நெஞ்சக்கனல்/6

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

6


ரண்டு மூன்று நாட்களில் ‘தினசரிப் பத்திரிகை தொடங்கும் பேச்சு பத்திரிகைக்கு என்ன பெயர் வைக்கலாம்’– என்று சிந்திக்கிற அளவு வளர்ந்திருந்தது. எல்லாமே ‘கிளப்’பில் இரவு நேரத்துச் சீட்டாட்டத்தின் போது பெருந்தலைகளின் பேச்சில் தான் வளர்ந்திருந்தன.

“புதிதாகத் தொடங்க இருக்கும் தினசரிப் பத்திரிகைக்குப் பொருத்தமானதும் கவர்ச்சி நிறைந்ததுமாகிய பெயர் ஒன்றைத் தெரிந்து எழுதுகிறவர்களுக்கு ரூ. 500 சன்மானம் வழங்கப்படும்” என்று விளம்பரச் செய்யலாம் என யோசனை வழங்கினார் ஒரு நண்பர். அப்போதிருந்த ஒருவித உற்சாகத்தில் எந்த யோசனையைக் கேட்டாலும் அது சிறந்த யோசனைதான் என்பதுபோல் தோன்றியது கமலக்கண்ணனுக்கு.

விருப்பு வெறுப்புக்களின் கடைசி எல்லைவரை போய் மூழ்குகிறவர்கள் எந்த ஒரு பிரச்னையையும் நியாயமாகந் தீர்மானிக்க முடியாதவர்களாகவே இருப்பார்கள். தின சரிப் பத்திரிகை தொடங்குவது அவசியமா? அவசியமில்லையா? அதற்கு ஒரு பெயர் சூட்டுவதற்கு விளம்பரம் செய்ய வேண்டியது பொருத்தமா? பொருத்தமில்லையா?என்பதைப் போன்றவற்றைத் தீர்மானிக்க முயல்வதில் கமலக்கண்ணனின் நிலைமையும் இப்படித்தான் இருந்தது.

எந்தத் தொழிலைத் தொடங்கவேண்டுமென்று, அவர் நினைத்தாரோ அதைப் பற்றிய அறிவு குறைவாகவும், உற்சாகம் அதிகமாகவும் உள்ளவர்களின் யோசனைகளே அவருக்குக் கிடைத்தன. ஒரு விஷயத்தைப் பற்றிய அறிவு குறைவாகவும், உற்சாகம் அதிகமாகவும் உள்ளவர்கள் அதைச் சரிவரக் கணிக்கவே முடியரது–என்ற நியாயத்தை ஒட்டியதாகவே இருந்தன அவர்களுடை ஆழமில்லாத முடிவுகள். உலகத்தைப் பொறுத்தும் உலகத்தை எதிர் பார்த்தும் வாழவேண்டும் என்பதைவிட சோதிடத்தைப் பொறுத்தும் சோதிடத்தில் சொல்லியவற்றை எதிர்பார்த் தும் வாழவேண்டுமென்ற தவிப்பைச் சமீபத்தில் உடையவராகியிருந்தார் கமலக்கண்ணன். அதனால் அவரைக் கெடுப்பதற்குப் பல போலி நண்பர்களும் சுற்றிச்சுற்றி வரலானார்கள்.

சோதிடர் சர்மா, டெய்லிடெலிகிராம் நிரூபர் கலைச் செழியன், புலவர் வெண்ணெய்க்கண்ணனார், போன்றவர்கள் அவரிடம் பணம் கறப்பதற்காக ஏதோ செய்தார்கள், அவரும் அவற்றிலெல்லாம் நன்றாக மயங்கினார். வசப்பட்டார் யார்யார் எதை எதைச் சொன்னாலும் அவை அனைத்தும் தம்மைப்பிரமுகராகவும் மந்திரியாகவும் கொண்டு வருவதற்கான உண்மை யோசனைகளாகவே கமலக்கண்ணனுக்குத் தோன்றின. தினசரிப் பத்திரிகைக்கு அச்சகம் அலுவலகம் எல்லாம் வைப்பதற்காக மவுண்ட்ரோடில் இடம் தேடுவதற்கு நாலு புரோக்கர்களிடம்கூடச் சொல்லியாயிற்று. இந்த ஏற்பாடும் தகவலும் எப்படியோ அதற்குள் காட்டுத் தீ போலப் பரவிவிட்டது உதவியாசிரியர்கள், புரூப்ரீடர்கள், கார்ட்டுனிஸ்ட், நியூஸ் எடிட்டர் என்று பத்திரிகை சம்பந்தமான ஒவ்வொரு வேலைக்கும் தக்கவர்களின் சிபாரிசுக் கடிதங்களோடு கமலக்கண்ணனை ஆட்கள் தேடி வரலானார்கள் படையெடுக்கலானார்கள்.

