உள்ளடக்கத்துக்குச் செல்

நமது முழக்கம்/மே தினங்களில் அண்ணா

விக்கிமூலம் இலிருந்து

மே தினங்களில் அண்ணா

வைகாசியில் கருடசேர்வை, ஆனியில் திருமஞ்சனம், ஆடியில் பூர உற்சவம், ஐப்பசியில் தீபாவளி, கார்த்திகையில் தீப விழா, மார்கழியில் திருவாதிரை, தையில் பூசம், மாசியில் மகம், பங்குனியில் உத்திரம், சித்திரையில் பௌர்ணமி இப்படி மாதந்தோறும் ஒவ்வொரு திருவிழா நடத்தி, தலைமுறை தலைமுயைாகப் பழக்கபட்ட மக்களிடையே, மே தின விழாக் கொண்டாட முற்பட்டிருக்கிறோம். மே விழா, மேதினியில் மக்களுக்கு வாழ்வளிக்கும் விழா என்று கூறினால், மக்கள் சுலபத்தில் நம்பமாட்டார்கள்; ஆச்சரியப்படுவார்கள். நாட்டு மக்களிலே, சிந்திக்க கற்றுக்கொண்ட பகுதியினருக்கு மட்டுமே, மே தின விழாவின் முக்கியத்துவம் தெரியும். மற்றவர்கள், இன்னமும் நான் முன்னால் குறிப்பிட்ட பல்வேறு திருவிழாக்களிலேயே ஈடுபடுவர்கள்—குடும்பம் குடும்பமாக! பாட்டாளி மக்களின் விடுதலை விழா மே தினம். நாடு அல்ல இதற்கு எல்லை! பாட்டாளிகள், வாழ்வுக்காக—விடுதலைக்காக—உரிமைக்காக மேதினத்தைக் கொண்டாடுகின்றனர். நாளொன்றுக்கு 8 மணி நேரம் உழைப்பது, 8 மணி நேரம் குடும்பத்தினருடன் குதூகலமாக வாழ்வது மற்ற 8 மணி நேரம் ஓய்வாக இருப்பது—இந்தத் திட்டத்தை, மே தினம் எடுத்துக் கூறுகிறது. பாட்டாளிக்குப் புது வாழ்வு அமைய வேண்டுமானால், இந்தத் திட்டம் தேவை. உழைத்து அலுப்பதும், உருக்குலைவதும், ஓயாமல் உழைப்பதும், வாழ்வின் சுவையையே காணாதிருப்பதும், இன்று பாட்டாளியின் ‘கதி’யாக இருக்கிறது. இதனால், தொழிலாளி, துயரின் உருவமாகிறான். அடிமைப்படுகிறான். வாழ்வு பெரியதோர் சுமை என்று எண்ணுகிறான். இந்த நிலையை மாற்றவேண்டும் என்ற நல்லெண்ணம் கொண்டவர்கள், எட்டு மணி நேரவேலை திட்டத்தை வலியுறுத்தினர். அதனை வலியுறுத்த, ஆண்டு தோறும் மே மாதம் முதல் தேதி அன்று விழா நாளாகக் கொண்டாட்டம் நடத்த ஏற்பாடு செய்தனர். இந்த விழாவின் துவக்கத்தின்போது, சோவியத் ரஷ்யா இல்லை! ஜாரின் ரஷியாவே இருந்தது. ரஷ்யா நாடு அல்ல; இவ்விழா விமரிசையாக நடந்த இடம் அமெரிக்கா. எனவே, மே தினத்தைப் பாட்டாளிகளின் விடுதலைக்காகப் பாடுபடும் நோக்கங் கொண்ட எல்லா கட்சியினரும் கொண்டாடலாம்.

ஜாரின் கொடுங்கோலாட்சிக் காலத்திலும், ரஷ்யாவில், மே தினம் மகத்தான விழாவாகக் கொண்டாடப்பட்டே வந்தது. பயங்கரமான அடக்கு முறை இருந்துங்கூட, மே தினத்தன்று ஊர்வலம் நடத்தியும், துண்டு வெளியீடுகளை வழங்கியும், பொதுக்கூட்டம் நடத்தியும், மே தினத்தை அவர்கள் கொண்டாடத் தவறியதில்லை. போலீசின் தடியடி மட்டுமல்ல, பட்டாளத்தாரின் குண்டுகள், விழாக் கொண்டாடுவோர் மீது பாய்ந்த காலம் அது.

