நம் நேரு/அத்தியாயம் 9

விக்கிமூலம் இலிருந்து

அத்தியாயம் 9.


1929-ம் வருஷம் லாகூரில் நடைபெற்ற காங்கிரசுக்கு நேரு தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். எதிர்பாராமல் வந்து சேர்ந்த பொறுப்பு அது.

அவ் வருஷம் காந்திஜீயைத் தலைவராகத் தேர்க்தெடுக்க அனைவரும் முடிவு செய்துவிட்டனர். காந்திஜீ பல வருஷங்களாக அரசியலில் நேரடியாகப் பங்கு பெறாமல் விலகியே வாழ்ந்தார். கதர் இயக்கம் சம்பந்தமாக இந்தியாவின் பரப்பு முழுவதையும் தமது யாத்திரையினால் அளந்தார். ‘சரித்திர நாராயணர்களுக்குத் தொண்டு' புரிவதே தனது லட்சியம் என்று கதர்ப் பிரச்சாரம் செய்து, நிதி வசூலித்துச் சுற்றிக் கொண்டிருந்த காந்திஜீ காங்கிரஸ் தலைமையை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்.

அவருடைய மறுப்பு கடைசி நேரத்தில் தான் கமிட்டிக்குத் தெரிந்தது. ஜவஹரைத் தலைவராக்கும்படி காந்திஜீ சிபாரிசு செய்துவிட்டார். காரியக் கமிட்டியினர் தர்ம சங்கடமான நிலையில் சிக்கி, வேறு வழி இல்லே என்ற தன்மையில், நேருவைத் தலைவராகத் தேர்ந்தனர்.

இது மகத்தான கெளரவம் என்பதை ஜவஹர் உணர்ந்திருந்தாலும், தனது மதிப்பு பாதிக்கப்பட்டு விட்டதாக எண்ணிப் புழுங்கினார் நேரு. அவர் நேர் வழியாக அந்த உரிய கெளரவத்தைப் பெறவில்லை: குறுக்கு வழியாக அங்கு சேர்க்கப்பட்டுவிட்டார் என்ற வேதனை பொங்கியது. ‘உங்கள் கெளரவமும் வேண்டாம், பதவியும் வேண்டாம்’ என்று திருப்பிக் கொடுத்துவிடத் துடித்தார் அவர். நல்லகாலமாக அவர் அப்படி எதுவும் செய்துவிடவில்லே.

அவ்வருஷம் ஜவஹர்லால் நேரு காங்கிரஸ் தலைவராக வந்ததில் குறிப்பிடத் தகுந்த விசேஷ அம்சம் ஒன்று பொருந்தியிருந்தது. முந்திய வருஷத்திய காங்கிரஸ் தலைவர் மோதிலால் நேரு ஆவர். ஆகவே தந்தைத்குப் பிறகு மகன் தலைமைப் பொறுப்புக்கு வந்தது விசேஷம்தானே. இதை எண்ணி வியக்க இக்நாட்டினர் தவறிவிட வில்லை.

இதற்கு முன்னரே ஜவஹர்லால் நாட்டின் வீரநாயகராக ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தார். ‘இந்தியாவின் இணையில்லா வைரம்' என்றும், ‘பாரத பூஷணம்’ ’தியாக மூர்த்தி' என்றும் மனமாற, வாயாற அழைத்து மகிழ்ந்தார்கள் மக்கள். எங்கு சென்றாலும் நேரு ஜனங்களின் வீர வணக்கத்துக்கு இலக்கானார். சாதாரண ஜனங்களும் அவரைப் போற்றினார்கள். படித்தவர்களும் பட்டதாரிகளும் அவரைப் போற்றினார்கள். எதிரிகள் கூட அவரைப் பாராட்டிப் புகழ்ந்து வந்தார்கள். நேரு காங்கிரஸின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு அவருடைய மதிப்பு மேலும் அதிகமாக உயர்ந்தது.

நேருவையும் அவர் தங்தையாரையும் பற்றிய அளப்புகள் பல சிருஷ்டியாயின. எங்கும் பரவி நிலைத்து வளர்ந்தன. அவற்றிலே ஒன்று “மோதிலால் நேரு ஜவஹர்லால் நேரு இருவரும் தங்கள் உடைகளை பாரிஸ் நகரில் உள்ள லாண்டரி எதற்கோ வாரா வாரம் சலவைக்கு அனுப்புகிருர்கள்; அங்கு அருமையாக வெளுக்கப்பெற்று அவை வருகின்றன” என்பதாம்.

