தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு/படிக்காத மேதை நாயுடு!

விக்கிமூலம் இலிருந்து
2. படிக்காத மேதை நாயுடு;
பார் போற்றும் விஞ்ஞானி ஆனார்!

இராபர்ட் கிளைவும்
ஜி. துரைசாமியும்!

இராபர்ட் கிளைவ் என்ற ஒரு சிறுவன் இங்கிலாந்து நாட்டிலே தோன்றினார்! அவன் ஒரு தீராத விளையாட்டுப் பிள்ளையாக இருந்தான். பள்ளிப் பருவக் காலத்தில் அவன் மிகப் பெரும் குறும்பன். எங்கே கலகம் உண்டாகின்றதோ, எந்தெந்த இலண்டன் நகர வீதிகளிலே சண்டையும் சச்சரவும் காணப்படுகின்றதோ அந்தந்த இடங்களிலே எல்லாம் கிளைவ் தான் காரண கர்த்தாவாக விளங்கினான்.

கற்களை எடுத்து கடைகள் மேலே வீசுவான். காரணம், கடைக்காரன் கிளைவ் கேட்டதைத் தரமாட்டான்; கொடுக்க மாட்டான் என்றால், கடையிலே அவன் கேட்டப் பொருள் இருக்காது. அதனால் வாயடி வம்புகளை வளர்ப்பான், சாக்கடைச் சேறுகளை வாரி கடை மீது வீசுவான். அதனால் ஒரு கலகம் தோன்றும். கடை வீதியே அவன் குறும்புத்தனத்தைக் கண்டிக்கும்; இழிவாகப் பேசும், காவல் துறைக்குள் புகார்கள் புகும். மன்னித்து அவனை வெளியே விரட்டுவார்கள் - சிறு பையனாக இருக்கிறானே என்ற காரணத்தால்.

அத்தகைய ஒரு போக்கிரி என்று பெயரெடுத்தவன் - வாலிபனானான். பிரிட்டிஷ் படைகளின் ஒரு பிரிவான கிழக்கிந்தியக் கம்பெனி என்ற வணிக நிறுவனத்திலே அவன் சேர்க்கப்பட்டான் - வணிகம் செய்யும் ஊழியனாக!

குறும்புகளே குணமாக வளர்ந்த அந்தக் குறும்பனுடைய தொல்லைகளால் உருவான குழப்பங்களைக் கண்டு; அவன் வாலிபத் திமிர்களை அடங்குவதற்காக இந்தியாவுக்கு அனுப்பி வைத்தது - கிழக்கு இந்திய கம்பெனி என்ற வணிக நிறுவனம்!

இந்தியாவிற்கு அனுப்பப்பட்ட அந்த வாலிபனான இராபர்ட் கிளைவ், தமிழ்நாட்டில் இருந்த கிழக்கு இந்திய கம்பெனியின் வணிகக் கிளைக் குழுவில் பணியாற்றினான். அவன் அதிகாரத்தில் ஒரு இராணுவப் படையும் இருந்தது.

இராபர்ட் கிளைவ் என்ற அந்த குறும்பன் தான், இந்தியாவில் சூரியன் மறையாத பிரிட்டிஷ் சாம்ராச்சியத்தை The Never Sun Set in British Empire-ஐ தோற்றுவித்தான். அந்தக் குறும்புத்தனமானவன்தான் வரலாற்றில் தனக்கென ஒரிடத்தை உருவாக்கிக் கொண்ட வரலாற்று மாவீரனான்: அவனால் இந்தியாவில் பிரிட்டிஷ் பேரரசு உருவாகி - நிலையாக நிறுத்தப்பட்டது.

அந்த சரித்திர நாயகனைப் போலவே, தமிழ்நாட்டில், கோயம்புத்தூர் மாவட்டத்தில் ‘கலங்கல்’ என்ற ஒர் ஊரில் கோபால்சாமி என்பவருடைய மகனாக ஜி. துரைசாமி பிறந்து வளர்ந்தார்.

