நம் நேரு/அத்தியாயம் 10

விக்கிமூலம் இலிருந்து

அத்தியாயம் 10.


காலம் இந்திய சரித்திரத்தை மாற்றி அமைத்துக் கொண்டிருந்தது. இந்தியாவின் சரிதை புதுவிதமாக அமைவதற்குக் காந்திஜீ துணைபுரிந்து வந்தார்.

காந்தி பிரிட்டிஷாருக்கு மட்டும் தான் பெரும் பிரச்னையாகவும் புதிராகவும் விளங்கினார் என்றில்லை. அவருடைய சகாக்களுக்கும், காங்கிரஸ் கட்சியினருக்கும் கூட அவர் அவ்விதமே விளங்கினர். நேருவும் அவரைப் பூரணமாகப் புரிந்து கொள்ள முடியவில்லை.

காந்திஜீயுடன் சமாதான ஒப்பந்தம் பேசினர்கள் பிரிட்டிஷார். காங்கிரஸைக் குறை கூறினார்கள், காங்கிரஸின் சர்வாதிகாரப் பண்பு புகுந்து விட்டதாகக் குற்றம் சாட்டி, ஜனநாயக மந்திரத்தை உச்சரித்த வாறே எதேச்சாதிகார ஆட்சி புரிந்து வந்தார்கள்.

வைஸ்ராய்கள் வந்தார்கள்; போனார்கள். ஆயினும் பிரிட்டிஷாரின் போக்கிலே மாற்றம் இல்லை.

காந்திஜீ இங்கிலாந்து சென்றார் வட்ட மேஜை மகாநாடு நடந்தது. காந்திஜீ பல மாதங்களுக்குப் பிறகு இங்தியா திரும்பினார். பிரிட்டிஷ் ஆட்சியினர் தங்கள் வாக்கைக் காப்பாற்றத் தயாராக இல்லை என்பதைக் கண்டார்.

வட்டமேஜை மகாநாடுகள் கூடிக்கூடிக் கலைந்தன. அரசியல் வாதிகள் இந்தியாவில் சிறை அனுபவம் பெற்றுக் கொண்டுதான் இருந்தார்கள்.

ஆண்டு தோறும் காங்கிரஸ் கூடியது. தீர்மானங்களை நிறைவேற்றியது. தலைவர்கள் மக்களின் போற்றுதலைப் பெற்றார்கள். ஜெயிலிலிருந்து திரும்பி வந்தவர்கள் மாலைமரியாதை விழா வைபவங்களை எல்லாம் சிறப்புற ஏற்றனர்.

நேருஜீ தென்னிந்தியாவில் சுற்றுப்பிரயாணம் செய்தார். இந்தியாவின் முக்கிய நகரங்களில் பிரசாரம் புரிந்தார். மீண்டும் சிறை புகுந்தார். அது 1932-்ல் நடந்தது.

1932 விசேஷ நிகழ்ச்சிகளை வளர்த்து விட்டது. வரிகொடா இயக்கங்களும், சட்ட எதிர்ப்புகளும் தோன்றின. சர்க்கார் ஜனங்களின் வீடுகளையும் இதர உடைமைகளையும் பறிமுதல் செய்யத் துணிந்தனர். காங்கிரஸ் கொடி பறப்பதைத் தடுத்தனர். தடை உத்திரவுகளை வீசினர். ஜெயிலின் கதவுகள் திறந்து அரசியல்வாதிகளை விழுங்கின. இந்தியாவில் போலீஸ் ராஜ்யம்' தான் நிலவியது. ஜெயிலில் சவுக்கடி கொடுப்புது சகஜ மான தண்டனையாயிற்று.

அரசியலாரின் அட்டுழியங்களை எதிர்த்துப் பலர் உண்ணாவிரதம் இருப்பதும் இயல்பாயிற்று. பலவீனங்களைக் கண்டு சோர்வு ஏற்பட்டது தலைவர்களுக்கு. வெற்றிகளை எண்ணிப் பெருமிதமும் உடனடியாகவே உண்டாயிற்று. உலக நிலைமை படுமோசமாய், பயங்கரமாய், போய்க் கொண்டிருந்தது.

ஜெயிலில் பயங்கரமாய் அனுபவங்களைப் பெற்று வந்தார் நேரு படிக்கவும், எழுதவும், சிந்திக்கவும் அவருக்கு நிறையநிறைய வாய்ப்புக் கிட்டியது. "தந்தை மகளுக்கு எழுதிய கடிதங்கள்” என்று பெயர் பெற்ற, சரித்திரத் தொடர்புள்ள, விஷயங்களை நேரு இந்தச் சக்தர்ப்பத்தில் தான் எழுதினார்.

