நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்/21. போர்வாள்

விக்கிமூலம் இலிருந்து

21. போர்வாள்

“யதார்த்தம் பொன்னுசாமிப் பிள்ளை நாடகக் கம்பெனியோடு ,நான் ஒரு சமயம் திருப்பதிக்குப் போயிருந்தேன்...”

“அது எப்போது ? திருப்பதி வேங்கடேசப் பெருமானுக்கு வெடி வைப்பதாக நினைத்துக் கொண்டு இருந்த வீட்டுக்கே வெடி வைத்துக் கொண்டீர்களே, அப்போதா ?”

“இல்லை, அதுக்கு முந்தின்னு நினைக்கிறேன். சுவாமி தரிசனத்துக்காக எல்லாருமாச் சேர்ந்து மலைக்குப் போயிருந்தோம். அங்கே வைச்சிருந்த சந்தனக் கலவையின் வாசனை என் மூக்கைத் துளைத்தது. இவ்வளவு வாசனை வீச இதிலே என்னவெல்லாம் சேர்த்திருப்பாங்களோ ?"ன்னு நினைச்சேன். அவங்களாக் கொடுத்தா தொட்டுச் சேவிச்சிக்கிற அளவுக்குத்தான் கொடுக்கப் போறாங்க, அதுக்கு மேலேயா கொடுக்கப் போறாங்க?'ன்னு தோணுச்சி. அந்தச் சமயம் எனக்கென்னவோ அதிலேயே குளிச்சி எழுந்தாத் தேவலைன்னு பட்டுது. அக்கம் பக்கம் பார்த்து யாருக்கும் தெரியாம அதிலே பாதியை வழிச்செடுத்து மடியிலே வைச்சுக் கட்டிக்கிட்டேன். என் போதாத காலம், உடனே அதைக் கவனிச்சிவிட்ட அர்ச்சகர்களிலே ஒருத்தர், “இங்கே வைச்ச சந்தனத்திலே பாதியை எவனோ திருடி எடுத்து வைச்சிக்கிட்டான்; இந்த இடத்தை விட்டு வெளியே போறதுக்கு முந்தி அவனைப் பிடிக்கணும். எல்லாக் கதவையும் சாத்துங்க!'ன்னு கத்த ஆரம்பிச்சிட்டார். ‘இது என்ன வம்பு ?"ன்னு நான் மெல்ல நழுவினேன். அதுக்குள்ளே எல்லாக் கதவையும் ஒண்ணொண்ணா சாத்த ஆரம்பிச்சிட்டாங்க. ‘அகப்பட்டுக்கிட்டா அவ்வளவுதான்'னு, ‘தப்பினோம், பிழைச்சோம்னு’ தலை தெறிக்க மலையடிவாரத்துக்கு ஓட்டமும் நடையுமா வந்துட்டேன்.”

“சந்தனம்... ?”

“விடுவேனா? அது என் மடியிலேயே இருந்தது. ‘ஶ்ரீ பாதசாகரம்’னு அந்தக் கலவைச் சந்தனத்துக்குப் பேராம். பச்சைக் கற்பூரம், அத்தர், அது இதுன்னு என்னவெல்லாமோ அதிலே சேர்த்திருந்தாங்க. சுவாமி தரிசனம் செய்யறச்சே இந்த பக்தருங்க ‘கோவிந்தா, கோவிந்தா'ன்னு ஓயாம, ஒழியாமச் சத்தம் போடறாங்க, இல்லையா ? அதாலே பெருமாளுக்குத் தலையை வலிக்க ஆரம்பிச்சுடுமாம். அந்த வலியைப் போக்கறதுக்காக இந்தச் சந்தனத்தைக் கலந்து அவர் மேலே பூசுவாங்களாம். வாரத்துக்கு ஒரு நாள் அதை வழிச்சி எடுத்து, சின்னச் சின்னப் பொட்டலங்களாகக் கட்டி, வேணுங்கிற பக்தர்களுக்கு விலைக்கு விற்பாங்களாம்...”

“திருப்பதி ‘ரேட்'டிலே பார்த்தால் நீங்கள் எடுத்துக் கொண்டு வந்துவிட்ட சந்தனமே ஐந்நூறு, ஆயிரம் என்று விலை போயிருக்கும் போலிருக்கிறதே ?”

“யார் கண்டது, போனாலும் போயிருக்கும். அதுக்குள்ளே அங்கே என்னைக் காணாத பொன்னுசாமிப் பிள்ளை சும்மா இருப்பாரா ? சந்தனத் திருடன் நானாத்தான் இருக்கும்"கிறதை அவர் எப்படியோ ஊகிச்சிக்கிட்டுக் கீழே வந்து, ‘ஏண்டா, இப்படிக்கூடச் செய்யலாமா ?'ன்னார். ‘நாமெல்லாம் காசு கொடுத்து வாங்கிக் கட்டுப்படியாகிற சமாசாரமா இது ‘ன்னு, நான் அவர் மேலேயே கொஞ்சம் சந்தனத்தை எடுத்துப் பூசி, ‘எப்படி இருக்கு?'ன்னு கேட்டேன். அது அவர் சூட்டைத் தணிக்கலேன்னாலும் என் சூட்டைக் கொஞ்சம் நாள் தணிச்சி வந்தது. எல்லாம் தீர்ந்து அதை எடுத்து வைச்சிக்கிட்டு வந்த வேட்டியைச் சலவைக்குப் போட்டேன். ஒரு தடவையில்லே, பல தடவை போட்டேன். வேட்டி கிழியற வரையிலே அந்தச் சந்தன வாசனை போகவே யில்லே!”

