நவகாளி யாத்திரை/முன்னுரை

விக்கிமூலம் இலிருந்து

முன்னுரை

ந்த நூலில் அடங்கியுள்ள கட்டுரைகளைச் 'சாவி' அவ்வளவு சுலபமாக எழுதிவிடவில்லை. எவ்வளவோ கஷ்டங்களுக்குள்ளாகி, தூர தேசப் பிரயாணங்கள் செய்து திரும்பிய பிறகு மீண்டும் எவ்வளவோ பிரயாசை எடுத்துத்தான் எழுதினார்.

ஆனாலும் இந்தச் சிறு முன்னுரை எழுதுவதில் எனக்குள்ள கஷ்டம் சாவிக்கு இவ்வளவு கட்டுரைகளும் எழுதியதில் ஏற்பட்டிருக்க முடியாது.

ஏனெனில், 'சாவி' கட்டுரைகள் எழுதியபோது காந்தி மகாத்மா இந்த நில உலகத்தில் நடமாடிக் கொண்டிருந்தார்.

இன்று அந்த மகானுடைய பூத உடல் மறைந்து விட்டது.

சென்ற 1947-ஆம் வருஷம் பிப்ரவரி மாதத்தில் காந்தி மகான் நவகாளி ஜில்லாவில் கிராமம் கிராமமாக நடந்து போய்க் கொண்டிருந்தார். இந்த வருஷம் பிப்ரவரியில் மகாத்மா வானுலகில் இருக்கிறார்.

1946-ஆம் வருஷம் பிப்ரவரியில் இந்திய நாட்டின் பிதா நமது தமிழகத்திற்கு விஜயம் செய்திருந்தார்.

இந்த பிப்ரவரியில் அவருடைய ஆத்மா மேலுலகத்துக்கு விஜயம் செய்துவிட்டது. அவருடைய எரிந்த உடலின் சிறு துகள்கள் பற்பல நதிகளிலேயும், கடல் துறைகளிலேயும் கரைந்துவிட்டன.

'மகாத்மா சென்ற வருஷம் இந்த மாதத்தில் நாம் நடக்கும் பூமியிலே நடமாடினார்; இந்த வருஷம் இந்த மாதத்தில் அவருடைய திருமேனி இங்கில்லை' என்று எண்ணும் போதெல்லாம் நம் வயிற்றில் ஏதோ பகீர் என்கிறது. நெஞ்சை ஏதோ வந்து அடைத்துக் கொள்கிறது.

காந்தி மகான் காலமாகி நாள் இருபது ஆகியும் கலக்கம் சிறிதும் நீங்கவில்லை.

தலைவர்கள் ஏதோ தைரியம் சொல்லுகிறார்கள்; ஆறுதல் கூறுகிறார்கள். நமக்குத் தைரியமும் பிறக்கவில்லை; ஆறுதலும் உண்டாகவில்லை.

உலகம் சுழன்று கொண்டிருக்கிறது; வாழ்க்கை நடந்து மெள்ள ஆறுதலும் கொண்டிருக்கிறது. எனினும், ஜனவரி 30-க்கு முன்பு இருந்ததுபோல் இப்போது ஒன்றுமில்லை. எல்லாம் மாறுதலாகவே தோன்றுகிறது. இந்த மனோநிலைமையில் 'நவகாளி யாத்திரை' என்னும் இந்தப் புத்தகத்துக்கு முன்னுரை எழுதும் கடமை எனக்கு ஏற்பட்டிருக்கிறது.

வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் ஒரு சந்தர்ப்பம் - அருமையான சந்தர்ப்பம் - ஏற்படுகிறது. அந்தச் சந்தர்ப்பத்தின் அருமையைத் தெரிந்துகொண்டு பயன்படுத்திக் கொள்ள ஆற்றல் வேண்டும்; அதோடு அதிர்ஷ்டமும் வேண்டும்.

சென்ற 1947-ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் 'சாவி'யின் வாழ்க்கையில் அத்தகைய அருமையான சந்தர்ப்பம் நேர்ந்தது. அதைப் பயன்படுத்திக்கொள்ளும் ஆற்றலும், அதிர்ஷ்டமும் அவருக்கு இருந்தன.

"நவகாளிக்குப் போகிறீர்களா?" என்று கேட்டதும் ஒரு கண்மும் யோசியாது, "போகிறேன்" என்று உடனே ஒப்புக் கொண்டார்.