அவருக்குக் கலங்கல் கிராமத்தில் ஒரு வீடும், தோட்டமும், சிறிது புன்செய் நிலமும் இருந்தது. அதனால் கோபால்சாமி அந்த ஊர் போற்றும் ஒரு வேளாண் குடிமகனாக பெயரும் புகழும் பெற்று வாழ்ந்து வந்தார்.

கோபால்சாமி, விவசாயியாக மட்டுமல்லாமல், தனது தோட்டத்திலே பஞ்சும், புகையிலையும், பயிர் செய்து வந்ததால், ஒரளவு அவர் தனது மனைவியுடன் செல்வாக்கோடு வாழ்ந்த வந்தபோது, 23.3.1893-ஆம் ஆண்டில் அவருக்குப் புதல்வனாகப் பிறந்தவர்தான் நாம் முன்பு குறிப்பிட்ட அந்த ஆண் குழந்தையான ஜி. துரைசாமி என்ற குழந்தை.

பிள்ளைப் பருவமும் :
கல்வி நிலையும்!

குழந்தை பிறந்த ஓராண்டுக் குள்ளாகவே, கோபால்சாமி தனது வாழ்க்கைத் துணை நலமாக வாழ்ந்து வந்த அருமை மனைவியை இழந்தார். அதனால், துரைசாமி குழந்தையாக இருந்தபோதே தாயைப் பறிக் கொடுத்து விட்டார் என்ற பரிதாபத்தால், அதே கோவை மாவட்டத்திலே இருந்த தனது தாய் மாமனான இராமசாமி என்பவரின் ஆதரவோடு இலட்சுமி நாயக்கன் பாளையம் என்ற ஊரில் துரைசாமி வளர்ந்து வந்தார்.

பள்ளிக்குச் செல்லும் பருவம் வந்ததும், துரைசாமியைத் தாய் மாமன் இராமசாமி, அங்கே இருந்த ஒரு திண்ணைப் பள்ளியில் கல்வி கற்கச் சேர்த்து விட்டார்.

பள்ளி வாழ்க்கையை துரைசாமி வெறுத்தார். அவரை அன்புக் காட்டிப் பள்ளிக்கு அனுப்புவார் யாருமில்லை. தாயில்லாப் பிள்ளை அல்லவா? அதனால் அவர்மீது அன்பு காட்டுவார் யாரும் இல்லை.

வீட்டில் எப்படிக் குறும்புத்தனம் செய்து வந்தாரோ, அதே அரட்டைகளையும், சச்சரவுகளையும் வீட்டிற்கு வெளியிலும், பொதுவாக அந்தக் கிராமத்திலும், இராபர்ட் கிளைவைப் போலச் செய்வதையே பழக்க வழக்கமாகக் கொண்டிருந்தார் - துரைசாமி!

இந்தத் தொல்லைகள் நாளுக்கு நாள் அதிகமாகவே, அந்தக் குழப்பங்களைத் தடுக்கவும், நிறுத்தவும் - அவருடைய தாய் மாமன் திண்ணைப் பள்ளிக்கு அனுப்பியும்கூட, அதே உபத்திரவங்கள் மேலும் தொடர்வதால் ராமசாமிக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. தாயில்லாப் பிள்ளையை என்ன செய்வது, எவ்வாறு அவரை முன்னேற்றுவது என்பதிலே அக்கறை கொண்டு சிந்தனை செய்தார் - தாய் மாமன்!

சிறுவன் துரைசாமி பள்ளிக்குச் சென்றாரே ஒழிய, அவர் குறும்புத்தனங்கள் குறைந்தபாடில்லை. பள்ளியில் உள்ள மற்றப் பிள்ளைகளுக்கும் அவரால் துன்பங்கள் அதிகமாயின.

அதனால், திண்னைப் பள்ளி ஆசிரியர் பிரம்பால் அடிக்கும்போது மட்டும் துரைசாமி சற்று பணிந்தாரே தவிர, பிறகு அதே குறும்புகளை அடாவடித்தனமாக, தன்னையறியாமலேயே செய்யும் சூழ்நிலை பள்ளிப் பிள்ளைகளால் அவருக்கு உருவானது.

