நீளமூக்கு நெடுமாறன்/நீளமூக்கு நெடுமாறன்

விக்கிமூலம் இலிருந்து

கதை : ஒன்று

நீளமூக்கு நெடுமாறன்

ந்தர்வக் கோட்டை இளவரசி மலர்விழி மிகவும் அழகாக இருப்பாள். அவளை மணம் புரிந்து தன் பட்டத்து ராணியாக்கிக் கொள்ள வேண்டுமென்று தேவபுரத்து அரசன் பத்திரகிரி விரும்பினான். ஆனால் இளவரசி மலர்விழி அவனைத் திருமணம் செய்து கொள்ளச் சம்மதிக்கவில்லை. ஏனென்றால், ஒரு மந்திரவாதி அவள் மீது ஒரு மந்திரம் போட்டிருந்தான். அதனால் மலர்விழி திருமணம் செய்து கொள்வதைப் பற்றி நினைக்கவேயில்லை.

பத்திரகிரி ராஜன் மனம் வருந்தி ஒரு தேவதையிடம் சென்று "தாயே! இளவரசி மலர்விழி மனம் மாறி என்னை மனப்பதற்கு என்ன செய்யலாம்?" என்று கேட்டான்.

"இளவரசி மலர் விழியின் அரண்மனை அந்தப்புரத்தில் ஒரு பெரிய பூனை இருக்கிறது. அதன்மேல் அவளுக்கு உயிர். நீ போய் அந்தப் பூனையின் வாலை மிதித்துவிட்டால், மந்திரம் உடைந்து விடும். பிறகு மலர் விழி உன்னை நேசிப்பாள். உன்னைத் திருமண்ம் செய்து கொள்ளவும் இணங்குவாள்” என்றாள் தேவதை.

"ஒரு பூனை வாலை மிதிப்பதற்கு யாராவது பயப்படுவார்களா?" என்று கேட்டுவிட்டு பத்திரகிரி ராஜன் வேகமாக இளவரசியின் அரண்மனைக்குச் சென்றான். அவன் அரண்மனையின் அந்தப்புரக் கூடத்திற்குள் நுழைந்தவுடனே, "மியாவ் மியாவ்!" என்று கத்திக் கொண்டே அந்தப் பூனை தாவி வந்து அவன் காலில் உரசிக் கொண்டு நின்றது. பத்திரகிரி ராஜன் அதன் வாலில் காலை வைக்க முயன்றான். ஆனால், அவன் வாலை மிதிக்கக் காலைத் துக்கிய போதெல்லாம் அந்தப் பூனை மியாவ் மியாவ் என்று கத்தியவாறு சட்டென்று திரும்பிக் கொண்டது.

அன்று முழுவதும் பத்திரகிரி ராஜன் எவ்வளவோ முயன்றான். ஆனால் பூனையின் வாலை மிதிக்க முடியவில்லை. மறு நாளும் காலைத் தூக்கித் தூக்கி வைத்துப் பார்த்தான். ஒரு வாரம் வரை இப்படியே நடந்தது. ஆனால் நடந்த காரியம் ஒரே மாதிரியாகத்தான் இருந்தது. வால் இருக்கும் இடத்திற்கு நேரே பத்திரகிரி ராஜன் தன் காலை தூக்கும் போதெல்லாம் பூனை "மியாவ்! மியாவ்!” என்று கிறீச்சிட்டபடி உடனே தன் உடலைத் திருப்பி வாலைத் தூக்கிக் கொண்டுவிடும்.

