உள்ளடக்கத்துக்குச் செல்

நெஞ்சக்கனல்/11

விக்கிமூலம் இலிருந்து

11

மலக்கண்ணன் அமைச்சராகிவிட்டார். நிதி, அறநிலையம்ஆகியதுறைகள் அவர் பொறுப்பில்விடப்பட்டன. காபினட் வரிசையில் அவர் இரண்டாவதாக வந்துவிட்டார் பட்டியல் வெளியான அன்று வெறும் பெயர் வரிசையில் தான் அவர் நாலாவதாக இருந்தார். பின்பு அவருக்கு நிதியினால் இரண்டாவது இடம் கிடைத்தது கமலக்கண்ணனே ஆசைப்பட்ட ‘இண்டஸ்டரீஸ் அண்ட் லேபர்’ அவருக்குக் கிடைக்கவில்லையானாலும் அதைவிட முக்கியமான ‘நிதி’ கிடைத்ததில் பெருமகிழ்ச்சி அடைந்திருந்தார் அவர் . ‘நிதியும் தெய்வங்களும் உங்கள் பொறுப்பில் விடப்பட்டிருக்கிறார்கள்’ என்று ஒரு நண்பர் சிரித்துக்கொண்டே வேடிக்கையாகப் பாராட்டினார் கமலக்கண்ண்னின் வழக்கமான முறைகளை இந்த மந்திரி பதவி ஒரளவு மாற்றியது. அவருடைய தொழில் நிறுவனங்களைத் தவிர மந்திரி பதவி வேலைகளை வேறு அவர் கவனிக்க வேண்டியிருத்தது. காலையில் மிகமிகத் தாமதமாகவும் சோம்பேறித்தனமாகவும் எட்டரை மணி, ஒன்பதரை மணிக்குப் படுக்கையிலிருந்து எழுந்திருக்கிறவர் கண்டிப்பாக இப்போது முன் கூட்டியே எழுந்திருக்க வேண்டியிருந்தது. காலை ஏழு மணியிலிருந்தே பலவிதமானவர்கள் பார்க்க வரத்தொடங்கினார்கள். அவருடைய பழக்க வழக்கங்கள் அவரை ‘வைகறைத் துயிலெழ’ விடுவதாயில்லை அவருடைய பங்களா முகப்பில் புதிதாக போலீஸ் ‘செண்ட்ரி’ கூடாரம் ஒன்று முளைத்தது. வராண்டாவில் விடிந்ததும் பத்துப் பேராவது காத்திருக்கும் கூட்டம் தினசரி இருந்தது. கம்பெனி வேலைகளை வேறு பொறுப்பான ஆட்கள் கைக்கு மாற்றினார். தாம் டைரக்டராகவும். பார்ட்னராகவும் இருந்த தொழில் நிறுவனங்களை மனைவி பேருக்கும், தாயின் பேருக்கும், வேறு நம்பிக்கையான உறவினர்கள் பேருக்குமாக மாற்றினார். பாராட்டுக் கூட்டங்கள் விருந்துகள் ஒய்வதற்கே இரண்டு மாதங்கள் ஆகும் போல் தோன்றியது.

மந்திரி பதவியை ஏற்ற தினத்தன்று இரவில் அவருக்கு மிகவும் வேண்டிய தொழிலதிபர்கள் யாவரும் சேர்ந்து ஒரு விருந்து கொடுத்தனர். அந்த விருந்துக்கு அவருடைய நெருங்கிய நண்பர்களும், தொழிலதிபர்களும் ஆகிய குமரகிரி டெக்ஸ்டைல்ஸ் குப்புசாமி நாயுடு, அம்பாள் ஆட்டோ மொபைல்ஸ் கன்னையா செட்டியார், கொச்சின் சாமில்ஸ் குமாரசாமி ஐயர், குபேராபேங் சேர்மன் கோபால் செட்டியார் எல்லாரும் வந்திருந்தார்கள். வழக்கமாகவே நெருங்கிய நண்பர்களாகிய அவர்கள் இப்போதுதான் புதிதாக மதிக்கத் தொடங்கியவர்களைப் போலக் கமலக்கண்ணனை மதிக்கத்தொடங்கினர். கமலக்கண்ணனுக்குத் திடீரென்று அது செயற்கையாகத் தோன்றியது. இப்படி மரியாதையையும், விருந்தையும், பாராட்டையும் எதிர்கொள்கிற வேளைகளில் எல்லாம் – எருக்கம்பூ மாலையுடன் காந்திராமன் தன் முன் நின்ற அந்த முதல் அவமானம் ஒரு விநாடி அவர் மனத்தில் நினைவு வரத்தவருவ தில்லை.

