உள்ளடக்கத்துக்குச் செல்

நான் இந்துவல்ல நீங்கள்

விக்கிமூலம் இலிருந்து


இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக




நான் இந்துவல்ல
நீங்கள்...?

மணி பதிப்பகம், பாளையங்கோட்டை, திருநெல்வேலி.



ஒளியச்சு: டெய்சி ஜோசப்
விலை : ரூ 10
மணி பதிப்பகம்,
29-A, யாதவர் கிழக்கு தெரு,
பாளையங்கோட்டை.
விற்பனை உரிமை
நெல்லை புக் சென்டர்,
68/2, சிவன் தெற்கு ரத வீதி,
பாளையங்கோட்டை - 627 002



முன்னுரை


உலகமயமாக்கல் என்ற பேரில் பன்னாட்டு மூலதனம் தருகின்ற நெருக்கடியில் எளிய மக்களின் வாழ்க்கை துவண்டு போய்க் கிடக்கின்றது. இந்த நேரத்தில் மக்களின் கவனத்தைத் திசை திருப்புவதற்காக மற்றொரு பக்கத்தில் இந்து அடிப்படைவாதிகள் ஆரவாரக் கூச்சல் இடுகிறார்கள். ‘இந்து’ என்ற சொல்லும் அதனடிப்படையும் வெகு மக்களுக்கு எதிரானவை. ஆனால் படித்த நகர்ப்புறம் சார்ந்த, வறுமைக்கோட்டினை அடுத்து இருக்கின்ற மக்கள் 'இந்து' என்ற சொல்லில் ஏமாந்து போகிறார்கள். கிறித்தவர் என்பது போல இசுலாமியர் என்பது போல 'இந்து' என்பதும் ஒரு அடையாளம் என்று நினைக்கின்றனர். ஆனால் பெருவாரியான மக்களுக்கு சாதி என்னும் கொடுமையான அடையாளம் தான் உண்மையானதாக இருந்து வந்திருக்கிறது. மத அடையாளம் எல்லாம் மேல் சாதிகளுக்குத்தான். இந்து அடையாளம் குறித்து சில பேராசிரியர்களிடம் கருத்துக் கேட்டோம். அவர்கள் தந்த விளக்கம்தான் இந்த சிறு வெளியீடு ஆகும். இந்து என்று தன்னை நம்புகின்ற அப்பாவி மக்களை நோக்கியே இந்த விளக்கங்கள் தரப்படுகின்றன.

மணி பதிப்பகம்
திருநெல்வேலி-2.



‘இந்து’ என்ற சொல்லுக்குப் பொருள் என்ன?


இந்து என்ற சொல். இந்தியாவிலே பிறந்த வேதங்களிலோ, உபநிஷதங்களிலோ. ஆரண்யகங்களிலோ பிராமண்யங்கள் என்று சொல்லக்கூடிய வேறு வகையான பழைய இலக்கியங்களிலோ இல்லை. இதிகாசங்களிலும் கிடையாது. இந்தச் சொல் 18-ஆம் நூற்றாண்டின் நடுப் பகுதியிலே ஐரோப்பிய Orientalist அதாவது கீழ்த்திசை நாடுகளைப் பற்றி ஆராய வந்தவர்கள் பயன்படுத்திய சொல். இந்தச் சொல்லுக்கான ‘மரியாதை’' என்ன என்று கேட்டால், ‘இது வெள்ளைக்காரர்கள் கண்டு பிடித்த சொல்’ என்பது தான். இந்திய மொழிகளில் எந்த மொழியிலும் இந்து என்ற சொல்லுக்கு வேர்ச் சொல்லே கிடையாது.

மறைந்து போன சங்கராச்சாரியார் எழுதிய ‘தெய்வத்தின் குரல்’ என்ற புத்தகத்தைப் படித்துப் பார்த்தால் தெரியும். அதிலே “வெள்ளைக்காரன் வந்து நமக்கு இந்து என்று பொதுப்பெயர் வைத்தானோ இல்லையோ நாம் பிழைத்தோம்” என்று சொல்கிறார். ‘இந்து’ என்று வெள்ளைக்காரன் பெயர் சூட்டியதாலே ஆதாயம் அடைந்தது பிராமணர்கள் மட்டும்தான். எப்படியென்றால் அந்தச் சொல்லுக்கான அதிகார அங்கீகாரத்தை காலனி ஆட்சிக் காலத்திலேயே பிராமணர்கள் பெற்றுக் கொண்டார்கள். 1799-ல் உள்நாட்டு நீதிநெறிகளைத் தொகுக்க வேண்டிய ஒரு கட்டாயம் வந்தபொழுது கல்கத்தாவில் இருந்த சர். வில்லியம் ஜோன்ஸ் (இந்தப் பெயரை இன்றும் ஆர்.எஸ்.எஸ்-காரர்கள் கொண்டாடுவார்கள்) உள்நாட்டு நீதி நெறிகளைத் தொகுத்து அதற்கு Hindu law என்று பெயரிட்டார். அப்பொழுதுதான் Hindu என்ற சொல் முதன்முதலாக அரசியல் அங்கீகாரம் பெறுகிறது. இந்தச் சொல் வெள்ளைக்காரன் கண்டுபிடித்த சொல். இந்த நாட்டிலே எந்த மொழியிலும் இல்லாத சொல். திராவிட மொழியிலும் கிடையாது, ஆரிய மொழிகளிலும் கிடையாது.

இந்து என்ற சொல் நமக்கானது இல்லையென்றால் இதற்கான பழைய சொல் என்னவாக இருக்கும் ?


நம்முடைய நாட்டிலே இந்து என்ற சொல் சிந்து நதிக்கு இந்தப்புறம் வாழுகிற மக்களைக் குறிப்பதற்கு வெள்ளைக்காரர்களால் பயன்படுத்தப்பட்ட சொல். நம்முடைய நாட்டிலே என்ன வகையான பழைய இனப் பாகுபாடு எனக் கேட்டால், ‘ஆரிய’ என்ற ஒரு சொல் இருக்கிறது. ‘திராவிட’ என்று ஒரு சொல் இருக்கிறது. இந்தச் சொற்கள் இரண்டு மொழிக் குடும்பங்களைச் சார்ந்த மக்களைக் குறிக்கின்றவை ஆகும். இந்த இரண்டும் தனித்தனியே தம்மிலே வேறுபட்டவை. ஆரிய மொழிகளைப் பேசுகிறவர்களுக்கென்று ஒரு கலாச்சாரம் இருக்கிறது. திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மொழிகளைப் பேசுகிற மக்களுக்கென்று ஒரு கலாச்சாரம் உண்டு. இந்த இரண்டு சொற்களுக்குத்தான் மிகப் பழைய அங்கீகாரம் உண்டு. நம்முடைய சங்க இலக்கியத்திலேயே ‘ஆரியம்’ என்ற சொல் வந்திருக்கிறது. வடநாட்டுக்காரர்கள் என்ற பொருளில், ‘ஆரியர் துவன்றிய பேரிசை இமயம்’ என்று வந்திருக்கின்றது. திராவிடம் என்ற சொல்லை 13-ஆம் நூற்றாண்டில் இருந்து முதலிலே வடமொழி நூல்களிலேதான் தென்னகத்து மக்களைக் குறித்து வழங்கியிருக்கிறார்கள். அந்தச் சொல் தமிழ்நாட்டில் உருவான சொல்லாகத் தெரியவில்லை. ஆனால், திராவிட மொழி பேசுகிற தென்னாட்டு மக்களைக் குறிக்கக் கூடியதாகவும், தமிழ்மொழியைக் குறிக்கக் கூடியதாகவும், இந்தச் சொல் பலமுறை பயன்படுத்தப்பட்டு வந்திருக்கின்றது. 73-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வைணவ உரையாசிரியர்களைக் கேட்டால் ‘திராவிட உபநிஷத்’ என்று தான் நம்மாழ்வாரின் திருவாய்மொழியைச் சொல்வார்கள். ‘வேதம் பஹுவிதம். இதில் ஆரியம், திராவிடம் என்கிற பிரிவு ருகாதி பேதம் போலே' என்பார் 13-ஆம் நூற்றாண்டிலே ஒரு வைணவ உரையாசிரியர். ரிக், யஜுர், சாமம் போலேதான் ஆரியம், திராவிடம் என்ற பிரிவு என்பது இதன் பொருளாகும். ‘திராவிட' இயக்கம் பிறப்பதற்கு முன்வரை தென்னிந்தியபிராமணர்கள் 'பஞ்ச திராவிட பிராமணர்கள்' என்றுதான் தங்களை அழைத்துக் கொண்டனர்.

