நற்றிணை 1/024
24. நன்று செய்தனை!
- பாடியவர் : கணக்காயனார்.
- திணை : பாலை.
- துறை : பொருட்பிரிவுக்கு உடன்பட்ட தோழியைத் தலைவி உவந்து கூறியது.
[(து–வி.) பொருளைத் தேடி வருதலைக் கருதித் தலைவியைப் பிரிந்து வேற்று நாட்டிற்குச் செல்லற்கு முற்படுகின்றான் தலைவன். 'அதனால், தலைவி கொள்ளும் துயரமிகுதியைத் தோழி அறியாளல்லள். என்றாலும். தலைவன் செல்லுதலே ஆண்மைக் கடனாமாறும் அறிந்தவளாதலின், அவன் போவதனை ஏற்று, அதற்குத் தானும் உடன்படுகின்றாள். அதனை அறிந்த தலைவி, தன் தோழியிடத்தே, தன் கற்புச் செவ்வி தோன்ற உவப்புடன் இவ்வாறு கூறுகின்றாள்.]
'பார்பக வீழ்ந்த வேருடை விழுக்கோட்டு
உடும்படைந் தன்ன நெடும்பொரி விளவின்
ஆட்டு ஒழி பந்தின் கோட்டுமூக்கு இறுபு
கம்பலத் தன்ன பைம்பயிர்த் தாஅம்
வெள்ளில் வல்சி வேற்றுநாட்டு ஆர்இடைச்
5
சேறும், நாம்'எனச் சொல்லச் சேயிழை!
'நன்று' எனப் புரிந்தோய் நன்றுசெய் தனையே!
செயல்படு மனத்தர் செய்பொருட்கு
அகல்வர் ஆடவர்; அது அதன் பண்பே.
செவ்விதான அணிகளை உடையாய்! 'நிலம் பிளவுபட்டுப் போமாறு இறங்கியுள்ள வேரினையும், பெரிதானகிளைகளையும், உடும்புகள் பொருந்தியிருத்தலைப் போலத் தோற்றும் பொரிந்த செதில்களையுடைய நெடு மரத்தினையும் கொண்டு விளங்குவது விளாமரம். பச்சைக் கம்பளத்தை விரித்தாற் போலத் தோன்றும் பசும் பயிரினிடத்தே, ஆடுதல் ஒழிந்த பந்தானது கிடப்பதனைப் போல, அதன் கிளையினின்றும் மூக்கு இறுபட்டதாக வீழ்ந்த காய்கள் எம்மருங்கும் வீழ்ந்து பரந்துகிடக்கும். அத்தகைய விளாம்பழங்களையே தமக்கு உணவாகவுடைய மக்களைக் கொண்டதும், செல்லுதற்கு அரியதுமான பாலைவழியிலே, யாமும் செல்லா நிற்பேம்' எனத் தலைவர் நின்பாற் கூறினர். கூறுதலும், 'அத்திறம் நன்று' என விருப்புடனே நீயும் அதனை உடம்பட்டுக் கூறினை. அங்ஙனம் கூறினதனாலே, நீயும் எமக்கு நல்லதொன்றையே செய்தனை யாவாய் ஆடவர்கள் வினைமேற்கொண்ட உள்ளத்தினரே யாவர்; அவர் பொருளீட்டுதலின் பொருட்டாகத் தம் இல்லினின்று நீங்கியும் போவர்; அங்ஙனம் போதற்காலத்திலே, அதனை மறுத்துக் கூறாதே உடன்பட்டு நிற்றலே, அச் செயல் வெற்றியுறுதற்குரிய பண்பாகும்.
கருத்து : 'அவனைப் பிரிந்து ஆற்றியிருப்பேன்' என்பதாம்.
சொற்பொருள் : வெள்ளில் – விளாமரம். ஆட்டு – விளையாட்டு. கம்பலம் – கம்பளம்; விரிப்பு. புரிதல் – விரும்புதல்.
விளக்கம் : விளாமரத்தின் பொரிந்து தோன்றும் காட்சியை, 'உடும்புகள் பொருந்தியிருந்தாற்போல' என வருணிக்கின்றனர். 'வெள்ளில் வல்சி' யாயினும், அதுதான் பசும்பயிரிடை வீழ்ந்துகிடந்தது, அதனை எடுப்பாரற்ற நிலையிலே நாட்டின் வளம் மலிவுற்று நிலவியிருந்ததனால். 'கம்பலத் தன்ன பைம்பயிர்த் தாஅம்' என்றது, தம் நாட்டு நிலையாக இருக்க, அவன் செல்லும் பாலைவழி, இந்த வெள்ளிலே உணவாக அமைந்த கொடுமையுடையது எனக் கூறினளாகவும் கொள்க. 'ஆடவர் செயல்படு மனத்தர்; அவர் செய்பொருட்கு அகல்வர்' எனக் கூறுவதன் மூலம், தான், தலைவன் மீண்டுவருங்காலத்தின் எல்லைவரைக்கும் பொறுத்திருக்கும் கற்புத் திண்மையுடையவள் என்பதையும் சொல்லினாள்.மேற்கோள் : 'வடுவறு சிறப்பின் கற்பிலே திரியாமை' க்கு தனை மேற்கோளாகக் கொண்டு, 'இது செய்தனை எனத் தலைவி உவந்து கூறியது' என்பர் நச்சினார்க்கினியர். (தொல். பொருள் சூ. 147 உரை மேற்கோள்).