1988 ஆகஸ்டு 30-ம் தேதி-ஒன்றரை வருஷ காலத்திற்கு அதிகமாகவே ஜெயில் அனுபவம் பெற்ற பின்னர்-நேரு விடுதலை அடைந்தார். அரசியல் உலகம் அமைதியுற்றிருந்ததாக உணர்ந்தார். பெருஞ்செயலில் ஈடுபட்டுக் களைத்த சோர்வு அது.

நேரு தீவிரமாகச் செயல் புரிந்து மறுபடியும் ஜெயிலுக்குள் செல்ல வேண்டும் என்று ஆசைப்படவில்லை. கொஞ்ச காலம் வெளியிலிருந்து, குடும்ப விவகாரங்களைக் கவனிக்க விரும்பினர். எனினும் எங்காவது முக்கிய ஊர்களுக்குப் போக நேரிட்டால் அங்கெல்லாம் பொதுக் கூட்டங்களில் பேச வேண்டிய அவசியம் ஏற்படத்தான் செய்தது. சில முக்கிய நிகழ்ச்சிகளில் பங்கு பெறவும் நேரிட்டது. அவ்வப்போது அரசாங்கம் யார் யாரையோ ஜெயிலுக்குள் தள்ளிக் கொண்டுதான் இருந்தது.

1934 ஜனவரி 15-ம் தேதி பீகாரில் கொடிய பூகம்பம் கோர நடனம் புரிந்தது. அதனால் பாதிக்கப் பெற்ற மக்களுக்கு உதவி புரிவதில் நேருவும் ஆர்வம் காட்டினர். பீகாரில் பல இடங்களிலும் திரிந்து. கடுமையாக உழைத்து அலுத்துப் போய் அலகாபாத் வந்து சேர்ந்தார் நேரு. பன்னிரண்டு மணி நேரத் துக்கம் தூங்கினர். அவ்வளவு களைப்பு.

மறுநாள் மத்தியானம் அவருக்கு வாரண்டு வந்து சேர்ந்தது. சரியாக ஐந்து மாதங்களும் பதின்மூன்று நாட்களும்தான் அவர் வெளியே வாழ்ந்தார். மறுபடியும் அரசாங்கம் அவரை ஜெயிலின் அதிதியாக மாற்றிவிட்டது. இம்முறை அவர் கல்கத்தாவைச் சேர்ந்த அலிப்பூர் ஜெயிலில் அடைத்து வைக்கப்பட்டார். சில மாதங்களுக்குப் பிறகு பழைய டேராடூன் சிறையில் சேர்த்தார்கள். அவ்வருஷம் ஆகஸ்டில், பதினோரு தின விடுதலை நேருவுக்குக் கிடைத்தது. நோயினால் அவதியுற்ற கமலாவைக் காண்பதற்காகத் தான் அந்த இடைக்கால விடுதலை. பிறகு நேரு நயினி ஜெயிலில் அடைக்கப்பட்டார். அதன் பின் அவரை அல்மோரா ஜெயிலில் கொண்டு சேர்த்தனர். அங்குதான் நேரு தனது சுயசரிதையை எழுதினர்.

கொடிய குவெட்டா பூகம்பம் 1935-ம் வருஷம் தோன்றி எவ்வளவோ பாதகம் விளைவித்தது. காங்கிரஸ் தலைவர்கள் எவரையும் அங்கு சென்று மக்களுக்கு உதவி செய்ய அரசாங்கம் அனுமதிக்கவில்லை; காந்திஜீக்குக் கூட தடையுத்தரவு இருந்தது; குவெட்டா பற்றி எழுதிய பல பத்திரிகைகளின் ஜாமீன் தொகை பறிமுதல் செய்யப்பட்டது. இவ்விஷயங்களே எல்லாம் அறிந்து நேரு பெரிதும் வருந்தினார்.

எங்கும் ராணுவ தர்பார்-போலிஸ் நோக்கு-தான் நீடித்து வந்தது.

அந்த வருஷத்தில் கமலா நேருவின் உடல் நிலை மிகவும் மோசமாகிவிட்டதால், அவரை ஐரோப்பாவுக்கு அழைத்துச் செல்ல வேண்டியது அவசியமாயிற்று. அதை உத்தேசித்து அரசாங்கம் ஜவஹரை செப்டம்பர் 4-ல் அல்மோராவிரிலிருந்து வெளியே அனுப்பியது. அப்பொழுது அவருடைய தண்டனை காலத்தில் ஐந்தரை மாதங்கள் பாக்கி கிடந்தன.

நேரு ஜெர்மனியீல் நோயாய் கிடந்த மனைவியைக் காண விமானம் மூலம் பறந்து போனார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நம்_நேரு/அத்தியாயம்_10&oldid=1377006" இலிருந்து மீள்விக்கப்பட்டது