இரவீந்திரநாத் தாகூர். ‘பஞ்சாப சிந்து குஜராத மராட்ட திராவிட’ என்று பாடும்போது நான்கு தென் மாநிலங்களைச் சேர்ந்த நிலப்பரப்பை ‘திராவிட’ என்ற சொல்லாலே குறிக்கிறார். எனவே, ஆரியம், திராவிடம் என்ற சொல்லுக்கு ஒரு வரலாறு உண்டு. இந்து என்ற சொல்லுக்கு அப்படியொரு வரலாறு கிடையாது.

இந்துக்கள் என்ற சொல் யாரையெல்லாம் குறிக்கும் ?

‘இந்து’ என்ற சொல் இந்திய அரசியல் சட்ட அங்கீகாரத்தைப் பெற்ற சொல்தான். அது ஒரு ‘சமயச் சார்புடைய’ (religious utterance) சொல் அல்ல. இந்திய அரசியல் சட்டத்தில் குறிக்கப்படக் கூடிய ‘இந்து’ என்ற சொல்லுக்கு நேரிடையான வரைவிலக்கணம் (positive definition) கிடையாது. ‘கிறிஸ்துவரல்லாத, இசுலாமியரல்லாத, பார்சி அல்லாத மக்கள் எல்லாம் இந்துக்கள்’ என்று எதிர்மறையான வரைவிலக்கணம்தான் உண்டு.

ஒரு மதம் என்றால் மூன்று செய்திகள் அடிப்படையாக அமையவேண்டும். ஒரு முழு முதற்கடவுள், ஆகமங்கள் குறிப்பிட்ட வழிபாட்டு நெறிகள் ஆகியன அவை. இந்து மதத்திற்கு அல்லது அப்படி அடையாளம் காட்டப்படும் மதத்திற்கு இவை ஏதும் இல்லை.

இந்துக்கள் ஏன் சீக்கியர்களைச் சேர்த்துக் கொள்கிறார்கள் ?

சீக்கியர்களை இந்துக்கள் என்ற கணக்கிலேதான் இந்திய அரசியல் சட்டம் சேர்த்திருந்தது. மிக அண்மைக் காலமாக அவர்கள் தாங்கள் ‘இந்துக்கள் இல்லை’ என்று சொல்லி வருகின்றார்கள்.

தமிழ்நாட்டில் சைவர்கள், வைணவர்கள் என்று இரண்டு சொற்கள் பயன்படுத்தப்படுகிறதே ? அதற்கான பொருள்தான் என்ன ?

‘இந்து மதம்’ என்ற சொல் உருவாக்கியுள்ள குழப்பங்கள் பற்றிக் கேட்கிறீர்கள் என்று நினைக்கின்றேன். ‘இந்து மதம்’ என்ற சொல்லாடலுக்குள்ளே, சைவர்கள். வைணவர்கள், ஸ்மார்த்தர்கள். இந்த மூன்றும் அல்லாத நூற்றுக்கணக்கான வழிபாட்டுமுறைகளை உடையவர்கள் என்று பலமக்கள் திரள்கள் உள்ளன. வேதத்தை மட்டுமே நம்புகின்ற கடவுளை மதிக்காத - ஸ்மார்த்தப் பிராமணர்கள் ஒருவகை. சைவர்கள் என்பவர்கள் சிவனை முழு முதல் பொருளாகவும் கடவுளாகவும் ஏற்றுக் கொள்கிறவர்கள். சிவன் கோயிலிலே கருவறைக்குள்ளாக நுழைபவர்கள் பிராமணர்கள் அல்லர். சிவப்பிராமணர்கள். அவர்கள் ஒரு தனிப்பிரிவினர். தங்களுக்குள்ளே மட்டும் திருமணம் செய்து கொள்ளும் பிரிவினர் (Endogamous group) அதுபோலவே விஷ்ணுவை முழு முதற்பொருள் - உலகைப் படைத்த கடவுள் - என்று சொல்லக் கூடியவர்கள் வைணவர்கள் வைணவக் கோயில் கருவறையில் நுழைந்து அருச்சனை செய்கிறவர்கள் வைணவப் பிராமணர்கள். அவர்களிலும் வைகானசம், பாஞ்சராத்திரம் என்ற இரண்டு ஆகமநெறிகளைப் பின்பற்றுபவர்கள் உண்டு. தங்களுக்குள் மட்டும்தான் அவர்கள் திருமண உறவு வைத்துக் கொள்வர். அவர்கள் தனிப் பிரிவினர். இவ்விரண்டும் அல்லாத ‘ஐயர்’ என்ற பெயரோடு வேதங்களை மட்டும் நம்பும் பிரிவினர் உண்டு, ‘ஸ்மிருதி’ என்பது வேதத்தின் இன்னொரு பெயர். ‘சொல்லப்படுவது’ என்பது அதன்பொருள். எழுதப்படாமல் சொல்லவும், கேட்கவும் படுவதனால் வேதத்திற்கு அந்தப் பெயர் வந்தது. பார்ப்பனரல்லாதவர்களின் கண்ணுக்கும் காதுக்கும் தெரியவிடாமல் மறைத்துக் கொள்வதால் வடமொழி வேதத்துக்கு ‘மறை’ என்ற பெயர் வந்தது. எனவேதான் அதைப் பார்ப்பனர்கள் மனப்பாடம் செய்து வைத்துக்கொள்வார்கள். இந்த ஸ்மிருதியை மட்டும் கடவுளைப் போல வணங்குகிறார்கள் ஸ்மார்த்தர்கள். இவர்கள் ஆதி சங்கரருக்குப் பிறகு பெரும்பாலும் அத்வைத மரபு சார்ந்தவர்கள். இவர்களுக்கு பரமார்த்திகத்திலே அதாவது உயர்ந்த தத்துவ நிலையிலே கடவுள் என்ற ஒருவர் கிடையாது. எனவே, இது ஒரு மறைமுக நாத்திகம். இவர்கள் எல்லாம் கோயிலிலே வேதத்தை மாத்திரம்தான் சொல்வார்கள். வேதங்களைக் கருவறைக்குள் சொல்லக் கூடாது. கருவறைக்குள்ளே சொல்லப்படுவதெல்லாம் வடமொழியிலமைந்த அருச்சனைகள். கோயிலில் இடைகழி மண்டபம் தாண்டி அடுத்தாற் போலுள்ள மண்டபத்திலிருந்து வேதம் சொல்ல வேண்டும். வேதப்பார்ப்பனர் வேறு. கோயில் பார்ப்பனர் வேறு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். கோயிற் பார்ப்பனர்களில் சைவர். வைணவர் உண்டு. இவர்களைத்தான் சிவாச்சாரியார்கள். பட்டாச்சாரியார்கள் என்று சொல்வது வழக்கம். அது அல்லாமல் பல்வேறு சாதிகளைச் சார்ந்த சைவர்கள் உண்டு. பல்வேறு சாதிகளைச் சார்ந்த வைணவர்கள் உண்டு. இந்த நெறிகளுக்குள் வராமல் மாடனை, காடனை, அம்மனை வணங்கும் மக்கள்தான் பெரும்பான்மையானவர்கள். சைவர்களும், வைணவர்களும் கோயில் வழிபாட்டுக்காரர்கள். ஸ்மார்த்தர்கள் கோயில் வழிபாட்டுக்காரர்கள் அல்ல. கோவிலுக்குள்ளே வேதம் சொல்பவர்கள் என்பது தவிர கோயில் வழிபாட்டுக்காரர்கள் அல்ல. இப்பொழுது எல்லாக் கோயில் குடமுழுக்குகளிலும் சங்கராச்சாரியார்தான் முன்னே வந்து நிற்கிறார். இது ஆகமங்களைக் கேலி செய்வதுபோல் இருக்கிறது. இதனை எதிர்த்துத்தான் திருநெல்வேலிச் சைவர்கள் நீதிமன்றத்துக்குப் போயிருக்கிறார்கள்.

