நற்றிணை 1/006
6 'இவர் யார்?' என்னாள்!
- பாடியவர் : பரணர்.
- திணை: குறிஞ்சி.
- துறை: இரவுக்குறிப்பாற்பட்டு ஆற்றானாகிய தலைவன், தோழி கேட்பத்தன் நெஞ்சிற்குச் சொல்லியது.
[(து–வி.) இரவுக் காலத்தே தலைவியைக் கூடி மகிழும் வாய்ப்பைப் பெறக் கருதிய தலைவன், தலைவியின் தோழியைக் கண்டு, தன் நெஞ்சிற்குக் கூறுவானேபோல இப்படித் தன் உள்ளத்துயரை அவள் கேட்குமாறு கூறுகின்றான்.]
நீர்வளர் ஆம்பல் தூம்புடைத் திரள்கால்
நார் உரித் தன்ன மதனில் மாமைக்
குவளை யன்ன ஏந்தெழில் மழைக்கண்
திதலை அல்குற் பெருந்தோள் குறுமகட்கு
5
எய்தச் சென்று செப்புநர்ப் பெறினே!
'இவர்யார்?' என்குவன் அல்லள்; முனாஅது
அத்தக் குமிழின் கொடுமூக்கு விளைகனி
எறிமட மாற்கு வல்சி ஆகும்
வல்வில் ஓரி கானம் நாறி
இரும்பல் ஒலிவரும் கூந்தல்
10
பெரும்பே துறுவள்யாம் வந்தனம் எனவே!
நீரிடத்தே. வளர்கின்ற ஆம்பலினது துளையுடைய திரண்ட தண்டினை நாருரித்துக் கண்டாற்போன்ற, அழகு இல்லாத மாமையினையும், குவளை மலரைப் போன்ற அழகு தங்கப்பெற்ற குளிர்ச்சியான கண்களையும், தேமற் புள்ளிகளையுடைய அல்குல் தடத்தினையும், பெருத்த தோள்களையும் கொண்டவள் இளமகளாகிய தலைவி. அவளிடத்தே நெருங்கச் சென்று, நம் வரவைப்பற்றிச் சொல்வாரைப் பெற்றிலமே! பெற்றனமானால், அவள், 'வந்துள்ள இவர்தாம் யாரோ?' என்று கேட்பாளும் அல்லள். சுரத்திடத்தேயுள்ள குமிழமரத்தினது வளைந்த மூக்கினையுடைய முற்றிய கனிகள் கீழே உதிர்ந்து, அவ்விடத்தே விளையாட்டயர்ந்திருக்கும் இளமான்களுக்கு உணவாக நிற்கும் இயல்புடையது, வல்வில் ஓரியினது கொல்லிக் கானம்! அக் கானத்தைப்போல நறு நாற்றத்தைக் கொண்டதாகியும், கரிய பலவாகித் தாழ்ந்த தன்மையதாகியும் விளங்கும் கூந்தலையுடைய அவள்தான், அவர்கள் உரைத்து முடிப்பதற்கு முற்படவே, வந்துள்ளது யானெனத் தெளிந்தாளாய்ப் பெரிதும் மயக்கத்தை உடையவளும் ஆவாளே!
கருத்து : 'அவளிடம் சென்று என் வரவினை உரைத்து வருவாரைத்தான் யான் பெற்றிலேன்' என்பதாம்.சொற்பொருள் : தூம்பு – துளை. கால் – தண்டு. மதன் – அழகு. மழைக்கண் – குளிர்ச்சியான கண். திதலை – தேமற்புள்ளிகள். குறுமகள் – இளமகள். கொடுமூக்கு – வளைந்த மூக்கு. மாற்கு – மானுக்கு. ஒலிவரல் – தழைத்துத் தாழ்தல்.
விளக்கம் : "மதன்இல் மாமமை' என்று சொன்னது, தன்னைப் பிரிந்திருத்தலால், அவள்பால் மாமை உள்ளதாயிருக்கும் என்பதுபற்றியாம். 'இவர் யார்? என்குவள் அல்லள்' என்றது, அவளும் தன் நினைவோடு, தன் வரவை எதிர்பார்த்துத் காத்திருப்பாள் என்பதனாலாம். தலைவனது இப்பேச்சைக் கேட்கும் தோழி, தலைவியும் அவனைக் காதலிப்பதை அறிந்தவளாக, அவர்களைக் கூட்டுவிக்க முயல்வாள் என்பதாம்.
இறைச்சி : 'குமிழின் கனி மானுக்கு உணவாகும் தன்மைபோலத் தன் வரவு தலைவியின் கவலையைப் போக்கி இன்புறுத்தும்' என்பதாம். இதனால், தன் வரவு முன்னர்த் திட்டமிட்டிராத ஒன்று என்பதையும் தலைவன் உணர்த்தினனாம்.