நாடக மேடை நினைவுகள்/பன்னிரண்டாம் அத்தியாயம்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

பன்னிரண்டாம் அத்தியாயம்

1895ஆம் வருஷம் வரையில் தம்புச் செட்டித்தெருவில் விஜயரங்கம் மஹாராஜாவின் பெண்கள் பாடசாலையில் இருந்த எங்கள் சபையானது, அவ்வருஷத்தின் முடிவில் சில மாதங்கள் முத்தியாலுப்பேட்டை பள்ளிக்கூடத்தில் இருந்து பிறகு தம்புச்செட்டி தெருவிலேயே, தற்காலம் ஒ. கந்தசாமி செட்டியார் இருக்கும் வீட்டிற்கு மாற்றப்பட்டது. இந்த வீட்டின் மெத்தையில் ஒரு பாகம் வாடகைக்கு நாங்கள் எடுத்துக் கொண்டபடியால், தினம் சபையின் அங்கத்தினர் சபைக்கு வந்துபோக இடமுண்டாயிற்று. எங்கள் சபையின் வளர்ச்சியில் இதை இரண்டாவது பிரிவாகக் கொள்ளலாம். இந்தப் புது வீட்டில் எங்கள் சபை கிரஹப்பிரவேசசடங்கை என் தமயனார் ப. ஐயாசாமி முதலியார் எம்.எ.பி.எல். 1896ஆம் வருஷம் மார்ச்சு மாசம் 11ஆம் தேதி நடத்தி வைத்தார். இது முதல் சாயங்காலங்களில் சதுரங்க ஆட்டம், சீட்டாட்டம் முதலியன சபையில் அங்கத்தினருடைய சௌகர்யத்திற்காக ஏற்படுத்தப்பட்டது. அன்றியும் இதுவரையில் காரியதரிசியும் பொக்கிஷ தாரும் ஒருவரே இருந்ததை மாற்றி, காரியதரிசி வேறு பொக்கிதார் வேறாகப் பிரிக்கப்பட்டது. அன்றியும் கொஞ்சம் கொஞ்சமாக எங்கள் சபைக்கு வேண்டிய நாற்காலிகள் முதலியன வாங்க ஆரம்பித்தோம். எங்கள் சபை மற்ற சபைகளைப்போல் அல்லாமல் இத்தனை வருஷம் வாழ்ந்து வந்ததற்கு முக்கியக் காரணம், நாங்கள் இவ்வாறு கையிருப்புக் கேற்றபடி செலவழித்து, “சிறுகக் கட்டிப் பெருக வாழ்” என்னும் பழமொழியினைக் கைப்பற்றி நடந்ததேயாம் என்று நான் உறுதியாய்க் கூறலாம். எங்கள் சபையைப் பார்த்து ஆரம்பிக்கப்பட்ட அநேகம் சபைகள் அழித்து போனதற்கு ஒரு முக்கியக் காரணம், அவைகளெல்லாம் வரவுக்கு மிஞ்சின செலவு செய்ததே என்று நான் நம்புகிறேன். எங்கள் சபை முதலில் ஆரம்பித்த பொழுது மாதாந்தரக் கட்டணம் 4 அணாவாக இருந்தது. இவ்வருஷம் முதல் 8 அணாவாக உயர்த்தினோம். சபையின் செலவு கொஞ்சம் அதிகமாகவே, வரும்படியையும் அதிகப்படுத்த வேண்டிய மார்க்கம் தேடினோம்.

மேற்சொன்ன ஏற்பாடுகளன்றி இவ்வருஷம் எங்கள் சபையார் பல புதிய விஷயங்களை ஆரம்பித்தனர். அவற்றுள் முக்கியமானது எங்கள் சபையின் ஆதாரணையிலும் செலவிலும் ‘இந்தியன் ஸ்டேஜ்’ என்ற பெயருடன் ஒரு மாதாந்திரப் பத்திரிகையைப் பிரசுரிக்க ஆரம்பித்ததே. இதற்கு, பத்திரிகைகளுக்கு எழுதுவதில் அப்பொழுதே தேர்ச்சியடைந்திருந்த எனது பால்ய நண்பராகிய வி. வி. ஸ்ரீனிவாச ஐயங்காரைப் பத்திராதிபராக ஏற்படுத்தினோம். பத்திரிக்கையானது ஆரம்பிக்கப்பட்டு சில மாதங்கள் நன்றாய் நடந்தேறிய போதிலும், அதற்கு வேறு யாருடைய பரிபாலனமும் இல்லாதபடியால், சீக்கிரத்தில் நசித்துவிட்டது. அப்படி நசித்தது மிகவும் துக்ககரமான விஷயமே. சில வருஷங்களுக்குப் பிறகு மறுபடியும் உத்தாரணம் செய்தபோதிலும் மறுபடியும் சில மாதங்களிருந்து உயிர் நீத்தது. இந்த இரண்டு முறையும் இப் பத்திரிகையானது ஆங்கிலத்தில் பதிப்பிக்கப்பட்டது. எனது நண்பருடைய பிரயத்தனமெல்லாம் முடிவில் பயன்படாமற் போனது, தென் இந்தியாவின் தௌர்ப்பாக்கியமே என்று நான் உறுதியாய்க் கூறுவேன். இந்தப் பத்திரிகை நடந்தபொழுது எங்கள் சபையைப்பற்றி நான் ஆங்கித்தில் எழுதிய சில வியாசங்கள் இப்பொழுது இந்த நாடக மேடை நினைவுகள் எழுதுவதற்கு எனக்கு மிகவும் உபயோகப்பட்டன.

