நெஞ்சக்கனல்/16

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

16

மாலையில் பயமுறுத்தக்கூடிய வேறொரு செய்தியும் கமலக்கண்ணனுக்கு நம்பிக்கைக்குரிய வட்டாரத்திலிருந்து தெரிவிக்கப்பட்டது. அடுத்த அசெம்பிளிக் கூட்டத்தின் போது அவர் மேல் நம்பிக்கையில்லாத் தீர்மானம் வரலாம் என்று தெரிந்தபோது நிலைமை இன்னும் தீவிரமாகியது. இராஜிநாமா செய்து வெளியேறிவிட வேண்டுமென்ற பதற்றமும், பரபரப்பும், அவர் மனத்தில் அதிகமாயின. அவமானப்பட்டு, மரியாதைக் குறைவாகிப் பத்திரிகைகளில் சந்திசிரிக்கு முன் தப்பி விடவே விரும்பினார். அவர் தன்மேல் நம்பிக்கையில்லாத் தீர்மானம் வந்து நிறைவேறுவதற்கு முன் தானே பதவியிலிருந்து விலகிடவேண்டும் என்ற முடிவுக்கு வந்தார் கமலக்கண்ணன்.

அவர் இப்படி மனங்குழம்பிப் பரிதவித்துக் கொண்டிருந்த வேளையில் பிரகாசம் அவரைத் தேடி வந்தான். அவர் அவனிடம் அதிகம் பேசவில்லை. ‘தினக்குரல்’–கணக்கு வழக்குகளைத் தீர்த்து ஒரு முடிவுக்குக் கொண்டு வருவதற்கான விவரங்களைத் தெரிவித்துச் சுருக்கமாகவும் அளவாகவும் கண்டிப்பாகவும் பேசினார். ‘செக்’கும் எழுதிக் கொடுத்தார். அந்த நிலையில் அவரிடம் அதிகம் பேசுவதாலோ, எதிர்த்து விவாதிப்பதாலோ பயன் இல்லை என்பதைப் பிரகாசமும் புரிந்துகொண்டு விட்டான். ஆகவே அவன் ‘செக்’கை வாங்கிக்கொண்டு புறப்படுவதைத் தவிர வேறு வழி இல்லை.

அவன் புறப்பட்டுப் போன பின்பு –சிறிது நேரம் என்ன செய்வதென்று தெரியாமல் மனம் குழம்பியிருந்தார். அவர் பிறகு சிந்தித்து ஒரு முடிவுக்கு வந்தவராக முதலமைச்சருக்குத் தன்னுடைய பதவி விலகல் கடிதத்தை எழுதுவதற்கு உட்கார்ந்தார். கடிதத்தை எப்படி ஆரம்பிப்பது என்று சிறிது நேரம் தயக்கமேற்பட்டது. நீண்ட நேரத் தயக்கத்துக்குப் பின் தமிழில் எழுதத் தன்னால் முடியுமோ முடியாதோ, என்ற பயத்தினால் ஆங்கிலத்திலேயே எழுதலானார். எழுத எழுதக் கடிதம் நீண்டு கொண்டே போயிற்று. கடைசிப் ‘பாரா’வில் இராஜிநாமா செய்வதைப் பற்றித் தனியாக சிலவாக்கியங்கள் எழுதித் தன்னுடைய பதவி விலகலை ஏற்குமாறு முதலமைச்சரை வேண்டிக் கையொப்பமிட்டுக் கடிதத்தை முடித்தார் கமலக்கண்ணன், மாலை ஆறுமணிக்கு முதலமைச்சருக்கு ஃபோன்செய்து, நேரில் ஒரு கடிதம் கொடுக்கவேண்டும்! இப்போது உங்களைப் பார்க்க வரலாமா?–என்று கேட்டார். வரச் சொல்லி முதலமைச்சரிடமிருந்து பதில் கிடைத்தது.ஃபோனில் தான் பேசியபோது, “என்ன கடிதம்? இப்போதே அதை என்னிடம் கொடுப்பதற்கு என்ன அவசரம்”– என்று முதலமைச் சர் ஒப்புக்குக் கேட்டிருந்தாலாவது அவருக்கு ஆறுதலாக இருந்திருக்கும். அப்படி எல்லாம் கேட்கவோ தயங்கவோ செய்யாமல் உடனே வரச்சொல்லி முதலமைச்சர் பதில் கூறியதிலிருந்து ‘தன்னுடைய பதவி விலகலை’...அவர் எதிர்பார்க்கிறார் என்ற அநுமானம் கமலக்கண்ணனுக்குள்ளே உறுதிப்பட்டது. இந்தச் சூழ்நிலை அவருடைய மனத்துக்கு அதிர்ச்சியை அளித்தாலும் வெளியே எதையும் காண்பித்துக் கொள்ளாமல் சமாளித்துக் கொண்டார்.