அவரிடமே நாலைந்து கார்கள் இருந்தாலும், தேசியக் கொடிபறக்கும் கப்பல்போல் பெரிய வெளிநாட்டுக்கார் – போர்டிகோவில் அரசாங்க சின்னமாக வந்து நின்றது அதில் தான் அவர் தினசரி செக்ரடேரியட்டுக்குப் போய் வந்தார். நிறையப் பிரசங்கங்களுக்கும், தலைமை வகிக்கவும் போய் வரவேண்டிய நிர்ப்பந்தம் இருந்ததனால் தமிழ்ப்பண்டிதர் வெண்ணெய்க்கண்ணனாரின் உதவி அதிகமாகத் தேவைப்பட்டது. எந்தக்கூட்டத்திற்காக யார் வந்து கேட்டாலும் மறுக்காமல் ஒப்புக்கொண்டு ஒரு பொதுப் பிரமுகராக உயர ஆசையிருந்தது அவருக்கு. தம்முடைய பெர்ஸனல் செகரெட்டரியை ஒரு நாள் தனியே அறைக்குள் அழைத்துச் சென்று கூச்சமில்லாமல் கீழ்வரும் அறிவுரைகளைக் கூறினார் கமலக்கண்ணன்.

‘எந்தக் கூட்டத்துக்குக் கூப்பிட் வந்தாங்கன்னாலும் ‘வால்போஸ்டர்’ போடு வாங்களான்னு தெரிஞ்சுக்குங்க. ‘வால்போஸ்டர் போட வசதி இல்லேன்’னாங்கன்னா ‘வால் போஸ்டர் கண்டிப்பாப் போடனும், அப்பத்தான் மத்திரி வர்ரத்துக்கு, ஒரு கெளரவமா இருக்கும்’னு வற்புறுத்திச் சொல்லிப்பிடனும். எந்தக்கூட்டம்னாலும் ஐயா தலைமை தாங்கத்தான் ஒத்துக்குவார்னு சொல்லிப்பாருங்க. இல்லாட்டி முக்கியமான ஏதாவது ஒன்னைச் செய்யற மாதிரி ‘ப்ரோகிராம்’ மட்டும் ஒத்துக்குங்க. சும்மா ‘பட்டாணிக் கடலை’க் கூட்டம்லாம் வேண்டவே வேண்டாம். நாம இப்ப இதிலே இருந்தாலும் பரம்பரை பரம்பரையா நம்ம இப்ப வழக்கப்படி– பழைய ஜஸ்டிஸ் கட்சி சம்பந்தமான ஆட்களும் இங்கே தேடி வருவாங்க. அவங்களையும் முகஞ் சுளிக்காமே திருப்திப்படுத்தி அனுப்பனும்.”

அந்தர்ங்கக்காரியதரிசி பெருமாள்கோவில் மாடுமாதிரி தலையை ஆட்டிவைத்தார். தினசரி செக்ரடேரியட் போவதுல் பைல் பார்ப்பதும், செகரட்டரி, டெபுடிசெகரட்டரிகளை ஆளுவதும் பெருமையாகத்தான் இருந்தன. அந்தப் பெருமைக்கும், பதவியின் புகழுக்கும் இடையே அவர் அஞ்சி நடுங்க வேண்டிய பலவீனங்களும் இருந்தன.

பதவி ஏற்ற மறு மாதமே புதிய பட்ஜெட்டை அவர் தயாரித்தளிக்க வேண்டியிருந்தது. திறப்புவிழா, தொடக்கவுரை, தலைமையுரை, முதலியவற்றுக்காக அலைந்து திரி வதைக் குறைத்துக்கொண்டு பட்ஜெட்டுக்காக அவர்காரிய தரிசிகளுடனும் பொருளாதார ஆலோசகர்களுடனும் நேரத்தைக் கழித்துக்கொண்டிருந்த சமயத்தில்–செக்ரட் டேரியட்டில் இருந்து களைப்பாகவும் அலுப்பாகவும் வீடு திரும்பிய மாலை வேளை ஒன்றிலே முற்றிலும் எதிர்பாராத மூலையிலிருந்து ஒரு பயமுறுத்தல் அவரை நெருங்கியது.

வரவேற்பு அறையிலே உட்கார்ந்து மாலைத் தினசரி ஒன்றைப் படித்துக்கொண்டிருந்தார் அவர் வேர்க்க–விறு விறுக்கக் கலைச்செழியன் எங்கிருந்தோ வந்துசேர்ந்தான். அவன் கையில் ஏதோ இரண்டாக மடித்த பத்திரிகை ஒன்றிருந்தது. முகத்தில் பதற்றமும் பரபரப்பும் தெரிந்தன.

“என்ன சமாசாரம்? நான் ரொம்ப பிஸி. ‘பட்ஜெட்’ வேலைகள் ஏராளமா இருக்கு...நீ இன்னொரு நாள் வாயேன்...” என்று அவனைத் தட்டிக்கழிக்க முயன்றார் அவர். இப்போதெல்லாம் அவனைப் பார்த்தாலே எரிச்சலாக இருந்தது அவருக்கு. அவனோ பதறினான். அவன் குரல் கூசிக் கூசி வந்தது.

“தலைபோற காரியம் சார்! இப்பவே கவனிக்காமே விட்டோம்னா ஊர் சிரிச்சிப்பிடும்” என்று கையிலிருந்த பத்திரிகையைக் காண்பித்து ஏதோ கூறினான் அவன். அவரோ கோபமாக இரைந்தார்.

“அப்பிடி என்ன தலைபோற காரியம்! சொல்லித் தொலையேன்...”