இந்த பள்ளி இடையூறுகளுக்கு இடையிலும், சிறுவன் துரைசாமி அதே பள்ளியில் மூன்றாண்டுகளைக் கழித்து வந்த போது, அவர் தமிழ் மொழியை ஓரளவுக்குப் படிக்கவும், எழுதவும் கற்றுக் கொண்டார், கணக்குப் போடுவதிலும் சிறந்து விளங்கினார். என்னதான் குறும்பனாக இருந்தாலும், துரைசாமி தமிழ்ப் பாடத்திலும், கணக்குப் போடுவதிலும் மற்ற பிள்ளைகளைவிட, வல்லவனாக இருப்பதைக் கண்ட திண்ணைப் பள்ளி ஆசிரியருக்கு: அந்தச் சிறுவன் துரைசாமி மீது தனியொரு மதிப்பும், மரியாதையும், அன்பும் வளர்ந்து வந்ததது. அதனால், சில நேரங்களில் அந்தச் சிறுவன் செய்யும் துஷ்டத் தனங்களையும் மன்னித்துக் கருணைக் காட்டி வந்தார்.

சிறுவன் துரைசாமிக்குத் திண்ணைப் பள்ளி வாழ்க்கை வெறுப்பை வளர்த்தது. இந்தப் பள்ளியை விட்டு எவ்வாறு வெளியேறுவது என்பதில் அந்தப் பையன் கவனம் செலுத்த ஆரம்பித்தான்.

ஒரு நாள் ஆசிரியர் துரைசாமியிடம் ஒரு பாட்டை மனனம் செய்யுமாறு கூறியிருந்தார். ஆனால், அச் சிறுவன் தனது விளையாட்டுத் தனத்தால் பாட்டை மனப்பாடம் செய்யாமல் போகவே, ஆசிரியர் பிரம்பைக் கையில் எடுத்ததும், துரைசாமிக்கு எதிர்பாராமல் ஆசிரியர் மீதே கோபம் வந்து விட்டது.

திண்ணைப் பள்ளி அல்லவா? அதன் சுவற்றோரம் கொட்டி வைக்கப்பட்டிருந்த - பரப்பி வைக்கப்பட்டிருந்த மணலை இரு கைகளாலும் வாரி ஆசிரியர் கண்கள் மீது வீசியெறிந்து விட்டு ஓடி விட்டார்.

ஆசிரியர் தனது கண்களை ஊதித் துடைத்துக் கொண்டு, இனி துரைசாமி வந்தால், பள்ளியில் உட்கார வைக்க வேண்டாம் என்று மற்ற மாணவர்களிடம் கூறினார்!

அதற்குப் பிறகு, துரைசாமியும், அந்தப் பள்ளிக்கு வராமல் நின்று விட்டார். பள்ளிப் படிப்பு வாழ்க்கையும் அன்றோடு முடிந்தது.

துரைசாமி மணலை வாரி வீசிய சம்பவத்தை அவனுடைய தாய் மாமன் ராமசாமியிடம் வீடு தேடிப் போய் பள்ளி ஆசிரியர் கூறவே, துரைசாமியால் உண்டாகும் தொல்லைகளைப் பொறுக்க முடியாமல், அவனைத் தேடி அலைந்து கண்டுபிடித்து அவன் தந்தையிடமே ஒப்படைத்து விட்டார். சிறுவன் துரைசாமி மீண்டும் தான் பிறந்த ஊரான கலங்கல் கிராமத்துக்கு வந்து தந்தையின் பாதுகாப்பிலே இருந்தார்.

மைத்துனர் ராமசாமி கூறியதைக் கோபால்சாமி கேட்டவுடன் மகன்மீது கோபம் கொண்டு அவனைத் தோட்டத்து வீட்டிலேயே தங்க வைத்து, பருத்தி, புகையிலை விவசாயத்தைக் கற்றுக் கொடுத்து, பயிரைப் பாதுகாத்துக் கொண்டு தோட்டத்தை விட்டு வெளியே எங்கும் போகக் கூடாது என்றும் கண்டித்தார்.