மே தினத்தைத் தொழிலாளரின், விடுதலை விழா நாளாக மாற்றி அமைத்தவர் மாவீரர் லெனின். தங்கள் குறைகளைப் போக்கிக் கொள்ள, உரிமைகளைப் பெற இந்த மே தினத்தைப் பரணி பாடும் நாளாக்கினார் அப்புரட்சி வீரர்! அவருடைய அரிய முயற்சியினால் ரஷ்யாவிலே, மே தின விழா, ஜார் ஆட்சியை ஒழிக்கும் மாபெரும் புரட்சிக்குப் பயிற்சிகளாக அமையலாயிற்று.

கொடுமைகளைக் கண்டு அஞ்சா நெஞ்சமும், பயங்கர அடக்குமுறை கண்டும் பணிய மறுக்கும் உரமும், வாட்டி வதைக்கும் எதேச்சாதிகாரத்தின் முன்பு வளையாத போக்கும்பெற, மே விழாவைப் பாசறை பள்ளியாக்கிக் கொண்டனர், ரஷ்யப் பாட்டாளி மக்கள்!

மற்றக் கட்சிக்காரர்கள் மே தினம் கொண்டாடினால், பொருளாதாரக் காரணங்களை மட்டுமே பெரிதும் வலியுறுத்திக் காட்டுவர். அவர்கள் மக்களின் வறுமைக்கும் வாட்டத்துக்கும் காரணம், பொருளாதார யந்திரக் கோளாறு என்று கருதுகிறார்கள், யந்திரக் கோளாறு, நிச்சயமாகவே மக்களின் வாட்டத்துக்கு காரணந்தான்; அந்த யந்திரம் தகர்த்தெறியப்பட்டு, மக்களின் வாழ்வை மிருக நிலைக்கு கொண்டு போகாத புதிய யந்திரம் செய்யப்பட வேண்டியதும் மிக அவசியந்தான். இதைத் திராவிடர் கழகம் என்றுமே மறுத்ததில்லை. ஆனால், ஏன் இத்தகையசுரண்டல் யந்திரம் உருவாக்கப்பட்பது? எப்படி? யாரால்? மக்கள் ஏன் இதனை அனுமதித்தனர்? ஏன் இன்றும் சகித்துக் கொண்டிருக்கின்றனர்? என்ன கூறி, கஷ்டப்படும் மக்களைச் சுரண்டுபவர்கள், மயக்கியும் அடக்கியும் வைக்க முடிகிறது? என்பன போன்றவைகளைத் திராவிடர் கழகம், மக்கள் மன்றத்துக்குக் கொண்டு வந்து நிறுத்துகிறது. மற்றக்கட்சிகள், இவைகளை எடுத்துக் காட்டுவதில்லை—அச்சம் காரணமாகவோ, அலட்சியத்தின் காரணமாகவோ, அல்லது அவகாசம் இல்லாததாலோ, எக்காரணங்களைப் பற்றி மற்றவர்கள் இந்த விஷயங்களைக் கூறமலிருப்பினும் நாம் இவை மக்களால் சிந்திக்கப்பட்டு, அந்த சிந்தனையின் பலனாக அறிவுத் துறையிலே ஒரு பலமான புரட்சி ஏற்பட்டாலொழிய, பொருளாதாரப் புரட்சியினால் மட்டும் புது வாழ்வு கிடைத்து விடாது என்று நம்புகிறோம். ஆழ்ந்த நம்பிக்கை இது. எனவே தான், நாம் மனிதன் அடிமைப்பட்ட காரணத்தையும், அந்த அடிமைத்தனம் எப்படி நீக்கப்பட வேண்டும் என்பதையும், நமது பிரச்சாரத்திலே முக்கிய பகுதியாக வைத்துக் கொண்டிருக்கிறோம். மனதிலே உள்ள தளைகளை நீக்குவது அவசியமான காரியமென்பதை யுணர்ந்து, ஐரோப்பாக் கண்டத்திலே, பேரறிஞர்களான வால்டேர், ரூசோ போன்றார், அறிவுத் துறைப் புரட்சிக்காக எவ்விதம் பணியாற்றினரோ, அவ்விதமான பணியினையே நாம் புரிகிறோம்.