“நீங்கள் கவலைப்படாமல் இருங்கள்”–என்று கட்சியிலிருந்தோ, மந்திரி சபையிலிருந்தோ யாராவது ஒருவர் தனக்கு ஆறுதல் சொல்லக் கூடுமென்றுகூட அவரால் எதிர்பார்க்க முடியவில்லை. பணமும், காரும், பங்களாவும், வீடும், வேண்டியபோதெல்லாம் தன்னைத் தேடித் தேடிக் கும்பிடு போட்ட கட்சி ஆட்களும், காரியக்கமிட்டி உறுப்பினர்களும்–இப்போது ஏன் அறவே தன்னை ஒதுக்கியும், விலக்கியும் ஓடுகிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டு வேதனைப்பட்டார் கமலக்கண்ணன்.

மாலை ஆறே முக்கால் மணிக்கு அவர் முதலமைச்சர் வீட்டுக்குப் புறப்பட்டார். முதலமைச்சர் வீட்டு வராந்தாவில் எதையோ எதிர்பார்த்துக் காத்திருப்பவர்கள் போல ஐந்தாறு பத்திரிகை நிருபர்கள் வட்டம் போட்டுக் கொண்டிருந்தார்கள்.

கமலக்கண்ணன் கையில் முதலமைச்சரிடம் கொடுப்பதற்கான கடிதத்தோடு போர்டிகோவில் காரை விட்டு இறங்கியபோது–வராந்தாவில் வட்டம் போட்டுக் கொண்டிருந்த பத்திரிகை நிருபர்கள் அனைவருடைய கண்களும் திரும்பிப் பார்த்தன. கமலக்கண்ணன் அவர்களுடைய வணக்கங்களையோ, கைகூப்புதல்களையோ, பொருட்படுத்தாமல் படியேறி உள்ளே நுழைந்தார்.

முதலமைச்சர் தமது அறையில் தயாராகக் காத்திருந்தார். கமலக்கண்ணன் உள்ளே நுழைந்ததும் வரவேற்று உட்காரச் சொன்னார். ஆனால் கமலக்கண்ணன் உட்காரவில்லை.

“திஸ் இஸ் மை ரெஸிக்கனேஷன் லெட்டர்”–

முதலமைச்சர் ஒன்றும் பதில் சொல்லாமல் அதை வாங்கிப் பிரித்துக்கொண்டே கேட்டார்:–

“நான் இதைப் படிக்கிறவரை தயவுசெய்து இருக்க முடியுமா?”

“எக்ஸ்க்யூஸ் மீ சார்!...நோ நீட் டு வெயிட். ஐயாம் டேக்கிங் லீவ்...”

–பதில் பேசாமல் முதலமைச்சர் கைகூப்பினார். கமலக்கண்ணனும் பதில் பேசாமல் கைகூப்பிவிட்டு வெளியேறினார். வராந்தாவில் பத்திரிகை நிருபர்கள் வழிமறித்தனர்.

“எனி...நியூஸ்...ஃபார் பிரஸ்...”

“நோ...நோ...நியூஸ் ஃபரம் மை எண்ட்...”

“ஏதாவது கேட்கலாமா சார்...!”

“ஆஸ்க் யுவர் சீஃப் மினிஸ்டர்...ஹி வில் டெல் யூ நியூஸ்...”

–இந்த பதிலில் ஆஸ்க் ‘அவர்’ சீஃப் மினிஸ்டர், என்று கமலக்கண்ணன் கூறாமல் ‘ஆஸ்க் யுவர் சீஃப்மினிஸ்டர்’ என்று கூறியதிலேயே தங்களுக்கு வேண்டிய பதில் இருப் பதைப் பத்திரிகை நிருபர்கள் புரிந்து கொண்டார்கள். அப்படிக் குறிப்பாக அவர்கள் புரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காகவே தான் கமலக்கண்ணனும் அப்படிக் கூறியிருந்தார். மேலும் வாயைக் கிளறும் நோக்கத்துடன் ஒரு துடிப்பான நிருபர் கமலக்கண்ணன் காரில் ஏறுமுன் கேட்டார்.

