஷயர் தனது மோட்டார் சைக்கிளைச் சரி செய்து விட்டார். அந்த வண்டியிலே அவர் ஏறி அமர்ந்து கொண்டு துரைசாமிக்கு நன்றியைக் கூறிவிட்டுக் கோவை நகர் சென்றார்.

கூர்ந்துக் கவனித்த, மோட்டார் சைக்கிளின் பழுது பார்த்த சம்பவம், துரைசாமி மனத்திலே ஆழமாகப் பதிந்து விட்டதால், இரவும்-பகலும் தானும் மெக்கானிக்காக ஆக வேண்டும் என்ற எண்ணத்தை அவருக்கு உந்தச் செய்தது. இதே ஊக்கம்தான், பிற்காலத்தில் துரைசாமி ஒரு பொறியியல் வல்லுநராகும் வாய்ப்பையும் வழங்கியது எனலாம்.

கலங்கல் கிராமத்தையும், தாய் மாமன் கிராமமான இலட்சுமி நாயக்கன் பாளையத்தையும், தனது தோட்ட வீட்டையும்-வயற்பரப்புகளையும் தவிர, வேறு எங்கும் சென்றதில்லை; பார்த்ததில்லை துரைசாமி.

எப்போது பார்த்தாலும் தோட்டமே கதியெனக் கிடந்து உழன்று கொண்டிருந்த துரைசாமிக்கு, லங்காஷயர் என்ற அரசு அதிகாரி மேட்டார் சைக்கிளில் வந்து போனதைக் கண்டதிலிருந்தும், அவரிடம் உரையாடிய மகிழ்ச்சியிலிருந்தும் ஒரு புதுமையான மனக் கிளர்ச்சியைத் தூண்டிவிட்டு விட்டது.

பதினாறு மைல் நடந்தே :
கோவை சென்றார்!

துரைசாமி தான் பிறந்த நாளிலிருந்து அன்று வரை உந்து வண்டியையோ, பேருந்துவையோ, புகை கக்கும் ரயில் வண்டியையோ பார்த்ததில்லை, நகரம் என்றால், அது எப்படி எல்லாம் இருக்கும் என்று அவர் கனவு கூட கண்டதில்லை. அத்தகைய மனிதரான துரைசாமி யாருக்கும் தெரியாமல், கோவை நகருக்குப் புறப்பட்டு ஏறக்குறைய பதினாறு கல் தூரம் கால் நடையாகவே நடந்து சென்றார்.

கோவை நகர் சென்றதும் - அவர். பார்த்த முதல் அதிசயம் புகைவண்டி ரயில்தான். அதன் தோற்றம், ஓடும் விநோதம், சக்கரங்கள் அமைப்பு, விரைவான வேகம், அதன் ஊது குழலோசை, நிலக்கரி நெருப்பால் எரியும் சக்தி, அது கக்கும் புகை, ஓடும்போது எழும் ஒலி ஆகியவற்றை எல்லாம் அன்று நேரிடையாகவே பார்த்து திகைப்பும். ஒரு வித மன மயக்கும் கொண்டு அப்படியே அசந்து துரைசாமி மலை போல நின்று விட்டார்.

கோவை நகரிலே உள்ள அழகிய கட்டடங்கள் அமைப்புகளும் வீதிகளில் எரிந்து கொண்டிருக்கும் மின்சார விளக்குகளும், துரைசாமிக்கு ஒரு வித மனக் கிளர்ச்சியை ஊட்டின. கோவை நகர் மக்களின் கில் துணி ஆலை வேலைகளது சுறு சுறுப்புகள், நகரப் போக்கு வரத்துகளின் எழுச்சி வேகங்கள், கார்கள், பேருந்துகள், சைக்கிள்கள், மோட்டார் சைக்கிள்கள், குதிரை வண்டிகள் ஆகியனவற்றின் போக்கு வரத்துக்களின் ஓசைகள் துரைசாமி அறிவுக்கு எழுச்சியையும், புத்துணர்ச்சியையும் அவர் நெஞ்சில் புகுத்தின. இந்தக் காட்சிகளைக் கண்ட துரைசாமி, ஏதேதோ எண்ணியபடியே சாலைகளில் நடந்து கொண்டிருந்தார்.

பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்பதற்கேற்ப, நடை தளர்ந்தார். எதையெதையோ சிந்தித்துக் கொண்டு வந்த எண்ணங்கள் எல்லாம் பறந்தோடி விட்டன. வயிற்றைப் பசி நெருப்பு எரிக்க ஆரம்பித்தது. கையிலோ காலனா இல்லை-பாவம் அருகே உள்ள ஒர் உணவு விடுதிக்குள் புகுந்து ஏதாவது ஒரு வேலை கொடுங்கள் என்று, வாலிபனான அவன் தனது கூச்சத்தையும் விட்டு விட்டுக் கேட்டான்.

உணவு விடுதியின் :
வேலையில் சேர்ந்தார்

மாதம் மூன்று ரூபாய் சம்பளம்! என்று பேசிக் கொண்டு அந்த ஒட்டலில் வேலைக்குச் சேர்ந்ததால் துரைசாமி தனது பசியைப் போக்கிக் கொண்டார்! நல்ல உணவு கிடைத்ததால், ஏற்றுக் கொண்ட பணியை தனது முதாலளி மனம் கோணாமல் செய்து வந்தார், வேளா வேளைக்குரிய நல்ல சாப்பாடும், இடையிடையே போதிய ஒய்வும் கிடைத்து அதனால், கோவை நகரைச் சுற்றிவரும் வாய்ப்பும் அவருக்கு உண்டானது.

என்ன வியாபாரம் செய்தால் பணம் சம்பாதிக்கலாம் என்ற எண்ணம் துரைசாமிக்கு உதயமாயிற்று. காரணம், ஏற்கனவே பருத்தி வியாபாரத்தில் தந்தையுடன் ஈடுபட்ட அனுபவத்தால், வியாபாரம் செய்யலாமே என்ற எண்ணம் அவருக்கு வந்தது.

இடையிடையே அவருக்குத் தோன்றிய சில சில்லறை வியாபாரங்களைச் செய்தார். இவ்வாறு ஆண்டுகள் மூன்று உருண்டோடின. தனது செலவுகள் போக 400 ரூபாயைத் துரைசாமி சேர்த்து வைத்திருந்தார்.

இந்த நான்கு நூறு ரூபாயோடு, கலங்கல் கிராமத்தில் தான் சந்தித்த வருவாய்த் துறை அதிகாரியான லங்காஷயரைக் கோவையில் தேடிக் கண்டு பிடித்துவிட்டார். அப்போது, அந்த வெள்ளைக் காரர், செட்டில் மெண்ட் அதிகாரியாகப் பணியாற்றிக் கொண்டிருந்தார்.

மோட்டார் சைக்கிளை :
விலைக்கு வாங்கினார்!

ஒரு நாள் காலை, லங்காஷயர் வீட்டுக்குச் சென்ற துரைசாமி, அவரிடம் 400 ரூபாய் பணத்தைக் கொடுத்து. அவரிடம் இருந்த மோட்டார் சைக்கிளை விலைக்குக் கொடுக்கும்படி கேட்டார். அந்த வெள்ளையர் துரைசாமியின் ஆசையையும் - ஆர்வத்தையும் கண்டு தனது மோட்டார் சைக்கிளை அவருக்கு விலைக்குக் கொடுத்து விட்டார்.

