நற்றிணை 1/029
29. யாங்கு வல்லுநள்?
- பாடியவர் : பூதனார்.
- திணை : பாலை.
- துறை : மகட் போக்கிய தாய் சொல்லியது.
[(து.வி.) 'தலைவனோடு தலைவி உடன்போக்கிலே வீட்டை நீத்துப்போயினாள்' எனக்கேட்ட நற்றாய், அஃது அறத்தொடு பட்டதென உணரினும், தன் மகளது மென்மைக்கு இரங்கி ஆற்றாளாக இவ்வாறு கூறுகின்றனள்]
நின்ற வேனில் உலர்ந்த காந்தள்
அழலவிர் நீள் இடை, நிழலிடம் பெறாஅது
ஈன்றுகான் மடிந்த பிணவுப்பசி கூர்ந்தென
மான்ற மாலை, வழங்குநர்ச் செகீஇய,
புலிபார்த்து உறையும் புல்லதர்ச் சிறுநெறி
5
யாங்குவல் லுநள்கொல் தானே—யான், 'தன்
வனைந்துஏந்து இளமுலை நோவகொல்!' என
நினைந்து, கைந்நெகிழ்ந்த அனைத்தற்குத் தான்தன்
பேர் அமர் மழைக்கண் ஈரிய கலுழ
வெய்ய உயிர்க்கும் சாயல்
5
மைஈர் ஓதி பெருமடத் தகையே?
என் மகளை அணைத்தபடியே படுத்திருந்த யான், தொய்யில் வனைந்து பருத்த இளையதான அவளுடைய கொங்கைகள் நோவுகொள்ளுமோ' எனக் கருதினவளாக, அவளை அணைத்திருந்த என் கையைச் சிறிதே நெகிழ்த்தேன். அவ்வளவிற்கே, தான் தன்னுடைய பெரிதும் அமர்த்த குளிர்ச்சிகொண்ட கண்கள் ஈரங்கொண்டவாய்க் கலங்க, அவள் சுடுமூச்சு எறிந்தனள். மென்மையும் கருமையும் கொண்ட ஈரிய கூந்தலையும், பெரிதான மடப்பமென்னும் தகைமையையும் உடையவள் அத்தகைய என் மகள். அவள் தான், வேனிற்பருவம் ஒன்றே நிலைபெற்றதனால் காய்ந்து வாடிய காந்தட்பூக்களையும், அழலைப்போல ஒளி பரப்புகின்ற வெம்மையான தன்மையையுமுடைய நெடிதான பாலை வழியிலே, இதுகாலைச் சென்றனள். நிழலுள்ள ஓர் இடத்தையேனும் பெறாததாய்க், குட்டிகளைப் பெற்றுக் காட்டிலே காவல் காத்திருக்கும் பெண்புலியானது பசியுற்றதென்று, அதனைப் போக்கக்கருதியே ஆண்புலியானது மயங்கிய மாலைப்பொழுதிலே, வழியே வருவாரைக் கொல்லும் பொருட்டாக வழியை நோக்கியபடியே பதுங்கியிருக்கும். புல்லிய அதராகிய சிறிதான அந்நெறியிலே, அவள்தான், யாங்ஙனம் நடந்து செல்லுவதற்கும் வல்லவளாவாளோ?
கருத்து : 'அவள் நலமாகப் போய்ச் சேர்தல் வேண்டும்' என்பதாம்.
சொற்பொருள் : உலந்த – வாடிய, மான்ற மாலை – மயங்கிய மாலை; மயக்கம் கதிரொளிகுன்றல். அதர் – வழி. ஈரிய – ஈரத்தன்மையுடைய கான் மடிந்த – காலோய்ந்த எனினும் ஆகும்.
விளக்கம் : 'நின்ற வேனில், உலந்த காந்தள், : அழல் அவிர் நீளிடை' என்பவையெல்லாம் பாலைவழியின் கொடுமையைக் கூறுவன. 'புல்லதர்ச் சிறுநெறி என்பதனைப் பரலும் முள்ளும் நிரம்பிக் கிடப்பதான் சிறிதான வழி', எனவும் கொள்வர். 'அணைத்திருந்த தன் கையை நெகிழ்க்கவும் தலைவி கலங்கி அழுதலைத் தொடங்கினள்' என்றது, அவளது மென்மைத் தன்மையினை நினைந்து கலங்கிக் கூறியதாகும்.
இறைச்சிகள் : (1) 'பிணவு பசி கூர்ந்தெனப் புலி வழங்குநர்ச் செகீஇய வழிபார்த்து உறையும் நெறி' என்றனள்; அங்ஙனமே, தலைவனும் தன் மகளைப் பேணிக் காக்கும் பெருங் காதலனாவான் என்பதனையும், மாலைப் போதிலே வழிச்செல்லாது அவளுடன் பாதுகாவலான இடத்திலே தங்கிச் செல்வான் என்பதனையும் கருதிச் சொன்னாள் எனக் கொள்க.
(2) ஈன்று தான் மடிந்த பிணவு' என்றது. அவ்வாறே தன் மகளும் தலைவனுடன் மணந்துகூடி மக்களைப் பெற்றுச்சிறப்பாள் என்பதை நினைந்து கூறியதாம்.