நாளுக்குநாள் அவர் ஒரு தினசரிப் பத்திரிகை நடத்தியே தீரவேண்டும் என்ற நிலை உறுதிப்பட்டுக் கொண்டு வந்தது. சொந்தமாகச் செய்துவந்த தொழில்களையும் கம்பெனி நிர்வாகங்களையும், எஸ்டேட் பொறுப்புக்களையும்விட இப்போது ஒரு தினசரிப் பத்திரிகை நடத்துகிற விஷயமே அவர்கவனத்தில் அதிகமாக இலயிக்கத் தொடங்கியிருந்தது. பிரமுகராக உயரவும், மந்திரியாகவும், அதைத் தவிர வேறு வழி இல்லை என்ற நம்பிக்கையை அவருக்குப் பலர் பல விதத்தில் உண்டாக்கிவிட்டார்கள்.

பத்திரிகைகளில் செய்த விளம்பரத்தைப் பார்த்துவிட்டு வண்டிவண்டியாகப் பெயர்கள் வந்து குவிந்தன. அந்தப் பெயர்க்குவியலில் எந்தப்பெயரைத் தேர்ந்தெடுப்பதென்று திணற வேண்டியிருந்தது. ‘வைகறை ஏடு’– எனப் பெயர் சூட்டுதலே ‘சாலச்சிறப்புடையது’–என்று புலவர் வெண்ணெய்க்கண்ணனார் வந்து கூறியதைக் கமலக்கண்ணனின் வியாபார நண்பர்கள் ஒப்புக்கொள்ளாததோடு கணிசமாகக் கேலியும் செய்து அனுப்பிவிட்டார்கள்.

இந்த நிலையில் ஒருநாள் காலை, நிருபர் கலைச்செழியனிடமிருந்து கமலக்கண்ணனுக்கு ஃபோன் வந்தது.

“சார்! நம்ப பேப்பர்லே ‘பிரமுகர் பக்கம்’னு ஒண்னு வருதே; அதிலே வாரம்வாரம் ஞாயித்திக்கிழமையன்னிக்கி ஸப்ளிமெண்ட்லே ஒருத்தரை இண்டர்வ்யூ பண்ணிப் போடறோம். அடுத்த வாரம் வெளிவர வேண்டிய இண்டர்வ்யூவுக்காக இன்னிக்கி நானும் ஒரு நண்பரும் உங்களைப் பார்க்க வரோம்! சாயங்காலம் நாலு மணிக்குச் சவுகரியப்படுமில்லையா?”

“அதுக்கென்ன வாங்க கூட யாரோ வர்றதாச் சொல்றீங்களே...யாரது?”

“யாருமில்லே சார்? நமக்கு ரொம்ப வேண்டியவர்... ‘பிரகாஷ் பப்ளிசிட்டீஸ்’னு புதுசா ஒரு விளம்பர ஏஜன்ஸி ஸ்டார்ட் பண்ணியிருக்கார்...”

“எங்கிட்ட எதுக்காக...?”

“அதான் வரோமே! நேரே பேசிக்கலாம் சார்!”

“சரி வரட்டும்...நாலு மணிக்குப் பார்க்கலாம்” என்று ஃபோனை வைத்தார் கமலக்கண்ணன்.

கூட வருகிறவனை வரவேண்டாம் என்று சொன்னால் எங்கே கலைச்செழியனே தன்னைப் பேட்டி காண வராமல் இருந்துவிடுவானோ என்ற தயக்கத்தினால் அதற்கும் ஒப்புக்கொண்டிருந்தார் கமலக்கண்ணன்.

ஒவ்வொரு நாள் காலையிலும் தினசரிப் பத்திரிகை ஒன்றின் முகத்தில் விழிக்கும்போதெல்லாம் – தமது தினசரிப் பத்திரிகையும் அதேபோல் வெளியாகி வீடு வீடாகப்போய் விழும் காலம் அருகிலிருப்பதைத் தவிர்க்க முடியாமல் கற்பனை செய்யும் அவருடைய மனம்.

