தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு/விந்தைகள் பல செய்த;

விக்கிமூலம் இலிருந்து
12. விந்தைகள் பல செய்த
விவசாய விஞ்ஞானி


“நத்தம்போல் கேடும் உளதாகும்; சாக்காடும்
வித்தகர்க்கு அல்லால் அரிது”

ஐயன் திருவள்ளுவர் பெருமான் தமிழ் இனத்துக்கென வகுத்தளிக்கப்பட்ட 'தமிழ் மறை'யில், மேற்கண்டவாறு தமிழர் நாகரீகத்தை நமக்கு நினைவூட்டுகிறார்.

இந்தப் பொய்யாமொழிக்கு, சிலர் சிலவாறு உரை உணர்த்தியிருந்தாலும், திருக்குறளார் வீ. முனுசாமி அவர்களின் "உலகப் பொதுமறை திருக்குறள் உரை விளக்கம்" நூலில், "புகழுடம்பிற்குப் பேரூக்கமாகும் கெடுதியும், அந்த புகழுடம்பு நிலைத்து நிற்பதற்கு, இறத்தலும், சிறந்த பல்கலைத் திறமையுடையவர்களுக்கு அல்லாமல் - மற்றையோருக்கு முடியாததாகும்" என்கிறார்.

புகழ் உடம்புக்கு கேடுகள் பெருகி வரும். அப்படிப்பட்ட புகழுடம்பு நிலைத்து நிற்பதற்கு இறத்தலும் நேரும். ஆனால், இவை யாருக்கு வரும்? சிறந்த பல்கலைத் திறமையை உடைய வர்களுக்கே அல்லாமல், மற்றவர்களுக்கு வாராது; முடியாததாகும்” என்பதே திருக்குறள் உரை விளக்கம் பொருளுரை ஆகும்.

ஆனால், இதே குறளுக்குப் பேராசிரியர் சாலமன் பாப்யைா அவர்கள், சற்றுத் தெளிவாகவே பொய்யாமொழியாரின் உள்ளத்தை நமக்கு உணர்த்துகிறார். அதாவது:

"பூத உடம்பின் வறுமையைப் புகழுடம்பின் செல்வ மாக்குவதும், பூத உடம்பின் அழிவைப் புகழுடம்பின் அழியாத தன்மை ஆக்குவதும், பிறர்க்கு ஈந்து, தாம் மெய் உணர்ந்து, அவா அறுத்த வித்தகர்க்கு ஆகுமே அன்றி, மற்றவர்க்கு ஆவது கடினம். இதுதான் புகழின் சிறப்பாகும்" என்கிறார்.

எனவே, திரு. ஜி.டி. நாயுடு அவர்கள் சிறந்த பல்கலைத் திறமையாளர். அவற்றுக்குச் சான்றாகத் தொழிலியல் துறையிலே ஒரு விஞ்ஞானியாகவும், பொருள் உற்பத்தியிலே சிறந்த வித்தகராகவும், கண்டுபிடித்த விஞ்ஞானக் கருவிகளை மக்கள் மன்றங்கள் இடையே செல்வாக்கைச் செழிக்க வைப்பதிலும், உலகம் வியக்கும் மேதையாகத் திகழ்ந்தவர் என்பதை இதுவரை நாம் கண்டு களித்தோம்!

வறுமை வழுக்கு நிலம்
கலைக் கல்லூரி ஊன்றுகோல் கல்வி!

இரண்டாவதாக, திரு. நாயுடு அவர்கள், கலைக் கல்லூரி களைவிட தொழிற் கல்விக்கு பெருமை ஏற்படுத்தி, நாட்டையும் மக்களையும் வறுமை என்ற வழுக்கு நிலத்திலே காலிடறி விழாமல் அதைத் தடுக்கும் ஊன்றுகோலாக, தொழிற் கல்லூரிகளைத் திறந்ததோடு நில்லாமல், பல தொழிற்சாலைகளைத் தனது திறமையால் உருவாக்கி, அவற்றுக்கு அரசு ஆதரவுகளையும் பெற்று மக்களிடம் நிலையான புகழுடம்பை நாட்டியவர் திரு. நாயுடு அவர்கள்.

திரு. நாயுடு அவர்கள் இயந்திரங்கள் இடையே வாழ்ந்து வந்தாலும், அவர் இரும்பு இதயம் படைத்தவர் அல்லர் பல நேரங்களில் அவர் கரும்பு இதயமாகவும் இருந்தவர். அவரிடம் பழகியவர்கள் இதை அறிவர்!