மோட்டார் சைக்கிளைப் பெற்றுக் கொண்டு வந்த துரைசாமி, தான் தங்கியிருந்த வீட்டின் முன் புறத்தில் உள்ள தனது வாடகை அறையில், அந்த வண்டியைப் பாகம் பாகமாகப் பிரித்தார். மறுபடியும் அவற்றை அந்தந்த இடத்திலேயே கவனமாகப் பூட்டினார். குறும்புகளைச் செய்து கொண்டே பழக்கப்பட்டுப் போன துரைசாமி, இப்போது ஒரு மோட்டார் சைக்கிளைக் கழற்றிப் பழுது பார்த்து, மீண்டும் அதைப் பூட்டி ஒட்டுமளவுக்கு பொறியியல் மெக்கானிக்காக மாறி விட்டார். இதுதானே அறிவின் நுட்பம்?

மெக்கானிக்காக வளர்ந்த துரைசாமி, அந்தத் துறையிலே மனம் கோடாமல் தொடர்ந்து ஈடுபட்டிருந்தால் பெரும் மெக்கானிக் நிறுவனத்தின் உரிமையாளராக ஆகி இருக்கலாம். ஏனென்றால், மெக்கானிசத்தைத்தான் அவர் தெரிந்து கொண்டாரே! பழக்கப்பட்ட தொழிலாகவும் அவருக்கு இருந்த ஒரு தொழில்லலவா அது?

பஞ்சு வாணிகம் :
பணம் நட்டம்!

அதை விட்டு விட்டு, நண்பர்கள் சிலரிடம் சில நூறு ரூபாய்களைக் கடனாகப் பெற்றுக் கொண்டு, ஏற்கனவே தனக்குப் பழக்கப் பட்டத் தொழிலான பஞ்சு வணிகத் தொழிலில் ஈடுபட்டு விட்டார்.

அந்த பஞ்சு வியாபாரத்துக்குப் பணமுதலீடு அதிகம் தேவை. அந்தத் தொகை துரைசாமியிடம் இல்லை. அதனால், சில மாதங்கள்தான் அந்த வியாபாரத்தில் அவரால் தாக்குப் பிடிக்க முடிந்தது. மேற்கொண்டே பணத் தேவையை அவரால் திரட்ட முடியவில்லை; உதவி செய்வாரோ யாருமில்லை. துன்பங்ளையும், பண சச்சரவுகளையும் சமாளிக்க முடியாத துரைசாமி, வியாபாரத்திலே பெருத்த நட்டம் வந்ததால் கையிலே இருந்த பணத்தையும் இழந்து, வாணிகத்தையும் நிறுத்தி விட்டார்.

ஒரு தொழிலில் நட்டம் வந்தால் கூடப் பரவாயில்லை. ஆனால், அனுபவம் தானே பணம்; முதலீடு, அதை மட்டுமே அவர் பெற்றதால், நட்டத்திற்காக வருத்தப் படாமல், தோல்வியே வெற்றிக்குரிய அறிகுறி என்பதை உணர்ந்து கொண்டார் துரைசாமி.

பஞ்சு வியாபாரம் நட்டமானதும், கோவைக்கு அருகே உள்ள சிங்காநல்லூர் என்ற இடத்தில் பருத்தியிலே இருந்து விதைகளைப் பிரித்தெடுக்கும் ஆலைகள் இருப்பதைக் கேள்விப்பட்டு அங்கே வந்தார் துரைசாமி.

அந்த ஆலை ஒன்றில், மாதம் பன்னிரெண்டு ரூபாய் சம்பளத்திற்கு துரைசாமி வேலைக்குச் சேர்ந்தார். அந்த முதலாளியின் நிருவாகம், கண்டிப்பு வேலை வாங்கும் ஒழுங்கு ஆகியவை அவருக்கு மன நிறைவை மட்டுமன்று, எதிர் காலத்தில் இவற்றை நாம் ஒழுங்காகப் பின்பற்றி நடந்தால் நல்ல நிருவாகம் செய்யும் திறமையைப் பெற முடியும் என்று துரைசாமி நம்பினார்.

பஞ்சு ஆலையில் வேலை!
12 ருபாய் சம்பளம்!