அன்றியும் இவ்வருஷம் டிசம்பர்மாசம் முக்கோடி ஏகாதசி அன்று சாரங்கதரன் என்னும் நாடகத்தை எங்கள் சபையார் மறுபடி ஆடிய பொழுது, “ருக்மாங்கத நாடகத்தை”யே தோற்றக் காட்சிகளாகக் காட்டினோம். இதை ஆங்கிலத்தில் “டாப்ளோவைவாங்” (Tableau Vivantes) என்று சொல்வார்கள்; இதை மௌனக் காட்சி என்று கூறலாம். இதுதான் முதன் முதல் இத்தகைய காட்சிகள் தமிழ் நாடக மேடையில் காட்டப்பட்டது. இதை நாங்கள் ஆரம்பித்ததற்கு ஒரு வேடிக்கையான காரணம் உண்டு. சாதராணமாக, சாயங்காலங்களில் நானும் எனது பால்ய நண்பர் வி.வி. ஸ்ரீனிவாச ஐயங்காரும் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கும்பொழுது, “என்ன சம்பந்தம், போட்ட நாடகங்களையே போட்டுக் கொண்டிருப்பதா? ஏதாவது புதியதாகச் செய்” என்று தூண்டினார். ‘அப்படியே ஆகட்டும்’ என்று சொல்லி, வீட்டிற்குப் போனதும் யோசனை செய்து பார்த்தேன். முக்கோடி ஏகாதசிக்கு சாரங்கதர நாடகத்துடன், ருக்மாங்கத சரித்திரத்தையும் நாடகமாக எழுதினால் நன்றாயிருக்கும் என்று முதலில் யோசித்தேன். ஆயினும் நாடக தேதிக்குள் அதை எழுதி முடித்து ஒத்திகை போடுவது அசாத்தியமென யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது, நான் சில வருஷங்களுக்குமுன் ஆங்கிலேயர்கள் தோற்றக் காட்சிகளாகக் சில கதைகளைக் காட்டியது ஞாபகம் வந்தது. உடனே ருக்மாங்கத சரித்திரத்தை அப்படி தோற்றக் காட்சிகளாகக் கஷ்டமின்றிக் காட்டலாமே! என்று யோசித்தேன். மறுநாள் எனது நண்பருடன் கலந்து பேசினபொழுது அவரும் நன்றென ஆமோதித்தார். “தோற்றக் காட்சி அல்லது மௌனக்காட்சி” என்றால் இன்னதென எனது இளைய நண்பர்கள் சிலருக்குத் தெரியாமலிருக்கலாம். ஆகவே அதைச் சற்று விவரித்து எழுதுகிறேன். ஒரு கதையை அப்படிக் காட்டுவதென்றால், அக்கதையின் முக்கியமான காட்சிகளை எடுத்துக்கொண்டு, ஒவ்வொரு காட்சியிலும் வரவேண்டிய ஆக்டர்களை, அக்காட்சிக்கேற்றபடி, முக அவயவ அபிநயங்களுடன் பதுமைகள் போல் அசையாமலிருக்கும்படி குறைந்தபட்சம் இரண்டு நிமிஷமாவது நிறுத்திவைப்பதுதான்.இதைப்படிக்கும் எனது நண்பர்கள் இதில் என்ன கஷ்டம், மிகவும் சுலபம்தானே என்று எண்ணிவிடலாம்.

ஏதாவது ஒரு நாடகத்தில் ஒரு காட்சியை எடுத்துக் கொண்டு அக்காட்சியில் வரவேண்டிய ஒரு நாடகப் பாத்திரமாகத் தங்களைப் பாவித்து அக்காட்சியில் அப்பாத்திரம் என்ன முகப்பார்வையுடன், என்ன அங்க அபிநயத்துடன் நிற்க வேண்டுமென்பதை மனத்திற்கொண்டு, அப்படியே இரண்டு நிமிஷம்வரை அசையாது, மாறாது நின்று பார்த்தால் அப்பொழுதுதான் இதன் கஷ்டம் தெரியும். எங்கள் சபையின் ஆக்டர்களை முதன் முறை இவ்வாறு நிறுத்திவைக்க எனது பால்ய நண்பரும் நானும் பட்ட கஷ்டம் எங்களுக்குத் தெரியும். ருக்மாங்கத சரித்திரத்தை இப்படித் தோற்றக் காட்சிகளாக நடிக்க எங்கள் ஆக்டர்களுக்கு நாங்கள் ஒத்திகை சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது தூரத்தில் நின்று பார்த்துக் கொண்டிருந்த அப்பு என்னும் எங்கள் சபை வேலையாள், மறு நாள் என்னிடம் மெல்ல வந்து, இப்படித்தோற்றக்காட்சிகள் மேடையின்மீது காட்டும் பொழுது, மேடையின் முன்புறமாக ஒரு கொசுவலையை விட்டுக்காட்டினால், படங்கள் கண்ணாடியிலிருப்பதுபோல் ஜனங்களுக்குத் தெரியும் என்று சொன்னான். உடனே அவன் சொன்னது நல்ல யுக்தி என்று எனக்குத் தோன்றியது. பிறகு நான் இதை ஸ்ரீனிவாச ஐயங்காருக்குச் சொல்ல அவரும் மிகுந்த சந்தோஷத்துடன் ஏற்றுக்கொண்டார். அப்பு சொன்னபடியே ஒரு கொசு வலையை அரங்கத்தின் முன்பாக விட்டு, நாங்கள் இந்த ருக்மாங்கத சரித்திரத்தைத் தோற்றக் காட்சிகளாகக் காட்டிய பொழுது வந்திருந்தவர்களெல்லாம் மிகவும் நன்றாயிருந்ததென மெச்சினார்கள். ஆயினும் இது புதியதாயிருந்தபடியால், அநேகர், பொம்மைகளுக்கு வேஷந்தரித்து, இப்படிக் காட்டுகிறார்களா என்னவென்று வினவினர். அரங்கத்திற்கு உள்ளே வந்து பார்த்த பிறகுதான் பொம்மைகள் அல்ல, ஆக்டர்கள் தான் அவ்விதம் நிற்கின்றனர் என்பதை அறிந்தனர். இதைப் பற்றிய இன்னொரு வேடிக்கை எனக்கு ஞாபகம் வருகிறது. அன்றைத் தினம் நாடகங்களுக்காக, சில தினங்களுக்கு முன்னதாகவே எங்கள் வழக்கம் போல், சுவர்களில் நோடீசுகளை ஒட்டியபொழுது, அவற்றுள் “சாரங்கதரா (in Tamil) ருக்மாங்கதா (in Tableau)” என்று அச்சிட்டிருந்தோம். அதைக் கண்ட ஒருவர் ஸ்ரீனிவாச ஐயங்காரை “சாரங்கதரா நாடகத்தை தமிழில் நடிக்கப்போகிறீர்கள், சரிதான்; ருக்மாங்கத நாடகத்தை எந்தப் பாஷையில் நடிக்கப்போகிறீர்கள்?” என்று வினவினார்! Tablean என்பது ஒரு பாஷை என்று எண்ணிக் கொண்டார்! இதில் முக்கியமான அம்சம் என்னவென்றால், அப்படிக் கேட்டவர், கவர்ன்மெண்டு இலாகாவில், ஆங்கிலத்திலிருந்து தமிழில் கவர்ன்மெண்ட் பிரசுரங்களை மொழிபெயர்க்க வேண்டிய உத்யோகஸ்தர்!

