நவகாளி யாத்திரை/நவகாளி நினைவுகள்

விக்கிமூலம் இலிருந்து
நவகாளி நினைவுகள்

1946-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பத்தாம் தேதியன்றுதான் மகாத்மாஜி நவகாளி பயங்கரச் சம்பவங்களைப் பற்றி முதன் முதலாகக் கேள்வியுற்றார்.

அகதிகளின் கண்ணீரைத் துடைக்க அந்த மகான் அக்கணமே தடியை ஊன்றி நவகாளிக்குப் பயணமானார். "நவகாளியில் பூரண அமைதி ஏற்படுகிறவரை நான் அந்த இடத்தைவிட்டுத் திரும்ப மாட்டேன். இந்தச் சோதனையில் என் உயிர் போயினும் சரியே" என்ற பிரதிக்ஞையுடன் காந்தி மகான் மேற்படி யாத்திரையை மேற்கொண்டார்.

காந்தி மகாத்மாவின் துணிச்சலைக் கண்டு பலர் மனம் கலங்கினார்கள். நவகாளியின் பயங்கரங்களை நினைவூட்டி அவரைத் தடுத்துப் பார்த்தார்கள். மகாத்மாஜி இதற்கெல்லாம் இணங்கவில்லை.

இந்தச் சமயத்தில், புதுடெல்லியில் பண்டித ஜவஹர்லால் நேருவும், சர்தார் வல்லபாய் படேலும் கடினமான அரசாங்கப் பொறுப்பை ஏற்று நடத்திக் கொண்டிருந்தார்கள். மகாத்மாவின் ஆலோசனையின்றி ஓர் அடிகூட எடுத்துவைக்க முடியாத நிலையில் அப்போது அவர்கள் இருந்தார்கள். எனவே, மகாத்மாவின் தீர்மானத்தை அறிந்தபோது அவர்கள் எத்தகைய மனோ வேதனைக்குள்ளாயிருப்பார்கள் என்று சொல்ல வேண்டியதில்லை அல்லவா?

அக்டோபர் 28-ஆம் தேதியன்று நவகாளி நோக்கிப் புறப்பட்ட காந்தி மகாத்மா வழியில் கல்கத்தாவில் சில தினங்கள் தங்கினார். அப்போது வங்காளத்தில் சுஹர்வர்த்தியின் தலைமையில் முஸ்லிம் லீக் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது.

காந்திஜி கல்கத்தாவில் தங்கியிருந்தபோது அவரைப் பேட்டி காணவும், அவருடன் ஆலோசனை நடத்தவும் அவரைத் தேடிப் பல தலைவர்கள் விஜயம் செய்தார்கள். பண்டித ஜவஹரும், சர்தார் வல்லபாயும், மெளலானா ஆஸாதும் இன்னும் பலரும் மகாத்மாஜியின் இருப்பிடத்தை நாடி வந்து ஆலோசனை நடத்திவிட்டுச் சென்றார்கள்.

வங்காளப் பிரதமர் ஜனாப் சுஹர்வர்த்தி சாகிப் மகாத்மாவைப் பல தடவை சந்தித்துப் பேசினார்.

நவகாளியில் முஸ்லிம் லீகர்களின் 'நேரடி நடவடிக்கை'யின் பெயரால் பல கிராமங்கள் தீப்பற்றி எரிந்து, பல உயிர்ச் சேதங்களும், பல கோடி ரூபாய்களுக்குப் பொருட் சேதங்களும் ஏற்பட்டிருந்தன அல்லவா? இதைக் கேள்வியுற்ற பீகார் இந்துக்கள் வெகுண்டு அங்குள்ள முஸ்லிம்களைப் பழிவாங்கும் உணர்ச்சியுடன் கொள்ளையிலும், கொலையிலும் ஈடுபட்டார்கள். பண்டித ஜவஹரும், சோஷலிஸ்டு கட்சித் தலைவர் ஜயப்பிரகாசரும் இந்தச் செய்தியைக் கேள்வியுற்றதும் பீகாருக்கு விரைந்து சென்று அங்கே எல்லாப் பிரதேசங்களையும் வாயு வேகத்தில் சுற்றிப் பார்வையிட்டார்கள்.