துரைசாமியின் கடமை உணர்வுகள், எஜமான விசுவாசும், வேலைத் திறமை, ஆகியவற்றை நன்கு புரிந்து கொண்ட அந்த ஆலை முதலாளி, அவரைப் பஞ்சை நிறுத்து எடை போடும் பிரிவில் வேலை செய்பவர்கட்கு தலைமைப் பொறுப்பாளராக நியமித்தார்.

இதில் குறிப்பிடத் தக்க சிறப்பு என்ன தெரியுமா? காய்ந்த மாடு கம்பங் கொல்லையில் புகுந்து கன்னா பின்னா என்று மென்று பயிரை நாசமாக்கும் நிலைபோலல்லாமல், துரைசாமி வேலையில் சேரும் போதே தனது முதலாளியிடம், ‘ஐயா, நான் இரண்டாண்டு காலம்தான் வேலை பார்ப்பேன். அதற்கு மேல் பணியாற்ற மாட்டேன். என்ன சம்மதமா ஐயா!’ என்ற ஒப்புதலைக் கேட்டுப் பெற்ற பிறகே அவர் அந்த ஆலையில் பணிக்கமர்ந்தார்.

தந்தையும் - மகனும் :
சந்தித்தாங்கள்:
இவ்வாறு துரைசாமி பணியாற்றிக் கொண்டிருக்கும்போது, துரைசாமியின் தந்தையார் தனது தோட்டத்தில் விளையும் பருத்தியிலே இருந்து கொட்டையை நீக்கிட அதே ஆலைக்கு வந்தார். காரணம், கோபால்சாமி நாயுடு அடிக்கடி அந்த ஆலைக்கு வந்து போவதும் வழக்கமாகும்.

ஆலையில் பஞ்சு எடை போட்டு நிறுக்கும் தலைமை எடையாளர், யார் எடை போட வந்தாலும் அவர்களது பருத்தி எடையில் பாரத்துக்கு ஐந்து ராத்தல் குறைத்துப் போட வேண்டும்.

இந்த விதி சிங்காநல்லூரில் உள்ள எல்லா ஆலைகளிலும் பொதுவாகக் கடைப்பிடிக்கப்பட்டே வந்தது. இந்த எடை போடும் வேலையிலும், கலக்கிலும் துரைசாமி மிகத் திறமையாகவும், நாணயத்தோடும் நடந்து வந்த தொழில் ஒழுக்கம்; அவரது முதலாளிக்கு மிகவும் பிடித்திருந்ததால், துரைசாமி அங்கு எல்லோராலும் நன்கு மதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத் தக்க சம்பவமாகும்.

கோபால்சாமி நாயுடு, அதாவது துரைசாமியின் தந்தை; ஒரு நாள் பருத்திப் பொதிகளை அந்த ஆலையிலே கொட்டை நீக்கி எடைபோட வந்தார். தனது மகன் அங்கே தலைமை எடையாளராகப் பணியாற்றுவதைக் கண்டு அவர் மிக்க மகிழ்ச்சி அடைந்தார்.

பருத்தியை எடை போட்டபோது, தந்தை கோபால்சாமி நாயுடு தனது மகன் துரைசாமியைப் பார்த்து, “எனக்கும் அதே விதிதானா? முதலாளியிடம் சொல்லக் கூடாதா?” என்றார்.

துரைசாமி தனது தந்தையைப் பார்த்து. ‘உங்களுக்கு... அதே விதியன்று: பாரத்துக்குப் பத்து ராத்தல் குறைக்கப்படும்’ என்று கண்டிப்பாகக் கூறிவிட்டார்.

உடனே கோடால்சாமி முதலாளியிடம் சென்று,‘நடந்ததைக் கூறினார். அதற்கு அந்த எசமான், துரைசாமி சொன்னால் சொன்னதுதான்! அதுவும உங்களுடைய விவகாரத்தில் உங்களுடைய மகன் சொன்னதும் சரிதான்’ என்றார்.