மாவு மில், ரைஸ் மில்லுக்கான இரும்பு சாதனங்களையும், உபபாகங்களையும், வாட்டர் பம்புகளையும் வளர்க்கும் ஓர் ஃபவுண்ட்ரி–ட்ரில்லிங், வெல்டிங், மில்லிங், தொழில்களைச் செய்யும் நவீன மிஷின் களடங்கிய ஒரு பட்டறை – எல்லாம் கமலக்கண்ணனின் தகப்பனார்காலத்தில் ஏற்பட்டவை. நல்ல இலாபத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்த அவற்றின் ‘வொர்க் ஸ்பாட்’ திருவொற்றியூரில் இரண்டு ஏக்கர் பரப்பில் அமைந்திருந்தது. அது தவிரக் கொஞ்சம் இம்போர்ட் எக்ஸ்போர்ட் டிரேடிங் – சிலமருந்து – பால் உணவு – ஏஜன்ஸிகள் எல்லாம் இருந்தன. திரு வொற்றியூரில் ஒர்க்ஷாப்புக்கு அவர்போய் மாதக்கணக்கில் ஆகியிருந்தது. நம்பகமான உறவினர் ஒருவரை அங்கே ஒர்க்ஸ் மானேஜராகப் போட்டிருந்தார்.

ஒர்க்ஷாப்பின் அலுவலக சம்பந்தமான வேலைகள், நிர்வாகம்–எல்லாம் அவருடைய கம்பெனிகளின் மொத்தமான அலுவலகத்திலேயே சேர்ந்து இருந்ததனால் அது சம்பந்தமான ஆர்டர்கள்– கடிதப் போக்குவரத்துக்களை இருந்த இடத்திலிருந்தே அவரால் கவனித்துக்கொள்ள முடிந்தது. நகரின் பல பகுதிகளில் அவருடைய குடும்பத்துக்குச் சொந்தமாக இருந்த வீடுகளின் வாடகை உள்பட அவருக்கு வருமானமும் இலாபமும் தந்து கொண்டிருந்த தொழில்கள் பலவாக இருந்தன. ஆயிரம் விளக்கின் அருகே கிரீன்ஸ், ரோட்டில்–மவுண்ட்ரோடிலிருந்து திரும்பி நுழைந்ததுமே கண்ணிற்படுகிறாற் போன்ற முக்கியமான இடத்தில் கம்பெனிக் கட்டிடம் அமைந்திருந்தது. அதுவும் சொந்தக் கட்டிடம் தான். தமது பங்களா அமைந்திருந்த இராயப்பேட்டையின் மேற்குக் கோடிப்பகுதிக்கும் அலுவலகத்துக்கும், தாம் நெருங்கிய உறவுகொண்டிருந்த மவுண்ட்ரோடிலிருந்த ஒரு கிளப்பிற்கும் – பக்கம் பக்கமாக இருந்தது கமலக்கண்ணனுக்குச் செளகரியமாக இருந்தது. இதே செளகரியத்தை நாடித்தான் தினப்பத்திரிகைக்கும் மவுண்ட்ரோடிலேயே இடம் பார்த்தார் அவர்.

ஏற்கெனவே தினப்பத்திரிகை நடத்துவதற்காக ஒருவர் வாங்கிப்போட்டிருந்த ரோடரிமிஷின்களைத் தன்னுடைய தினப்பத்திரிகைக்கு எடுத்துக்கொள்வதற்குச் சாதுரியமாக ஏற்பாடும் செய்திருந்தார். ஃபாரின் எக்ஸ்சேஞ்ச் தொந்தரவு வராமலிருப்பதற்காகத் தம் பத்திரிகையில் அவரையும் ஒரு பங்குதாரர்போல் பெயருக்கும் ஆக்கிவிடத் திட்டமும் போட்டிருந்தார் கமலக்கண்ணன் ‘டெக்ளரேஷன்’ கேட்டு டெல்லியிலிருக்கும் பிரஸ் ரிஜிஸ்டிராருக்கு எழுதிப் போடவேண்டியதுதான் பாக்கி, அப்படி எழுதிப் போடுவதற்கு முன்னால் பத்திரிகைக்கு என்ன பெயர் வைப்ப தென்று -- விளம்பரத்தைப் பார்த்து --– வந்து குவிந்திருக்கிற பெயர்களில் சிலவற்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பெயர் முடிவாகிவிட்டால் டெல்லிக்கும் எழுதிவிடலாம். பின்பு பத்திரிகைகளில் விளம்பரமும் போட்டு ---– ஏஜெண்டுகளை விண்ணப்பிக்கச் சொல்லலாம். பெயரைத் தேர்ந்தெடுப்பதற்காக அன்றிரவு கிளப்பில் நண்பர்களோடு பேச முடிவு செய்திருந்தார் அவர்.

