நற்றிணை 1/011
11. நிலவு விரிந்தது!
- பாடியவர் : உலோச்சனார்.
- திணை : நெய்தல்.
- துறை : காப்பு மிகுதிக்கண், இடையீடுபட்டு ஆற்றாளாய தலைமகட்கு, தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழி சொல்லியது.
[(து–வி.) தலைவனோடு தலைவி இரவுக்குறியிற் கூடி மகிழ்ந்து இன்புற்று வருகின்ற ஒழுக்கத்தனளாக இருக்கின்றாள். அந்த ஒழுக்க நிலையை நீட்டிக்கவிடாது, அவளை வரைந்துவரும் நற்செயலிடத்தே தலைவனைச் செலுத்தல் வேண்டுமென்று நினைக்கின்றாள் தோழி. அதனால், காப்பு மிகுதியாகித் தலைவி தலைவனைச் சந்திப்பதும் இயலாதே போயின ஓர் நாளின் இரவிலே தலைவிக்குக் கூறுவாள் போலத், தலைவனும் கேட்டுத்தெளியுமாறு இவ்வாறு கூறுகின்றாள்.]
பெய்யாது வைகிய கோதை போல
மெய்சா யினை அவர் செய்தறி பிழைப்ப;
உள்ளி நொதுமலர் நேர்புரை தெள்ளிதின்
வாரார் என்னும் புலவி யுட்கொளல்
ஒழிக மாளநின் நெஞ்சத் தானே;
5
புணரி பொருத பூமணல் அடைகரை
ஆழி மருங்கின் அலவன் ஓம்பி
வலவன் வள்பாய்ந்து ஊர
நிலவு விரிந்தன்றாற் கான லானே.
தோழி! அவர் செய்த குறி இடையீடுபட்டதாய்த் தவறிப் போதலினாலே, சூடாது கிடந்தவொரு பூமாலையினைப் போல, நின் மெய்யும் வாட்டமுற்ற தன்மையளாக நீயும் ஆயினை. அயலாக எழுகின்ற அம்பலுரைகளைக் கருதினாயாக. 'இனித் திண்ணமாக, அவர் வரமாட்டார்' என்னும் புலவியை நீயும் உட்கொள்ளாதிருப்பாயாக. நின் நெஞ்சத்தே எழும் அந்த நினைவையே ஒழிப்பாயாக. அலைகள் வந்து பொருந்திய பொடிமணல் செறிந்திருக்கும் கடற்கரையினிடத்தே, தான் ஊர்ந்துவருகின்ற தேரின் சக்கரத்திடத்தே பட்டுச் சாவடையாவாறு நண்டுகளையும் விலக்கியவனாகப், பாகன் வாரைப்பிடித்து ஆய்ந்தபடியே தேரைச்செலுத்துமாறு, கானலிடத்தே நிலவொளியும் பரந்துள்ளது. அதனையும் காண்பாயாக.
கருத்து : 'இவற்றைக் கேட்டலுறும் தலைமகன், வரைந்து மணந்து கொண்டாலன்றித் தலைவியை அடையவியலாது என்பதனை உணர்வான்' என்பதாம்.
சொற்பொருள் : சாயினை – வாடினை. கோதை – பூமாலை. உள்ளி – நினைந்து. நொதுமலர் – அயலார். அடைகரை – கடலையடுத்த கடற்கரைப் பகுதி. வள்பு – வார்.
விளக்கம் : கோதை மணமுடைத்தேனும் சூடி நுகர்பவரைப் பெறாவிட்டால், வாடி அழகழிந்து போகும். அவ்வாறே தலைவியும், அவனை அடையாதே போய் வாடி உடலிழைத்தனள் என்கின்றாள். அலரறிவுறுத்தியும், காப்பு மிகுதி உரைத்தும், செய்குறி பிழைக்க நேர்ந்ததைச்சொல்லித் தலைவியைச் சமாதானப் படுத்துவதுபோலத் தோற்றினும், தலைவன் இவற்றை அறிந்து தலைவியை முறையாக வரைந்து வந்து மணந்து கொள்ளுதலே தக்கதென்று உரைப்பதே கருத்தாகக் கொள்ளுக. நிலவு வெளிப்பட்டதனால், தாம் வீட்டினின்றும் புறம்போதல் இயலாது என்பதும், ஆழி மருங்கின் வலவனையும் ஒம்புதற்கு ஏற்ற நிலவாதலின், அவன் வரவைச் சேரியினர் எளிதாக அறிந்துகொள்ள, அதனாற் பழியுரைகளே மிகுதிப்படும் என்பதும் குறிப்பாக உணர்த்தினாள். நண்டினையும் காக்கும் கருணை கொண்டவன், தலைவியின் துயரையும் போக்குவானாகி, அவளை விரைய வந்து மணந்துகொள்ளுதலில் மனத்தைக் செலுத்துதல் வேண்டும் என்றதும் ஆம்.