நற்றிணை 1/016
16. நல்லதற்கு உரியை!
- பாடியவர் : சிறைக்குடி ஆந்தையார்.
- திணை : பாலை.
- துறை : பொருள் கடைக்கூட்டிய நெஞ்சினை நெருங்கித் தலைவன் செலவழுங்கியது.
[(து–வி.) தலைவியை நீங்கிச்சென்று பொருளினைத் தேடி வருதலிற் செலுத்திய தன் நெஞ்சுக்குத் தலைவியை விட்டு நீங்குதற்கு மனமில்லாத தலைவன் ஒருவன், இவ்வாறு கூறுகின்றான். கூறியவனாகத், தன் பொருளார்வத்தையும் தடைசெய்து இல்லத்தேயே இருந்து, விடுகின்றான்.]
புணரின் புணராது பொருளே பொருள்வயிற்
பிரியின் புணராது புணர்வே; ஆயிடைச்
செல்லினும் செல்லாய் ஆயினும், நல்லதற்கு
உரியை-வாழிஎன் நெஞ்சே!—பொருளே,
வாடாப் பூவின் பொய்கை நாப்பண்
5
ஓடுமீன் வழியின் கெடுவ; யானே
விழுநீர் வியலகம் தூணி ஆக
எழுமாண் அளக்கும் விழுநிதி பெறினும்.
கனங்குழைக்கு அமர்த்த சேயரி மழைக்கண்
அமர்ந்தினிது நோக்கமொடு செகுத்தனென்;
10
எனைய ஆகுக! வாழிய பொருளே!
எனக்கே உரிமையான என் நெஞ்சமே! நீ வாழ்வாயாக! தலைவியை விட்டு நீங்காதே கூடியிருக்கப்பெறின், பொருட்செல்வமானது வந்து அடையாது. அந்தப் பொருட் செல்வத்தினைத் தேடிவருதற்கு இவளைப் பிரிந்து போயினம் ஆனாலோ, இவளோடு கூடிப்பெறுகின்ற அந்த இன்பமானது வாயாது. இவ்விரண்டு இக்கட்டுகட்கும் இடையிலே, யாதானும் ஒன்றைத் தேர்ந்தாயாய், நீ பொருள்வயிற்செல்லினும் அன்றிச் செல்லாயாயினும், எது எனக்கு நல்லதாயிருக்குமோ அதனையே செய்வதற்கு உரியையாவாய். பொருளானது, வாடாத பூக்களையுடைய பொய்கையிடத்து நின்றும் புதுநீர் வரத்தோடு ஓடிச்செல்லும் மீனினது நெறியைப் போல, இடையிற் கெடுவதான ஓர் இயல்பினையும் உடையது. யானோ, பெருங்கடலாற் சூழப்பெற்ற இந்தப் பரந்த உலகத்தையே அளவு மரக்காலாகக் கொண்டு, ஏழு தடவைகள் அளக்கத்தக்க மாண்புடைய பெரிதான செல்வத்தைப் பெற்றாலும் அதனை விரும்பேன். கனவிய குழையினை உடையாளுடைய, மாறுபட்ட செவ்வரி படர்ந்த குளிர்ச்சியான கண்கள், விருப்பமுடன் இனிதாக நோக்கும் அந்த நோக்கத்தினாலே பிளக்கப்பட்டவனாகவும் உள்ளேன். பொருள் எத்தன்மையது ஆயினும் ஆகுக! அதனைத் தேடி அடைதற்கு உரியாரிடத்தே சென்று அதுவும் வாழ்வதாக!
கருத்து : 'பொருளார்வத்தைக் கை விடுக' என்பதாம்.
சொற்பொருள் : ஓடுமீன் – செல்லும் மீன்; புதுநீர் குளத்தில் வந்து வீழக்கண்டு அதன் வழி ஏறிச்சென்று, இடைவழியில் வலைப்பட்டுச் சாகும் மீன். வியலகம் – அகன்ற நிலன். அமர்த்த – மாறுபட்ட. தூணி – அளவு கருவி: அளவு – மரக்கால்.
விளக்கம் : தானிருந்த வளமான பொய்கையை விட்டுப் புதுநீரை நாடி ஓடுகின்ற மீன். சென்றடைந்து இன்புறாமலும், இருந்த இடத்தை இழந்தும், இடையிலே துயருட்பட்டும் நலிவதுபோல, யானும் இல்லிடத்து இவளிற்பெறும் இன்பத்தை இழந்தும், குறித்த பொருளினைச் சென்று அடையாமலும், இடையாகிய பாலை வழியிற் சிக்கித் துயர்ப்படுவேன் என்கின்றான். 'கனங்குழைக்கு அமர்த்த கண்'— காதளவோடிய நெடுங்கண். 'பொருள் எனைய ஆகுக' என்றது. 'அதனை நாடும் விருப்பத்தினைக் கைவிடுக' என்று உரைத்ததுமாம். 'தூணி' – நான்கு மரக்கால் அளவுகொண்ட அளவுசால். இனிப்பொருள்தான் 'ஓடுமீன் வழியிற் கெடுவ' என்பதும் ஆம்.
பிற பாடங்கள் : "செல்லினும்' என்பது 'சேர்பினும் எனவும், 'செகுத்தனன்' என்பது 'செகுத்தனென்' எனவும் வழங்கும்.