காரியம் யோசிக்க வேண்டிய காரியம்தான். நவகாளி என்று சொன்னாலே அப்போதெல்லாம் உடம்பு நடுங்கிற்று. உள்ளம் பதைத்தது. மனிதர்கள் செய்வார்கள் என்று எண்ண முடியாத பயங்கரமான பைசாசச் செயல்கள் அந்தப் பிரதேசத்தில் நடந்திருந்தன. பத்திரிகைகளில் படிக்கும்போதே குலைநடுக்கம் உண்டாயிற்று.

அத்தகைய பயங்கரப் பிரதேசத்துக்கு மகாத்மா காந்தி பிரயாணப்பட்டார்.

"கிராமம் கிராமமாகக் கால்நடையாக நடந்து செல்வேன். அன்பு மதத்தையும், அஹிம்சா தர்மத்தையும் பரப்புவேன்!" என்று சொன்னார்.

பலர் சந்தேகப்பட்டார்கள். வேண்டாம் என்று தடுத்தார்கள். 'காரியம் கைகூடாது; வீண் அபாயத்துக்கு உட்படுகிறீர்கள்' என்று சொன்னார்கள். வழக்கம் போல மகாத்மா இந்தத் துக்கிரி வார்த்தைகளுக்கெல்லாம் செவி கொடுக்கவில்லை. தமது அந்தராத்மாவின் குரலுக்கே செவி சாய்த்தார். நவகாளிக்குப் புறப்பட்டுச் சென்றார்.

“என்னுடைய இலட்சியங்களுக்குக் கீழ்வங்காளத்தில் கடும் சோதனை ஏற்பட்டிருக்கிறது. இதற்கு முன் இத்தகைய ஒரு பெரும் சோதனையில் நான் ஈடுபட்டதில்லை. இந்தப் பரீட்சையில் நான் தேறாமல் போனால் அது அஹிம்சா தர்மத்துக்குத் தோல்வியாகாது. அஹிம்சைக் கொள்கையை ஸ்தாபிக்க நான் கடைப் பிடித்த முறைதான் தோல்வி அடைந்ததாகும். இப்போது நான் தோல்வி அடைந்தாலும் பிற்காலத்தில் தோன்றப்போகும் உத்தமர்களும், மகான்களும் இந்த முயற்சியில் வெற்றி பெறுவார்கள் என்பது நிச்சயம்" என்று மகாத்மா காந்தி நவகாளி யாத்திரையின்போது கூறினார்.

ஆனால், உண்மையில் அஹிம்சைக் கொள்கையும் தோல்வியடையவில்லை; மகாத்மா கடைப்பிடித்த முறையும் தோல்வி அடையவில்லை. நவகாளியில் மகாத்மா ஆரம்பித்த அஹிம்சா இயக்கம் புதுடெல்லியில் ஜனவரி 30-ஆம் தேதி பூர்த்தியாயிற்று.

பலாத்காரம் தோற்றது; கொடுமை தோற்றது; துவேஷம் தோற்றது; சமூகவெறி தோற்றது; நாதுராம் கோட்ஸேயும் படுதோல்வி அடைந்தான்.

அன்பு வெற்றி பெற்றது; அஹிம்சை வெற்றி பெற்றது; அஹிம்சா மூர்த்தியான காந்திஜி வெற்றி பெற்றார்; சந்தேகமேயில்லை. இந்திய தேசமெங்கும் வசிக்கும் பாமர முஸ்லிம் மக்களின் மனோநிலையை இன்று கேட்டறிந்தால் அஹிம்சையின் வெற்றி எவ்வளவு மகத்தானது என்று அறியலாம்.

'அன்பு அன்பை வளர்க்கிறது. துவேஷம் துவேஷத்தை வளர்க்கிறது' என்பது காந்தி மகானுடைய கொள்கை. 'துவேஷத்தைப் பதில் துவேஷத்தினால் வெல்ல முடியாது. துவேஷத்தை அன்பினாலேதான் வெல்ல முடியும்' என்பது அவருடைய சமய சித்தாந்தம். கல்கத்தா படுகொலை, நவகாளி பயங்கரம் இவற்றுக்குப் பிறகு ஏற்கனவே அன்பும், சகோதர பாவமும் குடிகொண்டிருந்த ஹிந்துக்கள் பலரின் உள்ளங்களிலும் துவேஷமென்னும் அக்கினி மூண்டது.