விவசாயம் செய்ய பயிற்சி பெற்றார்!

கிராமத்தை விட்டுச் சிறிது தூரம் தள்ளி தோட்டம் இருந்த தால், சிறுவன் தனிமையாகவே இருக்கும் நிலை ஏற்பட்டு விட்டது.

காலையில் எழுந்ததும் துரைசாமி, பருத்தி, புகையிலை வயல் வெளிகளில் மண் வெட்டுவார்; பிறகு மாடுகளை மேய்ப்பார்; வயற் காட்டில் உள்ள களைகளை எடுப்பார்; தோட்டத்தைக் காவல் காப்பார்; இவற்றைத் தினந்தோறும் செய்து, விவசாய வேலைகளைச் செய்வார்.

இவ்வளவு வேலைகளையும் செய்து வரும் தனது மகனுக்கு உதவியாக, அவன் தந்தை ஒரு காவலாளியை நியமித்தார். அவன் துரைசாமி செய்து வந்த பணிகளை எல்லாம் பொறுப்பேற்று செய்து வந்ததால், ஓய்வு நேரம் அதிகமாகக் கிடைத்ததை வீணாக்காமல், தமிழ் நூல்களைக் கற்று அறிவை மேலும் வளர்த்துக் கொண்டார் துரைசாமி. உண்ணுவதும், உறங்குவதும், புதுப் புதுத் தமிழ் நூற்களை வாங்கிப் படிப்பதும் அந்த வாலிபனின் அன்றாட பணியாக இருந்தன.

மாடுகள் மீதுள்ள கருணை:
வைக்கோல் போரில் தீ!

தீபாவளி திரு விழாவைக் கலங்கல் கிராம மக்கள் எப்போதும் விமரிசையாகக் கொண்டாடுவது வழக்கம். அதனால், கோபால் சாமியும், மகனைத் தனது ஊரிலுள்ள வீட்டுக்கு அழைத்துவந்து தீபாவளியை விமரிசையாகக் கொண்டாட விரும்பியதால், தோட்ட வீட்டிலிருக்கும் மகனை அழைத்து வர அவர் ஓர் ஆளை அனுப்பி இருந்தார். அந்த ஆளும், துரைசாமியும் கலங்கல் கிராமத்திலுள்ள அவரது வீட்டுக்கு வந்து கொண்டிருக்கும்போது, வழியில் ஒரு வைக்கோல் வண்டி நிறை மாதக் கர்ப்பிணிபோல மெதுவாக வந்து கொண்டிருந்தது.

வண்டியில் பாரம் அதிகம்! மாடுகளால் அந்த வண்டியை இழுக்க முடியாமல் நடை தளர்ந்து வந்து கொண்டிருப்பதை கண்ட துரைசாமி, பாரத்தை இழுக்க முடியாமல் தள்ளாடி வரும் மாடுகளைப் பார்த்ததும் இரக்கமடைந்து. அந்த மாடுகளைச் சற்று ஒய்வெடுக்க விடலாம் என்று நினைத்தான்.

என்ன செய்வது? இந்த இரக்க உணர்வை வண்டிக்காரனிடம் கூறினால் கேட்பானா? கேட்கவே மாட்டான் என்ற முடிவுக்கு வந்த துரைசாமி, தன்னிடமிருந்த தீப்பெட்டியை எடுத்து ஒரு தீக்குச்சியைத் தேய்த்து வைக்கோல் வண்டியின் மேலே போட்டதும், வண்டியிலே இருந்த வைக்கோல் எல்லாம் எரிந்து சாம்பலானாது. மாடுகள் பூட்டை விட்டு அலறித் தப்பித்து ஓடின. வண்டிக்காரன் இந்த செய்தியை ராமசாமியிடம் ஓடிப் போய் கூறினான்.