“சந்தன வாசனையும் போகவில்லை; அதன் நினைவும் உங்கள் மனசை விட்டுப் போகவில்லை. அப்புறம்... ?”

“நம்ம சின்னராஜூ நாடகத்தாலே சென்னையிலே கொஞ்சம் சலசலப்பு ஏற்பட்டது...”

“யார் அந்தச் சின்னராஜ ?”

“இப்போ மேலவைத் தலைவராயிருந்துக்கிட்டிருக் கிறாரே, சிந்தனைச் சிற்பி சிற்றரசு - அவருக்குப் பேர் அப்போ அதுதான். அவர் எழுதிய ‘போர்வாள்’ நாடகத்திலே புரட்சியை முன்னின்று நடத்தும் ‘அன்பானந்தனாக நான் வருவேன்....”

அதே வேடத்தை சி.பி.சி., சி.என்.ஏ., கூட.!ஏற்றிருக்கிறார்கள் போலிருக்கிறதே?”

“ஆமாம், பெரியாரைத் தவிர பாக்கி எல்லாருமே அந்த வேடத்தைப் போட்டிருங்காங்கன்னு கூடச் சொல்லிவிடலாம் - அவ்வளவு பிரபலமான வேடம் அது. ஏன்னா, ‘திராவிட நாடு லட்சியமே அந்த நாடகத்திலேதான் அப்போ நிறைவேறிக்கிட்டிருந்தது...”

“அது எப்படி?

“புரட்சித் தலைவன் அன்பானந்தன் வேடம் போட்டுக்கிட்டு, தோள்மேலே திராவிடர் கழகக் கொடியை ஏந்திக்கிட்டு, மொதல்லே நான் ஒரு சலவைத் தொழிலாளி கிட்டே போவேன். சலவைத் தொழிலாளிகளே! சாக அடித்தான் சமரச நோக்கம் உடைய ஒருவரை. அந்த மாசு படிந்த மன்னனின் அழுக்கை வெளுக்கிறீர்கள் நீங்கள்; அவனோ உங்கள் மாசுபடிந்த மனத்தைத் துடைத்தானில்லை. இன்றே புரட்சி செய்யுங்கள், புறப்படுங்கள்!’ என்று ஒவ்வொரு தொழிலாளியிடமும் சென்று பேசிப் புரட்சிக் கனலை மூட்டுவேன். அவர்களும் என்னுடன் கொடியேந்திப் புறப்படுவார்கள். எங்களை எதிர்பார்த்துக் காத்திருப்பவன் போல் முடிவேந்தன் ஒருவன் கையில் போர்வாளுடன் சிம்மாசனத்தில் வீற்றிருப்பான். அவன் எங்களைக் கண்டதும் அதைத் தூக்கி என்னிடம் கொடுத்து விடுவான். அவ்வளவுதான்: ‘வீழ்ந்தது முடியாட்சி; எழுந்தது குடியாட்சி! திராவிட நாடு திராவிடருக்கே!’ என்று நான் முழங்குவேன். என்னைத் தொடர்ந்து, ‘திராவிட நாடு வாழ்க திராவிட நாடு வாழ்க!’ என்று எல்லாரும் முழங்குவார்கள். திருச்சி, தஞ்சை இந்தப் பக்கமெல்லாம் வெற்றி முரசும், வீர முரசும் கொட்டிய இந்த நாடகத்தைச் சென்னையிலும் நடத்திப் பார்த்து விடவேணும்னு நினைச்சார் என்.வி.என்...”

“எந்த என்.வி.என்...?”

“இப்போ தொழிலாளர் நல அமைச்சராயிருக்கிறாரே மாண்புமிகு என்.வி.நடராசன், அவரேதான். அவரும் டி.எம். பார்த்தசாரதியும்...”

“தி.மு.க.வின் ஆரம்ப காலத்தில் எப்போது பார்த்தாலும் அண்ணாவுடன் இருப்பாரே, அந்தப் பார்த்தசாரதியா ?”

“அவரேதான்; ‘தி.மு.க வரலாறு'ன்னு ஒரு புத்தகம் எழுதி, அதற்காக எழுத்தாளர் சங்கத்தின் கேடயத்தைக் கூட வாங்கியிருக்கிறார் போலிருக்கிறதே அவர் ?”