பஞ்சாப் சம்பவங்களுக்குப் பிறகு அந்த அக்கினி கொழுந்து விட்டு எரியத் தொடங்கியிருந்தது.

ஆனால், மகாத்மா காந்தியின் உறுதி மட்டும் எள்ளளவும் சலனமடையவில்லை.

நவகாளியில் முஸ்லிம்கள் உள்ளத்திலிருந்து பகைமைப் பேயை விரட்ட முயன்றது போலவே, கல்கத்தாவிலும், டெல்லியிலும் ஹிந்துக்களின் உள்ளத்திலிருந்தும் பகைமைப் பேயை ஓட்ட முயன்றார். கல்கத்தாவில் மகாத்மா விரைவிலேயே அதிசயமான வெற்றி பெற்றார். ஆனால், டெல்லியில் அவ்வளவு எளிதாக வெற்றி காண முடியவில்லை. உண்ணாவிரதம் இருந்து ஓரளவு வெற்றி கண்டார். உயிரைத் தியாகம் செய்து பூரண வெற்றி அடைந்தார்.

எவ்வளவோ கசப்படைந்து போயிருந்த ஹிந்து சமூகத்தின் உள்ளம் இவ் வருஷம் ஜனவரி 30-க்குப் பிறகு அடியோடு மாறிவிட்டது. வெறுப்பும், துவேஷமும், பழிவாங்கும் எண்ணமும் குடிகொண்டிருந்த ஹிந்து உள்ளங்களில் இப்போது பழையபடி அன்பும், சகோதர பாவமும் குடிகொண்டிருக்கின்றன.

மகாத்மா காந்தி தினந்தோறும் மாலையில் நடத்தும் பிரார்த்தனையைப் பற்றி அனைவரும் அறிவார்கள். பிரார்த்தனையில் ராம்துன் அதாவது ராம நாம பஜனை நடப்பதும் எல்லோருக்கும் தெரியும்.

"ரகுபதி ராகவ ராஜா ராம்
பதித பாவன சீதா ராம்"
என்பது நவகாளி யாத்திரைக்கு முன்னால் மகாத்மா காந்தி நடத்திய பிரார்த்தனைகளில் சாதாரணமாகப் பாடப்பட்ட ராம பஜனை.

நவகாளி யாத்திரையின்போது மகாத்மா பின்வரும் இரண்டு வரிகளைப் புதிதாக மேற்படி ராம பஜனையில் சேர்த்துக் கொண்டார்.

ஈசுவர அல்லா தேரே நாம்
ஸ்ப்கோ ஸன்மதி தே பகவான்!”

(ஈசுவரன் என்றாலும் அல்லா என்றாலும் உன்னுடைய திருநாமந்தான். பகவானே! எல்லாருக்கும் நல்ல புத்தியை அருள்க.)

ராம பஜனையில் இந்த வரிகளை மகாத்மா சேர்த்தபோது ஹிந்துக்களில் பெரும்பாலோருக்குப் பிடிக்கவில்லை. இவ்வளவு கொடூரமான காரியங்கள் நாட்டில் நடந்த பிறகு ராமர் பெயரோடு அல்லாவின் பெயரைச் சேர்ப்பதற்கு ஹிந்துக்களின் மனம் இடங் கொடுப்பது கஷ்டந்தான். ஏதோ சிலர் காந்திஜி சொல்கிறாரே என்று ஒப்புக் கொண்டனர்.

ஆனால், காந்தி மகான் ஜனவரி 30-ஆம் தேதி உயிர்த்தியாகம் செய்த பிறகு, எத்தனை லட்சக்கணக்கான ஹிந்துக்கள் மனத்தில் சிறிதும் தயக்கமோ, கல்மிஷமோ இல்லாமல், 'ஈசுவர அல்லா தேரே' நாம் என்னும் பஜனை வரியை விம்மிக் கொண்டும் விசித்துக் கொண்டும் பாடியிருக்கிறார்கள்!

ஹிந்துக்களின் மனமாறுதலைக் காட்ட இதைக் காட்டிலும் வேறு என்ன அத்தாட்சி வேண்டும்?