மேலும் இந்த 1896ஆம் வருஷம் ஸ்தாபிக்கப்பட்ட எங்கள் சபையின் தெலுங்குப்பிரிவு, “அமித்ரமித்ரா” என்னும் தெலுங்கு நாடகத்தை நடத்தியது. முன் வருஷத்தில் நடத்திய தெலுங்கு நாடகத்தின் பெயர், “ராஜஹம்சா”. இந்த இரண்டு தெலுங்கு நாடகங்களும், எங்கள் சபைக்கு அப்பொழுது காரியதரிசியாயிருந்த முத்துக்குமாரசாமி செட்டியார் எழுதியவை. தெலுங்குப் பிரிவு ஒன்றை சபையில் ஸ்தாபித்த பின் தெலுங்கு அங்கத்தினர் பலர் சேர்ந்தனர். முதல் தெலுங்கு நாடகமாகிய ராஜஹம்சா என்னும் நாடகத்தைப் பற்றி விசேஷமாகக் கவனிக்கத்தக்கது எனக்கு அவ்வளவாக ஞாபகமில்லை. ஒன்றுமாத்திரம் ஞாபகமிருக்கிறது. இந்த நாடகத்தின் ஒத்திகைக ளெல்லாம் பூரணமாகும் பொழுது கே. ஸ்ரீநீவாசன் என்பவர் ஒருவர் அங்கத்தினராகச் சேர்ந்தார்; இவர் தெலுங்கா; கம்பீரமான உருவமும், கொஞ்சம் சங்கீத ஞானமும் உடைய வராயிருந்தார். இவருக்கு ஏதாவது பாத்திரம் கொடுக்க வேண்டுமென்று விரும்பி, இவருக்காக நாடக ஆசிரியராகிய ஊ. முத்துக் குமாரசாமி - செட்டியார், “பாரதிபிரசாத்” என்கிற பாத்திரத்தைச் சிருஷ்டித்துக் காட்சிக்கும் காட்சிக்கும் இடையே இவரைப் பாடிக்கொண்டு போகும்படிச் செய்தார். அது முதல் நாடகத்திற்குச்சம்பந்தமில்லாத ஒருவன் நாடகமேடையின் மீது தோற்றுவானாயின், “இவன் என்ன பாரதி பிரசாத்தா?” என்று ஏளனம் செய்வோம். இந்த கே. ஸ்ரீனிவாசன் ‘அமித்ரமித்ரா’ என்னும் இவ்வருஷத்திய நாடகத்தில் கதாநாயகனாகத் தோன்றி மிகவும் நன்றாய் நடித்தார். இவரிடமிருந்த முக்கியான நாடக மேடைக்கு அதி அவசியமானகுணம் ஒன்று என்னவென்றால், ஒரு பாட்டைப் பாடும்பொழுது அதன் வார்த்தைகள் எல்லாம் சபையோர் தெளிவாகக் கேட்டு அர்த்தம் அறியும்படி, ஸ்பஷ்டமாகப் பாடுவார் என்பதே.

இது ஓர் அரிய குணம் என்று எண்ணுகிறேன். சாதாரணமாக ஆக்டர்கள் மேடையின்மீது பாடும்பொழுது, பல்லவி, அது பல்லவி, சரணம், விருத்தம் முதலியவைகளில் சங்கீதத்தை விஸ்தரித்து சாஹித்யத்தைக் கேட்பவர்கள் அறியாதபடி பாடுவது வழக்கமாயிருந்தது. இப்பொழுதும் பெரும்பாலும் வழக்கமாயிருக்கின்றது. இது பெரும் தவறென எண்ணுகிறேன். சங்கீதத்தை மாத்திரம் கேட்க வேண்டுமென்றால் சாதாரணக் கச்சேரி சங்கீதமே போய்க் கேட்க வேண்டும். இதனால் நாடக மேடையில் சங்கீதமே கூடா தென்று நான் சொல்ல வரவில்லை. என்னுடைய அபிப்பிராயம் என்னவென்றால், நாடக மேடையில் சாஹித்தியத்திற்கே பிரதான இடத்தைக் கொடுத்து, சாஹித்யம் பலரும் அறியும்படியாகப் பாட வேண்டுமென்பதே; ராக பாவத்தைக் காட்டவேண்டியது வெகு முக்கியமே; அதை விட்டு, ராக ஆலாபனை செய்ய ஆரம்பித்து, அந்த ஆலாபனையில் பாடும் பாட்டின் வார்த்தைகள் எங்கோ மறைந்து போகும்படிச் செய்வது நாடகத்திற்கு ஒழுங்கல்ல; முக்கியமாக நாடகமாடும் பொழுது நாடகப் பாத்திரம் கூறும் வசனங்களுக்கோ பாடும் பாட்டிற்கோ தக்கபடி முக அபிநயம் அமைந்திருக்க வேண்டும்; அப்படிச்சரியாக அமைந்திருக்கிறதா என்று சபையோர் பார்த்து ஆனந்தப்பட, நாடகப் பாத்திரத்தின் வாயினின்றும் வரும் வார்த்தைகளை அவர்கள் நன்றாகக் கேட்க வேண்டும். அப்படி ஸ்பஷ்டமாக அவர்கள் செவியில் வார்த்தைகள் கேட்கா விட்டால் என்ன பிரயோஜனம்?

