நாடக மேடை நினைவுகள்/பத்தாம் அத்தியாயம்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

பத்தாம் அத்தியாயம்

னி மனோஹரனுக்குப் பின் நான் எழுதிய, எனது ஏழாவது நாடகமாகிய ‘சாரங்கதர’னைப் பற்றி எழுதுகிறேன். சாரங்கதரன் கதையை நான் நாடக ரூபமாக எழுதியதற்குக் காரணம், எங்கள் சபையில் அக்காலம் எங்களுக்கெல்லாம் நான் முன்பு அறித்தபடி வேஷம் போட்டுக்கொண்டிருந்த ‘அப்பு’ என்பவனே! மனோஹரன் நாடகம் முடிந்த பிறகு, ஒரு வாரத்திற்கெல்லாம், ஒரு நாள் நான் இப்பொழுது வசிக்கும் வீட்டின் மேல்மாடியின் உடகார்ந்து கொண்டிருந்த பொழுது, மெல்லப் படியேறி அப்பு என்னிடம் வந்தான். “என்ன அப்பு? என்ன சமாச்சாரம்?” என்று நான் கேட்டேன். “ஒன்றுமில்லை - இனிமேல் நீங்கள் என்ன நாடகம் எழுதப் போகிறீர்கள் என்று கேட்க வந்தேன்?” என்று சொன்னான்.

‘இதென்ன ஆச்சரியமாகவிருக்கிறது? இவன் நம்மை இந்தக் கேள்வி கேட்பானேன்?’ என்று யோசித்தவனாய், “என்ன அப்பு, என்ன சமாச்சாரம்? இதை ஏன் நீ கேட்கிறாய்? என்ன உன் மனத்திலிருக்கிறது சொல்!” என்று கேட்டேன். அதன்மீது அவன், நான் சாரங்கதர நாடகத்தை எழுத வேண்டுமென்றும், அதில் நான் சாரங்கதரனாக நடிக்க வேண்டு மென்றும் தான் விரும்புவதாக மெல்லத் தெரிவித்தான். இச்சாரங்கதரன் கதையை முன்பு நான் எங்கேயோ படித்திருந்தேன். கதை என் மனத்துக்கு அருவருப்பைத் தந்தது. அதன் பேரில் அப்புவிடம் அக்கதை என் மனத்திற்குத் திருப்தியாகவில்லை யென்பதை அறிவிக்க, அவன், “வாஸ்தவம்தான். ஆனாலும், நீங்கள் அதையெல்லாம் மாற்றிச் சரியாக எழுதி விடுவீர்கள்” என்று தெரிவித்தான். அதன் பேரில், இவன் இவ்வளவு வற்புறுத்துகிறானேயென்று ‘எல்லாம் பாப்போம்’ என்று பதில் சொல்லி அனுப்பிவிட்டேன். சில தினங்களில் இவ்விஷயம் என் மனத்தை விட்டகன்றுவிட்டது என்றே சொல்ல வேண்டும். பிறகு ஒரு நாள் சுந்தராச்சாரி நாடகக் கம்பெனி, கொட்டகையில் நாடகமாடுவதற்குப் பதிலாக ஒரு பெரிய கூடாரம் வரவழைத்து அதில் பச்சையப்பன் கலாசாலைக்கெதிரிலுள்ள மைதானத்தில் நாடகமாடுகிறார்களெனக் கேள்விப்பட்டேன். கூடாரத்தில் நாடகமாடுவதென்றால் விந்தையாகவேயிருந்தது. அதைப் போய்ப் பார்க்க வேண்டுமென்று ஆவல் கொண்டவனாய், அவ்விடம் மறு ஆட்டம் என்னவென்று விசாரிக்க, “சாரங்கதர நாடகம்” என்று கேள்விப்பட்டேன். உடவே அப்பு அதைப்பற்றி எனக்குச் சொன்னது ஞாபகம் வந்தது. நானும் ஜெயராம் நாயகர் முதலிய நண்பர்களும் அதைப் பார்க்கப் போனோம். இந்த சுந்தராச்சாரி கம்பெனி யென்பது சுப்பராயாச்சாரி கம்பெனியினின்றும் உற்பவித்ததாம்.

ஹரிச்சந்திரன் நாடகமாடுவதில் பிரசித்திபெற்ற சுப்பராயாசாரியைப்பற்றி முன்பே ஒரு முறை எழுதியிருக்கிறேன். அந்த சுப்பராயாச்சாரி காலமான பிறகு அவரிடம் அரிச்சந்திர விலாசத்தில் சத்யகீர்த்தி வேஷம் போட்டுக்கொண்டிருந்த சுந்தராச்சாரி, தான் ஒரு நாடகக் கம்பெனி ஆரம்பித்தார். அன்றிரவு இந்த ‘சாரங்கதர’ நாடகத்தில், சுந்தராச்சாரி சாரங்கதரனாகவும், அப்பாவுப் பிள்ளை என்னும் சிறுவன் சித்ராங்கியாகவும் நடித்தார்கள். சங்கீதம் அதிகமாகவும், வசனம் கொஞ்சமாகவும் இருந்தது; அவர்கள் மீது குறை கூறிப் பிரயோஜனமில்லை. அது அக்காலத்திய நாடகக் கம்பெனிகளின் வழக்கமாயிருந்தது. இப்பொழுதும் அவ் வழக்கம் போகவில்லையென்று நான் கூற வேண்டியவனாயிருக்கிறேன். இவர்கள் இருவரும் நடித்தது சுமாராக இருந்த போதிலும், நான் பார்த்த ஆக்டர்களுக்குள் மிகவும் திருப்திகரமாக நடித்தது கோபாலாச்சாரி என்னும் ஒரு பிராம்மணப் பிள்ளை. நான் பள்ளிக்கூடத்தில் கீழ் வகுப்புகளில் வாசித்த பொழுது, இவனைத் தெரியும். இவனுடன் கிரிக்கெட் ஆடியிருந்தேன். இவன் படிப்பைவிட்டுப் பிறகு இக் கம்பெனியைச் சேர்ந்ததாகக் கேள்விப்பட்டேன். கோபாலாச்சாரி அன்று விதூஷகனாக வேடம் பூண்டு மிகவும் நன்றாய் நடித்தான். அக்காலத்தில் விதூஷகன் வேடம் தரிப்பவர்கள், ஒன்றும் பாடம் செய்ய வேண்டியது நிமித்தமில்லை; சமயோசிதப்படி, அவர்கள் புத்தி சாதுர்யத்துக்கேற்ற வண்ணம், ஹாஸ்யம் செய்ய வேண்டியதே. இந்தக் கோபாலாச்சாரி அன்று செய்த ஹாஸ்யங்களை எல்லாம், நான் பிறகு சாரங்கதர நாடகத்தை எழுதின பொழுது, ஒன்றும் விடாமல் எழுதியிருக்கிறேன் என்று எண்ணுகிறேன். என் ஞாபக சக்தி மிகவும் நன்றாயிருந்த காலம் அது. நாடகம் முடிந்து நாங்கள் வீட்டிற்குத் திரும்பியபொழுது, ஜெயராம் நாயகர், நான் இந்த சாரங்கதர நாடகத்தை எழுத வேண்டும் என்றும், தான் சித்ராங்கியாக நடிக்க வேண்டும் என்றும் இச்சைப்படுவதாகத் தெரிவித்தார். எனக்கும் இக்கதையை, சில ஆபாசங்களை ஒழித்து, ஒழுங்காய் எழுதினால் நன்றாயிருக்குமெனத் தோன்றியது. உடனே மறுநாள் இக்கதையை, சில, ஆபாசங்களை ஒழித்து, ஒழுங்காய் எழுதினால் நன்றாயிருக்குமெனத் தோன்றியது. உடனே மறுநாள் இக்கதையை நாடகமாக எழுத ஆரம்பித்தேன். இதை அதி சீக்கிரத்தில் எழுதி முடிக்கும்படியாக எங்கள் சபையில் ஒரு சந்தர்ப்பம் நேரிட்டது; அதைப்பற்றிப் பிறகு எழுதுகிறேன். இப்பொழுது, சாதாரணமாக நாடகக் கம்பெனிகள் இந் நாடகத்தை நடிக்கும் விதத்திற்கும், நான் இதை நாடகமாக எழுதிய விதத்திற்கும் உள்ள பேதத்தை என் நண்பர்களுக்கு அறிவிக்க வேண்டியது அவசியமெனத் தோன்றுகிறது. ஏனெனில் இந்நாடகத்தைப் பற்றி, என்து கற்றறிந்த நண்பர்களுட் சிலர் தவறான எண்ணம் கொண்டிருக்கின்றனர்.

அதைப் போக்கவேண்டி நான் இதைச் சற்று விவரமாக எழுத வேண்டியவனாயிருக்கிறேன். சாதாரணமாக நாடகக் கம்பெனிகள் இதை ஆடும்பொழுது, நரேந்திர பூபதிக்கு ரத்னாங்கி என்று ஒரு மனைவியிருப்பதாகவும், அவள் வயிற்றிற் பிறந்த பிள்ளையாகிய சாரங்கதரனுக்கு மணம் பேச வேண்டி, இதர தேசத்து ராஜகுமாரிகளின் படத்தை நரேந்திரன் வரவழைத்துப் பார்த்த பொழுது, சித்ராங்கியின் படத்தைக் கண்டு தானே மோஹித்து, அவளைத் தானே மணந்ததாவும், பிறகு சித்ராங்கி சாரங்கதரனைக் கண்டு, அவன் மீது இச்சைக் கொண்டு அவனைப் பலாத்காரம் செய்ய முயன்றதாகவும், அவன் சிற்றன்னையாயிற்றே என்று முறைக்க, அதன்பேரில் சித்ராங்கி, தன் கணவனிடம் சாரங்கதரன் தன் கற்பை அழித்ததாகப் பழி சுமத்தி அவனைக் கொல்லும்படி நரேந்திரன் உத்தரவு செய்யும்படியாகச் செய்ததாகவும், சாரங்கதரனுடைய கை கால்களை அரசன் ஆக்கினைப்படி கொலையாளிகள் வெட்டியதாகவும் நாடகத்தை நடத்துகின்றனர். புராணக்கதையும் இப்படியே. வடக்கேயுள்ள சாஜமஹேந்திரபுரத்தில் சில நூற்றாண்டுகளுக்கு முன் ராஜாவாக நரேந்திரன் ஆண்டதாகவும் அவனுக்குச் சாரங்கதரன் என்று ஒரு மகன் இருந்ததாகவும் இக்கதையின்படி அவ்விடம் உண்மையில் நடந்தேறியதாகவும் சரித்திரமுண்டு. ஆகவே இது உண்மையில் நடந்த விருத்தாந்தமேயொழிய கட்டுக் கதையல்லவென்று அனு மானிப்பதற்கு ஆதாரங்கள் உண்டு. “ஆந்திர நாடகப் பிதாமகன்” என்று பட்டப் பெயர் பெற்ற காலஞ்சென்ற பல்லாரி கிருஷ்ணமாச்சார்லு அவர்களும் தெலுங்கில் இந் நாடகத்தை இப்படியே எழுதியிருக்கின்றனர். இந்நாடகமானது 1891இல் அவர்கள் சபையாகிய சரச வினோத சபை சென்னைக்கு வந்த பொழுது அவர்கள் ஆடிய நாடகங்களில் ஒன்றாகும். இங்ஙனம் இருந்தும் மேற்சொன்ன கதையின் போக்கு எனக்குத் திருப்திகரமாயில்லாமல், அதை மாற்றி எழுத வேண்டுமென்று தீர்மானித்தேன். முக்கியமாக சித்ராங்கி, நரேந்திர பூபதியை மணந்த பிறகு, தன் சக்களத்தி மகனாகிய சாரங்கதரன் மீது இச்சை கொண்டது தவறு என்று என் புத்தியிற்பட்டது. முக்கியமாக நான் எழுதும்படியான நாடகங்களெல்லாம் நமது குண ஸ்திரீகள் சங்கையின்றிப் படிக்கக் கூடியவைகளாயிருக்க வேண்டும் என்றும், அவைகள் ஒவ்வொன்றும், சன்மார்க்கத்தை நம்மவருக்குக் காட்ட வேண்டியவைகளாயுமிருக்க வேண்டுமென்றும் தீர்மானித்த எனக்கு, சித்ராங்கியின்மீது இப் பழி வராவண்ணம் நாடகத்தை மாற்றவேண்டியது அவசியமாயிற்று. இனி நான் எழுதிய நாடகத்தில் இதை எவ்வாறு மாற்றினேன் என்பதைத் தெரிவிக்கிறேன். எனது நாடகக் கதையில் சித்ராங்கிக்கும் நரேந்திரனுக்கும் விவாகமாகவில்லை. சித்ராங்கி கன்னிப் பருவமடைந்த பிறகு, நரேந்திரன் சாரங்கதரனுக்குப் பெண் பேசும்படி தூதர்களையனுப்ப, அவர்கள் மூலமாகச் சித்ராங்கி சாரங்கதரனுடைய படமொன்றைப் பெற்று, சாரங்கதரன் மீது காதல் கொண்டவளாய் அவனையே மணக்கத் தீர்மானித்து, நரேந்திரன் பட்டணம் வந்து சேர்கிறாள். நரேந்திரன் அவள்மீது மோஹங் கொண்டு அவளைத் தானே மணக்கத் தீர்மானிக்கிறான். அதற்காக சாரங்கதரனை மெல்ல வேட்டைக்கு அனுப்பிவிட்டு, சித்ராங்கியிடம் அணுகித் தன்னை மணக்கும் படி வேண்டுகிறான். இதை யறிந்த சித்ராங்கி, கோபம் கொண்டாளாயினும், அரசனை நேராக எதிர்க்கச் சக்தியற்றவளாய், ஏதோ தான் நோன்பு நோற்று வருவதாயும், அந் நோன்பு முடியும் வரையில் தான் ஒரு புருஷன் முகத்தையும் பார்க்கலாகாதென்றும் சொல்லி, அவனைத் தடுத்து விடுகிறாள். இச்சந்தர்ப்பத்தில் சாரங்கதரனுடைய புறா அகஸ்மாத்தாய்த் தன் மாளிகைக்கு வர, அதைப் பிடித்து வைத்துக்கொண்டு, சாரங்கதரனை நேரில் பார்க்கவேண்டி, அவன் வந்தாலொழிய அதைக் கொடேன் என்று சொல்லி அனுப்புகிறாள்.