ஜனவரி 30-ஆம் தேதி சம்பவம் நம்மையெல்லாம் ஒரு குலுக்கு குலுக்கிவிட்டது. அதனால் ஏற்பட்ட விளைவுகள் மறைவதற்கு இன்னும் பல காலம் ஆகலாம். ஆனினும் மகாத்மாவின் தியாக வாழ்க்கையின் சிகரம் அதுதான் என்பதில் ஐயமில்லை.

காந்தி மகான் தமது இறுதியான ஆத்ம தியாகத்தினால் இந்திய நாட்டைக் காப்பாற்றினார். இந்தியா அடைந்த புதிய சுதந்திரத்தைக் காப்பாற்றினார். இந்தியாவில் இரத்த வெள்ளம் ஓடி, கோடிக்கணக்கான மக்கள் செத்து, தேசமே ஒரு பெரிய மயானம் ஆகிவிடாமல் காப்பாற்றினார்.

இனி எத்தனையோ ஆயிரம் ஆண்டுகள், ஒரு வேளை ஊழுழிக் காலம் வரையில், மகாத்மா இந்தியாவின் குலதெய்வமாகப் போற்றப்படுவார். உலகத்துக்குப் புது வழிகாட்டி, மனித குலம் சர்வ நாசம் அடையாமல் காப்பாற்றிய தீர்க்கதரிசியாக உலக மக்களால் நெடுங்காலம் பாராட்டப்படுவார்.

இதற்கெல்லாம் அங்குரார்ப்பணம் நவகாளியிலே தான் நடந்தது. காந்திஜியின் கால்நடை யாத்திரையின் போது நடந்தது.

அந்த அரும் பெரும் சரித்திர சம்பவத்தை நேரில் பார்க்க 'சாவி'க்குக் கொடுத்து வைத்திருந்தது.

தாம் அநுபவித்ததைத் தமிழர்களுக்கும் பகிர்ந்தளிக்க வேண்டும் என்று இக் கட்டுரைகளை அவர் எழுதினார். 'சாவி'க்கே உரிய இலேசான நகைச்சுவையுடன் கூடிய எளிய நடையில் எழுதினார்.

வீட்டுக்குள்ளேயிருந்து ஒரு பலகணி வழியாகப் பார்த்தால், அந்தப் பலகணியின் அளவுதான் வெளியே தெரியும் என்பது கிடையாது; சின்னப் பலகணியின் வழியே வெகுதூரம் பார்க்கலாம்.

அதுபோலவே 'சாவி' இரண்டு தினங்களே காந்தியுடன் இருந்தபோதிலும் பலகணி வழியாகப் பார்ப்பதுபோலப் பார்த்து மகாத்மாவின் நவகாளி யாத்திரை முழுவதையுமே கண்ணோட்டமிட்டு எழுதியிருக்கிறார்; வெகு ரசமாகவும் எழுதியிருக்கிறார்.

இந்த நூலில் உள்ள கட்டுரைகள் வெறும் நகைச்சுவைக் கட்டுரைகள் அல்ல; வெறும் பிரயாணக் கட்டுரைகளும் அல்ல; சரித்திரத்தில் இடம் பெற வேண்டிய முக்கிய நிகழ்ச்சியைப் பற்றிய தார்மீகக் கட்டுரைகள்; காந்திஜியையும் அவருடைய ஜீவிய தர்மத்தையும் எல்லோரும் அறியத் தெளிவாக்கித் தரும் கட்டுரைகள்; இலக்கியம் என்று சொல்வதற்குரிய ரஸ்மான கட்டுரைகள்.

தமிழுக்கும், தமிழ் நாட்டுக்கும், தமிழ் நாட்டிலுள்ள காந்தி பக்தர்களுக்கும் 'சாவி’ சிறந்த பேருதவி புரிந்திருக்கிறார்.

இந்த நூலை வாங்கிப் படிக்கும் நண்பர்கள் 'சாவி'க்குப் பிரதி உபகாரம் எதுவும் செய்துவிட முடியாது. தமிழ் நாட்டினருக்கு இத்தகைய பேருதவியை 'சாவி'யும் இனி ஒரு முறை செய்துவிட முடியாது.

சென்னை

ரா.கிருஷ்ணமூர்த்தி

20-2-1948

ஆசிரியர் 'கல்கி'