சங்கராச்சாரியார் கோவிலுக்குப் போகிறாரே?

சங்கராச்சாரியார் கோவிலுக்குப் போவது என்பது ஒரு ‘ஸ்மார்த்தர்’ என்ற முறையினாலேதானே தவிர ஒரு முதல் பொருளை - உலகைப் படைத்த கடவுளை - தனியான பரம்பொருளை - நம்புகிறவர் என்ற முறையினால் அல்ல. தனியான பரம்பொருள் என்பது ஸ்மார்த்தர்களைப் பொறுத்தமட்டில், சங்கராச்சாரியாரைப் பொருத்தமட்டிலே கிடையாது. தானே கடவுளாக, கடவுளே தானாக இருப்பதாக அவர்களுடைய சித்தாந்தம். ‘அகம் பிரம்மாஸ்மி’ ‘தத்வம் அஸி’ என்று சொல்வதெல்லாம் அதுதான். ஆனால் மத ஆச்சாரப்படி கோவிலுக்குப்போய் தங்களையும் ஆத்திகர்கள் என்று காட்டிக் கொள்வார்கள். இன்னொரு வேடிக்கை தெரியுமா? சங்கராச்சாரியார் திருநீறு பூசுவார். ஆனால் சைவ மடாதிபதிகளைப் போலவோ, கோவில் அருச்சகரைப் போலவோ, திருநீற்றை எடுத்து அடுத்தவர்களுக்குக் கொடுக்க மாட்டார். அவர் கையெழுத்துப் போடுவது ‘நாராயண ஸ்மிருதி’, என்றுதான். ஆனால் பெருமாள் கோவிலுக்குச் சாதாரணமாகப் போவது கிடையாது. இப்பொழுது வேறு நோக்கத்திற்காகப் போகிறார். இந்த அளவிலேதான் கோயில்களுக்கு அவரோடு சம்பந்தம். கோயில்கள் ஆகம விதிப்படி நடப்பன. சங்கராச்சாரியார்களுக்கு ஸ்மிருதிதான் உண்டு. ஆகமங்களும், கோயில் வழிபாடும் சங்கராச்சாரியாரைப் பொருத்த மட்டிலே ஆன்மீக ரீதியாக மரியாதைக்குரிய விஷயமல்ல. அவருக்கும் ஒரு அருச்சகரைப்போல சிவபூசை செய்யவோ வைணவ ஆராதனை செய்யவோ சடங்கியல் தகுதி கிடையாது. ஸ்மிருதியைச் சொல்வதுதான் அவர்களுக்குக் கடவுள் மாதிரி.

காமாட்சியம்மன் கோவில் சங்கராச்சாரியர் கட்டுப்பாட்டில்தானே இருக்கிறது ?

உங்கள் கேள்வி நன்றாக இருக்கிறது. காஞ்சி சங்கராச்சாரியார் காஞ்சி காமாட்சியம்மன் கோவிலில் பூசை செய்யவில்லை. அந்தக் கோயில் அவரின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அவ்வளவுதான். காமாட்சியம்மன் கோவிலைப் பொருத்தமட்டில் கோயில் ஆராய்ச்சியாளர்கள் கருத்தெல்லாம் வேறு. ஒரு காலத்தில் அது பௌத்த மதக் கோயிலாக இருந்திருக்க வேண்டும். கி.பி. 1839-ல் ஒரு வழக்கிலே தீர்ப்பு அளிக்கப்பட்டதன் அடிப்படையிலேதான் இந்த சங்கராச்சாரியார் கையிலே வந்ததே தவிர 1839- க்கு முன்னால் காமாட்சியம்மன் கோயிலுக்கும் சங்கர மடத்துக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது.

காமகோடி பீடம் என்பது உண்மையில்லையா ?

காஞ்சி காமகோடி பீடம் என்று அவர்கள் சொல்கிறார்கள். சங்கராச்சாரியார் உருவாக்கிய கிழக்கு மடம், பூர்வ ஆம்னாய மடம் இதுதான் என்பது அவர்கள் சொல்லிக் கொண்டிருப்பது. ஆனால். ‘காஞ்சி காமகோடி பீடம் ஒரு கட்டுக்கதை’ என்று வாரணாசி ராஜகோபால சர்மா என்று ஒருவர் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். சங்கராச்சாரியாருடைய வரலாறு பற்றி குடுமியாமலை சங்கரன் என்பவரால் எழுதப்பட்ட இன்னொரு புத்தகம் வந்துள்ளது. ‘தாட்சிணாம்னாய பீடம் சிருங்கேரியா, காஞ்சியா?’ என்று இன்னொரு புத்தகம் வந்துள்ளது. இந்த மூன்று புத்தகங்களையும் எழுதியவர்கள் பிராமணர்கள். சிருங்கேரி மடம்தான் இவர்களுடைய மூலமடம். சிருங்கேரி மடத்தின் கிளையொன்று கும்பகோணத்திலே இருந்தது. அந்த மடத்தை இவர்கள் நிருவகித்து வந்தார்கள். 17-ஆம் நூற்றாணடின் நடுப்பகுதியில் அரசியல் அமைதியின்மை காரணமாக, இவர்கள் கும்பகோணத்திலிருந்து காஞ்சிக்கு வருகிறார்கள். அதாவது சிருங்கேரி மடத்தின் கிளை மடம் காஞ்சிபுரத்திற்கு வருகிறது. பின்னாளிலே இவர்கள் காமாட்சியம்மன் கோவிலை கையகப்படுத்திக் கொள்கிறார்கள். காமக்கோட்டம் என்பது காமாட்சியம்மன் கோவிலின் பெயர். சங்கராச்சாரியார் குறித்த பழைய சமஸ்கிருத நூல்களிலே காமக்கோட்டத்தைப் பற்றிக் குறிப்புகள் கிடையாது. காமக்கோட்டம் கோயிலைக் கைப்பற்றிக் கொண்டதினாலே தங்கள் மடத்தை இவர்கள் ‘காமகோடி பீடம்’ என்று சொல்கிறார்கள். ‘காம கோடி மடம்’ என்றுதான் சொல்லியிருக்க வேண்டும். ஆனால் 'காம கோடி பீடம்’ என்று சொல்கிறார்கள். மேலே சொன்ன மூன்று புத்தகங்களையும் பார்த்தாலே காஞ்சி மடம் ஆதி சங்கராச்சாரியாரால் தோற்றுவிக்கப்பட்ட மடம் அல்ல என்பது தெரியும். அது மட்டுமல்ல. இப்பொழுதுள்ள சங்கராச்சாரியாரைத் தவிர கிளை மடத்தின் மடாதிபதிகள் எல்லாருமே ஒன்று தெலுங்கு அல்லது கன்னடம் பேசுகிறவர்களாகத்தான் இருப்பார்கள். ஏனென்றால் சிருங்கேரி மடம், இவ்விரண்டு மொழி பேசுகிறவர்களைத்தான் மடாதிபதிகளாக ஏற்றுக் கொள்ளும். ஆதிசங்கரர் பிறந்த காலடியில் போய்க் கேட்டுப் பாருங்கள். இந்த மடத்தை ஆதிசங்கரர் நிறுவியதாக ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். அதுபோல பூரி சங்கராச்சாரியாரைக் கேட்டால் காஞ்சிமடத்தை ஆதி சங்கரர் நிறுவினார் என்பதை ஒத்துக் கொள்ள மாட்டார். 19-ஆம் நூற்றாண்டு ஆவணங்களில்கூட காஞ்சி மடாதிபதியை ‘சிக்க உடையார்’ (சின்ன சாமிகள் என்றுதான் குறித்திருக்கிறார்கள். பெரிய சாமிகள் (தொட்ட உடையார்) என்பவர் சிருங்கேரி சங்கரமடத்தின் தலைவர்தான். இந்த மடத்தின். தோற்றமே ரொம்ப சிக்கலுக்குள்ளான ஒரு விஷயம்.