ஒரு நாள் அந்த "மியாவ் மியாவ்" பூனை தூங்கிக் கொண்டிருந்தது. அதைக் கண்ட பத்திரகிரி ராஜன் தன் பலம் கொண்ட மட்டும் காலைத் தூக்கி ஓங்கி பூனையின் வாலைக் குறி பார்த்துத் தவறாமல் மிதித்து விட்டான். உடனே பூனை பயங்கரமாகக் கத்திக் கொண்டு துள்ளிப் பாய்ந்தது. அதே சமயத்தில் அது மனித உருவம் அடைந்தது. பூனையாக இருந்தது பொல்லாத மந்திரவாதிதான்! அந்த மந்திரவாதி தன் கண்களில் நெருப்புப் பொறி பறக்க பத்திரகிரி ராஜனை ஏறிட்டு நோக்கி, "என் மந்திரத்தை உடைத்து விட்டபடியால், இதுவரை இளவரசியை மணந்து கொள்ள முடியாமல் இருந்த நீ இப்போது அவளைத் திருமணம் செய்து கொள்ளுவாய்! ஆனால் உன்னைப் பழி வாங்காமல் விட என் மனம் இடங் கொடுக்கவில்லை. உனக்கு ஒரு குமாரன் பிறப்பான். அவன் தன் மூக்கு மிக நீளமாக இருக்கிறது என்பதை அறியும்வரை மிகவும் வருத்தத்தோடு இருப்பான். இது என் சாபம்! இந்த விஷயம் யாரிடமாவது கூறினால், நீ அந்த இடத்திலேயே தலை வெடித்துச் செத்து விழுந்து விடுவாய்!” என்று சபித்தான்.

இதைக் கேட்டு பத்திரகிரி ராஜன் மிகவும் திடுக்கிட்ட போதிலும், மந்திரவாதி மறைந்தவுடன் அவனால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை.

"எனக்குப் பிறக்கப் போகும் குமாரன் நீண்ட மூக்குடையவனாக இருந்த போதிலும், அவன் குருடனாகவோ அல்லது முடவனாகவோ இருந்தால் ஒழிய அவன் தன் மூக்கின் நீளத்தை அறியாமல் இருக்க முடியாது!”

இவ்வாறு மனத்தைத் திடப்படுத்திக் கொண்ட அரசன், மறுபடியும் திருமணத்திற்கு இளவரசியின் சம்மதத்தைக் கேட்கச் சென்றான். இப்போது மலர்விழி உடனே சம்மதித்து விட்டாள்! ஆனால், அவர்கள் இருவரும் நீண்ட நாள் குடும்பம் நடத்தவில்லை. அதற்குக் காரணம், திருமணமாகி ஒரு வருடத்திற்குள் பத்திரகிரி ராஜன் காலமாகி விட்டான். அவன் சாகும் முன் யாருக்கும் தன் இரகசியத்தைக் கூறவும் இல்லை. பத்திரகிரி ராஜன் மாண்டுபோன சில நாட்களுக்குப் பிறகு ராணி மலர்விழி ஒர் இளவரசனைப் பெற்றெடுத்தாள். அவனுக்கு நெடுமாறன் என்று பெயர் வைத்தார்கள். உலகத்திலேயே மிகவும் அழகான நீல விழிகளையும், பவள நிற வாயையும் உடையவனாக நெடுமாறன் விளங்கினான். ஆனால், அவனுடைய மூக்கு மட்டும் மிகப் பெரியதாகவும் நீண்டதாகவும் இருந்தது. பாதி முகத்தை அந்த மூக்கே அடைத்துக் கொண்டு விட்டது. கண்ட ராணி மலர்விழி பெருங் கவலைக்குள்ளானாள். ஆனால், அவளுடைய தோழி மார்கள் அவளுடைய கவலையைப் போக்குவதற்காக, அந்த மூக்கு அவ்வளவு பெரிதல்ல என்றும் கீர்த்தி பெற்ற வரலாற்றுக் காலத்து ராஜாக்களுக்கெல்லாம் இதைப் போல நீண்ட மூக்குகளே இருந்திருக்கின்றன என்றும் சொல்லிச் சமாதானப் படுத்தினார்கள். இதையெல்லாம் கேட்டு ராணி மலர்விழி ஓரளவு தன் கவலையை மறந்து தன் குழந்தை நெடுமாறனை பேணி வளர்த்து வந்தாள். அவளுக்கு இளவரசன் மேல் அளவற்ற அன்பு இருந்தது. நாளடைவில் அவனுடைய மூக்கு அவளுக்குச் சாதாரணமாகத் தோன்றியது.