பூர்ஷுவா (முதலாளித்துவம்) என்ற தத்துவத்தை விளக்குகின்ற யாரும், அது சுரண்டும் முறை, பிறனுடைய உழைப்பால் வாழும் முறை என்று கூறுவர். நாம் ஆரியம் என்று கூறுவது, இதே நிலையைத்தான் சுரண்டும் முறை—தொழிலின் பேரால் அல்ல, மதத்தின் பேரால்—ஜாதியின் பேரால், பழமையின் பேரால்! புரோலோடேரியன், பாட்டாளி என்று பேசும்போது, நம் கண் முன் தோன்றும் உருவம், உழைத்து உருக்குலைந்து, தன் உழைப்பை வேறு யாரோ பறித்துக்கொள்ளக் கண்டு பதறி அதனை மாற்ற முடியாததால் திகைத்துத், தலை மீது கைவைத்துக் கொண்டிருக்கும் ஏழையின் உருவமே. திராவிடன், அத்தகைய உருவந்தான். ஆகவே, பூர்ஷுவா என்பதற்குப் பதில், நம் நாட்டு நிலையைக் கவனித்து, ஆரியன் என்கிறோம்; புரோலோடேரியன் என்பதற்குப் பதில், திராவிடன் என்கிறோம். வர்க்கப் போராட்டம் என்பது தான், இங்கு நாம் கூறும் ஆரிய திராவிடப் போராட்டம்!

ஏசு எமக்காகச் சிலுவையில் அறையப்பட்டு இரத்தம் சிந்தினார் என்று பேசும் கிறிஸ்தவர்கள் மனதிலே தோன்றக்கூடிய உணர்ச்சியையும், எங்கள் கடவுளாம் கோபால கிருஷ்ணர்! கோபியர்கள் நீர் விளையாடுகையில் அவர் தம் சேலைகளைக் கவர்ந்து சென்றார் குழலும் ஊதினார் என்று பேசும் திராவிடருடைய மனதிலே தோன்றக்கூடிய உணர்ச்சியையும் ஒப்பிட்டுக்காட்டி, மதம் இங்கு எவ்வளவு கேலிக் கூத்தாக்கப் பட்டிருக்கிறது பாரீர் என்று காட்டுகிறோம்.

இவை யாவும் பாட்டாளிகளின், மீட்சிக்காகவேயன்றி போட்டி மதம் ஸ்தாபிக்க அல்ல. ஆகவே மே தினத்தை மற்றவர்கள் கொண்டாடி வருவதைவிட நாம் நடத்தினால் தான், சமுதாய மத சம்பந்தமான பழம் பிடிப்புகளே சுரண்டும் பொருளாதார யந்திரத்தை அமைத்தன என்பதை, விளக்க முடியும் — விளக்க வேண்டும்.

ஜார் மன்னன் ஆட்சியிலே அவனால் இழைக்கப்பட்ட கொடுமைகளை ஒழிக்க எப்படி அந்நாட்டு மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒருமித்துப் போராடினார்களோ, பிரான்சிலே பணப் பட்டாளத்தின் கொடுமைகளை எதிர்த்துப் பல பட்டினி பட்டாளங்கள் ஒன்று சேர்ந்து தங்கள் புரட்சிச் சக்தியின் மூலம் லூயி மன்னருக்கு அறிவுறுத்தினார்களோ, அதே போன்று நம் நாட்டுத் தொழிலாளர்கள் அனைவரும் ஒன்று சேரவேண்டும். மக்களின் சக்தி ஒன்று திரண்டு மக்களை வாட்டி வதைக்கும் முதலாளித்துவத்திற்குப் புத்தி புகட்ட வேண்டும்.

பாட்டாளிகளின் போராட்ட முயற்சியின் இடையிலே ஓர் நாள் ஓய்வு பெற்று நின்று, சென்ற கால வருங்கால கணக்கைப் பார்க்கும் திருநாளே இம் மே நாள். சென்ற காலங்களில் மகத்தான வெற்றிகளைக் காண முடியா விட்டாலும், கண்ட சிறுசிறு வெற்றிகளை நினைந்து, மகிழ்ந்து, உள்ளத்தை ஊக்குவித்துக் கொள்ளவும், வருங்காலத்தில் ஆற்ற வேண்டிய செயல்களை எண்ணிச் செயலாற்றும் நெறியிலே உறுதி கொள்ளவும் இம் மே நாள் பயன்படுகிறது.

