பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/33

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது 

அகத்திணைப் பாகுபாடு 15


சுட்டிப் போதல் அறியப் பெறும். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்ற நான்கு திணைகட்கு இயல்பான நிலப்பாங்குகள் இருத்தல் போல, பாலைக்கு இயல்நிலம் இல்லையாயினும் முன்னர்க் காட்டப் பெற்ற திரிநிலம் உண்டு என்று சிலம்பு தெளிவுபடுத்தும். இங்ஙனம் பாலைக்கு ஒருவகையான நிலம் உண்டென்று கொண்டாலும், கைக்கிளை பெருந்திணைகட்கு எவ்வாற்றானும் நிலம் இல்லை என்பது நூல் முடிபு. எனவே, எழுதினை என்ற அகப்பிரிவு நிலத்தினை அடிப்படையாகக் கொண்டெழுந்தது.என்ற கோட்பாடும் பொருந்தாது என்பது அறியப்படும்.

(3) திணை ஏழாயினமைக்கு உண்மையான காரணம் எழு வகைக் காதல் ஒழுக்கங்களேயாகும் என்பது டாக்டர் வ. சுப. மாணிக்கனாரின் துணிபாகும். காதல் ஒழுக்கங்களை இலக்கணம் உரிப்பொருள் என வழங்கும். இவ்வொழுக்கங்கள் தனி நிலை கொண்டவை என்றும், தம்முள் தொடர்பு வேண்டி நில்லாதவை என்பது நீள நினையத்தகும் இவற்றின் ஒரு சிறப்பியல்பு என்றும், ஆதலால்தான் குறிஞ்சி முதலிய ஐந்தும் ஒத்த காமத் தன்மை யால் ஒன்றாயினும், ஐந்திணை என்த் தனி நிலை குறிக்கும் எண்ணுப் பெயர் பெற்றன என்றும் அறுதியிட்டுக் காட்டுவர் அந்த அறிஞர். கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய் எழுதினை' என்பதில் நிலமில்லாக் கைக்கிளை பெருந்தினை களோடு நிலமுள்ள ஐந்திணை வைத்து எண்ணப்படுதலின், இவற்றுக்கு நிலப்பொருள் செய்தல் ஆகாது, உரிப்பொருள் கோடலே முறை என்று தெளிவுடன் வற்புறுத்துவர். மேலும், சங்கப்பாடல்களில் முதல் கருப் பொருள்களைச் சிறிதும் கூறாமல் உரிப்பொருள் மட்டும் கூறும் அகப்பாடல்கள் பல உள என்பதை எடுத்துக் காட்டியும், அப்பாடல்கள் குறிஞ்சித்திணை பாலைத் திணை எனச் செவவிதின் பெயர் பெற்றிருப்பதைச் சுட்டிக் காட்டி யும் தம் கொள்கைக்கு அரண் அமைத்துக் கொள்வர். எனவே, அகத்திணை எழுமைப் பகுப்பு காதலர்களின் கைக்கிளை, புணர்தல், பிரிதல், இருத்தல், இரங்கல், ஊடல், பெருந்திணை என்னும் காம ஒழுக்கங்களை அடிப்படையாகக் கொண்டது என்று தெளிவுடன் அறியத்தகும்.

அகத்திணைப் படைப்பில் கைக்கிளை பெருந்திணைகளைவிட ஐந்திணை பல்லாற்றானும் மேலாயது என்று சொல்லத் தேவை


2.அகத்திணை-5.
3.தமிழ்க் காதல் பக்.35</poem>