கோபால்சாமி மிகவும் வருந்தினார். மீண்டும் துரைசாமியைத் தனது தோட்ட வீட்டுக்கே செல்லுமாறு, கண்டித்துப் பேசி அனுப்பி விட்டார். துரைசாமி தனது தோட்ட வீட்டுக்குள்ளேயே ஏறக்குறைய ஒன்பது ஆண்டுகள் இருந்தார். அதற்குள் ஆங்கில அறிவும், பெற்றிட விரும்பினார்.

வயது பதினெட்டானது, வாலிபன் ஆனார் துரைசாமி. தோட்ட வாழ்க்கையில் பருத்தி விவசாயத்தையும், அதன் வியாபார நுட்பத்தையும், புகையிலைப் பயிரால் வரும் நன்மைகளையும், பன வருவாய் தரும் அவற்றின் முழு விவரத்தையும் அறிந்த துரைசாமி, தனது தந்தையாரின் வியாபாரத்துக்குத் துணையாகவும் இருந்து, தந்தையின் தொழில் நுட்பங்களை எல்லாம் நன்கு புரிந்து கொண்டார். தந்தையும் - மகனும் தொழிலில் சேர்ந்தே ஈடுபட்டார்கள்.

தந்தையுடன் தொழிலில் ஈடுபட்ட நேரம் போக, தான் பழையபடி குறும்புத்தனமாக விளையாடுவதிலும், படிப்பதிலும் அவர் நேரத்தைச் செலவழித்தார். ஒரு நாள் கலங்கல் கிராமத்து மணியக்காரர் அவசரமாக வெளியூர் செல்லும் நேரம் வந்ததால், தான் திரும்பி வரும் வரையில், கிராம மணியம் பணியை துரைசாமி கவனித்து வருவார் என்று மேலதிகாரிகளுக்கு எழுதி வைத்து விட்டுப் போனார். துரைசாமியும் அதற்குச் சம்மதித்துக் கொண்டார். அதனால், மணியம் வேலையை ஒழுங்காகச் செய்து வந்தார்.

மணியக்காரர் செய்த எருமை சவாரி!

வட்ட ஆட்சியர், வருவாய் துறை அதிகாரி, அவர்களுக்குப் பணிபுரிய வரும் அலுவலகப் பணியாள் ஆகியோர், கலங்கல் கிராமத்தை நேர்முகமாகப் பார்வையிட, அரசு பணிகள் விவரம் அறிய - அந்த ஊருக்கு வந்து கொண்டிருந்தார்கள்.

துரைசாமி தனது தோட்ட வீட்டிலே இருந்து எருமை மீது சவாரி செய்து கொண்டு, ஊர் புறம் வீட்டுக்கு வருவதும், எருமையின் பாலைக் கறந்து குடித்து விட்டு பிறகு வழக்கம் போல அதே எருமை மீதே சவாரி செய்து கொண்டு தோட்ட வீட்டுக்குப் போவதும் வழக்கமாகக் கொண்டிருந்தார்.

ஊர் நோக்கி வந்து கொண்டிருந்த அரசு அதிகாரிகள் மணியக்காரர் வீட்டருகே வந்து அவரை அழைத்து வருமாறு ஊர் பெரியவர்களிடம் கேட்டனர். அதற்கேற்ப ஆட்கள் ஓடோடி துரைசாமியை அழைத்து வந்தார்கள்.

உடனே தாசில்தார் ரெவின்யூ அதிகாரியைப் பார்த்து, இந்த ஆள் எருமைமேலே சவாரி செய்து கொண்டிருந்த ஆளல்லவா? என்று கேட்டார். அவரும் ‘ஆம்’ என்று பதில் கூறவே, ‘எருமை மாட்டு மீது சவாரி செய்பவனா இந்த ஊர் மணியக்காரன்?’ என்று வியப்போடு அவர்கள் துரைசாமியையே பார்த்து நின்றார்கள்.

ஆனால், துரைசாமி தனது எருமைச் சவாரியைப் பற்றி அதிகாரிகளிடம் பெருமையாகப் புகழ்ந்து பேசிக்கொண்டே இருந்தார்.

இதைக் கேட்ட அதிகாரிகள் அந்த இளைஞனுடைய விளையாட்டுத் தனத்தைப் பொருட்படுத்தாமல் திரும்பினார்கள்.