“எனிமோர் நியூஸ் டு ஸே...?”

“நத்திங் மோர் டு ஸே...”– என்று கூறி கார்க்கதவைக் கொஞ்சம் அதிக ஓசை எழும் படியாகவே இழுத்து அடைத்தார் கமலக்கண்ணன். கார் புறப்பட்டது. வீடு திரும்பியதும் மனைவி அவரிடம் பேச வந்தாள்.

“சனியனைக் கைகழுவியாச்சா இல்லையா?”

“கைகழுவியாச்சு. ராத்திரி சாப்பாட்டுக்குப் பாய்சம் வேணா வையி...”

“நிம்மதியா இன்னிக்கி ராத்திரி ஒரு சினிமாவுக்குப் போகலாம் வரீங்களா...”

“அவசியம் வரேன். என்ன படம்?”

“லவ்வர்ஸ் இன் ஹொனலூலூ...”

“போகலாம்...”

–இரவுச் சாப்பாட்டுக்குப் பின் மனைவி குழந்தைகளோடு திரைப்படம் பார்க்கப் போனார் அவர். திடீரென்று குடும்ப வாழ்க்கையையும், குடும்ப வாழ்வின் சுகங்களையும் அக்கறையோடு அநுபவிக்க வேண்டும் போலத் தோன்றியது அவருக்கு. பொது வாழ்வில் ஏற்பட்ட ஏமாற்றம் இதற்குக் காரணமா அல்லது தனிவாழ்வில் தன்னை, மறைத்துக் கொள்ள விரும்பும் விருப்பம் காரணமா என்று கண்டுபிடிக்க முடியாமலிருந்தது.

சினிமாவிலிருந்து வீடு திரும்பும்போது ஒரு மணி. குழந்தைகள் தங்கள் அறைக்குப் படுத்துக் கொள்ளப் போனார்கள். அவர் நிறையக் குடித்தார். அதிகம் குடிக்காமல் தடுக்க மனைவி எவ்வளவோ முயன்றும் பயன்படவில்லை. கவலையை மறக்க மதுவில் மூழ்க வேண்டியிருந்தது அவருக்கு.

மறுநாள் காலையில் அவர் எழுந்திருக்கும் போது எட்டு மணிக்கு மேலாகி விட்டது. எழுந்திருந்ததும் எழுந்திராததுமாகத் தலைப்பக்கம் டீப்பாயில் தயாராகக் கொண்டு வந்து மடித்து வைக்கப்பட்டிருந்த காலைத் தினசரிகளை எடுத்து ஆவலோடு புரட்டத் தொடங்கினார். அவருடைய இராஜிநாமாச் செய்தி–அதை முதலமைச்சர் ஒப்புக் கொண்டு விட்டதாக அறிவித்திருந்த அறிவிப்பு எல்லாம் எல்லாப் பத்திரிகைகளிலும் வந்திருந்தன. தமிழ்த் தினசரிகளில் முதல் பக்கத்திலும், ஆங்கிலத் தினசரிகளில் மூன்றாம் பக்கத்திலுமாக இந்தச் செய்தி பெரிதாக வெளியாகியிருந்தது...‘நோ நியூஸ் ஃப்ரம் மை எண்ட்’என்பது முதல் ஆஸ்க் யுவர் சீஃப் மினிஸ்டர். ஹி வில் டெல் யூ நியூஸ் என்பதுவரை தான் நிருபர்களிடம் உரையாடிய வார்த்தைகள் அனைத்துமே பத்திரிகைச் செய்தியில் ஒன்று விடாமல் இருப்பதைக் கமலக்கண்ணன் படித்தார். காபியோடு உள்ளே நுழைந்த சமையற்காரன், “சார்! வாசல்லே உண்ணாவிரதப் பந்தலையும் காணலை, ஆளையும் காணோம்” என்றான். தன்னுடைய இராஜிநாமா அந்த விளைவை உண்டாக்கியிருக்க வேண்டுமென்று கமலக் கண்ணனுக்குத் தோன்றியது. சமையற்காரனுக்கு அவர் பதில் எதுவும் சொல்லவில்லை.