மகன் செய்த செயல் நேர்மையானதுதான்; அவனைக் கேட்டது தவறு. அதனால்தான் தகப்பன் என்ற உறவுக்காக பத்து ராத்தல் குறைத்து எடை போட்டிருக்கிறான் என்று எண்ணி, மகனது நேர்மையைப் பாராட்டி மகிழ்ந்தார்.

வேலையில் சேரும்போது துரைசாமி தனது முதலாளியிடம் ஓர் ஒப்பந்தம் செய்திருந்தார் அல்லவா? அந்தக்கெடு வந்துவிட்டது.

ஒரு நாள் இரவு, சிங்காநல்லூர் முக்கிய சாலை ஒன்றில் முதலாளி தனது நண்பருடன் பேசிக் கொண்டிருந்தபோது, துரைசாமி தனது ஏசமாரிடம் சென்று: தான் பணி செய்யும் ஆலைப் பிரிவின் திறவுகோலைக் கொடுத்து. “ஐயா, இன்றுடன் நமது இரண்டாண்டுக் கால வேலை ஒப்பந்தம் முடிந்துவிட்டது. இனி, தங்களது ஆலையில் பணி புரியமாட்டேன். தயவு செய்து எனக்கு விடுதலை கொடுங்கள்” என்று துரைசாமி கேட்டார். நண்பரிடம் பேச்சை முடிக்காமல் முதலாளி இருந்தபோது, துரைசாமி கூறிய வார்த்தையைக் கேட்டுத் திகைத்தார்! ஆனால், துரைசாமி எதுவும் எசமானரிடம் அதற்கு மேல் சொல்லாமல் விர்ரென்று சென்று விட்டார்.

சிங்கா நல்லூர் பருத்தி ஆலையில் துரைசாமி பெற்ற அனுபவத்தைக் கொண்டு திருப்பூர் நகரில் சொந்த பருத்தி ஆலை நடத்துவது என்ற முடிவுக்கு துரைசாமி வந்தார். ஆலை என்றால் அதற்கான இடம், பணம் வேண்டுமல்லவா?

மூடநம்பிக்கையைத் :
தகர்த்த வாலிபர்!

தனது நண்பர்களிடம் தேவையான பணம் பதினேழு ஆயிரம் ரூபாயைத் துரைசாமி கடனாகப் பெற்றார். ஆலை அமைக்க இடம் எங்கே கிடைக்கும் என்று தேடினார். கிறித்துவப் பாதிரியாருக்குச் சொந்தமான ஓர் இடம் விலைக்கு வந்தது. அக் காலக் கிறித்தவர்களிடம் ஒரு பாவம் குடி கொண்டிருந்தது. என்ன அது தெரியுமா? கிறித்தவப் பாதிரிமார்களுக்குச் சொந்தமான இடத்தை விலைக்கு வாங்க மாட்டார்கள். அதில் வீடு கட்டி இந்துக்கள் குடியேறவும் மாட்டார்கள். அதாவது, அது பாவச் செயல் என்று மக்களால் எண்ணப்பட்டதே அதற்குக் காரணமாகும்.

ஆனால், துரைசாமி இது மாதிரியான மூட நம்பிக்கைக் கொள்கைகளை எல்லாம் தூக்கி எறிபவர். அதனால், அந்தக் கிறித்துவப் பாதிரியின் இடத்தை விலைக்கு வாங்கினார். நகராண்மைக் கழகத்தின் அனுமதி இல்லாமலேயே ஆலைக்குரிய கட்டடத்தைக் கட்டினார்.