அவன் ஏன் காரில் போகிறான்-அது அவன் வந்த வேளை. நாம் ஏன் கஷ்டப்படுகிறோம்—இது நாம் வந்த வேளை. ஆண்டவனின் கிருபா கடாட்சம் இவ்வளவு தான்; இந்த ஜென்மத்தில் இப்படி கஷ்டங்களை அனுபவிக்க வேண்டுமென்று எழுதி விட்டான்—என்று நம்பி நாசமாகிறது உழைப்போர் உலகம். இப்படி நம்பும் காரணத்தினாலேயே தொழிலாளர்கள் தமது இணையற்ற சக்தியை மறந்து முதலாளித்துவக் கொடுமைகளுக்கு ஆளாகி நிற்கிறார்கள்.

காங்கிரஸ் ஆட்சியினருக்கும் காங்கிரஸ்காரர்களுக்கும் ஒன்று கூற விரும்புகிறேன். முதலாளியை நோக்கி, தொழிலாளரிடம் நியாயமாக நடவுங்கள் என்று அன்பு முறையில் காந்தியாரைவிட வேறுயாரும் உபதேசிக்க முடியாது. அவர் முகத்திலே தோன்றிய அருள் ஒளியைப் போல் எந்த காங்கிரசாரிடமும் காணமுடியாது. அப்பேர்ப்பட்டவர் தமது கடைசி காலம் வரை முதலாளிகளைக் கெஞ்சி கூத்தாடிப் பார்த்தார்; முதலாளிகளைத் தர்மவான்களென்று வாயார மனமாரப் புகழ்ந்தார். தர்மம் செய்யவே தர்மவான்கள் தோன்றுவது எனப் புகழுரை புகன்றும் கூறியும் பார்த்தார். எதற்கும் முதலாளித்துவம் சற்றாவது விட்டுக் கொடுக்கவில்லை. அவரைவிட இனி எந்த காங்கிரஸ்காரரும் அன்பு முறையில் முதலாளித்துவத்திடம் முறையிட முடியாது. முடியும் என்றால், அது ஏய்ப்பது என்று தான் பொருள்–எனவே அவர் காலத்தில் முயற்சித்துப் பார்த்து சலித்துப் போன முறையை இன்றைய ஆட்சியினர் கையாள்வது வெறும் நடிப்பென்பது மட்டுமல்ல, தொழிலாளர் உலகத்துக்குத் துரோகம் செய்வதுமாகும் என்பதை உங்களுக்கு எடுத்துக் காட்டுகிறேன்.

நம் நாட்டில் உண்மைச் சரித்திரம் நிலவ வேண்டுமானால், ஜாதி பேதம் ஒழிய வேண்டும், ஜாதிக் கோட்டையை இடித்துத் தகர்த்தால்தான் அடிப்படை இறுகிக் கெட்டியாக இருக்கும் மூடப் பழக்க வழக்கங்களை முறியடித்து அதற்கு முற்றுப் புள்ளி வைத்தால் தான் அஸ்திவாரம் பலமாக இருக்கும். அந்த வேலையைத் தான் இன்று திராவிட முன்னேற்றக் கழகம் செய்து வருகிறது.

இன்று தொழிலாளர்களில் பலர் மயாப் பிரபஞ்ச வாழ்வைப் பற்றியும், ஆண்டவன் திருவடியில் இரண்டறக் கலப்பது எப்படி என்பதைப் பற்றியும் சிந்தனை செய்துகொண்டிருக்கிறார்களே அதை முதலில் போக்கடிக்க வேண்டும். தொழிலாளர்களுக்கு முதலில் வாழ்க்கையிலே உள்ள சலிப்பைப் போக்க வேண்டும். இந்த உலகம் பெரியது, விழுமியது, வளமுள்ளது என்ற விரிந்த மனப்பான்மை அவர்களிடையே தோன்ற வேண்டும். நாம் வாழப் பிறந்துள்ளோம் என்பதை அவர்கள் உணர வேண்டும்.

