பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோழியிற்சுட்ட மரபுகள் 179 தோழியின் கூற்றுகளாகும். ஏனைய பத்தும் இப்பிரிவால் தலைவி எய்தும் உள்ள நிலையினை நன்கு புலப்படுத்துவனவாகும். இவற்றுள் கூடல் இழைத்தல்' என்ற ஒன்று மட்டிலும் ஈண்டுக் குறிக்கப்பெறும் சிறப்புடையது. தலைவன் பிரிவிற்கு ஆற்றாது வருந்தும் தலைவி அவன் திரும்பும் நாளை அறிய நினைந்து அதற்கொரு குறி பார்ப்பாள். இதனைப் பிறரிடம் பார்ப்பாளாயின் தனது களவொழுக்கத்தைத் தானே புலப்படுத்துவதாக அமையும். தோழியின் மாட்டுப் பார்ப்பாளாயின், அவள் தன் தலைவியின் ஆற்றாமையைத் தனித்தற்காக உண்மையல்லாத வேறு ஒன்றையும் கூறிவிடுவாள். ஆதலால் தலைவி தானே அக்குறியினைப் பார்க்க எண்ணித் தன் தோழியோடு விளையாடுமிடம் சென்று ஆங்கு ஒரு பக்கம் மணலா யுள்ள இடத்தை மேடு பள்ளமின்றி நேராகப் பரப்புவாள். அம் மணற்பரப்பின்மீது தான் அமர்ந்து தன்னைச் சுற்றி யொரு கோடு கிழித்து முதலில் ஒரு பெரிய வட்டம் அமைப்பாள். அதன் பிறகு அவள் தன் கண்களைக் கட்டிக்கொண்டு தனக்கு எதிரி லுள்ள அப்பெரிய வட்டக்கோட்டில் ஓரிடத்தைக் குறியிடமாக வைத்து அங்கிருந்து தொடங்கி அவ்வட்டக் கோட்டின் மேலேயே அக்கோடு முழுமையும் சிறு சிறு வட்டங்களாக ஒன்றையொன்று தொடுமாறும் முதலில் தொடங்கிய குறியிடத்தில் வந்து முடியு மாறும் கோடு சுழித்துக் கொண்டே வருவாள். தொடங்கிய இடத்தில் அச்சிறுவட்டத் தொடர் வந்து கூடாமல் பிறழ்ந்து விட்டால், எப்படியாயினும் அது தலைக்கூடுமாறு மீண்டும் திருத்தித் திருத்திச் செய்வாள். இங்ஙனமாக முதலும் கடையும் கூடுமாறு செய்தலைத்தான் கூடல் இழைத்தல் என்று அகப் பொருள் நூல்கள் சுட்டும். இக்கூடல் இழைத்த பிறகு தலைவி தன் கண்களைத் திறந்து பார்த்து அப்பெரு வட்டக்கோட்டின் மேலுள்ள சிறிய சுழிகளை எண்ணிப் பார்ப்பாள். அச்சுழிகள் இரட்டைப் படையாய் வந்தால் தலைவன் அன்று வருவான் என்பதும், ஒற்றைப்படையாய் வரின் அவன் அன்று வாரான் என்பதும் அவள் கொள்ளும் நம்பிக்கை. அதற்காக முதலில் எண்ணும்போது சுழிகள் ஒற்றைப்படையாக வந்துவிட்டால், தலைவி தான் கணக்கிட்டதுதான் ஒருகால் தவறாயிற்றோ என்று மீண்டும் மீண்டும் எண்ணிக் கணக்கிடுவாள். இரண்டு மூன்று முறை எண்ணிப்பார்த்தும் அவ்வொற்றைப்படை எண்னே வரு மாயின் அவள் நெஞ்சம் நைந்து வருந்துவாள். இதனையே,