இந்தப் புத்தகத்தை எழுதுகின்ற நான், விஞ்ஞான விந்தையாளர் திரு. ஜி.டி. நாயுடு அவர்களோடு எனது வயதுக்கேற்ற வரம்புக்குள் மும்முறை சந்தித்து உரையாடி, அவருடனேயே ஒடிப் பின் தொடர்ந்த ஒரு நிருபன். நான் அப்போது 'முரசொலி', 'மாலை மணி' நாளேடுகளின் துணையாசிரியனாகப் பணியாற்றிக் கொண்டிருந்த நேரம்.

'முரசொலி'யில் நான் பணிபுரிந்தபோது, தஞ்சை மாநகரில் நடைபெற்ற "மாணவர் இந்தி எதிர்ப்பு மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிட திரு. ஜி.டி. நாயுடு வந்திருந்தார். அந்த மாநாட்டை நடத்தியவர்கள் மாணவர்கள் ஆவர். குறிப்பாக இன்றுள்ள ம.தி.மு.க. அவைத் தலைவர் எல். கணேசன், தற்போது மாவட்ட ஆட்சியராக உள்ள இராசமாணிக்கம், மா. நடராசன், நாவளவன், ஜீவா கலைமணி, மக்கள் தொடர்பு துணை இயக்குநர் திருச்சி பரதன் போன்ற பலர் மாணவர் மாநாட்டை நடத்திய முக்கியமானவர்கள் ஆவர்.

தஞ்சை மாணவர்
மாநாட்டில் நாயுடு!

அந்த மாநாட்டில் அறிஞர் அண்ணா உட்பட அன்றைய தி.மு.க. தலைவர்கள் அனைவரும் கலந்து கொண்டு எழுச்சி உரை ஆற்றினார்கள். தி.மு.க. அல்லாத திரு. ஜி.டி. நாயுடு அவர்கள் தமிழ் மொழிப் பற்றால், இந்தியை எதிர்த்து தஞ்சை மாணவர் மாநாட்டில் வீர முழக்கமிட்டார்.

திரு. ஜி.டி. நாயுடு அவர்களின் ஒவ்வொரு பேச்சும், கருத்தும், பூம்புகார் நகரைத் தாண்டிப் பொங்கி எழுந்த வங்கக் கடல் அலைகள் திரண்டெழுந்து வந்து அலையொலிகளைக் கையொலிகளாக எழுப்பினவோ என்று எண்ணத் தக்க வகையில், அவருடைய பேச்சுகளுக்குத் தஞ்சை நகர் பாசறைத் திடலில் கூடியிருந்த தமிழ்ப் பெருமக்கள் தங்களது வீர ஒலிகளை விண்ணதிர, மண்ணதிர எழுப்பிக் கொண்டே இருந்தார்கள். ஜி.டி. நாயுடு அவர்களது தமிழ் வீர உரை அத்தகைய ஓர் எழுச்சியை எழுப்பியபடியே இருந்ததை நான்தான் 'முரசொலி' ஏட்டில் வெளியிட தஞ்சையிலிருந்து அஞ்சலில் அனுப்பினேன்.

சிவகங்கை இந்தி எதிர்ப்பு
மாநாட்டில் நாயுடு உரை!

அடுத்து அதுபோன்ற மற்றோர் இந்தி எதிர்ப்பு மாநாடு, மாணவர் மணிகளால் சிவகங்கை நகரில் நடத்தப்பட்டது. அந்த மாநாட்டிற்கும், திரு. ஜி.டி. நாயுடு வந்து கலந்து கொண்டார்.

அந்த மாநாட்டில் திரு. ஜி.டி. நாயுடு ஆற்றிய வீர உரையில், மருது சகோதரர்கள் இங்லிஷ் தளபதியை எதிர்த்துப் போரிட்ட வாளோசை ஒலிகள் எதிரொலித்தன. வீராங்கனை வேலு நாச்சியாரின் வீர உணர்ச்சிகள் தமிழ் மாணவர்களைத் தட்டி எழுப்பி வெங்களத்திலே விளையாட வைத்தன. காரணம், அந்த வீர மங்கை நடமாடிய மண் இந்த சிவகங்கை என்றார் திரு. நாயுடு.

