நற்றிணை 1/005
5. பிரிதல் அரிதே!
- பாடியவர் : பெருங்குன்றூர் கிழார்.
- திணை : குறிஞ்சி.
- துறை : தலைவனின் செலவுக்குறிப்பறிந்து வேறுபட்ட தலைவிக்குத் தோழி சொல்லியது.
[(து–வி.) தலைவன், தன்னைப் பிரிந்து செல்லுதற்காவன செய்கின்றானெனக் குறிப்பாலுணர்ந்த தலைவி எழில்வேறு பட்டனள். அவளைத் தெளிவிப்பாளான தோழி, அவளது அந்த வேறுபாட்டுக் குறிப்புக்களை அறிந்த தலைவன், தன் போக்கையே கைவிட்டனன் என்று இவ்வாறு கூறுகின்றாள்.]
நீலம்நீர் ஆரக் குன்றம் குழைப்ப
அகல்வாய்ப் பைஞ்சுனைப் பயிர்கால் யாப்பக்
குறவர் கொன்ற குறைக்கொடி நறைப்பவர்
நறுங்காழ் ஆரம் சுற்றுவன அகைப்பப்
பெரும்பெயல் பொழிந்த தொழில எழிலி
5
தெற்கேர்பு இரங்கும் அற்சிரக் காலையும்
அரிதே, காதலர்ப் பிரிதல்—இன்று செல்
இளையர்த் தரூஉம் வாடையொடு
தோழீ! இன்றைக்குச் செல்லுகின்றவரான ஏவலிளையரையும் மீட்டுக் கொணர்ந்து தரக்கூடியதான வாடைக்காலத்தோடு மயங்கிய மழைபோல நீரைச் சொரிகின்ற நின் இமைகளையுடைய கண்கள்தாம், அவரைச் செல்லாதிருக்கவேண்டுமாறு ஒரு தூதினையும் பயந்தன. அதனால்— நிலம் நீரினாலே நிரம்பப்பெற்றதாய் நிறைவெய்தவும், குன்றிடத்து மரம் முதலாயினவெல்லாம் தழைப்பவும், அகன்ற வாயினையுடைய பசிய சுனையிடத்தெல்லாம் அதன்கண் தோன்றும் பயிர்வகைகள் முளைத்தெழுந்து வளர்ந்து நிறையவும், கொல்லையிடத்தே குறவர்கள் வெட்டியழித்தலினாலே குறைபட்ட மிக்க நறைக்கொடியானது நறுமணமுடைய வயிரங்கொண்ட சந்தன மரத்தின்மீது சுற்றிப் படர்ந்து ஏறவும், பெருமழையைப் பொழிந்த தொழிலையுடைய மேகமானது தென்திசையிடத்தே எழுந்து செல்லுதலினாலே, காதலரைப் பிரிந்தோர் இரங்குகின்றதான முன்பனிக்காலத்திலும், நின் காதலரை நீ பிரிந்து தனித்து வாழ்தல் என்பதுதான் அரிதாகும்.
கருத்து : 'ஆதலின், நீ மகிழ்வோடு அவரோடுங்கூடியின்புற்று வாழ்வாயாக' என்பதாம்.
சொற்பொருள் : குழைப்ப – தழைப்ப. சுனைப் பயிர்: குளநெல் முதலாயின. கால் யாத்தல் – முளைத்தெழுந்து வளர்தல். நிறைப்பவர் – மணக்கொடி; நன்னாறியின் வேரைப்போலக் கொடி மணக்கும் தாவரவகையினைச் சார்ந்தது. காழ் – வயிரம். ஆரம் – சந்தனமரம். அகைத்தல் – படர்ந்து ஏறுதல். அற்சிரம் – முன்பனிக் காலம்.
விளக்கம் : குறவர் கொன்ற குறைக்கொடி நறைப்பவர், நறுங்காழ் ஆரம் சுற்றுவன அகைப்பக், காதலர்ப் பிரிதல் அரிதாய்த் தழுவி இன்புறுக' என்று குறிப்பாகக் கூறுகின்றாள் தோழி. தலைவியின் கவலையால் மெலிந்த உடல், மீண்டும் களிப்பால் பூரித்து. அவள் தலைவனைத் தழுவியின்புறுதலைக் குறிக்கின்றாள் தோழி. அதனை உவமையாற் குறிப்பாகவும் புலப்படுத்துகின்றனள்.