இவ்விஷயமாக நேரு சுய சரிதையில் எழுதி உள்ளது மிகவும் சுவையாக இருக்கிறது. "இச் செய்தியைக் கண்டித்து நாங்கள் மறுப்புரை கூறி வந்தும் பலனில்லே. இந்தக் கதை உயிருடன் உலவுகிறது. இதைப் போன்ற வீண் பிரமையும் அபத்தமுமான எண்ணத்தை என்னால் கற்பனை செய்யக் கூட இயலவில்ல. இவ்வித வீண் ஆடம்பரத்தில் ஈடுபடக்கூடிய மடத்தனம் எவனாவது பெற்றிருப்பானாகில், முட்டாள் தனத்துக்குரிய முதல் பரிசு பெறுவதற்கு அவனே அருகதை உள்ளவன் என்று தான் நான் நினைப்பேன்" என்று கூறுகிறார் நேரு.

இதைப் போலவே நிலைபெற்றுவிட்ட மற்றொரு கதையும் உண்டு. "கேம்பிரிட்ஜில் நேரு கல்வி கற்று வந்த போது, அந்நாளைய வேல்ஸ் இளவரசராகிய எட்டாவது எட்வர்டும் சகமாணவராக இருந்தார். 1921-ல் இளவரசர் இந்தியாவுக்கு விஜயம் செய்த சமயத்தில் நேருவைச் சக்திக்கப் பெரிதும் ஆசை கொண்டார்: ஜவஹர்லால் ஜெயிலில் அடைபட்டிருந்ததால் சந்திப்பு நடைபெறவில்லே” என்கிற விஷயம்தான் அது.

அதுவும் பொய் தான் என்று நேரு குறிப்பிட்டிருக்கிறார். வேல்ஸ் இளவரசருடன் நேரு கல்லூரியில் படிக்கவில்லே, அதுமட்டுமன்று. ”அவரை நான் ஒரு முறை கூடச் சக்தித்ததுமில்லை; அவருடன் பேசிப் பழகும் வாய்ப்பு எனக்குக் கிட்டியதுமில்லே” என்று நேரு எழுதியிருக்கிறார்.

மிக உயர்ந்தவர்கள், பெரியவர்கள், மகாத்மாக்கள் என்று கருதப்படுகிறவர்களைக் குறித்து வதந்திகளையும் வீண்கதைகளையும் அளப்புகளையும் பரப்பி விடுவதிலே ஜனங்கள் தனிரகமான மகிழ்ச்சி அடைகிறார்கள். இது உலக நியதிகளில் ஒன்றாகி விட்டது!

லாகூர் காங்கிரஸ் தீர்மானித்தபடி 1980-ம் வருஷம் ஜனவரி மாதம் 26-ம் தேதி ‘சுதந்திர தினம்’ ஆக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. ’சுதந்திர தினப் பிரதிக்ஞை’ எடுத்துக் கொண்டார்கள். அதைத் தொடர்ந்து ஒத்துழையாமை இயக்கத்தை நடத்தத் திட்டமிட்டார் காந்திஜீ. உப்பு வரியை எதிர்த்து சத்தியாக்கிரகம் செய்ய வேண்டும் என்று காந்திஜீ அறிவித்ததும், பலருக்கு அது சின்ன விஷயமாகத் தோன்றியது நேரு கூட அப்படித்தான் எண்ணினார்.

1930 ஏப்ரல் ஆறாம் நாள் காந்திஜீ தடியேந்தி தண்டி யாத்திரை செய்து, உப்பு சத்தியாக்கிரகத்தைத் தொடங்கி வைத்தார். அச் செயலும், நாடு முழுவதும் பரவிய சத்தியாக்கிரக நெருப்பும். விளைவுகளும் சரித்திர பிரசித்தமானவை. மக்களின் மனப்பாண்பையும், நாட்டின் நாடியையும், கணிப்பதிலே காந்திஜீ எவ்வளவு வல்லமை பெற்றிருந்தார் என்பதை அவை நிருபித்துவிட்டன. ஜவுளிக்கடை மறியல், உப்பு சத்தியாக்கிரகம் முதலியவைகளில் ஆண்கள் மட்டுமல்ல. பெண்களும் பெருவாரியாகக் கலந்து கொண்டார்கள்.