நான் மேலே குறித்தபடி பாட்டுகளை ஸ்பஷ்டமாகப் பாடி சபையோரைக் களிக்கச் செய்தவர் இந்த கே. ஸ்ரீநிவாசன் என்பவரே. இவருக்குச் சங்கீதத்தில் மற்றும் சிலரைப்போல அவ்வளவு பாண்டித்ய மில்லாவிட்டாலும், இவ்வாறு ஒழுங்காய்ப் பாடியதனால் இவர் சங்கீதமானது சபையோரால் மிகவும் சிலாகிக்கப்பட்டது.

இந்த 1896ஆம் வருஷம் எங்கள் சபையார் முதல் முதல் ஆங்கிலத்திலும் நாடகமாட ஆரம்பித்தனர். இவ்வருஷம் மே 2ஆம் தேதி உலகெங்கும் பெயர்பெற்ற ஷேக்ஸ்பியர் மஹாநாடகக் கவி எழுதிய “ஜூலியஸ் சீசர் “ (Julius Caeser) என்னும் நாடகத்தில் சில காட்சிகளும், “ஜெயசந்திரா'” என்னும் ஒரு சிறு தெலுங்கு நாடகமும், “லீலாவதி சுலோசனா” நாடகத்தில் சில காட்சிகளும் ஒன்றாய் நடித்தோம். “ஜூலியஸ் சீசர்” என்னும் நாடகத்தில், மற்றவர்களெல்லாம் தங்களால் முடியாது என்று மறுத்தபடியால், நான் கதாநாயகனான புரூடஸ் (Brutus) என்பவரின் மனைவியாகிய போர்ஷியா (Portia) வேஷம் பூண்டேன். இதுதான் ஆங்கிலத்தில் முதன் முறை ஸ்திரீவேஷம் தரித்தது; இதுவே கடைசி முறையுமாகும். நான் ஸ்திரீவேஷம் தரிக்கவேண்டுமென்று இச்சை கொண்டு இதைத் தரித்தவனன்று; வேறொருவரும் அப்பாத்திரத்தை எடுத்துக் கொள்ள முடியாதென்று கைவிட்டபடியால் நான் இதைப் பூணும்படி நேர்ந்தது. அன்றியும் அச்சமயம் எனக்கு ஒருவித இருமல் வியாதியிருந்தது. அதற்காக என் மார்பெல்லாம் அக்னிப் பிளாஸ்திரியிட்டுக் கொப்பளித் திருந்தது; அதன் பேரில் பஞ்சை வைத்துக்கட்டி, என் ஆடையைப் பூணவேண்டியவனாயிருந்தேன். இந்தச் சங்கடத்துடன் நடித்தது எனக்குத் திருப்திகரமாயில்லை ; எனது நண்பர்கள் நான் நடித்தது நன்றாயிருந்ததெனக் கூறிய போதிலும், அதை முகஸ்துதியாகக் கொண்டேனேயொழிய வாஸ்தவமாக ஏற்கவில்லை. என்னுடன் இந்த ஆங்கில நாடகத்தில் கதாநாயகனாக நடித்தது காலஞ்சென்ற பூண்டி ரங்கநாத முதலியாருடைய மூன்றாவது குமாரனாகிய கிருஷ்ணசாமி என்னும் சிறுவன். அவன் மிகவும் நன்றாய் நடித்ததாக எல்லோரும் புகழ்ந்தனர். என்னுடைய அபிப் பிராயமும் அப்படியே. ஆங்கிலத்தில் பேசுவதில், வெள்ளைக் காரர்களைப்போல் உச்சரிப்புடையவர் என்று பூண்டி ரங்கநாத முதலியார் பெயர்பெற்றிருந்தார். அந்தக் குணத்தை அவரது பிள்ளைகளுள் கிருஷ்ணசாமி வஹித்திருந்தான். இந்தப் பிள்ளைக்கு அப்பொழுது சுமார் 17 அல்லது 18 வயது இருக்கும்; பூ. ரங்கநாத முதலியாரது பிள்ளைகளுள் எல்லாம் இவன்தான் மிகுந்த புத்திசாலி; பச்சையப்பன் கலாசாலையில் தன் வகுப்புகளில் முதலாக இருந்து தனது உபாத்தியாயர்களுடைய நன்மதிப்பைப் பெற்றவன். இப்படிப்பட்ட நற்குணமும் நன்னடக்கையும் உடைய வாலிபன், இது நடந்த சில மாதங்களுக்குள், காலகதியடைந்தான். அதுவும் அவன் மடிந்த தினம், எங்கள் சபையோர் வருஷாந்திர கொண்டாட்டம் கொண்டாடும் நாள்! கருணையங் கடவுளின் இச்சை அவ்வாறு இருந்தது! பேதை மாந்தர்களாகிய நாம் இதற்கு என்ன சொல்வது? ஆங்கிலத்தில், ஸ்வாமியானவர் இவ்வுலகில் யார்மீது பிரியம் அதிகமாக வைக்கிறாரோ, அவர்களைத் தன்னிடம் சீக்கிரத்தில் அழைத்துக்கொள்ளுகிறார் என்று ஒரு வாக்கியமுண்டு. அதன்படி இங்கு நடந்தது போலும்.