நடந்த சூதெல்லாம் அறியாத சாரங்கதரன், மனத்தில் ஒரு களங்கமில்லாதவனாதலால், நேராகச் சித்ராங்கியிடம் சென்று புறாவைக் கேட்கிறான். அப்பொழுது சித்ராங்கி நரேந்திரன் செய்த சூதை அவனுக்குத் தெரிவித்து, தான் கன்னிகை யென்பதையும் சொல்லித் தன் காதலை வெளியிட்டுத்தன்னை மணக்கும்படியாக வேண்டுகிறாள். தன் தந்தை மணக்கா விட்டாலும், மணக்கும்படி இச்சை கொண்டாராதலால், தனக்குச் சித்ராங்கி சிற்றன்னையாகி விட்டதாகத் தெரிவித்து, சாரங்கதரன் மறுக்கிறான். சித்ராங்கி எவ்வளவு வேண்டியும் சாரங்கதரன் இசையாது அவள் அறையினின்றும் தப்பிச் செல்ல, சித்ராங்கி, தன் காதல் கை கூடாததால் மிகவும் சினம் கொண்டவளாய், அவளது தோழியாகிய மதனிகையின் தூண்டுகோலினால், சாரங்கதரன் தன்னைப் பலாத்காரம் செய்ததாக நரேந்திரனிடம் முறையிடுகிறாள். அப்படி முறையிட்டதற்கும் முக்கியமான காரணம், அவளே பிறகு கூறுகிறபடி, எப்படியாவது நரேந்திரன் சித்ராங்கியைச் சாரங்கதரனுக்கு மணம் செய்விப்பான் என்று எண்ணியே. ஒரு பாபமுமறியாத சாரங்கதரன்மீது இவ்வாறு பழி சுமத்தியது தவறுதான்; இல்லையென்று சொல்வாரில்லை; இக் குற்றத்திற்காகச் சித்ராங்கி முடிவில் தன் உயிரைக் கொடுத்துப் பிராயச்சித்தம் செய்கிறாள்; ஆயினும், ஒரு கன்னிகை, தான் காதல் கொண்ட புருஷனை மணக்க வேறு வகையறியாது, இப்படிப் பழி சுமத்தியாவது அவனை மணக்கப் பார்த்தது பெரும் தவறா? அல்லது நரேந்திரனை மணந்த ஒரு பெண் தன் சக்களத்தியின் குமாரனைக் கண்டு தன் கற்பின் கடமையையும் கருதாது, அவனைப் பலாத்காரம் செய்து, இணங்காமையால், அவன் மீது தன் கற்பைப் பழித்ததாகப் பழி சுமத்தியது பெருந்தவறா? என்று இதைப் படிக்கும் எனது நண்பர்களே தீர்மானிக்கலாம். அன்றியும் கதையின் உருக்கத்தை அதிகப்படுத்தும் பொருட்டு, சாரங்கதரனை, ஸ்திரீகளின் விஷயம் ஒன்றும் அறியாது விளையாட்டின் மீதே கவனமுள்ள பாலகனாக வர்ணித்துள்ளேன்; இந்த அறியாமையே ஒரு குற்றமாகும்; இக்குற்றத்திற்காக இவன் உயிரிழக்க வேண்டி வருகிறது. அச்சிடப்பட்டிருக்கும் இந்நாடகத்தைப் படிப்பவர்களெல்லாம் சித்ராங்கி ஓர் உயர்குணமுடைய ஸ்திரீயென்றும், அவள் புராணக்கதையிலுள்ளபடி அத்தனைக் கெட்ட நடத்தையுடையவள் அல்லவென்றும் ஒப்புக்கொள்வார்களென்றே நம்புகிறேன். இந்நாடகத்தை எங்கள் சபை நடிக்கும்பொழுது கண்டவர்களும் இந்நாடகத்தை அச்சில் படித்தவர்களும், இதில் கற்புடைய நமது தேசத்து ஸ்திரீகள் பார்க்கக்கூடாத அல்லது படிக்கக்கூடாத விஷயம் ஒன்றுமில்லை யென்று ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். இந்நாடகம் எங்கள் சபையோரால் பிறகு நடிக்கப்பட்டபொழுது ஒரு முறை நடந்த விருத்தாந்தத்தை இங்கெடுத்து எழுத அனுமதி கேட்டுக்கொள்கிறேன். இது முதன் முதல் பெங்களூரில் எங்கள் சபையோரால் நடிக்கப் பட்டது (அதற்குக் காரணம் முதலியவை யெல்லாம் பிறகு எழுதுகிறேன்); அப்புறம் பல தடவைகளில் சென்னையில் நடிக்கப்பட்டது. அவ்வாறு சென்னையில் ஒருமுறை நடிக்கப்பட்டபொழுது, காலஞ்சென்ற ஐகோர்ட்டு ஜட்ஜாயிருந்த கனம் சர் சதாசிவ ஐயர் அவர்கள், இதைப் பார்க்கத் தன் பத்தினியுடன் விக்டோரியா பப்ளிக்ஹாலிற்கு வந்திருந்தார். அம்முறை என் உயிர் நண்பனாகிய சி. ரங்கவடிவேலு சித்ராங்கியாகவும் நான் சாரங்கதரனாகவும் நடித்தோம். பத்மநாதராவும் சாரங்கதரனும் சம்பாஷிக்கும் காட்சிகள் வந்தபொழுது, சதாசிவ ஐயர் அவர்கள், தன் பக்கலில் ஹாலில் உட்கார்ந்துகொண்டிருந்த என் பால்ய நண்பர்வி.வி. ஸ்ரீனிவாச ஐயங்காரிடம் “இதுதான் உங்கள் சபை நாடகங்களில் அதிக சிற்றின்பம் அடங்கிய நாடகம் போலும்?” என்று ஆங்கிலத்தில் கேட்டார். அதற்கு ஸ்ரீனிவாச ஐயங்கார் “கொஞ்சம் பொறுங்கள். பிறகு தெரியும்” என்று பதில் உரைத்தனர். அக்காட்சிக்குப் பிறகு, சித்ராங்கி துயரப்படும் காட்சியும், ரத்னாங்கி தன் மகனைப் பிரியும் காட்சியும், சாரங்கதரன் தன் நண்பனைவிட்டுப் பிரியும் காட்சியும் ஒன்றன்பின் ஒன்றாக வர, அவற்றை யெல்லாம் பார்த்து, கண்களில் நீர் தாரை தாரையாக வடிய, நாடகத்தை மெச்சினர். மேற்சொன்ன விஷயங்களெல்லாம் எனது நண்பராகிய ஸ்ரீனிவாச ஐயங்கார், மறுநாள் என்னிடம் நேராகக் கூறினார். பிறகு சதாசிவ ஐயரும் எனக்கு நேராகப் பரிச்சயமான பிறகு, இந்நாடகத்தைப் பற்றியும், நடிக்கும் முறையைப் பற்றியும் என்னை சிலாகித்துக் கூறியிருக்கின்றனர். அன்றியும் காலஞ்சென்ற, ஐகோர்ட் ஜட்ஜாயிருந்து, பிறகு எக்சிக்யுடிவ் கவுன்சில் மெம்பராயிருந்த, எங்கள் சபையிலும் பிரசிடென்ட் (President) ஆகயிருந்த, வி.கிருஷ்ணசாமி ஐயர் அவர்கள், இந்நாடகத்தை மெச்சியிருக்கின்றனர். குற்றமற்ற மனமுடைய, நற்குணத்தையுடைய இவர்கள் ஆமோதிப்பைவிட எவரும் வேறு நற்சாட்சிப்பத்திரம் விரும்பார்கள் என்பது திண்ணம். இந்நாடகம் எழுதியதில் மாத்திரமன்று, நான் எழுதும் எல்லா நாடகங்களிலும், நமது சொந்தத் தாய்மார்களும், சகோதரிகளும், குழந்தைகளும் படிக்கக்கூடாத விஷயம் ஒன்றையும் எழுதலாகாது என்று நான் கங்கணம் பூண்டு இந்த நாற்பது வருடங்களாக எழுதி வருகிறேன். என் நாடகங்களைப் படித்த ஒரு பெண்மணியும் அவைகளில் தவறான ஒரு வார்த்தையும் இருப்பதாக இதுவரையில் குறை கூறினதில்லை. இதுவே எனக்கு ஒரு பெருங்கீர்த்தியாகக் கொண்டு சந்தோஷப்படுகிறேன். ஆயினும் இந்நாடகத்தில் ஒரு குற்றமிருப்பதாக, ஒரு பத்திராதிபர் மாத்திரம் எழுதியுள்ளார். அதையும் மறைக்காது இங்கு எழுதுகிறேன்.

பல வருடங்களுக்கு முன் ஒரு முறை இந்நாடகம் எங்கள் சபையோரால் நடிக்கப்பட்ட பொழுது, அதைப் பார்த்த ‘சசிரேகா’ என்னும் ஆந்திரப் பத்திரிகையின் பத்திராதிபராயிருந்த சேஷாச்சாரியார் என்பவர், சித்ராங்கி சாரங்கதரனை முத்தமிட்டது தவறு; அதற்குச் சாரங்கதரன் இணங்கியதும் தவறு என்று தன் பத்திரிகையில் எழுதினார். என் நாடகங்களைப் பற்றி அச்சில் வரும் அபிப்பிராயங்களையெல்லாம் ஒரு புஸ்தகத்தில் ஒட்டி வைப்பது வழக்கம்; அதன்படியே இதையும் ஒட்டி வைத்திருக்கிறேன். ஆகவே என்ன சந்தர்ப்பத்தில், என்ன காரணம் பற்றி, நான் எழுதிய நாடகத்தில் சித்ராங்கி சாரங்கதரனை முத்தமிடும்படி நேரிட்டது, அதற்குச்சாரங்கதரன் இணங்கும்படி நேரிட்டது என்பதை அறியார்போலும் நான் அச்சிடப்பட்டிருக்கும் இந்நாடகத்தை, இதைப் படிப்பவர்கள் படித்துப் பார்ப்பார்களாயின், இதில் அவர் கூறியபடி தவறொன்றுமில்லை என்று நன்கு அறிவார்கள்.

இந்தச் சாரங்கதர நாடகமானது எங்கள் சபையோரால் பன்முறை ஆடப்பட்டிருக்கிறது. காலஞ்சென்ற என் ஆருயிர் நண்பர் சி. ரங்கவடிவேலு மடிந்தபின் நாங்கள் இதை ஆடுவதை விட்டிருக்கின்றோம். என்னிடமிருக்கும் குறிப்பின் படி இந்நாடகமானது என் அனுமதியின் பேரில் இதுவரையில் 198 முறை ஆடப்பட்டிருக்கிறது. இந்நாடகத்தை எங்கள் சபையோர் ஆடும் பொழுதெல்லாம் அதிகப் பணம் வசூலாயிருக்கிறது. எங்கள் சபைக்குப் பெருமையைக் கொண்டுவந்த நாடகங்களுள் இதுவும் ஒன்றே என்று நான் கூறவேண்டும்.

இந்நாடகத்தில் இதன் பூர்வகதையில் இல்லாது நான் புதிதாய் எழுதிய நாடகப் பாத்திரம் மதுரகவி என்பது ஒன்றே. இப்பாத்திரத்தை நான் ஹாஸ்ய பாகத்திற்காக இந்நாடகத்தில் சேர்த்தேன். இது முக்கியமாக என் பழைய நண்பராகிய, நான் முன்பே இதைப் படிப்பவர்களுக்குத் தெரிவித்திருக்கிற, ச. ராஜகணபதி முதலியாருக்காக எழுதப்பட்டது. இந்த மதுரகவிக் கவிராயர் பேசும்பொழுதெல்லாம் வார்த்தைக்கு வார்த்தை தன் தகப்பனாரை “எங்கள் தகப்பனார் கூறியிருக்கிறார்” என்று இழுத்துக் கொண்டிருப்பார். இது அரங்கத்தின்மீது சொல்லப்படும் பொழுதெல்லாம் அதிக நகைப்பை விளைத்திருக்கிறது. இதை நான் இவ்வாறு எழுதியதற்கு வேடிக்கையான காரணமுண்டு. என் அருமைத் தந்தையார் இறந்தபின், கொஞ்ச காலம்வரையில், நான் அடிக்கடி சந்தர்ப்பம் நேரிடும் பொழுதெல்லாம், என் தந்தையார் புகட்டிய புத்திமதிகளை யெல்லாம் என் நண்பர்களுக்குச் சொல்வது வழக்கமாயிருந்தது. நான் அடிக்கடி இவ்வாறு கூறிக்கொண்டிருக்கும் பொழுது, நானே ஒரு முறை இதைப்பற்றி யோசித்துப் பார்த்தேன். என் தந்தை எனக்கு அருமையாயிருக்கலாம்; நான் அடிக்கடி அவரைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தால் கேட்பவர்களுக்கு, “என்னடா இது! இவன் எப்பொழுதும் தன் தந்தையைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறான்!” என்று ஏளனமாகத் தோன்றாதா? என்று என் புத்தியிற்பட்டது. இது மற்றவர்களுக்கு நகைப்பை விளைக்குமென்று கண்டு, இதை அடிக்கடி கூறிக்கொண்டி ருக்கும் “மதுரகவி” என்னும் பாத்திரத்தை சிருஷ்டித்தேன். இப்பொழுதும் இப்பாத்திரத்தை யாராவது மேடையின் மீது ஆடினால், எங்கள் சபையில் அவரைப் பிறகு, “உங்கள் தகப்பனார் இதைப்பற்றி என்ன சொல்லுகிறார்?” என்று ஏளனம் செய்வது வழக்கம்.

நாங்கள் இந்நாடகத்தை முதல் முதல் ஆடியபொழுது நான் மேலே குறித்தபடி, ராஜகணபதி முதலியார் மதுரகவியாக நடித்தார்; வெங்கடகிருஷ்ண பிள்ளை, நரேந்திரனாக வந்தார்; சித்ராங்கி பாத்திரத்தை ஜெயராம் நாயகர் பூண்டனர். அ. கிருஷ்ணசாமி ஐயர், சாரங்கதரன் தாயாராகிய ரத்னாங்கி வேடம் பூண்டனர்; தற்காலம் திருநெல்வேலியில் அட்வகேட்டாக இருக்கும் சாது கணபதி பந்துலு பி.ஏ.பி.எல். மதனிகையாகத் தோன்றினார்; எம். துரைசாமி ஐயங்கார் வழக்கப்படி, விதூஷகனாக ஆக்டு செய்தார்; சுமந்திரன் எனும் சாரங்கதரன் தோழனது பாத்திரம், என் பழைய நண்பராகிய எம்.வை. ரங்கசாமி ஐயங்காருக்காக எழுதப்பட்டபடியால், அதை அவருக்குக் கொடுத்தேன். எனது நண்பர் சி. ரங்கவடிவேலு அச்சமயம் பி. ஏ. பரீட்சைக்காகப் படித்துக்கொண்டிருந்த படியால், அவருக்கு ஒரு பாகமும் கொடுக்கவில்லை.

இந்நாடகமானது சென்னையில் ஆடப்படாமுன் முதல் முதல் பெங்களூரில் எங்கள் சபையாரால் ஆடப்பட்டதற்குக் காரணம், சற்று சவிஸ்தாரமாகச் சொல்ல வேண்டியிருக்கிறது. ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் நானும் எனது நண்பர்களும் ஒருங்குகூடிப் பேசிக் கொண்டிருந்தபொழுது, பல்லாரியிலிருந்து சென்னைப் பட்டணத்திற்கு சரச வினோத சபையார் அடிக்கடி வருகிறார்களே, அம்மாதிரி நாமும் வெளியூருக்கு ஏன் போகக்கூடாது என்கிற பேச்சு வந்தது. அப்பொழுது அருகில் நின்று கொண்டிருந்த “அப்பு” என்பவன், “ஆமாங்கள், பெங்களூருக்குப் போனால் நன்றாயிருக்கும்” என்று சொன்னான். அதற்குக் காரணம் அவன் தன் பழைய எஜமானனான காலஞ்சென்ற சுப்பராயாச்சாரியுடன் பலதரம் அங்கு போய் வந்ததே. அதன்மீது நாங்கள் எல்லோரும் பெங்களூருக்கு, டிசம்பர் விடுமுறை, அதாவது கிறிஸ்ட்மஸ் லீவில் (Xmas Leave) போகலாம் என்று தீர்மானித்தோம். பிறகு, சபையார் வெளியூருக்குப் போய் நாடகமாடுவதென்பது நூதனமாகையால், சபையின் பொதுக்கூட்டத்தில் இதற்காக உத்தரவு பெற வேண்டுமென்று ஒரு பொதுக்கூட்டம் கூட்டப்பட்டது. சபையின் பொதுக்கூட்டத்தார் இதற்கு ஓர் ஆட்சேபணையும் செய்ய மாட்டார்கள் என்று நான் எண்ணியிருந்தேன். இக்கூட்டம் கூடுவதற்கு நியமித்த தேதிக்கு நான்கு நாட்களுக்கு முன்பாக ஒரு நாள் இரவு என் நண்பர்களாகிய வெங்கிடகிருஷ்ண நாயுடும், வெங்கிட கிருஷ்ணப் பிள்ளையும் என்னிடம் வந்து ரகசியமாக, சபை பெங்களூருக்குப் போவதற்குப் பொதுக் கூட்டத்தில் ஆட்சேபணை வரும்போலிருக்கிறது என்று தெரிவித்தார்கள். அப்படி ஒன்றுமே ஆட்சேபணையிராது என்று எண்ணியிருந்த நான் இதைக் கேட்டவுடன் ஆச்சரியம் கொண்டவனாய், “யார் ஆட்சேபிக்கப் போகிறது?” என்று வினவினேன். அதன் பேரில் நூதனமாய் நமது சபையில் தெலுங்கு நாடகப் பிரிவு ஒன்று ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறதே, அதைச் சார்ந்தவர்கள்தான் இதற்குக் காரணமாயிருக்கிறார்கள் என்று என்னிடம் தெரிவித்தனர். அதன் மீது எனக்கு அதிகக் கோபம் பிறந்தது. தமிழில் மாத்திரம் அங்கு நாடகங்கள் போட உத்தேசித்திருக்கிறபடியால் இவர்கள் தாங்கள் போவதற்கில்லையே யென்று ஆட்சேபிக்கிறார்கள் என்று எண்ணினவனாய், எப்படியாவது அவர்கள் எண்ணத்தைத் தடுத்துப் பெங்களூருக்குப் போய்த்தான் தீரவேண்டும் என்று தீர்மானித்தேன். நூதனமாய் சபையில் ஸ்தாபிக்கப்பட்ட தெலுங்குப் பிரிவின் ஆக்டர்கள், வெளியூருக்கே சபையார் போகக்கூடாது என்கிற கோட்பாட்டின் மீது ஆட்சேபித்தார்களோ, அல்லது தாங்கள் அங்கு போவதற்கில்லையே என்று ஆட்சேபித்தார்களோ அது ஈசனுக்குத்தான் ஸ்திரமாய்த் தெரியும்.