துரைசாமி ஒரு நாள் தனது நண்பர் ஒருவனைத் துரத்திக் கொண்டே ஓடினார். ஓடிய வேகத்தில் அந்த நண்பருடைய வீட்டில் தொங்கிக் கொண்டிருந்த இரும்புச் சங்கிலி ஒன்றில் சிக்கிக் கொண்டார். துரைசாமியின் கால்கள் சங்கிலித் தொடரில் பின்னிக் கொண்டன. விடுபட முடியாமல் திணறினார்; தவித்தார். அந்த நண்பனையே தன்னை விடுவிக்குமாறு துரைசாமி வேண்டினார்.

அதற்கு அந்த நண்பன் இரண்டு விதிகள் துரைசாமிக்கு விதித்தான். அதற்குச் சம்மதித்தால் அவன் விடுவிப்பதாகக் கூறினான். அவரும் அதற்கு ஒப்புக் கொண்டார். என்ன அந்த இரண்டு விதிகள்?

“இரண்டாண்டுகள் நீ என்னைத் துன்புறுத்தக் கூடாது. மற்றொன்று, நான் உன்னைத் துன்புறுத்தினால் நீ என்னைப் பொறுத்துக் கொள்ள வேண்டும். என்ன சம்மதமா?” என்று கூறியவனுக்கு, துரைசாமி ‘சரி’ என்று கூறவே, அந்த நண்பன் அவனை விடுவித்தான்.

அவர்களுக்குள் என்ன துன்பமோ, என்ன விவகாரமோ, அதை அவர்கள் இருவருமே ஒருவருக்கு ஒருவர் இன்னதென்று கூறிக் கொள்ளவில்லை. இருந்தாலும், அவர்களது ஒப்பந்தம் இரண்டாண்டுகள் நீடித்தது. அதனால், துரைசாமி அந்த நண்பனுக்கு அடங்கியே நடந்து கொண்டார்.

பட்டம் விடுவதற்கு !
தங்கக் கம்பி நூல்!

துரைசாமியின் நண்பர்கள் கோடைக் காலப்பொழுது போக்குக்காக காற்றாடி விடுகின்ற பழக்கம் உடையவர்கள், அவ்வாறு ஒரு நாள் அவர்கள் பட்டம் விடும் வழக்கத்தைத் துரைசாமி பார்த்தார். தனக்கும் அதுபோல காற்றாடி பறக்கவிட வேண்டும் என்ற ஆசை எழுந்தது. ஆனால், அவரிடம் பட்டம் இல்லை. என்ன செய்வது என்று சிந்தித்தார்

அப்பொழுது அக் கூட்டத்தில் இருந்த ஒரு சிறுவனிடம் பட்டம் இருப்பதை துரைசாமி பார்த்தார். அவனிடம் சென்று பட்டத்தைக் கேட்டுப் பெற்றார். நூலுக்கு என்ன செய்யலாம் என்று யோசித்தபோது, பக்கத்தில் தட்டான் ஒருவன் தங்க ஆபரணம் செய்வதற்காக தங்கத்தை கம்பிபோல நீட்டி இழுத்துக் கொண்டிருப்பதைப் பார்த்து விட்டார். அவ்வளவுதான்! துரைசாமி அந்த தட்டானிடம் ஓடி, அந்தத் தங்கக் கம்பியைப் பிடுங்கிக் கொண்டு, தனது பட்டத்துக்கு அதைக் கயிறாகக் கட்டிக் காற்றில் பறக்கவிட்டார் காற்றாடியை!

‘காற்றாடி விட்ட ஆசை தீர்ந்ததும், பட்டத்தை அந்தப் பையனிடமே கொடுத்து விட்டு, தங்கக் கம்பியைத் தட்டான் இடமே திருப்பிக் கொடுத்துவிட்டு, அதற்கு நன்றியையும், அவர் சொல்லி விட்டுத் தனது தோட்டத்துக்குத் திரும்பி வந்தார்.

