பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§ தோற்றுவாய் தொகையும் பாடினோர் தொகையும் புறத்திணைப் பாடல் தொகையினும் பாடினோர் தொகையினும் மும்மடங்கு மிக்கிருத் தலை நோக்குங்கால் சங்கப் புலவர்கள் அகம் பாடுவதையே சிறந்த புலமையென மதித்திருந்தனர் என்ற கருத்து வெளிப்படு கின்றதல்லவா? சங்கத்துச் சான்றோரின் அகத்தினைப் பாடல்களைப் பயிலுங் கால் ஒவ்வொரு பாடலிலும் ஆண் பெண் உள்ளங்களைக் காண் கின்றோம். இப்பாடல்களில் காதல் தலைமையுடைய தலைவன் தலைவியரைப்பற்றிப் பாங்கன், ஊரார், கண்டோர், அறிவர் முதலியோர் நினைத்த செய்திகளும் புலனாகின்றன. இவற்றை யெல்லாம் நுணுக்கமாக அறியுங்கால் மனித உள்ளங்களின் பல் வேறு நிலைகள் நமக்குத் தெரிகின்றன; உளவியல் மதிநுட்பத் துடன் இவற்றை ஆயவேண்டும் என்ற தெளிவும் நமக்கு ஏற்ப கின்றது. - தொல்காப்பியமும், சங்க இலக்கிய அகப்பாடல்களும், வள்ளுவர் காமத்துப் பாலும் அகத்திணை கொள்கைகளைத் தெளிவுறுத்தும் அரிய மூலமுதல் (Sources) நூல்களாகும். இவற்றை நுணுகிக் கற்குந்தோறும் அகஇலக்கியம் கூறும் உண்மை யான வாழ்க்கை நெறியை இனங்கண்டுகொள்ள முடிகின்றது. அகத்திணை வாழ்க்கை நாடகத்தில் காணப்பெறும் தலைவன் தலைவியரும், பாங்கன், கண்டோர், அறிவர் முதலிய பாடல் மாந்தரும் நெறியுடன் ஒழுகுவதையும், அகப்பாடல்களை யாத்தவர்களும் அவற்றை நெறிதழுவிய முறையுடன் யாத்திருப் பதையும் காணமுடிகின்றது. அகப்பாடல்கள் பண்டைத் தமிழரின் அகவாழ்க்கையையும் நாகரிகச் சிறப்பையும் சித்திரித்துக் காட்டும் பாங்குடன் திகழ்வதைக் கண்டு மகிழலாம்.