பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

164

அகத்திணைக் கொள்கைகள்



என்று கூறினாள். ஆராய்ந்து அறிவும் அறிவு மிக்கோர்க்கு அதன் அளவாக ஓர் உட்கருத்து உண்டு" என்று தோழி அறத்தொடு நின்று உண்மை செப்புகின்றாள்.

இன்னொரு பாடலில் தோழி செவிலிக்கு அறத்தொடு நிற்கும் திறமும் அறிந்து மகிழத் தக்கது " அன்னையே, நான் மொழிவதைச் செவிமடுப்பாயாக. ஒருநாள் மாலை தலைவன் ஒருவன் கடலோரத்தே தேரில் வந்தனன். அவன் மாலைப்போது இங்குத் தங்கியதும் இலன். நின்மகள், அவனை நோக்கினாளும் அல்லள்; அத் தலைவனுடன் நின்மகளைச் சார்த்தி இவ்வூர் ஒப்பற்ற தன் கொடுமைக் குணம் காரணமாக அலர்பாடும்". ஆதலின் அவளை அலைத்து வருத்தற்க என்கின்றாள். [1] இங்ஙனம் கூறுவதில் தலைவன் எதிர்பாட்டைக் குறிப்பாற் புலப்படுத்துவது காண்க. பிறர் புலப்படுத்தும் முறை தோழிமூலம் தலைவியின் களவொழுக்கத்தை அறியும் செவிலி, நற்றாய்க்கு அறத்தொடு நிற்பாள். நற்றாய் தந்தை தன்னையர்க்கு அறத்தொடு நிற்பாள். இவ்வாறு தலைவி, தோழி, செவிலி, நற்றாய் அறத்தொடு நிற்கும் செய்தியைக் '"காமர் கடும்புனல்'”[2] என்று தொடங்கும் குறிஞ்சிக்கலி மிக நன்றாகச் சித்திரிக்கின்றது. 'கற்றறிந்தார் ஏத்தும் அக்கலிப்பாட்டு பன்முறை படித்து இன்புறற்குரியது. தலைவியின் களவொழுக்கத்தைக் கேட்டவுடன் தந்தைக்கும் தன்னையர்க்கும் சினம் எழும்; அவ்வொழுக் கத்திற்குக் காரணமாக இருந்த தலைவன்மீது சினம் பொங்கி எழும். அவனுடன் அவர்கள் போர் தொடுக்க எண்ணுவர். பிறகு ஆராய்ந்து இருவர்மீதும் குற்றம் இல்லை என்று அமைவர். இதனை, அவருந்,

தெரிகணை நோக்கிச் சிலைநோக்கிக் கண்சேந்து
ஒருபகல் எல்லாம் உருத்தெழுந்து ஆறி
இருவர்கண் குற்றமும் இல்லையால் என்று
தெருமந்து சாய்த்தார் தலை.
(கணை - அம்பு சிலை வில்; கண்சேந்து - கண் சிவந்து:
உருத்தெழுந்து - சினந்தெழுந்து ஆறி - சினந்தணிந்து:
தெருமந்து - மனஞ்சுழன்று.)

என்று மேற்குறித்த குறிஞ்சிக்கலியின் பகுதியால் அறியலாம்.


  1. அகம்-190
  2. கலி-39 (குறிஞ்சிக் கலி-3)