“உள்ளே வாங்க சார்! இங்கே வச்சு–இப்படி, இரைஞ்சு பேசற காரியமில்லே–” என்று வரவேற்பு அறையை ஒட்டி அடுத்தாற்போலிருந்த உட்பகுதியைக் காண்பித்து அவரைக் கூப்பிட்டான் அவன். அவருக்கு அவன்மேல் கோபம் அதிகமாகியது.

“சும்மா தொந்தரவு பண்ணாதே! உனக்கு இப்ப என் நெலைமை தெரியும். முன்னே மாதிரி நேரமில்லே. பதவி, பொறுப்பு எல்லாம் இருக்கு! ஏதாவது செலவுக்கு வேணும்னா வாங்கிட்டுப் போ...நேரமில்லே”–

இப்போது அவனும் தன் பேச்சில் முறுக்கை ஏற்றினான். ஆத்திரமாகவே அவருக்குப் பதில் வந்தது.

“சார்! உங்க நன்மைக்காகத்தான் இதை இப்பவே நினைவு படுத்த வந்தேன் வேனுமானால் கவனிச்சி ஏதாவது செய்வோம். இல்லேன்னா அவன் பாடு உங்க பாடு...பேர் நாற வேணாம்னு பார்க்கிறேன் அப்புறம் உங்க இஷ்டம்.”

“அவன் பாடுன்னா...எவன் பாடு...?”

“அதுதான் முழுக்க வந்து கேட்க மாட்டேன்கிறீங்களே?”

வேண்டா வெறுப்பாக அவனோடு உள்ளே எழுந்து சென்றார் அவர். ‘உண்மை ஊழியன்’ என்ற அந்தப் பத்திரிகையின் முதல் பக்கத்திலே கட்டம் கட்டிய ஒர் அறிவிப்பைப் பிரித்து அவரிடம் காட்டினான் கலைச்செழியன். எடுத்த எடுப்பிலேயே அது ஒரு மஞ்சள் பத்திரிகை என்பதும் ‘பிளாக்–மெயில்’ செய்வதையே தொழிலாகக் கொண்டது என்பதும் கமலக்கண்ணனுக்குப் புரிந்துவிட்டது. அப்படிப் புரிந்ததனால் விளைந்த கோபத்தோடும் அருவருப்போடும் அந்தக் கட்டத்திற்குள் இருந்த அறிவிப்பை ஏறிட்டுப்பார்த்தார் அவர். மீண்டும்இரண்டாவது முறையாகக் கசப்போடு சென்றது அவருடைய பார்வை.

நடிகை மாயாதேவிக்கும்
பிரபல தொழிலதிபருக்கும் தொடர்பு
சுவையான விவரங்கள் அடுத்த
‘உண்மை ஊழியனில்’ பாருங்கள்.

என்று அந்தப் பக்கத்தில் கட்டம் கட்டிய இடத்தில் அச்சிடப்பட்டிருந்தது.

“காலிப்பயல்கள்! என்னைப் பயமுறுத்திப் பணம் பறிக்கலாம் என்று எண்ணிக் கொண்டார்களா என்ன? இப்போதே மான நஷ்ட வழக்குப்போட வக்கீலைக் கூப் பிடுகிறேன் பார்!” என்று சீறினார் கமலக்கண்ணன்.

“சார்! பதறாதீங்க...அதெல்லாம் ஒண்ணும் பலிக்காது. இப்பவே அப்படி எல்லாம் மானநஷ்ட வழக்குப் போடமுடியாது.”

“ஏன்? அதைப்பத்தி உனக்கென்ன தெரியும்?”

“பிரபல தொழிலதிபருக்கும்’னு மட்டும்தானே போட்டிருக்கு? அதை வச்சு நீங்களே எங்கப்பன் குதிருக் குள்ளே இல்லேன்னு எப்படி வழக்குப் போட முடியும்ன்னேன்? இதெல்லாம் காதோடகாது வச்சாப்பிவ கமுக்கமா முடிக்கனும் சார்... வழக்கு–கிழக்குன்னு போய் மாட்டிக்கப்படாது.”

”பிரபல தொழிலதிபருக்கும்’னு போட்டிருக்கிறது என்னைக் குறிக்காதில்லே...? பின்னே ஏன் என் கிட்டக் கொண்டாந்து காமிக்கிறே?”

“அப்படியில்லே சார், உங்களைத்தான் எழுதப் போறானின்னு எனக்குத் தெரியுது சார்! ஆனாலும் சட்டப்படி இந்த அறிவிப்பை வச்சு ஒண்ணும் அவன் மேலே நீங்க கேஸ் போட முடியாதுன்னேன்...”