ஆயினும் இதற்கப்புறம் இரண்டு வருஷங்கள் கழித்து மறுபடியும் பெங்களூருக்குச் சபை போகவேண்டுமென்றும், அச்சமயம் தமிழிலும் தெலுங்கிலும் அங்கு நாடகங்கள் நடத்தவேண்டுமென்றும் தீர்மானித்தபொழுது, இவர்களெல்லாம் ஓர் ஆட்சேபணையும் செய்யாது, குதூஹலத்துடன் உடன்பட்டபடியால், என் புத்தியிற்பட்ட காரணம் அவ்வளவாகக் தவறானதல்ல என்று நினைக்க வேண்டியவனாயிருக்கிறேன்.

அக்காலம் எனக்கு இருபத்திரண்டாம் வயது. அப்பொழுது நான் மிகவும் பிடிவாதக்காரனாயிருந்தேன் என்று நான் ஒப்புக்கொள்ள வேண்டியதே. “கொடியும் பேதையும் கொண்டதுவிடா” என்று ஆன்றோர் கூறியுள்ளபடி ஏதேனும் ஒன்றைத் தீர்மானித்தால், தப்போ ஒப்போ, அதைச் சாதித்துத்தான் வேறு வேலை பார்க்க வேண்டும் என்னும் பிடிவாத குணமுடையவனாயிருந்தேன். இப்பொழுதும் அப்பிடிவாதக் குணம் போகவில்லை யென்று எனது நண்பருட் சிலர் கூறுகின்றனர். ஆயினும் அவ்வயதில் இருந்த பிடிவாதத்திற்கும், இப்பொழுதிருப்பதற்கும் ஒரு முக்கியமான வித்தியாசமுண்டென நினைக்கிறேன். அக்காலத்தில் நான் ஏதாவது ஒன்றைத் தீர்மானித்தால், பிறகு அது தவறு என்று எனக்கே தோன்றிய போதிலும், தவறென்பதை ஒப்புக் கொண்டு அதை விட்டுவிட வேண்டும் என்னும் புத்தியில்லாதவனாயிருந்தேன்; இப்பொழுது எவ்வளவுதான் உறுதியாக ஒன்றைத் தீர்மானித்தபோதிலும், அது தவறு என்று என் புத்தியிற் பிறகு பட்டால், அதை விட்டுவிடவேண்டும் என்னும் புத்தி ஒரு சிறிது உடையவனாயிருக்கிறேன், என்று எண்ணுகிறேன்.

இனி அப் பொதுக்கூட்டத்தில் நடந்த வியவஹாரத்தை எழுதுகிறேன்.

பொதுக் கூட்டத்திற்குமுன் எனக்கிருந்த மூன்று நான்கு நாட்களுக்குள் எப்படியாவது பெங்களூருக்குப் போக வேண்டும் என்று தீர்மானித்ததற்காக, எவ்வளவு முயற்சி செய்ய வேண்டுமோ அவ்வளவு முயற்சியும் எடுத்துக் கொண்டேன். தற்காலம் முனிசிபாலிடி எலக்ஷனுக்காகவும், சட்ட நிரூபண சபை எலக்ஷனுக்காகவும் ஓட் சம்பாதிப்பதற்காக எப்படி வீடு வீடாய்ப் போய்ப் பிரயத்தனப்படுகிறார்களோ, அவ்வாறு சபையின் அங்கத்தினர் வீடுகளுக்கெல்லாம் போய் ஒவ்வொருவருடைய அபிப்பிராயத்தையும் அறிந்து, அவர்களை யெல்லாம் என்பட்சம் திரும்பும்படியாக முயன்றேன். இம்முயற்சியில் என் நண்பர்களாகிய வெங்கடகிருஷ்ண நாயுடும், வெங்கடகிருஷ்ண பிள்ளையும் எனக்கு மிகவும் உதவியாயிருந்தனர். அப்பொழுது எங்கள் சபையில் 63 அங்கத்தினர் இருந்தனர். இது எனக்கு எப்படி ஞாபமிருக்கிற தென்றால், அவ்வருஷம் மயிலாப்பூர் அறுபத்து மூவர் உற்சவத்தின் பொழுது நான் சபையின் அங்கத்தினர்க்கெல்லாம், மயிலாப்பூரில் ஒரு சிற்றுண்டிப் பார்ட்டி கொடுத்தேன். அச்சமயம், இன்று அறுபத்து மூவர் உற்சவம், நமது சபையிலும் இன்று அறுபத்து மூவர் இருக்கிறோம் என்று வேடிக்கையாகச் சொன்னார்கள். பெங்களூருக்கு நாங்கள் போகவேண்டும் என்று முயன்ற படியே, போகக்கூடாது என்று எதிர்க்கட்சிக்காரர்களும் முயற்சி செய்தார்கள். அக்கட்சியில் பெரும்பாலும் நூதனமாக ஸ்தாபிக்கப்பட்ட தெலுங்குப்பிரிவின் அங்கத்தினராயிருந்த போதிலும், அவர்கள் எங்கள் சபையின் காரியதரிசியாகிய ஊ. முத்துக்குமாரசாமி செட்டியாரையும், கண்டக்டராகிய வி. திருமலைப்பிள்ளை அவர்களையும் கட்டிக்கொண்டார்கள். இதை மெல்ல அறிந்த நான் என் பிரயத்தனத்தைப் பதின்மடங்கு அதிகமாகச் செய்ய ஆரம்பித்தேன். இதில் எனக்கு நேரிட்ட முக்கியமான கஷ்டம் என்னவென்றால், இதைத் தீர்மானிக்க எங்கள் சபை பொதுக்கூட்டம் நாளைக்குக் கூடுவதாயிருக்க, இன்று, அதுவரையில் எங்கள் பட்சமிருந்து, பெங்களூருக்குப் போக வேண்டுமென்று மிகவும் உற்சாகத்துடனிருந்த ஜெயராம் நாயகர், அவருடைய மைத்துனராகிய வி. திருமலைப்பிள்ளைக்கிணங்கி எதிர்க்கட்சியில் சேரப்போகிறதாகக் கேள்விப்பட்டதே! அதன் மீது அன்று சாயங்காலம் அவர் வீட்டிற்குப் போய் என் நியாயங்களையெல்லாம் எடுத்துக் கூறி, எங்கள்பட்சம் ஓட் கொடுக்காவிட்டாலும் எதிர் பட்சம் ஓட் கொடாதே என்று வற்புறுத்தி, அவர் இரண்டு பக்கத்திலும் சேராது, (நியூட்ரல்) பொதுவாக இருக்கும்படி வாக்கு வாங்கிக் கொண்டேன். எதிர்க்கட்சிக்காரர்களும் தங்களாலியன்ற அளவு சூழ்ச்சி செய்து பார்த்தார்கள் என்றே நான் கூறவேண்டும். அதற்கு ஓர் உதாரணமாக இது நடந்து 35 வருஷம் பொறுத்து போன மாதம் எங்கள் சபையின் பழைய அங்கத்தினராகிய நம் பெருமாள் செட்டியார் என்பவர் எனக்குக் கூறியதை இங்கு வரைகிறேன். ஏதோ சபையைப்பற்றிப் பேச்சு வந்த பொழுது அந்தச்சமயம் தெலுங்கு ஆக்டர்களெல்லாம் தன்னிடம் வந்து, “நீ தெலுங்கு மனிதனாயிருக்கிறாய். ஆகவே நீ தமிழ்க் கட்சியில் சேரலாகாது. எங்கள் பக்கம்தான் உன்னுடைய ஓட் கொடுக்க வேண்டும்” என்று வற்புறுத்தினதாயும், அதற்கு அவர் இசையாது தனக்கு நியாயம் என்று தோன்றிய என்பட்சமேதான் ஓட் கொடுத்ததாகவும் தெரிவித்தார். இவ்வாறு மும்முரமாக இருதிறத்தாரும் தங்கள் பட்சம் ஓட் கொடுக்கும்படியாக எல்லாவிதப் பிரயத்தனங்களும் முடிந்த பிறகு, ஒரு ஞாயிற்றுக்கிழமை ஜெயராம் நாயகருடைய வீட்டில் எங்கள் சபையின் பொதுக்கூட்டம் கூடப்பட்டது. எனக்கு ஞாபகம் இருக்கிற வரையில், திருமலைப்பிள்ளையின் சிநேகிதரும் அட்டர்னி தொழிலில் பாகஸ்தருமாகிய சி. ரங்கநாதம் நாயுடு என்பவர் அக்கிராசனம் வகித்தார். ஏதோ ஒரு காரணத்தினால் என்பட்சம் சேர்ந்த எனது நண்பர்கள், நான் அந்தக் கூட்டத்தில் வாய் திறந்து பேசக்கூடாது என்று கட்டுப்பாடு செய்து விட்டனர்! அவ்வாறு வாக்குக் கொடுத்த நான் வாயைத் திறக்க அசக்தனானேன்! அவர்கள் அவ்வாறு என் வாயைக் கட்டிவிட்டது, இவன் அடங்காப்பிடாரி, வாயைத் திறக்க விட்டால் ஏதாவது அதனப் பிரசங்கித்தனமாய்ப் பேசி விடுவான், அதனால் குழப்பமுண்டாகும். ஆகவே இவனைப் பேசவிடலாகாது என்று தீர்மானித்து இவ்வாறு செய்திருக்க வேண்டுமென்று நான் ஊகிக்கிறேன். அப்பொழுது அவ்வாறு கட்டுப்பட்டது எனக்கு மிகவும் வருத்தத்தைக் கொடுத்த போதிலும், அப்பொழுது எனக்கிருந்த குணத்தையும், மற்ற சந்தர்ப்பங்களையும் நோக்குமிடத்து, அவர்கள் செய்தது சரியென்றே இப்பொழுது எனக்குத் தோன்றுகிறது. நான் பேசாவிட்டாலும் என் பக்கம் சிலரைப் பேசும்படிச் செய்தேன். எதிர்க்கட்சியில் முக்கியமாக வி. திருமலைப்பிள்ளை அவர்கள் பெங்களூருக்குச் சபை போகக்கூடாது என்று பேசினார். இன்னும் சிலரும் ஆட்சேபித்தனர். அப்படி ஆட்சேபித்தவர்களெல்லாம், ஏதோ தமிழ்ப் பிரிவின் மீதுள்ள பொறாமையினால் அவ்வாறு செய்தனர், என்று நான் எண்ணுவதற் கிடமில்லை. எங்கள் தரப்பில் பெங்களூருக்குப் போவதில் தவறில்லை; அதனால் சபைக்கு நலமுண்டாகும் என்று நாங்கள் எண்ணியபடியே, அவர்கள் தரப்பிலும் சிலர், வாஸ்தவத்தில் சபையானது வெளியூர்களுக்குப் போய் நாடகங்களாடுவது உசிதமன்று, சபைக்கு அழகன்று, அதனால் சபையின் பெயர் கெடும் என்ற எண்ணியிருக்கலாம். அவ்வாறே சிலராவது எண்ணியிருந்தனர் என்று நான் உறுதியாய்க் கூறவேண்டியவனாயிருக்கிறேன். இருதிறத்தாரும் பேசி முடிந்தவுடன், ஓட் எடுக்கப்பட்டது. மொத்தம் வந்திருந்த அங்கத்தினர் 55; ஓட் எடுத்தபொழுது இருபத்தைந்து பெயர் போகலாம் என்றும், இருபத்து நான்கு பெயர் போகக்கூடாதென்றும் ஓட் கொடுத்தார்கள். மிகுந்தவர்கள் பொதுவாக (Neutral) இருந்தார்கள். எதிர்க்கட்சிக்காரர் உடனே மறுபடியும் எண்ணிப்பார்க்க வேண்டுமென்று போல் (Poll) கேட்டார்கள். மறுபடியும் எண்ணிப்பார்த்த பொழுது இருபத்தாறு பெயர் போகலாமென்றும், இருபத்தைந்து பெயர் போகக் கூடாதென்றும் தெரிவித்தனர். அதன் பேரில் இன்னொரு முறை கணக்கிட்டுப் பார்க்க வேண்டுமென்று கேட்டார்கள். இம்முறை ஓட் எடுத்த பொழுது இருபத்தேழு பெயர் போவதற்காகவும், இருபத்தாறு பெயர் போகக்கூடாதென்றும் ஓட் கொடுத்தார்கள்! இவ்வாறு மூன்று முறை ஓட் எடுத்த பொழுதெல்லாம், நான் ஜெயராம் நாயகர் முகத்தை விட்டு என் கண்களை எடுக்கவில்லை; அவரைத் தங்கள் பக்கம் சேரும்படியாக அநேகர் வற்புறுத்திப் பார்த்தார்கள். ஜெயராம் நாயகர், அவர்கள் வற்புறுத்துதலுக் கெல்லாம் இணங்காமல் தன் வாக்கின்படி பொதுவாகவே இருந்து விட்டார். அவர் அன்று மாறியிருப்பாராயின், நாங்கள் பெங்களூருக்குப் போவது நின்று போயிருக்கும். ஏனெனில், இருபக்கமும் ஓட்டுகள் சமமாக இருந்தால், அக்கிராசனம் வகித்த சி. ரங்கநாதம் நாயுடு, போகக்கூடாது என்று தன் தீர்மானிக்கும் ஓட்டை (Casting Vote) கொடுத்திருப்பார் என்பதற்கு ஐயமில்லை . கடைசியாகத் தீர்மானமானவுடன் நடந்த வரலாற்றை எழுதக் கடமைப்பட்டிருக்கிறேன். ஏனெனில், அதனால் நான் ஒரு பெரும் சபையார் போகக்கூடாது என்று மிகவும் ஆட்சேபணை செய்துவந்த வி. திருமலைப்பிள்ளை அவர்கள், உடனே என்னிடம் வந்து, என் முதுகைத் தட்டிக்கொடுத்து, “சம்பந்தம்! போவதென்று இப்பொழுது தீர்மானமாகி விட்டபடியால், நானும் உங்களோடு பெங்களூருக்குப் போகிறேன். எல்லாம் சரியாக இருக்கின்றதா என்று பார்த்துக்கொள்; சபையின் பெயர் கெடாதபடி பார்த்துக்கொள்” என்று சொல்லிவிட்டுக் கூட்டத்தை விட்டுச் சென்றார். என் எண்ணத்தின்படி முடித்து நான் அன்று ஜெயித்தபோதிலும், திருமலைப்பிள்ளை அவர்கள் தன் நடவடிக்கையால் என்னை அன்று ஜெயித்தார் என்றே கூறவேண்டும். அன்று முதல் அவரை இந்தப் புத்திமதியை எனக்குப் புகட்டிய ஆசானாகக்கொண்டு நடந்து வருகிறேன். எங்கள் சபையின் கூட்டங்களிலாவது, அல்லது இதர கூட்டங்களிலாவது நான் மேற்கொண்ட கட்சி ஜெயம்பெறாது, எதிர்க்கட்சி ஜெயிக்கும் போதெல்லாம், திருமலைப்பிள்ளை அவர்கள் நடந்து கொண்டதையே என் பற்றுக்கோடாகக் கொண்டு நடக்க என்னாலியன்றவளவு முயன்று வருகிறேன். நம்முடைய பக்கம் ஜெயிக்காவிட்டால், எதிர்ப் பக்கம் ஜெயித்ததே என்று பொறாமை கொண்டு, அதற்கு அப்பக்கத்திற்கு எவ்வளவு இன்னல் விளைக்கக்கூடுமோ அவ்வளவு உண்டாக்குவதுதான் இவ்வுலகில் சகஜமாயிருக்கிறது. அதைத் தவிர்த்து, தாங்கள் எண்ணிய எண்ணமே சரியென்று தங்கள் புத்திக்குட்பட்ட போதிலும், எதிர்ப்புறம் ஜெயித்தபின் அவர்கள் பக்கமும் நியாயமாயிருக்கலாம். இனி உழைத்துப் பொது நலத்தைக் கோரவேண்டுமே என்னும் புத்திமான்கள் இவ்வுலகில் சிலரே; அவ்வாறு நடந்து வந்த சிலருள் காலஞ்சென்ற என் நேர் சகோதரனான ஆறுமுக முதலியார் ஒருவர் என்று நான் இங்குக் கூறவேண்டும். இதைக் கூறுவதில், ஏதோ சகோதர வாஞ்சையினால், இவன் கூறுகிறான் என்று எனது நண்பர்கள் எண்ணாதிருப்பார்களாக. காலஞ்சென்ற ஆறுமுக முதலியாரை நேரில் நன்றாய் அறிந்தவர்கள் நான் கூறியது உண்மையென ஒப்புக்கொள்வார்கள் என்று நம்புகிறேன். அநேக சங்கங்களிலும், வியவஹாரங்களிலும் மேற்சொன்ன விஷயத்தை ஆராய்ந்தறிந்து, எனது கற்றறிந்த சகோதர சகோதரிகள், அதன்படி நடந்து வருவார்களாயின் அவர்களுக்கும் நன்மை யுண்டாம், நமது நாட்டிற்கும் பெரும்பாலும் நன்மை யுண்டாம் என்று நான் உறுதியாய் நம்புகிறேன்; இதை அறிவது மாத்திரம் போதாது, அறிந்ததை அப்யசிக்கவும் வேண்டும்; நாம் ஓர் உண்மையை அறிந்ததன் பலன் அதை அப்யாசத்திற்குக் கொண்டு வருவதேயாம்.