மாலை நான்கு மணிக்குக் கலைச்செழியன் பேட்டி காண வருவதாகச் சொல்லியிருந்ததனாலும், பேட்டி முடிந்தவுடன் நண்பர்களைக் காண ‘கிளப்’புக்குப் போக வேண்டியிருந்ததனாலும் பகலில் நன்றாக ஒய்வெடுக்க விரும்பினார் அவர் கம்பெனியிலிருந்து பதினொரு மணிக்கு ஃபோன் வந்தது. அவருடைய காரியதரிசி பேசினார். முக்கியமான தபால்களை ஃபேர்னிலேயே படித்தார். ஸ்டெனோவைக் கூப்பிட்டு ஃபோனிலேயே முடிந்த வரை பதில்களைச் சொல்லிவிட்டார் அவர். பகலில் நன்றாகத்துங்கி எழுந்தால்தான் மாலையில் கலைச்செழியன் பிரமுகர் பேட்டிக்காகப் போட்டோ எடுக்க வருகிறபோது ஃபிரஷ் ஆக இருக்குமென்று தோன்றியது அவருக்கு. குளித்துச் சாப்பிட்டுவிட்டு நன்றாகத் துரங்கினார். மூன்று மணிக்கு அவர் எழுந்திருந்தபோது வேலைக்காரன்.

“சார்! இவரு உங்களைப் பார்க்க வந்திருக்கார். அனுப்பட்டுமா?”– என்றபடி ஒர் அழகிய விஸிட்டிங்கார்டைக் கொண்டு வந்து நீட்டினான். முகத்தைச் சுளித்துக் கொண்டே அதை வாங்கித் தூங்கி எழுந்திருந்த சோம்பலோடு வாசித்தார் கமலக்கண்ணன்.

எஸ்.வி.கே. நாதன், எம்.ஏ என்று ஆங்கிலத்தில் அச்சிட்டு அதன் கீழ் அமெரிக்கா, இங்கிலாந்து -- நாடுகளின் இரண்டு யூனிவர்ஸிடிகளில் ஜர்னலிஸத்தில் விசேட டிப்ள மோக்கள் வாங்கியிருப்பதாகவும் கண்டிருந்தது.

“என் அறையில் உட்காரச் சொல். காபி கொண்டு போய்க்கொடு. நான் முகம் கழுவிக்கொண்டு வருகிறேன். டைனிங் டேபிளில் எனக்கும் காபி வை...”– என்றார் கமலக்கண்ணன். வேலைக்காரன் விரைந்தான்.

கமலக்கண்ணன் முகம் கழுவிக் காபி குடித்துவிட்டு அறைக்குள் நுழைந்தபோது வந்திருந்தவரும் காபி குடித்து விட்டுக் காத்திருந்தார். தம்மை மரியாதையாகவும், அடக்கமாகவும் அறிமுகம் செய்துகொண்டு கமலக்கண்ணலுடன் கை குலுக்கினார் வந்திருந்தவர்.

‘க்ளாட் டு மீட் யூ’–என்று முகம் மலர்ந்த கமலக்கண்ணன் -– இரண்டு விநாடி வந்திருந்தவருடைய தோற்றத்தை நிதானமாக அளந்துவிட்டு எதற்காக அவர் வந்திருக்கக் கூடும் என்பதையும் அநுமானித்துக்கொண்டே பின், ஒன்றுமே அநுமானிக்காதவர் போன்ற குரலில்,

“வாட்கேன் ஐ டு ஃபார் யூ ஸார்...”– என்று நாகுக்காக வினவினார். இருவரும் ஆங்கிலத்திலேயே பேச்சைத் தொடர்ந்தார்கள்.

“நீங்க ஏதோ ஒரு டெய்லி தொடங்கப் போறதாக் கேள்விப்பட்டேன். டெய்லி ஜெர்னலிஸ்த்திலே எனக்கு இருபத்தைந்து வருஷ எக்ஸ்பீரியன்ஸ் இருக்கு ரெண்டு வருஷம் லண்டன்லியும் ஆறு வருஷம் நியூயார்க்கிலேயும் இருந்து மாடர்ன் ஜெர்னலிஸத்தைக் கரைச்சுக் குடிச்சிருக்கேன். அதுக்கப்புறம் பத்து வருஷம் பம்பாயில் மார்னிங் டைம்ஸிலே சீஃப் எடிடரா இருந்திருக்கேன். ஏழு வருஷம் கல்கத்தாவிலே......’ பேப்பர்லே எக்ஸிகியூடிவ் எடிடரா இருந்திருக்கேன். இப்பத்தான் ஊரோட வந்தாச்சு. என் செர்வீஸை நீங்க ஏதாவது யுடிலைஸ் பண்ணிக்க முடியுமானாச் சந்தோஷப்படுவேன்...லீடர், கரண்ட்டா பிக்ஸ், எல்லாம் டீல் பண்றதிலே என்னோட சாமர்த்தியம் புகழ்பெற்ற பத்திரிகையாளர்களால் எல்லாம் கொண்டாடப்பட்டிருக்கு...”–என்று கூறியவாறே ஒரு பைல் நிறைய சர்டிபிகேட்டுகளையும், உலகப் பிரமுகர்களினது பாராட்டுக் கடிதங்களையும் எடுத்து நீட்டினார் எஸ்.வி.கே.நாதன்.