இளவரசன் நெடுமாறன் மிகவும் கவனமாக வளர்க்கப்பட்டான். அவனுடைய நீளமான மூக்கைப் பற்றிப் பேசாமல் இருக்க எல்லோருமே கவனம் எடுத்துக் கொண்டார்கள். சின்ன மூக்குடையவர்கள் அடைந்த துன்பத்தைப் பற்றியெல்லாம் அவனுக்குக் கதைகள் கூறப்பட்டது. அரண்மனைப் பெண்கள் தங்கள் ராணியின் மனதைச் சமாதானப் படுத்துவதற்காக மூக்கு நீளமாய் வளரட்டும் என்று தங்கள் பச்சைக் குழந்தைகளின் மூக்குகளை அடிக்கடி இழுத்து இழுத்து விடுவார்கள்.

நீள மூக்கு நெடுமாறன் கல்வி கற்க ஆரம்பித்தான். அவனுடைய ஆசிரியர்கள் சரித்திரத்தில் மிகப் பிரசித்தி பெற்ற அரசர்களைப் பற்றியும் அரசிகளைப் பற்றியும் சொல்லி அவனுக்கு அரசியல் ஞானம் புகட்டினார்கள். அவனுடைய அறையில் நீண்ட மூக்குடன் கூடிய மாவீரர்களின் படங்கள் பலப்பல மாட்டி வைக்கப்பட்டிருந்தன. நீளமான மூக்குதான் ஒரு மனிதனுக்கு உண்மையான அழகு என்று அவன் எண்ணினான். அதனால் இந்த உல்கிமே கிடைத்தாலும் அவன் தன் மூக்கின் நீளத்தில் சிறிது கூடக் குறைவதை விரும்பமாட்டான்.

அவனுக்கு வயது இருபது ஆனபோது, அவனுடைய திருமணத்திற்கு ஒரு பெண் பார்க்க வேண்டும் என்ற எண்ண ம் அவனைப் பார்த்தவர்களுக்கெல்லாம் உண்டாயிற்று. இளவரசிகள் பலரின் உருவப் படங்கள் நெடுமாறனிடம் காட்டப்பட்டன. அப்படங்களிலே வசந்தகுமாரி என்ற இளவரசியின் உருவம் நெடுமாறனுக்கு மிகவும் பிடித்திருந்தது. பல ராஜ்யங்களுக்கு அதிபதியாக விளங்கும் ஒரு பெரிய மகாராஜாவின் மகள்தான் வசந்தகுமாரி! அவள் ஒரே பெண்ணாதலால் அந்த மகாராஜாவின் ராஜ்யத்திற்கும் அவளே வாரிசாக இருந்தாள். அவளுடைய செல்வ நிலையைப் பற்றி இளவரசன் நெடுமாறன் சிறிதும் எண்ணவில்லை. அவளுடைய அழகையே அவன் விரும்பினான்.

ஆனால் வசந்தகுமாரியின் மூக்கு மிகவும் சிறியது! மிகவும் அழகானதும் கூட! ராஜ சபையினருக்கு இது ஏமாற்றத்தைய அளித்தது. ராஜகுமாரனைச் சந்தோஷப் படுத்துவதற்காக சின்ன மூக்குடையவர்கள் ராஜ சபைக்கு வரும் போதெல்லாம் அனைவரும் வாய் கிழியச் சிரித்து சின்ன மூக்கர்களைக் கேலி பண்ணுவார்கள். அதுபோலவே அவர்கள் வசந்தகுமாரியின் சின்ன மூக்கையும் கேலி செய்து சிரித்தார்கள். நீளமூக்கு நெடுமாறனுக்கு இந்த நிகழ்ச்சி கோபத்தை உண்டாக்கியது. வசந்த குமாரியின் மூக்கைக் கேலி பண்ணிய இரண்டு அதிகாரிகளை அவன் உடனே வேலையிலிருந்து நீக்கிவிட்டான். அதைக் கண்டதும் மற்றவர்கள் இதைக்

கண்டு, இளவரசனின் கருத்துக்கு மாறாக எதுவும் சொல்லாமலிருக்கப் பெரிதும் கவலை எடுத்துக் கொண்டார்கள்.