ஆகம வழிபாடு என்றால் என்ன?

எடுத்துக்காட்டாக காரணாகமம், காமிகாகமம் என்று சிவன் கோயிலில் பூஜை செய்கின்ற, வழி நடத்துகின்ற முறைகளின் தொகுப்புக்கு ஆகமம் என்று பெயர். ஒரு காலத்திலே ஆகமங்கள் நிறைய இருந்திருக்கின்றன. தமிழிலும் ஆகமங்கள் இருந்திருக்கின்றன. சைவநெறியும். வைணவநெறியும் ஆகம நெறிகள். சைவத்தைப்போலவே வைணவத்திலும் 108 ஆகமங்கள் இருந்ததாகச் சொல்வார்கள். பாஞ்சராத்திர ஆகமம் பற்றி திருப்பதி தேவஸ்தானமே புத்தகம் வெளியிட்டு இருக்கிறது. ஆகமம் என்பது கோயிலை பூசைகளை நெறிப்படுத்தும் முறை. இதற்கும் வேதத்திற்கும் சம்பந்தம் கிடையாது. ஏனென்றால் வேதப்பாடல்கள் பிறந்த காலத்தில் கோயில் என்ற நிறுவனமே கிடையாது. இந்திரன். வருணன். அக்கினி. மருத்(காற்று) போன்ற (இப்போது செத்துப்போன) தெய்வங்களுக்குத் தற்காலிகமான வேள்விச் சாலைகளை உருவாக்குவார்கள். அவ்வளவுதான். கோயிலோடு சம்பந்தமில்லாத சங்கராச்சாரியார் ஆகமத்தை மதிக்க மாட்டார். ஆகம வழிப்பட்டவர்கள், சங்கராச்சாரியாரை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஆகம விதிப்படிதான் கோயில்கள் இன்றளவும் நடந்து வருகிறதே தவிர. ‘இந்து நெறி’ ‘இந்து மதம்’ என்ற ஒன்றின்படி கோயில்கள் நடக்கவில்லை. இந்து என்ற சொல்லுக்கு அரசியல் சட்ட அங்கீகாரம் இருக்கிறதே தவிர நான் முதலிலேயே சொன்னது போல சைவ, வைணவ கோயில்களுக்கு உள்ளாக ‘இந்து’ என்ற சொல்லுக்குச் சமய ரீதியான அங்கீகாரம் கிடையாது என்பதே உண்மை. அதனால்தான் சங்கராச்சாரியார் சாமியைத் தொட்டு பூசை செய்யக் கூடாது. மூலஸ்தானத்திற்குள் நுழையக் கூடாது என்று திருநெல்வேலியிலே 1960-களிலும், 80-களிலும் சைவர்கள் கிளர்ச்சி பண்ணினார்கள்.

காஞ்சிமடம் ‘இந்து’ என்ற பெயரில் எல்லாவற்றையும் தன்னுடைய கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்பதற்காகத் திருப்பாவை, திருவெம்பாவை மாநாடுகளை நடத்தத் தொடங்கியது. உண்மையிலேயே அவர்கள் பூசை செய்கின்ற நேரத்தில் தமிழிலே பேசக்கூடாது என்ற கொள்கை உடையவர்கள். அவர்கள் பூசையிலே திருப்பாவை பாடுவார்களா? திருவெம்பாவை பாடுவார்களா? இரண்டையும் பாடமாட்டார்கள். ஏனென்றால் தமிழ்மொழி அவர்களுக்குத் தீட்டான மொழி. இந்த திருப்பாவை, திருவெம்பாவை மாநாடு என்பது சைவர்களையும், வைணவர்களையும் ஏமாற்றுவதற்காகச் செய்த ஏற்பாடு. முதலிலே சைவர்கள் ஏமாந்தார்கள். வைணவர்கள் ஏமாறுவதற்குத் தயாராகவில்லை. குறிப்பாக காஞ்சியிலே இருந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் காலமான 96 வயது வைணவ அறிஞர் - பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் என்பவர் இவர்கள் நடத்திய திருப்பாவை, திருவெம்பாவை மாநாட்டிற்குக் கடைசிவரை வரமாட்டார். ‘திருப்பாவை பேசுவதற்கு ஆன்மிகத் தகுதி உங்களுக்குக் கிடையாது. நீங்கள் திருப்பாவை பேசுகின்ற மாநாட்டிற்கு நான் வரமாட்டேன்’ என்று கடைசி வரை மறுத்துவிட்டார். இன்னமும் வைணவ நூல்களை ஏராளமாக வெளியிடுகின்ற (திருச்சி) புத்தூர் கிருஷ்ணசாமி ஐயங்காரிடம் (ஸ்ரீ சுதர்சனம் பத்திரிகையின் ஆசிரியர்) போய்க் கேட்டுப் பாருங்கள். ஸ்மார்த்தர்கள் திருப்பாவை மாநாடு நடத்தலாமா? நடத்தினால் நீங்கள் வருவீர்களா? என்றால் வரமாட்டார். இவர்களாகச் செய்து கொள்கின்ற ஏற்பாடு இது. இப்போது அதனையும் கைவிட்டு விட்டு 'இந்து' என்பதை மட்டும் கையில் எடுத்திருக்கிறார்கள். இவர்களது நோக்கம் எல்லாம் ஏதேனும் ஒரு போர்வையில் அரசியல் அதிகாரத்தை மறைமுகமாகத் தங்கள்வசம் வைத்திருப்பதுதான்.

கோயில் கருவறையிலே வடமொழி வேதம் பாடுவதில்லையா ?

கருவறையிலே வடமொழியிலே அருச்சனை நடைபெறுகிறதே தவிர வேதம் கருவறையிலே இல்லை. கருவறை தாண்டி, இடைகழி மண்டபம் தாண்டி அடுத்த பகுதியிலே வேதம் ஓதப்படுகிறது. நான் திரும்பத் திரும்பச் சொல்லுகிறேன். வேதத்தை ஓதுபவர்கள் ஸ்மார்த்தர்கள். வடமொழி வேதத்தை மட்டும் கடவுள் போலக் கொண்டாடுபவர்கள். அதுவல்லாமல் வைணவக் கோயில்களிலே கருவறைக்குள்ளாகவே தமிழ் பாடப்படுகின்றது. இன்றளவும் திருப்பதி கோயிலிலே நாள்தோறும் திருப்பாவை சேவிக்கப்படுகிறது. சைவர்கள் சிதம்பரம் நடராசர் கோயில் கருவறையில் தேவாரமும் திருவாசகமும் பாடுவதற்காகப் போராடி வருகின்றார்கள்.


‘முன்னோர்கள் செய்தது போல்’ என்ற வார்த்தையை அடிக்கடி பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்களே, அதன் பொருள் என்ன ?