நகராட்சி அதிகாரிகள் துரைசாமி மீது வழக்குத் தொடுத்தார்கள். கட்டடம் முடியும் வரை அவர் அதிகாரிகளுக்குத் தெரிந்தும் - தெரியாமலும் காலம் கடத்தி வந்தார். கட்டடமும் முடிந்தது. அதே நேரத்தில் நகராட்சியிடம் அனுமதியும் பெற்றுவிட்டார். பருத்தி ஆலையும் நடக்கத் தொடங்கியது. இவையெல்லாம், துரைசாமியின் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட தொழில் வியூகமாக விளங்கியது. முதல் உலகப் போர் அப்போது துவங்கப்பட்டு நடந்து கொண்டிருந்த நேரமாதலால், பருத்தித் துணிகளுக்கு நல்ல விலையும், கிராக்கியும் இருந்தது. போர்க் காரணத்தால் பஞ்சாலைத் தொழில் வளமாக வளர்ந்து வந்தது!

1919-ஆம் ஆண்டில் உலக முதல் போர் முடிந்து விட்டது. இதனால், துரைசாமி ஆரம்பித்த பஞ்சாலையும் நிறைய லாபம் கொடுத்தது. 1919-ஆம் ஆண்டில் மட்டும் அவருக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் லாபம் வந்துள்ளது.

கோவை பஞ்சாலை வேகமாகவும், விறுவிறுப்பாகவும் நடை பெற்று வந்ததாலும், லாபம் அதிகமாகக் கிடைத்ததாலும், பணச் செல்வாக்கும், அதனால் அவருக்குரிய சொல் வாக்கும் நாளும் வளர்பிறைபோல வளர்ந்து வந்தக் காரணத்தால், துரை சாமி கோவை மாவட்டத்துப் பணக்காரர்களிலே ஒருவராகத் திகழ்ந்தார்.

கோவை நகரின் :
தொழிலதிபர் ஆனார்:

இந்திய தேசியக் காங்கிரஸ் பேரியக்கக் கூட்டங்களோ, மாநாடுகளோ, ஆண்டு தோறும் எங்கு நடைபெற்றாலும், வருகின்ற சிறப்பு அழைப்பை அவமதிக்காமல் அங்கே பார்வையாளராகச் சென்று அவர் கலந்து கொள்வார்!

எடுத்த எடுப்பிலேயே ஒரு வியாபாரத்தில் துரைசாமிக்கு ஒன்னரை லட்சம் ரூபாய் லாபமாக வந்த பின்பு, அந்த ரூபாயை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று அலைமோதிய சிந்தனையாளரானார் அவர். எனவே, ஏதாவது வியாபாரம் செய்யலாமே என்ற நோக்கில் பம்பாய் மாநகர் சென்றார் துரைசாமி!

அன்றைய பம்பாய் எனப்படும் இன்றைய மும்பை மாநகர்க்குச் சென்ற துரைசாமி, பஞ்சு வியாபாரம் நடத்திப் பொருள் திரட்ட ஒடியாடி அலைந்தார். இவ்வாறாக, தேவையான செலவுகளுக்கும், உணவு, உடை, உறையுள் ஆகியவற்றுக்கும், அவர் கையிலே இருந்த ஒன்னரை லட்சம் ரூபாயும் செலவாகிவிட்டது! இரண்டாவது தடவையாக துரைசாமி நடத்திய பஞ்சு வாணிகத்திலும் அவர் வெற்றி பெற முடியாமல் போயிற்று. என்ன செய்வது?

வாணிகம் தோல்வி!
ஒன்றரை லட்சம் நட்டம்!

யார் எங்கே நடந்தாலும் அவரவர் நிழல் அவர்களைப் பின் தொடர்ந்து வருவதைப்போல, முதலாளியாக துரைசாமி மும்பை சென்றவர், மறுபடியும் தமிழ் நாட்டுக்குத் திரும்பும்போது, பழைய துரைசாமியாகவே வந்து சேர்ந்தார்!

திருப்பூரில் துரைசாமி துவங்கிய பஞ்சு ஆலையை, அதன் வாணிகம் விழுங்கி ஏப்பம் விட்டு விட்டது. அதனாலும், அவருக்கு எவ்விதப் பயனும், பலனும் இல்லாமல் போய் விட்டது. என்ன செய்யலாம் என்ற எதிர்காலச் சிந்தனையில் துரைசாமி மூழ்கினார்.