பீகார்க் காட்சிகளைக் கண்டு மனம் நொந்த நேரு, "வெறியர்களையும், கொலைகாரர்களையும் அடக்க ஆகாச மார்க்கத்திலிருந்து குண்டு போடவும் தயங்கக் கூடாது" என்று பீகார் சர்க்காருக்கு உத்தரவு போட்டுவிட்டுத் திரும்பினார்.

மகாத்மாஜி கல்கத்தாவில் தங்கியிருந்த சமயந்தான் பீகாரில் பழிவாங்கும் வகுப்பு வெறி ஆரம்பமாயிற்று. இதைப் பற்றி ஜனாப் சுஹர்வர்த்தி மகாத்மாஜியிடம் பிரஸ்தாபித்து, "தாங்கள் நவகாளிக்குச் சென்று அமைதியை நிலைநாட்டுவதைக் காட்டிலும், பீகாருக்குச் சென்று முஸ்லிம் மக்களைக் காப்பாற்றுங்கள் என்று யோசனை கூறினார். ஆனாலும் மகாத்மாஜி முன்வைத்த காலைப் பின்வைக்கவில்லை. பீகாரில் கலவரம் அடங்கவில்லை என்றால் தாம் உண்ணாவிரதம் இருக்க நேரிடும்" என்பதைச் சூசகமாக அறிவித்தார். அவ்வளவு தான்; பீகார் கலவரம் வெகு விரைவில் அடங்கிவிட்டது!

எனவே, நவம்பர் 6-ஆம் தேதி காந்திஜி கல்கத்தாவிலிருந்து நவகாளிக்குப் பயணமானார்.

காந்திஜிக்காக வங்காள சர்க்கார் ஒரு பிரத்தியேக ரயில் ஏற்பாடு செய்திருந்தனர்.

"கிவி" என்ற நீராவிப் படகை மகாத்மாவின் பிரயாணத்துக்காக, கோலந்தோ துறைமுகத்தில் தயாராக நிறுத்தி வைத்திருந்தனர்.

பல லட்சம் மக்கள் துறைமுகத்தில் கூடி நின்று மகாத்மாஜியை வழி அனுப்பியபோது அந்த மகான் தமக்கே உரித்தான இயற்கைப் புன்னகையுடன் கைகூப்பி வணங்கி, "நவகாளி சென்று வருகிறேன்" என்று அவர்களிடம் விடை பெற்றுக் கொண்டார்.

வங்காள சர்க்காரில் அப்போது தொழில் மந்திரியாக இருந்த ஜனாப் ஷம்ஷாலிதீன் ஆமதும் மற்றும் இரு பார்லிமெண்டரி காரியதரிசிகளும் மகாத்மாஜியுடன் துணையாகச் சென்றார்கள்.

இவர்கள் மூவரைத் தவிர மகாத்மாஜியுடன் டாக்டர் சுசீலா நய்யார், திருமதி அவா காந்தி, திருமதி சுசீலாபாய், தக்கர்பாபா, ஹேமா ப்ரோவா தேவி, மதன்லால் சென் முதலியவர்களும் இன்னும் சில பத்திரிகை நிருபர்களும் பிரயாணம் செய்தார்கள்.

"என்னை யாரும் பின்பற்றி வரவேண்டாம்; நான் இந்த யாத்திரையைத் தனிமையாகவே செய்ய விரும்புகிறேன்" என்று மகாத்மாஜி பல தடவை கூறியபோதிலும் அவரைச் சிலர் பின்தொடர்ந்தே செல்ல வேண்டியதாயிற்று.

காந்திஜி முதன்முதலாக செளமுஹானி என்ற ஊரில் தங்கினார். அங்கே திரு. ஜோன் மஜூம்தார் என்னும் ஒரு வியாபாரியின் வீடே மகாத்மாஜி தங்கும் இடமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பீகார் கலவரத்தைக் கேள்வியுற்றது முதல் மகாத்மாஜியின் மனம் பெரும் வேதனைக்குள்ளாகி இருக்க வேண்டும். அங்கு நடைபெற்ற நிகழ்ச்சிகளுக்குப் பிராயச்சித்தமாகத் தம்முடைய சொற்ப ஆகாரத்தையும் குறைத்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அதன் காரணமாக அவர் உடல்நலம் வெகுவாகக் குறைந்ததுடன் தேக நிறையிலும் ஐந்து பவுண்டு குறைந்து விட்டது.