‘முன்னோர்கள் போல’. ‘நமது முன்னோர்கள் செய்தது போல’ ‘மரபுப்படி’ என்று சொல்லுவதற்கு ‘சனாதனம்’ என்று அர்த்தம். இந்த வார்த்தையை முன்பு அடிக்கடி சொல்லுவார்கள். இப்போது சொல்லுவதில்லை. சனாதன தர்மப்படி கோயில் நுழைவுச்சட்டம் கொண்டு வந்த போது முன்னோர்கள் சொன்னதெல்லாம் என்னவாயிற்று. கோயில்களில் தேவதாசிமுறையினை ஒழிக்க முத்துலெட்சுமி ரெட்டி போராடியபோது காங்கிரஸ் தலைவர் ஆன பார்ப்பனர் சத்தியமூர்த்தி அதனை எதிர்த்தார். எதிர்க்க முடியவில்லை. அந்தச் சட்டத்தை 15 ஆண்டுகளுக்கு மேலாகக் கிடப்பிலேபோட்டு இறுதியில் 1949-இல் நடைமுறைப்படுத்தினர். முன்னோர்கள் செய்த கொடுமையினைப் பின்னோர்கள் தூக்கித் தூர எறிந்தனர். 'முன்னோர் செய்தது முன்னோர்கள் செய்தது’ என்று இவர்கள் சொல்லுவதெல்லாம் பிறப்பு காரணமான சாதி வேற்றுமையைக் கோயிலுக்குள்ளே மறுபடியும் நிலைநிறுத்துவது என்பதே. இவர்கள் சொல்லுவதுபடி பார்த்தால் தாழ்த்தப்பட்ட ஒருவரை அர்ச்சகராக ஏற்றுக்கொள்ள இவர்கள் தயாராக இல்லை. இவர்களின் முன்னோர்கள் என்ன செய்தார்கள். பிறவி ரீதியாக மக்களை மேல்கீழாக அடுக்கி வைத்தார்கள். உயர்ந்தோர் தாழ்ந்தோர் எனப் பிரித்து வைத்தார்கள். இதுதான் ‘முன்னோர்கள் செய்தது போல’ என்பதின் இரகசியம்.

அப்படியானால் கோயில் கருவறைக்குள் தமிழ்ப் பாட்டு செல்லுபடியாகாதா ?

ஏன் செல்லுபடியாகாது? ஆழ்வார்களின் பாசுரங்கள் இல்லையென்றால் திருவரங்கம் பெருமாள் கோயில் எங்கே போகும்? தேவாரம் செல்லுபடியாகவில்லையென்றால் சிதம்பரம் கோயில் எங்கே போகும்? மாணிக்கவாசகர் சொல்ல கடவுளே திருவாசகத்தை எழுதி தமக்கென ஒரு பிரதியை வைத்துக் கொண்டார் என்பது சைவர்களின் நம்பிக்கை. வைணவர்களின் நம்பிக்கை என்னவென்றால் ‘திருவரங்கத்துப் பெருமாள் தெற்கு நோக்கிப் படுத்திருப்பதே’, வடக்கே ஆரியர்களின் முருட்டு சமஸ்கிருதம் வழங்குகிறது. தெற்கே ஆழ்வார்களின் ஈரத் தமிழ் நடமாடுகிறது. அதுதான் காரணம் என்பதாகும். இதை உரைநூல்களில் வைணவர்கள் எழுதியே வைத்திருக்கிறார்கள்.

அருச்சனை என்ற சொல்லே வட சொல்தானே ?

வட சொல்தான். தமிழிலே அதனை போற்றிப்பாடல் என்று சொல்ல வேண்டும். அல்லது தொல்காப்பியர் சொல்வது போல் ‘பரவுதல்’ என்பதுதான் அருச்சனை. இந்த ‘பரவுதல்’ என்ற சொல்லையும் காலி செய்துவிட்டார்கள். போற்றி என்ற சொல் இன்னமும் திருவாசகத்தில் 'ஈசனடி போற்றி எந்தையடி போற்றி' என்று இருக்கிறது. திருவாசகத்தின் போற்றிப் பாடல்கள் அருச்சனையன்றி வேறு என்ன? ‘அருச்சனை பாட்டேயாகும்’ என்று தானே சேக்கிழார் சொல்லுகிறார். திருவாசகம் பாட்டுத்தானே. தேவாரம் பாட்டுத்தானே. ஆழ்வார் பாசுரங்கள் எல்லாம் பாடல்கள் தானே இவற்றையெல்லாம் விட்டுவிட்டுப் போனால் உங்களின் தெய்வம் வேற்றுமொழிக்காரர்கள் தெய்வம் என்றுதானே பொருளாகின்றது.

இவை தவிர தமிழில் அருச்சனைப் பாடல்கள் ஏதேனும் உண்டா?

தமிழில் அர்ச்சனைப் பாடல்கள் ஏராளம் இருக்கிறதே. சிலப்பதிகாரத்தின் வேட்டுவவரி முழுக்க அருச்சனைப் பாடல்கள். சக்தி, விஷ்ணுதுர்க்கை என்று இவர்கள் கொண்டாடுகிறார்களே இந்தக் கடவுளர்களின் போற்றிப் பாடல்களை வேட்டுவ வரியில் நிறையப் செய்து பார்க்கிறோம். ஏன். ஆதிசங்கரர் வடமொழியில் லலிதா சகஸ்ரநாமம் எழுதுவதற்கு சிலப்பதிகாரத்தின் வேட்டுவ வரி தானே தூண்டுகோலாக இருந்திருக்க வேண்டும். அவர் காலத்தில் கி.பி. எட்டாம் நூற்றாண்டில் மலையாள மொழி பிறக்கவேயில்லை. அவர் சிலப்பதிகாரத்தின் வேட்டுவ வரியைக் கட்டாயம் படித்திருக்க வேண்டும்.

சிலம்பும் கழலும் புலம்பும் சீறடி
வலம்படு கொற்றத்து வாய்வாள் கொற்றவை
இரண்டுவே(று) உருவில் திரண்டதோள் அவுணன்
தலைமிசை நின்ற தையல் பலர்தொழும்
அமரி குமரி கவுரி சமரி
சூலி நீலி மால்அவற்(கு) இளங்கிளை
ஐயை செய்யவள் வெய்யவாள் தடக்கைப்
பாய்கலைப் பாவை பைந்தொடிப் பாவை
ஆய்கவைப் பாவை அருங்கலப் பாவை

பெருங்கோயில்களில் மட்டுமல்ல. சூலமும் வாளும் ஏந்தியுள்ள எல்லா அம்மன் கோயில்களிலும் பாடக்கூடிய அருச்சனைப் பாட்டு இது. அதற்காகவே இளங்கோவடிகள் இதனைப் பாடியிருக்கிறார்.

சைவ, வைணவ மதங்கள் தலித்துகளை எப்படிப் பார்த்தன?