மேற்சொன்னவாறு எங்கள் சபையோரால் பெங்களூருக்குப் போவதென்று தீர்மானிக்கப்பட்டவுடன், நாட்கள் அதிகமாயில்லாதபடியால், இரவு பகலாக எழுதி சாரங்கதர நாடகத்தை முடிக்க வேண்டியவனாயினேன். அதில் பாத்திரங்களை எடுத்துக்கொண்ட எனது நண்பர்கள் தங்கள் பாகங்களை எழுதிக்கொள்வதற்குத்தான் அவகாசமிருந்தது. ஒரு ஒத்திகையும் சென்னையில் நடத்துவதற்குக் காலமில்லாமற் போயிற்று.

இதுதான் எங்கள் சபை முதல் முதல் வெளியூருக்குப் போய் நாடகங்கள் ஆடின சந்தர்ப்பமாகையால், இதைப்பற்றிச் சற்று விவரமாக எழுத விரும்புகிறேன்.

ஒரு நாடகமாடுவது ஒரு கலியாணம் செய்து முடிப்பது போல் கஷ்டமான காரியமென்று, முன்பே எழுதியிருக்கிறேன்; அப்படியிருக்குமாயின், இது வெளியூருக்குப் போய் ஒரு கலியாணத்தைச் செய்து வைக்கும் கஷ்டத்திற்குச் சமானமாகும்! டிசம்பர் விடுமுறையில் நாங்கள் போனோம். போவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பாக, எங்களில் ஒருவராகிய வெங்கடகிருஷ்ண நாயுடுவை முன்பாக அனுப்பி எங்களுக்கு விடுதி முதலியவைகளை யெல்லாம் ஏற்பாடு செய்யும்படி செய்தோம். அவர் முன்னதாகப் போய் எங்களுக்காக வேண்டிய ஏற்பாடுகளை யெல்லாம் செம்மையாகச் செய்து வைத்தார். நாங்கள் நாடகமாடுவதற்காக, கப்பன்ரூம்ஸ் (Cubbon Rooms) என்னும் சிறிய நாடக சாலைதான் கிடைத்தது. அக்காலம், அதில்தான் பெங்களூரிலுள்ள ஐரோப்பியர்கள் நாடகமாடுவது வழக்கமாயிருந்தது. தற்காலம், போனவருஷம் அங்கு நான் போயிருந்தபொழுது அதைப்பற்றி விசாரித்துப் பார்த்தேன். பெங்களூரில் மற்ற இடங்களில் பெரும் நாடக சாலைகள் பல கட்டப்பட்டபடியால் கப்பன் ரூம்சில் நாடகமாடுவது அற்றுப் போய் விட்டது என்று சொன்னார்கள்.

நாங்கள் எல்லாம் திருமலைப்பிள்ளையின் இஷ்டப்படியே, ரெயிலில் இரண்டாவது வகுப்பில்தான் போக வேண்டுமெனத் தீர்மானித்தோம். மொத்தமாக நாடகமாடும் சங்கமாகப் போனபடியால், ரெயில் அதிகாரிகள் எங்களுக்குக் குறைந்த சார்ஜில் போகும்படியான உத்தரவு கொடுத்தார்கள். சபையில், பணம் இல்லாதபடியாலும், அப்பொழுது அங்கத் தினராயிருந்தவர்களுக்கு ஊக்கம் அதிகமாயிருந்தபடியாலும், ரெயில் செலவும், சாப்பாட்டுச்செலவும் நாங்களே வகித்தோம். இப்பொழுது சில சபைகளில் வெளியூருக்குப் போவதென்றால், சபையானது மேற்சொன்ன செலவுகளை யெல்லாம் மேற்கொண்ட போதிலும், தங்கள் வீட்டிலிருந்து ரெயில் ஸ்டேஷனுக்குப் போக வர வண்டிச் செலவுகூடச் சபையார் கொடுக்க வேண்டும் என்று மன்றாடும் எனது சில நண்பர்கள் இதைக் கவனிப்பார்களாக.

ஆக்டர்கள் தவிர, இன்னும் சில அங்கத்தினர், பெங்களூரைப் பார்க்க வேண்டும் என்னும் இச்சையாலும், போய் வருவதற்கு இலவசமாயிருந்தபடியாலும், பலருடன் கூடி ஒன்றாய்ப் போவது சங்தோஷத்தைத் தரும் என்னும் எண்ணத்தினாலும் எங்களுடன் வந்தார்கள். அப்படி வந்தவர்களுள், பெங்களூருக்குப் போகக் கூடாது என்று மன்றாடிய சிலரும் இருந்தனர். முக்கியமாக அப் பொதுக் கூட்டத்தில் அக்கிராசனம் வகித்த சி. ரங்கநாதம் நாயுடும் வந்தார். முன்பே நான் குறித்தபடி எங்கள் கண்டக்டராகிய வி. திரு மலைப்பிள்ளையும் வந்தார். பரீட்சைக்காகப் படித்துக்கொண் டிருந்த எனதாருயிர் நண்பராகிய சி. ரங்கவடிவேலு தவிர மற்ற முக்கியமான ஆக்டர்களெல்லாம் வந்தார்கள்.

காலை ரெயிலில் சென்னையிலிருந்து புறப்பட்டு இரண்டு இரண்டாவது வகுப்பு வண்டிகளைப் பூராவாக அமர்த்திக் கொண்டு, அவைகளிலேறி சாயங்காலம் இருட்டியவுடன் பெங்களூர் போய்ச் சேர்ந்தோம். அப்பொழுது தற்காலமிருப்பது போல் பெங்களூர் ரெயில் சீக்கிரமாகப் போகவில்லை.

இடையில் நாங்கள் ரெயில் பிரயாணம் செய்த பொழுது நிகழ்ந்த ஒரு முக்கியமான விஷயத்தை எழுத வேண்டியதிருக்கிறது. நாங்கள் புறப்பட்டவுடன் திருமலைப் பிள்ளை என்னைத் தன் அருகில் அழைத்து, “என்ன சம்பந்தம், சாரங்கதரா நாடகத்தில் ஆக்டர்களெல்லாம் இன்னும் ஒன்றும் படிக்கவேயில்லையாமே?” என்று கேட்டார். எதிர்க் கட்சியில் சார்ந்த சிலர், இதை அவருக்குத் தெரிவித்தார்கள் போலும். அவர்கள் என்ன எண்ணத்துடன் தெரிவித்தார்களோ நான் சொல்வதற்கில்லை; அப்படிச் செய்தது எங்களுக்கு (முக்கியமாக எனக்கு) மிகவும் நன்மையாய் முடிந்தது. “அதெல்லாம் நீங்கள் பயப்பட வேண்டாம்” என்று அவருக்குப் பதில் சொல்லி விட்டு என் வார்த்தையையும் சபையின் மானத்தை யும் காப்பாற்றும் பொருட்டு, மெல்ல அவருக்குத் தெரியாமல் ஒவ்வொரு ஆக்டராக அழைத்து, எங்கள் வண்டியில் காலியாயிருந்த கடைசி கம்பார்ட்மெண்டில் அவரவர்களுடைய பாகத்தை நடித்துக் காட்டி எப்படியாவது நமது பெயரைக் காப்பாற்ற வேண்டும், உங்கள் பாகங்களைக் குருட்டுப்பாடம் செய்து விடுங்கள் என்று அவர்களை வேண்டிக் கொண்டேன். அவர்களும் என் வேண்டுகோளுக்கிணங்கி, ரெயில் பிரயாணம் செய்யும் பொழுது, தங்கள் பாடங்களைச் சுறுசுறுப்புடன் படித்து வந்தனர்.

நாங்கள் போய் பெங்களூர் சேர்வதற்குள் இருட்டி விட்டது. முன்பே அங்கு போயிருந்த வெங்கடகிருஷ்ண நாயுடு எங்களுக்கெல்லாம் கோச் வண்டிகள் ஏற்பாடு செய்திருந்தார். அதில் ஏறிக்கொண்டு எங்களுக்கு ஏற்படுத்திய விடுதிக்குப் போகுமுன் நடந்த ஒரு நிகழ்ச்சியை இங்கு குறிக்க வேண்டிய வனாயிருக்கிறேன். ரெயில் ஸ்டேஷனுக்கு எங்களை வரவேற்க வந்தவர்களுள், எனது நண்பராகிய எம். வை. ரங்கசாமி ஐயங்காருடைய பந்து ஒருவர் வந்திருந்தார். ரங்கசாமி ஐயங்காருக்காகப் பால் கொண்டு வந்து கொடுத்தார். ரங்கசாமி ஐயங்கார் தான் சாப்பிட்டுவிட்டு, என்னையும் கொஞ்சம் சாப்பிடும்படி கேட்டுக் கொண்டார். அவர் வெண்டு கோளுக்கிணங்கி பெங்களூரில் டிசம்பர் மாசத்துக் குளிர்ச்சியால் பனிக்கட்டியைப் போல் சில்லென்றிருந்த அப் பாலை அருந்தினேன்.

இதென்ன, இந்த அல்ப விஷயத்தை இவன் இங்கு எடுத்துரைப்பானேன் என்று இதை வாசிக்கும் எனது நண்பர்கள் நினைக்கலாகாது. இதனாலும், இன்னும் இனி நான் கூறப்போகிற சில சிறு காரணங்களாலும், முடிவில் நான் என்ன கஷ்டத்திற்கு ஆளானேன் என்பதை இனி இதை வாசிக்கும் எனது நண்பர்கள் அறிவார்கள்.

எங்கள் விடுதிக்குப் போகும்பொழுது, பெங்களூரின் குளிர்ந்த காற்றையும் கவனியாது, எங்கள் வண்டிகளின் ஜன்னல்களை யெல்லாம் திறந்து கொண்டு போனோம். போனவுடன் சீக்கிரம் சாப்பிட்டு விட்டுப் படுத்துக் கொண்டோம். நான் படுத்துக் கொண்ட இடம், எங்கள் பகுதியில், ஒரு கூடம். நான் படுத்துக் கொண்ட இடத்துக்கு நேராகக் காற்று வருவதற்காக ஒரு ஜன்னல் இருந்தது. அதை மூடுவதற்கு ஏதோ காரணத்தினால் சாத்தியமில்லாமலிருந்தது. பின்வருவதை அறியாதவனாய், இதனால் என்ன கெட்டுப் போகின்றது என்று அதைக் கவனியாதவனாய் அந்த ஜன்னலுக்கு நேராக நான் படுத்துறங்கி விட்டேன். மறுநாட் காலை நான் எழுந்தவுடன் வாயைத் திறந்து பேச முயன்றால், என் குரல், எனக்கே கேட்காதபடி தொண்டை ஒரேமுட்டாய்க் கட்டிக் கொண்டது! குளிர்ந்த பாலைச்சாப்பிட்டது ஒரு பக்கம், வண்டியில் வரும்பொழுது குளிர்ந்த காற்றில் பட்டது ஒரு பக்கம், இரவில் மூடப்படாத ஜன்னலுக்கெதிராகப் படுத்துக் கொண்டது ஒரு பக்கம், எல்லாம் சேர்ந்து, என் தொண்டை ஒன்றும் பேசமுடியாமற்படி கட்டிக் கொண்டது. பாடுவதற்கு ஏதாவது கஷ்டமாயிருந்தால் சில பாகவதர்கள், தொண்டை கம்மலாயிருக்கிறது என்று கூறுவதுண்டு. “ஸ்திரீகள் காதில் அணிவது, எனக்குத் தொண்டையிலிருக்கிறது” என்று வேடிக்கையாய்ச் சொல்வதுண்டு. அப்படிப்பட்ட கம்மல், மிகவும் பெரிதாய், என் தொண்டையைப் பிடித்து விட்டது; எனக்கு இன்னது சொல்வதென்று தோன்றவில்லை. “அழ முடியாத துக்கம்” என்று அதற்கு முன் கேள்விப்பட்டிருக் கிறேன். அப்பொழுதுதான் அது இத்தன்மையது என்று நேரில் சுய அனுபவத்தில் அறிந்தேன். அன்றைத் தினம் நாங்கள் ஆட வேண்டிய நாடகம் “மனோஹரன்.” வேறு எந்த நாடகமாவது இருந்தாலும் கொஞ்சம் பெரிதல்ல. இந்த மனோஹரன் நாடகத்தில் முன்பே இதை வாசிக்கும் எனது நண்பர்பளுக்கு நான் அறிவித்திருக்கிறபடி, நான் நன்றாய் நடிப்பதற்கு என் தொண்டையானது மிகவும் வன்மையுடையாதாயிருக்க வேண்டியது அதி அவசியம். அப்படிப்பட்ட தருவாயில் என் குரலை நானே கேட்பது கஷ்டமாயிருந்தால், என் மன நிலைமை எப்படி இருந்திருக்க வேண்டுமென்று எனது நண்பர்களே ஊகித்துக் கொள்ளலாம். மெல்ல எழுந்திருந்து பக்கத்து அறையில் இருந்த வெங்கிடகிருஷ்ணப் பிள்ளையிடம் என் ஸ்திதியை, பாதி என் மெல்லிய குரலாலும் பாதி கை ஜாடையாலும் தெரிவித்தேன்! அவர் இதற்காக ஒன்றும் பயப்பட வேண்டியதில்லை; காலையில், குளிர் தேசமாகையால் அப்படித்தானிருக்கும்; வெயில் ஏற ஏறச் சரியாப் போய்விடுமென்று தெரிவித்தார்; வைத்தியம் தெரிந்த அவர் அப்படிக் கூறியும் என் மனம் திருப்தி அடையவில்லை . பிறகு காப்பி சாப்பிட்டுவிட்டு, எல்லோருமாக, அன்று காலை பெங்களூரில் “புஷ்பக்காட்சி” நடந்த இடத்திற்குப் போய்ப் பார்த்து விட்டுத் திரும்பி வந்தோம். இதற்குள்ளாகப் பத்து மணியாகியும் என் தொண்டை அப்படியே யிருந்தபடியால், வெங்கடகிருஷ்ணப் பிள்ளையைப் பார்த்து, இதற்கு ஏதாவது மருந்து கொடுக்க வேண்டும் என்று வற்புறுத்தினேன்; அவர் இதற்கு வேறு ஒரு மருந்தும் உடனே கேட்காது, அரை அவுன்ஸ் பிராந்தி சாப்பிட்டால் சரியாகப் போய்விடும் என்று சொன்னார். அவர் வார்த்தையில் முழு நம்பிக்கையுடையவனாய், அப்படியே கொஞ்சம் பிராந்தி வரவழைத்து, அரை அவுன்ஸ் தண்ணீரில் விட்டு அதைச் சாப்பிட்டேன். அதற்கு முன் எப்பொழுதும் அதைச் சாப்பிட்ட வழக்கமில்லாத படியால், அது என் வயிற்றில் எரிச்சலைக் கொடுக்க ஆரம்பித்தது. உடனே சாப்பாடு சாப்பிட்டுவிட்டால் எல்லாம் சரியாகப் போய்விடும் என்று எனது நண்பர் தெரிவிக்க அப்படியே செய்தேன். அதனால் எரிச்சல் சற்றுத் தணிந்த போதிலும், என் தொண்டைக் கம்மல் மாத்திரம் தீரவில்லை.

