நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்/004-013

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search 

4. மதிப்பு


 

மெரிக்காவில் நடக்கும் ஜனாதிபதிக் கான தேர்தலில் ஆப்ரஹாம் லிங்கன் என்பவரும் போட்டியிடுகின்றார். அவரது உருவப்படத்தை எல்லா நாளிதழ்களும் பிரசுரித்திருக்க எதேச்சையாக, பத்து வயது மதிக்கப்பட்ட சிறுமி ஒருத்தியும் அதைப்பார்க்க நேர்ந்தது.

அழகு என்பது சிறிதுமற்று நீண்ட முகமும் குழிவிழுந்த கண்களும், ஒட்டிய கன்னங்களுமாக இருந்த அந்தப் படத்தைப் பார்த்த அச்சிறுமி, தன் கையிலிருந்த பென்சிலால் அவரின் படத்துக்குத் தாடியை வரையத் தொடங்கினாள். அப்பொழுது அப்படம் அழகாக இருப்பதாக அவளுக்குத் தோன்றியது. அதை அவருக்குத் தெரிவிக்க விரும்பி உடனே ஒரு கடிதம் எழுதினாள்.

“உயர்திரு. ஆப்ரஹாம் லிங்கன் அவர்களுக்கு வணக்கம்.

ஐயா, என் வயது பத்து. என் பெயர் கிரேஸ் பேடல். தாங்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதை நாளிதழ் மூலமாக அறிந்தேன். தங்களிடம் எனது சிறிய வேண்டுகோள் ஒன்று. நீங்கள் தாடி வைத்துக் கொள்ள வேண்டும் என்பதே! அப்படி நீங்கள் தாடி வைத்துக் கொண்டால் என் மீது மிக்க அன்பு கொண்ட என் குடும்பத்தினர் அனைவரையும் தங்களுக்கே வாக்களிக்கும்படி கூறுவேன். நீங்களும் நிச்சயம் வெற்றி பெறுவீர்கள்”.

இக்கடிதம், ஆப்ரஹாம்லிங்கன் செயலர்களிடம் சர்ச்சையை எழுப்பியது. மிக முக்கியமான கடிதங்களை மட்டுமே ஆப்ரஹாம் பார்வைக்குக் கொடுக்கப்படும். ஆதலால் இந்தக் கடிதம் அர்த்தமற்றதும் தேவையற்றதும்

(Upload an image to replace this placeholder.)

ஆகும் என்று ஒருவரும், அதை லிங்கனே தீர்மானிக்கட்டும் என்று ஒருவரும் வாதிட்டனர். முதலில் அது லிங்கனின் பார்வைக்கு அனுப்பப்பட்டது. அதைப் படித்த அவர் உடனே பதில் அனுப்பினார்.

“அன்புமிக்க என் சின்னஞ்சிறு சிநேகிதிக்கு நல்வாழ்த்துக்கள்... நான் தாடிவைக்க வேண்டும் என்ற உன் விருப்பம் விசித்திரமாக இருந்த போதிலும், உன் விருப்பத்தை நிறைவேற்ற முயல்கிறேன்.

இப்படிக்கு
ஆப்ரஹாம் லிங்கன்”

பிறகு நடந்த தேர்தலில் அதிக வாக்குகளோடு லிங்கன் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரை வெள்ளை மாளிகைக்கு அழைத்துச் செல்ல இரயில் வண்டி ஏற்பாடு செய்யப்பட்டது. அது கிரேஸ் பேடலின் ஊரான வெஸ்ட்பீல்டின் வழியாகத்தான் செல்கிறது என்பதை அவர் அத்தனை அலுவல்களுக்கு மத்தியில் தெரிந்து கொண்டார். அங்கு அவரைப் பார்ப்பதற்காக வந்த கூட்டம் வெள்ளம் போல் அலைபாய்ந்தது. ஆனால் இரயில் நிற்க அங்கு அனுமதிக்கப்பட்டது சொற்ப நிமிடங்களே. கிரேஸ் ஜனாதிபதியான தன் நண்பரைக் காண ஆவலோடும் ஆசையோடும் தந்தையின் துணையோடு வந்திருந்தாள். அவள் கண்கள் அவரைத் தேடின. கண்ணுக் கெட்டிய துாரம் வரை தெரியும் மனிதத் தலைகள் அவள் அவரைக் காண முடியாது என்பதை உணர்த்தின. அவள் கண்களில் நீர் நிறைந்தது. திடீரென ஒரு குரல் ஒலித்தது “எனதருமை மக்களே! உங்கள் அனைவரையும் காண்பதில் நான் பெரு மகிழ்ச்சியடைகிறேன். ஆனால் சொற்பொழிவு நடத்த எனக்கு நேரமில்லை. உங்களிடம் ஒரு சிறு வேண்டுகோள். இவ்வூரைச் சேர்ந்த கிரேஸ் பேடல் என்ற சிறுமி என்னைக் காண வந்திருப்பாள். என் வெற்றிக்கு உதவிய அச்சிறுமியை பார்க்க எனக்கு உதவுங்கள்” என்றார் லிங்கன்.

ஏமாற்றத்தோடு வீடு திரும்ப எண்ணிய கிரேஸ், இதைக் கேட்டதும் பெரு மகிழ்ச்சியோடு “நான் இங்கே இருக்கிறேன்” எனக் கூவினாள். மக்கள் அவசரமாக அவளுக்கு வழிவிட்டனர். லிங்கன் அவளை அன்போடு எடுத்து முத்தமிட்டார். அவளின் கைகள் அவரின் தாடியை வாஞ்சையுடன் தடவின. “உன் விருப்பத்தை நிறைவேற்றி விட்டேன் என் சின்னஞ்சிறு சிநேகிதியே. உனக்கு மிக்க மகிழ்ச்சிதானே! இன்னொரு முறை நான் இங்கு வந்து நிச்சயமாக உன்னைச் சந்திப்பேன்” எனக் கூறி கிரேஸைக் கீழே விட்டபோது பேச்சிழந்து கண்ணீரோடு கையசைத்து விடை கொடுத்தாள்.

இதைக் கண்டு மக்கள் வியந்தார்கள். ஜனாதிபதியான ஒருவர் ஒரு சிறு பெண்ணுக்குக் கொடுத்த மதிப்பு அவர்களின் மனத்தில் லிங்கனை மேலும் உயர்ந்த இடத்திற்குக் கொண்டு சென்றது.