பகல் சாப்பாடு முடிந்ததும் இடைவேளை ஓய்வுக்குப் பின் சமையற்காரன் தமிழ்த் தினசரியை ஒரு வரிவிடாமல் படிக்கும்போது அவனுக்கு எல்லா விஷயமும் தானே தெரிய வாய்ப்பிருக்கும் என்று அவர் தனக்குள் எண்ணிக்கொண்டார். ஏதோ நினைத்தவராக கார் டிரைவரைக் கூப்பிட்டுக் கொண்டு வரும்படி சமையற்காரனை அனுப்பினார். டிரைவர் வந்து கும்பிட்டுவிட்டு பவ்யமாக ஒதுங்கி நின்றான். சமையற்காரனும் போகவில்லை.

“முன் ஹால்லே பெரிசா ஆளுயரத்துக்கு ஒரு காந்தி படம் மாட்டியிருக்குப் பாரு; அதைக் கழட்டி ‘நீட்டா’க் கட்டி எடுத்துக்கிட்டுப் போயி திண்டிவனத்துக்குப் போற வழியிலே காந்திய சமதர்ம சேவா சங்கம்னு இருக்கே அங்கே கொடுத்திட்டு வந்திடனும்...இப்பவே புறப்படனும்...அந்த ப்ரின்ஸிபல் அம்மா ஏதாவது கேட்டாங் கன்னா என்னோட அன்பளிப்பா இந்தப் படத்தை அனுப்பினேன்னு சொல்லிடு...”

டிரைவர் அப்படியே செய்வதாகக் கூறிவிட்டுப் போனான். படத்தைக் கழற்றிக் கட்டிக்கொடுப்பதில் அவனுக்கு உடனுதவுவதற்காகச் சமையற்காரனும் கூடவே சென்றான்.

சிறிது நேரத்தில் மனைவி வந்து வினவினாள்:

“ஏன் அந்த காந்தி படத்தை எடுக்கச் சொல்லிட்டீங்களா...?”

“ஆமா இனிமே அது எதுக்கு?”

அவள் பேசாமல் போய்விட்டாள். அவர் ‘தினக்குரல்’ காரியாலயத்துக்கு ஃபோன் செய்து பிரகாசத்தைக் கூப்பிட்டார் பிரகாசம் பேசினான்.

“என்ன? எல்லாருக்கும் நோட்டிஸ் கொடுத்தாச்சா?”

“கொடுத்தாச்சு சார் இன்னிக்குச் சாயங்காலம் எடிஷன்தான் கடைசி...”

“அதுகூட வேண்டாம். நிறுத்திப்பிடு...என் பேப்பர்லியே நான் இராஜிநாமா பண்ணினேன்னு நீ நியூஸ் போட்டு ஊர் உலகத்துக்கு அனுப்ப வேணாம். ‘மேக்அப்’– ஆனவரை விட்டுட்டு ஆபீஸை க்ளோஸ் பண்ணி கம்பாஸிடர்– மெஷின்மேன், ஃபோர்மேன்– எல்லாரையும் வீட்டுக்கு அனுப்பிடு...”

“சரி சார்...!”

கமலக்கண்ணன் ஃபோனை வைத்தார். விரக்தியின் எல்லையில் ஒர் பயங்கர நாச வேலைக்காரனுடைய மனப்பான்மை இருந்தது அவருக்கு. இந்த விநாடி வரை ஒரு ஏழாந்தர எட்டாந்தரத் தொண்டன் கூட அவருக்கு ஃபோன் செய்து அவரது இராஜிநாமாவுக்காக வருந்தவோ, இரங்கவோ இல்லை என்பது அவருக்கு ஏக்கத்தை அளித்தது. ஒரு பதவியை அடையும் போது அனுதாபமும் ஆதரவும் காட்டுகிறவர்களின் துணை இல்லாமல் கூட அடையலாம். ஆனால் விலகும் போது அனுதாபமும் ஆதரவும் இல்லாத நிர்த்தாட்சண்யத்துக்கு இடையே விலகுவது மிகமிகப் பரிதாபகரமானது. அந்தப் பரிதாபத்தை உலகுக்கு மறைக்க அவர் ஆத்திரமாகவும் விரக்தியாகவும் நடந்து கொள்ள வேண்டியிருந்தது. உண்மையில் அவர் மனத்தில் நிரம்பியிருந்ததென்னவோ வேதனையும் புழுக்கமும் தான். கோடீஸ்வரனாகவும் கூப்பிட்ட குரலுக்கு ஓடிவர வேண்டிய ஆள்கட்டுள்ளவனாகவும் இருந்த தான் ஏன் இந்தப் பதவிக்குப் போய் இப்படிச் சேற்றை வாரிப் பூசிக்கொண்டோம் என்று நினைப்பதற்கே வேதனையாயிருந்தது அவருக்கு.

