நம் நேரு/அத்தியாயம் 8

விக்கிமூலம் இலிருந்து

அத்தியாயம் 8.


நேரு, பதிமூன்று வருஷ இடைக் காலத்திற்குப் பிறகு, மீண்டும் ஐரோப்பாவில் அடியெடுத்து வைத்திருந்தார். அந்தக் கால அளவினுள் உலகம் யுத்த பயங்கரத்தையும் ரத்தக் களறியையும் அனுபவித்திருந்தது. நாடுகள் பலவும் பெரிய பெரிய மாறுதல்களைப் பெற்றிருந்தன.

மிஞ்சிப் போனால் அங்கு ஆறு அல்லது ஏழு மாதங்கள் தான் தங்க நேரிடும் என்று நேரு எண்ணினார். ஆனால் அவரும் அவர் குடும்பத்தினரும் இந்தியா திரும்புவதற்குள் ஒரு வருஷம் ஒன்பது மாதங்கள் கழிந்துவிட்டன. பெரும் பங்கு காலத்தை அவர்கள் ஜினீவா, ஸ்விட்ஸர்லாந்து, மான்டனா மலையிலுள்ள சுகவாச ஸ்தலம் ஆகிய இடங்களிலேயே கழித்தனர். பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளிலும் சிறிது சுற்றி மகிழ்ந்தார்கள்.

ஐரோப்பாவில் தங்கியிருந்த காலத்தில் நேரு பழைய பயங்கரவாதிகளையும், மாஜி தேசபக்தர்களையும். அரசியல் துறவிகளையும் சந்தித்துப் பேசிப் பழக வாய்ப்புக்கள் கிட்டின. இந்தியப் பிரச்னைகளை தூரத்திலிருந்து ஆராய்ந்தார் நேரு. இந்திய தேசீயத் தலைவர்களிடையே மனவேற்றுமைகளும் கொள்கைப் பிணக்குகளும் ஏற்பட்டு வளர்ந்ததுடன், மதவெறி சில தலைவர்களைப் பற்றிக் கொண்டு ஆட்டி வைத்ததையும் அறிந்து நேரு கவலையுற்றார். 1926-ல் சுவாமி சிரத்தானந்தர் எனும் மாவீரர் படுத்த படுக்கையாகக் கிடந்த போது மதவெறியன் ஒருவனால் கொலை செய்யப்பட்டார் என்ற சேதி அவரைத் திடுக்கிடச் செய்தது. கூர்க்கரின் துப்பாக்கிச் சனியன்களுக்கும் குண்டுகளுக்கும் நேராக மார்பைத் திறந்து காட்டிக் கொண்டு போராடி முன்னேறிய வீரருக்குக் கிடைத்த துர்ப்பாக்கியச் சாவு நேருவின் உள்ளத்தைக் கலக்கியது. இந்து முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்திப் பிரசாரம் செய்து வந்வருக்கு இதுதானா பரிசு என்று மனம் குமைந்தார் அவர், சுவாமி சிரத்தானந்தரிடம் நன்மதிப்பும், அவரது ஆற்றலிலும் சேவையிலும் பெருவியப்பும் கொண்டிருந்தார் நேரு.

புரூஸ்ஸல்ஸ் நகரில் கூடிய ‘அமுக்கப்பட்ட தேசீய வாதிகள் காங்கிர'ஸில் இந்தியாவின் பிரதிநிதியாக நேரு சேர்ந்து கொண்டார். சர்வதேசச் சங்க நிகழ்ச்சிகளிலும் அவர் கலந்ததுண்டு இவைகளின் மூலம் மேல் நாட்டுத் தொழிலாளவர்க்கத்தினரின் உண்மையான நிலைமை பற்றி அவர் தெளிவாக அறிய முடிந்தது.

1927-ம் வருஷக் கடைசியில் நேரு, தன் குடுப்பத்துடன், கொளும்பு வந்து, அங்கிருந்து சென்னைக்கு விஜயம் செய்தார். அவ் வருஷம் காங்கிரஸ் சென்னையில் கூடியது. உடல் நலத்துடனும் உள்ளத்து நிறைவுடனும் இந்தியா திரும்பியிருந்த நேரு, சுதந்திரம் அயல்நாட்டு உறவு, யுத்த பயங்கரம் முதலியன பற்றிய பல தீர்மானங்களை, சென்னைக் காங்கிரஸின் முன் கொண்டு வந்தார். அவருடைய உற்சாகத்தை எதிர்த்து நிற்க விரும்பாத காங்கிரஸ் அவரது தீர்மானங்களை ஏகமனதாக நிறைவேற்றி வைத்ததாம்.