ஊர்வலம், தடியடி, மறியல், துப்பாக்கிப் பிரயோகம், தலைவர்கள் கைது-இவை எல்லாம் முடிவற்று நிகழும் அரசாங்கமாக மாறிவிட்டது நாடு. தியாக உணர்வும், சேவா ஊக்கமும் வளர்ந்து ஓங்கின.

இவ் வருஷத்தில் தான் மோதிலால் நேரு அலகாபாத்தில் உள்ள தனது மாளிகையை நாட்டின் பொதுவுடைமையாக்கி, காங்கிரஸிடம் ஒப்புவித்துவிட்டார். அது ‘சுயராஜ்ய பவனம்' என்று பெயர் பெற்றது.

உப்பு சத்தியாக்கிரகம் சம்பந்தமாக நேரு கைது செய்யப்பட்டார். அவருக்கு ஆறு மாத சிறைத்தண்டனை கிடைத்தது. அவருடைய தந்தையும், தாயும், சகோதரிகளும். மனைவியும் மறியல்களில் உற்சாகமாகக் கலந்து தொண்டாற்றினர்கள். செல்வச் சூழ்நிலையில் சுகமாக வாழ்ந்த பெண்கள் வெயிலிலும் வெளியிலும் அலைந்து திரிந்து தீவிரமாகப் பணி புரிந்தது மோதிலாலுக்கே ஆச்சர்யம் அளித்தது. அவர் சிறைவாசம் ஏற்று மகனைச் சந்தித்துத் தனது வியப்பைச் சொல்லத் தவறினரில்லை. தந்தைமூலம் விஷயங்களை அறிந்த நேரு அதிசயித்தார்; பெருமையும் கொண்டார்.

அதன் பிறகு நேருவின் வாழ்க்கை, வெளி உலகில் சில தினங்கள் என்றால் சிறையில் பல மாதங்கள் என்ற கணக்கிலே தான் விளங்கியது. சர்க்கார் அவரை விடுதலே செய்யும், அவர் பின்னாலேயே வேட்டை நாய்களைப் போல் ஸி. ஐ. டி. களை ஏவி விடும். ஏதாவது ஒரு காரணம்காட்டி மறுபடியும் ஜெயிலுக்கு அனுப்பிவிடும். இதுவே வழக்கமாகி விட்டது. . தன் கணவரைப்போல் தானும் சிறையினுள் போக வேண்டும் என்ற ஆசை கமலா நேருவுக்கும் இருந்தது. அவரது விரும்ப்பம் நிறைவேறக் காலதாமதம் ஏற்பட்டது. ஆங்கில ஆட்சியினர் பெண் அரசியல்வாதிகளைக் கைது செய்யத் தயங்கினர் முதலில். பிறகு வேறு வழி இல்லை எனக் கண்டதும் வனிதாமணிகளையும் ஜெயிலுக்குள் அடைத்தனர். 1931 ஜனவரி முதல் தேதியன்று புது வருஷப் பரிசாக அரசாங்கம் கமலாநேருவுக்கு சிறை தண்டனையை அளித்தது. அதனால் அவர் மிகுந்த மகிழ்வடைய முடித்தது.

சிறையிலிருந்த போதே மோதிலால் நேரு நோயுற்றார். அவர் விடுதலை அடைந்த பிறகும் நிலைமை தெளியவில்லை. நோய் வளர்ந்து முற்றி, அவரைப் படுக்கையில் வீழ்த்திவிட்டது. அவரைக்காண அனுமதித்து நேருவை யும் கமலாவையும் இதர உறவினர்களையும் சர்க்கார் விடுதலை செய்தது. காந்திஜீயும் மோதிலால் நேருவைக் காண வந்திருந்தார். காங்கிரஸ் காரியக் கமிட்டியின் அலுவல்களும் நடைபெற்றுக் கொண்ட்டிருந்தன. முக்கியமான பிரச்னை ஒன்றை அவர்கள் அவசர அவசியமாக முடிவுகட்ட வேண்டியிருந்தது.

"நான் சீக்கிரமே போய்விடுடேன். சுயராஜ்யத்தைக் கண்டு அனுபவிக்க நான் இங்கு இரேன், ஆனாலும் உங்களுக்கு நிச்சய வெற்றி உண்டு என்பதை நான் அறிகிறேன்" என்று மோதிலால் காந்திஜீயிடம் சொன்னார். காந்திஜீ மோதிலாலின் அருகிலேயே இருந்தார். 1937 பிப்ரவரி ஆறாம் தேதி ஜவஹரின் தந்தை காலமானார்.