அந்தப் பாராட்டுக் கடிதங்களையெல்லாம் பார்த்துக் கமலக்கண்ணன் அயர்ந்தே போனார். சர்ச்சில், ரூஸ்வெல்ட், காந்தி, நேரு, சேனநாயகா, அவுன்ஸாங், போன்றவர்களிடமிருந்தெல்லாம் கூடப் பாராட்டுக் கடிதங்கள் வாங்கியிருந்தார் அவர். ஆள் உண்மையாகவே பெரிய ஆள்தான் என்பதைச் சந்தேகமின்றிப் புரிந்து கொண்ட கமலக்கண்ணன் வியப்பில் சிலநிமிடங்கள் என்ன பேசுவதென்றே தெரியாமல் மெளனமாயிருந்தார்.

“என்ன யோசிக்கிறீங்க” -- என்றார் வந்தவர்.

“ஒண்னுமில்லே! நான் நடத்தப்போறது ஒரு சாதாரண தமிழ் டெய்லி நியூஸ் டேப்பர்! உங்க ‘குவாலிபிகேஷன்ஸ்’ எல்லாம் ரொம்ப ரொம்பப் பெரிசா இருக்கேன்னுதான் பார்க்கிறேன்...”

“என் மதர் டங்டமில்தான்! இத்தனை நாள் ஏதேதோ இங்கிலீஷ் பேப்பர்லே உழண்டாச்சு. இனிமேலாவது ரிடயர்ட் லைஃபை இப்படிக் கழிக்கலாம்னு பார்க்கிறேன், உங்களுக்கும் இப்ப இங்கே என்னைவிட ‘க்வாலிஃபைட் ஸீனியர் ஹாண்ட்’ கிடைக்காது...”

“அதெல்லாம் சரிதான்... ஆனால்... வந்து”

“சம்பளம் நெறையக் கேப்பேனோன்னு சந்தேகப் படறாப்பிலே தெரியறது...”

‘சே சே அதெல்லாமில்லே... நான் யோசிக்கிறது என்னன்னா...’

நீங்க ஒண்ணும் யோசிக்கவே வேண்டாம், நம்பிக்கையா எங்கிட்ட விட்டுடுங்கோ, உங்க பேப்பருக்கு ஆறே மாசத்திலே அகில இந்தியப் புகழ் உண்டாக்கிக் காண்பிக்கிறேன்...”

“எனக்கு ரெண்டு நாள் டயம் குடுங்க மிஸ்டர் நாதன்...”

“ஒ எஸ் டேக் யுவர் ஒன் டைம்...”

– இவர்கள் இப்படிப் பேசிக்கொண்டிருந்த சமயத்தில் கலைச்செழியனும் அவரோடு பிரகாஷ் பப்ளிஸிட்டீஸ் உரிமையாளரும் வந்து சேர்ந்தார்கள். கமலக்கண்ணனுக்குப் பிரகாஷ் பப்ளிவிட்டீஸ் உரிமையாளரை அறிமுகப் படுத்தி வைத்தான் கலைச்செழியன். அவர்கள் இருவருக்கும் நாதனை அறிமுகப்படுத்தி வைத்தார் கமலக்கண்ணன்.

இதற்குள் கலைச்செழியன் கையோடு கொண்டு வந்திருந்த துணிப்பையிலிருந்து ஒரு எவர்ஸில்வர் அரிவாள் மணையின் நுனி தெரியவே,

“இதென்ன? அரிவாள்மனையை எடுத்துக்கொண்டு கிளம்பிட்டீர்கள்? வீட்டுக்கு வாங்கிக்கொண்டு போகிறீர்களா?” என்று வேடிக்கையாகக்கேட்டார்கமலக்கண்ணன்.

“இதுவா? குட்டி நடிகை குந்தள குமாரியோட பிரத்யேகப் பேட்டிக்காகப் போயிருந்தேன். ‘அது’ காய்கறி நறுக்கறமாதிரியும், சமயல் செய்யிற மாதிரியும்போட்டோப் புடிச்சுப் போடணும்னுபோனா அவங்க வீட்டிலே அரிவாள் மனையே கிடையாதுன்னுட்டாங்க. காய்கறி நறுக்கக்கூட. ஏதோ ‘எலக்ட்ரிக்’லே மிஷின் வந்திருக்குதாமே? அதுதான் அவங்க உபயோகிக்கிறாங்களாம். சிவனேன்னு நானே எவர்ஸில்வர் கடைக்குப்போயி ஒரு அருவாமணை வாங்கிக் கொண்டுபோய்– அந்தப் பொண்ணை உக்கார வச்சிக் காய்கறி நறுக்கற மாதிரிப் படம் புடிச்சேன் ‘எலக்ட்ரிக்’ மிஷின்லே நறுக்கற மாதிரிப் போட்டோ படத்துக்கு எடுக்காதுங்களே?...” என்று கலைச்செழியன் தன் குட்டி நடிகை சம்பந்தமான சாதனையை வியக்கத் தொடங்கியபோது,

