உள்ளடக்கத்துக்குச் செல்

நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்/002-013

விக்கிமூலம் இலிருந்து


2. தியாகம்


சாது மகா நாமர் என்பவர் கபிலவஸ்து என்ற ஊரில் பிறந்தவர். பகவான் மகாவீரரைக் குருவாகக் கொண்டவர். தூய உள்ளமும் நல்லொழுக்கமும் பிறவியிலேயே அவருக்கு இயல்பாக அமைந்து இருந்தன.

பகவான் மகாவீரரின் சீடராகப் பணிபுரிந்த போது அவர் உபதேசித்த ஒரு வாக்கியம் - “நாஸ்தி தியாக சமண் சுகம்” என்பது. அதன் பொருள் தியாகத்தை மிஞ்சிய சுகம் இல்லை என்பது தான். அவ்வாக்கியம் அவரின் உள்ளத்தில் ஆழப் பதிந்து விட்டது.  ஒரு காலத்தில் அவரிடம் கல்வி கற்ற மாணவனான விடூபன் என்பவன் - சீராவஸ்தி என்ற நகருக்கு அரசனானான். பிறகு அவன் பெரும் படையோடு கபிலவஸ்துவை முற்றுகையிட்டுப் புரிந்த போரில் வெற்றியும் பெற்றான்.

இரக்கம் என்பதே அறியாத அவன் அப்பாவி மக்களையெல்லாம் கொன்று குவிக்கத் தொடங்கினான்.

அப்போது அங்கு வருகை தந்த மகா நாமர் இதைக் கேள்விப்பட்டுத் தன்னிடம் கல்வி கற்ற ஒரு மாணவன் இத்தகைய கொடூர குணமுடையவனாக இருக்கிறானே என்று எண்ணிக் கலங்கினார்.

இச்செயலைத் தடுத்தே ஆக வேண்டும் என்ற உறுதியோடு அவனைக் காணச் சென்றார். தான் ஓர் அரசன் என்ற கர்வம் விடூபனுக்கு இருந்த போதிலும் தனக்குக் குருவாக இருந்ததால் அவரை வரவேற்க வேண்டியதாயிற்று.

அவனுக்கு வணக்கம் கூறிய மகாநாமர் “அரசே நீ என்னிடம் கல்வி கற்ற போது குருதட்சணை கொடுக்க முன் வந்தாய். ஆனால் நான் அதை வேண்டும் போது பெற்றுக் கொள்வதாகக் கூறியிருந்தேன். இன்று அதைக் கேட்டுப் பெற்றுக் கொள்ளவே வந்திருக்கிறேன்” என்றார். சற்றுத் தயங்கிய விடூபன் “சரி கேளுங்கள்" எனத் தலையசைத்தான். “இங்கு அப்பாவி மக்கள் கொல்லப்படுவது உடனே நிறுத்தப்பட வேண்டும் என்பதே நான் உன்னிடம் கேட்கும் குருதட்சணை" என்றார் மகாநாமர்.

குள்ளநரியைப் போல் சில கணங்கள் யோசித்த விடூபன் “குருதேவா, இந்த தட்சணையை ஒரு நிபந்தனையோடு தங்களுக்குத் தர விரும்புகிறேன். அரசன் என்ற முறையில் என் நாட்டையும் மக்களையும் நான் காப்பாற்றியாக வேண்டும். தோல்வியுற்ற இந்நாட்டு மக்கள் நாளை படை வீரர்களாய் உருவாகலாம். என் நாட்டின் மீது போரும் தொடுக்கலாம் அல்லவா? ஆனால் என் குரு என்பதால் தங்களின் தட்சணையையும் நான்

மறுக்க விரும்பவில்லை. ஆகவே நீங்கள் ஒரு நீர் நிறைந்த குளத்தில் மூழ்கி மேலே வரும் கால அளவுவரை நான் அவர்களைக் கொல்லும் செயலை நிறுத்தி

(Upload an image to replace this placeholder.)

வைக்கிறேன் இதற்குச் சம்மதமா?” என்று கேட்டான். கொடூரமான இந்த நிபந்தனைக்குச் சற்றும் தயங்காமல் சரி என்று தலையசைத்த மகாநாமர் “அப்படியே ஆகட்டும்” என்றார். கொலைத் தொழில் நிறுத்தப்பட்டது. மகாநாமர் நகர்ப்புறத்திலுள்ள ஓர் ஆழமான குளத்தில் அரசன் கண் முன்பே குதித்து அமிழ்ந்து போனார்.

இதையறிந்த மக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதையும் மறந்து பதைபதைத்து நீரில் மூழ்கிய அந்த ஞானியைக் காணக் கூடினர். அரசனும், ஏனையோரும் அவர் மேலே வருவதை எதிர்பார்த்துக் காத்து இருந்தனர். ஆனால் நேரம் சென்று கொண்டு இருந்ததே தவிர மகாநாமர் மேலே வரக் காணோம். நீண்ட நேரம் காத்திருந்த அரசன் சலிப்பும் சினமும் அடைந்து தன் படைவீரர்களைக் குளத்தில் இறங்கித் தேடக் கட்டளையிட்டான். தன் இடுப்பில் கல்லைக் கட்டிக் கொண்டு நீரில் மூழ்கி இறந்து விட்ட மகாநாமரின் உடலை வீரர்கள் மேலே கொண்டு வந்தனர். அதைக் கண்ட அரசன் திடுக்கிட்டான். மக்களைக் காக்கும் பொருட்டுத் தன் இன்னுயிரைத் துச்சமென ஈந்த அந்த குருநாதரின் புன்னகை புரியும் ஒளி நிறைந்த முகத்தை உற்று நோக்கினான். மக்கள் கூக்குரலிட்டனர்; கதறித் துடித்தனர்.

“குருவையே கொன்ற விட்ட மகாபாவி” எனச் சாடினர். விடூபன் தலை குனிந்தவாறு தன் கொடிய செயலுக்கு வருந்தி அவ்விடம் விட்டு அகன்றான்.

தியாகத்தை மிஞ்சிய சுகம் எது எனச் செயலில் செய்து காட்டிய மகாநாமரை நாம் நினைவில் கொண்டு அவ்வழி நடப்போம்.