பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கரணம் பற்றிய குறிப்புகள்

223


என்பது தலைவியின் கூற்று. அன்னை நெருப்பைத் தொட்டவர் போலக் கையை விதிர்விதிர்த்து அவ்விடத்தை விட்டு அகன்றாள். யாருங் காணாமல் புதிதாகக் கள் குடித்தவன் மெய் மறந்து வாயால் உளறுதல்போல் தன் நிலை ஆயிற்று என இக்களவு நங்கை பூவால் களவு வெளிப்பட்டு விட்டது என்றும் நடுங்குகின்றாள். யாருக்கு மறைக்க வேண்டும் என நினைத்தாளோ அவருக்கு முன்னே அந்தப் பூ விழுந்து விட்டதே என்பதால் அவளிடம் நடுக்கமும் அச்சமும் தோன்றுகின்றன.

    பண்டைத் தமிழ்க் குமரி மலர் அணியாள்; மலர்சூடின் கன்னி பாகாள், ஒருவனை வரித்தாள் என்பது பண்டைத் தமிழ்ச் சமுதாய வழக்காகும். இன்று இவ்வழக்கம் இல்லாமையால் நாம் வியப்படைதல் கூடும் மேலும் சில சான்றுகள் நம்மைத் தெளி விக்கும். குறுந்தொகையில் ஒரு நிகழ்ச்சி, இரவுக்குறி வந்து நீங்கும் தலைமகன் இனி தலைவியை மணந்து கொள்வதைத் தவிர வேறு வழி இல்லை என்று தன் நெஞ்சிற்குக் கூறுகின்றான்.

இரண்டறி கள்விநங் காத லோளே

முரண்கொள் துப்பிற் செவ்வேல் மலையன்

முள்ளுர்க் கானம் நாற வந்து

நள்ளென் கங்குல் நம்மோ ரன்னன்;

கூந்தல் வேய்ந்த விரவுமலர் உதிர்த்துச்

சாந்துளர் நறுங்கதுப் பெண்ணெய் நீவி

அமரா முகத்த ளாகித்

தமரோ ரன்னள் வைகறை யானே."

(முரண் கொள்-மாறுபாடு கொண்ட; துப்பு-வலிமை; கானம்-மலைக் காடு; கங்குல்-இரவு; விரவுமலர்-பலவாகக் கலந்த பூக்கள்; சாந்து-சந்தனம், கதுப்பு-கூந்தல்; அமராபொருந்தாத; வைக்றை-விடியற்காலை)

'பல மலர்களைச் சூடி மூக்கிற்கினிய மணம் பரப்பிய இரவில் வந்து முயங்கி எனக்குரியவளாகின்றாள். பின்பு சூடிய மலர்களை உதிர்த்துக் கலவியிற் கலைந்த சூழலைச் சீர்படுத்தி யாதொரு மாறுபாடும் தோன்றாதபடி காலையில் தன் இல்லத்தாருடன் ஒத்து ஒழுகா நிற்கின்றாள். எனக்கு ஏற்பவும் தன் தமருக்கு ஏற்பவும் இடமறிந்து நடந்து கொள்ளும் என் காதலி இரண்டறி கள்வியாவாள்' என்று தன் காதலியின் அறிவுக் கூர்மையை

27. குறுந்-312