“நல்லவேளை நடிகைக்காக நீங்களே கறிகாய் நறுக்கத் தொடங்கி கையைக்காலை வெட்டிக்கொள்ளாமல் பிழைத்தீர்களே! அந்த மட்டில் புண்ணியம்...”– என்றார் நாதன்.

“என்ன சார் செய்யிறது ‘மாஸ் அப்பீல்’தான் இன்னிக்குப் பத்திரிகையாருக்கு”– என்றார் கமலக்கண்ணன் கலைச்செழியனை விட்டுக்கொடுக்காமல் பேசினார் ஆவர்.

“மாஸ் அப்பீலாவது மண்ணாங்கட்டியாவது? சும்மா அப்படிச் சொல்லிச் சொல்லி இவங்களாக் கீழே அதல பாதாளத்துக்குப் போயிட்டிருக்காங்க சார். ஒருகாலத்தில் நவகாளி யாத்திரையில் காந்திக்குப் பின்னாலும், அதற்கு முன் உப்பு சத்தியாகிரகத்துக்குப் பின்னாலும், புண்ணிய நடை நடந்த இந்த நாட்டுப் பத்திரிகை நிருபர்களின் இன்றைய வம்சாவளியினர் குட்டி நடிகைகளையும் குச்சுக் காரிகளையும் தேடிப்போகிற நிலைமை வந்திருப்பது கேவலத்திலும் படுகேவலம். அன்று புனிதமான, பெருமிதமான காரியங்களுக்கு எல்லாம் முதல் அடி பெயர்த்து வைத்த தமிழ்நாடு இன்று மட்டமான கேவலமான காரியங்களுக்கு எல்லாம் உதாரணமாயிருப்பதை எங்கே போய் அழுவது?” என்று கடுமையாக யாரும் எதிர்பாராத நிலையில் சீறினார் நாதன்.

கலைச்செழியனோ, அவனுடன் வந்திருந்த பப்ளி ஸிட்டி ஆசாமியோ நாதனின் இந்தச் சீற்றத்தை ரசிக்க வில்லை. கமலக்கண்ணனின் நிலையோ தர்மசங்கடமாகி விட்டது. இப்படியே பேச்சைத் தொடரவிட்டால் நாதன் எழுந்திருந்து கலைச்செழியனை அறைவதோ, கலைச்செழியன் எழுந்திருந்து நாதனை அறைவதோ, தவிர்க்கமுடியாத தாகிவிடும் என்று தோன்றியது. நாதனைப் பகைத்துக் கொண்டாலும் கலைச் செழியனைப் பகைத்துக்கொள்ளத் தயாராயில்லை அவர். கலைச்செழியனைப் பகைத்துக் கொண்டால் ‘இண்டர்வ்யூவை’ முடிக்காமலே அவன் போய்விடுவானோ என்ற பயம் உள்ளுரக் குறுகுறுத்தது. அந்த நிலையில்,

“அப்போ நான் வர்ரேன். தேவையானால் மறுபடி சந்திப்போம்...”– என்று மீண்டும் கைகுலுக்கி விடைபெற்றுக்கொண்டு புறப்பட்டு விட்டார் நாதன். கமலக்கண்ணனைத் தவிர மற்ற இருவரிடமும் “போய் வருகிறேன்” என் பதற்கு அடையாளமாகத் தலையை மட்டுமே ஆட்டினார் நாதன்.

ஆனால் நாதனிடமிருந்த கம்பீரத்தினாலோ அல்லது பேச்சின் பெருமிதத்தினாவோ அனிச்சைச் செயலாகத் தன்னையறியாமலே எழுந்து நின்று அவரைப் பயபக்தியாகக் கைகூப்பி விடை கொடுத்தான் கலைச்செழியன். எழுந்து நின்ற பின்புதான் ‘தான் அந்த ஆளுக்காக எழுந்து நின்று விட்டோமே’ என்று தன் மேலேயே கோபம் வந்தது கலைச்செழியனுக்கு.

நாதன் தலைமறைந்தபின், “இந்தக்காலத்திலே இவருமாதிரி ஆள் பத்திரிகை நடத்தினா அதை இவரு மட்டும் தான் படிக்கனும். வேற ஒரு பய தொடமாட்டான். புனிதமாவது வெங்காயமாவது?” என்று கமலக்கண்னனை நோக்கித் கூறினார் பிரகாஷ் பப்ளிஸிட்டி அதிபர்.

