நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்/001-013

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search 

1. கருணை


 

வ்வியக்கத்தக்க சம்பவம், 1919 - செப்டம்பர் 12 ஆம் நாள் ‘உகாண்டா’ நாட்டில் ஒரு சிறிய கிராமத்தில் நடந்தது. ‘மசாயி’ என்ற ஆதிவாசிகள் அடர்ந்த காடுகளில் சிறு சிறுநிலப்பகுதியைத் தமக்குச் சொந்தமாக்கி விவசாயத்தொழில் செய்து வாழ்ந்து வந்தனர்.

அங்கு புதிதாக மணம் புரிந்த தம்பதிகள் மகிழ்ச்சியாகத் தங்கள் வாழ்வைத் தொடங்கினர். ஓரிரு வருடங்களில் தாய்மை அடைந்த அப்பெண், குழந்தை பிறந்த சில நாட்களில் நோய்வாய்ப்பட்டு இறந்து போய் விட்டாள்.

இந்நிலையில் நிலத்தில் விளையும் கிழங்கு, காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை ‘கொரில்லா’ என்ற ஒருவகைக் குரங்குகள் நாசப்படுத்தித் தொல்லை கொடுத்தன. தன்னந்தனியனான அவ்வாலிபன் தாயற்ற தன் அருமைக் குழந்தையைப் பாதுகாக்கவும், உழைத்துப் பயிரிட்ட உணவைக் கொரில்லாக்களிடமிருந்து காக்கவும் இடைவிடாமல் போராடித் துன்புற வேண்டியிருந்தது.

ஒருநாள் குழந்தை தூங்கும் நேரம். கூப்பிடு தூரத்தில் நிலத்தைப் பண்படுத்தும் வேலையைச் செய்து கொண்டிருந்தான். அப்பொழுது குழந்தையின் அழுகுரல் கேட்டதும் வீட்டை நோக்கி விரைந்தான். ஆனால், அவன் சற்றுத் தொலைவில் வரும்போதே, பெண் கொரில்லா ஒன்று தன் குட்டிகளோடு குடிசைக்குள் நுழைந்து கொண்டிருந்ததைப் பார்த்து ஸ்தம்பித்து நின்று விட்டான். தன் குழந்தையின் கதி என்னவாகுமோ என அவன் மனம் பதறிற்று. தன் தோளிலிருந்த வில்லை எடுத்து நாண் ஏற்றியவாறு பீதியோடு அடிமேல் அடிவைத்து குடிசைக்கு அருகில் வந்தபோது குழந்தையின் அழுகையும் நின்றிருந்தது.

(Upload an image to replace this placeholder.)

அப்போது, குடிசையின் உள்ளே அவன் கண்ட காட்சி, அவனை மெய்சிலிர்க்க வைத்தது. என்ன ஆச்சர்யம்! தாய் கொரில்லா அவன் குழந்தையை மார்போடு அணைத்துப் பாலூட்டிக் கொண்டிருந்தது, குட்டிகள் தொட்டிலைச் சுற்றி விளையாடிக் கொண்டிருந்தன. இந்த அற்புதமான நம்ப முடியாத காட்சி அவனைச் சிலையாக்கியது.

பாலூட்டி முடித்த கொரில்லா குழந்தையை மீண்டும் முன்பிருந்தது போல் தொட்டிலிலிட்டுத் தன் குட்டிகளோடு வெளியேறியது. படபடக்கும் உள்ளத்தோடு குழந்தையைத் தூக்கி பால் வடியும் இதழ்களில் கண்ணீரோடு முத்தமிட்டான்.

அன்றுமட்டுமல்ல குழந்தை அழும் ஒவ்வொரு நாளும் அவன் இல்லாதபோது வந்து பாலூட்டிச் சென்றது. சில மாதங்களுக்குப் பிறகு மெல்ல மெல்ல அதன் வருகை நின்றுவிட்டது.

மனிதனாய்ப் பிறந்து விலங்காய் வாழும் உலகில், விலங்காய்ப் பிறந்து மனிதத் தன்மை என்னும் கருணையைக் காட்டிய கொரில்லாவை நாம் நம் வாழ்வில் மறக்க முடியுமா?