"ஆண்களுக்குப் பெரிய நீளமான மூக்கு இல்லையென்றால் அவலட்சணமாக இருக்கும் என்பது உண்மை தான். ஆனால் பெண்களுக்குச் சின்ன மூக்குத்தான் சிறப்பளிக்கும்!” என்றும் ஒருவன் கூறினான்.

"உலகப் பிரசித்தி பெற்ற எகிப்து தேசத்து அரசி கிளியோபாட்ரா குறுகிய மூக்குடையவளாகவே இருந்தாள் என சரித்திரக் குறிப்புகள் சொல்லுகின்றன,' என்றான் இன்னொருவன். வரவேற்கத்தக்க இவ்வார்த்தைகள் கூறிய நபர்களுக்கு நீளமூக்கு நெடுமாறன் நிறைய வெகுமதிகள் கொடுத்தான்.

தன்னை மணம் புரிந்து கொள்ள வேண்டுமென வசந்தகுமாரிக்கு நெடுமாறன் தூதுக் கோஷ்டி ஒன்றை அனுப்பினான். வசந்தகுமாரி அதற்குச் சம்மதித்துத்து அவர்களுடனேயே புறப்பட்டு நெடுமாறனின் நகருக்கு வந்தாள். ஒப்பற்ற பேரழகியாகிய அவளைக் காணப் பொறுமையின்றி நீள்மூக்கு நெடுமாறன் வெகு ஆவலோடு காத்திருந்தான். வழியிலேயே அவளைச் சந்திக்கவும் புறப்பட்டான். வழியில் கண்டு, அவளைப் பல்லக்கில் இருந்து இறக்குவதற்காக நெடுமாறன் சென்ற பொழுது, அவனுடைய விரோதியான பழைய மந்திரவாதி திடீரெனத் தோன்றி வசந்தகுமாரியைத் தூக்கிக் கொண்டு மறைந்து விட்டான். -

அதைக் கண்டு நெடுமாறன் அடைந்த வேதனை இவ்வளவு அவ்வளவு அல்ல. ஆனால், அவன் தன் வேதனையை அடக்கிக் கொண்டு இளவரசி வசந்த குமாரியை நாடெங்கும் தேட ஆரம்பித்தான். வசந்த குமாரியை மீட்காமல் அவ்ன் தன் அரண்மனைக்குத் திரும்பவே விரும்பவில்லை.

நெடுமாறன் தன் ராஜ பரிவாரங்களில் யாரும் தன்னுடன் இருக்கக் கூடாதென்று கூறி திருப்பி அனுப்பி விட்டான். குதிரையை அதன் விருப்பப்படி போக விட்டுவிட்டு அது போகும் இடங்களிலெல்லாம் அவன் வசந்தகுமாரியைத் தேடியலைந்தான்.

ஒருநாள் நெடுமாறன் ஒரு பெரிய சமவெளியில் சென்றான். ஒரு சிறு குடிசை கூட அவனது கண்களுக்குப் புலப்படவில்லை. இரவு சூழ்ந்தபோது அவனுக்கும் அவனுடைய குதிரைக்கும் பசி தாங்க முடியவில்லை. சிறிது துரத்தில் ஒரு குகையில் வெளிச்சம் தெரிவதைக் கண்டு நெடுமாறன் அவ்விடத்திற்கு விரைந்து சென்றான்.

அந்தக் குகையினுள் நெடுமாறன் நுழைந்தபோது, அங்கே ஒரு சிறு கிழவி இருப்பதைக் கண்டான். அக்கிழவி க்கு வயது நூறுக்கு மேலிருக்கும். தன் குகைக்குள் யார் வந்திருப்பதென்று பார்ப்பதற்காக அக்கிழவி தன் மூக்குக் கண்ணாடியை எடுத்தாள். அதை அவள் மாட்டிக் கொள்ளச் சிறிது கஷ்டமாக இருந்தது. ஏனெனில் அவளுடைய மூக்கு மிகச் சிறியதாகச் சப்பை மூக்கு போல இருந்தது. அவள் கண்ணாடியை மாட்டிக் கொண்டு நெடுமாறனைப் பார்த்தபோது இருவரும் ஒருவரையொருவர் பார்த்து, "ஆ! என்ன விசித்திரமான மூக்கு!” என்று கூறிச் சிரிக்கலானார்கள்.