எடுத்ததற்கெல்லாம் தேடி வந்து கூழைக் கும்பிடு போட்டுக்கொண்டு நிற்கும் புலவர் வெண்ணெய்க்கண்ணனார் கூட அன்று தேடி வரவில்லை. வேண்டுமென்றே யாவரும் தன்னைத் தேடிவராமல் புறக்கணிப்பது போலக் கமலக்கண்ணனுக்கு அன்று ஒரு தாழ்வு மனப்பான்மை உண்டாயிற்று.

ஒரு கணம் எருக்கம்பூ மாலையும் கையுமாகக் காந்திராமன் எதிரே தோன்றிச் சிரிப்பது போல் பிரமை உண்டாயிற்று. உலகில் எல்லாரும் ஒன்று சேர்ந்துகொண்டு, ‘நீ அவமரியாதைக்குரியவனே!’ என்று தன்னை ஒதுக்கி விட்டது போல் தோன்றியது அவருக்கு அன்று அந்த வார ‘சர்வோதயக் குரல்’ வெளியாக வேண்டும். கடைக்கு ஆளனுப்பி ஒரு பிரதி வாங்கி வரச் செய்து காந்திராமன் தன்னைப்பற்றி என்ன எழுதியிருக்கிறார் என்று பார்க்க வேண்டும் போல் அவருக்கு ஆசையாயிருந்தது. சமையற்காரனைக் கூப்பிட்டுச் சில்லறை கொடுத்து “‘சர்வோதயக் குரல்’ இந்த வாரப் பிரதி ஒண்னு வாங்கிட்டு வா” என்று கூறியனுப்பினார்.

சமையற்காரன் சிறிது நேரத்தில் திரும்பி வந்து, “இன்னும் வரலீங்க...சாயங்காலம் தான் கிடைக்கும்னு கடைக்காரன் சொன்னான்”–என்று சொல்லிக் காசைத் திருப்பிக் கொடுத்துவிட்டான். சாயங்காலம் வரை காத்திருக்கப் பொறுமையின்றித் தவித்தார் அவர்.

சில வேளைகளில் ஆழமாகச் சிந்தித்த போது தன்னை ஆதரிப்பவர்களைப் போலவும் நேசிக்கிறவர்களைப் போலவும் நடித்தும், கூழைக்கும்பிடு போட்டும் ஏமாற்றியவர் களைவிட நேருக்குநேர் தைரியமாக எதிர்த்துக் கொண்டிருக்கும் காந்திராமன் நல்லவர் என்று தோன்றியது கமலக்கண்ணனுக்கு, அரசியலில் போலியான துணையை விட நியாயமான எதிர்ப்பு நல்ல உதவி செய்ய முடியும். கூழைக் கும்பிடுபோடும் பொய்யான நண்பனைவிட மனதிலிருந்து வெளியாகும் உண்மைச் சொற்களால் எதிர்க்கும் எதிரி நல்லவன் என்று நம்பலாம் போலிருந்தது. தொண்டு செய்கிறவனுக்கு இருக்கிற சுயமரியாதை– பதவியிலிருக்கிறவனுக்கு இருப்பதில்லை தொண்டு செய்கிறவனுக்கு இருக்கிற துணிவும் செருக்கும். ஆண்டு கொண்டிருக்கிறவனுக்கு, இருக்க முடிவதில்லை. தொண்டனாக இருந்து இயக்கத்தை, அதன் சத்திய ஆவேசத்தைத் தன் நெஞ்சினுள்ளேயே வேள்வித்தீயைப் போல ஓர் அவியாத கனலாக வளர்த்துக் கொண்டிருப்பவன் நிமிர்ந்து நடக்க முடிவதைப் போல் பதவிகளைத் தோள் நிறையச் சுமந்து கொண்டு அந்தப் பதவிகள் போய்விடுமோ என்று பயந்துகொண்டே காலங்கழிப்பவன் நிமிர்ந்து நடக்க முடிவதில்லை.