அதன்பேரில் என் மனத்தில் திகிலடைந்தவனாய், எனது நண்பரிடம் அணுகி, மறுபடியும் அவரது அபிப்பிராயத்தைக் கேட்க, அவர் சற்று உலாவினால் நல்லது என்று சொல்ல, அவரும் நானும் இன்னும் சிலருமாக நாங்கள் இறங்கியிருந்த “ஆஸ்பார்ன் அவுஸ்” என்னும் வீட்டிலிருந்து, நாடகம் நடத்தவேண்டிய இடமாகிய கப்பன் நாடகசாலைக்கு நடந்து போனோம். வேகமாய் நடந்ததனால் எனக்குக் கொஞ்சம் குணமாயிருந்தது போல் தோன்றியது. பிறகு, இதுவரையில் நான் பார்த்திராத அந்த நாடக சாலையைச் சுற்றிப் பார்த்துக் கொண்டு வரும்பொழுது, அங்கே வேஷம் தரிப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த கிரீன் ரூம்கள் ஒன்றில் பெரிய சோபாக்களும், கட்டில்களும் போடப்பட்டிருந்ததைக் கண்டு ஒருவேளை படுத்துறங்கி விட்டால் உடம்பு செம்மையாகி விடும் என்று எண்ணினவனாய், நடந்து வந்த அலுப்பினால் களைத்தவனாய், படுத்து உறங்கி விட்டேன். அதுதான் அன்றைத் தினம் நான் செய்த இரண்டாம் பெரும் தவறென்று நினைக்கிறேன். தொண்டை யெல்லாம் சரியாகிவிடும் என்று தூங்கப் போய், “குளிக்கப் போய் சேற்றைப் பூசிக்கொண்டு வந்தானாம்” என்கிற பழமொழிக்கிலக்காக, சாயங்காலம் நான்கு மணிக்கு நான் விழித்தெழுந்திருக்க, என் தொண்டை அடியுடன் அற்றுப்போய்விட்டது! முன்பாவது என் குரல் கொஞ்சம் கேட்டது; இப்பொழுது அதுவும் போய்விட்டது! “உள்ளதும் போச்சுடா நொள்ளைக்கண்ணா” என்கிறபடி, காலையில் இருந்த குரலும் போய்விட்டது! ஒன்றும் தோன்றாதவனாய், பிரமித்துப் போய், எனது நண்பராகிய வெங்கட கிருஷ்ணப் பிள்ளையைக் கேட்க, அவர் “நீ தூங்கியிருக்கக் கூடாது, அதனால்தான் இப்படியாயிற்று” என்று கூறினார். இந்தப் புத்திமதியை நான் தூங்குமுன் கூறியிருந்தால் நலமாயிருக்கும். தூங்கி எழுந்த பின் கூறி என்ன பிரயோஜனம் என்று எண்ணினவனாய், வைத்தியப்பரீட்சையில் தேறின ஒரு வைத்தியரை வரவழைத்து, என் ஸ்திதியைக் கூறி, எப்படி யாவது என் தொண்டையைச் சரிப்படுத்தும்படியாக வேண் டினேன். அவர் என்னை நன்றாய்ப் பரிசோதித்துப் பார்த்து, தேர்ந்த புத்தியுடையவராயிருந்தபடியால் “நீ பிராந்தி சாப்பிட்டது தவறு; பேசாமல் சுபாவத்திற்கே அதை விட்டிருப்பாயானால், சாயங்காலத்திற்குள் உன் தொண்டை சரியாகிப் போயிருக்கும். இப்பொழுது நான் வேறொன்றும் செய்வற்கில்லை. தொண்டை மாத்திரைகள் ஒரு புட்டி தருகிறேன். அவைகளை ஒவ்வொன்றாகக் கறையும் வரையில் வாயில் அடக்கி வைத்துக்கொண்டிரு; கொஞ்சம் சுமாராக இருக்கும்” என்று சொல்லி, ஒரு புட்டி தொண்டை மாத்திரைகள் அனுப்பினார். அவர் சொன்னபடியே, அந்த மாத்திரைகளை ஒவ்வொன்றாக வாயில் போட்டுக் கொண்டிருந்தேன். சாயங்காலமானவுடன் என்னுடைய இதர நண்பர்களெல்லாம் வேஷம் தரிப்பதற்காக வந்து சேர்ந்தார்கள். என் தொண்டையின் நிலைமையறிந்து அவர்களெல்லாம் துக்கப்பட்டார்கள் என்று சொல்வது அதிகமன்று. சி. ரங்கவடி வேலுடன் படித்தவராகிய சாரங்கபாணி முதலியார் என்பவர், என் தொண்டையின் நிலைமையறிந்து அவர்களெல்லாம் துக்கப்பட்டார்கள் என்று சொல்வது அதிகமன்று. சி. ரங்கவடிவேலுடன் படித்தவராகிய சாரங்கபாணி முதலியார் என்பவர், என் நிலையைப் பார்த்து, “வாத்தியார், நீங்கள் எப்படி இன்றிரவு ஆக்டு செய்ய போகிறீர்கள்!” என்று கூறி வாஸ்தவமாகக் கண்ணீர் விட்டழுதுவிட்டார். இவர்தான் எனக்கு “வாத்தியார்” என்று முதல் முதல் பெயர் வைத்தது! அப்பெயர் பிறகு சாதாரணமாக வழக்கத்தில் வந்து, இப் பொழுது எங்கள் சபையில் எனக்கு வயதிற் சிறியவர்களெல்லாம் என்னை “வாத்தியார்” என்றே அழைக்கின்றனர்.

பிறகு மற்ற ஆக்டர்களெல்லாம் எப்படி வேடம் தரித்தனர் முதலிய விஷயங்கள் ஒன்றையும் நான் அன்று கவனித்தவனே அன்று. மாத்திரைகள் சாப்பிடும்படி சொல்லிவிட்டுப் போன வைத்தியர், தொண்டைக்குச் சுடுகை தாக்கும்படியாக ஏதாவது செய்தால் கொஞ்சம் குணமாகும் என்றும் சொல்லிப் போனார்; ஆகவே, ஒரு தணல் சட்டியை வரவழைத்து, ஓர் ஊது குழாயைக் கொண்டு, அதன் சுடுகையை என் வாயிற் படும்படியாக, சுவாசத்தை இழுத்துக் கொண்டிருந்தேன், எட்டு மணி வரையில்; அதனால் கொஞ்சம் குணமாக சற்றுப் பேச முடிந்தது. உடனே கொஞ்சம் சந்தோஷப் பட்டவனாகி, ஜனங்கள் வந்துசேருவதற்கு முன், டிராப் படுதாவை எடுக்கச் சொல்லி, நான் நாடகத்தில் பேச வேண்டிய சில வார்த்தைகளைப் பேசிப்பார்த்தேன். வெளியிலிருந்து நான் கேட்டுப் பார்க்கச் சொன்ன சில நண்பர்கள் “பெரிதல்ல, சுமாராகக் கேட்கிறது” என்று சொன்ன பிறகு கொஞ்சம் மனத் தேர்ச்சியடைந்தேன். “ஊமைக்கு உளறுவாயன் உற்பாத பிண்டம்” என்னும் பழமொழிக்கிலக்காய் சந்தோஷப்பட்டேன். அதன் பிறகுதான் என் வேஷத்தைத் தரித்தேன். அப்பு, என் முகத்தில் வர்ணம் தீட்டும்பொழுதும் என் நோய்க்குக் கைகண்ட ஒளஷதமாகிய தணல் சட்டியையும் ஊது குழாயையும் விடவில்லை! அன்றிரவு நான் மேடையின் மீது நடித்ததெல்லாம், ஏதோ ஒரு பயங்கரமான கனவைக் கண்டது போல் இருக்கிறது. நாடகம் நடித்த பொழுது, மேடையின்மீது என். பாகம் ஆனவுடன், ஒவ்வொரு காட்சியிலும் விரைந்து போய் தணல் சட்டி பக்கத்தில் உட்கார்ந்து, ஊதுகுழாயால் புகையைத் தொண்டையிற் படும்படி இழுத்துக்கொண்டிருந்தேன். வெளியிற் போய் எனது குரல் கேட்கிறதா என்று பார்த்துவந்த என் நண்பர்கள் சுமாராகக் கேட்கிறது என்று என்னை உற்சாகப்படுத்திக் கொண்டு வந்தனர். இம்மாதிரியாக நான் வரும்படியான முதல் மூன்று காட்சிகளையும் கடந்தேன். நான் வரும்படியான நான்காவது காட்சியில், அதாவது “தோட்டக் காட்சியில்” நான் கோபத்துடன் பேச வேண்டியது அவசியமாயிருந்தபடியால், என் முழு சக்தியைக்கொண்டு கூவ வேண்டியதாயிற்று. அப்படிச் செய்யவே, அப்பிரயத்தனத்தினால், மறுபடியும் என் குரல் போகும் போலிருந்தது. இதற்கப்புறம், எனக்கு மிகவும் கஷ்டமான, நான் முன்பே பன்முறை குறித்துள்ள “இரும்புச் சங்கிலிக் காட்சி” வருகிறது. இக்காட்சியில் எப்படியாவது என் குரல் சரியாக இருக்க வேண்டுமென்று கோரிக்கொண்டிருந்தேன்.

இதில் நான் தவறுவேனாயின், நாடகம் அதோகதியாய் விடுமே என்று மிகவும் பயந்தவனாய், அந்தக் காட்சியில் நான் மேடைக்குப் போகுமுன், அதுவரையில் நான் உட்கொண்ட மாத்திரைகள் தவிர மிகுதியாயிருந்த மாத்திரைகள் அவ்வளவையும், வாயில் போட்டுக்கொண்டு நெறநெறவெனக் கடித்து விழுங்கிவிட்டு, அக்காட்சியில் சங்கிலிகளால் கட்டப்பட்டவனாய், மேடையின்மீது குதித்து, நான் ஆக்டு சரியாக நடிக்க வேண்டும் என்கிற ஒரு எண்ணம் தவிர வேறொன்றையும் கவனியாதவனாய், என் முழு பலத்தைக்கொண்டு உரக்கப் பேச ஆரம்பித்தேன்; இந்தக் காட்சியில் இவன் குரல் எப்படியாகுமோ என்று சந்தேகப்பட்டுக்கொண்டிருந்த எனது நண்பர்கள் எல்லாம் சம்பந்தத்திற்குப் பழைய குரல் வந்துவிட்டது என்று சந்தோஷப்பட்டவர்களாய்க் கரகோஷம் செய்தனர். நான் ஆக்டுசெய்தது நன்றாயிருந்ததென, வந்திருந்த ஜனங்களும் அங்ஙனமே செய்தனர் என்று நினைக்கிறேன். சாதாரணமாக நான் மேடையில் நடிக்கும் பொழுது வந்திருக்கும் ஜனங்கள் அதை நன்றாயிருக்கிறதென ஆமோதிக்கிறார்களா இல்லையா என்பதை நான் கவனிப்பதேயில்லை. ஆயினும் அன்று நான் அதை மிகவும் கவனித்தேன் என்றே சொல்லவேண்டும். சபையோர்களது கரகோஷமானது எனக்கு உற்சாகத்தைத் தந்தது. நான் புசித்த மாத்திரைகளின் பலன் பாதி, சபையோரின் உற்சாகம் பாதி, என்னை அக்கஷ்டமான காட்சியை நன்றாக நடித்து முடிக்கும்படியாக உந்தியதென நான் கூற வேண்டும். இந்த இரும்புச் சங்கிலிக் காட்சியின் முடிவில் மனோஹரன் மூர்ச்சையாகிறான் என்று நாடகத்தில் எழுதியுள்ளேன். நான் அன்றிரவு நடித்தபொழுது, வாஸ்தவமாகவே மூர்ச்சையாகினேன் என்றே நான் உரைத்திடல் வேண்டும். அக்காட்சி முடிந்து திரை விழுந்ததும், எனது நண்பராகிய சாரங்கபாணி முதலியாரும் இன்னும் இரண்டு மூன்று ஆக்டர்களும் என்னை அப்படியே தூக்கிக் கொண்டு போய்ச் சோபாவின்மீது வளர்த்தியதாக, எனக்குக் கனவு கண்டது போலிருக்கிறது. இதன் பிறகு நாடகம் முடியும் வரையில் நான் இரண்டு காட்சிகளில்தான் நடிக்கவேண்டி யிருந்தது. அக்காட்சிகளில் நான் பேசின வார்த்தைகள் அரங்கத்தின் மீதிருந்தவர்களுக்கே கேட்டிராது என்று நினைக்கிறேன். முந்தைய காட்சியில் நான் பட்ட சிரமத்தினால் என் குரல் அடியோடு அற்றுப் போய் விட்டது! அன்றிரவு இந்நாடகம் முடிந்த பொழுது என் மனத்தில் தோன்றிய ஓர் எண்ணத்தை இங்கெழுதுகிறேன். எங்கள் சபையில் ஒவ்வொரு நாடக முடிவிலும் “கல்லார்க்கும் கற்றவர்க்கும்” என்னும் இராமலிங்க ஸ்வாமிகளின் திவ்யமான பாட்டொன்றைப் பாடி மங்களம் பாடுவது வழக்கம். இவ்வழக்கம் இதுவரையில் இடைவிடாது வழங்கி வருகிறது. எங்கள் சபை உலகிருக்குமளவும் அப்படியேயிருக்குமெனக் கோருகிறேன். இந்த வழக்கப்படி, மனோஹரன் நாடகம் அன்றிரவு முடிந்த உடன், எல்லா ஆக்டர்களும் வரிசையாக நின்று “கல்லார்க்கும் கற்றவர்க்கும்” எனும் பாட்டைப் பாட ஆரம்பித்தோம். இப்பாட்டை அறிந்தவர்கள் தெய்வ வணக்கமான பாட்டுகளுள் இது ஒரு மிகவும் உருக்கமான பாட்டு என்பதை அறிவார்கள்; இந்தப்பாட்டை மற்றவர்களுடன் கூடி நான் பாடும்பொழுதுதான், அன்று காலை எழுந்தது முதல் அதுவரையில், என்னைப் படைத்த ஈசனை நான் தொழவில்லை என்பது எனக்கு ஞாபகம் வந்தது! எனது பத்தாம் வயது முதல், என் தாயார் ஒரு நாள் எனக்கு உபதேசித்தபடி, குறைந்தபட்சம், போஜனங்கொள்ளுமுன், இரண்டு முறையாவது பகல் இரவில், சுவாமியைத் துதிக்காத நாளில்லை. நோயாயிருக்கும் காலத்தில்கூடப் பத்தியம் செய்யு முன் ஈசனைப் பிரார்த்தித்து விட்டே அதைக்கொள்வது என் வழக்கம். அப்படியிருந்தும் அன்று ஒரு நாள் காலை முதல் அது வரையில் ஈசனை நினைத்தவனன்று! என் தொண்டையிருந்த ஸ்திதியில் நாடகத்தில் எப்படி நடிக்கப் போகிறோமென்று கவலையுற்று, அதைச் சரிப்படுத்துவதற்கு விருதாவாக அநேகம் வழிகளைத் தேடினேன்: இரண்டு வைத்தியர்களை நாடினேன். அதை வாஸ்தவத்தில் சரிப்படுத்தக்கூடிய ஈசன் இணையடியை நாட மறந்தேன்! இப்பொழுது அதை நினைத்துப் பார்க்கும்பொழுது அன்று நான் பட்ட கஷ்டம், நான் செய்த பிழைக்குச் சரியான தண்டனையென்றே தோன்றுகிறது. அன்றுடன் போகாமல், நான் அளவுக்கு மிஞ்சி அதிகமாய் உட்கொண்ட மாத்திரைகளின் குணத்தினால், இரண்டு நாட்கள் வரையில் உடம்பெல்லாம் சூடாகி மிகவும் கஷ்டப்பட்டேன்.