இந்தி எதிர்ப்பு போரிலே செங்களம் காணத் திரண்டிருந்த செருமுனைச் செம்மல்களான மாணவர் படைகள், விந்தை மனிதர் ஜி.டி. நாயுடு அவர்களின் வீர உரையைக் கேட்டு வியந்து வியந்து கையொலிகளை எழுப்பிக் கொண்டிருந்த காட்சிகள், தமிழ் மக்களைக் கனல்பட்டக் கந்தகம் போல, இந்தி ஒழிக, ஒழிக. இந்தி, தமிழ் வாழ்க!" என்ற ஒலிகளை எழுப்பியதைக் கண்ட திரு. நாயுடு அவர்கள், தனது பேச்சு வலிமைகளை மேடையை விட்டு இறங்கிய பின்பு உணவுக்குப் போகும் வழியில் காரிலே செல்லும்போது, மக்களது உண்மையான தமிழ் ஆவேச உணர்ச்சிகளையும், இந்தி எதிர்ப்பு எழுச்சிகளையும் அன்று கண்டதாக அந்த மேதை என்னிடம் குறிப்பிட்டார். அப்போது மாணவர் தலைவர்களிலே ஒருவரான நாவளவன் என்பவரும் அந்தக் காரிலே எங்களுடன் வந்திருந்தார்.

எனவே, திரு. நாயுடு அவர்கள் இரும்புடனேயே தனது வாழ்நாளின் பெரும் பகுதி, நாட்களை கழித்தவர் என்றாலும், அவரது இதயம் இரும்பாக இல்லை. எண்ணற்ற இடங்களில் கரும்பாகவும் திகழ்ந்தார்.

தாய்மொழிக்குப் பங்கம் வந்தபோது அவர் கனல் பட்டக் எண்ணெய்க் கடுகு போல வெடித்து ஒலி எழுப்பினார். அத்தகைய ஒலிகள்தான் தஞ்சைப் பாசறைத் திடல் மாணவர் இந்தி எதிர்ப்பு மாநாட்டிலும், சிவகங்கை மாநாட்டிலும் திரு. நாயுடு பேச்சுகள் அமைந்திருந்தன என்பதற்காகவே இங்கே சுட்டிக் காட்டினேன்!

அதே ஜி.டி. நாயுடு அவர்கள் நமது நாட்டு விவசாய அருமைகளை உணர்ந்து செயல்பட்டார். மாடு கட்டிப் போராடித்தால் மாளாது செந்நெல் என்று, ஆணைக் கட்டிப் போராடித்த விவசாயப் பெருமக்களது பண்டை நாட்களின் அருமை. பெருமைகளுக்குத் திரு. ஜி.டி. நாயுடு மீண்டும் புது வரலாறு படைத்தார்.

தொழில் வளர்ச்சி ஒன்றே நாட்டின் வறுமையை முழுக்க முழுக்க போக்கி விடாது என்பதை உணர்ந்த திரு. நாயுடு அவர்கள், நமது நாடு விவசாய நாடு என்பதையும், விவசாயிகள்தான் உலகுக் குரிய உணவை விளைவித்து வாழ வைப்பவர்கள் என்பதையும் நன்கு புரிந்தவர்தான் நாயுடு அவர்கள். அதனால், விவசாயத்தில் புதிய மறுமலர்ச்சிகளைச் செய்ய முடியுமா என்று அவர் சிந்தித்தார்!

விவசாயத்தில்
விஞ்ஞானம்!

சிறந்த கருவிகளையும், இன்றைய நிலைக்கு ஏற்ற விவசாய உரங்களையும் பயன்படுத்தி விளைச்சலை விருத்தி செய்ய முடியுமா என்று சிந்தித்து அதற்கான வழிகளை நாடினார். விவசாயத்தில் விஞ்ஞானம் ஊடுருவ வேண்டும். அப்போதுதான் விளைச்சல் பெருகும் என்று விவசாயகளுக்கு விளக்கம் கூறினார்!

புதிய முறைகளை விவசாயத்தில் புகுத்தி உணவுப் பொருட்களை எப்படியெல்லாம் பெருக்க முடியும் என்பதை அவர் கிராம மக்களுக்கு எடுத்துரைத்தார்.

மேல் நாட்டில் 1950-ஆம் ஆண்டில் ஸ்டாக்ஹோம் என்ற நகரில் அனைத்துலக விவசாயிகள் மாநாடு நடைபெற்றது. அம் மாநாட்டில் திரு. ஜி.டி. நாயுடு கலந்து கொண்டு விவசாயம் மேம்பாடுகளையும் அரிய உரையாக நிகழ்த்தினார்.

கோவை மாவட்ட விவசாயக் கல்லூரியின் வளர்ச்சிக் குழு உறுப்பினராக இருந்த நாயுடு, மீண்டும் அந்தக் குழு கூடியபோது சில விவசாய விஞ்ஞான விந்தைகளை அவர் விளக்கிப் பேசினார்.