பஞ்சாங்க மில்லாத வீடுகளை நீங்கள் காண முடியாது.

நாள் பார்க்காத மக்களை நீங்கள் பார்க்க முடியாது.

சகுனம் கேட்காத ஜென்மங்களை நீங்கள் காண்பது அரிது.

மார்கழித் திருநாள் கொண்டாடாத மக்கள் மிகக் குறைவு.

சித்திரா பௌர்ணமிக்குப் பொங்கலிட்டுப் படைக்காத வீடுகளை நீங்கள் பார்க்க முடியாது.

பஞ்சாங்கம் பார்க்கும் பழைய புத்தி அடியோடு ஒழிந்தாலொழிய, மக்கள் பகுத்தறிவைப் பெற முடியாது.

சொக்கநாதர், அரங்கநாதர், மீனாட்சி, காமாட்சி, கோயில்கள் இன்னும் இருக்கின்றன. இவைகள் குறைந்தால் தான் நாடு முன்னேறும், நாட்டிலே நல்லறிவு ஏற்படத்தான் திராவிட முன்னேற்றக் கழகம் பாடுபடுகிறது. நம்முடைய கழகத்தின் அடிப்படைக் கொள்கை நாட்டிலே நல்லறிவைப் புகுத்துவது தான்.

கோழியோடு அதிகாலையில் விழித்தெழுந்து கோட்டானோடு தூங்குகிறான் நம் தொழிலாளி! ஓயாமல் உழைத்து உழைத்து அருமையான பொருள்களை உற்பத்தி செய்கிறான். ஆனால் அவன் வாழும் வாழ்க்கை எப்படி? சுருங்கச் சொன்னால் அவன் வாழ்வது மிருக வாழ்க்கை தான். நாகரிக நாட்டிலே, தன்னரசு தழைத்து ஓங்குவதாகச் சொல்லும் இந்த நாட்டிலே தொழிலாளி மிருக வாழ்க்கை வாழ வேண்டியிருக்கிறது. மிருகங்களுக்கு கிடைக்கும் ஓய்வு கூட ஏழைத் தொழிலாளிக்கு கிடைக்கவில்லை! உற்பத்தியைப் பெருக்கும் தொழிலாளி உயர முடிகிறதா?

சேலத்திலே 200-ம் நெம்பர் வேட்டியை நெய்கிற தொழிலாளி உடுத்துவதோ 30-ம் நெம்பர் மோட்டா வேட்டி. தொழிலாளி கட்டுகிறான் நான்கு அடுக்கு மாடிகள், அவன் வாழ்வதோ நாற்றமடிக்கும் ஓட்டைக் குடிசையில். அந்த ஓட்டைக் குடிசையிலே ஒன்பது பேர். மூவாயிரம் வகை நெல் நம்நாட்டிலே பயிராகிறது. ஆனால் பயிரிடும் விவசாயிக்கு உண்ணக் கிடைப்பது வரகோ, சோளமோ தான். உற்பத்தி பெருகினால் மட்டும் தொழிலாளிக்குப் போதுமா? தொழிலாளிக்கு முக்கியமாக வேண்டிய தென்ன? தேவைக்கேற்ற வசதி, சக்திக் கேற்ற உழைப்பு! சர்க்கார் இதை முறைப்படி வகுக்க வேண்டும். அதிகமாக வேலை செய்யும் மாட்டின் மீது நாம் கவனம் செலுத்துகிறோம். தொழிலாளிக்கோ என்றும் ஒரே நிலை! தொழிலாளி மேனி கறுக்க உழைக்கிறான்; அவன் உற்பத்தியைப் பெருக்கா விட்டால் நமக்கு உணவேது? உடையேது? வெளியிலிருந்தெல்லாம் சென்னையில் வந்து குடியேறிய மக்களுக்கு வீடேது? தொழிலாளியின் உழைப்பாலன்றோ பிர்லாவின் பணப்பை நிரம்பியது. மிட்டாதாரும், மிராசுதாரும் எப்படி உயர்ந்தார்கள். அவர்கள் நாட்டில் சில நாளும் நகரத்தில் சில நாளும் எப்படி வாழ்க்கை நடத்துகிறார்கள்? தொழிலாளியின் இடைவிடா உழைப்பாலன்றோ இவர்கள் வாழ்கிறார்கள். உழைத்து உழைத்து உருக்குலைந்த பாட்டாளி உரிமைகள் கேட்டால் சிறையிலே சுட்டுத் தள்ளப்படுகிறான். நாகரிக சர்க்காரா இதைச் செய்வது?