நேருஜியிடமிருந்து, 'பீகார் நிலவரம் கவலைக்கிடமில்லை' என்று தந்தி வந்த பிறகே மகாத்மாவின் கவலை நீங்கிற்று. செளமுஹானியில் அன்று மாலை நடந்த பிரார்த்தனைக் கூட்டத்துக்கு முப்பதாயிரம் முஸ்லிம்கள் விஜயம் செய்திருந்தார்கள். மகாத்மாவும் வங்காளத் தொழில் மந்திரி ஜனாப் ஷம் ஷாலிதீனும் செய்த உருக்கமான பிரசங்கத்தைக் கேட்டு முப்பதாயிரம் முஸ்லிம்களும் கண்ணீர் வடித்தார்கள்.

இதற்குப் பிறகு காந்திஜி பல ஊர்களுக்கு விஜயம் செய்தார். ஆங்காங்கே பல கோரக் காட்சிகளையும், கொள்ளிக் கட்டைகளையும், மண்டை ஓடுகளையும் நேருக்கு நேர் கண்டார். பல குடும்பங்கள் வீடு வாசல்களை இழந்து திக்கற்ற நிலையில் தவிப்பதையும் பார்த்தார். தம்முடன் வந்தவர்கள் யாவரையும் தனித்தனியாகப் பிரிந்து சென்று ஆங்காங்கே அவதிப்படும் அகதிகளுக்கு விடுதி ஏற்படுத்தி, கஷ்ட நிவாரண வேலைகளில் ஈடுபடும்படி உத்தரவிட்டார்.

மகாத்மாஜியின் கட்டளைக்கிணங்கி அவருடைய காரியதரிசி பியாரிலாலும், சுசேதா கிருபளானியும், சுசீலா நய்யாரும் நவகாளியில் புரிந்த சேவைகள் பொன்னெழுத்தில் பொறித்து வைக்க வேண்டியவையாகும்.

நவம்பர் 12-ஆம் தேதி மகாத்மாஜி ராம்கஞ்ச் போலீஸ் ஸ்டேஷன் ஆளுகைக்குட்பட்ட பிரதேசத்தைப் பார்வையிட்டார். அப்போது அவர் செளதுரி என்பவரின் மாபெரும் வீட்டைப் பார்க்க நேர்ந்தது. இந்த வீடு 32 அறைகள் கொண்ட மிகப்பெரிய கட்டிடம். மகாத்மா அந்த வீட்டை முழு ரூபத்தில் பார்க்கவில்லை; கரியும், சாம்பலும் நிறைந்த பாழான தோற்றத்திலேயே பார்த்தார்.

'காலா' என்ற திபேத் நாட்டு ஸ்பானியல் ஜாதி நாய் ஒன்று அங்கே சுற்றிக் கொண்டிருந்தது. இந்த நாயைப் பற்றின அபூர்வ சரிதை உள்ளே விவரிக்கப்பட்டிருப்பதை நேயர்கள் கவனித்திருக்கலாம்.

தட்டபாரா கிராமத்திலிருந்த ஸாஹாபாரி என்னும் ஒரு வீட்டை மகாத்மாஜி சில நிமிட நேரம் பார்வையிட்டார். அப்போது கொளுத்தும் வெயிலைத் தாளாத மகாத்மா ஒரு தென்னந்தோப்புக்குள் நுழைந்தார். நூற்றுக்கணக்கான கிராமத்துப் பெண்கள் அந்த இடத்தில் மகாத்மாவைச் சுற்றிச் சூழ்ந்து கொண்டார்கள். கண்ணீரும் கம்பலையுமாகத் தங்கள் சோக சரிதத்தை எடுத்துக் கூறினார்கள். இந்துப் பெண்களின் புனிதமான மாங்கல்யங்களை முரடர்கள் பலாத்காரமாக அபகரித்துக் கொண்ட பயங்கரத்தைப் பற்றிச் சொன்னார்கள்.