தொழிலியல், பொறியியல் வித்தகங்களை நன்குனர்ந்த திரு. நாயுடுவுக்கு, கிராமத்து விவசாயம் பற்றி என்ன தெரியும் என்று எண்ணியவர்கள் மத்தியில், அவர் விவசாயம் குறித்து என்னென்ன குறிப்பிட்டாரோ தனது உரையில், அவையனைத்தையும் சோதனைகள், வாயிலாகச் செய்து காட்டியதைப் பார்த்தவர்கள் வியந்து போனார்கள்!

இவ்வாறு நாயுடு செய்த சோதனைகள் விவசாயத் துறையில் அன்று வரை எவரும் செய்து காட்டாத புதுமைகளாகவே இருந்தன. அதனால் விவசாய உற்பத்திக்கு அவை புது வழிகளாக அமைந்தன.

கோயம்புத்தூர் நகருக்கு அடுத்துள்ள போத்தனூர் என்னும் நகரில், திரு. நாயுடு தனது விவசாய விந்தைகளை, அதற்கான ஆராய்ச்சிகளைச் செய்திட ஒரு விவசாயப் பண்ணையைச் சொந்தமாக அமைத்தார். 40 ஏக்கர் நிலத்தில் அந்தப் பண்ணை உருவானது. என்னென்ன மரம், செடி, கொடிகளையும், மற்ற தாவர வகைக ளையும் அந்தப் பண்ணையில் வைத்து உருவாக்க முடியுமோ அவை அனைத்தையும் அங்கே வைத்துப் பாதுகாத்தார் நாயுடு அவர்கள்.

போத்தனுசரில்
விவசாயப் பண்ணை!

இந்த விவசாயப் பண்ணையில் அவர் செய்த ஆராய்ச்சிகள் ஏராளம். அவற்றுள் சில வெற்றிகளையும் சில தோல்விகளையும் விளைவித்தன. என்றாலும், அவற்றைப் பற்றியெல்லாம் கவலைப் படாமல், மேற்கொண்டு பணம் செலவழித்து அந்தப் பண்ணையை காண்போர் வியக்கும் வண்ணம் நாயுடு வளர்த்து வந்தார்.

அந்தப் பண்ணையில் திரு. நாயுடு 1941-ஆம் ஆண்டு வாக்கில், முதல் ஆறு ஆண்டுகள் இடைவிடாமல் பல சோதனை களைச் செய்தார். பருத்தி, சோளம், கேழ்வரகு, பப்பாளி, ஆரஞ்சு, வாழை, காலி பிளவர் போன்ற பயிர்களை அவர் அங்கே ஆராய்ந்தார். அதற்கான மருந்துப் பொருட்களை ஊசி மூலமாக அந்தச் செடிகளின் வேர், தண்டு, பழம் ஆகியவற்றுள் பேட்டார். அதன் பலன்களை இந்தப் புத்தகத்தின் ஆரம்பத்தில் சுருக்கமாகப் படித்தீர்கள். இப்போதும் சற்று விரிவாகவே அவற்றை அறிவோம். பருத்திப் பயிர் புலன்!

பருத்தி பயிர் சாதானமாக மூன்றடி முதல் நான்கு அடிகள்தான் வளரும். ஆனால், ஜி.டி. நாயுடு பயிரிட்ட பருத்திப் பயிர், பத்து அடி முதல் பதினைந்து அடி வரை வளர்ந்தது என்றால் இதுவே ஒரு விந்தைதானே!

சாதாரண பருத்தி என்ன விளைச்சலைக் கொடுக்குமோ, அதைவிட நாயுடு அவர்களின் பருத்தி ஐந்து மடங்கு பலனை விளைச்சலாகக் கொடுத்தது.

சாதாரணமாக, மற்ற விவசாயிகள் பயிரிடும் பருத்தி பயிர் ஆறு மாதங்கள்தான் உயிர் வாழ்ந்து பலனைக் கொடுக்கும். நாயுடு பருத்தி அதற்கு மாறாக, நான்கு ஆண்டுகள் வரை உயிரோடு வாழ்ந்து பல மடங்குப் பலனைக் கொடுத்தது.

திரு. நாயுடு பயிரிட்ட பருத்திச் செடியில் இரண்டரை அங்குல இழையுள்ள இருபத்து நான்கு இராத்தல் பருத்தி விளைவதைக் கண்ட மற்ற விவசாய மக்கள் ஆச்சரியப்பட்டார்கள். இதில் இன்னொரு அதிசயம் என்னவென்றால், நாயுடு அவர்களின் பருத்திச் செடியின் விதைகளை மீண்டும் விதைக்கும்போது; நான்கே மாதங்களில் அவை பயிராகி ஐந்தடிச் செடிகளாக உயர்ந்து விடுகின்றன.