“அது சரிதான்! ஆனா மனுஷன் நெறையப் படிச்சிருக்கார். ஆனானப்பட்ட ஆளுங்கள்ளாம் இவர் திறமையைப் புகழ்ந்து எழுதியிருக்கானே! சரக்கு இல்லாம அப்பிடி எழுதுவானா?” என்று இதற்கும் விட்டுக்கொடுக்காமல் பதில் கூறினார் கமலக்கண்ணன்.

“சரக்கு இருக்கலாம் சார் ஆனால் இன்னிக்கி எந்தச் சரக்கானாலும், அதை ஜனங்க விரும்பற சரக்கா மாத்திக்கணும். இல்லாட்டா–சாக வேண்டியதுதான்...”

“சரி அது எப்படியும் போகட்டும்! நமக்கு வேண்டாம் அவர் கவலை. இப்ப நீங்க வந்த காரியத்தைக் கவனியுங்க...” என்றார் கமலக்கண்ணன்.

“நம்ம காரியம் ரெண்டு நிமிஷத்திலே முடிஞ்சிடும். உங்க பேட்டியை நீங்க எப்படி எப்படி விரும்புவீங்களோ அப்பிடி நானே எழுதிகிட்டு வந்திட்டேன். இந்தாங்க! சும்மா ஒருதரம் புரட்டிப்பார்த்து விட்டுக்கீழே கையெழுத்துப் போட்டுக் கொடுத்திடுங்க. படம் மட்டும் புடிச்சிக்கணும்...” என்று தொடங்கிய கலைச்செழியனை இடைமறித்து “அதெப்படி? நீங்களே எழுதிட்டு வரமுடியும்?

நான் ஒண்ணுமே சொல்ல வேண்டியதில்லையா?” என்று கமலக்கண்ணன் வினவினார்.

“முதல்லே இதைப் படியுங்க! எல்லாம் கச்சிதமா இருக்கும். நீங்களே அசந்து பூடுவிங்க...”

கமலக்கண்ணன் கலைச்செழியனின் கையெழுத்துப் பிரதியைப் படிக்கத் தொடங்கினார். படித்துக்கொண்டே வந்தவர், “எனக்கு வீணை வாசிக்கறதிலே ரொம்பப் பிரியமும், திறமையும், பழக்கமும் உண்டுன்னு எழுதியிருக்கீங்களே...?” என்று தயங்கிய குரலில் கேட்டார்.

“அதெல்லாம் பரவாயில்லே சார்!சும்மா இருக்கட்டும் நான் பார்த்துக்கறேன். எத்தனை சங்கீத சபைகள்லே தலைவராகவும் உபதலைவராகவும், மெம்பராகவும் இருக்கீங்க... சும்மா அதோட சம்பந்தப்படுத்தி ஏதாச்சும் போடாட்டி நல்லாருக்காது பாருங்க...உங்க வீட்டிலே குழந்தைங்க யாராவது வீணை படிப்பாங்களே! இல்லியா...? அதிலே ஒரு வீணையைத் தூக்கி வச்சிட்டுச் சும்மா உக்காருங்க... ஒரு படத்தைத் தட்டிக்கிறேன் அசல் வீணை வித்வான் தோற்றுப் போகிற மாதிரிப் பண்ணிடமாட்டேன்– ”என்று அட்டகாசமாக ஒரு போடு போட்டான் கலைச்செழியன்.

“அப்போ குட்டி நடிகை எவர் ஸில்வர் அரிவாள் மணையில் காய்கறி நறுக்கற மாதிரித்தான் இதுவும்னு சொல்லுங்க...” என்று கமலக்கண்ணன் கலைச்செழியன்ன ஹாஸ்யத்துக்கு இழுத்தார்.

கலைச்செழியன் அதைக் கேட்டு அசடுவழியப் புன்முறுவல் பூத்தான்.

“மத்ததெல்லாம் சரியாகவே இருக்கு. நான் டெய்லி ஸ்டார்ட் பண்றதைப் பத்திக்கூட எழுதிட்டீங்க என்னைப் பத்தித்தான் ரொம்ப அதிகமாகத் தூக்கிவச்சு எழுதியிருக்கீங்க. அது உங்க அன்பைக் காட்டுது...”