“பாட்டீ! உங்கள் மூக்கைப்போல என் மூக்கு அவ்வளவு வேடிக்கையானதல்ல; ஆனால், மூக்கைப் பற்றி நாம் பிறகு பேசலாம். தயவு செய்து ஏதாவது சாப்பிடக் கொண்டு வாருங்கள். என் குதிரைக்கும் தீனி போட வேண்டும். ஏனெனில் எங்கள் இருவருக்குமே பசி காதை அடைக்கிறது.” என்றான் நீள்மூக்கு நெடுமாறன்.

"இதோ சாப்பாடு போடுகிறேன். உன் மூக்கு விசித்திரமாக இருந்தாலும், என் இறந்த நண்பருடைய மகன் நீ! எனக்கு அவரிடம் அன்பு மிக அதிகம்! அவருடைய மூக்கு அழகாகவும், பலமாகவும் இருக்கும்!" என்றாள் அந்தக் கிழவி. அவள் ஒரு வன தேவதை!

"அப்படியானால் என் மூக்கிற்கு என்ன குறைவு?" என்று கேட்டான் நீளமூக்கு நெடுமாறன்.

"குறையொன்றுமில்லை. கொஞ்சம் அதிகமாகத் தான் இருக்கிறது. அதனால் என்ன் வந்துவிட்டது? இன்னும் நீளமான மூக்கு இருந்தாலும் ஒருவன் நல்லவனாக இருக்க முடியும்.! உன் தந்தை என் நண்பர் என்று சொன்னேனல்லவா? உட்கார். அவர் முன்பு அடிக்கடி என்னை வந்து பார்த்துவிட்டுப் போவார். கடைசியாக நானும் அவரும் பேசிக் கொண்ட விஷயங்களை உனக்குச் சொல்கிறேன்!” என்றாள் வனக்கிழவி.

"அம்மா தேவதையே! இன்று முழுவதும் நான் சாப்பிடவேயில்லை. தயவு செய்து முதலில் எனக்கு ஏதாவது சாப்பிடக் கொடுத்துவிட்டுப் பிறகு உங்கள் கதையைச் சொல்லுங்கள். நான் கவனிக்கிறேன்.” என்றான் நெடுமாறன்.

"ஐயோ பாவம்! இப்போதே உனக்கு ஏதாவது கொடுக்கிறேன். நீ சாப்பிடும்போதே நான் என் கதையைச் சில சொற்களில் முடித்துவிடுகிறேன். நான் எப்போதுமே அதிகம் பேசுவதில்லை. மூக்கு நீண்டதாயிருந்தாலும் பாதகமில்லை. வாய் நீளக் கூடாது என்பார்கள். நான் சிறுமியாக இருந்தபோது, நான் அதிகம் பேசுவதில்லை. இதற்காக மக்கள் என்னைப் பெரிதும் பாராட்டிப் பேசுவார்கள். அவர்கள் என் தாயிடமே என் வாயடக்கத்தைப் பற்றிப் புகழ்வார்கள். என் தாய் ஒரு மகாராணி! நான் ஒரு ராஜகுமாரி! என் தந்தை...”


"ஏன் உங்கள் அப்பா பசித்தால் சாப்பிடுவதில்லையோ?” என்று கேட்டான் நெடுமாறன் பசி தாங்காமல்.

"நன்றாகச் சாப்பிடுவார்! இதோ உனக்குச் சாப்பாடு கொண்டு வருகிறேன். நான் சொல்ல வந்த விஷயம் என்னவென்றால், என் அப்பா..."

“பாட்டி! நான் சாப்பிடுவதற்கு முன்னால் எதையும் கேட்கப்போவதில்லை! நான் வயிறு நிரம்பாத வரை என் காதுகள் திறக்காது!" என்று நெடுமாறன் சொல்ல வாயெடுத்தான். ஆனால் அவன் சட்டென்று வாயை அடக்கிக் கொண்டான் . ஏனெனில், தேவதையின் உதவி அவனுக்குத் தேவையாக இருந்தது!

