நபிகள் நாயகம்-கி. ஆ. பெ. விசுவநாதம்/சமத்துவம்
3. சமத்துவம்
எம்பெருமானார் செய்த செயற்கரும் செயல்களில் ஒன்று சமத்துவம் என்பது. சமத்துவம் இந்துக்கள் கோயில்களிலே கிடையாது. கிறித்துவர்களின் ஆலயங்களில் கிடையாது. தன்னுடைய வேலைக்காரன் தொழுகைக்கு முன்னே சென்று விட்டால், எஜமானன் பின்னே சென்றால், அவனுக்கும் பின்னே இருந்துதான் தொழ வேண்டும். கிறித்துவர்கள் கோயிலில் அமைச்சருக்கு இடம், அரசனுக்கு இடம், அரச குடும்பத்திற்கு இடம், மந்திரிகளுக்கு இடம், உத்தியோகத்து கலெக்டர்களுக்கு இடம், மக்களுக்கு இடம் என்றெல்லாம் நாற்காலிகள் ஒழுங்கு படுத்தி இருப்பார்கள். இந்துக் கோயில்களிலே அர்ச்சகர் போகிற இடம் வேறு. ஜமீன்தார்கள் போகிற இடம் வேறு. பணக்காரர்கள் இடம் வேறு, ஏழைகள் இடம் வேறு. கடைசியாகத் தாழ்த்தப் பட்டவர்களுக்குக் கொடிக் கம்பத்தருகில் இடம் என ஒதுக்கப் பெற்றிருக்கும். பள்ளிவாசலில் அது இல்லை. அப்கன் அரசர் அமீர், ஐதராபாத் நிஜாம், துருக்கித் தலைவர் இனூனு, ஈரான் மன்னர், அரேபிய அரசர் யாராக இருந்தால்தான் என்ன? வேலைக்காரன் முன் சென்று முன் வரிசையில் இருந்தால், இந்த மன்னர்கள் அவனுக்கு அடுத்த வரிசையில் இருந்துதான் ஆண்டவனைத் தொழ வேண்டும். இன்னும் ஒரு படி தாண்டிச் சொல்கிறேன், தன் வேலைக்காரனுடைய காலடியில்தான் மன்னாதி மன்னர்கள் தங்கள் முடியை வைத்து ஆண்டவணைத் தொழ வேண்டும். [கை தட்டல்] அவ்வளவு தூரம் சமத்தவம் வற்புறுத்தப் பெற்றிருக்கிறது.
இம்மாதிரியான காட்சியைப் பிற சமயத்தினரிடத்தில் காண இயலாது. என்னுடைய நண்பர் கான் பகதூர் பி. கலிபுல்லா சாயபு அவர்கள் நபிகள் நாயகம் விழா ஒன்றில் பேசும் பொழுது, இஸ்லாத்திலே சமத்துவம் சொல்லப்பட்டிருக்கிறது என்று கூறினார்கள். எனக்குச் சிறிது வருத்தம் உண்டாயிற்று. நான் அவர்கள் பேசிய பின்னால் பேசினேன். நான் சொன்னேன்: 'அவர்கள் பேசியதை மறுக்கிறேன். இஸ்லாத்திலேதான் சமத்துவம் சொல்லப்பட்டிருக்கிறதா? மற்ற மதங்களிலே சமத்துவம் சொல்லப்படவில்லையா? அவர்கள் சொன்னது தவறு. மறுக்கிறேன்' என்றேன். அவர் என்னை வியப்போடு பார்த்தார். 'ஆமாம்! நீங்கள் சொன்னது பெரிய தவறு' என்றேன். 'என்ன?' என்றார். "இஸ்லாத்தில் மட்டும் சமத்துவம் சொல்லப்படவில்லை; எல்லாச் சமயங்களிலும் சமத்துவம் சொல்லப்பட்டு இருக்கிறது, ஆனால், இஸ்லாத்தில் மட்டும்தான் 'சமத்துவம் செய்யப்பட்டிருக்கிறது’" என்றேன். அதுதான் உண்மை. அம்மாதிரி பிற சமயங்களில் செய்யப்படாமல், சொல்லப்பட்டு மட்டும் இருக்கிறது. ஆகவே, இனிமேல் சொல்லும் போது இஸ்லாத்திலே சமத்துவம் சொல்லப்பட்டிருக்கிறது என்று சொல்லாமல், இஸ்லாத்தில் சமத்துவம் செய்யப்பட்டிருக்கிறது என்று சொல்லவேண்டும்" என்றேன் [கை தட்டல்]. ஒத்துக்கொண்டார்கள். உண்மையும் அதுதான்.