“அதெப்பிடி அவன் ‘எவன்’னு ஒரு வார்த்தை சொல்லு..? இப்பவே கமிஷனருக்கு ஃபோன் பண்ணி உள்ளே தள்ளிப்புடறேன்... நீயா என்னைப் பத்தித்தான் அவன் எழுதப் போறான்னு கற்பனை பண்ணிக்கிட்டு வந்தியா? போய் வேற வேலையைப் பாரு”–என்று கோபாமாக இரைந்தார் கமலக்கண்ணன். கலைச்செழியன் அயர்ந்துவிடவில்லை. சிறிது நேரம் மெளனமாக எங்கோ பராக்குப் பார்ப்பதுபோல் பார்த்துவிட்டு, மெல்ல மறுபடி ஆரம்பித்தான்:

“சேத்துலே கல்லை விட்டெறிஞ்சா நம்ம முகத்திலே தான் தெறிக்கும் சார்! பதறப்பிடாது. இந்தத் தகவல் தெரிஞ்சதும் நான் நேரே நம்ம ‘தினக்குரல்’– ஆபீஸுக்குப் போயி பப்ளிஸிடி பிரகாசம் அண்ணன்கிட்டக் கலந்து பேசினேன். அவரு உங்க பேப்பரில் இருக்கறதுனாலே இந்தச் சேதியை உங்ககிட்டத் தானே வந்து சொல்லக் கூசினாரு அதுதான் நானே வந்தேன். இதிலே எனக் கொண்னுமில்லே.. .பார்க்கப்போனா இந்த மாதிரி விசயத்திலே உங்களுக்கு இல்லாத அக்கறை எனக்கு வேண்டியதில்லே... ஆனா உங்ககிட்டப் பழகிட்ட தோஷம்... மனசு கேக்கல்லே...”

–கலைச்செழியனின் இந்த அநுதாபம் தேர்ய்ந்த வார்த்தைகள் கமலக்கண்ணனைச் சிறிதளவு மனம் இளகச் செய்திருக்க வேண்டும். அவர் கடுமையாகப் பதில் கூறுவதை விடுத்துச் சற்றே சிந்தனையிலாழ்ந்தாற் போலிருந்தார். அவர் நிலையை நன்கு புரிந்துகொண்ட கலைச் செழியன் மீண்டும் தொடர்ந்தான்:

“என்ன காரணமோ தெரியலிங்க.. ஐயாகிட்ட முதமுதலாப்பழகினதிலிருந்து எனக்கு மனசு ஒட்டுதலாயிடிச்சு. ஐயா பேருக்கு ஒரு களங்கம் வர்ரதை என்னாலே சகிச்சுக்க முடியலிங்க அதுவும் இப்ப இருக்கிற ஒரு நெலையிலே இப்படி அவதுாறே வரக்கூடாதுங்க...களையெடுக்கற மாதிரி முதல்லேயே இதுகளைத் தீர்த்துக் கட்டிப்புடனும்...”

“இப்ப என்னதான் செய்யனுங்கிறே நீ?”

“ஏதாவது கொடுத்து ஒழியுங்க... இவனுகளுக்கு இது ஒரு பிழைப்பு..."

“யாரிட்டக் கொடுக்கணும்? எவ்வளவு கொடுக்கனும்...”

“ஏதோ...கொடுங்க...உங்களுக்குத் தெரியாதுங்களா?”

“அந்த ‘உண்மைஊழியனை’ இங்கே தான் கூட்டிக்கிட்டு வாயேன். நைசா உக்கார வச்சுப் பேசிக்கிட்டே போலீசுக்கு ஃபோன் பண்ணலாம்...”–என்றார் கமலக்கண்ணன்.

“சே! சே! அதுகூடாது! அவன் எமகாதகன். கூப்பிட்டால் வரமாட்டான். நமக்குத்தான் வீண்வம்பு. எதையாவது தாறுமாறா எழுதி நாலு பேர் அதை வாங்கியும் பார்த்தாச்சுன்னா அப்புறம் தகவல் காட்டுத் தீப்போலப் பரவி வச்சுடுங்க...”

“இந்தக் காலிப்பயலோட பேப்பர் ஆபீஸ் எங்கே தான் இருக்கு...?”

“இதுக்கெல்லாம் ஆபீஸ் ஏதுங்க? எங்கேயாவது கோடம்பாக்கத்திலே ஒரு அட்ரஸ் போட்டு இருக்கும்; அங்கே போனா ஆள் இருக்க மாட்டாங்க...உங்களைப் போலொத்தவங்க அங்கே தேடிட்டுப் போறதும் நல்லா இருக்காது...”

“பின்னே என்னதான் செய்யிறது?”

“நான் பார்த்து முடிக்கிறேங்க...”

“எதை?”

“ஆக வேண்டியதை...”

“என்ன ஆகவேண்டியதை...?”

“ஒண்னும் வராமச் செய்திடறேன். எதைக் கொடுக்கனுமோ–எங்கிட்டக் கொடுத்தனுப்புங்க... என்னைப் போல இருக்கிறவன் அவமானப்பட்டால் பாதகமில்லை. உங்கபேரு கெடப்பிடாது. அதுதான் எனக்குக் கவலை...”

–கமலக்கண்ணனுக்குக் கோபம் கோபமாக வந்தது.

‘துண்டு விழுகிற பட்ஜெட்டை எந்த மறைமுக வரி அல்லது நேர்முக வரியினால் சரிக்கட்டுவது! மக்களிடமும் பொருளாதார எமன்களிடமும் நல்ல பெயரெடுக்கிற மாதிரி எப்படிப் புதிய பட்ஜெட்டைத் தயாரிப்பது?’–என்றெல்லாம் கடந்த சில நாட்களாகக் கவலையிலாழ்ந்திருந்த அவருக்கு இந்திப் புதிய வம்பு திடீரெனப் பெரிய தலை வேதனையாகத் தோன்றியது.