அதனால் நெடுமாறன் தந்திரமாக, "பாட்டி! நீங்கள் சொல்லப் போகும் விஷயம் என் பசியை மறக்கச் செய்து அடக்கிவிடும். ஆனால், நம் பேச்சைக் கேட்டறிய முடியாத இந்த ஊமைப் பிராணிக்குப் பசி தாங்க முடியாது." என்று பண்பாகச் சொன்னான்.

தன் கதை சொல்லும் திறமைக்கு நெடுமாறன் வழங்கிய பாராட்டுரையைக் கேட்டு வனக்கிழவி மனங்குளிர்ந்து போனாள்.

"இளவரசே இனி நீ சிறிது நேரங்கூட காத்திருக்க வேண்டியதில்லை. உன் மூக்கு மிக நீள்மாக இருந்தாலும் நீ நல்ல குணமுடையவ்னாக இருப்பதால், உன் விருப்பத்தை நிறைவேற்றுவதில் நான் மகிழ்ச்சியே அடைவேன்” என்று சொல்லிவிட்டு வனக்கிழவி வேலைக்காரர்களைக் கூவியழைத்தாள்.

அவள் திரும்பித் திரும்பி தன் மூக்கைப் பற்றியே பேசுவது நெடுமாறனுக்கு எரிச்சல் உண்டாக்கியது. அது தன் நன்மைக்காகத்தான் என்பதை அவனால் உணர முடியவில்லை.

"இந்தக் கிழவி என்ன எப்பொழுது பார்த்தாலும் என் மூக்கு நீளம் நீளம் என்றே சொல்லிக் கொண்டிருக்கிறாள். ஏதோ அவளுக்குக் குறைகிறதை நான் திருடி எடுத்து வைத்துக் கொண்டதாக நினைப்பு போலும். எனக்கு மட்டும் இப்போது பசியாக இல்லாவிட்டால், இந்த வாயாடியை விட்டுப் போயே போய்விடுவேன். இதிலே அவள் தான் மிகக் குறைவாகப் பேசுவதாக வேறு நினைத்துக் கொண்டிருக்கிறாள்!” என்று நெடுமாறன் தனக்குள்ளேயே எண்ணிக் கொண்டான்.

அவன் இவ்வாறு சிந்தனையில் ஈடுபட்டிருக்கும் போதே வனக்கிழவி யின் வேலையாட்கள் அவன் எதிரில் சாப்பாடு கொண்டு வந்து பரிமாறினார்கள். நெடுமாறன் தன் பசிதீரச் சாப்பிட்டான். அவன் சாப்பிடும்போது வனக்கிழவி தன் வேலையாட்களிடம் "அதை வை! இதை வை! தயிர் ஊற்று! பழத்தை உரித்துப் போடு!” என்று கட்டளைகள் இட்டுக் கொண்டேயிருந்தாள்.

நெடுமாறன் தன் வயிறாரச் சாப்பிட்டுக் கொண்டே தனக்குள் இவ்வாறு நினைத்துக் கொண்டான். "இந்த தேவதைக்கு மூக்கு சிறியதாக இருக்கிறது. அதுதான் அழகானது என்று அவளைச் சுற்றியிருப்பவர்கள் புகழ்ந்து பேசியிருக்கிறார்கள். இவள் பெரிய வாயாடியாக இருக்கிறாள். இவள் மிகக் குறைவாகப் பேசுவதாக மற்றவர்கள் பாராட்டி யிருக்கிறார்கள். நான் இங்கு வந்தது நல்லதுதான் நம் முன்னால் நம் குறைகளை மறைத்து நம்மைப் பெரிதும் போற்றிப் பேசுகிறவர்கள் உண்மைகளை எவ்வளவு தூரம் நாம் உணராதபடி மறைத்து விடுகிறார்கள் என்பதை அறிந்து கொண்டேன்! இது போன்ற துதிபாடும் புழுகவுரையார்களை இனி நான் என் அருகிலும் அண்டவிடமாட்டேன். உள்ள குற்றத்தை மறைத்து இல்லாத குணங்களை ஏற்றி பாடும் பாதகர்களை என்னிடம் நெருங்க விடமாட்டேன்!” என்று நெடுமாறன் நினைத்துக் கொண்டான்.