12 அடி உயரம் வளரும்
துவரைப் பயிர்!

துவரைச் செடி 5 அல்லது 6 அடி உயரம் உடையதாய் விளையும். ஒவ்வொரு செடியும் 8 அவுன்ஸ் தானியப் பயிர்களைக் கொடுக்கும். அவை 9 மாதங்கள் உயிரோடு இருக்கும்.

ஆனால், திரு. நாயுடு அவர்களால் ஊசிப் போடப்பட்டு, வளர்ந்த பயிர் - 12 அடிகள் வரை, அதாவது, இரண்டு மனிதர்களை ஒரே நீளமாக்கிப் பார்த்தால் எவ்வளவு உயரமாகத் தோற்றமளிப் பார்களோ, அதைப் போலவே துவரைச் செடியாக அல்லாமல் மரம் போல காட்சி தந்தது.

அந்த துவரை மரத்தின் பயிரிலிருந்து 60 அவுன்சு பயிர் தானியங்களைப் பெறலாம். இந்தத் துவரைப் பயிர் 4 ஆண்டுக் காலம் உயிரோடு வாழ்கின்றது. ஒருவேளை துவரைப் பயிர்களை எதிர்பாராமல் நோய் தாக்குமானால்கூட, குறைந்தது அந்தப் பயிர் ஓராண்டுக் காலம் உயிரோடு வாழ்ந்து பலன்களைக் கொடுத்து வரும்.

15 அடிகள் வளரும்
சோளப் பயிர் புலன்!

சோளம் செடிகள் 15 அடிகள் உயரம் வளர்கின்றன. என்ன காரணம் இதற்கு? திரு. ஜி.டி. நாயுடு அவர்களது ரசாயன மருந்துடன் ஊசி ஏற்றப்பட்ட செடி என்பதே காரணம். மரம் போல வளர்ந்து காணப்படும் நாயுடு சோளப் பயிர், ஏறக்குறைய 28 கிளைகள் பெற்றிருந்தன. இதில் 39 கதிர்கள் காணப்படுகின்றன. எல்லாத் தண்டுகளின் மொத்த நீளம் 181 அடிகள் இருப்பதாகப் பார்த்தவர்கள் கணக்கிட்டு இருக்கிறார்கள்.

இந்தச் சோளச் செடியின் விதைகளை மறு பயிராக விதைக்கப்படும் போது, அதன் கன்றுகள் இரண்டு திங்களுக்குள் 10 அடிக்கு மேல் உயரமாக வளர்ந்து விடுகின்றன.

காலி பிளவர்
பயிர் பலன்!

காலி பிளவர் செடிக்கும் திரு. நாயுடு இரசாயன ஊசி போட்டுப் பயிரிட்டிருக்கிறார். இந்தச் செடி 3 முதல் 4 அடிகள் வரை மிகச் செழிப்பாகப் பயிராயின. ஆனால், காலிஃபிளவர் செடிகளை மறுபடியும் பயிரிடும்போது, இரசாயன ஊசி போட்ட மற்ற பயிர் களைப் போல அதன் விதைகள் பலன் கொடுக்கவில்லை. சாதாரண செடிகளைப் போலவே அவை பலன் கொடுக்கின்றன. என்ன காரணமோ தெரியவில்லை. திரு. நாயுடு அவர்கள் அதை மீண்டும் மீண்டும் ஆராய்ச்சி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ஒரு வாழை மரத்தில்
9 வகை சுவை பழங்கள்!

மற்றப் பயிர்களைப் போலவே, திரு. நாயுடு வாழைக் கன்றுகளுக்கும், இரசாயன மருந்து ஊசி போட்டு ஆராய்ச்சி செய்தார். அதனால், அவர் கண்டு பிடித்த பலன் என்ன தெரியுமா?

ஒரே ஒரு வாழை மரத்தின் பழங்கள்; ஒன்பது வகையான சுவைகளோடு பயிராவதை அவர் கண்டார். ஆனால், பழங்களின் அளவும், விளைச்சலும் அதிகமாகக் காணப்படவில்லை என்பதையும் உணர்ந்தார்.

ஒரே பப்பாளி மரத்தில்
நூற்றுக் கணக்கான காய்கள்!