மறுநாள் காலை எழுந்ததும் என் குரல் சரியாகிவிட்டது! ஈசன் செயலை அறிந்தார் யார்? காலையில் என் பழைய வழக்கப்படி ஈசனைத் தொழுத பின், இனி பிராந்தி முதலிய வஸ்துக்களை என் உயிருள்ளளவும் தீண்டுவதில்லை என்று அவர் முன்னிலையில் பிரமாணம் செய்து கொண்டேன். அன்று செய்த பிராமணத்திலிருந்து இன்றளவும் மனப்பூர்வமாய்த் தவறினவன் அன்று.

மேற்சொன்னபடி அன்று நான் என் தொண்டையைச் சரிப்படுத்துவதற்காக அரை அவுன்ஸ் பிராந்தியைச் சாப்பிட்டதும் அதனால் அடைந்த பலனையும் இவ்வளவு விவரமாய் நான் எழுதுவதற்கு ஒரு முக்கியமான காரணம் உண்டு. இது எனக்கு அவமானத்தைத் தரும்படியான விஷயமே. ஆயினும் எனது நாடக மேடை அனுபவங்களை யெல்லாம் ஒன்றும் விடாது உண்மையை வெளியிட வேண்டும் என்னும் அவாவினாலும், மேலும் இதனால் இதை வாசிப்பவர்களுக்கு இது ஒரு சிறிது நற்புத்தியைப் புகட்டும் என்னும் காரணத்தினாலும் இதை வெளியிட்டுள்ளேன். தென் இந்தியாவில் எனக்குத் தெரிந்தவரையில், அநேகம் ஆக்டர்கள், அநேக நூற்றாண்டுகளாக மதுபானம் செய்து வரும் இங்கிலாந்து முதலிய தேசத்துப் பிரபல வைத்தியர்கள் அநேகர் மதுபானம் கூடாதென்றும் அதனால் ஒரு நற்பயனும் கிட்டாது என்றும் போதித்து வந்த போதிலும், நமது தேசத்திலிருக்கும் இந்த ஆக்டர்கள், கொஞ்சம் மதுவை உட்கொண்டால் உடம்பிற்கு நல்லது, முக்கியமாகத் தொண்டைக்குப் பலன் கொடுத்து, நம்மை நன்றாய்ப்பாடவும் ஆக்டு செய்ய உதவும் என்று நம்பி மோசம் போகிறார்கள்.

முக்கியமாக நாடகமாடுவதையே ஜீவனமாக உடைய ஆக்டர்கள் பெரும்பாலார், இவ்வழக்கத்தை மேற்கொண்டு குடியர்களாகி விரைவில் கெட்டழிகின்றனர் என்பது எல்லோரும் அறிந்த விஷயமே. அன்றியும், ஆமெட்சூர் (Ameteurs) என்று பெயர் வைத்துக்கொண்டிருக்கும், வேடிக்கை வினோதத்திற்காக நாடகமாடும் கற்றறிந்தவர்களுள்ளும் சிலர், கொஞ்சம் மதுவைச் சாப்பிடுவதனால் குரல் விருத்தியடைகிறது என்னும் கெட்ட தவறான அபிப்பிராயத்தை உள்ளவர்களா யிருக்கிறார்கள் என்பதை நான் அறிவேன். அவ்வாறு எண்ணுபவர்களெல்லாம் நான் அரை அவுன்ஸ் மதுவையுண்டு, அதனால் பட்ட பலனையும், கஷ்டத்தையும், பிராயச்சித்தத்தையும் படித்தறிந்தாவது அத் தவறான எண்ணத்தை விட்டொழிவார்களென்று கோரியே இதை இவ்வளவு விரிவாக எழுதலானேன். இதை வாசிக்கும் அநேகருள் ஒருவனாவது, இனிமேல் தான் மதுவை எக்காரணத்தினாலும் தீண்டுவதில்லை என்று பிரமாணம் செய்துகொண்டு அதன்படி நடந்து வருவதானால், ஈசனுக்கு, என்னைப் படைத்ததற்கு நான் செய்ய வேண்டிய கைம்மாறில், ஒரு கூறு செலுத்தினவனாவேன்!

இனி நாங்கள் பெங்களூரில் ஆடிய இரண்டாவது நாடகமாகிய “சாரங்கதரனை”ப் பற்றி எழுதுகிறேன்.

இந்த நாகடத்திற்கு அது வரையில் ஒரு ஒத்திகையும் நடக்கவில்லை என்பதை முன்பே குறித்துள்ளேன். வருகிற பொழுது ரெயில் வண்டியில் ஆக்டர்களுக்கு நான் படித்துக் காட்டியது தான். இதைப்பற்றி எங்களுடன் வந்த, தெலுங்கு வகுப்பைச் சார்ந்த ஒருவர் (அவர் பெயரைக் காட்ட இஷ்டமில்லை) கண்டக்டராகிய திருமலைப் பிள்ளையிடம் போய் குறை கூறிக்கொண்டாராம். அவர் நாகடத்திற்கு முந்திய நாள் என்னிடம் வந்து “என்ன சம்பந்தம்? சாரங்கதராவில் இன்னும் ஒருவரும் பாடம் படிக்கவேயில்லையாமே” என்று கேட்டார். அதன் மீது நான் “எல்லாம் சரியாகப் படித்திருக்கிறார்கள். “நீங்கள் ஒன்றும் பயப்பட வேண்டாம்” என்று பதில் உரைக்க, “ஆனால் இன்றையத் தினம் சாயங்காலம் நான் ஒத்திகை பார்க்க வேண்டும்” என்று சொன்னார். அதன் மீது என் ஆக்டர்களையெல்லாம் ரகசியமாக அழைத்து நடந்ததைக் கூறி “எப்படியாவது என் வார்த்தையை நீங்கள் காப்பாற்ற வேண்டும்; கூடுமாவனரையில் உங்கள் பாடத்தைப் படித்து வையுங்கள்; இன்று சாயங்காலம் ஒத்திகையில் ஏதாவது மறந்து போனால் நான் சொல்லிக் கொடுக்கமாட்டேன், சந்தர்ப்பத்திற்குத் தக்கபடி உங்கள் சொந்த வார்த்தையை உபயோகித்துக் கொண்டு, பூர்த்தி செய்து விடுங்கள்; உங்கள் பாடம் சரியா வராது என்பதை மாத்திரம் காட்டிக் கொடுக்காதீர்கள்” என்று சொன்னேன். அதன்மீது எனது நண்பர்களெல்லாம் கூடியமட்டும் தங்கள் வசனங்களைச் சரியாகப் படித்து வைத்தார்கள். பாட்டுகளுக்கு மாத்திரம் முன்பே ஒத்திகை செய்திருந்தேன். முன்பு மனோஹரன் நாடகத்திற்கே வேண்டிய பாட்டுகள் நான் கட்டக் கற்றுக் கொண்டேன். ஆகவே வேறொருவர் உதவியின்றி, இந்நாடகத்திற்கும் சென்னையிலிருக்கும் பொழுதே பாட்டுகளைக் கட்டிக் கொடுத்திருந்தேன். முக்கியமாக இந் நாடகத்தில் பாடினவர்கள் சுமந்திரன் வேஷம் தரித்த ரங்கசாமி ஐயங்காரும், ரத்னாங்கி வேஷம் தரித்த அ. கிருஷ்ணசாமி அய்யருமே.

சாயங்காலம் ஒத்திகை ஆரம்பிக்குமுன் என் சூழ்ச்சி எங்கு வெளியாகி விடுகிறதோ என்று நாடகம் எழுதியிருந்த புஸ்தகத்தை மெல்ல ஒளித்து வைத்துவிட்டேன். திருமலைப் பிள்ளை வந்து உட்கார்ந்தவுடன், “புஸ்தகம் எங்கேயோ இருக்கிறது. புஸ்தகத்தின் உதவியில்லாமலே ஒத்திகை நடத்துகிறோம் பாருங்கள்!” என்று சொல்லிக் கிருஷ்ணசாமி ஐயர், ரங்கசாமி ஐயங்கார், ஜெயராம் நாயகர், துரைசாமி ஐயங்கார், நான் முதலிய முக்கியமான ஆக்டர்கள் வரும் காட்சிகளை முதலில் எடுத்துக் கொண்டு, பரபரவென்று ஒத்திகை நடத்தினேன். இரண்டு மூன்று முக்கியமான காட்சிகளைப் பார்த்தவுடன் திருமலைப் பிள்ளை அவர்கள் நாங்கள் பாடம் படிக்கவில்லை என்று குறை கூறியவரைத் திரும்பிப் பார்த்து, “என்ன, ஒருவரும் பாடம் படிக்கவில்லை யென்று சொன்னாயே, எல்லாம் மிகவும் நன்றாய்ப் படித்திருக்கிறார்களே!” என்று கோபித்து மொழிந்து விட்டு, “எல்லாம் சரியாக இருக்கிறது, ஆக்டர்களை யெல்லாம் அதிகமாக அலட்டாதே” என்று சொல்லிவிட்டு ஏதோ அலுவலாக வெளியில் போய்விட்டார். எப்படி முடியுமோ எவ்று பயந்து கொண்டிருந்த நான் மிகவும் சந்தோஷப் பட்டேன் என்றே சொல்ல வேண்டும்; திருமலைப் பிள்ளை தலை மறைந்தவுடன், என்னுடைய நண்பர்களெல்லாம், எங்கள் மீது குறைகூறிய அங்கத்தினரைச் சூழ்ந்து கொண்டு, ஏளனம் செய்ய ஆரம்பித்தனர். நான் அவர்களைத் தடுத்து, “இவர் நமக்கு நன்மையே செய்தார். இவர் இவ்வாறு குறை கூறியில்லாவிட்டால், நாம் எல்லாம் நமது பாகங்களை இவ்வளவு விரைவில் கஷ்டப்பட்டுப் படித்திருப்போமா?” என்று சொல்லி எல்லோரையும் சமாதானம் செய்து வைத்தேன். வாஸ்தவத்தில் அவர் எங்களுக்குத் தீங்கிழைக்கப்போய் அது எங்களுக்கு நன்மையாகவே முடிந்தது.

எங்கள் இரண்டாவது நாடகமாகிய “சாரங்கதரன்,” முதல் நாடகத்தைவிட மிகவும் நன்றாயிருந்ததெனப் பார்த்தவர்கள் சொன்னார்கள். முதல் நாடகத்திற்கு வந்திருந்தவர்கள், நன்றாயிருக்கிறதெனத் தங்கள் நண்பர்கள் முதலியோருக்குத் தெரிவிக்க, இரண்டாவது நாடகத்திற்கு முதல் நாடகத்தைவிட ஏராளமான ஜனங்கள் வந்திருந்தனர். முதல் நாடகத்திற்கு எனக்கு ஞாபகம் இருக்கிறவரையில் 150 ரூபாய்தான் வசூலாகியது. இரண்டாவது நாடகத்திற்கு 250 ரூபாய்க்குமேல் வசூலாகியது. அந்த கப்பன் நாடகசாலை மிகவும் பெரியதல்ல; ஆகவே, நாடகசாலை முழுவதும் ஜனங்கள் நிரம்பியிருந்தனர். அன்றியும் ஆரம்ப முதல் கடைசிவரையில் ஒவ்வொரு காட்சியிலும் சபையோர்கள் கரகோஷம் செய்து தங்கள் சந்தோஷத்தைத் தெரிவித்தனர்.

இனி ஒவ்வொரு ஆக்டரும் நடித்ததைப்பற்றிச் சிறிது எழுதுகிறேன். முதலில் சித்ராங்கியாக வேடம் பூண்ட ஜெயராம் நாயகர் மிகவும் நன்றாய் நடித்தார்; இந்தப் பாகம் அவர் மேடையில் நடிக்கும் திறத்திற்கு மிகவும் பொருந்தியதாயிருந்தது. ஒன்றிரண்டு பாட்டுகள் பாடினாரோ இல்லையோ எனக்கு ஞாபகமில்லை. இந்த சித்ராங்கி பாகத்தில் பின் வந்தவர்களெல்லாம் அநேகம் பாடல்கள் பாடியிருக்கின்றனர். இவர் பாட்டு அதிகமில்லாமல் வெறும் வசனத்தினால் எல்லோரையும் சந்தோஷிக்கச் செய்தது மிகவும் மெச்சத்தக் கதே. எனது நண்பராகிய ஜெயராம் நாயகர் எங்கள் சபையில் ஸ்திரீ வேஷம் தரித்தது இதுதான் கடைசி முறை. அவரது தந்தையார் இனி நீ ஸ்திரீ வேஷம் தரிக்கக்கூடாது என்று கட்டளையிட்டிருந்தபடியால், இதுதான் கடைசி முறை சங்கத்தில் ஸ்திரீ வேஷம் தரிக்கப் போகிறது என்பதை அறிந்தவராய், அன்றிரவு, தன் முழுசாமர்த்தியத்தைக் கொண்டு சித்ராங்கியாக நடித்தனர். அவரது வசனங்களில் முக்கியமான பாகங்களிலெல்லாம் சபையோர் கரகோஷம் செய்து ஆமோதித்தனர் என்று நான் கூற வேண்டும்.

