பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/11

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
               ix
சித்தாந்த கலாநிதி உரைவேந்தர் பேராசிரியர் ஒளவை துரை சாமி பிள்ளையை' அறியாத தமிழர்கள் இரார். இவர்தம் தமிழ்ப் பணி பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பெறவேண்டிய ஒன்று. நச்சினார்க்கினியர், :பரிமேலழகர், அடியார்க்கு நல்லார் போன்ற உரையாசிரியர்கள் வரிசையில் வைத்து எண்ணக்கூடியதகுதி பெற்றவர். இவர்தம் புறநானூற்றுரை, பதிற்றுப்பத்து உரை திட்பமும் நுட்பமும் நுணுக்கமும் கொண்டவை என்பதைத் தமிழறிஞர்கள் நன்கு அறிவர். ஐங்குறு நூறு, நற்றிணை என்ற அக இலக்கியங்களின் உரை அகத்திணையின் நுட்பங்களையெல்லாம் எடுத்துக்காட்டக் கூடியவை என்பதை அக இலக்கியம் கற்போர் நன்கு அறிவர். அகத்திணைக் கொள்கைகளை எடுத்து விளக்குவார்க்குப் பெரிதும் துணை நிற்பவை. சில சித்தாந்த நூல்களைப் பதிப்பித்தும் நுணுக்க உரைகளைக் கண்டும் பெரும்புகழ் பெற்ற பெருமகனார் இவர். இவர் சிவப்பேறு பெறுவதற்கு முன்னர் நோயுடன் போராடிக் கொண்டிருந்த காலத்திலேயே இந்நூலை இவருக்கு அன்புப் படையலாக்கி இவர்தம் ஆசி பெறத் துடித்தேன். பல்வேறு காரணங்களால் நூலை அச்சேற்றி வெளிக் கொணர முடிய வில்லை. எனினும் இந்நூலை அமரர் ஒளவை துரைசாமி பிள்ளை யவர்கட்குப் படைத்துப் பெருமிதம் கொள்கின்றேன். இவர்தம் ஆசியால் யானும் என்போன்ற அகஇலக்கிய ஆய்வாளர்களும் மேலும் மேலும் தெளிவு பெறுவோம் என்பது என் திடமான நம்பிக்கை.

திருப்பதியில் யான் பணியாற்றியபோது என்னைப் பல்வேறு வகைகளில் துன்பத்தில் உழலச் செய்தும்,பணியில் மகிழச்செய்தும், மனஉறுதியை நல்கியும் என்னைச் செயற்படுத்திய திருவேங்கட வாணனை நினைவுகூரும் பாங்கில் திருமங்கை யாழ்வாரின் பாசுரம் ஒன்று என் மனத்தில் குமிழியிடுகின்றது.

       காதில் கடிப்பிட்டுக் கலிங்கம் உடுத்து
       தாது நல்ல தண்அம் துழாய்கொடு அணிந்து
       போது மறுத்து, புறமே வந்துநின்றீர்-
       ஏதுக்கு? இதுஎன்? இதுஎன்? இது என்னோ?²


இஃது ஆய்ச்சி ஒருத்தி கண்ணனோடு ஊடி உரைக்கும் பாசுரமாகும். வேங்கடவாணனும் வேங்கடகிருஷ்ணன்தானே. நல்ல உடல் ². பெரிய திருமொழி 10.8:1