சைவ, வைணவர்கள் பக்தி இயக்க எழுச்சிக் காலத்தில் சமண, பௌத்த மதங்களைச் சாய்ப்பதற்காக ‘ஒரு வகையான சனநாயகத் தன்மையினை’ தற்காலிகமாகக் கொண்டிருந்தனர். முதலிலே சைவர்களும். வைணவர்களும் தலித்துகளை எப்படிப் பார்த்தார்கள் என்பதில் வேறுபாடுகள் உண்டு. சைவத்திலே நந்தனார் சோதியாகத் தான் சிதம்பரம் கோயிலுக்குள்ளே போக முடிந்தது. வைணவத்திலே திருப்பாணாழ்வாரை தோளிலே தூக்கிக் கொண்டு ஒருவர் திருவரங்கம் கோயிலுக்குள்ளே செல்கிறார். இந்த வித்தியாசம் இருக்கிறதே இது என்னவென்று கேட்டால் ‘நீ சைவனா பிராமணனா’ என சிவப் பிராமணரிடம் கேட்டால் அவர் திண்டாடிப் போவார். ஆனால் தத்துவார்த்த ரீதியாக வைணவனா? பிராமணனா என ஒரு வைணவரிடம் கேட்டால் ஒரு உண்மையான வைணவர் ‘நான், பிராமணனல்ல வைணவர்’ எனத் தைரியமாகச் சொல்லுவார். அண்மையிலே வந்த குமுதம் ரிப்போர்ட்டர் இதழிலே ‘வருணாசிரமத்தைக் கடைப்பிடிக்கிறவர்’ என்று சங்கராச்சாரியைத் தாக்குகிறார் இராமானுஜ தாத்தாசாரியார். ‘வருணதர்மிகள் தாசவிருத்திகள் என்று துறை வேறு இடுவித்தது’ என்ற ஆசாரிய ஹிருதயம் (மாறன் மனம் என்று பொருள்படும் 13-ஆம் நூற்றாண்டு வைணவத் தத்துவ நூல்) நூற்பாவை வைத்துக்கொண்டுதான் தாத்தாச்சாரியார் தாக்குகிறார். 'வருணாசிரம தருமத்தை மேற்கொள்ளும் ஸ்மார்த்தப் பார்ப்பனர்கள் குளிக்கும் துறையிலேகூட வைணவர்கள் குளிக்கமாட்டார்கள்', என்பதுதான் இதன் பொருள். ஒடுக்கப்பட்டவரின் கோயில் நுழைவு இராமானுசரால் முதன் முதலில் மைசூரிலுள்ள மேல் கோட்டையிலே நடத்தப்பட்டது. அது தொடர்ந்து வரமுடியவில்லை என்பது வேறு விசயம். ஆனால் ஒரு நல்ல வைணவன் பிராமணனாக இருக்க முடியாது என்கிறார் தொண்டரடிப்பொடியாழ்வார். ‘நான் பிராமணன் இல்லை, நான் என் பிராமணத் தன்மையினைக் கைவிட்டு விட்டேன்’ என்று ஏழாம் நூற்றாண்டிலேயே அவர் கூறுகின்றார். வைணவத்திற்குள்ளே சாதிக்கு எதிராகவும். வடமொழி ஆதிக்கத்திற்கு எதிராகவும் ஒரு கலகக் குரல் தொடர்ந்து வருகின்றது. அது பலவீனமாக இருந்திருக்கிறது. இப்போது வைணவப் பார்ப்பனர்களிலே சிலபேர் வைணவர் என்பதை விட்டுவிட்டுப் பார்ப்பனர் என்ற உணர்வோடு இந்து என்ற கருத்தாக்கத்திற்குள்ளே புகுந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் இன்று தலித்துகளைப் பொருத்தவரையில் இராமானுசர் பார்வையும், வைணவ தத்துவப் பார்வையும் வேறு. நடைமுறை வேறாகத்தான் உள்ளது. ஆனால் நடைமுறையிலே ஒன்றைச் சொல்லலாம். சங்கராச்சாரியார் யாருக்கு தீட்சை கொடுப்பார்? இன்னொரு ஸ்மார்த்தப் பார்ப்பனருக்குத்தான் தீட்சை கொடுப்பார். சைவ மடம் யாருக்கு தீட்சை கொடுக்கும்? பிறப்பினாலே சைவ சமயத்தை சார்ந்தவருக்குத்தான் தீட்சை கொடுக்கும். ஆனால் வைணவ மதம் தாழ்த்தப்பட்டோருக்கும் தீட்சை கொடுக்கும் வழக்கம் இன்றுவரை நடைமுறையிலிருக்கிறது. ஒரு தாழ்த்தப்பட்டவர் வைணவ தீட்சை பெற்று வைணவராகலாம். தீட்சை பெற்று வைணவரானவுடன் தீட்சை பெற்றவர்கள் யாரும் யாருடைய சாதியையும் கேட்கக் கூடாது. ஒன்றாகச் சமைத்து ஒன்றாகச் சாப்பிட வேண்டும். இந்த தாராள மனப்பான்மை சைவத்திலே கிடையாது. இதுதான் பார்வையிலே வித்தியாசம். ஆனால் இன்று எல்லோருமே ‘இந்து’ என்ற போர்வையிலே தலித்துக்களை வெறுப்போடு தள்ளிவைத்துப் பார்க்கும் பார்வைதான் உள்ளது. இராமானுசரின் சாதி எதிர்ப்புக் குரல் தோற்றுப்போய்விட்டது.

நீங்கள் சொல்லுவதைப் பார்த்தால் கோயில் என்ற அமைப்பே சாதிகளைக் காப்பாற்றும் முறைபோன்று தோன்றுகிறதே ?

ஆம். 1949-இல் கோயில் நுழைவுச் சட்டம் வருகிற வரைக்கும் கோயில் என்ற நிறுவனம் சாதியை முழுமையாகக் காப்பாற்றும் அமைப்புத்தானே. கோயில் நுழைவுச் சட்டம் என்பது தடை செய்யப்பட்ட சாதியார் கோயிலினுள் நுழையலாம் என்பது தானே! இவர்களைத் தடை செய்து வைத்தது எது? கோயில் தானே. இன்றைக்கு நாம் அனைவரும் உள்ளே போய் வணங்கினாலும் கூட மதுரை வீரன் கோயில் மதுரை மீனாட்சியம்மன் கோயில் கோபுரத்திற்கு வெளியேதான் இருக்கிறது. அதே போல மதுரை வீரனை வணங்கும் சாதியார் கோயிலுக்கு வெளியே நிறுத்தப்பட்டனர்.

கோயில் சாதியைக் காப்பாற்றினால் அது வருணாசிரம தருமத்திற்கு கட்டுப்பட்டது என்று தானே அர்த்தம் ?

இல்லை. வருணாசிர தர்மம் என்பது தமிழ் நாட்டிலே ஒரு போதும் நடை முறையிலே இருந்ததில்லை. வருணாசிரம தருமப்படி பிராமணர்களுக்கு அடுத்தபடி இருப்பவர்கள் வைசியர் என்று அழைக்கப்படுகிற வணிகச் சாதியார். அந்த வணிகச் சாதியாருக்கு கோயிலிலே எங்காவது இடம் இருக்கிறதா? இல்லை. அடுத்து சத்திரியர் என்று சொல்லப்படக்கூடிய போர்க்குணமுடைய சாதியர். அவர்களுக்கு எங்காவது இடம் இருக்கிறதா? வேளாளர் என்று சொல்லக்கூடிய சைவ மடங்களை வைத்திருப்பவர்கள் வருணதரும கணக்குப்படி சூத்திரர்கள். ஆனால் நடைமுறையிலே பிராமணர்களுக்கு அடுத்த உயர் சாதி நிலையில் அவர்கள் இருக்கிறார்கள். இதற்கு என்ன பொருள்? வருணாசிரம தருமம் இங்கு நடைமுறையிலே இல்லை. இங்கே சாதிதான் இருந்தது. இருக்கிறது. எனவே கோயில் சாதி பேணுகிறதே தவிர வருணாசிரம தருமத்தைப் பேணவில்லை.

‘அவரவர் தருமம்’ என்கிறார்களே, அதன் அர்த்தம் என்ன ?

இப்படிச் சொல்லுகின்ற பார்ப்பனர்களின் ஆசைப்படி ‘அவரவர் தருமம்’ என்றால் தாழ்த்தப்பட்டவர்கள் தாழ்த்தப்பட்டவர்களாகவே இருக்க வேண்டும். பிராமணர் வேதம் ஓதிக்கொண்டிருக்க வேண்டும். பிராமணர்கள் வேதமும் ஓத வேண்டும், அரசியலும் செய்ய வேண்டும். சமூகத்தில் மிக உயர்ந்த பதவிகளாகிய தலைமை அமைச்சர் பதவியிலோ, குடியரசுத்தலைவர் பதவியிலோ புகழ்பெற்ற மருத்துவராகவோ. வழக்கறிஞராகவோ இருக்கவேண்டும். பேருந்துப் போக்குவரத்து பெருந்தொழிலாக மாறியபோது பார்ப்பனர்கள் அதற்குள் நுழைந்து முதலாளிகள் ஆனார்கள். பட்டறைத் தொழில் பார்ப்பனர்களின் பரம்பரை தர்மத்துக்கு உடன்பாடா? இதுதான் ‘அவரவர் தருமம்’ என்பதற்கான உண்மையான அர்த்தம்.