பப்பாளிப் பழம் விளையும் மரங்களுக்கு திரு. நாயுடு ஊசி போட்டு ஆராய்ந்தார். அந்த மரங்களில் அளவுக்கு மீறிய பழங்கள் விளைவதை அவர் கண்டார்.

ஒவ்வொரு பப்பாளி மரத்திலும், நூற்றுக் கணக்கான காய்கள் விளைகின்றன. அவை ஒரே மாதிரியான உருவமாக இல்லாமல், பல்வேறு வடிவங்களோடு காய்க்கின்றன.

பப்பாளிப் பழம், பலாப் பழங்கள் வடிவங்களிலும், மாம்பழம் அளவுகளிலும் பழுக்கின்றன. ஒரே கிளையில் பழுக்கும் பழங்கள் பல வடிவங்களில் பழுத்துக் காணப்படுவதற்கு என்ன காரணம் என்பதையும் திரு. நாயுடு ஆராய்ந்தார். இவ்வாறு ஒரே கிளையில் பழுக்கும் பழங்கள் ஒவ்வொன்றும், உருவ மாறுதல்கள் பெற்றிருப்பதும் ஒரு விஞ்ஞான விந்தை அல்லவா?

ஊசி போடப்படாத பப்பாளி மரத்தில் காய்கள் மர உச்சியில், தென்னை, பனை மரங்களைப் போலவே காய்ப்பது வழக்கம். ஆனால், ஊசி போடப்பட்ட மரங்கள் தரை மட்டத்திலிருந்து உச்சி வரை, பலா மரத்தைப் போல காய்க்கின்றன. அப்படிப்பட்ட பழங்கள் பழுத்த பின்பு இனிமை மிகுந்த சுவையோடு இருக்கின்றன. இதுவும் ஒரு விஞ்ஞான விந்தை அல்லவா?

பப்பாளிப் பழம் உடலுக்கு நல்ல மருந்தாவது போல, உணவுச் செரிமானத்தையும் உருவாக்குகின்றது. ஊசி போடப்படாத பப்பாளி மரங்களில் மூன்றாண்டுகளுக்குப் பிறகு, சுவை அதிகமாகக் காணப்படுவதில்லை. ஆனால், பல ஆண்டுகள் அவை உயிரோடு வாழ்வது எண்ணமோ உண்மை.

இனிப்பு ஆரஞ்சு கசக்கும்!
கசப்பு ஆரஞ்சு இனிக்கும்!

திரு. நாயுடு அவர்கள், ஆரஞ்சுப் பழம் விளைச்சலை, ஒரு முறைக்குப் பன்முறை ஆராய்ந்து பார்த்தார். அதில் அவர் அவ்வளவாக வெற்றி பெறவில்லை. ஆரஞ்சுப் பழங்களின் சுவையில், தனது ஊசி மருந்தால் சுவை மாற்றத்தை உருவாக்கி இருக்கிறார்.

இதில் என்ன விஞ்ஞான விந்தையை திரு. நாயுடு உருவாக்கி இருக்கிறார் தெரியுமா? ஊசி போடப்பட்ட ஆரஞ்சுப் பழங்களை இனிப்புச் சுவையிலே இருந்து கசப்புச் சுவைக்கும், கசப்புச் சுவையிலே இருந்து இனிப்புச் சுவைக்கும் மாற்றிட சில இரசாயன முறையைப் பயன்படுத்தி வெற்றி பெற்றவர் திரு. நாயுடு அவர்கள். ஆனால், ரசாயன முறைகளைத் தான் செய்தாரே தவிர, ஆரஞ்சு விதைகளில் எந்தவித மாறுதலையும் அவர் செய்யவில்லை.

போத்தனூர் நகரத்தில், பெரும்பொருட்களை செலவு செய்து சொந்தமாக ஒரு விவசாயப் பண்ணையை ஏன் உருவாக்கினார் ஜி.டி. நாயுடு? அந்தப் பண்ணையில் உள்ள பயிர் வகைகளில், மரம், செடி. கொடிகளில் விஞ்ஞான வித்தைகளைப் புகுத்தி ஏன் ஆராய்ச்சி செய்தார் நாயுடு என்பதை நாம் சற்று சிந்தித்துப் பார்த்தால், அவருடைய உண்மையான மக்கள் நேய விவசாய தத்துவத்தை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

நமது நாடு வறுமையால் வாடும் நாடு. பசியைப் பிணிகளாகக் கொண்ட மக்கள் உழலும் நாடு. இப்படிப்பட்ட மக்களின் பசியைப் போக்க, வறுமைகளை அகற்ற, நாயுடு அவர்கள் கண்டுபிடித்துள்ள உணவு வகைகள் ஆக்கம்; பெரிதும் அவர்களுக்குப் பயன்படும் என்ற நோக்கத்தாலே தான், அவர் விவசாயத்தில், வேளாண் துறையில் விஞ்ஞானத்தைப் புகுத்தி விந்தைகளைச் செய்தாரே தவிர, ஏதோ பேருக்கும், புகழுக்கும், விளையாட்டுகளுக்காகவும் அல்ல என்பதை நாம் சிந்தித்து உணர வேண்டிய ஒரு சம்பவம் ஆகும்.

