உள்ளடக்கத்துக்குச் செல்

நற்றிணை 1/033

விக்கிமூலம் இலிருந்து

33. மல்கு புனல்!

பாடியவர் : இளவேட்டனார்.
திணை : பாலை.
துறை : பிரிவு உணர்த்தப்பட்ட தலைமகளது குறிப்பறிந்த தோழி, தலைமகற்குச் சொல்லியது.

[(து.வி.) தலைமகன், வினை முடித்தலிற் காலம் நீட்டியானாக விரைவிலே மீண்டும் வருதலைக் கருதிய தோழி, அவன்பாற் சென்று, அவனைப் பிரிந்து வாழாத தலைவியது நிலையைக் கூறி, விரைந்து மீள்தல் வேண்டும் என்பதனை உணர்த்துகின்றாள்.]

'படுசுடர் அடைந்த பகுவாய் நெடுவரை
முரம்புசேர் சிறுகுடிப் பரந்த மாலை
புலம்புகூட் டுண்ணும் புல்லென் மன்றத்துக்
கல்லுடைப் படுவில் கலுழி தந்து
நிறைபெய லறியாக் குறைத்தூண் அல்லில் 5
துவர்செய் ஆடைச் செந்தொடை மறவர்
அதர்பார்த் தல்கும் அஞ்சுவரு நெறியிடை
இறப்ப எண்ணுவர் அவர் எனின், மறுத்தல்
வலலுவம் கொல்லோ, மெல்லியம் நாம்?" என
விம்முறு கிளவியள் என்முகம் நோக்கி, 10
நல்லக வனமுலைக் கரைசேர்பு
மல்குபுனல் பரந்த மலர்ஏர் கண்ணே.

'பிளவுபட்ட நெடிய மலைச்சாரலிடத்தேயுள்ள வன்னிலஞ் சேர்ந்த சிறிய குடியிருப்பின் கண்ணே, மறைகின்ற ஞாயிறானது மேற்கு மலையினைச் சென்றடைந்ததும் செவ்வொளி பரவிய மாலைப்பொழுதிலே, பொலிவிழந்த ஊர்ப்பொதுவிடத்திலே. அச்சம் மிகுதியாக நிரம்பியிருக்கும் கல்லையுடைய குழிகளிடத்தேயுள்ள கலங்கல் நீரைக்கொண்டு வந்து, அதனையும் நிறையப் பெய்தலை அறியாத தன்மையராய்க் குறைந்த அளவே உண்ணும் உணவினராயிருப்போர் அங்குக் கூடியிருக்கும் மறக்குடியினர். துவர்த்த நிறத்தைக் கொண்ட ஆடையினையும், செவ்விய அம்புத் தொடையினையும் உடையவரான அவ்விடத்து மறவர்கள், இரவுப்போதிலே. வழிப்போவாரைக் கொள்ளையிடலின் பொருட்டாக, நெறியினை நோக்கியபடியே நெறியயலே பதுங்கியிருப்பார்கள். அச்சம் வருதலையுடைய அத்தகைய காட்டு வழியிடையே செல்லுதலைக் கருதுவார் நம் தலைவராய அவர். அங்ஙனமாயின், நாம்தான் அதனை மறுத்துப் பேசுவதற்கும் வல்லமை உடையேம் ஆவேமோ? நாம் மென்மைத் தன்மையினேம் அல்லேமோ!" என விம்மிய சொல்லை உடையவளாக என் முகத்தை நோக்கிக் கூறினாள் நின் தலைவி அவ் வேளையிலே, அவளுடைய மலரனைய கண்களிடத்தே நின்றும் பெருகி வழிந்த கண்ணீர்த் துளிகள், அவளுடைய நல்ல மார்பகத்தேயுள்ள அழகிய நகில்களின் எல்லைக்கண்ணேயும் சென்று அடைந்தவாய், மிகுதியான வெள்ளமாகவும் பரவி நின்றன இதனை அறிவாயாக!

கருத்து : 'நின் பிரிவைப் பற்றிக்கேட்ட பொழுதேயே துன்புற்று அழுதவள், நின்னைப் பிரிந்து நெடுநாள் உயிர் தரித்திராள்; ஆதலின், நீயும் காலத்தை நீட்டியாதே விரையச்சென்று வினைமுடித்து மீள்க' என்பதாம்.

சொற்பொருள் : படுசுடர் – மாலை ஞாயிறு. பகுவாய் நெடுவரை – பிளப்புக்களையுடைய நெடிய மலைப்பக்கம். 'புலம்பு கூட்டுண்ணும்' என்றது, 'பசியாலான வருத்தத்தைக் கூடியிருந்து உண்டபடியிருக்கும்' என்பதாம். கலுழி – கலங்கல்நீர். 'நிறைபெயல் அறியா' என்றது, அக்கலங்கல் நீர் தானும் நிறையக் குடித்தற்குப் போதாதபடி குறைவாகப் பகுத்துக் குடித்தற்கே அமைகின்ற தன்மையுடைய கோடையின் நிலைமையை. முலைக்கரை – நல்களாகிய கரையிடம்; நகில்களின் மேற்பக்கம்.

விளக்கம் : வழியின் அஞ்சுவரு தன்மையினை நினைந்தாளான தலைவி, ஆறலைத்தன்றி வாழ்தற்கியலாத வறுமையுடையராய், வழிவருவாரைக் கொள்ளையிட்டு உண்ணலையே எதிர்பார்த்திருக்கும் மறவரது கொடுந்தன்மையைக் கூறுகின்றாள். அக்காட்டு வழியூடு தலைவர் செல்லத் துணிந்த வன்கண்மையை நினைக்கவும், அவளுள்ளம் பெரிதும் கலங்குகின்றது; கண்கள் நீரைச் சொரிகின்றன. அன்பும் மென்மையுமே தன்பால் உறவு கொண்ட நாள்முதலாகத் தலைவனிடம் எழக்கண்டு இன்புற்றவள் தலைவி. தலைவன் பால் அருநெறியிற் செல்லும் துணிவும், ஆறலை கள்வர்க்கு அஞ்சாத திண்மையும், பொருட்பற்றும் மிக்கெழுதலைக் கண்டதும், அவள் பெரிதும் கலங்குகின்றாள் ஆனால் அதுவே ஆடவரது இயல்பும் தகுதியுமாதலை உணர்பவள், அவன் முடிபை ஏற்று ஆற்றியிருக்கும் கற்புத் திண்மையினையும் பெறுகின்றாள். அவள்பால் தோன்றிய இந்த உளமாற்றச் செவ்வியை இச்செய்யுள் நமக்குக் காட்டும். ஆயினும், 'பிரிவினைப் பொறுக்கலாற்றாத அவளது காதன் மிகுதியைத் தோழி நயமாக அறிவித்து. அவனை விரையத் திரும்புமாறு வற்புறுத்தும்' இனிமைச் செறிவும் விளங்கும்.

இறைச்சி : 'ஆறலை கள்வர்கள் அதர்பார்த்து அல்கியிருத்தலைப் போலத், தலைவனது பிரிவை நோக்கியபடி, தலைவியைப் பற்றிக் கொள்ளுதற்குப் பசலையும் செவ்வி நோக்கியபடி காத்திருக்கின்றது' என்பதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை_1/033&oldid=1731378" இலிருந்து மீள்விக்கப்பட்டது