பகுத்தறிவு வாதத்தால்தான் கோயில்கள் பாழடைந்து போய்விட்டன என்று சொல்கிறார்களே?

பகுத்தறிவு வாதத்தால் என்றல்ல. அவர்கள் வெளிப்படையாகச் சொல்வது திராவிட இயக்கம் வந்தபிறகுதான் தமிழ்நாட்டுக் கோயில்கள் பாழ்பட்டுக் கிடக்கின்றன என்ற குற்றச்சாட்டைத்தான். நாத்திகத்தோடு திராவிட இயக்கம் வந்தது 1925-க்குப் பிறகுதான். அதற்கு முன்னாலே பாழ்பட்ட கோயில்களுக்கு எல்லாம் யார் பொறுப்பு? இரண்டாவது, பார்ப்பனர் கையில் இருந்த - பாழ்பட்டுக் கிடக்கும் கோயில்கள் எல்லாம் பெரிய சொத்துடைமை நிறுவனங்களாக இருந்த - கோயில்கள்தானே தவிர எந்த ஊரிலாவது சாதாரண அம்மன் கோயில், சுடலை கோயில், இசக்கி கோயில், காத்தவராயன் கோயில் பாழ்பட்டுப் போகிறதா? எனில் எந்த ஆன்மீகம் பாழ்பட்டுப் போயிருக்கிறது? யாருடைய ஆன்மீகம் உயிரோடு இருக்கிறது? பெருவாரியான மக்களுடைய ஆன்மீகம் உயிரோடு இருக்கிறதனால்தானே காத்தவராயன் கோயிலோ. சுடலை கோயிலோ, பொன்னியம்மன் கோயிலோ அழியாமல் அப்படியே இருக்கிறது. சுஜாதாகூட ஒருமுறை எழுதியிருந்தார். நவதிருப்பதியை சுற்றிப் பார்த்துவிட்டு வந்து. அவை வாழ்ந்த காலத்தை நினைத்துப்பார்த்து விட்டு ‘அப்பொழுதெல்லாம் திராவிட இயக்கம் இல்லை’ என்று. திராவிட இயக்கம் பிறப்பதற்கு முன்னூறு, நானூறு ஆண்டுகளுக்கு முன்னாலேயே பெரும்பாலான கோயில்கள் பாழ்பட்டுப் போயின. அதற்கான காரணம். பிராமணர்கள் புதிய அதிகார மையத்தைத் தேடி அந்தக் கோயில்களை எல்லாம் கைவிட்டு விட்டு நகரங்களை நோக்கிப் புறப்பட்டுப் போனார்கள். 19-ஆம் நூற்றாண்டில் நீதிபதி முத்துச்சாமி ஐயரோ, எஸ்.எஸ். வாசனோ தங்கள் கிராமத்தைவிட்டு நகரத்திற்கு வந்ததற்கு திராவிட இயக்கமா காரணம்? திராவிட இயக்கம் பிறப்பதற்கு முன்னாலேயே இவர்கள் நகரத்திற்கு புதிய அதிகாரங்களையும். பொருள் வளத்தையும் தேடித்தான் கோயில்களைக் கைவிட்டு விட்டு வந்தார்கள்.

கோயில்களைக் காப்பாற்றவே முடியாதா ?

எந்தக் கோயில்களை நீங்கள் குறிப்பிடுகிறீர்கள். கோபுரங்களோடு கூடிய கோவிலையா? இல்லை உங்கள் வீட்டிற்குப் பக்கத்தில் இருக்கும் அம்மன் கோவிலையா? அரசு ஆதரவிலே வளர்ந்த மிகப்பெரிய சொத்துடைமை நிறுவனங்களாக இருக்கிற கல்மண்டபங்களோடு கூடிய கோயில்களையும் காப்பாற்ற முடியும். எப்படி முடியும் என்றால் சமூகம் ஜனநாயகப்பட்ட பொழுது கோவில்கள் என்ற சொத்துடைமை நிறுவனங்களும் ஜனநாயகப்பட வேண்டும். ஆனால் அண்மையில் சங்கராச்சாரியார் ‘ஆழ்வார், நாயன்மார்களின் பிறந்தநாட்களை அந்தந்த சாதிக்காரர்கள் கொண்டாட வேண்டும்' என்கிறார். நந்தனார். திருப்பாணாழ்வார் சந்நிதிகளில் பார்ப்பனர்கள் வழிபாடு செய்யமாட்டார்கள் என்பதுதான் இதன்பொருள். பார்ப்பனர்களைத் தலைமைச்சாதி (ஆக உயர்ந்த சாதி) என்று எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் வரை ஆன்மிகத்தில் சமத்துவம் ஏற்படாது. கோயிலும் அனைத்து மக்களுக்கும் உரியது ஆகாது. இதுவரைக்கும் அவை தாக்குப் பிடிப்பதற்கான காரணமே. கோவில் நுழைவுச் சட்டத்தின் விளைவாகத்தான். இனிமேல் அவை வாழவேண்டுமானால் அனைத்து சாதியினரும் தகுதி காரணமாக அருச்சகராகலாம் என்று அண்மையிலே உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறதே. அந்தத் தீர்ப்பை நடைமுறைப்படுத்தினால் இந்தக் கோயில்கள் வாழும். கோயிலை மையமிட்ட கலைகள் காப்பாற்றப்படும். கோயிலிலுள்ள கலைச்செல்வங்கள் அனைத்தும் பாதுகாக்கப்படும். அப்படி ஒரு நிலை வந்தால் கோயில்களைக் காப்பாற்ற முடியும். ஆனால், ‘தலித் என்ற பெயரோடு வந்தால் கோயிலுக்குள் அனுமதிக்கமாட்டோம்’ என்றும் சங்கராச்சாரியார் கூறிவருகிறார். கோயில் அனுமதி அதிகாரம் இவருடைய குடும்பச்சொத்தோ, மடத்தின் சொத்தோ ஆகாது. ஒருவருடைய சாதியை சட்டப்படி அரசாங்கம்தான் அடையாளம் காட்ட முடியும்.

மதச்சிறுபான்மைச் சமூகங்களை எப்படிப் பார்க்கிறீர்கள் ?