1896ஆம் வருஷம் எங்கள் சபையின் சரித்திரத்தில் ஒரு முக்கியமான வருஷம் என்று இன்னொரு விதத்திலும் சொல்லவேண்டும். இவ்வருஷந்தான் முதல் முதல் எங்கள் சபையின் தினக் கொண்டாட்டம் ஆரம்பிக்கப்பட்டது. ஜூலை மாதத்தில் எங்கள் சபை ஏற்படுத்தப்பட்டதால் அந்த மாதம் இக்கொண்டாட்டத்தை ஆரம்பித்தோம். இவ்வருஷம் ராஜா சர் சவலை ராமசாமி முதலியார் சத்திரத்தின் மேல்மாடியில், காலை முதல் அங்கத்தினரெல்லாம் சேர்ந்து, சிற்றுண்டி, உணவு முதலியன வெல்லாம் அருந்தி, சாயங்காலம் விக்டோரியா பப்ளிக் ஹாலில் கூட்டம் வைத்துக் கொண்டோம். இந்த முதல் கூட்டத்தில் அக்கிராசனம் வகித்தவர் காலஞ்சென்ற வித்யா வினோதி ராவ்பகதூர் பி. அநந்தாச்சார்லு C.I.E. அவர்கள். இவ்வருஷம் முதல் தற்காலம் வரையில், இந்த வருஷாந்தரக் கொண்டாட்டங்கள் நிறைவேறி வருகின்றன. இவைகளைப் பற்றி சவிஸ்தாரமாய்ப் பிறகு நான் எழுத வேண்டி வரும்.

இந்த வருஷத்தில்தான் நான் “மனோரமா” அல்லது “இரண்டு நண்பர்கள்” என்னும் ஒரு புதிய நாடகத்தை எழுதி முடித்தேன். இது நான் எழுதியிருக்கும் நாடகங்களில் ஒரு முக்கியமான நாடகமாகையால் இதைப்பற்றிக் கொஞ்சம் விவரமாய் எழுத விரும்புகிறேன்.

இந்த நாடகத்திற்கு “மனோரமா” என்று ஒரு பெயர் வைத்தும், அப்பெயர் தற்காலம் வழங்காது, “இரண்டு நண்பர்கள்” என்னும் மற்றொரு பெயரே வழங்கி வருகிறது. இந்நாடகத்தை எனதாருயிர் நண்பராகிய சி. ரங்கவடிவேலுக் கென்றே முக்கியமாக எழுதினேன். அவர் நடித்த கதாநாயகியாகிய “மனோரமா” என்னும் பெயரையே நாடகத்திற்கும் வைத்தேன். தான் கதாநாயகியாக நடிக்க வேண்டு மென்று அவர் என்னைக் கேட்டுக் கொள்ள, நாடகத்தில் நடிக்கும் அவருடைய சக்திக்கேற்றபடி இந்நாடகத்தை எழுதலானேன். மனோரமா என்னும் நாடகப் பாத்திரம் அவருக் கென்றே எழுதப்பட்டது என்பதை என் நண்பர்கள் அனைவரும் அறிவார்கள். எனது நண்பர் தென் இந்திய மேடையின் மீது நடித்துப் பெயர் பெற்ற நாடகப் பாத்திரங்களுக்குள் இது ஒரு முக்கியமானது.

இந்நாடகத்தை நான் எழுதியபொழுது ஒவ்வொரு காட்சியாக நான் எழுதி முடித்ததும், எனது நண்பர் அதை வாங்கிக் கொண்டு போய்ப் படித்து வருவது வழக்கம்; அப்படி வாசித்துக்கொண்டு வந்தவர், கடைசிக் காட்சியை எப்படி முடிக்கப் போகிறீர்கள்? என்று என்னை வினவினார். அதற்கு நான் இந்நாடகம் சோகரசமாகத்தான் முடிய வேண்டும், அப்படித்தான் முடிக்கப் போகிறேன் என்று கூறினேன்.