அன்றிரவு ஸ்திரீ வேஷம் தரித்தவர்களுக்குள் இரண்டாவதாக அ. கிருஷ்ணசாமி ஐயரைக் கூறவேண்டும். இவர் அன்று சாரங்கதரன் தாயாராகிய ரத்னாங்கிதேவியாக நடித்தார். அப்பொழுது இவர் நல்ல யௌவனத்திலும் தேகபலத்திலும் இருந்தார்; இவருடைய உருவமும் மிகவும் மெச்சத்தக்கதாயிருந்தது. சங்கீதமும் மிகவும் மெச்சத்தக்கதாயிருந்தது. இவர் எங்கள் சபையின் நாடகங்களில், தமிழிலும் தெலுங்கிலும் பல ஸ்திரீ வேஷங்கள் தரித்திருக்கின்றனர். அவற்றுள் ரத்னாங்கி தேவி ஒரு முக்கியமானதெனக் கூற வேண்டும். சோகபாகத்தில் இவர் சபையோரையெல்லாம் கண்ணீர் விட்டழச் செய்தார் என்பதற்கு ஐயமில்லை.

இந் நாடகத்தில் ஸ்திரீ பாகம் இன்னொன்றுதான். அது “மதனிகை"யெனும் தோழியின் பாகமாம். இதை நான் முன்பே குறித்தபடி, தற்காலம் திருநெல்வேலி ஜில்லாவில் அட்வோகேட்டாக இருக்கும் சாதுகணபதி பந்துலு எடுத்துக் கொண்டார். அன்றிரவு இவர் இந்த வேஷம் தரித்தபொழுது நடந்த ஒரு சிறிய விருத்தாந்தத்தை இங்கு எழுதுகிறேன். முன்பே என் நண்பர்களுக்கு நான் தெரிவித்திருக்கிறபடி எங்கள் சபையில் அக்காலம் புடவைகளில்லாதபடியால், ஒவ்வொரு ஸ்திரீ வேஷதாரியும் தான் கட்டிக்கொள்ளப் புடவைகள் எங்கேயாவதிருந்து கொண்டு வரும்படி நேர்ந்தது. இப் பழக்கத்தின்படி சாதுகணபதி பந்துலு அவர்கள், தனது சிநேகிதர்களைக் கேட்டு இரண்டு புடவைகள் வாங்கிக்கொண்டு வந்தார்; அதில் ஒன்று அதிக விலையுயர்ந்ததும் அழகமைந்தது மாயிருந்தது; அதை அவர் கட்டிக்கொண்டிருக்கும்பொழுது பார்த்த ஜெயராம் நாயகர், என்னிடம் வந்து, “என்ன சம்பந்தம்! சித்ராங்கியைவிட, அவள் பாங்கி அதிக விலையுயர்ந்த புடவையைக் கட்டிக் கொள்ளலாமா?” என்ற மெல்லக் கேட்டார். இதையறிந்த - நான் சாதுகணபதி பந்துலுவிடம் போய், ராஜகுமாரியைவிட அவளது பாங்கி அதிக விலை உயர்ந்த சேலையைத் தரிப்பது உசிதமல்லவென்று நியாயம் எடுத்துக் கூற, கற்றறிந்த புத்திமானாதலால் பந்துலு அவர்கள் உடனே அதைக் களைந்துவிட்டு, சாதாரணப் புடவையொன்றை உடுத்திக்கொண்டதுமன்றி, விலையுயர்ந்த சேலையை, சித்ராங்கி கட்டிக் கொள்ளட்டும் என்று ஜெயராம் நாயகரிடம் கொடுத்துவிட்டார். இவ்வாறு செய்த பந்தலு அவர்களின் குணத்தை நாங்கள் எல்லோரும் மெச்சினோம். இந்த சொற்ப விஷயத்தை இவ்வளவு சவிஸ்தாரமாக நான் என் எழுதவேண்டும் என்னும் சங்கை இதை வாசிப்பவர்களுக் குண்டாகலாம். இதற்கு ஒரு முக்கியமான காரணம் உண்டு. அநேக நாடக சபைகளில் (முக்கியமாக ஆமெட்சூர் சபைகளில்) ராஜகுமாரியைவிட, அவளது பாங்கி அதிக விலையுயர்ந்த நகைகளையும், சேலைகளையும் தரிப்பதை நான் பார்த்திருக்கிறேன். ராஜகுமாரியைவிட, அவளது பாங்கி அதிக விலையுயர்ந்த ராஜகுமாரி வேஷம் பூணும் ஆக்டர் கொஞ்சம் எளியவனாயிருப்பான். அவனுக்கு நகைகளையும் உயர்ந்த சேலைகளையும் இரவல் கொடுப்பார் ஒருவரு மில்லாதிருப்பார்கள்; அந்த ராஜகுமாரியின் பாங்கி வேஷம் பூணும் ஆக்டர், செல்வந்தனாயிருப்பான்; அவனுக்கு விலையுயர்ந்த நகைகளும் சேலைகளும் எளிதில் கிடைக்கக் கூடியதாயிருக்கும்; இதனால் இவர்களிருவரும் மேடையின் மீது வந்தவுடன், பாங்கியை ராஜகுமாரி யென்றும், ராஜ குமாரியைப் பாங்கி யென்றும் எல்லோரும் சந்தேகிக்க இடமுண்டாகும்! இப்படிச் செய்வது தவறு. இதைக் கற்றுணர்ந்த நமது ஆக்டர்கள் தவிர்க்க வேண்டுமென்றே, மேற்கண்ட விஷயத்தைச்சற்று விவரமாய் எழுதலானேன். ஒரு முறை எங்கள் சபையிலே, சிலவருஷங்களுக்கு முன், தசராக் கொண்டாட்டத்தில் ஒரு நாள், ஒரு கோமுட்டிசெட்டியார், ஸ்திரீ வேஷம் தரிக்கவேண்டும் என்று கோரினவராய் அநுமதி பெற்று லட்சக்கணக்கான விலையுயர்ந்த நகைகளையும், மத்தாப்பு சேலையும் அணிந்து, மேடையின்மீது பாங்கியாய்த் தோன்றினார்; வந்திருந்த அங்கத்தினரெல்லாம் கொல் என்று நகைத்துவிட்டனர்! அதனால் அவர் வெட்கப்பட்டு, மறுபடியும் அரங்கத்தின்மீது ஏறவேயில்லை! நான் சொல்ல வந்ததன் முக்கியக் கருத்தென்னவென்றால், நாடகங்களில் என்ன வேடம் தரித்தபோதிலும் அந்த வேடத்திற்குத் தக்கபடிதான் ஆடையாபரணங்களை அணிய வேண்டுமேயொழிய, நமக்குக் கிடைக்கிறதேயென்று அதிகமாய் அணிவது பெரும் தவறாகும் என்பதே.

ஆண் வேடம் தரித்தவர்களுக்குள் சுமந்திரனாகத் தோன்றிய எம். வை. ரங்கசாமி ஐயங்கார் அன்றிரவு மிகவும் நன்றாய் நடித்தார். இவரது இனிய குரலினாலும் சங்கீதப் பயிற்சியினாலும், சபையோரை மிகவும் ரமிக்கச் செய்தார். இவர் அச்சமயம் சுமந்திரனாக நடித்தபொழுது நடந்த ஒரு சம்பவத்தை இங்கு வரைய விரும்புகிறேன். இந்நாடகத்தில் புறா விடுகிற காட்சி ஒரு முக்கியமான காட்சியென்று இதைப் படித்தவர்கள் அனைவரும் அறிவார்கள். ஆகவே, சாரங்கதரனுக்கொன்றும், சுமந்திரனுக்கொன்றுமாக இரண்டு புறாக்களை வாங்கி, இராத்திரி உபயோகிப்பதற்காக ஒரு கூண்டில் அடைத்து வைத்திருந்தோம். இந்தக் காட்சி வந்தவுடன், சாரங்கதரனாகிய நான், விதூஷகனாக என்னுடன் நடித்துக் கொண்டிருந்த துரைசாமி ஐயங்காரை எங்கள் இருவருடைய புறாக்களையும் கொண்டு வரும்படி கட்டளையிட, அவர் உள்ளே போய் ஒரு புறாவை மாத்திரம் கொண்டு வந்து என் கையில் கொடுத்து, என் காதில் மற்றொரு புறா கூண்டில் இறந்து கிடப்பதாக மெல்லத் தெரிவித்தார்! இறந்த புறாவைக் கொண்டு எப்படிப் பந்தயம் விடுவது? நான் உடனே, “என்ன விதூஷகா? சுமந்திரன் புறாவை என்னிடம் கொடுத்தாயே!” என்று சொல்லி, அப்புறாவை ரங்கசாமி ஐயங்காரிடம் கொடுத்துவிட்டு, நான் உள்ளே சென்று மடிந்து கிடக்கும் புறாவைக் கையிலெடுத்துக் கொண்டு மரித்துப்போனதை ஒருவரும் அறியாதபடி வைத்திருந்து, ஆகாயத்தில் விடுவதுபோல, சைட் படுதாவுக்குப் போய் விட்டுவிட்டு வந்தேன்! வேறு நான் என்ன செய்வது? இறந்த அப்பட்சியைத் தொடுவதற்கே பிராம்மணராகிய துரைசாமி ஐயங்கார் சங்கோசப்பட்டார் என்றால், அதைக் கையில் வைத்திருந்து பிறகு அதைப்பந்தயம் விடுவதற்கு, அவரை விட வைதீகரான எம்.வை. கோபால்சாமி ஐயங்கார் எப்படி ஒப்புவார்? அந்தப் புறா பெங்களூரில் அப்பொழுது இருந்த குளிர்ச்சியினாலோ வேறெக் காரணத்தினாலோ இறந்து எங்களுக்கு இவ்வளவுகஷ்டத்தை விளைத்தது. இந்நாடகத்தை ஆட விரும்பும் என் இளைய நண்பர்கள் புறா விடுவதில் கவனிக்க வேண்டிய ஒரு விஷயமிருக்கிறது. புறாவைப் பந்தயத்திற்காக விடுபவர்களும் ஒரு புறாவைக் கையிலெடுப்பதென்றால், அதன் இரண்டு கால்களையும் சற்று மடக்கி, ஒரு மாதிரியாகப் பிடிக்கவேண்டும். இல்லாவிட்டால் புறாவிற்கு ஹிம்சையாவதுண்டாகும் அல்லது அது எளிதல் கையினின்றும தப்பிப் பறந்தாவது போய்விடும். மற்றவர்கள் இந்த நாடகத்தை நடத்தும்பொழுது, இக்காட்சியில் அநேகம் ஆக்டர்கள் புறாக்களைத் தவறாகப் பிடித்துக் கொண்டு மேடையின்மீது வந்து கஷ்டப்பட்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன். அன்று காலை அப்புவிடமிருந்து புறாக்களைக் கையில் எப்படிப் பிடிப்பது என்பதை நான் கற்றுக்கொண்டபடி, இந்நாடகத்தையாட. விரும்புவோர், புறாக்களுடன் பழகியவர்களிடமிருந்து தெரிந்து கொள்வார்களாக. செய்வன திருந்தச் செய்ய வேண்டும். ஆகவே இது ஓர் அல்ப விஷயமாயிருந்த போதிலும், இதையும் சற்று தக்கபடி நடத்த வேண்டும். இல்லாவிடில் புறாவைவிடும் ரசிகன் எவனாவது நாடகத்தைப் பார்க்க வந்திருந்தால், செய்தது! தவறெனக் கண்டுபிடித்து விடுவான்; அவன் மனம் கசந்து போகும்; அதற்கு இடங்கொடுக்கலாகாது.

விதூஷனாகிய “சுந்தரகன்” என்பவனாகத் தோன்றிய எம். துரைசாமி ஐயங்கார் அவர் விரும்பியபடி நாடக ஆரம்ப முதல் ஏறக்குறைய கடைசிக் காட்சி வரையில் அவருக்கு வேலையிருந்தபடியால், தனது பாகத்தை மிகவும் நன்றாய் நடித்து, சபையோரையெல்லாம் விடா நகைப்புடையவராக்கினார். இவர் சில வருஷங்களுக்குமுன் இளவயதிலேயே காலமானார். அது வரையில் தமிழிலும் தெலுங்கிலும் எங்கள் சபையில் அநேகம் ஹாஸ்ய பாகங்களில் இவர் நடித்திருந்தனர். இவற்றுளெல்லாம் அவரே மிக விரும்பியது இந்தச் சுந்தரகன் பாகமே. இவரிடமிருந்த ஒரு முக்கியமான நற்குணம் என்ன வென்றால், ஹாஸ்ய பாகங்களில் ஒரு முறை இதை இப்படி நடிக்க வேண்டுமெனச் சொல்லிவிட்டேனாயின், மறுமுறை கூற வேண்டியதில்லை. அன்றியும் நாடகத்தில் எழுதியிருப் பதற்குமேல் ஒரு வார்த்தையும் பேசமாட்டார். ஹாஸ்ய பாகங்களை நடிப்பவர்கள் இதை முக்கியமாகக் கவனிப்பார் களாக. எவ்வளவுதான் புத்தியுடையவர்களாயிருந்தபோதிலும், முக்கியமாக ஹாஸ்ய பாகங்களில் கிரந்த கர்த்தர் எழுதியதற்கு மேல் தங்கள் சுய புத்தியைக்கொண்டு; வேடிக்கையாய்ப் பேசுவது தவறு என்று ஷேக்ஸ்பியர் மஹாகவி ‘ஹாம்லெட்’ என்னும் அவரது மிகச் சிறந்த நாடகத்தில் குறித்திருக்கின்றார்.

மேற்சொன்ன துரைசாமி ஐயங்காருடன் ஹாஸ்ய பாகங்களில் இந்நாடகத்தில் சற்றேறக்குறைய எல்லாக் காட்சிகளிலும் கூட வந்தவர், மதுரகவி வேடம் பூண்ட ராஜ கணபதி முதலியாரே. இந்த மதுரகவியின் பாகத்தைப்பற்றி முன்பே எழுதியிருக்கிறேன். இப்பாத்திரம் இவருக்கு மிகவும் பொறுத்தமாயிருந்ததென நான் கூற வேண்டிய அவசியமில்லை. இவர், முன் நடந்த மனோஹரன் நாடகத்தில் வந்தனாக நடித்தார் என்பது என் நண்பர்களுக்கெல்லாம் ஞாபகமிருக்குமென நினைக்கிறேன். இந்த இரண்டு நாடகங்களிலும் இவரைக் கண்டவர்கள், பிறகு வெகுகாலம் வரையில் இவரைப் பார்க்கும்போதெல்லாம் “சந்தேகமில்லை!” என்றாவது, அல்லது “உங்கள் தகப்பனார் என்ன சொல்லுகிறார்?” என்றாவது இவரை ஏளனம் செய்துகொண்டிருந்தனர். இந்த வேடிக்கையை முதல் முதல் ஆரம்பித்தவர்கள், பெங்களூரில் இவரை நாடகமேடையிற் பார்த்த சில நண்பர்களே! சில வருஷங்கள் வரையில், தற்காலம் எங்கள் சபையில், வி.வி. சௌந்தரராஜ ஐய்யங்கார், கே. வரதாச்சாரியார், ஷண்முக முதலியார் மூவரும் எப்படி அடிக்கடி ஒன்றாய் ஹாஸ்ய பாகங்களில் வருகிறார்களோ அப்படியே அக்காலத்தில், துரைசாமி ஐயங்கார், ராஜ கணபதி முதலியார், ஷண்முகம் பிள்ளையாகிய மூவரும் ஒன்றாய் வந்து கொண்டிருந்தனர். இம்மூவருக்கென்றே, இரண்டு நண்பர்கள், சத்ருஜித் முதலிய நாடகங்களில் ஹாஸ்ய பாகங்களை நான் எழுதியிருக்கிறேன். ச. ராஜகணபதி முதலியார் எங்கள் சபையில் நன்றாய் நடித்த ஹாஸ்ய பாகங்களில் “மதுரகவி” ஒரு முக்கியமானதென்பது என் அபிப்பிராயம்.