தமிழ்நாட்டில் மதச்சிறுபான்மை சமூகங்களுடைய உருவாக்கம் என்ன? வடஇந்தியாவைப் போல அல்ல இங்கே. மிகப்பெரிய கலைச்செல்வங்கள் உடைய கோயில்கள் இருக்கின்றனவே. இவற்றின் மீது இவற்றை உருவாக்கிவிட்டு இன்றைக்கு வேறு மதத்தில் இருக்கிற மக்களுக்கு ஒரு பங்கு இருந்ததல்லவா? அப்படியானால் அவர்கள் இதையெல்லாம் விட்டுவிட்டு ஏன் போனார்கள்? போகவில்லை, அவர்கள் துரத்தப்பட்டார்கள் என்பதுதான் உண்மை. மழையிலும், வெயிவிலும் நின்றுகொண்டு இருக்கிற மக்கள் கோயிலுக்குள் நுழையமுடியாது. மழைக்குக் கூட நுழையமுடியாது. ஏனெனில் சாதியினால் தாழ்ந்தவர்கள். எந்தக் கோயில் திறந்திருந்ததோ அந்தக் கோயிலுக்கு அவர்கள் போய்விட்டார்கள். எனவே ‘இங்கிருந்து துரத்தப்பட்டவர்கள்’ என்று சொல்வதுதான் பொருத்தம். சமூக அரசியல் ஆதிக்கம் காரணமாக, தென்மாவட்டக் கடற்கரையில் இருக்கிற பரதவர் என்ற சாதியினர் தமிழ்நாட்டில் தொல்பழைய சாதியினர். சங்க இலக்கியத்திலேயே அவர்களைப்பற்றிய குறிப்புகள் உண்டு. அவர்கள் 15-ஆம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதியிலேயே நூற்றுக்கு நூறு கிறிஸ்தவர்களாகப் போய்விட்டனர். என்ன காரணம்? அன்றைக்கிருந்த நாயக்கராட்சியின் நெருக்கடி தாங்கமுடியவில்லை. மறுபுறம் கடற்கொள்ளையர்கள், இன்னொருபுறமோ போர்த்துக்கீசியப் படைகள் நம்முடைய மூச்செல்லாம் நம்முடைய மண்ணில் இருப்பதுபோல அவர்கள் மூச்செல்லாம் அந்தக் கடற்கரையிலும், கடலிலும் கிடந்தது. கடலின் மடியிலே தங்களுடைய வாழ்க்கை அமைந்திருக்கிறது என்பதனாலே தங்களை, தங்கள் கடலை, தங்களுடைய புனிதங்களும், நம்பிக்கைகளும் சார்ந்த நெடிய கடற்பரப்பை காப்பாற்றிக்கொள்வதற்காக அனைவரும் போர்த்துக்கீசியரோடு உடன்பாடு செய்துகொண்டு கிறித்தவ மதத்திற்குப் போனார்கள். தவிர, இயேசுவின் சேதியை அப்பொழுது அவர்கள் அறிந்துகொண்டு போகவில்லை. பின்னாலே அவர்கள் அறிந்திருக்கலாம். அது வேறு விசயம். போகிறபொழுது இயேசுவின் செய்தி அவர்களுக்குத் தெரியாது. இப்படித்தான் எல்லா இடத்திலும் நிகழ்ந்தது. வடநாட்டு ஆசிரியர்கள் எல்லாம் எழுதி வைத்து இருக்கிறார்கள். இஸ்லாம் வாளோடு வந்த மதம் என்று. எந்த மதம் வாளைத் தூக்கவில்லை? எல்லா மதங்களும் வாளைத் தூக்கியவைதான். சிலுவைப்போர்கள் நடந்ததும் உண்மைதான். கலிபாக்கள் இடையில் போர் நடந்ததும் உண்மைதான். மதுரையிலே எண்ணாயிரம் சமணர்களைக் கழுவேற்றியதும் உண்மைதான். உலக வரலாற்றை எடுத்துப் பார்த்தால் எல்லா மதங்களுமே ஒருகட்டத்தில் ஆயுதத்தை ஏந்தி அடுத்த மதத்தை ஒடுக்கிய, மதங்கள்தான். இன்றைக்குத்தான். ‘அவரவர் மதம் அவரவர்களுக்கு’ என்கிற ஞானம் எல்லா மதத்துக்காரர்களுக்கும் வந்துள்ளது. சாதி ஆதிக்கமும் பொருளாதார ஆதிக்கமும், அரசியல் அதிகார ஆதிக்கமும், பலமும் உடையவர்களாலே கிறிஸ்தவர்களும். இசுலாமியர்களும் விரட்டப்பட்டார்கள் என்பதுதான் சரியானதாக இருக்கமுடியும். இங்கு அவர்கள் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு இருந்தார்கள். போன இடத்திலே அவர்கள் வாழ்கிறார்கள். அவர்களுடைய வாழ்க்கை இவர்களுக்குப் பொறுக்கவில்லை.

தற்பொழுது இந்துக்களை மதமாற்றம் செய்வது திட்டமிட்ட சதி என்கிறார்களே ?

இங்கு இருந்து விரட்டியதும் சாதியினாலே தாழ்ந்தவர்கள் என்பதும் திட்டமிட்ட சதியில்லையா? ஆம். சாத்திரங்களும் உயர் சாதிகளும் திட்டமிட்ட சதிதான். இன்னமும் நெல்லை மாவட்டத்தில் மட்டும் 160- க்குமேற்பட்ட சிற்றூர்களிலே தனித்தம்ளர் முறை இருக்கிறது. சாதி ரீதியான ஒடுக்குமுறை தமிழ்நாட்டின் பல மாவட்டங்களிலே வெவ்வேறு வடிவிலே வெவ்வேறு சாதி மக்களிடையே இருக்கிறது. இதுவரைக்கும் இந்த நாட்டில் வறுமைக்கோட்டிற்குக் கீழுள்ள மக்களிடையே சாதிக் கணக்கு போட்டுப் பாருங்கள். எந்தக் கோயில் அவர்களைக் காப்பாற்ற முன் வந்தது? ஆற்றோரங்களிலும், புறம்போக்கு நிலங்களிலும், குடிசைகளிலும் வாழ்கிற மக்களை சாதி ரீதியாக கணக்கெடுத்துப் பாருங்கள். இவர்களிலே பெரும்பாலோர் மரபு வழியாக ஆன்மீக அதிகாரத்தால் புறந்தள்ளப்பட்ட மக்கள் அல்லவா?

இந்துத் தலைவர்களிடையே 'தலித்' பற்றியதான பார்வை தற்பொழுது மாறியிருக்கிறதா ?

இல்லை. அவர்கள் மாறியதாகக் காட்டுகிறார்கள். இன்னும் இந்துத் தலைவர்களிடையே கூட சங்கராச்சாரியார் என்ன சொல்கிறார். ‘அம்பேத்காரை பின்பற்றும் மக்கள்’ என்கிறார். வெளிப்படையாகப் பெயர் சொல்லக்கூட அவருக்கு மனமில்லை. இவர்கள் சுத்தமாக இல்லையென்று ஒரு காலத்திலே சொன்னார்கள். இப்பொழுது எதிர்ப்பு வந்துவிட்டதால் அதை விட்டுவிட்டார்கள். யாருடைய சுத்தம் பற்றி யார் பேசுவது? அழுக்குகளை உரமாக்கி அழகான பயிர்களை உருவாக்கும் மனிதன் அசுத்தமானவன். மடாதிபதி சுத்தமானவரா? அசுத்தம் என்பது உடல் உழைப்பை மதிக்காத அதை சுரண்டி வாழுபவரின் பேச்சாகும். ‘திரௌபதி சுத்தமாக இருந்தா ஆபத்திலே கிருஷ்ணனைக் கூப்பிட்டாள். கூப்பிட்டவுடன் உதவிக்கு அவர் வரவில்லையா’ என்று கேட்கிறார்களே வைணவர்கள். இந்தக் கேள்விக்கு சங்கராச்சாரியார் பதில் சொல்வாரா? நூற்றுக்கு இருபது பேராக இருக்கிற தலித் மக்கள் மதம் மாறிப்போய் விடவும் கூடாது. இருக்கிற இடத்திலே ‘இந்து’ என்ற பெயரோடு தலித்துகளும் பிற்படுத்தப்பட்ட மக்களும் பார்ப்பனர்களின் ஆன்மிக அதிகாரத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். பங்காரு அடிகளார் போலப் புதிய நெறிகளைச் கண்டுபிடிக்கக் கூடாது. இதுதான் அவரது எண்ணமாகும்.

ஏதேனும் ஒரு காரணம் பற்றி தங்களுடைய ஆன்மீக அதிகாரத்தையும் மறைமுகமான அரசியல் அதிகாரத்தையும் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் அவர்களுடைய நோக்கம். அதுமட்டுமல்ல. இப்பொழுது அந்த ‘கிறிஸ்தவர் இசுலாமியராக அல்லாத இந்து’ என்கிற அரசியல் சட்டம் சொல்கிற வார்த்தையை ஒரு சமூக ஆதிக்கமாக மாற்றப் பார்க்கிறார்கள். இதனைப் புரிந்து கொண்டால் ‘இந்து’ என்னும், பண்பாட்டு மாயையிலிருந்து நமக்கு விடுதலை கிடைக்கும். அவரவர்கள் அவரவர் தெய்வங்களை நிம்மதியாக வணங்கிவிட்டுப் போவார்கள். நம்முடைய வழிபாட்டு உரிமையினையும், மத உரிமையினையும் நாம் காப்பாற்றிக் கொள்ள முடியும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நான்_இந்துவல்ல_நீங்கள்&oldid=1825701" இலிருந்து மீள்விக்கப்பட்டது