“நீங்கள் தொழிலதிபர்! அதனால் பெரும் மூலதனத்தைத் தொழிலில் முடக்கியுள்ள பணக்காரர்களைப் பாதிக்கிற ‘பட்ஜெட்’டாகப் போட்டாலும் உங்களுக்குக்கெட்ட பெயர். பாமர மக்களைப் பாதிக்கிற ‘பட்ஜெட்’ போட்டாலோ அவர் பணக்காரர்–தொழிலதிபர்; அதனால் தனக்குச் சாதகமாக ‘பட்ஜெட்’டை போட்டுவிட்டார்”– என்று பத்திரிகைகளும்–மக்களும் பிரசாரம் செய்வார்கள். அதனால் இந்த முதல் பட்ஜெட்டை நீங்கள் மிகக் கவன மாக அமைத்து வெற்றிபெறவேண்டும்” என்று வேண்டிய நண்பர் ஒருவர் எச்சரித்திருந்தார். அது சம்பந்தமான கவலைகளில் அவர் ஆழ்ந்திருந்த போது இந்தப் பாழாய்ப் போன உண்மை ஊழியனின் பிளாக் மெயிலுக்கும் அஞ்ச வேண்டி வந்ததே என்ற வேதனை அவரை வாட்டியது. ‘சில சமயங்களில் மனிதனின் பதவிப் பெருமையும், பணபலமும் செல்வாக்கும் அவனுடைய அந்தரங்கமான பேடித்தனத்தை வளர்க்கவே பயன்படுகின்றன’–என்பதற்கு அவர் அப்போது நிதரிசனமான உதாரணமாயிருந்தார்.

‘பணமில்லாதவர்கள் தாங்கள் தைரியமாகவும் நிமிர்ந்து நிற்பவர்களாகவும்–இல்லாமற் போனதற்குத் தங்களிடம் பணமின்மை தான் காரணமோ என்று எண்ணுகிறார்கள், பணமுள்ளவர்களில் சிலரோ அதன் காரணமாகவே நிமிர்ந்து நிற்கவும்–தைரியமாக இருக்கவும் இயலாதவர்களாகத் தவிக்கவேண்டியிருக்கிறது. பணம்–பதவி–செல் வாக்கு எல்லாமே–அவற்றோடு சேர்த்துத்தன்னைப்பிரித்து விடாமல் காக்கும்–பயத்தையும் பேடித்தனமான பாதுகாப்புணர்வையும் தான் மனிதனுக்குள் வளர்க்கின்றன போலும்’

–இப்படி ஏதேதோ எண்ணியபோது–நிர்ப்பயமாக நேருக்குநேர் மேடையேறி நின்று–இப்படிப்பட்ட ஒருவரின் வெற்றியைத் தேசிய விரோத நிகழ்ச்சியாகக் கருதி வெறுக்கிறேன் நான்’–என்று கூறித் தனக்கு எருக்கம்பூ மாலையணிவித்த காந்திராமனின் நினைவு ஏனோ அப்போது அவருள் எழுந்தது!

‘அந்தக் காந்திராமனை அப்படிப் பேசத் துணியச் செய்த நெஞ்சின் கனல் எது? தன்னை அப்போதும்–இப்போதும் பேசவிடாமல் செய்த நெஞ்சின்பேடித்தனம் எது?’ என்று சிந்தித்து எல்லை காணமுடியாமல் ஓரிரு விநாடிகள் உள்ளேயே குழம்பினார் கமலக்கண்ணன் காந்திராமனுக்குள் எரிகிற சுதந்திர–சுதேசியத் தன்மரியாதைக் கனல் தனக்குள் பணம்–பதவி–செல்வாக்கு எல்லாவற்றாலும் அறிவிக்கப்பட்டு விட்டதோ – என்றெண்ணியபோது அவர் உடல் நடுங்கியது.

“என்ன யோசிக்கிறீங்க...? நான் சொல்றபடி கேளுங்க... ‘பட்ஜெட்’ சமயத்திலே நாலுபேரு இந்த நாற்றத்தைக் கையிலே வச்சுக்கிட்டு வம்புபேச இடம் கொடுத்துடப்பிடாதுங்க...?”

என்று கலைச்செழியன் தன் கையிலிருந்த உண்மை ஊழியனைக் காண்பித்து வற்புறுத்தத் தொடங்கினான்.

பேசாமல் டிராயரைத் திறந்து எண்ணிப்பார்க்காமலே ஒரு கட்டு நோட்டுக்களை அடுக்காகக் கலைச்செழியனிடம் நீட்டினார் கமலக்கண்ணன். அப்படிக் கொடுக்கும்போது தனது கை இப்படிப் பலவீனங்களுக்காகக் கொடுத்துக் கொடுத்து மேலும் பலவீனத்தை அடைவதுபோல் ஒருணர்வு அவரை உள்ளே அரித்தது.