ஆனால் பாவம்! அவனுடைய மூக்கைப் புகழ்ந்து சொன்னவர்கள் அவனை எவ்வளவு முட்டாளாக்கி விட்டார்கள் என்பதை அவன் உணரவேயில்லை!

நெடுமாறன் பசிதீரச் சாப்பிட்டு விட்டு "அப்பாடா!" என்று உட்கார்ந்த போது கிழத்தேவதை "இளவரசே! உன் முகத்தைக் கொஞ்சம் அந்தப் பக்கம் திருப்பிக் கொள். உன் மூக்கின் நிழல் என் சாப்பாட்டுத் தட்டில் விழுந்து தட்டில் என்ன இருக்கிறதென்று நான் பார்க்க முடியாமல் செய்கிறது. ஆமாம் போதும், அவ்வளவு போதும்! என்னவோ உன் மூக்கு இருக்கிற நீளம் எனக்கு ஏதோ போல் இருக்கிறது!" என்றாள்.

'பாட்டி, என் மூக்கைப் பற்றியே பேசுவதை நிறுத்திக் கொள்ளுங்கள். அது இருக்க வேண்டியபடி இருக்கிறது. அதைக் குறைத்துக் கொள்ள நான் விரும்பவேயில்லை!” என்றான் நீளமூக்கு நெடுமாறன்.

"ஓகோ! அதைப் பற்றிப் பேசினாலே உனக்குக் கோபம் வருகிறதோ ! நெடுமாறா! பாவம்! உன்னைக் கோபம் கொள்ளச் செய்ய வேண்டுமென்பது அல்ல என் நோக்கம். நான் உனக்கு நல்லது செய்யவே எண்ணுகிறேன். உன் மூக்கைக் கண்டு என்னால் அதிர்ச்சியடையாமல் இருக்க முடியவில்லை. உனக்குப் பிடிக்கவில்லை என்றால் அதைப் பற்றி நான் மேற்கொண்டு பேசவில்லை. உனக்குச் சப்பட்டையான மூக்குத்தான் இருக்கிறதென்று நான் எண்ணிக் கொள்கிறேன். உண்மையைச் சொல்லப் போனால் உன் மூக்கைக் கொண்டு மூன்று மூக்குகள் செய்யலாம்!” என்றாள் காட்டுக் கிழவி.

அவள் மேலும் தொடர்ந்து தன் மூக்கைப் பற்றியே பேசுவதைக் கேட்ட நெடுமாறன் கோபம் கொண்டு அங்கிருக்கப் பிடிக்காமல் குதிரை மேலேறிக் கொண்டு புறப்பட்டு விட்டான்.

வசந்த குமாரியைத் தேடிக் கொண்டு அவன் சென்ற ஊர்களிலெல்லாம் இருந்த மக்களுக்குப் பைத்தியமோ என்று நெடுமாறன் எண்ணினான். ஏனென்றால் அவன் மூக்கு அதிக நீளமாக இருப்பதாகவே பேசினார்கள் . அவனைப் பார்த்தவர்கள் எல்லாம் அவன் மூக்கைப் பற்றியே பேசிக் கொண்டார்கள். அவனுடைய ராஜ சபையினர், அவ்வளவு திறமையாக, அவன் நம்பும்படியாகப் போதித்து வைத்திருந்தார்கள். அவர்களுடைய புகழ்ச்சிகளைக் கேட்டு மனத்தேறிய நெடுமாறன் தன் மூக்கு உண்மையிலேயே நீண்டது என்பதை உணர முடியவில்லை.