அதற்கிசையாது, அதை எப்படியாவது மங்களகரமாய் முடிக்க வேண்டுமென்று மன்றாடி, கதாநாயகனான சுந்தராதித்யன் இழைத்த பிழைக்காக அவன் கடைசியில் மரணமடைய வேண்டியதே என்று நான் எவ்வளவோ எடுத்துக்கூறியும் கேளாமற் போகவே, அவரது வேண்டுகோளுக்கிசைந்து மங்களகரமாய் முடித்தேன். இந்நாடகக் கதை, இதைப் படிக்கும் அனைவருக்கும் தெரிந்திருக்குமென நம்பி அதை வரையாது விடுத்து, எப்படி மங்களகரமாய் முடித்தேன் என்பதை மாத்திரம் இங்கு எழுதுகிறேன். கடைசிக் காட்சியில் ஜெய பாலன் சுந்தராதித்யனைக் கொல்ல வாளை ஓங்கும் பொழுது, அவன்மீது பழிவாங்க வேண்டுமென்று அவனைத் தேடிக் கொண்டிருந்த சூரசேனன் அவனைக் கொல்கிறான்; மனோரமாவும் சுந்தராதித்யனும் தப்பிப் பிழைத்து மணம் செய்து கொள்கின்றனர். இப்படித்தான் 1896ஆம் வருஷம் நாங்கள் இந்நாடகத்தை ஆடியபொழுதும், பிறகு பலதரம், எனதாருயிர் நண்பர் சி. ரங்கவடிவேலு “மனோரமா"வின் பாத்திரத்தைப் பூண்டபோதும் ஆடி முடித்தோம். இவ்வாறு இந்நாடகத்தை முடித்தது. தவறென்று எனது நண்பர் வி.வி. ஸ்ரீனிவாச ஐயங்கார், மேலே நான் தெரிவித்த இந்தியன் ஸ்டேஜ் என்னும் பத்திரிகையில் வெளியிட்டார். அவர் எடுத்துக்காட்டிய குற்றம் நான் ஒப்புக்கொள்ள வேண்டியதே என்று கருதினவனாய், இந்நாடகத்தை நான் அச்சிட்ட பொழுது சோககரமாகவே முடித்தேன். அதாவது, ஜெயபாலன் சுந்தராதித்யனைக் கொல்ல ஓங்கிய கத்தியை, தன் காதலனைக் காப்பாற்றவேண்டி மனோரமா தன் மார்பிற்றாங்கித் தடுத்து, தன் உயிர் இழக்கிறாள். பிறகே ஜெயபாலனை சூரசேனன் கொல்கிறான். அதன்மீது மனோரமா இறந்த துயர் ஆற்றாது, சுந்தராதித்யன் நித்யானந்தனைக் கொண்டு தன்னுயிரைப் போக்கிக் கொள்கிறான். இவ்வாறு சோககரமாய் நாடகத்தை முடித்து அச்சிட்ட பிறகு, இந்நாடகத்தில் தான் ஆடமாட்டேன் என்று கூறி எனதாருயிர் நண்பர், தான் சாகுமளவும் இந்நாடகத்தை வெறுத்து, மனோரமா பாத்திரத்தை ஆடுவதை விட்டனர். இதுதான் இந்நாடகம் எங்கள் சபையோரால் பல ஆண்டுகளாக ஆடப்படாததற்குக் காரணம். பிறகு என்னாருயிர் நண்பர் இவ்வுலகை விட்டு மேலுலகத்திற்குச் சென்ற பிறகுதான், இப்போதைக்கு நான்கைந்து வருடங்களுக்கு முன்பாக, எனது நண்பர் சத்யமூர்த்தி ஐயர், எங்கள் சபைக்குத் தமிழ்க் கண்டக்டராய் வந்த பொழுது, இந்நாடகம் ஆடப்பட்டது. சி. ரங்கவடிவேலு நாடக மேடை மீது உயிர் துறக்கப் பயந்தவரன்று; பிறகு நான் எழுதிய ஷேக்ஸ்பியர் மகா நாடகக் கவியின் மிகச் சிறந்த நாடகமாகிய “ஹாம்லெட்” என்னும் நாடகத்தின் தமிழ் அமைப்பாகிய “அமலாதித்யன்” என்னும் நாடகத்தில், அபலையாக நடித்த பொழுது, நாடகத்தில் மரித்ததுமன்றி, அரங்கத்தின் பேரில் பாடையின் மீது தன்னை வளர்த்திச் சமாதியில் புதைக்கப்படவும் இசைந்திருக்கிறார். ஆயினும் இந்நாடகத்தில் மாத்திரம் சோககரமாய் முடித்தால் ஆடமாட்டேன் என்று ஆட்சேபித்தார். இதற்குக் காரணம், முதல் முதல் தான் கதாநாயகியாகத் தோன்றும் பொழுது கதை மங்களகரமாய் முடிய வேண்டுமென்று விரும்பினார்போலும். இது என் ஊகையேயாம். இதனுண்மையை மேலுலகில் நான் எனதா ருயிர் நண்பனை அடைந்த பிறகுதான், நான் அறியக்கூடும்! அவர் இவ்வுலகில் இருந்த பொழுது, இந்த மர்மத்தைப் பற்றி நானும் வற்புறுத்திக் கேட்டவனன்று, அவரும் எனக்குச் சொன்னவரன்று.

இந்த “இரண்டு நண்பர்கள்” எனும் நாடகமானது இது வரையில் என்னிடமுள்ள குறிப்பின்படி, என் அனுமதியின் மீது, 29 தரம் ஆடப்பட்டுள்ளது. இது நான் எழுதியுள்ள நாடகங்களுள் முக்கியமானதொன்றாகப் பலரால் அங்கீகரிக்கப்பட்டும், மற்ற நாடகங்களைப் போல் அதிக முறை ஆடப்படாததற்குக் காரணம், இது மேடையில் நடிப்பதற்குக் கடினமான தென்பதேயாம். முக்கியமாக, கதாநாயகனாகிய சுந்திராதித்யன் பாகம் நடிப்பதற்கு எளிதல்ல; இவன் நாடகத்தின் கடைசிக் காட்சிகளில் பித்தம் பிடித்தவனாகிறான்; இந்தக் காட்சிகளை நடிக்க நான் பட்ட கஷ்டம் கொஞ்சமல்ல; சென்னையில் பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்குப்போய் பைத்தியக்காரர்கள் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்று கவனித்தேன்; பிறகு வாஸ்தவமாகப் பித்தம் பிடித்தவர்கள் எவர்களேனும் அகஸ்மாத்தாய் என் கண்ணெதிர்ப்பட்டால் அவர்களைப் பின் தொடர்ந்து அவர்கள் நடந்து கொள்ளும் விதத்தையெல்லாம் கற்றுணர்ந்தேன்; இவ்வாறு இரண்டு மாசங்கள் நான் பிரயத்தனப்பட்ட பிறகுதான், அரங்கத்தின் மீது அக்காட்சிகளை நடிக்க எனக்குத் தைரியமுண்டாயிற்று. எனக்குத் தெரிந்த வரையில் எனது நண்பராகிய தென் இந்திய ரெயில்வே அசிஸ்டென்ட் டிராபிக் சூபரின்டெண்டாகிய எப்.ஜி. நடேச ஐயர் ஒருவர்தான் இதை, எனக்குப் பின் நடிக்க முயன்றிருக்கின்றார். எங்கள் சபையில் இப்பாத்திரத்தை வேறொருவரும் இது வரையில் நடித்ததில்லை; இக்காரணம் பற்றியே, நாடகமாடுவதையே ஜீவனமாகக் கொண்டும் நடிக்கும் நாடகக் கம்பெனியார்களும், பால நாடக சபையார்களும் இந்த நாடகத்தின் அருகிற் போவதில்லையென நம்புகிறேன்.