துரைசாமி தனது ஓய்வு நேரத்தில் ஊரைச் சுற்றி வருவார். தனக்கு வேண்டிய நண்பர்களைப் பார்த்துப் பேசிவிட்டு, கற்க வேண்டிய நூல்களை நண்பர்களிடம் பெற்றுக் கொண்டு தோட்ட வீட்டுக்கு அவர் வருவது வழக்கம்.

ஒரு நாள் இவ்வாறு நண்பர்களைச் சந்தித்து விட்டுத் திரும்பி, வரும்போது, வழியில் ஒரு காலி பாட்டல் அவருக்குத் தென்பட்டது. அதை எடுத்துப் பார்த்தார். அந்தக் காலி புட்டி மீது 'பார்க் டேவிஸ்" - என்ற நிறுவனம் தயாரித்த ஒரு வலி நிவாரணி Pain Killer என்ற மருந்துள்ள பாட்டல் என அச்சிடப்பட்டிருந்தது. அந்த நிவாரணியைத் தயாரித்த நிறுவனத்தின் அமெரிக்க முகவரியும் அதில் இருந்தது. அந்தக் காலிப் பாட்டலைக் கொண்டு வந்து அவர் பாதுகாத்து வைத்திருந்தார்.

அமெரிக்க மருந்துக்கு :
ஏஜெண்டானார்!

கலங்கல் கிராமத்திற்கு அரசு வருவாய்த் துறை அதிகாரி ஒருவர் வந்தார். அவரிடம் அந்த மருந்து பற்றிய விவரங்களைத் துரைசாமி கேட்டு அறிந்தார். அந்த நேரத்தில், அக் கிராம மக்களில் பலர் தலைவலி, முதுகு வலி, மூட்டு வலி போன்ற பல வலி நோய்களால் வேதனைப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.

ஊர் மக்கள் பலர் வலிகளால் வருந்துவதை உணர்ந்த துரைசாமி, அந்த வருவாய் துறை அதிகாரியைப் பயன்படுத்தி, அமெரிக்க வலி நிவாரண நிறுவனத்துக்குக் கடிதம் எழுதி அந்த மருந்தை வரவழைத்தார். அந்த வலி நீக்கி மருந்தை, சிறிது லாபம் சேர்த்து, யார் நோயோ, அவர்கட்கு எல்லாம் அந்த மருந்தைக் கிராம மக்களின் வலி நோய்களைப் போக்கினார்.

வலி நீக்கி மருந்தோடு, நில்லாமல், கடிகாரங்கள், ஆர்மோனியப் பெட்டிகள் போன்ற பொருட்களையும் வாங்கி விற்று, ஏறக்குறைய 600 ரூபாய் வரை சம்பாத்யம் செய்தார் துரைசாமி.

துரைசாமி தந்தையார் வைத்திருந்த தோட்டங்களைப் போல அப்போது பல தோட்டங்களில் தோட்ட வேலை செய்பவர்கள் இருந்தர்கள். அவர்களில் ஆண்களுக்கு மூன்றணாவும், பெண்களுக்கு இரண்டனவும் தோட்ட முதலாளிகளால் கூலி கொடுக்கப்பட்டு வந்தது.

தோட்டத் தொழிலாளர் :
போராட்டத் தலைமை!

ஏழைக் குடியானவர்களுக்கு இந்தக் கூலி போதாது என்பது துரைசாமி வாதம், அதற்காக அவர், ஏழைக் கூலியாட்களை ஒன்று திரட்டிக் கொண்டு தோட்ட முதலாளிகளிடம் சென்று நாள் ஒன்றுக்கு மூன்றணா இரண்டணா கூலி கொடுப்பது போதாது என்று துரைசாமி வாதாடினார்.

தோட்ட முதலாளிகள் துரைசாமியின் மனித நேயத்தையும், தோட்டத் தொழிலாளர்களின் அவல வாழ்க்கை நிலைகளையும் நெஞ்சா உணர்ந்து, குடியானவர்களுக்குரிய நியாயமான ஊதிய உயர்வை வழங்கினார்கள். இதனால் துரைசாமிக்கு குடியானவர்கள் இடையே மதிப்பும், மரியாதையும் உயர்ந்தது.