தான் கண்டுபிடித்த பருத்திச் செடிகளின் விதைகளை ஏழை விவசாயப் பெரு மக்களுக்கு இலவசமாகக் கொடுக்க திரு. நாயுடு முன் வந்தார். ஆனால், ஒருவராவது அவரது உள்ளத்தைப் புரிந்து கொண்டு, அதை வாங்கிப் பயிரிட முன் வரவில்லை. இப்படிப்பட்ட நாட்டில் இவ்வளவு அறிவீனர்களாக வாழும் மக்களை யார் காப்பாற்ற முன் வருவார்கள்?

எவரும் நாயுடு அவர்கள் இலவசமாகக் கொடுக்க முன் வந்த விதைகளை வாங்கிப் பயிர் செய்ய முன் வராததைக் கண்ட அவர், பத்திரிக்கையில் விளம்பரம் கொடுத்தார். அந்த ஆங்கில விளம்பரம் வருமாறு :

“ஐந்து பங்கு அதிகமான விளைச்சலைக் கொடுக்கும் பருத்தி விதைகளும், செடிகளும் விற்பனைக்குத் தயார். ஒரு விதையின் விலை 10 ரூபாய், செடியின் விலை 1000 ரூபாய் என்று விளம்பரம் கொடுத்தார் திரு. நாயுடு.

ஏன் அந்த விதைகளுக்கு விலைகளை நிர்ணயம் செய்தார்? சும்மா கொடுத்த மாட்டை நிலாவில் கட்டி ஒட்டும் புத்தி படைத்த மாக்களுக்கு விதைகளை இலவசமாக கொடுத்தும்கூட, வாங்க முன்வராத மக்கள் இடையில், பண வசதி இருக்கும் பண்ணையார்களாவது முன் வரமாட்டார்களா? என்ற எண்ணத்தில்தான் திரு. ஜி.டி. நாயுடு விளம்பரம் செய்து பார்த்தார்.

விளம்பரத்தை தமிழிலா கொடுத்தார் திரு. நாயுடு? இங்லிஷ் மொழியில் அல்லவா செய்தார் விளம்பரத்தை? சில நாட்களுக்குள், அந்த விளம்பரத்தின் மகிமையால், எண்ணற்றக் கடிதங்கள் உலகம் முழுவது இருந்து வந்து குவிந்தன என்றால், தமிழன் மனப்பான்மையை என்னவென்று கூறுவது? அந்த விளம்பரத்தைக் கண்ட அறிவுடைய மேலை நாட்டு விவசாயிகள் பணத்தை திரு. நாயுடுவுக்கு அனுப்பி வைத்தார்கள்.

போத்தனூரில் அமைந்த விவசாயப் பண்ணையை, சுற்றுலா பயணிகளைப் போல அவ்வூர் மக்கள் திரண்டு வந்து வேடிக்கைப் பார்த்தார்கள். ஆனால், பண்ணையின் பலனைத் தமிழ் நாட்டார் பயன்படுத்திக் கொள்ளும் அறிவீனர்களாக இருந்து விட்டார்கள்.

இந்தியா முழுவதிலும் இருந்த மக்கள், புகழ் பெற்ற தலைவர்கள், விஞ்ஞான உள்ளம் படைத்த ஆய்வாளர்கள், கோவை, நீலகிரிப் பகுதிக்கு வருகை தரும் சுற்றுலா மக்கள், கோயில் குளம் சுற்றும் புனித யாத்திரிகர்கள் கூட போத்தனூர் நகர் சென்று ஜி.டி. நாயுடு விஞ்ஞான விவசாயப் பண்ணையின் அருமைகளைக் கண்டு பெருமைப்பட்டார்கள்.