இந்நாடகமானது எங்கள் சபையோரால் 1896ஆம் வருஷம் ஆகஸ்டு மாசம் 8ஆம் தேதி முதன் முதல் ஆடப்பட்டது. அச்சமயம் மேலே குறித்தபடி சி. ரங்கவடி வேலு மனோரமாவாகவும், நான் சுந்தராதித்யனாகவும் நடித்தோம். அ. கிருஷ்ணசாமி ஐயர் சத்யவதி வேடம் பூண்டார். காலஞ்சென்ற எம். வை: ரங்கசாமி ஐயங்கார் சுகுமாரனாக நடித்தார். அதுவரையில் ஸ்திரீவேஷம் பூண்டு கொண்டிருந்த ஜெயராம் நாயகர், ஜெயதேவனாக ஆண் வேஷம் பூண்டனர். ஹாஸ்யத்திற் கிடங்கொடுக்கும் பாகங்களாகிய நித்யானந்தன், சூரசேனன், குருநாதன் பாகங்கள் முறையே, ராஜகணபதி முதலியார், துரைசாமி ஐயங்கார், ஷண்முகம் பிள்ளை இவர்கள் மூவரால் எடுத்துக்கொள்ளப்பட்டன.

இனி அன்றைத் தினம் இந்நாடகத்தில் நடித்த முக்கியமான ஆக்டர்களைப்பற்றிக் கொஞ்சம் எழுதுகிறேன். இந்நாடகத்தில் தான் என்னாருயிர் நண்பர் முதல் முதல் பெரும்புகழ் பெற்றார் என்று கூற வேண்டும். இவர் எடுத்துக்கொண்ட மனோரமா எனும் நாடகப் பாத்திரம் நடிப்பதற்குக் கடினமானது; அநேக ரசபாவங்கள் அமைந்தது; அவற்றையெல்லாம் உண்மையில் உணர்ந்து நடிப்பது சுலபமல்ல. இப்படிப்பட்ட பாத்திரத்தில் பெயர் பெற்று, சபையோரையெல்லாம் சந்தோஷிக்கச் செய்தது எனது நண்பருடைய பாக்கியமாம். இது முதல் ஏறக்குறைய இருபத்தேழு வருஷங்கள் எங்கள் சபையில் நான் எழுதிய தமிழ் நாடகங்களில் இவர் கதாநாயகியாக நடித்தார் என்பது அனைவரும் அறிந்த விஷயமே.

சத்யவதியாக நடித்த கிருஷ்ணசாமி ஐயரும் மிகவும் நன்றாக நடித்தார். இப்பாத்திரம் சில நாட்களிலேயே வந்த போதிலும் சரியாக நடிப்பது சுலபமல்ல நான் எனது நாடகங்களில் வரைந்துள்ள ஸ்திரீ பாகங்களில் இது ஒரு முக்கியமான பாத்திரமாம். ஹாஸ்ய பாகத்திற்காக எழுதிய நித்யானந்தன், சூரசேனன், குருநாதன் ஆகிய மூன்று பாத்திரங்களும் வந்திருந்தவர்களுக்கு இடைவிடா நகைப்பை உண்டு பண்ணின. இந்நாடகத்தில்தான் முதன் முதல், எனது நண்பராகிய, பிறகு எங்கள் சபையின் முக்கியமான ஆண் வேடமும் ஸ்திரீவேடமும் தரித்த பெருமை வாய்ந்த, ஸ்ரீநிவாச ராகவாச்சாரி நடித்தார். இவர் அக்காலம் ஒரு சிறு பிள்ளையாயிருந்தார். அன்றியும் இப்பொழுது போல் அல்லாமல் மிகுந்த மெலிந்த தேகமுடையவராக இருந்தார். இவருக்கு இந்நாடகத்தில் வரும் இரண்டு தோழிகளின் பாகமாகிய கமலினி, விமலினி கொடுத்திருந்தேன். இவர் அன்று இந்நாடகத்தில் நடித்ததைக் கண்டவர்கள், இவர் இனிமேல் சங்கீத சாஹித்யங்களில் வல்லவராகி, கதா நாயகனாகவும், கதா நாயகியாகவும் பல நாடகங்களில் நடிப்பார் என்று ஒருவரும் எண்ணியிருக்க முடியாது; தெய்வகடாட்சத்தினால் அவ்வாறே நடந்தது. இவர் தற்காலமும் முக்கியமான ஆண் வேடங்கள் பூணும் ஸ்திதியிலிருப்பது எங்கள் சபை செய்த பாக்கியமே. ஆண் வேடங்களில் எம்.வை. ரங்கசாமி ஐயங்கார் சுகுமாரனாக நடித்துப் பாடியது மிகவும் சிலாகிக்கப்பட்டது. எனது நண்பர் ஜெயராம் நாயகர் ஜெயதேவனாக நடித்ததைப்பற்றி அநேகர் அவருடைய பழைய ஸ்திரீ வேஷத்திற்குரிய பாவங்கள் அவரை விட்டகலவில்லை யென்று கூறினார்கள். நான் இதற்கு முன் கூறியபடி, ஸ்திரி வேடம் தரிப்பவர்கள் ஆண்வேடம் தரிக்கலாகாது என்பதற்கு இது ஒரு நிதர்சனமாகும். நான் சுந்தராதித்யனாக நடித்ததில், முக்கியமாகப் பைத்தியக்காரனாக நடித்தது மிகவும் நன்றாயிருந்ததெனப் பகுத்தறியுஞ் சக்தியுள்ள பல நண்பர்கள் கூறினர்.