“அதென்ன ஒருத்தர் சொல்லியா தெரியணும்? நம்ம கலைச்செழியன் சார் மனசு வச்சிட்டார்னா எல்லாம் பிரமாதமாப் பண்ணிப்பிடுவாரு இன்னிக்கி நேத்திக்கிப் பழக்கமா? பத்துவருஷமா நானும் இவரும் பழகுகிறோம். இவரிட்ட நான் தெரிஞ்சுக்கிட்ட ஒரே நல்லகுணம் அன்புக்காக உசிரைக் கொடுப்பாரு...” என்ற பிரகாஷ் பப்ளி ஸிட்டியின் தாளத்தை இடைவெட்டி ,

“உசிர் இருந்தாத்தானே அன்பு செய்யலாம்? கொடுத்துப்பிட்டா என்ன பிரயோசனம்?” என்பதாகக் கமலக்கண்ணன் ஒரு போடு போட்டார்.

”நல்லாச் சொன்னிங்க...போங்க...!” என்று அதற்கும் ஒரு பதில் கொடுத்து அடி வாங்கியதைச் சமாளித்துக் கொண்டார் பப்ளிஸிட்டி.

புகைப்படம் எடுக்கும் சந்தர்ப்பம் வந்தது. பலகோணங்களில் கமலக்கண்ணன், கமலக்கண்ணனின் குடும்பம், கமலக்கண்ணன் தன் வயசான தாய்க்கு உபசாரம் செய்வது போல், முன் ஹாலில் புதிதாகப் பெரிதாக மாட்டியிருந்த காந்தி படத்துக்கு அருகே நிற்பதுபோல்– எல்லாம் படங்கள், எடுத்தபின் கீழே ஜமுக்காளத்தை விரித்து அவர் வீணை வாசிப்பதுபோல் படம் எடுக்க ஏற்பாடு தொடங்கியது. வீட்டிலிருந்த பழையவீணையைத் தூசிதட்டித்துடைத்துக் கொண்டுவந்து கொடுத்தாள் மிஸஸ் கமலக்கண்ணன். அந்தப் படப்பிடிப்புக் காட்சியை வேடிக்கை பார்க்கக் கமலக்கண்ணனின் குடும்பமே ஹாலில் திரண்டுவிட்டது.

தம்புராவைப் பிடிப்பதுபோல் வீணையை நெட்டுக் குத்தாகப் பிடித்துக்கொண்டு அவர் படத்துக்கு உட்கார்த்ததும் மிஸஸ் கமலக்கண்ணன் சிரிப்பை அடக்கமுடியாமல் கொல்லென்று சிரித்தே விட்டாள்.

“இந்தாங்க! உங்களைத்தானே? இது தம்புரா இல்லே – வீணை வைச்சுக்கிட்டு வாசியுங்க...” என்று அந்த அம்மாள் ‘டைரக்ட்’ செய்த பின்னே படப்பிடிப்புக் காட்சியில் நேர இருந்த அபத்தம் தவிர்க்கப்பட்டது.

“சாருக்குத் தெரியாதுங்கிறதில்லே அம்மா! சார் அதிலேயும் ஒரு புதுமை செய்ய விரும்பினார். நீங்க கெடுத்துட்டிங்க...” என்று அந்த அபத்தத்தையும் ஒரு சமத்கார மாக்கி உளறினான் கலைச்செழியன்.

படப்பிடிப்புக்கள் முடிந்து கமலக்கண்ணன், கலைச் செழியன், பிரகாஷ் பப்ளிவிட்டி மூவரும் மீண்டும் அறைக்கு வந்து அமர்ந்தார்கள். பின்னவர் இருவருக்கும் டிபன், காபி வந்தது -– சாப்பிட்டார்கள்.

“சாரை என்ன காரியமா அழைச்சிட்டுவந்திங்களோ?” என்று பிரகாஷ் பப்ளிஸிட்டியைச் சுட்டிக் காண்பித்துக் கலைச்செழியனிடம் தயங்கிய குரலில் மெல்லக் கேட்டார் கமலக்கண்னன்.

“சார் -– அட்வர்டைஸிங் அண்ட் சேல்ஸ் ப்ரமோ ஷன்ஸ்லே ரொம்பப் பெரிய எக்ஸ்பர்ட் பிரகாஷ் பப்ளிஸிட்டி ‘பிரகாசம்’னா மெட்ராஸிலே சினி ஃபீல்டிலேயும் சரி. பிஸினஸ் ஃபீல்டிலேயும் சரி, தெரியாதவங்களே இருக்க மாட்டாங்க–” என்று பலமான அடிப்படையோடு தொடங்கினான் கலைச்செழியன் அடிப்படை பலமாகப் பலமாகக் கமலக்கண்ணனுக்கு என்னவோ ஏதோ என்று சந்தேகம் தட்டத் தொடங்கியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=நெஞ்சக்கனல்/6&oldid=976859" இருந்து மீள்விக்கப்பட்டது