பொது மக்களுக்காகவும், தொழிலாளர்களுக்காகவும், நியாயமான வாழ்க்கை உரிமைகளுக்காகவும் போராடி வெற்றி பெருமளவுக்கு ஊரிலும், தோட்ட முதலாளிகள் இடையேயும் மதிப்பும் மரியாதையும் துரைசாமிக்கு நாளுக்கு நாள் உயர்ந்து வரவே, கோபால்சாமி தனது மகனுக்குத் திருமணம் செய்திட முனைந்தார்.

குறும்பரை அடக்க :
திருமணம் செய்தார்!

திருமணம் செய்து வைத்து விட்டால் மகனுடைய குறும்புத்தனங்கள் அடங்கிவிடும் என்ற எண்ணத்தில் கோபால்சாமி நாயுடு தனது உறவினர்களுக்குள்ளேயே செல்லம்மாள் என்ற பெண்ணைத் திருமணம் செய்ய நிச்சயம் செய்தார்.

திருமணத்துக்கு நாள் குறித்ததோடு, எல்லா வேலைகளையும் கோபால்சாமி நாயுடுவே முன்னின்று ஓடியாடி செய்ய வேண்டிய நிலை. அதுவும் தாய் இல்லா ஒரே மகன் அல்லவா துரைசாமி? அதனால், எந்தக் கஷ்டங்களையும் ஏற்றுக் கொண்டு அவரே வேலைகளைச் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

திருமண நாளன்று, முகூர்த்த வேளையின்போது, மணமேடையில் மணமகளுக்குத் தாலிகட்டும் நேரம் வந்தபோது, மணமகனை அழைத்தார்கள்.

துரைசாமியைக் காணவில்லை. எல்லா இடங்களிலும் மணமகனைத் தேடினார்கள். பெண் வீட்டாரும், பிள்ளை வீட்டாரும் ஒன்று சேர்ந்து அங்கும், இங்கும் அலைந்து தேடினார்கள். மணமண்டபம் திகைத்தது. முகூர்த்த நேரம் வேறு நெருக்கியது.

இறுதியாக, தனது தோட்ட வீட்டில் துரைசாமி ஒளிந்து கொண்டு, மண வீட்டார் இருவரையும் அலைய விட்டு, ஒடி ஆடி தேட விட்டு, இறுதியாக மணமகன் தோட்ட வீட்டுக்குள்ளேயே பதுங்கியிருந்த, துரைசாமியை மணமகன் குழுவினர் அவரை இழுத்துக் கொண்டு வந்து, மணப் பந்தலில் உட்கார வைத்தார்கள்.

தாலி கட்டினார் செல்லம்மாள் என்ற அழகு மங்கைக்கு துரைசாமி. திருமணமும் முடிந்தது. துரைசாமி சிறுவனாக இருக்கும்போதே குறும்பராக இருந்தார்: பள்ளிக் கூடத்திலும் குறும்பராக விளங்கி, கலங்கல் கிராம மணியம் செய்தபோதும் குறும்பராகத் திகழ்ந்து, இறுதியில் தனது திருமணத்தின்போதும்கூட, தீராதக் குறும்புக்காரப் பிள்ளையாகவே இருந்தார் என்பதுதான் குறிப்பிடத் தக்க சம்பவம் ஆகும்.

குறும்பே உருவாக நடமாடிய இந்த துரைசாமி, ஆண்டுகள் போகப் போக ஓயாத உழைப்பாளி ஆனார் உயர்ந்த தொழிலதிபர்களிலே ஒருவரானார் தொழிலாளர் உலகுக்கு மனிதாபிமானியாக விளங்கினார். உலகம் போற்றும் விஞ்ஞானியாகவும் உருவெடுத்துப் பற்பல சாதனைகளைச் செய்த ஜி.டி. நாயுடு ஆகவும் மாறினார் என்றால், இவரல்லவா வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்த மேதை?