இதையெல்லாம் கேள்வியுற்ற மகாத்மாஜி மனமுருகி, "நீங்கள் அனைவரும் ஆபத்தான இந்தச் சமயத்தில் சீதையையும், திரெளபதியையும் போல் தைரியமாக நடந்து கொள்ள வேண்டும். உங்களுக்கு என்னாலான உதவிகளைச் செய்யவே இங்கு வந்துள்ளேன்" என்று அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

நவகாளிக் காட்சிகளைக் கண்டு மனம் வெதும்பிய மகாத்மா, "சத்தியமும், அஹிம்சையுமே என்னை இந்த அறுபது வருடங்களாகக் காப்பாற்றி வந்தன. இன்றோ அந்த இரு சக்திகளும் என்னைப் பெருஞ் சோதனைக்குள்ளாக்கி இருக்கின்றன. நவகாளியில் நான் எங்கும் இருளையே காண்கின்றேன். வெளிச்சத்தைக் காண்கிலேன். வெளிச்சத்தை நாடிக் கால்நடை யாத்திரையை மேற்கொள்வேன்" என்று தமது கால்நடை யாத்திரையைத் தொடங்கினார்.

வங்காள பாஷை தெரியாத காரணத்தால் மகாத்மாஜி கல்கத்தா யூனிவர்ஸிடி புரொபலர் நிர்மல் குமார் போஸைத் துணையாக அழைத்துக் கொண்டார். பாபுஜிக்குப் பணிவிடைகள் புரியும் பொருட்டுத் திருமதி மது காந்தியும், திரு. பரசுராமனும் அவருடன் சென்றார்கள். ஸ்ரீராம்பூரில் மகாத்மாஜி ஏறக்குறைய ஒரு மாத காலம் தங்கியிருந்த பிறகு 1947 ஜனவரி 22-ஆம் தேதியன்று 7.30 மணிக்கு அடுத்த ஊருக்குப் பிரயாணமானார்.

மகாத்மாஜி கால்நடையாகவே இரண்டு மாத காலம் யாத்திரை செய்தார்; தினசரி காலை 7.30 மணிக்குக் கிளம்பி அடுத்த ஊருக்குப் பிரயாணம். அங்கே 9 மணி முதல் 2 மணி வரை ஸ்நானம், ஆகாரம், ஓய்வு. பிறகு 2 மணி முதல் 4 மணி வரை நூல் நூற்றல். வருகிறவர்களுடன் பேசுதல், படிப்பு - பிறகு 4.45 முதல் 5.15 வரை ஊரைச் சுற்றிப் பார்வையிடுவது - அப்புறம் 5.15 மணிக்குப் பிரார்த்தனைக் கூட்டம்.

நவகாளியில் மகாத்மாவின் அன்றாட அலுவல்கள் இவ்வளவுதான். முதல் யாத்திரையில் முப்பது கிராமங்களும், இரண்டாவது யாத்திரையில் பதினெட்டுக் கிராமங்களும் ஆக நாற்பத்தெட்டுக் கிராமங்களைச் சுற்றிப் பார்த்த பிறகு டாக்டர் சையத் மகம்மது பீகாருக்கு வரும்படி அழைத்ததற்கிணங்க மகாத்மா பாட்னாவுக்குப் பயணமானார்.

பீகாருக்கு புறப்பட்ட சமயம் மகாத்மா நவகாளி மக்களிடம், "நான் சீக்கிரமே நவகாளிக்குத் திரும்பி வந்து விடுவேன்; நான் இங்கே தொடங்கிய காரியம் இன்னும் பூர்த்தியாகவில்லை" என்று கூறிப் புறப்பட்டார். ஆனால் காந்தி மகாத்மாவின் விருப்பமும், நவகாளி யாத்திரையும் பூர்த்தி பெறாமலே முடிந்துவிட்டன.

★ ★ ★

மகாத்மாவின் நவகாளி யாத்திரையில் கலந்து கொள்ளும் பேறு பெற்ற நான் அவரை முதன் முதலாக ஸ்ரீநகர் என்னும் கிராமத்தில் சந்தித்தேன். ஏகாந்தப் பிரயாணம் செய்துகொண்டிருந்த மகாத்மாவுடன் ஒரு சில பத்திரிகை நிருபர்களே அனுமதிக்கப்பட்டிருந்தார்கள். எனவே, முன்கூட்டி எவ்வித அனுமதியும் பெறாமலே நவகாளியில் மகாத்மாவுடன் சுற்றுப் பிரயாணம் செய்யச் சென்றிருந்த நான் முதலில் சற்று திக்பிரமை கொண்டேன்.

"மகாத்மாஜியின் அனுமதியைப் பெறுவது சாத்தியமே இல்லை" என்று அங்கிருந்த பத்திரிகை நிருபர்களும், வங்காள யூனிவர்ஸிடி புரொபலர் நிர்மல் குமார் போஸும் கண்டிப்பாகச் சொல்லிவிட்டார்கள்.