மக்களும் தலைவர்களும் பிறரும். அவரிடம் கொண்டிருந்த மதிப்பையும், தன்னிடம் காட்டும் அன்பையும் நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் வந்து குவிந்த அனுதாபச் செய்திகளின் மூலம் நேரு உணர்ந்தார். தந்தை மரண மடைந்த அன்று நேரு திக்பிரமை உற்றது போலிருந்தார். பிறகு பல வாரங்கள் வரையிலும் தந்தை போய்விட்டார் என்ற உண்மையை அவர் புரிந்து கொள்ளவே சிரமப்பட்டார். அவர் தன்னுடனேயே இருக்கிறார் என்ற நினைப்பே அவருக்கு இருந்ததாம். இதைப் பற்றிய ரசமான சம்பவம் ஒன்று குறிப்படத் தக்கது.

தந்தை இறந்த மூன்று மாதங்களுக்குப் பிறகு நேரு குடும்பத்துடன், ஓய்வுக்காக இலங்கை சென்று துவார எலியாவில் தங்கியிருந்தார். அழகு சூழ்ந்த அந்த இடம் அவருக்குப் பிடித்திருந்தது. தந்தை மனசுக்கு இது உகந்திருக்கும் என்று எண்ணினர் அவர். தந்தையையும் ஏன் அங்கே வரவழைக்கக் கூடாது என்று கேட்டது நேருவின் மனம். அவர் மிகவும் களைத்துப்போய் விட்டார்: சிறிது நாள் ஒய்வு அவருக்கு நலம் பயக்கும் என்று நினைத்து, அலகாபாத்துக்கு மோதிலால் நேரு விலாசத்திற்குத் தந்தி கொடுக்கவும் தயாராகிவிட்டார் அருமைப் புதல்வர். பிறகு சமாளித்துக் கொண்டார்.

நேரு அலகாபாத்துக்குத் திரும்பியவுடன் அதிசயமான ஒரு சம்பவம் நிகழ்ந்தது. தபாலில் ஒரு கடிதம் வந்தது. மோதிலால் நேரு கைப்பட விலாசம் எழுதிய கடிதம் எங்கெங்கோ சுற்றி எத்தனையோ தபால் முத்திரை கள் ஏற்று வந்திருந்தது அது. மிகுந்த ஆச்சரியத்துடன் நேரு கவரைப் பிரித்துக் கடிதத்தை எடுத்து வாசித்தார். அது அவருடைய தந்தை அவருக்கு எழுதிய கடிதம். ஆனால். 1926-ம் வருஷம் பிப்ரவரி மாதம் 28-ம் தேதி எழுதப்பட்ட கடிதம். அது விலாசதாரை வந்து சேர்வதற்கு ஐந்தரை ஆண்டுகள் பிடித்தது! 1931-ம் வருஷக் கடைசியில் தான் நேருவிடம் சேர்ந்தது அக் கடிதம்.

நேரு ஐரோப்பாவுக்குக் கப்பலேறிய சமயத்தில், அலகாபாத்திலிருந்து மோதிலால் அக்கடிதத்தை அனுப்பியிருந்தார். அவர்கள் பிரயாணம் செய்த ‘இட்டாலியன் லாயிட்’ எனும் கப்பலின் மேற்பார்வை விலாசமிட்டு பம்பாய்க்கு அனுப்பப் பெற்ற கடிதம் அது. எப்படியோ அது உரிய காலத்தில் கிடைக்கத் தவறி விட்டது. பிறகு அக்கடிதம் பலப்பல இடங்களுக்கு விஜயம் செய்திருந்தது பல ஆபீஸ்களின் அலமாரி மூலைகளிலும் துயில் பயின்று காலம் கழித்திருப்பதும் சாத்தியமே. முடிவில், உற்சாகி எவரோ நேருவின் சரியான விலாசத்திற்கு அதை அனுப்பிவிட்டார். அக்கடிதத்தின் மற்றொரு விசேஷத் தன்மை என்னவென்றால், தந்தை மகனுக்கு எழுதிய பிரிவுபசாரக் கடிதமாக இருந்தது அது. அதிசயிக்க வேண்டிய விஷயம் தான்; இல்லையா?

"https://ta.wikisource.org/w/index.php?title=நம்_நேரு/அத்தியாயம்_9&oldid=1377005" இலிருந்து மீள்விக்கப்பட்டது