நான் “சாரங்கதரனாக” நடித்ததும் நன்றாயிருந்ததென எனது நண்பர்கள் கூறினார்கள். நாடகம் பார்க்கவந்தவர்களும் அப்படியே அபிப்பிராயப்பட்டதாக நான் அறிந்தேன். மனோஹரன் நாடகத்தில் என் குரல் கம்மிப்போய் நாம் நன்றாய் நடிக்காதபடி கெட்டதே, இதிலாவது நற்பெயர் எடுக்கவேண்டு மென்று நான் பிரயத்தனப்பட்டேன். சாரங்கதர நாடகம் நடந்த நாள் என் குரல் செம்மையாகி விட்டபடியால், என் பிரயத்தனத்தில் நான் சித்தி பெற்றேன் என்றே எண்ணுகிறேன்.

என் பால்ய சிநேகிதராகிய ஸ்ரீனிவாசஐயங்கார், என்னிடம் ஏதாவது குறை இருந்தால் அதையெடுத்து அஞ்சாது கூறுபவர். அவர் பல வருஷங்களுக்கு முன் எங்கள் சபை நடத்திக்கொண்டு வந்து பிறகு நிறுத்திவிட்ட “இந்தியன் ஸ்டேஜ்” (Indian stage) என்னும் மாதாந்த பத்திரிகையில், அதுவரையில் நான் ஆடிய நாடகப் பாத்திரங்களைப் பற்றிச் சீர்தூக்கிக் கூறுங்கால், “சம்பந்தம் க்ஷயரோகம் பிடித்த யயாதியகவும், விளையாட்டின்மீதே கருத்துடைய பாலனாகிய சாரங்கதரனாகவும் நடித்ததுதான் என் மனத்திற்குத் திருப்திகரமாயிருந்தது” எனத் தெரிவித்திருக்கிறார்.

இந்த சாரங்கதர நாடகத்தைப் பெங்களூரில் ஆடிய பொழுது அதை முடித்த விதத்தைப்பற்றி நான் எழுதவேண்டிய திருக்கிறது. நான் எழுதி முடித்தபடி நாடகம் துக்ககரமாகவே முடிகிறது. சாரங்கதரன் கொலையுண்டதுடன் நாடகம் முற்றுப் பெறுகிறது. அப்படியே அச்சிட்டுமிருக்கிறேன். நாடகக் கதையை அச்சிட்டு, வந்தவர்களுக்கெல்லாம் கொடுத்தோம்; அதன்மீது அதைப் பார்த்தவர்கள் (ஏறக்குறைய எல்லோரும் என்றே சொல்ல வேண்டும்) “இதென்ன இது? நாடகம் சோகத்துடன் முடிவு பெறலாமா? இது சரியல்ல” என்று கூறினதாக, என்னிடம் எங்கள் சபை அங்கத்தினர் வந்து சொன்னார்கள். பெங்களூரில் எங்களுக்குப் புதிதாய் நட்பினரான, எங்கள் கிரீன் ரூமுக்குள் வரத்தக்க சிலரும், “ஆம்! ஆம்! வாஸ்தவம்தான். அதை எப்படியாவது மாற்ற வேண்டும்” என்று வற்புறுத்தினர். அதன் மீது எங்கள் கண்டக்டராகிய திருமலைப் பிள்ளையை நான் கேட்க, அவரும் “அத்தனை பேர்கள் சொல்லும் பொழுது அவர்கள் இச்சைப் படி நாடகத்தைசுபகரமாய் முடித்து விடுகிறதுதானே” என்றார். அதன் மீது அவர்கள் மனம் கோணாதிருக்கச் செய்ய வேண்டுமென்று எண்ணினவனாய், மடிந்த சாரங்கதரனை பரமேஸ்வரன் வந்து உயிர்ப்பித்ததாகச் சில வார்த்தைகளைச் சேர்த்து, சுபமாக முடியும்படி செய்தேன். நாடகம் பார்க்க வந்திருந்தவர்களும் சந்தோஷமாய்ச் சென்றனர். ஆயினும் அவ்வாறு நான் அவர்களது வேண்டுகோளுக்கிணங்கியது எனக்குத் தவறெனத் தோன்றுகிறது. சாரங்கதரன் இறக்க நேரிடுவதுதான் சரியானது. பெண்டிர்க்குப் பேதைமை யென்பது ஓர் அணிகலன் என நமது முன்னோர்கள் கூறியபோதிலும் ஆண் மக்களுக்கு அது உசிதமாகாது. அவன் அறியாத்தனம் அவனை ஹானியிற் படுத்தியது; தர்மலோபமன்று. அன்றியும் தன் உயிர்த் தோழனான சுமந்திரன் வார்த்தைகளைக் கேளாது அவன் சித்ராங்கியிருக்குமிடம் சென்றது பெருந்தவறாகும். அதற்கு அவன் தன் உயிரைக் கொடுத்துப் பிராயச்சித்தம் செய்ய வேண்டியது நியாயமே. பிறகு இந் நாடகத்தை, ஒரு முறையோ இரண்டு முறையோ, வெளியூர்களில் ஆடிய பொழுது, மேற்சொன்னபடி சுபமாய் முடித்தபோதிலும் பெரும்பாலும் துக்ககரமான முடிவுடனேயே இதை முடித்திருக்கிறேன். நான் எழுதிய நாடகங்களில் நான் ஆடிய நாடகப் பாத்திரங்கள், பிறகு எங்கள் சபையில் அநேகர் ஆடியிருக்கின்றனர். ஆயினும் இந்த சாரங்கதர நாடகப் பாத்திரம் மாத்திரம், வேறெவரும் இதுவரையில் தமிழில் ஆடியதில்லை . இதுவரையில் இந்த சாரங்கதர நாடகமானது எங்கள் சபையோராலும், இதர சபைகளாலும், என்னிடம் வைத்திருக்கும் கணக்கின்படி 198 முறை ஆடப்பட்டிருக்கிறது. இந்த நாடகமானது நான் எழுதியபடி நாடகமாடுதலையே ஜீவனமாக உடைய கம்பெனிகள் ஆடுகிறதில்லை. இதற்கு முக்கியமான காரணம், கதையை நான் முன்பு குறித்தபடி வேறுவிதமாக மாற்றியெழுதியதே என எண்ணுகிறேன்; ஆயினும் பல பாலநாடகக் கம்பெனிகள்மாத்திரம் இதை நான் எழுதியபடி பன்முறை நடித்திருக்கின்றனர். அவற்றுளெல்லாம் மதுரை ஜெகன்னாத ஐயர் கம்பெனி ஆடியதுதான் என மனத்திற்குத் திருப்திகரமாயிருந்தது. அக் கம்பெனியார் சென்னையில் இந்நாடக்தை முதல் முறை என் அனுமதியின்மீது நடித்தபொழுது என்னை வரவழைத்தார்கள். நானும் எனது நண்பராகயி சி. ரங்கவடிவேலும் போயிருந்தோம். அப்பொழுது சித்ராங்கியாக நடித்த குமாரசாமி என்னும் சிறுவன் சி. ரங்கவடிவேலு நடிப்பது போலவே நடித்தான். நான் இதைக் கண்டு ஆச்சரியங்கொண்டவனாய், “இச்சிறுவன் நீ சித்ராங்கியாக நடிக்கும் பொழுது எப்பொழுதாவது பார்த்திருக்கிறானா என்ன?"வென்று என் பக்கத்திலுட்கார்ந்திருந்த ரங்கவடிவேலுவை வினவ, ரங்கவடிவேலு புன்னகையுடன் “அப்படியில்லை. இவன் என்னிடம் வந்து பாடங் கற்றுக் கொண்டான். உங்களிடம் அதை இதுவரையில் ரகசியமாக வைத்திருந்தேன்” என்று விடை பகர்ந்தது எனக்கு நன்றாய் ஞாபகமிருக்கிறது. இந்த ஜகன்னாத ஐயர் கம்பெனியில் சித்ராங்கி மாத்திரமன்று; சாரங்கதரனாக நடித்த நடேசனும் சுமந்திரனாக நடித்த சுப்பையா என்னும் சிறுவனும் இந்நாடகத்தை எங்கள் சபையில் நடத்துவது போலவே நடத்தினார்கள். இதற்குக் காரணம் என்னவென்று நான் விசாரித்ததில், நான் முன்பு கூறிய ம. கந்தசாமி முதலியார் என்பவர், இவர்கள் கம்பெனியைச் சேர்ந்து இவர்களுக்கு எங்கள் சபையில் இந்நாடகத்தை நடத்தும் முறையை யெல்லாம் கற்பித்ததாக அறிந்தேன். இந்த நாடகக் கம்பெனி யில் சில வருஷங்களுக்கு முன் முக்கியமான பாகங்கள் ஆடிக் கொண்டிருந்த சிலர் இளவயதிலேயே காலகதியடைந்தனர் என்பது இப்பொழுதும் எனக்குத் துக்கம் விளைவிக்கிறது.

பெங்களூரில் சாரங்கதர நாடகம் முடிந்தவுடன் நாங்கள் எல்லாம் மிகவும் சந்தோஷப்பட்டோம். அதற்கு முக்கியக் காரணம், வந்திருந்த ஜனங்கள் எல்லாம் நன்றாயிருந்ததெனக் கூறியதுமன்றி, அந்நாடகத்தில் அதிகப் பணம் வசூலானதே யாம். முதல் நாடகத்தைப் போல் குறைந்த வசூலாயிருந்தால், சபைக்கு நஷ்டமே ஆகியிருக்கும். பெங்களூருக்குப் போகக்கூடாது என்று ஆட்சேபித்த எதிர்க் கட்சியார் எங்களை ஏளனம் செய்திருப்பார்கள். அந்தப் பயமே எங்களுக்குப் பெரிதாயிருந்தது; சாரங்கதர நாடகத்தில் நல்ல வசூலான பின்தான் அந்த பயம் எங்களை விட்டகன்றது. மறுநாள் நாங்கள் விழித்தெழுந்தவுடன் வெங்கடகிருஷ்ண நாயுடும் நானுமாகத் தபால் ஆபீசுக்குப் போய் இந்த சந்தோஷகரமான சமாச்சாரத்தைத் தந்தி மூலமாகச் சென்னையிலுள்ள எங்கள் அங்கத்தினர்க்குத் தெரிவித்தோம். இந்த எங்கள் பெங்களூர்ப் பிரயாணம் ஈசன் கடாட்சத்தினால் சந்தோஷமாய் முடிந்ததற்காக நான் உவப்பை அடைந்ததற்கு ஒரு முக்கியமான காரணம் உண்டு. சென்னையிலிருந்து வெளியூருக்குப் போய் ஒரு அமெடூர் (Amateur) நாடக சபை நடித்துப் பெயர் பெற்றது இதுதான் முதன் முறை; இப்படி நாங்கள் முதன் முறை வெளியூருக்குப் போனதில் ஏதாவது கெடுதியாய் முடிந்திருந்தால், எங்கள் சபையார் வெளியூருக்குப் போவதைப்பற்றி மறுபடியும் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள் என்பது திண்ணம். இந்தப் பெங்களூர்ப் பிரயாணம் நன்மையாக முடிந்தது, எங்கள் சபையோரை அடிக்கடி வெளியூருக்குப் போகும்படி உந்தியதுமன்றி, எங்கள் சபையைப் பார்த்து இதர நாடக சபைகளையும் அவ்வாறு செய்யும்படி உந்தியதென்ப தற்குச் சந்தேகமில்லை. இந்தப் பெங்களூர்ப் பிரயாணத்தினாலுண்டான இரண்டாம் நன்மை எங்கள் சபையைப்போன்று ஒரு தமிழ் நாடகச் சபை பெங்களூரில் ஏற்படுத்தப்பட்டதேயாம்.

எங்கள் சபையை நாங்கள் சென்னையில் 1891ஆம் வருஷம் ஸ்தாபித்தபொழுது தமிழ் நாடகமானது சென்னை ராஜதானியில் எங்கணும் விருத்தியடைய வேண்டுமென்பது எங்கள் முக்கியக் கருத்துகளில் ஒன்று என்று வெளிப்படுத்தியதற்குச் சரியாக, தமிழ் நாடகத்தை சென்னை ராஜதானியில் அபிவிருத்தி செய்வதற்கு இது மிகவும் அனுகுணமாயிருந்தது. பிறகு எங்கள் சபையார்பன்முறை, கொழும்பு, யாழ்ப்பாணம், கும்பகோணம், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, மாயவரம், திருவனந்தபுரம், மதுரை முதலிய இடங்களுக்கும் போயிருக்கிறார்கள். அவ்விடங்களிலெல்லாம் பெங்களூரில் நடந்தது போல் எங்களைப் பார்த்து எங்கள் சபையைப் போன்ற தமிழ் நாடக சபைகள் ஸ்தாபிக்கப்பட்டதே, எங்கள் சபைக்குப் பெரிய கீர்த்தியாகக் கொண்டாடுகிறேன். எங்கள் சபையின் நாடகங்களைப் பார்த்து, அவ்விடங்களிலெல்லாமிருந்த கற்றறிந்தவர்கள், நாடகமாடுவதில் தவறில்லையென்றும், அதில் நன்மையுண்டென்றும் அறிந்தவர்களாய், எங்கள் சபையைப்போன்ற சபைகள்ஸ்தாபித்திருக்கின்றனர். அச்சபைகளும், அச்சபைகளிலிருந்துண்டான கிளைச் சபைகளும் இன்னும் அந்த ஊர்களிலெல்லாம் வளர்ந்து வருகின்றன. அச்சபையோர்களெல்லாம், எங்கள் சுகுண விலாச சபையை, தாயச் சபையாக ஒப்புக்கொள்ளுகின்றாரென்று நான் உறுதியாய்க் கூறலாம். பெங்களூரில் மேற்சொன்னபடி ஸ்தாபிக்கப்பட்ட நாடக சபையானது எங்கள் சபையின் உத்தரவின்மீது அதன் கிளைச் சபையாகவே (Branch Sabha) ஸ்தாபிக்கப்பட்டது. இக் கிளையை ஸ்தாபித்து அதற்காக மிகவும் உழைத்தவர்கள் சி.கே. ஷண்முகராஜ செட்டியார், ராமாநுஜ முதலியார், கோவிந்தராஜ முதலியார், எம்.டி. நாராயணன், மகாதேவ முதலியார் முதலியவர்கள். மூன்று நான்கு வருஷங்கள் இக்கிளைச்சபை ஆடியிருக்கிறது. இவர்கள் முதல் முதல் ஆட ஆரம்பித்தபொழுது இவர்களுக்குள் ஸ்திரீவேஷம் தரிக்கத் தக்கவர்கள் இல்லாதிருந்தபடியால், சென்னையிலிருந்து, எங்கள் அங்கத்தினருள் ஒருவராகிய அ. கிருஷ்ணசாமி ஐயரைப் பன்முறை பெங்களூருக்கு நாடகமாட அனுப்பியிருந்தோம். சில வருஷங்களுக்குப் பிறகு இக் கிளைச்சபையானது யாது காரணம் பற்றியோ நசித்துவிட்டது. நான் சென்ற வருஷம் பெங்களூக்கு, அங்கு வாழ்க்கைப்பட்டிருக்கும் என் குமாரத்தியைப் பார்ப்பதற்காகப் போனபொழுது, விசாரித்ததில், பெங்களூரில் தமிழ்ச் சபைகள் ஒன்றும் இருப்பதாக அறிய வில்லை. இது எனக்கு மன வருத்தத்தை உண்டுபண்ணிற்று. பெங்களூரில் அனேக தமிழர்கள் குடியிருக்கின்றனர்; இருந்தும் கன்னட நாடக சபைகளும் ஆங்கில நாடக சபைகளும் இருக்கின்றனவேயொழிய தமிழ் நாடக சபையில்லை. அங்குள்ள தமிழ் அபிமானிகள் இக்குறையைச் சீக்கிரம் தீர்ப்பார்களென்று இதை எழுதலானேன்.