மகாத்மாவைக் கண்டு பேசி உத்தரவு பெறலாமென்ற ஆசையுடன் நிர்மல்குமார் போஸை அணுகி மகாத்மாவைக் காண அனுமதி கோரினேன். நிர்மல்குமார் போஸ் மிகவும் கண்டிப்பான பேர்வழியாக இருந்தார்.

நான் நயமாகக் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் அவர் 'பட் பட்' என்று பதில் கூறினார். "மதராஸிலிருந்து வருகிறேன். மகாத்மாவைப் பார்க்க வேண்டும்“ என்று நான் கூறியதும், "மதராஸிலிருந்து உம்மை யார் வரச் சொன்னது?" என்று பதில் கேள்வி கேட்டு என்னைத் திணற அடித்தார்.

"யாருமில்லை; நானாகவேதான் வந்தேன்“ என்று பதில் சொன்னேன்.

“சரி; நீராகவே திரும்பிப்போம்“ என்றார்.

“மகாத்மாவை...“

“அதுதான் முடியாது.”

என் மனோநிலை அப்போது எப்படி இருந்திருக்கும் என்பதை நேயர்களே ஊகித்துக் கொள்ளலாம்.

வேறு வழி இல்லாமற்போகவே, திரு. நிர்மல்குமார் போஸ் அப்படி இப்படிப் போகிறாரா என்று சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தேன். ஆசாமி அந்த இடத்தைவிட்டு நகருவதாயில்லை.

கடைசியாக நிர்மல்குமார் போஸ் மகாத்மாஜி தங்கியிருந்த வீட்டிற்குள்ளிருந்து வெளியே வந்தார். என்னை ஒரு கணம் புன்முறுவலுடன் ஏற இறங்கப் பார்த்தார்.

“மகாத்மாவிடம் தாங்கள் சென்னையிலிருந்து வந்திருப்பதாகக் கூறினேன்...“ என்றார்.

“அப்பாடா!“ என்று சிறிது சந்தோஷத்துடன் பெருமூச்சு விட்டேன்.

“தாங்கள் அவசியம் திரும்பிப் போய்விட வேண்டியதுதான் என்று காந்திஜி சொல்லிவிட்டார்“ என்று ஒரு பெரிய வெடிகுண்டைத் தூக்கி என் தலையிலே போட்டார்.

“ஐயா, ஒரே ஒரு நிமிடம், ஒரே ஒரு வார்த்தை. மகாத்மாவைப் பார்க்க அனுமதிக்க வேண்டும்“ என்று மிகவும் மன்றாடி வணக்கமாகக் கேட்டுக்கொண்டேன்.

திரு. நிர்மல்குமார் போஸ் மனமிரங்கினார்.

“ஒரே நிமிஷத்தில் திரும்பிவிட வேண்டும்“ என்ற கண்டிப்பான உத்தரவுடன் என்னை உள்ளே செல்ல அனுமதித்தார்.

கால்கள் தள்ளாடியவண்ணம் மகாத்மா வீற்றிருந்த கட்டிலுக்கருகில் போய் நின்றேன். நாக்குழறியது. வார்த்தைகள் வெளிவரவில்லை.

"சென்னையிலிருந்து 'கல்கி' பத்திரிகையின் பிரதிநிதியாக வந்திருக்கிறேன். தங்களுடன் சுற்றுப் பிரயாணம் செய்து தென்னிந்தியாவுக்குச் செய்தி அனுப்பப் போகிறேன். தங்கள் உத்தரவு வேண்டும்."

"உனக்கு ஹிந்தி தெரியுமா?"

"தெரியாது."

"வங்காளி தெரியுமா?"

"தெரியாது."

"சென்னையிலிருந்து வர எவ்வளவு பணம் செலவாயிற்று?"

"முந்நூறு ரூபாய்."

"வீண் தண்டம்; அந்தப் பணத்தை ஹரிஜன நிதிக்குக் கொடுத்திருக்கலாமே. சரி, நாளை மறுதினம் திரும்பிப் போய்விட வேண்டும், என்ன?"

"அப்படியே!”

இரண்டே தினங்கள்தான் மகாத்மாவுடன் தங்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. இந்த இரண்டு தினங்களுக்குள் நான் அடைந்த அனுபவங்கள் என் வாழ்நாட்களில் வேறு எப்போது கிட்டும்?

□ □ □