கிழிந்த மேல்துண்டு தவிர வேறு ஆஸ்தி இல்லாத அந்தக் கதர்ச்சட்டைக் காந்திராமனை இப்படி யாரும் மிரட்ட முடியாதென்று நினைத்தபோது சமூகத்தின் அந்தரங்கமான பலங்களைத் தான் எந்த நிலையில் இழந்திருக்கிறோம் என்பதையும்–அந்தப் பாமரத் தொண்டன் எந்த எல்லையில் எந்த அடிப்படையில் பலப்பட்டிருக்கிறான் என்பதையும் மனத்திற்குள் ஒப்பிட்டுச் சிந்திக்கத் தொடங்கினார் அவர்.

கமலக்கண்ணன் எண்ணாமல் கொடுத்திருந்தாலும் கலைச்செழியன் பணத்தை அங்கேயே எண்ணத்தொடங்கி விட்டான்.

“ஏன்? எண்ணி என்ன ஆகப்போகுது? பேசாம எடுத்துக்கிட்டுப் போய் அழு”– என்று கமலக்கண்ணன் கூறியதையும் கேட்காமல் பொறுமையாக எண்ணி முடித்த அவன்,

“தவுலண்ட் இருக்குதுங்க”– என்று தயங்கினான்.

“இருக்குதில்ல...? கொண்டுபோய்க் கொடுத்துக் காரியத்தை முடி”–என்றார் அவர்.

“பத்தாதுங்களே! அவன் பெரிய விடாக்கண்டனாச்சே...ஒரு டூ தவுலண்ட் கூட இல்லீன்னா– சரிப்படாதே...”–என்று கலைச்செழியன் பேச்சை இழுத்தான்.

–‘உண்மையில் பார் பெரிய விடாக்கண்டன்’ என்று தெரியாமல் மலைத்தார் கமலக்கண்ணன் கலைச்செழியன் விடாக்கண்டனா அல்லது அவனாலே விடாக்கண்டனாகச் சித்திரிக்கப்படுகிற அந்த யாரோ ஒருவன் விடாக்கண்டனா என்று புரியாமல் அதை அவனிடமே துணிந்து கேட்டுவிடும் அளவுக்கு மன பலமும் இழந்து கையாலாகாத வெறுங்கோபத்தோடு இன்னும் ஒரு கட்டு நோட்டுக்களை எடுத்து மேஜையில் எறிந்தார் கமலக்கண்ணன்.

“கோபப்பட்றீங்களே? பார்க்கப்போனா உங்க பெருமையைக் காப்பாத்தறதைத் தவிர இதுலே எனக்கு வேறெந்த லாபமும் கிடையாதுங்க” என்று அந்த நோட்டுக் கற்றையையும் எடுத்து எண்ணத் தொடங்கினான். கலைச்செழியன். அவன் அதையும் எண்ணத் தொடங்கிய போது இயல்பாகலே அவருடைய பயம் அதிகரித்தது. எங்கே மேலும் கேட்கப் போகிறானோ என்று அவர் உள்ளம் நடுங்கியது. நல்லவேளையாக அவன் அவரை அப்படியெல்லாம் மேலும் துன்புறுத்தாமல் விட்டுவிட்டான்.

“நான் இதை வச்சு சரிக்கட்டிடறேனுங்க”–என்று. கூறிவிட்டுப் புறப்பட்டான். போவதற்கு முன், “இந்தாங்க... எதுக்கும் இது இங்கே இருக்கட்டும்”–என்று கையோடு மடித்துக் கசக்கிக் கொண்டு வந்திருந்த உண்மை ஊழியனை அவரிடம் நீட்டினான். அதை வாங்கிக் கோபத்தோடு ஆத்திரம் தீர அவன் முன்னாலேயே கிழித்துக் குப்பைத்தொட்டியில் போட்டார் அவர். அவன் பெரிதாக ஒரு கும்பிடு போட்டு விட்டு விடைபெற்றான். அவனுடைய தலை மறைந்ததும் மறுபடி குப்பைத் தொட்டியிலிருந்து அந்த ‘உண்மை ஊழியனை’– எடுத்துக் கிழிசல்களை ஒட்ட வைத்து ஏதோ ஒர் ஆவலில் படிக்க முயன்றார் கமலக்கண்ணன். அப்போது அறைவாயிலில் மனைவியின் தலை தெரிந்தது – மறுபடியும் அதைக்கசக்கிக் குப்பைத் தொட்டியில் போட்டார்.

“என்னங்க...இது? ஏன் என்னவோ போலிருக்கீங்க...”

“ஒண்னுமில்லே! ‘புது பட்ஜெட்’ வரணும்–அதுதான் ஒரே யோசனை”...

“சாப்பிட்டுட்டு யோசிக்கலாம்...வாங்க...டைனிங் டேபிளிலே ‘குழந்தைகளும்’ காத்துக்கிட்டிருக்காங்க...”

