நம் நேரு/அத்தியாயம் 1

விக்கிமூலம் இலிருந்து

நம் நேரு

அத்தியாயம் 1.


மண்ணோடு மண்ணாகக் கிடந்து, தன் மதிப்பை உணராது அடிமையாக உழன்ற இந்திய மக்களை விழித்தெழச் செய்து, உரிமை உணர்வு புகுத்தி, சுதந்திரம் பெற்ற மக்களாக வாழும்படி மாற்றிய மாபெரும் தலைவர் மகாத்மா காந்திஜீ ஆவர்.

அண்ணல் காந்திஜீ காட்டிய வழியில் அடி எடுத்து வைத்து, அவருக்குத் துணையாய், தோழனாய், தொண்டராய் பணியாற்றி, மக்களின் உள்ளத்திலே தனி இடம் பெற்று விட்ட தலைவர் நம் நேரு. காந்தி அடிகளின் திட்டங்களைச் செயலாற்றிய காங்கிரஸ் மகாசபையின் காரியதரிசியாய் தொடர்ந்து பல ஆண்டுகள் பணி புரிந்து. பல தலைவர்களின் அன்பையும் மதிப்பையும் பெற்று. கட்சியை வெற்றிப் பாதையில் நடத்தும் தலைவராகி, நாட்டுக்கு நல்வழிகாட்டும் பிரதமரும் ஆகித் திகழ்கிறவர் பண்டித நேரு.

ஜவஹர்லால் நேரு இன்றைய இந்தியாவின் இணையிலாத் தலைவர். ஆசியாவின் மதிப்பை அதிகப் படுத்திய அரசியல் அறிஞர். உலக அரசியலில் நியாயமான, யோசனைகளைக் கூறி, அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய திட்டங்களை வகுத்துக் காட்டும் திறமை பெற்ற மேதை அவர், உலகத்தில் நிலையான சமாதானத்தை நிறுவ அரும்பெரும்பாடுகள் பட்டு வரும் சிந்தனையாளர். உலகத் தலைவர்களுள் முக்கியமானவர்களில் முக்கியமானவர் அவர். ஓயாத உழைப்பின் உருவம். உயரிய பண்புகளின் உறைவிடம். ’மனித குல மாணிக்கம்’ நேரு.


காலகாலமாகத் தனிப் பெரும் புகழ்பெற்று வந்துள்ளது இந்தியா. அதன் மாண்பை மேலும் அதிகமாக உயர்த்திய பெருமை மகாத்மா காந்திஜீக்கு உண்டு. கிடைத்த மாண்பைக் குறையாமல் காத்ததோடு, இன்னும், அதிகமாக வளர்த்து உலக நாடுகளின் கவனத்தை இந்தியாவின் பக்கம் இழுத்து நிறுத்தி, சரித்திரத்தை உருவாக்கி வருகின்ற சிறப்பு பண்டித நேருவுக்குக் கிடைத்திருக்கிறது.


சரித்திரத்தையே மாற்றி அமைக்கும் ஆற்றல் ஒருசுக தலைவர்களுக்கே உண்டு. இந்திய மக்களை மனிதர் களாக்கியதுடன் புதுயுக உதயத்தை வரவேற்கக் கூடிய ஆர்வமுள்ளவர்களாக மாற்றிய பெருமை காந்திஜீக்கு உண்டு என்றால், விழித்தெழுந்த நாட்டினரின் உணர்வு வெள்ளைத்துக்கு ஒர் போக்குக் காட்டி, அழிவுச் சக்தியை மட்டுப்படுத்தி ஆக்க வேலைகளுக்கு அடிகோலி, சமுதாயத்தின் ஆவன செய்து இந்தியாவின் சரித்திரத்தைச் செம்மைப்படுத்தும் பெருமை நேருவையே சாரும். அதற்கேற்ற தகுதியும் திறமையும் பெற்ற தலைவர் அவர் தான். அதனால் தான், சுதந்திர இந்தியாவின் முதல் பிரதம மந்திரியாக வந்த நேரு மறுபடியும் அதே பதவிக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார். நாட்டு மக்களின் நம்பிக்கையையும் நன்மதிப்பையும் பெற்றுள்ள நேரு தான் காங்கிரஸின் ஒற்றுமையையும் மாண்பையும் காப்பாற்ற முடியும் என்ற எண்ணம் நிலைத்துவிட்டது. அதனாலேயே அவர் மீண்டும் மீண்டும் காங்கிரஸின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

காற்றடிக்கும் வேளையிலே கனி பறித்து அனுபவிக்கத் தோன்றிய சந்தர்ப்பத் தலைவர் அல்ல நேரு. தேர்தல் காலங்களில் சட்டை மாற்றிக் கொண்டு பட்டம் காட்டிப் பதவி பிடிக்க வரும் பண்பினர் பரம்பரையில் வந்தவர் அல்லர் அவர் களத்திலே குதிக்காமல் முற்றத்தில் அமர்ந்து போதனைகள் புரிந்துவிட்டு, உரிமை கைக்கு வந்ததும் பொறுப்பான ஸ்தானங்களில் ஒட்டிக்கொள்ள ஓடிவரும் வழி காட்டிகளின் வகையைச் சேர்ந்தவர் அல்லர் அவர். மக்களைத் தூண்டிவிட்டுத் திடீர் திடீரென்று மாயமாக மறைந்து பதுங்கிப் பின், தலைகாட்டிப் பெரும் பேச்சுப் பேசுகின்ற வீரர்களின் வழிவந்தவர் அல்லர் அவர்.

வீரம் அவரது உடன்பிறப்பு. தியாகமும் திறமைகளும் அவர் குலத்தின் சிறப்புகள். ஆளும் ஆற்றல் பெற்ற தலைவரின் மகனாய் நாடாளப் பிறந்தவர் பண்டித நேரு, மன்னர்கள் போல் வாழ வேண்டிய தந்தையும் மகனும், மக்களின் நலனுக்காக, நாட்டின் உயர்வுக்காக, கொடிய இன்னல்கள் அனைத்தையும் தாங்கிச் சகித்து வந்தது அவர்களது உயர்வை மட்டும் காட்டவில்லை, நாடு செய்த பாக்கியம் என்றும் உணர்த்துகின்றது.

பண்டித நேருவின் குடும்ப சரித்திரம் தன்னேரில்லாக் காவியம். ஜவஹரின் வரலாறு ஈடு இணையற்று வீரசரிதை ஆகும். மக்கள் மதிக்கும் மாண்புறு தலைவராய், நாட்டின் வீரநாயகனாய், நேரு வளர்ந்துள்ளது மாயவித்தைகளினால் அல்ல: வாசாமகோசரமான பேச்சுக்களினால் அல்ல; ஆடம்பர விளம்பரங்களினால் அல்ல-குன்றாத நாட்டுப் பற்றினால், தளராத போராட்டத்தினால், ஓயாத சிந்தனையினால், உணர்வு கொளுத்தும் ஊக்கத்தினால், அற்புதமான ஆற்றலினால், போற்றத்தக்க திறமைகளினால் தான் என்பதை நேருவின் வரலாறு எடுத்துச் சொல்லும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நம்_நேரு/அத்தியாயம்_1&oldid=1376994" இலிருந்து மீள்விக்கப்பட்டது