கானகத்துக் குகையில் இருந்த கிழவித் தேவதை தன்னால் முடிந்தவரை அவனுக்கு நன்மை செய்ய முடிவு செய் தாள். அவள் இளவரசி வசந்த குமாரியைத் தேடிப் பிடித்து, நெடுமாறன் செல்லும் பாதையில் ஒரு பளிங்கு மண்டபத்தை உண்டாக்கி அதற்குள் வசந்த குமாரியை அடைத்து வைத்தாள். அந்தப் பளிங்கு மண்டபத்துக்குக் கதவுகளே கிடையாது. ஒரே ஒரு ஜன்னல் மட்டும் இருந்தது.

அந்தப் பளிங்கு மண்டபத்தையும் ஜன்னலில் வசந்தகுமாரியையும் கண்டதும் நெடுமாறனுக்கு ஒரே ஆனந்தமாக இருந்தது. அப்போது அவனுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியில் தலைகால் புரியவில்லை. அந்தப் பளிங்கு மண்டபத்தை உடைத்து வசந்த குமாரியை வெளிப்படுத்த அவனுக்குச் சக்தியில்லை.

வசந்தகுமாரி ஒரு புன்சிரிப்புடன் நெடுமாறனை நோக்கி ஜன்னல் வழியாகத் தன் கையை வெளியில் நீட்டினாள். அந்தக் கையை நெடுமாறன் அன்போடு பிடித்து ஆவலோடு தன் நெற்றியில் வைத்துக் கொள்ள முயன்ற போதெல்லாம், அந்தச் செந்தாமரைக் கையில் தன் சிறுவாயை வைத்து அவன் அன்பு முத்தமிடக் குனிந்த போதெல்லாம் முன்னே நீட்டிக் கொண்டிருந்த நீளமான மூக்குத் தடைப்படுத்தியது. அப்போதுதான் முதன் முதலாக நெடுமாற்ன் தன் மூக்கு அளவுக்கு மீறி நீளமானது என்பதை உணர்ந்தான். அவன் அந்த மூக்கைப் பிடித்து ஒரு பக்கமாக வளைத்துக் கொண்டு அவள் கையைத் தன் வாயருகிலே கொண்டுவந்து மிகச் சிரமப்பட்டு ஒர் அன்பு முத்தம் கொடுத்து விட்டான்.

"என் மூக்கு மிக நீளமாயிருக்கிறது என்பது உண்மைதான்!”

இந்த வார்த்தைகள் அவன் வாயிலிருந்து வெளிப்பட்ட உடனே அந்தப் பளிங்கு மண்டபம் துண்டு துண்டாய்த் தூள் தூளாய் இடிந்து விழுந்தது. வசந்த குமாரியின் பக்கத்தில் கிழத் தேவதை வந்து நின்றாள்.

"நெடுமாறா அதை மட்டுமல்ல, நீ எனக்கு மிகவும் கடமைப்பட்டிருக்கிறாய் என்பதையும் நீ ஒப்புக் கொள்ள வேண்டும். ஏனென்றால் உன்னுடைய நன்மைக்காக நான் எவ்வளவு பாடுபட்டேன் என்பதை நீ தெரிந்து கொள்ள வேண்டும். உன் மூக்கைப் பற்றி நான் எவ்வளவு பேசினாலும் நீ அதை உணரமாட்டாய் என்பது எனக்குத் தெரியும். உன் விருப்பத்திற்குத் தடையாக இருந்தால் ஒழிய அந்த மூக்கின் குறையை நீ உணரமாட்டாய் என்பது என் மனதிற்பட்டது. அதனால்தான் இந்த ஏற்பாடு செய்தேன். நம் உடலையும் உள்ளத்தையும் பொறுத்தவரையில் நம்மிடமுள்ள அவலட்சணத்தை நம் அகங்காரம் மறைத்துக் காட்டுகிறது. அதனால் நாம் ஏமாறுகிறோம்!” என்றாள் கிழத் தேவதை.

இந்த உண்மையை நெடுமாறன் புரிந்து கொண்டான். பிறகு கிழத் தேவதையின் அருளால், அவனுடைய நீளமூக்கு குறுகிக் குறைந்து அழகாக மாறியது. அதன் பிறகு, வசந்த குமாரியை மணம் புரிந்து கொண்டு நெடுமாறன் மன மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தான்.