அவர் சாப்பிடப் போனார். சாப்பாட்டுக்குப் பின்னும் இரவு நெடுநேரம் உறக்கம் வராமல் அறையில் உட்கார்ந்து கொண்டு யோசித்தபடி இருந்தார் அவர். கலைச்செழியன் எப்போதோ தான் மாயாவுக்கு நெக்லேஸ் கொடுக்கும் போது எடுத்த புகைப்படங்களை ஒவ்வொன்றாகக்காட்டி மிரட்டுவது போல் ஒரு காட்சியைத் தாமாகக் கற்பித்துக் கொண்டு அஞ்சினார் கமலக்கண்ணன். இரவுமுழுவதும் பலவீனங்களால் வந்த பயமே அவரை வாட்டியது. அதிகாலையில்தான் சிறிது கண்ணயர முடிந்தது. மறுநாள் காலை யில் கடம்பவனேச்வரர் கோயில் திருப்பணியின் செயற்குழுக் கூட்டத்தைத் தம் வீட்டிலேயே கூட்ட ஏற்பாடு செய்திருந்தார் அவர். எல்லாரும் வந்து ஹாலில் கூடிவிட்டார்கள். அவரோ ஒன்பது மணிக்குத்தான் எழுந்திருந்தார்.

அதுவரை எல்லாரும் காத்திருந்தார்கள். அப்படிக் காத்திருந்தவர்களில் பழைய அறநிலைய மந்திரி விருத்தகிரீசுவரனும் ஒருவர். அப்படி அவர்களைக்காக்கவைத்ததற் காக ஒருமுறை கருதி மன்னிப்புக் கேட்டுக் கொண்டாரானாலும்–உள்ளுர மந்திரி விருத்தகிரீசுவரனைக் காக்கவைத்ததில் பழிதீர்த்த மகிழ்ச்சி இருந்தது அவருக்கு. ஒன்பதரையிலிருந்து பத்துவரை கடம்பவனேசுவரர் திருப்பணிக்கூட்டம் நடந்தது. பத்துமணிக்கு அவசர அவசரமாக ஒருவாய் சாப்பிட்டுவிட்டு அவர் செகரெட்டேரியட் புறப்பட்டார். பதினொரு மணிக்கு–மதுரையைச் சேர்ந்த தொழிலதிபர்கள் குழு ஒன்றிற்குப் பேட்டியளிக்க வேண்டுமென்ற செய்தியைக் காரில் போகும்போதே நினைவுபடுத்தினார் காரியதரிசி, முதல் நாள் மாலைச் சம்பவம் உள்ளூர உண்டாக்கியிருந்த பலவீனத்தாலும் மன நலிவினாலும்–யாரைச் சந்தித்தாலும் எவரோடு பேசினாலும்–ஒரு தாழ்வு மனப்பான்மை அவருள் நிலவியது. எல்லாரும் தன்னைத் தாழ்வாக நோக்கி அந்தரங்கமாக எள்ளி நகை பாடிக்கொண்டே புறக்கோலமாக மரியாதையுடன் வணங் கினாற்போல் பாவிப்பதாகத் தோன்றியது அவருக்கு.

பன்னிரண்டரை மணிக்குத் துாதுக்குழுவினர் ‘தொழில் தவணைக்கடன் உதவி’–பற்றிய தங்கள் முறையீடுகளை எல்லாம் அமைச்சரிடம் கூறிவிட்டு வெளியேறினர். ‘லஞ்ச்’ ஒய்வு என்ற பேரில் அரைமணி கழித்துக் கொள்ள முடிந்தது. ஒன்றேகால் மணிக்குப் பத்துப் பதினைந்து பத்திரிகை நிருபர்கள் பார்க்க வரப்போவதாகவும்–அங்கேயே ஒரு சிறிய பிரஸ் கான்பரன்ஸுக்கு ஏற்பாடு செய்திருப்பதாகவும் காரியதரிசி வந்து தகவல் தெரிவித்தார். முன்பே செய்துவிட்ட ஏற்பாட்டை மறுத்துப் பத்திரிகைக்காரர்களைப் பகைத்துக் கொள்ளக்கூடாதென்ற ஒரே காரணத்திற்காக மனம் தளர்ந்திருந்தும் அவர் அதற்கு இணங்க வேண்டியதாயிற்று.

நிருபர்கள் ‘பட்ஜெட் ஹேஷ்யமாக’–ஏதாவது வெளியிட அவர் வாயைக் கிளறிப் பார்த்தார்கள். ஒரு திருபர் அவரையும் வம்புக்கே இழுத்தார்.

“மதுவிலக்கில் உங்களுக்கு நம்பிக்கை இருக்க முடியாது...”

“ஏன் முடியாது?’’

“அதற்கில்லை...நீங்கள் நேஷனல் மூவ்மெண்ட்பீரியடில் இதையெல்லாம் கேலி செய்து நண்பர்களிடம் பேசியிருக்கிறீர்கள். ஆகவே ஒருவேளை மதுவிலக்கை எடுப்பதன் மூலம் கிடைக்கிற லாபத்தை பட்ஜெட்டுக்குப் பயன்படுத்தக் கூடுமல்லவா? மன்னிக்கவும்... உங்களிடம் அப்படி எதிர் பார்க்கிறார்கள் என்பது என் பணிவான அபிப்பிராயம்”

“ஹவ் டு யூ லே லைக் தட்” – என்று அந்த நிருபரிடம் கோபமாக இரைந்தார் கமலக்கண்ணன்.

