நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/தீர்க்கதரிசி கூறியது உண்மையே

விக்கிமூலம் இலிருந்து

136. தீர்க்கதரிசி கூறியது உண்மையே

பெருமானார் அவர்கள் பாரசீக நாட்டு அரசருக்கும், தூதர் மூலம் கடிதம் அனுப்பினார்கள்.

பாரசீக நாட்டு வழக்கப்படி கடிதம் எழுதுவதானால், அரசர் பெயரையே தலைப்பில் எழுதுவது வழக்கம். ஆனால், இக்கடிதத்திலோ, முதலாவதாக, ஆண்டவனுடைய திருநாமமும், அதன் பின் பெருமானாரின் திருப்பெயரும் எழுதப்பட்டிருந்தன.

அரசர் அக்கடிதத்தைப் பார்த்ததும் ஒரு அடிமை, தம்மைக் கேவலப்படுத்தி எழுதியிருப்பதாக ஆத்திரம் கொண்டு, அந்தக் கடிதத்தைத் துண்டு துண்டாகக் கிழித்து எறிந்தார்.

அந்த விவரம் பெருமானார் அவர்களுக்குத் தெரிய வந்ததும், “அந்த அரசும் சின்னா பின்னமாக்கப்பட்டுவிடும்” என்று தெரிவித்தார்கள்.

கடிதத்தைக் கிழித்து எறிந்த அரசர், மேலும் பெருமானார் அவர்களைச் சிறைப் பிடித்துக் கொண்டு வருமாறு, ஏமன் நாட்டு கவர்னருக்கு உத்தரவிட்டார். அதை நிறைவேற்றுவதற்காக இருவரை மக்காவுக்கு அனுப்பி வைத்தார் கவர்னர்.

செய்தி அறிந்த மக்கா வாழ் குறைஷிகள், “முஹம்மதை பாரசீக நாட்டு அரசர் உயிரோடு விட்டு வைக்க மாட்டார்” என் எண்ணி மிகவும் குதூகலம் அடைந்தனர்.

ஏமனிலிருந்து வந்த தூதர் இருவரும், பெருமானார் அவர்கள் மதீனாவில் இருப்பதை அறிந்து, அங்கே சென்று விவரத்தைக் கூறினார்கள்.

தூதர்கள் இருவரையும் ஒரு நாள் அங்கே தாமதிக்குமாறும், மறு நாள் முடிவு கூறுவதாகவும், பெருமானார் அவர்கள் கூறினார்கள்.

அன்று இரவு பெருமானார் அவர்கள் ஆண்டவனைத் தொழுதார்கள். அன்று இரவே, பாரசீக நாட்டு அரசரை, அவருடைய குமார் கொன்று விட்டார் என்ற செய்தி பெருமானார் அவர்களுக்கு, ஆண்டவனால் அறிவிக்கப்பட்டது.

மறுநாள் காலையில், தூதர்கள் இருவரையும் பெருமானார் அவர்கள் அழைத்து “உங்களுடைய அரசர் நேற்று இரவு கொல்லப்பட்டு விட்டார்” என்று தெரிவித்தார்கள்.

தூதர்கள் திடுக்கிட்டு, “தாங்கள் கூறுவதை நன்கு சிந்தித்துக் கூறுங்கள். இச்செய்தியை தங்களுடைய பொறுப்பின் மீது நாங்கள் அரசருக்கு அறிவிக்கின்றோம். அதனால் உண்டாகும் விளைவை, நீங்கள் அனுபவிக்க வேண்டியதிருக்கும். ஏனெனில், எந்தக் குற்றத்துக்காக நாங்கள் தங்களைக் கொண்டு போக வந்திருக்கிறோமோ, அதைக் காட்டிலும், தாங்கள் இப்பொழுது சொல்வது மிகப் பெரிதாக இருக்கின்றதே” என்று சொன்னார்கள்.

அப்பொழுது பெருமானார் அவர்கள், “என்னுடைய பொறுப்பிலேயே இச்செய்தியை நீங்கள் தெரிவிக்கலாம். அத்துடன் 'இஸ்லாத்தின் ஆட்சியானது, உங்கள் அரசரின் சிம்மாசனத்தின் அஸ்திவாரம் வரை வந்து சேரும்' என்றும் தெரிவியுங்கள்," என்று கூறினார்கள்.

தூதர்கள் இருவரும் ஏமனுக்குத் திரும்பி வந்து, ஆட்சித் தலைவரிடம் செய்தியைச் சொன்னார்கள்.

அதைக் கேட்டதும் அவர் வியப்படைந்தார். “இச்செய்தி உண்மையாயிருக்குமானால், அவர்கள் நபிகள் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. ஏனெனில், இந்தச் செய்தியை வெகு தொலைவில் இருந்து அறிந்து அவர்கள் சொல்லியிருக்கிறார்கள்” என்றார்.

சில நாட்களுக்குப் பிறகு, பெருமானார் அவர்கள் கூறியது உண்மை என்பது தெரிய வந்தது.

அரசர் கொல்லப்பட்டு அவருடைய மகன் ஆட்சியை ஏற்றிருக்கிறார் என்ற அறிக்கை ஆளுநருக்குக் கிடைத்தது. அப்பொழுதே, பெருமானார் அவர்கள் ஆண்டவனுடைய உண்மையான திருத்தூதர் என்பதை அவர் நன்கு உணர்ந்து, இஸ்லாத்தைத் தழுவினார். அவரோடு ஏமன் பகுதியிலிருந்தவர்களும் இஸ்லாத்தில் சேர்ந்தனர்.