“ஆமாமாம், தி.மு.க.வின் வளர்ச்சிக்காக முதன் முதலில் ‘மாலை மணி’ என்று ஒரு நாளிதழைத் தொடங்கி வைத்தவர் கூட அவர்தானே ? அதற்கு அண்ணாதுரை மட்டுமல்ல, கருணாநிதிகூடக் கொஞ்ச நாட்கள் ஆசிரியராயிருந்ததாக ஞாபகம்...”

“அந்தப் பார்த்தசாரதியும் என்.வி.என்.னும் இன்னும் சிலரும் திருச்சிக்கு வந்து என்னைப் பார்த்தாங்க; நாடகம் நடத்தக் கூப்பிட்டாங்க. எனக்கும் அப்போ சென்னையிலே நாடகம் போட்டா தேவலைன்னு தோணுச்சி; வந்தேன். சவுந்தரிய மகாலிலே நாடகம். இழந்த காதல், விமலா அல்லது விதவையின் கண்ணீ ர், லட்சுமிகாந்தன் இந்த மாதிரி நாடகங்களைப் போட்டுக்கிட்டிருத்த வரையிலே எந்த வம்பும் இல்லே; போர்வாள்’னு போட்டது தான் தாமதம், சர்க்கார் அந்த நாடகத்தை நடத்தக் கூடாதுன்னு தடை போட்டுட்டாங்க...”

“எந்த சர்க்கார், பிரிட்டிஷ் சர்க்காரா ?”

“அவங்க போட்டிருந்தாலும் அதிலே ஓர் அர்த்தம் இருந்திருக்கும். ஒரு பக்கம் ஜனநாயகத்தைக் கட்டி வளர்த்தாலும், இன்னொரு பக்கம் முடியாட்சியை இன்னிய வரையிலே கைவிடாம இருக்கிறவங்க அவங்க. அந்த சர்க்கார் ‘போர்வாள்’ நாடகத்தைத் தடை செய்யல்லே; அதுக்குப் பதிலா அப்போ சென்னையிலே நடந்துக்கிட்டிருந்த பிரகாசம் சர்க்கார் தடை விதிச்சது...”

“பிறகு... ?”

“அப்போதைக்கு அந்தத் தடையை மீற வேணாம்னு வேறே நாடகங்களை நடத்த ஆரம்பிச்சோம். ஏன்னா, அப்போ நாட்டு நிலவரம் நல்லாயில்லே. எங்கே பார்த்தாலும் ஒரே கம்யூனிஸ்ட் கலாட்டா, குழப்பம். பொன்மலையிலே கம்யூனிஸ்டுகளைச் சுட்டுத் தள்றாங்கன்னு ஒரே புரளி, பீதி. பிரகாசம் வேறே ஒரு கம்யூனிஸ்ட்டைக்கூட வெளியே விடாம பிடிச்சி உள்ளே தள்ளிக்கிட்டே இருந்தார். இந்தச் சமயத்திலே என்கிட்டேகூட ஒருத்தர் வந்து, ‘நீங்க டிராமா தொடங்கறதுக்கு முந்தி ஒரு திரை விடறீங்களே, அந்தத் திரையைக் கூடக் கழற்றிச் சுருட்டிக் கொஞ்ச நாள் உள்ளே வைச்சுடுங்க இல்லேன்னா, உங்களையும் கம்யூனிஸ்டுன்னு பிரகாசம் உள்ளே போட்டுட்டாலும் போட்டுடுவார்னார்...”

“அப்படி என்ன இருந்தது அந்தத் திரையிலே... ?”

“திராவிட நாடு திராவிடருக்கேன்னு இருந்திருக்கும்னு நினைக்கிறீங்களா ? அதுதான் இல்லே; ‘உலகப் பாட்டாளி மக்களே, ஒன்றுபடுங்கள்’னு இருந்தது...”

“கம்யூனிஸ்ட் கட்சியிலும் உங்களுக்கு ஈடுபாடு உண்டா, என்ன?" “இல்லாதவன் யாராயிருந்தாலும் அவனுக்கு நிச்சயம் அதிலே ஓர் ஈடுபாடு இருக்கத்தானே இருக்கும்?”

“சரி, அப்புறம்... ?”

“கம்யூனிஸ்ட் தலைவர்களெல்லாம் வழக்கம் போல ‘அண்டர்கிரவுண்டு'க்குள்ளே போக ஆரம்பிச்சிட்டாங்க. அவர்களிலே ஒருத்தர் ஜீவானந்தம். அவரை ஒரு பிராமண நண்பர் என்கிட்டே அழைச்சிக்கிட்டு வந்து, நீங்கதான் இவருக்கு அடைக்கலம் கொடுக்கணும்'னார். சரி'ன்னு அவரை நான் மேக்அப் ரூமுக்கு அனுப்பி, மொதல்லே தலையை மொட்டையடிக்கச் சொன்னேன். அப்புறம் நெற்றியிலும் கைகளிலும் பட்டைப் பட்டையா விபூதியைப் பூசி, தியேட்டர் முதல் வரிசையிலேயே அவரை உட்கார வைத்து, தைரியமா நாடகம் பார்க்கச் சொன்னேன்."