–மனத்தின் விரக்தியில் அவருக்கு இப்படி எல்லாம் எண்ணத் தோன்றியது. ‘சர்வோதயக் குரல்’ இதழ் அன்று மாலையிலும் அவருக்குக் கிடைக்கவில்லை. அடுத்த நாள் காலையில் தான் சமையற்காரன் அந்த வாரத்து ‘சர்வோதயக் குர’லை வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தான். அதை ஆவலோடு பிரித்துப் படித்தார் அவர். கமலக்கண்ணனுடைய ராஜினாமாவை முதலமைச்சர் ஏற்றுக்கொண்டதை வரவேற்று அதில் தலையங்கம் எழுதப்பட்டிருந்தது.

“கனல் விளைந்து காக்கும் தீயை அகத்திடை மூட்டுவோம்–என்று மகாகவி பாடியிருப்பது போல் நெஞ்சில் சத்தியாவேசமும், தார்மீகக் கோபமும் நிறைந்துள்ள தொண்டர்களின் கருத்துக்கு எதிராக நடைபோடும் எந்த இயக்கமும் உருப்படாது. ஒரு கட்சியின் செல்வாக்கு அதன் உண்மை ஊழியர்களின் பலம் தான் என்பதை உணர்ந்து முதலமைச்சர் இந்த இராஜினாமாவை ஏற்றதைப் பாராட்டுகிறோம்”–என்று சர்வோதயக் குரலின் தலையங்கத்தில் காந்திராமன் எழுதியிருந்தார்.

–இந்தத் தலையங்கத்தைப் படித்தபோது காந்திராமன் மேல் கோபப்படுவதற்குப் பதில் பொறாமைப்பட வேண்டும் போலிருந்தது கமலக்கண்ணனுக்கு. ‘சிறுமை கண்டு பொங்கும்’ அந்த நெஞ்சின்கனலைக் காந்திராமனிடமும், சிறுமைகளைப் புரியும் கோழைத்தனத்தைத் தன்னிடமும், இருக்கச் செய்த படைப்பின் மேலேயே கோபம் வந்தது அவருக்கு. கையாலாகாத் தன்மை நிறைந்த அந்த ஆற்றாமைக் கோபத்தால் அவர் மனம் தவித்தது, ஏங்கியது, இரங்கியது, புழுங்கியது.

மீண்டும் எப்போதாவது ஒரு பிறவியில் வசதிகளே இல்லாத சாதாரணப் பாமரனாப் பிறந்து நெஞ்சில் சத்திய ஆவேசம் என்ற கனல் ஒளிர ஒளிர–அதை வளர்த்த படியே ஒரு முழு வாழ்க்கையை அசல் வாழ்க்கையைத் தொண்டனாக வாழ வேண்டும் போல் தவிப்பாயிருந்தது அவருக்கு.

–உடனே அதுவரை வாழ்ந்த வாழ்க்கையை மறக்க வேண்டும் போலிருந்தது. ஆனால் அப்படி மறக்கவும் முடியவில்லை.

ஏனென்றால் விருப்பு வெறுப்பற்றுப் பிரதிபலனைக் கணக்கிடாமல் தொண்டு செய்யும் தொண்டன் ஒருவனைத் தவிரப் பொது வாழ்வில் யாரும் மற்றவர்களுக்குப் பயப் படாமல் இருக்க முடியாது. அரசியலில் ஒருவன் தொண்டனாக இருக்கிறவரை தான் தன்னைப் பற்றியோ மற்றவர்களைப் பற்றியோ அவனுக்குப் பயமில்லை.

தலைவனாகவோ, பதவிக்குரியவனாகவோ வந்த பின்புதான் ‘இங்கிருந்து மறுபடியும் கீழே இறங்கி விடுவோமோ’ என்ற பயமும் இதற்கும் ‘மேலே மேலே போக வேண்டுமே’ என்ற சுயநலமும் வருகின்றன.

உடனே மீண்டும் மறுபிறவி எடுக்க முடியுமானால் வாழ்நாள் முழுவதும் இந்தப் பயமும் சுயநலமுமில்லாத நெஞ்சக்கனலுடன் காந்திராமனைப் போல் ஒர் நியாய வாதியான ஏழையாகப் பிறக்கத் தவித்தார்.

இந்த விநாடியிலும் இனி எந்த விநாடியிலும் இந்தத் தவிப்பும் தாகமும்தான் அவர் மனத்தை நெருப்பாய் எரித்துக் கொண்டிருக்கும் போலும்.


"https://ta.wikisource.org/w/index.php?title=நெஞ்சக்கனல்/16&oldid=976873" இருந்து மீள்விக்கப்பட்டது