நாட்டிலே ஏராளமான பஜனை மடங்களுண்டு, ஆனாலும் மக்களுக்குப் பசி தீர உணவு கிடைப்பதில்லை. வற்றாத ஜீவ நதிகள் இருந்தும், வாழ்க்கையில் மக்கள் வெற்றிபெற முடிவதில்லை. கொஞ்சம் கனமான சாமானைத் தூக்க வேண்டுமென்றால் கூட நாம், ‘ராமா, ராமா’ என்று சொல்லிக்கொண்டுதான் தூக்குகிறோம். முதலாளி கூலி குறைவாகத் தந்தால், அவனை நோகாமல், ஆண்டவனையே நோக்கி, “ஆண்டவனே, உனக்குக் கண்ணில்லையா? ஏழைபடும் பாடுனக்குத் திருவுளச் சம்மதமோ, இது தகுமோ, இது முறையோ?” என்று சொல்லி இறைவனைப் பார்த்து மக்கள் ஏங்குவதைப் பார்க்கிறோம். இந்த விசித்திர நிலையின் மர்மம் என்ன என்ற கேள்வியைத் திராவிடர் இயக்கம் தான் அநேக ஆண்டுகளாகக் கேட்டு வருகிறது.

கடவுளைப் பற்றிக் கவலைப்படுகிற நாடு நம் நாடு. ஒரு கடவுளைப் பற்றிக் கூட அல்ல, பல கடவுள்களைப் பற்றி, கடவுள்களின் குடும்பங்களைப் பற்றி, கடவுள்களின் சமூகம் பற்றி! ஆனால் கடவுளைப் பற்றிக் கவலைப்படாத நாடு, இயேசுவைப் பற்றி எண்ணாத நாடு என்றழைக்கப்படும் ரஷ்யாவிலே, மக்களைப் பிணிகளோ, பஞ்சமோ, வேலையில்லாத் திண்டாட்டமோ அணுகுவதில்லை. இதற்குக் காரணமென்ன? ஏன் இந்த ஏறு மாறான நிலை? இதைத்தான் மே தின விழாவில் சிந்தித்துப் பார்க்க வேண்டுமென்று திராவிட இயக்கம் கேட்கிறது. இந்தக் கேள்வியை வேறு எந்த இயக்கமும் கேட்கவில்லை; கேட்க எண்ணவும் இல்லை; கேட்பார்கள் என்று நாம் கனவு காணவும் முடியாது.

ஆலைத் தொழிலாளி சகுனத்திலே நம்பிக்கை வைத்திருப்பது விசித்திரமானது. அமெரிக்காவிலிருக்கும் தொழிலாளிகள் சகுனம் பார்ப்பதில்லை! ரஷ்யாவிலே உள்ள தொழிலாளர்கள் சகுனம் என்றால் என்ன என்று கேட்பார்க்கள். சகுனம் பாராத மேலை நாட்டுத் தொழிலாளிகள், கடிகாரத்தை கவனித்து நடக்கிற மேனாட்டினர், முன்னேற்றத்தின் உச்சியிலே இருக்கிறார்கள். நம் நாட்டுத் தொழிலாளர்கள் கடிகாரத்திற்கு மதிப்புத் தருவதில்லை, கடிகாரம் வாங்கப் பணமில்லாமலே பஞ்சாங்கம் வாங்கி வைத்துக்கொண்டு இராகு காலம் பார்க்கிறார்கள்; சகுனம் பார்க்கிறார்கள். இன்னும் தாழ்ந்த நிலையிலே இருக்கிறார்கள்! ஆதியிலே இருந்து, தலைமுறை தலைமுறையாகத் தொழிலாளரின் உள்ளத்திலே, வாழ்விலே தூவப்பட்ட இந்த மாதிரியான நச்சுப் பொடிகளைத் திராவிட முன்னேற்றக் கழகம் தான் பறக்கடிக்கிறது. அதன் காற்றுத்தான் அவற்றை அகற்றுகிறது. அதன் தென்றல் மணம் தான் அவற்றின் நச்சு வாடையை ஒழிக்க முடியும். இது மட்டுமா? இந்த நாட்டிலே தொழிலாளரின் உள்ளத்திலே நடமாடும் எண்ணங்கள், கருத்துக்கள் மாறுபடாமல் அப்படியே இருந்து வர அனுமதி தந்துவிட்டு, மூடத்தனம், அறியாமை, குருட்டு நம்பிக்கை இன்னபிற வளர வழி வகுத்துவிட்டு, பொருளாதார முன்னேற்றம், அரசியல் உரிமை, தொழிலாளர் நலன் காக்கும் பாதுகாப்புகள் அளித்துத் தொழிலாளர் என்ன பயன் காணமுடியும்?

