பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கற்பியல் மரபுகள் களவில் ஒழுகி வரும் தலைமக்கள் கற்பில் புகுந்த பிறகும் அவர்கள் வாழ்க்கையில் காணப்பெறும் சில மரபுகள் உள்ளன. அவை : (1) கற்பொழுக்கத்தில் பொருள்வயிற் பிரியும் தலைவன் சுடும் பாலைச் சுரத்தில் கொடிய விலங்குகளாலோ, ஆறலைக் கள்வர்களாலோ நீரின்மை காரணமாகவோ இறந்து பட்டான் என்ற செய்தியைக் கேட்பதில்லை. (2) வேற்று நாட்டிற்குச் சென்று பொருளீட்டும்பொழுது அங்குப் பரத்தையர்களின் வலையில் சிக்கிப் பொருளையெல்லாம் இழந்து தலைவன் வீடு திரும்பினான் என்று பாடும் மரபு இங்கு இல்லை. (3) அங்ஙனமே, தலைவன் பிரிவால் துயருற்று வருந்தும் தலைவி காமச்சுரம் மிக்கு மெலிந்து நலிந்து உயிர் துறந்தாள் என்ற செய்தியும் இங்கு இல்லை. (4) கணவனது பரத்தமைக்காக மனைவி அவளை வெறுத் தொதுக்கினாள் என்ற செய்திக்கும் இங்கு இல்லை. 'ஒருவர் பொறை இருவர் நட்பு' என்பதே கற்பியலின் உயிர் நாடி. (5) ஐந்திணைக் காதல் துறைகளில் அயலார், வெளியார் குறுக்கீட்டிற்கு இடம் இல்லை. தலைவனது தாய் தந்தை முதலான நெருங்கின உறவினருக்கும் கூட இடம் இல்லை. (6) பருவம் எய்திய இருவர்தம் காதல் தொடங்கும் காலம் முதல் இளமை நீங்கும் காலம்வரை (மகப் பேறு அடையும் வரை) உள்ள காலமே ஐந்திணைக்குரிய காலமாகும். காதலர்களின் முதுமைக் கால வாழ்வுக்கு இங்கு இடம் இல்லை.