காங்கிரஸ் தலைவர் வற்புறுத்தியதாலும் தான் கொண்டு வந்த தீர்மானங்களை நடைமுறைக்குக் கொண்டு வரவேண்டிய முக்கியத்தை எண்ணியும், நேரு மீண்டும் காங்கிரஸின் காரியதரிசிப் பொறுப்பை ஏற்றுக் கொள்ள நேரிட்டது. அதன் பிறகு பல வருஷங்கள் வரை பொறுப்பான அந்தப் பதவி அவரை விட்டு விலக மறுத்து விட்டது நேருவின் திறமையான பணியையும் உழைப்பின் ஊக்கத்தையும் கண்டு தலைவர்கள் அவரையே காரியதரிசியாகக் கொள்ள அவாவினர். வருஷத்திற்கொரு முறை தலைவர் மாற்றம் ஏற்படும் வழக்கம் இருந்தது. ஆனாலும் நேருஜீ தான் காரியதரிசி என்ற நியதி நீடித்து விட்டது.

நாட்டின் அரசியல் களத்திலும், நேருவின் வாழ்விலும் 1928 முக்கியச் சம்பவங்களுக்கு இடமளித்த வருஷமாகத் தான் விளங்கியது. தொழிலாளர்கள், விவசாயிகள், மத்தியதர வகுப்பு இளைஞர்கள், படித்தவர்கள் ஆகிய பலவர்க்கத்தினரும் புது விழிப்புப் பெற்றிருந்தார்கள். தொழிற் சங்கங்கள் பல மடைந்து வந்தன. குடியானவர்கள் பல இடங்களில் கிளர்ச்சி செய்து வந்தார்கள். வல்லப்பாய் பட்டேலின் தலைமையில் நிகழ்ந்த ‘பர்டோலி சத்தியாக்கிரகம்’ மகத்தான வெற்றி பெற்றது. இந்தியாவுக்கு வந்திருந்த சைமன் கமிஷனை பகிஷ்கரிக்கும் திட்டம் அமுலுக்கு வந்தது. அதனால் தடியடி தர்பார் தாண்டவமிட்டது.

‘சைமனே, திரும்பிப்போ!' என்று கூறி, கறுப்புக் கொடி காட்டி நின்ற படை ஒன்றின் தலைவராய் விளங்கிய லாலாலஜபதிராய் தடியடி ஏற்றுப் படுகாய முற்றார். சில தினங்களிலேயே மரணமும் அடைந்தார்.

லஜபதிராயின் அநியாயச் சாவு இந்தியமக்களின் ஆத்திரத்தைக் கிளப்பியது. அவர் பெற்ற அவமானமும் தாக்குதலும் இந்திய நாட்டின் அவமானமாக மதிக்கப் பட்டது. நாட்டின் மானத்தைக் காக்க ஆவேசத்துடன் எழுந்த இளைஞர்கள் பலர் அந்தக் சந்தர்ப்பத்தில் பிரமாதமான கவனிப்பையும், மக்களின் போற்றுதலையும் பெற்று விடுவதும் சாத்தியமாயிற்று. குறுகிய காலத்தில் அப்படி அழியாப் புகழைப் பெற்ற ஒரு சிலரில் பகத்சிங் மிக முக்கியமானவர்.

லஜபதிராயின் மரணத்துக்குப் பின்னர், சைமன் கமிஷனை எதிர்க்கும் போராட்டம் வலுப்பெற்றது. ஊர்வலங்களும், கொடி காட்டுதலும் கோஷமிடுதலும் அதிகரித்தன. அரசாங்கம் குதிரைப் படையை ஏவி மனிதக் கூட்டத்தை மிதித்துத் துவைக்க உத்திரவிட்டது. தடிகளைத் தாறுமாறாகப் பிரயோகிக்க அனுமதி அளித்தது. ல௲மணபுரியில் சைமனை எதிர்த்து ஊர்வலம் வந்த போது, ஜவஹர்லால் நேருவும் வேறு சில தலைவர்களும் பலமாகத் தாக்கப்பட்டார்கள். நேரு தனது அரசியல் வாழ்வில் பெற்ற முதல் தடியடி அனுபவம் அதுதான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நம்_நேரு/அத்தியாயம்_8&oldid=1377003" இலிருந்து மீள்விக்கப்பட்டது