இந்நாடகத்தை அன்று நாங்கள் நடித்த பொழுது நேரிட்ட ஒரு சிறு விபத்தை எழுத விரும்புகிறேன். ஒரு காட்சியில் சுந்தராதித்யன் தன்சைனியங்களுக்கு உற்சாகம் உண்டாக்கும் பொருட்டு, வீரம் விளைக்கும்படியான சில வார்த்தைகளைப் பேசுகிறான். இந்தக் காட்சியில் நடிக்கும் பொழுது அப்பாத்திரத்தைப் பூண்ட நான், நான்கு ராணுவ வீரர்கள் தோள்மேல் நின்று அம்மொழிகளைப் பேசினேன். அவ்வாறு பேசும்பொழுது கூர்மையான வாஸ்தவமான கத்தியை நான் வீசுங்கால், என்னைத் தூக்கிக்கொண்டிருந்தவர்களுள் ஒரு வராகிய ரங்கவடிவேலுவின் தமயனாகிய சி.கே. ரங்கநாதம் என்பவருடைய தலையில் நன்றாய்க் காயப்படுத்தி ரத்தம் பெருகச் செய்தேன். இதை நான் வேண்டுமென்று செய்தவனல்ல என்று இதை வாசிக்கும் எனது நேயர்களுக்கு நான் தெரிவிக்க வேண்டியதில்லை. நன்றாக நடிக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் கையில் பிடித்திருக்கும் கத்தியானது யார் மீதாவது பட்டுக் காயப்படுத்துமே என்னும் கவனமில்லாமற் போயிற்று. காட்சி முடிந்து நான் கீழே இறங்கிய பின்தான், எனது நண்பர் ரத்தம் துளித்துக் கொண்டிருந்த காயத்தை காட்டி, என் அஜாக்கிரதையாலுண்டான விபத்தைத் தெரிவித்தார்! அதுவரையில் தன் நோயையும் பாராது என்னைத் தாங்கிக்கொண்டிருந்தார்! காயம் பட்டதே என்று, நோயைச் சகியாது தான் இருந்தவிடத்தை விட்டு அகன்றிருப்பாராயின், நான் கீழே விழுந்துதானிருக்கவேண்டும்! இப்பொழுதும் எப்பொழுதாவது நான் நாடக மேடையில் அஜாக்கிரதையா யிருப்பதைப் பற்றிப் பேச்சு வந்தால், “இரண்டு நண்பர்கள் நாடகத்தில் கத்தியால் என்னைத் தலையில் காயப்படுத்திய ஆசாமியல்லவா நீ!” என்று ஏளனம் செய்வார். பிறகு அநேக முறை என் கையிற் பிடித்த கத்தியால் நாடகமாடும்பொழுது பலருக்குக் காயம் உண்டு பண்ணியிருக்கிறேன். அதைப்பற்றிப் பிறகு நான் சவிஸ்தார மாய் ஆங்காங்கு எழுத வேண்டி வரும். இதற்கெல்லாம் இன்றைத் தினம்தான் “பிள்ளையார் குட்டு” ஆரம்பம். இந்நாடகமானது இரண்டாம் முறை எங்கள் சபையோரால், பெங்களூரில் ஆடப்பட்ட பொழுது, முன்பு நடந்ததைக் கவனித்தவனாய், இக்காட்சியில் கையில் மரக் கத்தியொன்றுடன் பேசினேன். அப்பொழுதும் கோபவேசத்தால் அதை வீசும்பொழுது, ராணுவ வீரனாக நடித்த ஒரு ஆக்டருக்கு அதனால் கொஞ்சம் காயப்படுத்தினேன். அதன் பிறகு இந்நாடகத்தை ஆடும்பொழுதெல்லாம் இக்காட்சியை அடியுடன் ஆடுவதையே விட்டேன்!

இந்நாடகம் எங்கள் சபையில் 1900ஆம் வருஷம் வரையில் சில சமயங்களில் ஆடப்பட்டது. அதற்கப்புறம் மேலே நான் குறித்த காரணம்பற்றி எனதாருயிர் நண்பர் சி. ரங்கவடிவேலு இதை ஆட விரும்பவில்லை. அக்காரணத்தினால் 1900ஆம் வருஷம் முதல் 1927ஆம் வருஷம் வரையில் இந்நாடகம் எங்கள் சபையில் ஆடப்படவில்லை. அவ்வருஷத்தில் எனது நண்பர் சத்தியமூர்த்தி ஐயர் எங்கள் சபையில் தமிழ் கண்டக்டராக வந்த பொழுது, ‘இது நல்ல நாடகமாயிருக்கிறதே! இதை ஏன் நடிக்காது விட்டீர்கள்?’ என்று கூறி இதை எடுத்துக்கொண்டார். அச்சமயம், தற்காலம் நான் கதா நாயகனாக நடிக்கும்போதெல்லாம் கதாநாயகியாக நடிக்கும் எனதுயிர் நண்பர் கா. நாகரத்தினம் ஐயர் மனோரமா வேடம் பூண்டார். சி. ரங்கவடிவேலுக்கப்புறம் இவர்தான் அவ்வேடம் பூணத்தக்கவர் என்று சபையோரால் மதிக்கப்பட்டது. இதைப்பற்றி விவரமாய்ப் பிறகு எழுத வேண்டி வரும்.

இந்த “இரண்டு நண்பர்”களைப் பற்றிய இன்னொரு முக்கியமான சங்கதி உண்டு. 1891ஆம் வருஷம் எங்கள் சபை ஸ்தாபிக்கப்பட்டது முதல் 1929ஆம் வருஷம் வரையில் அதாவது 38 வருஷமாக வேறெந்தச் சபையிலும் நான் நடித்தவனன்று; அந்த 1929ஆம் வருஷம் நானும் எனதுயிர். நண்பர் நாகரத்தினமும் மதுரை டிராமாடிக் கிளப்பில், இதை முதல் முதல் நடித்தோம்; அப்போது நாங்கள் ஆடிய இரண்டு நாடகங்களில் இது ஒன்றாகும். இதைப் பற்றியும், மதுரை மீனாட்சியின் கிருபையால், அங்கு எனக்குக் கிடைத்த ஆக்டர் நண்பர்களைப்பற்றியும் பிறகு எழுதுவேன்.