உலகம் மாயம் இல்லை. உழைப்பவன் வாழ்வும் மாயமன்று. ஆனால் உழையாதவன் உல்லாசத்தில் தான் மாயம் இருக்கிறது. உழைப்பின் பெருமையை உணர வேண்டும்; உல்லாசத்தின் ஊற்று, செல்வத்தின் பிறப்பிடம் எங்கே இருக்கிறது என்பதை அறியவேண்டும்.

உருண்டோடுகிற ரயிலை ஓட்டுபவன் யார்? தொழிலாளி! வானத்திலே ஒய்யாரமாகப் பறக்கும் விமானத்தை ஓட்டுபவன் யார்? தொழிலாளி! இழையை நூற்று நல்லாடைநெய்பவன் யார்? தொழிலாளி! இரும்புக் காய்ச்சி உருக்குபவன், இயந்திரங்களை உருக்குபவன் யார்? தொழிலாளி!

மிராசுதாரர்களின் மேனாமினுக்கி வாழ்க்கைக்கான பொருள்களை உருவாக்குகிறவன் தொளிலாளி, விஞ்ஞானத்தின் அற்புதங்களிடையே, உயிரை ஆபத்துக்குள்ளாக்கி விளையாடுபவனும் தொழிலாளி தான்.

கடலில் மூழ்கி முத்து எடுப்பவன் தொழிலாளி; உழுது நன்செய் பயிரிடுபவன் தொழிலாளி. அந்தத் தொழிலாளி இனம் மகிழ்ந்து கொண்டாடும் திருநாள் தான் இந்த மே தினம்.

மனிதன் உணவு உண்கிறான். மிருகமும் உணவு உண்கிறது. மனிதன் காதல் புரிகிறான். மிருகமும் காதல் புரிகிறது. மக்களிலே ஆணும் பெண்ணும் மருவுகின்றனர். விலங்குகளிலும் அப்படியே. மனிதன் பிரஜா உற்பத்தியில் ஈடுபடுகிறான். மிருகமும் பிரஜா உற்பத்தியில் ஈடுபடுகிறது. ஆனால் மிருகத்திற்குத் தேவைக்கேற்ற வசதி இருக்கிறது. மனிதனுக்கோ தேவைக்கேற்ற வசதி இல்லை.

ஒரு மனிதன் உயிர் வாழ்வதற்கு முக்கியமாக வேண்டியவை உணவு, உடை, இருப்பிடம். உணவு வியாபார பொருளாக ஆக்கப்பட்டிருக்கிறது. உடை வியாபாரப் பொருளாக ஆக்கப்பட்டிருக்கிறது. இருப்பிடம் வியாபாரப் பொருளாக ஆக்கப்பட்டிருக்கிறது. இம்மூன்று துறையிலும் பயன்படுத்துவோர் மட்டுமல்ல—தொழிலாளரும் கசக்கப் படுகின்றனர்; வியாபாரிகளால், அதுவும் பெருத்த முதலாளிகளால், அரசாங்கத்தாரின் சலுகையும் ஆதரவும் பெற்ற, கொழுத்த ஏகபோகப் பெர்மிட்காரர்களால்! ஆகவே தான் விவசாயம், வீடு, தொழில் ஆகியவற்றின் ஆதிக்கத்தைத் தனிப்பட்டவர்களிடம் விட்டு வைக்கக் கூடாதென்று நாங்கள் கூறுகிறோம்.