‘தான் குடிப்பழக்கமுள்ளவன்’–என்று அந்தக் கேள்வியின் மூலம் அந்த திருபர் தனக்குச் சுட்டிக்காட்டுவது போல் உணர்ந்தார் அவர். அதனால்தான் அவருக்குக் கோபம் வந்தது. அப்போதிருந்த அவருடைய மனநிலையில் தன்னைக்கேட்கப்படும் ஒவ்வொரு கேள்வியும் தன்னை மட்டம் தட்டுவதற்கே என்ற உணர்வு அவருள் ஏற்பட்டிருந்தது.

“டோண்ட் கிவ் மச் இம்பார்ட் டன்ஸ் தட் க்வஸ்டின் எலோன், தட் இஸ் ஆன் ஆர்டினரி க்வஸ்டின் வித் ஆர்டினரி பேக்ரவுண்ட்ஸ்...” என்று அந்த நிருபர் எவ்வளவோ வற்புறுத்தியும் அது குத்தலான கேள்வியாகவே அவருக்குத் தோன்றியது. ஒவ்வொரு வரும் வேண்டுமென்றே சதிசெய்து காந்திராமன் செய்தது போலவே தன்னை ஒரு போலித் தேசியவாதியாக நிரூபிக்க முயன்று சந்தர்ப்பத்தை எதிர் பார்த்துக்கொண்டிருப்பதுபோல் அவருக்குப்பிரமைதட்டியது. ஒரு பலவீனம் இரகசியமாகப் பயமுறுத்தப்பட்ட தன். காரணமாக எல்லாப் பலவீனங்களையும் எல்லாருமே நினைவுவைத்துக்கொண்டு தன்னைக் குத்தலாகவும், கபடமாகவும் கேள்விகள் கேட்பதுபோல் அவருக்குதோன்றியது.

–ஒரு வழியாக பிரஸ் கான்பரன்ஸ் முடிந்தது. மூன்று மணிக்குத் தற்செயலாக ஒரு இன்விடேஷனை மார்க்செய்து டேபிளில் கொண்டுவந்து வைத்தார் காரியதரிசி.

‘மாயர்தேவியின் குறவஞ்சி நாட்டிய அரங்கேற்றம்... என்ற அந்த அழைப்பிதழைப் பார்த்ததும் சீறி விழுந்தார் அவர்.

“பட்ஜெட் பிரிபரேஷன் வேலை உயிர் போகுது. இதையேன் என் டேபிளில் கொண்டாந்து வைக்கிறே? நாட்டியமும்– நாடகமும் பார்க்க நேரமேது எனக்கு? தூர எறி” என்று அந்த இன்விடேஷனைத் தூக்கிக் கிழித்தெறிந்தார் கமலக்கண்ணன். தன்னை ஒரு ஸீரியஸ்ஸான பதவிப் பொறுப்புள்ள மந்திரியாக எடுத்துக் கொள்ளாமல் எல்லா ருமே வெறும் உல்லாசப் பேர்வழியாக பழைய கமலக்கண்ணனாகவே– நினைக்கிறார்களோ? என்ற சந்தேகமும்–இந்தச் சந்தேகத்தின் விளைவான ஆத்திரமும் அவருள் புகுந்து பேயாய் ஆட்டின. காரியதரிசி அவருடைய கோபத்தைக் கண்டு மிரண்டு போனார் .

–மூன்றரை மணிக்கு பட்ஜெட் விஷயமாக ஒரு உயர்தர அதிகாரி–பழைய ஸிவில் சர்வீஸில் நீண்ட நாள் ஆபீஸராக இருந்து பழக்கப்பட்டவர்–கமலக்கண்ணனைப். பார்க்க வந்தபோது “சார் மினிஸ்டர் கோபமாக இருக்கிறார். தயவு செய்து அப்புறமா வாருங்களேன்”–என்று காரியதரிசி அவரைக் கெஞ்சினான். அவரோ கமலக்கண்ணனை விடக்கோபக்காரராக இருந்தார்.

“நான் ஒண்னும் எடுபிடி வேலைக்காரனில்லே. கோபதாபம் பார்த்துக் கூழைக் கும்பிடு போட்டு பக்ஷிஸ் கேக்க இங்கே வரலே. பேப்பர்கள் டிஸ்போஸ் ஆகாமே கிடக்குது கேட்கணும். எனக்கென்ன? நான் போறேன். எலெக்ஷன்லே யார் யாரோ மந்திரியா வந்துடறாங்க...கிரகசாரம்...”– என்று சாடிவிட்டுப் போனார். .

உடனே அவரைக் காலில் விழாக் குறையாக உபசரித்து உட்கார வைத்துவிட்டு–உள்ளே மந்திரியைப் பார்த்து அவர்வரவைக் கூறுவதற்கு விரைந்தார் காரியதரிசி. மந்திரியோ உள்ளே டேபிளில் தலை சாய்த்துக் கவலையில் ஆழ்ந்திருந்தார். காரியதரிசி என்ன செய்வதென்று தெரியாமல் தயங்கினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நெஞ்சக்கனல்/11&oldid=976866" இலிருந்து மீள்விக்கப்பட்டது