விஞ்ஞான வித்தைகளை விளக்கிக் கொண்டிருந்த திரு. ஜி.டி. நாயுடுவின் பண்ணையைப் பார்த்துவிட்டுச் சென்றவர்கள், பாராட்டுக் கடிதங்களை எழுதி, நாயுடு அவர்களது உழைப்புக்கும், அறிவுக்கும் மரியாதை காட்டி மகிழ்ந்தார்கள். அந்தக் கடிதங்களிலே சிலவற்றை கீழே கொடுத்திருக்கிறோம். படித்துப் பாருங்கள் தமிழன் பெருமையை

உலகம் புகழும் நோபல் பரிசைப் பெற்ற தமிழ்நாட்டு விஞ்ஞானி சர்.சி.வி. இராமன் 1948-ஆம் ஆண்டில் எழுதிய கடிதம் இது:

பாராட்டிய கடிதங்கள்!
37 ஆயிரங்களாகும்!

திரு. ஜி.டி. நாயுடு அவர்கள் இயற்கைப் படைப்பில் புரட்சிகரமான மாற்றங்களைச் செய்துள்ளார். அவர் கையாளும் முறைகள் புதுமையானவை.

நம் நம்பிக்கையைத் தகர்க்கக்கூடிய, இராட்சசச் செடிகளை அவர் உண்டாக்கி இருக்கிறார். அத்தகைய இரண்டு செடிகளான சோளம், பருத்தி ஆகியவற்றின் முன் நான் நிற்கும்போது புகைப்படம் எடுத்திருக்கிறார்கள்.

செடிகளில் உள்ள இந்த மாபெரும் மாறுதல், அவர் செலுத்திய மருந்தின் பயன் ஆகும். அவருடைய பசுமையான அறிவும், ஆராய்ச்சியும் மனித இனத்துக்குப் பெரிதும் நன்மை பயக்கக் கூடியவை.

உணவுக்கு வறுமைப்பட்ட இந்த நாட்டிற்கு அவர் காட்டி யுள்ள வழி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஜி.டி.நாயுடு அவர்களின் விவசாய முறை உலகெங்கும் மேற்கொள்ளப்பட வேண்டிய ஒன்று.

இலண்டன் மாநகரிலே உள்ள ஆராய்ச்சிக் கழகத்தில் பணியாற்றுபவர் டாக்டர் ஜானகி, அவர், 1.1.49ஆம் ஆண்டில் எழுதிய பாராட்டுக் கடிதம் இது :

திரு. ஜி.டி. நாயுடு அவர்களது புதிய ஆராய்ச்சிகளை நான் பாராட்டிப் போற்றுகிறேன். அவருடைய விஞ்ஞான சோதனைகளின் வெற்றிகளை மேலும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றோம். திரு. நாயுடு பெயர் மனித குல வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டியவை.

பம்பாய் நகரிலே வாழ்ந்த எஸ். இராதா கிருஷ்ணன் என்பவர் 12.5.48 அன்று எழுதிய கடிதம் இது.

திரு. நாயுடு அவர்களது விவசாயக் கண்டுபிடிப்புகளைப் பற்றிய விவரங்களைப் பத்திரிக்கைகளில் படித்தேன். ஊசி மருந்து முறை மூலம் எதிர்பாராத விளைவுகளை நீங்கள் உருவாக்கி இருப்பது; மைதாஸ் என்னும் மன்னனின் தொட்டதெல்லாம் பொன்னாக்கும் கதை போல இருக்கிறது.

தமிழ் நாடு விவசாய
அமைச்சர் பாராட்டு!

சென்னை, மாகாணத்தில் அப்போது விவசாயத் துறை அமைச்சாரக இருந்த திரு. மாதவ மேனன் 28.10.48 அன்று எழுதிய கடிதம் இது :

"பருத்திச் செடியில் நீங்கள் செய்துள்ள சாதனை வியப்பிற் குரியது. நீங்கள் தேசீய மயமாக்கப்பட வேண்டும். உங்களது அறிவும், ஆராய்ச்சியும் நாம் பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காக்கப் பயன்பட வேண்டும்.

மேற்கண்டவாறு எழுதப்பட்ட கடிதங்கள் எண்ணற்றவை. இவற்றுக்கெல்லாம் திரு. நாயுடு நன்றிக் கடிதங்களை எழுதியுள்ளார். அவ்வாறு அவர் எழுதிய கடிதங்கள் எத்தனை தெரியுமா? 37 ஆயிரம் கடிதங்கள் ஆகும். உலகத்தில் இவ்வளவு கடிதங்களை அவர்கள் துறை சம்பந்தமாக எழுதிய விஞ்ஞானி யார்? அதை ஆராய்ச்சிதான் செய்ய வேண்டும்.